Friday, August 20, 2010

மழை கடலோடியும் திரவியம் தேடு

rainroadசென்னையில் மழை செய்யும் கோளாறுகள் மிக அதிகம். மாரிக்காலங்களில் மணக்க மணக்க சுத்தமான செருப்புக்காலோடு ரோடில் காலெடுத்து வைத்தால் நாறிப்போன சாக்கடைக்காலோடு துர்நாற்றத்துடன் தான் வீடு திரும்ப முடியும். லேசாக ஒரு தூற்றல் போட்டாலே மழையும் சாக்கடையும் ஒன்றாக திரிவேணி சங்கமமாக ஒரு வாரத்திற்கு வற்றாத ஜீவநதியாக சாலை ஓரங்களில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும்.  சுழி அதிகம் உள்ள இடங்களில் சென்றால் உள்ளே இழுத்துவிடும். வலது கையில் குட்டி பட்டன் குடையோடு, இடது கையில் கணுக்கால் தெரிய லேசாக தூக்கிய சேலையுடன், தோளில் ஹான்ட்பாக்கோடும் எந்த குண்டு குழியிலும் கால் இடறி கீழே விழாமல் கம்பி மேல் நடக்கும் லாவகமாக இங்குமங்கும் ஆடியாடி நடந்து செல்லும் பாதசாரிப் பெண்டிரை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும். இவர்களில் சிலபேர் ஆர்டர் செய்து தயாரித்த ஸ்டூல் போல் இருக்கும் அவர்கள் செருப்பின் மீது வேறு ஏறி நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்த ஸ்டூல் செருப்பை மிஞ்சி கிஞ்சித்தும் மழைத்தண்ணீர் காலில் ஏறாது. மழைக்காலத்தில் எப்போது வெளியே நடந்து போய் உலாத்தி விட்டு வந்தாலும் செருப்புகளிலும், பாண்ட்டின் அடிபாகத்திலும் ஒரு வண்டி சேற்றோடுதான் வீடு திரும்புவது வழக்கம். வாசல் படி அலம்பி கோலம் போட்ட இடங்களில் சேறையும் சகதியையும் வீட்டிற்குள் கொண்டுவந்து விட்டுவிட்டு "வாசல் பூரா மாடு கன்ணு போட்டாப்ல ஆக்கிப்டான்..." என்று அம்மாவிடம் வாங்கி கட்டிக்கொள்வது வாடிக்கை.

இரண்டு நாட்களாக தவணை முறையில் இரண்டிரண்டு மணிநேரம் விடாமல் "சோ.." என்று காட்டடி அடித்த மழை சென்னையை ஜோஜோ குளிப்பாட்டி ரோடுகளில் தெப்போற்ச்சவம் நடத்தி காட்டியது. சிறு சிறு குட்டைகளாக போகும் வழியெங்கும் மழைநீர் தேங்கிய சாலைகளில் ஸ்கூல் பசங்க இருகால் தூக்கிப்  பரப்பி  "ய்....ய்.ய்...." சொல்லி தண்ணீர் மேல் சைக்கிள் விட்டு பழகுவது போல சில கட்டிளம் காளையர்கள் பல்சர் விட்டு பரவசமடைந்தார்கள். ஒரு பெருங்கூட்டம் வடபழனியிலிருந்து கோயம்பேடு வரை அடுத்த வண்டி 'கப்'படிக்க வண்டியோடு வண்டி உரசியபடி நின்றது. இப்படி இந்த நெரிசலில் வண்டி ஓட்டுவதற்கு ஒரு அபார திறமையும் கடவுள் அனுக்ரஹமும் வேண்டும். சென்னையில் ஒருவர் கார் ஓட்டி பழகினால் இந்த உலகத்தில் எந்த துருவத்திலும் சென்று அனாயாசமாக கண்ணை மூடிக்கொண்டு ஓட்டலாம். அவ்வளவு மேம்பட்ட காரோட்டுவதற்க்கான தொழில் ரகசியங்கள் இங்கே நாம் கற்கலாம்.

முன்னால் செல்லும் வண்டிக்கு ஒரு இரண்டடி இடைவெளி விட்டு தொடரும் நாம் இரண்டாவது கியர் மாற்றலாம் என்றென்னும் அந்த கணப்பொழுதில் ஒரு மோட்டார் சைக்கிள் சரக் என்று குறுக்குவெட்டாக நின்று நமக்கு "அடடா மழை டா அடை மழை டா..." என்று கார்த்தி போல ஆட்டம் காட்டுவார். கண்ணிமைக்கும் நேரத்தில் பிரேக் அடித்து பொறுப்பாக அவரை நாம் காப்பாற்றவேண்டும். தெரியாமல் லேசாக அவர் டூவீலர் பின்னால் கட்டியிருக்கும் ட்ரங்க் பெட்டியிலோ அல்லது Dont Kiss Me மட்கார்டிலோ ஒரு அரைகுறை முத்தம் கொடுத்து விட்டால் திரும்பிப் பார்த்து முறைத்து கையை தூக்கி மேலும் கீழும் ஆட்டி நமக்கு ஒரு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்வார். மிகவும் கவனத்துடனும் ஒரு ஏ.கே 47வை பிடித்து எதிரே நிற்கும் தீவிரவாதியை எதிர்கொள்ளும் ஜாக்கிரதையுடனும் கார் ஓட்ட வேண்டும். சில சமயங்களில் பிரேக், அச்செலேரடோர், க்ளட்ச் என்று அங்கிருக்கும் அனைத்து பெடல்களையும் அழுத்தும் ராகுகால வேலைக்கு தள்ளப்படலாம். ஐம்புலன்களையும் ஒருசேரக் குவித்து கவனம் கலையாத ஒரு டீப் மெடிடேஷன் செய்யும் சிரத்தை இதற்க்கு தேவைப்படுகிறது.

இதற்கிடையில் இசையை தன் உயிர் மூச்சாக பாவிப்பவர்கள் இரு காதிலும் ஹெட் ஃபோன் சொருகி ஆனந்தமாக இசையுலகில் சஞ்சாரித்து தனது டூவீலரை பிளைட்டின் Auto Mode போல போட்டுவிட்டு இவ்வுலக ஒட்டு உறவே இல்லாமல் அதன் போக்கில் வண்டியை விடுவர். இவர்களை பார்த்து நாம் நான்கடி இடைவெளி விட்டு நிதானமாக செல்லவேண்டும். ஓரத்தில் அலைமோதும் சாக்கடை நீரினால் நாம் அடித்து செல்லப்படுவோமோ என்றஞ்சி நடுரோட்டில் ராஜநடை நடந்து சிலர் செல்வார்கள். ஹார்ன் அடித்தால் போச்சு. திரும்பி ஒரு முறை முறைத்து இன்னும் மெதுவாக நடந்து காருக்குள் நம்மை வைத்து ஒரு மினி ஜானவாசம் நடத்துவர். டூவீலரில் பில்லியனில் ஒருவர் இருந்தால் மிகவும் ஜாக்கிரதையாக செல்லவேண்டும். ஓட்டுபவர் அவர் விருப்பத்திற்கு வண்டியை செலுத்த பின்னால் உட்கார்ந்து கொண்டு இருகையையும் மாறி மாறி ஆட்டி துடுப்பு போடுவது போல இவர்கள் செய்யும் விஷமத்திர்க்கு அளவேயில்லை. எந்தப் பக்கம் போனாலும் அந்தப்பக்கம் படபடவென்று கையை போடுவர். தண்ணீர் லாரி க்ளீனருக்கும் இவர்களுக்கும் ஒன்றும் வித்தியாசமே இருக்காது.

இவ்வளவு பிரம்ம பிரயத்தனத்திற்கு பிறகு வருவதுதான் ரியல் டெஸ்ட். இப்போது முழங்கால் அளவிற்கு மேல் பாதி சாலை வரையில் தேங்கிநிற்கும் புனித தீர்த்தத்தில், ஓபன் மேன்ஹோல் எங்கிருக்கிறது என்று அனுமானித்து முன் செல்லும் வாகனங்களின் டயர் தடத்தை பார்த்தும், தண்ணீர் எங்கு அலைமோதுகிறது எங்கு சுழித்து ஓடுகிறது என்பதை வைத்தும் அது ஆழம் இருக்கும் இடமா இல்லையா என்பதை ஒரு மீனவரின் நுட்பத்தோடு கணித்து வண்டி ஒட்டவேண்டும். இப்படி நாம் ஒரு தீர்மானத்திற்கு வருவதர்க்கு முன் பின்னால் வரும் மாநகர பஸ்காரர் ஹாரனில் வைத்த கை எடுக்காமல் நமக்கு இடப்புறத்தில் ஏறி அப்படியே ஒரு கப்பல் கடலில் மிதப்பது போல மிதந்து நமக்கு முன் கரை ஏறி போய்விடுவார். அவர் சென்ற டயரடி தண்ணீரை தீர்த்தமென ப்ரோஷ்ஷித்துக் கொண்டு அப்படியே முன்னேறி நாமும் கரை ஏறவேண்டும். இல்லையேல் அவருடைய சுற்றத்தார்களான மற்ற ரூட்காரர்களும் உங்களை நடுவீதியில் கட்டை போடவைத்து ஏறியேறி செல்வார்கள். இந்த சமயத்தில் எக்காரணம் கொண்டு கார் கண்ணாடிகளை திறவாது இருப்பது நன்று. இல்லையேல் புனித நன்னீராட்டு விழா உங்களுக்கு நிச்சயம்.

இவ்வளவு பாடுபட்டு நீந்திக் கரையேறி ஒருவாராக அலுவலகம் சென்றடையும் போது மதிய சாப்பாடு வேளை ஆகிவிடுகிறது. என்ன  ஆனால் என்ன, மழை கடலோடியும் திரவியம் தேடு.

பட உதவி: http://www.mustseeindia.com

12 comments:

  1. சுவையான கட்டுரை.
    இப்போதான் மெயின் ரோடுல அங்கங்கே ட்ரெய்னெஜ் வந்தாச்சே? இன்னுமா இந்த நிலை?
    மழை வந்தா லீவ் போட்டுறுங்க ("வெளில மழை வாட் டு டூ?" - அபூர்வ ராகங்கள்)

    ReplyDelete
  2. One more good short.

    Because of my chennai driving exp. i am able to drive in 4 countries in Middle east without any accident since 4 years.

    keep rocking.

    Seshan

    ReplyDelete
  3. நன்றி அப்பாதுரை. லீவா? அப்படின்னா? ;-) ;-)

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  4. Sesha.. In near future you may need a submersible boat to ride on Chennai roads. ha ha ha...

    anbudan RVS

    ReplyDelete
  5. //சென்னையில் ஒருவர் கார் ஓட்டி பழகினால் இந்த உலகத்தில் எந்த துருவத்திலும் சென்று அனாயாசமாக கண்ணை மூடிக்கொண்டு ஓட்டலாம். அவ்வளவு மேம்பட்ட காரோட்டுவதற்க்கான தொழில் ரகசியங்கள் இங்கே நாம் கற்கலாம்.//

    'சென்னை' ஒன்னும் ஸ்பெஷல் இல்லீங்கோ.. இப்ப, நம்ம நாட்டுல முக்கியமான எல்லா சிட்டிளையும் இதே நெலைமைதான்...அட்லீஸ்டு பெங்களூரு, அகமதாபாத், தில்லி, சண்டிகர், மும்பை, பூனே, விசாகப்பட்டினம், ஹைதராபாத் (நான் பார்த்தவரையில்)

    எப்பத்தான், எல்லாருக்கும் 'சாலை ஞானம்' (road sense ) வருமோ ?

    ReplyDelete
  6. தட்டி எடுத்த மழை போல் பொழிந்து தள்ளி விட்டீர்கள்.. அந்த சுழிதல் சூட்சமம் ஜோர். சென்னையில் வெள்ள வடிதல் ஆபாயத்திற்கு பயந்தே ஊர் தள்ளி ஊரபாக்கத்திற்கு ஜாகையை மாற்றிக்கொண்டேன்.

    ReplyDelete
  7. பத்மநாபன் அதிர்ஷ்டக்காரனய்யா நீர்.. புள்ள குட்டிகளோட ஸ்கூல், நமக்கு ஆபிஸ் அப்படின்னு சிட்டிஐ விட்டு நகர முடியலை. ;-) ;-)

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  8. ஆமாங்க நண்பரே, பல்லாவரத்துல வீடு பாக்க போனப்ப, வழி முழுவதும் சேற்றுக்குழிகளும், பெரும்பள்ளங்களும். லாங் ஜம்புலேயே எவ்வளவு தூரம் போறதுன்னு திரும்பிட்டேன்.

    இப்ப பில்டர்ஸ் எல்லாம் தங்கள் விளம்பரத்தில் ஒரு வரி இணைத்துள்ளார்கள் பார்த்தீர்களா. flood free zone. எதோ கிருஷ்ணா, கோதாவரி நதிக்கரையில் இருப்பது போல்.

    வடிகால்களை சீர் செய்வது ஒன்றை வடிகால்.

    ReplyDelete
  9. நதி மற்றும் வாய்க்கால் ஓரங்களில் வளர்ந்த நாகரீகமானது இப்போது நதிகளின் மேலேயே ஆரம்பித்துவிட்டது. அதாது ஆற்றங்கரைகளின் மேலேயே கம்பு நட்டு குடிசை போட ஆரம்பித்துவிட்டார்கள். என்ன செய்வது?

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  10. மாதவா எனக்கு நல்ல தெரிஞ்ச ஊரு சென்னை தான். நீ ஊர் சுற்றும் வாலிபன். நிறைய தெரிகிறது. ;-) ;-)

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  11. மழைக் காலத்தில் பெரும்பாலான நகரங்கள் சென்னை போல்தான். சென்னையில் ஸ்பெஷாலிட்டி,மூடிகள் திறந்த பாதாள சாக்கடை.முன்னால் நடப்பவர் சட்டென்று காணாமல் போய் விட்டால், நாம் கொஞ்சம் தள்ளி நகர்ந்து நடக்க வேண்டியதுதான். மழை பெய்யல்லன்னாலும் திட்டுறீங்க, பெய்தாலும் பதிவு போடுறீங்க.ஹைய்யோ.. ஹையோ

    ReplyDelete
  12. மழை ஒரு சுகானுபவம் என்னுடைய அவதார பூமியில். இங்கே அது ஒரு நரக அனுபவம். எல்லார் வீட்டு சாக்கடையும் ஒன்றாகி... கலந்து... அப்பப்பா... அதனாலதான் வானவில்.. இப்படி...

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete