Tuesday, October 19, 2010

மன்னார்குடி டேஸ் - 'கிளி'மஞ்சாரோ மாமி


ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்த கண்ண பரமாத்மா போல, நான் வளர்ந்த இடம் ஹரித்ராநதி கீழ்கரை. ஏரி, நதி போன்ற பெரிய நீர் நிலையை குளமாக வெட்டியது முதலாம் குலோத்துங்க சோழன்.  அதற்கு நாலு பக்கமும் மதில் எழுப்பி, ஊரார் குளிக்க வசதியாக நான்கு கரையிலும் படித்துறை கட்டியது  நாயக்கர் வம்ச ராஜாவாகிய விஜயராகவ நாயக்கர். அசோகர் ஏன் குளங்களை வெட்டினார்? மரங்களை நட்டார் என்ற கேள்விக்கு குளங்கள் குளிக்கவும், குளிப்பதை ஏறி நின்று வேடிக்கை பார்க்க மரங்கள் நட்டார் என்ற பதில் போலல்லாமல் குள ஓரத்தில் நிறைய மரம் இல்லாமல் ஆயிரம் வருடங்களுக்கு பிறகு அழிச்சாட்டியம் செய்யப்போகும் எங்களுக்காக ராஜாக்கள் அமைத்து கொடுத்தது. வீட்டிற்க்கு பின்னால் ஆடிப்பெருக்கு அன்று மன்னையின் அணைத்து மகளிரும் குழுமி கும்மியடிக்கும் பாமணி ஆறு. வீட்டிற்கு முன்னால் குளம் பின்னால் ஆறு என்று அப்போதே தண்ணியில் இருந்தேன். கும்பகோணத்திலிருந்து மன்னார்குடிக்குள் வரும் அனைவரும் ஊருக்குள் ஓடி வரும் பாமணி ஆற்றங்கரையின் ஓரமாக வரும் பொழுது, அந்த ஈரக் காற்றில் தூங்காமல் சற்றே தலையை தூக்கினால் தெரியும் ராஜகோபாலனின் பதினோரு  நிலை ராஜகோபுரத்தை முதலிலும், பாமணி ஆற்றின் குறுக்கே உள்ள மேலப்பாலத்தில் ஏறி இறங்கினால் தெரியும் கடல் போன்ற ஹரித்ராநதியையும் சேவித்த பின்னர் தான் ஊருக்குள் நுழைவர். முதல் முறை அந்தக் குளத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் ஒரு ஈ பூந்த பின்தான் வாயை மூடுவார்கள்.

முதலில் வரும் வடகரை திரும்பி ஈசான்ய மூலையில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவில் தாண்டியபின் வருவது கீழ்கரை. கோபில, கோபிரளய முனிவர்களுக்கு காட்சி கொடுத்த முப்பத்தி இரண்டாவது சேவையில், முப்பதாயிரம்  கோபிகைகளோடு ஹரித்ராநதியில் ஜலக்ரீடை செய்து ஏக வஸ்திரத்தை இடையில் அணிந்து, மாடு மேய்க்கும் கண்ணனாக  சேவை சாதிக்கும் ராஜகோபாலனுக்கு பிரியமான ஹரித்ராநதியின் கிழக்கு கரையில் இருக்கும் பத்தாவது வீடு என்னது.  வடக்குகரை வைஷ்ணவர்களை பெரும்பான்மையாக கொண்ட அக்ரஹாரம். கீழ்கரை சைவர்களை கொண்ட  அக்ரஹாரம். விடுமுறை நாட்களிலும் கூட சாயங்காலம் நான்கு மணிக்குமேல் தான் வெளியே விளையாட விட  கதவை திறக்கும் பாட்டி என்னுடைய அம்மாவின் அம்மா, என்னை வளர்த்தவள். பக்கத்து ஆத்து ராமாயண சாஸ்திரிகள் பேரன், கண்ணன் காட்சி கொடுத்த முனிவர்களின் ஒருவர் பெயரை கொண்ட,  கோபி, TNSC  பாங்க் விளம்பர சிட்டுக்குருவி போல எல்லோருடனும் குதுகலமாக எப்போதும் வெளியே துள்ளி திரிந்தாலும் பாட்டி  எதிரே வர பம்முவான். கிரிக்கெட்டை வெய்யிலில் விளையாடக்கூடாது என்று ஏதோ ஐசிசி ரூல்ஸ் மாதிரி போட்ட அவள் கண்ணுக்கு யார் எதிரே மட்டை எடுத்து வந்தாலும் ஜெஃப்ரி பாய்காட் கமெண்டரி போல வாயார வாங்கி கட்டிகொள்வார்கள்.

அன்று கோபி வெளியிலிருந்து வந்து ஜெயிலுக்குள் இருக்கும் ஒரு ஆயுள் கைதியை பார்ப்பது போல என்னை எட்டி பார்த்தான்.

"விளையாட வரியா" என்றழைத்தான்.
"பாட்டி பார்த்தா, திட்டுவா. நீ போடா"
கோபி, "பார்த்தா தானே, விளையாடிட்டு வந்தப்புறம் திட்டினா என்ன? வாடா.." என்று புரட்சிகர லாஜிக் சொன்னான்,  ஹனுமார் கதை போல பேட்டை தோளில் சாய்த்துக்கொண்டு, அரை நிஜார் அணிந்து கிரிக்கெட் காப் இல்லாததால்  கௌபாய் காப் அணிந்து நின்ற கோபி. இரண்டு உதட்டை மட்டும் பிரித்து அடிக்கடி ஒரு கள்ளச் சிரிப்பு சிரிப்பான்.

"இல்லடா, பாட்டி திட்டுவா, நான் அப்புறம் வரேன்" என்றேன். வீட்டிற்கு ரொம்ப அடங்கிய பையன் நான்.

என்னை 'பந்தாட' அழைத்துக்கொண்டுதான் போவேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு வந்தாற்போல, "பாட்டியை  அப்பறம் சமாளிச்சிக்கலாம், பத்து, ஆனந்த், ஆனந்த் தம்பி, வெங்கடேஷ், எல்லோறும் ரெடியா இருக்காடா. இப்பவே  வந்தா ரெண்டு மூணு மேட்ச் போடலாம்" என்று என்னை 'மேட்ச் பிக்சிங்' செய்துகொண்டிருக்கும் போது நாலு கட்டு தாண்டி கொல்லையில் இருந்து வந்து கொண்டிருந்த பாட்டியின் லேசர் பார்வையில் 'கேப்ட்சர்' ஆனான்.

"யார்டா அது, தம்பியை விளையாட கூப்டுறது?...வெயில் பாழாப் போகாம நிக்கனுமா?..கட்டேல போக...", என்று ஆரம்பித்து திட்டிய பாட்டியின் சகஸ்ரநாம அர்ச்சனைக்கு தெருவில் சென்ற ஒருவரை பார்க்க விட்டுவிட்டு  பறந்து விட்டான் கோபி.

வழக்கம் போல சாயந்திரம் நாலு மணிக்குமேல் பாட்டி விறகடுப்பில் வார்த்து தந்த இரண்டு தோசைகளையும் ஒரு லோட்டா ஃபில்ட்டர் காபியும் குடித்து  விட்டு பசங்களுடன் விளையாட சென்ற போது ஆள் குறைச்சலில் அவதிப் பட்டுக்கொண்டிருந்த எல்லோரும் சேர்ந்து சத்ரு தேசமான பாகிஸ்தான் போல என்னை பார்த்து வெறித்தார்கள். பந்து ஓடினால் பொறுக்க ஆள் வேண்டுமே.

பத்து என்கிற பத்மநாபன், "பாட்டி சொல்ற படிதான் இருக்கணும்னா ஏண்டா எங்ககூட விளையாட வரே" என்றான்.  ஆனந்த் அவன் பங்கிற்கு "பாட்டி கூடயே போய் பல்லாங்குழி விளையாடவேண்டியதுதானே" என்று கால் சட்டை  அணிந்த கருஞ்சிறுத்தை போல சீறினான். கொஞ்சம் மா நிறமாக இருப்பான். இப்படி எல்லோரிடமும் வாங்கி  கட்டிக்கொண்டு ஏவிஎம் சரவணன் போல கையை கட்டி, கவுண்டமணியின் முன்னாள் நிற்கும் செந்தில் போல்  தலையை குனிந்து சமர்த்தாக இருந்தாலும், பந்தே வராத இடத்தில் உப்புக்கு சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை  மாதிரி நிற்கவைத்துவிடுவார்கள். அன்றைய பந்திற்கு நிறைய காசு போட்ட பங்குதாரர் (எழுபத்தைந்து பைசா)  என்கிற  முறையில் போனால் போகட்டும் என்று அன்றைய, வில்லங்கமாகப்போகிற, eventful ஆட்டத்திற்கு  சேர்த்துக்கொண்டார்கள்.

அதிலும் கிரிக்கெட் ஆடும் போது கோபி அடிக்கிற லூட்டிக்கு அளவே இருக்காது. இரண்டு ரூபாய் சிகப்பு கலர் ரப்பர்  பந்தில் விளையாடுகிற அழகிற்கே கிறிஸ ஸ்ரீகாந்த் மாதிரி, அந்தரத்தில் மத்து கடைவது போல பேட்டை  வுருட்டிக்கொண்டும், 'சர் சர்' என்று ஜலதோஷமே இல்லாத மூக்கை உருஞ்சிக்கொண்டும் நிற்பான். நொடிக்கொருதரம் கார்ட் எடுப்பான். லெக் அண்ட்  மிடில் கார்ட் எடுத்து லெக் ஸ்டம்ப்க்கு வெளியே எல்லா விக்கெட்டையும் எல்லோரையும் பார்க்க விட்டுவிட்டு காலை பப்பரக்கா என்று பரப்பிக் கொண்டு நிற்பான். நிற்பான் என்று சொல்வதை விட பேட்டை அணைத்து படுப்பான் என்று சொல்வது தான் சரி. ஒரு கிரௌண்ட்(2400 sq.ft) அளவுள்ள சிவன் கோவில் நந்தவனத்தில் ஒரு பந்துக்கும் அடுத்த பந்துக்கும் இடையில்  தலையை ஆஃப் சைட் லெக் சைட் திருப்பி திருப்பி ஃபீல்ட் செட்டப்பை அவ்வப்போது பார்த்துக்கொள்வான். எல்லாம் தூர்தர்ஷன் படுத்திய பாடு. பேட்டை பிருஷ்டத்திற்க்கு சீட்டாக்கி எல்லா  பக்கமும் லுக் விடுவான். பாதி நேரம் விக்கெட்டுக்கு முன்னாடியும் பாதி நேரம் விக்கெட்டுக்கு பின்னால் கிரண்  மோர் மாதிரி கீப்பராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவான். பத்துவோட இடது கை வேகப்பந்து வீச்சை  விளையாட முடியாதபோது அவன் ஓடி வர ஓடி வர டிராஃபிக் போலீஸ் மாதிரி இடது கை 'நில்' சிக்னல் காட்டி அவன் உயிரை எடுத்து அவன் தெம்பில்லாமல் போகும் போது ஒரு லொட்டு வைத்து ஒரு ரன் எடுத்து எதிர் முனைக்கு  போய் விடுவான்.

அன்றைக்கு விளக்கு வைத்த நேரம் வரை விளையாடியும், ரப்பர் பந்து கிழிந்தாலும் இன்னும் இரண்டு பேருக்கு பேட்டிங் கிடைக்காததால், தெரு விளக்கையே flood light ஆக்கி விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது தான்  அந்த சம்பவம் நடந்தது. அவனுடைய இன்னிங்க்ஸ்ன் கடைசி பந்தை, நான் பௌல் செய்ததை, out of the ground  சிக்ஸர் அடிக்க கோபி முயன்று, அது நேராக ஸ்கட் ஏவுகணை போல் ரோட்டில் கோயிலுக்கு வந்து கொண்டிருந்த 'பெரிய கிட்டு' மாமாவின் ஆத்துக்காரியை, ஒன்பது கஜ புடவை மடிசாரும், காதில் மாட்டலும் வைர மூக்குதியுமாக ஒரு மொபைல் நகைக் கடையாக, அன்னமே நேரில் நடந்து வருபதுபோல வந்தவளின் முகத்தில் "நச்" என்று இறங்க, அங்கே ஒரு சிவப்பு பந்து உருவானது.

மாமி லோலாக்கு அதிர திரும்புவதற்குள் ஸ்டம்புகள் நட்டது நட்ட படி இருக்க ஒரே சமயத்தில் எல்லோரும் அஷ்ட சித்துகளில் அணிமா சித்து கை  வரப்பெற்ற சித்தர்கள் போல காற்றில் மாயமாய் மறைந்து கரைந்து போனார்கள். சித்து கை வராத தெரியாத ஒரே ஆள் அடியேன் தான்.

மாமி மன்னார்குடி நாகம் போல சீறிக்கொண்டு அகப்பட்ட என்னிடம் வந்து , "யாருடா அடிச்சா?"
என் அடிவயிற்றில் அட்ரிலின் சுரந்தது.
"நான் இல்லை மாமி"
"வேற யாரு, சுத்திலும் யாருமே இல்லை. பந்து தானா பொறப்பட்டு வந்துதா"
"தெரியாது மாமி" கிட்டத்தட்ட குரல் கம்மி... அழும் நிலையில்....
"டீச்சர் கிட்ட சொல்லட்டாடா"
மேலே மாமி குறிப்பிட்ட டீச்சர் என்னுடைய பள்ளி ஆசிரியைகள் இல்லை. என்னுடைய சித்தி.  என் அம்மாவின் கூடப்பிறந்த சகோதரிகள்.
"வேண்டாம் மாமி! நான் அடிக்கலை"
"என்னடா சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லறே, கிளிப்பிள்ளை மாதிரி" என்று கையை பிடித்து திருகினாள்.
உண்மையிலேயே மாமிதான் பந்து பட்டதில் முகமெல்லாம் வீங்கி மூக்கு சிவந்து கிளி மாதிரி ஆகி, பெரிய கிட்டு  மாமாவிற்கு 'கிளி' போல ஆத்துக்காரி ஆகியிருந்தாள். அதை சொல்ல முடியாமல்
"மாமி நான் அடிக்கல்லே! சொன்னா நம்புங்கோ" என்று புரியவைக்க பகீரதப் பிரயத்தனப் பட்டேன். ஊஹூம். ஒன்னும் ஆகிற கதையாக இல்லை.
மாமி அடுத்த கட்டமாக விசாரணையை சிபிஐயிடம் (பெ.கி மாமாவிடம்) ஒப்படைக்கும் தீர்மானத்தை  அறிவித்தாள்.
"ஏண்ணா.... சித்த அந்த பித்தளை அண்டாவை எடுங்கோளேன்" என்ற மாமியின் ஆஞ்ஞைக்கு கட்டுப்பட்டு பரண் மேல் இருக்கும் அண்டாவை ஸ்டூல் போடாமல் அனாயாசமாக எடுத்து தருவார். அவ்வளவு நெடிதுயர்ந்த சரீரம். 9.30 மணிக்கு பேங்குக்கு போனால் சாயந்திரம் சந்தியாவந்தனம் பண்ண டான்னு அஞ்சு மணிக்கு ஆத்துல ஆஜராயிடுவார். சட்டை போடாமல் வலது கையில் வாட்ச் கட்டி திண்ணையில் உட்கார்ந்திருக்கும் போது பூணூல் தெரியாத மாதிரி பொசுபொசுன்னு மார்ல ரோமம். ஒரு காசித் துண்டும் டப்பா கட்டு மயில்கண் வேஷ்டியுமாய் குளத்திற்கு குளிக்க வரும் போது தோல் சிகப்பும் முடி கருப்புமாக ஆடி அசைந்து வருவார். பரீட்சை டயத்ல இவர் தான் தெருவோட எக்ஸாம் கீப்பர். கண்ணை உருட்டி "போய்ப் படிங்கோடா.. இல்லைனா மாடு தான் மேய்க்கணும்..." என்று விரட்டுவார். "கிருஷ்ணர் கூட மாடு தான் மேய்ச்சார்" என்று எவனோ நாஸ்டி பாய் பின்னால் இருந்து விட்ட டர்ட்டி குரலுக்கு ரொம்ப நாள் என்னை அந்த மோத்தா கோலி சைஸ் கண்ணால உருட்டி உருட்டி முறைச்சிண்டே இருந்தார்.


"மாமாவை கூப்பிடறேன் இப்ப. அப்பத்தான் சரிப்படும்" என்று மிரட்டினாள் மாமி. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நான் வள்ளுவரின் வாய்மை அதிகாரம் அப்போதுதான் நினைவுக்கு வந்தவனாய் முழுதாய்  நடந்ததை HIGHLIGHTS போல ஓட்டி காண்பித்து என்னுடைய அப்பாவி நிலைமையை விளக்கினேன். அதோடு விட்டிருக்கலாம்.  அரிச்சந்திர மகாராஜாவின் தாயாதி பங்காளி போல, கோபி அடித்து மாமி கிளி ஆனதை கிளி ஆன மாமியிடம் உண்மை உரைக்க விளம்பினேன். ஏற்கனவே "பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது" என்று பாட்டி வேறு சிலசமயங்களில் திட்டியிருக்கிறாள்.

மூக்கறுபட்ட சூர்ப்பனகை போல அவசரகதியில் வீட்டிற்கு சென்று, சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த  மாமாவிடம் புகார் கொடுக்க, பெ.கி மாமா "108 காயத்ரியை "அவசர அவசரமாக ஜெபித்துவிட்டு அடுத்த அரை கணத்தில் கோபி வீட்டில் ஆஜர்.

அப்பறம் பெரிய கிட்டு மாமா கோபியை இரைந்து பேசியதும், பதிலுக்கு அவன் என்னை அந்த சண்டையில் இழுத்து பேசியதும், பெ.கி.மாமா, கோபி அப்பா, அடி பட்ட மாமி, கோபி அம்மா என்று மாறி மாறி WWF மிக்ஸ்டு ரெஸ்ட்லிங் மேனியா ஆகி, தெருவே ரெண்டுபட்டு கோபியின் உச்சபட்ச கோபத்திற்கு நான் ஆளான போது பதின்மங்களின் ஆரம்ப விளிம்பில் இருந்தேன்.

பின் குறிப்பு: விடலை பருவம் எட்டாததர்க்கு முன்னால் ஆர்.வி.எஸ். வி.ப. அடைந்த ஆர்.வி.எஸ் என்று இரு பகுதிகளாலும் மன்னார்குடி முழுக்க சுற்றியதை உங்களுக்கும் காண்பிக்கிறேன். பொறுமையாக என் பின்னால் சைக்கிள் கேரியரில் ஏறி உட்காருங்கள். வலம் வருவோம் மன்னார்குடியை. 
-

63 comments:

  1. மன்னார்குடியின் பெருமைகளில் ஒன்றான ஹரித்ராநதி பத்தி அழகா சொல்லியிருக்கீங்க. கிரிக்கெட் மேட்டரும் செம காமெடி. குட் ஸ்டார்ட்.

    ReplyDelete
  2. மன்னார்குடி மேட்டருக்கு எப்பவுமே பிள்ளையார் சுழி கமென்ட் உங்களோடது தான் புவனேஸ்வரி ராமநாதன். நன்றி.

    ReplyDelete
  3. உக்காந்துட்டேன், போலாம் ரைட்.

    ReplyDelete
  4. கலக்கலான கிளிமாஞ்சாரோ.... உங்கள் எழுத்தில் சிரித்து சிரித்து....எனக்குப் புரை ஏறி விட்டது. தொடருங்கள் நண்பரே. சைக்கிள் கேரியரில் ஏற்கனவே உட்கார்ந்தாச்சு!!

    ReplyDelete
  5. தலைப்பே சுவாரசியம்.. பதிவு அதைவிட சுவாரசியம்.. கலக்கல் தலைவரே..

    ReplyDelete
  6. பட்டய கிளப்புறீங்க.. மன்னார்குடிக்கு என்று தனிப்பட்ட சுவாரஸ்யங்கள் நிறைய இருக்கு.. குறிப்பா பாமணி ஆறு.. லெட்சுமி, செண்பகா தியேட்டர், அப்புறம் திருவிழா.. இப்படி ஒன்னு விடாம எழுதுங்க..

    ReplyDelete
  7. அழைச்சுகிட்டு போறேன்... சை.கொ.ப ;-) ;-)

    ReplyDelete
  8. @வெங்கட் நாகராஜ்,

    ரைட்டு... ஏத்திக்கிட்டேன்... ;-) ;-)

    ReplyDelete
  9. @மன்னார்குடி
    வாழ்த்துக்கு நன்றி.. தொடர்ந்து படிங்க... ;-)

    ReplyDelete
  10. @கே.ஆர்.பி.செந்தில்
    நிச்சயமா... ஒரு மூலை முடுக்கு விடாம எழுதிடலாம்... மண்டையில அப்படியே ஊறிக்கிட்டு இருக்கு.

    ReplyDelete
  11. //வீட்டிற்கு முன்னால் குளம் பின்னால் ஆறு என்று அப்போதே தண்ணியில் இருந்தேன்.//
    இப்போ ?

    //பொறுமையாக என் பின்னால் சைக்கிள் கேரியரில் ஏறி உட்காருங்கள்.//
    ஒரு கேர்ரியர் தான் இருக்கும்.. எல்லாரும் எப்படி உட்காரதுங்க அண்ணா ? :)

    ReplyDelete
  12. கமெண்டு போட முடியலை.. அவ்ளோ நல்லா எழுதுனத ரசிச்சிகிட்டே இருக்குறேன்..

    ReplyDelete
  13. @இளங்கோ
    இப்ப கரையில இருக்கேன்.

    இது எம்மாம் பெரிய சைக்கிள் தெரியுமா? எல்லோரையும் தாங்கும். கவலையே படாதீங்க.. ;-)

    ReplyDelete
  14. @Madhavan
    ஏதாவது போடுப்பா.. ப்ளீஸ் ;-) ;-)

    ReplyDelete
  15. சூப்பர்! நல்லா ரசிச்சேன்! தொடரட்டும்!

    ReplyDelete
  16. நன்றி எஸ்.கே. ;-)

    ReplyDelete
  17. எப்பா சாமி, நம்ம அம்பி எழுதினா நன்னாத்தான் இருக்கு!

    ஐயோ அம்பி, வந்தவா எல்லாரும் உன் சைக்கில் பின்னாடி கேரியர்ல உக்காந்துட்டா.
    இப்போ நா எங்க உக்கார்ரதாம்?

    ReplyDelete
  18. @கக்கு
    முன்னாடி பார்ல... ஓ.கே வா ;-) ;-)

    ReplyDelete
  19. //கக்கு - மாணிக்கம் said..."எப்பா சாமி, நம்ம அம்பி எழுதினா நன்னாத்தான் இருக்கு!

    ஐயோ அம்பி, வந்தவா எல்லாரும் உன் சைக்கில் பின்னாடி கேரியர்ல உக்காந்துட்டா.
    இப்போ நா எங்க உக்கார்ரதாம்? "//

    நாளைலேருந்து சீக்கிரமே வாடா அம்பி.. அப்பத்தான் ஒக்காரதுக்கு எடம் கெடைக்கும் சைக்கில் காரியருல..

    நா சொல்லலை.. பாட்டி சொல்லுறாங்கே, நண்பரே.

    (ஆர்.வி.எஸ் -- கமெண்ட்டுக்கு கமெண்டு போட்டுட்டேன்.. சரியா..?)

    ReplyDelete
  20. எனக்கு தெரியும், இங்கதான் இடமிருக்கும்மினு, அம்பியும் அங்குதான் உக்கார சொல்லும்.
    தேங்க்ஸ் அம்பி. நா உக்காந்தாச்சி. என்ன.,? ...perfume ஜோரா இருக்கா? அத்து!
    சரி வண்டிய எடுக்கலாம். :)

    ReplyDelete
  21. மாதவா... ஓ.கே ;-)

    ReplyDelete
  22. ஓ.கே ரைட்டு கக்கு ;-) ;-)

    ReplyDelete
  23. புகைப்படம் breathtaking!
    'கிளி' விவகாரம் நல்ல நகைச்சுவை. தொடர்க.

    ReplyDelete
  24. அப்பா சார்!.. நாந்தான் படம் புடிச்சேன்.. மருமான் கொடுத்த சோனி டிஜி கேமராவில்... பல 'கிளி' கதைகள் கூட இருக்கு... ;-) ;-)

    ReplyDelete
  25. மன்னார் குடி..ஆற்றம்கரை...சுற்றிப் பார்த்தோம்.

    ReplyDelete
  26. @மாதேவி
    //மன்னார் குடி..ஆற்றம்கரை...சுற்றிப் பார்த்தோம். //
    மன்னாருக்கும் குடிக்கும் நடுவே ஒரு இடைவெளி விட்டுரிக்கீங்களே... இதுல ஒன்னும் உள் குத்து இல்லையே... ;-) ;-) ;-)
    முதல் தடவையா வந்துருக்கீங்க... அடிக்கடி வாங்க... இன்னும் நிறைய இடம் இருக்கு...

    ReplyDelete
  27. பொறுமையாக என் பின்னால் சைக்கிள் கேரியரில் ஏறி உட்காருங்கள். வலம் வருவோம் மன்னார்குடியை.

    ....ஆல்ரைட்டு! போலாம் ரைட்டு!

    ReplyDelete
  28. சேவாக் ஸ்டார்ட் RVS, சச்சின் மாதிரி நின்னு ஆடுங்க
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  29. ஓ.கே. வந்துட்டீங்களா சித்ரா... போகலாம் ரைட்டு... ;-) ;-)

    ReplyDelete
  30. ஓ.கே பாஸ்டன் ஸ்ரீராம். ட்ரை பண்றேன். அடிக்கடி வந்து "ஊக்கு"வியுங்க... ;-) ;-) ;-)

    ReplyDelete
  31. //ஓ.கே பாஸ்டன் ஸ்ரீராம். ட்ரை பண்றேன். அடிக்கடி வந்து "ஊக்கு"வியுங்க... ;-) ;-) ;-) //

    கண்டிப்பா விக்கறேன்.. I have been a salesman for over 17.5 years

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  32. டாப் கியர்ல ஆரம்பிச்சிருக்கீங்க.. விவரணைகள் சுவாரஸ்யமாய் இருக்கு.. பட்டைய கிளப்புங்க ஆர்.வீ.எஸ்!

    ReplyDelete
  33. dear rvs

    super . kalakkungo


    haridranadhi photo class


    balu vellore

    ReplyDelete
  34. மிக்க சந்தோஷம் ஸ்ரீராம். தன்யனானேன். ;-) ;-)

    ReplyDelete
  35. மோகன்ஜி அண்ணா! வாழ்த்துக்கு நன்றி. இந்த பத்துண்ணாவை எங்கயாவது பார்த்தேளா.. இந்தப் பக்கம் கொஞ்சம் வரச் சொல்லுங்கோளேன். ;-);-)

    ReplyDelete
  36. Dear RVS

    Because of Amma's friend "sasi akka" only we (all) came to know the place mannarkudi in TN map, so i am expecting to good (try... at lest ) old news about their family . Varalaru romba mukkiyam.

    ReplyDelete
  37. @balutanjore

    நன்றி ;-) ;-)

    ReplyDelete
  38. சரி சேஷா. பார்க்கலாம் ;-);-)

    ReplyDelete
  39. சைக்கிளில் எனக்கும் ஒரு இடம் இருக்குமா?

    ReplyDelete
  40. இந்த மாதிரி இளமைக் கால நினைவுகளுக்காகவே, நான் ‘ நிகழ்வுகள் ‘னு ஒரு லேபிள் வைச்சிருக்கேன்.
    படித்துப் பார்க்கவும். விமர்சனங்களை மறக்காம எழுதவும்..!!

    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  41. சைக்கிளில் நிச்சயமா உங்களுக்கு ஒரு இடம் உண்டு ஆர்.ஆர்.ஆர் சார். உங்களோட 'நினைவுகள்' படிக்கறேன். ;-);-)

    ReplyDelete
  42. கலக்குங்கோ ஒட்டு போட்டாச்சி

    ReplyDelete
  43. நன்றி ம.நண்பன். ;-) பதிவு எப்படி இருந்தது?

    ReplyDelete
  44. என்னை மாதிரி மேற்குக்காரர்களுக்கு...கிழக்கில் மன்னார்குடி செய்திகள் சுவையாகவும் சுவராஸ்யமாகவும் இருக்கிறது...

    ஹரித்திரா நதி..வட மாநில நதிப்பெயர் போல
    வித்தியாசமாக இருக்கிறதே......

    ``நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்``ன்னு சைக்கிள்ள தாண்டுகால் போட்டே உட்கார்ந்தாச்சு ..
    .
    ( சைக்கிள் கற்ற சுகத்தையும் விட்ராதிங்க – நாமெல்லாம் குரங்கு பெடல் யே பேலன்ஸ் பண்ணவங்களாச்சே )

    ReplyDelete
  45. ரைட் ரைட்.. அண்ணா செம.. :)

    ReplyDelete
  46. நல்ல ஆரம்பம் ....வாழ்த்துகள் !

    அந்த குளத்தின் தென்பக்கம் உள்ள மாடி வீட்டின் எதிரே பள்ளி கட் அடித்து கிரிக்கெட் விளையாடி கையும் களவுமா பிடிபட்டு NHSS Black Diary இல் பெயர் எழுதப்பட்டது நினைவுக்கு வருது .... நன்றி !

    ReplyDelete
  47. பத்துஜி தாண்டுகால் போட்டு உட்கார்ந்தாச்சா... இதோ வண்டிய எடுக்கறேன்...
    நதிபோல இருக்கும் குளம் ஆகையால் ஹரித்ராநதி.. இன்னும் நிறைய விளக்கம் இருக்கு. போகப்போக... :-)

    ReplyDelete
  48. ஓ.கே பாலாஜி தம்பி... ;-)

    ReplyDelete
  49. @தமிழ் திரு,
    வாங்க... NHSSல எந்த வருஷம்? எந்த குரூப்?

    ReplyDelete
  50. நன்றி தி பேனா ;-) ;-)

    ReplyDelete
  51. மன்னார்குடியின் பெருமையை பறைசாற்றும் தெப்பகுளத்திலிருந்து ஆரம்பித்துள்ளீர்கள்... வாழ்த்துகள்!

    ஐந்து வருடங்கள் (8th to +2) சைக்கிளில் தெப்பகுளம் வடகரை, கீழ்கரை வழியாகத்தான் NHSS பயணம். மலரும் நினைவுகள்...

    ReplyDelete
  52. @ரவிச்சந்திரன்
    எட்டாம் வகுப்பு வரையில் எனக்கு சைக்கிள் வாங்கி தரவில்லை. வாசலில் உட்கார்ந்து நீல பேன்ட் வெள்ளை ஷர்ட் போட்டவர்கள் சைக்கிளில் வந்தால் லிஃப்ட் கேட்டு போவேன். உங்களோடு கூட நான் ஸ்கூல் போயிருப்பேன் ரவி ;-)

    ReplyDelete
  53. //வாசலில் உட்கார்ந்து நீல பேன்ட் வெள்ளை ஷர்ட் போட்டவர்கள் சைக்கிளில் வந்தால் லிஃப்ட் கேட்டு போவேன். உங்களோடு கூட நான் ஸ்கூல் போயிருப்பேன் ரவி ;-)//

    பொழைக்க தெரிந்த பையன்:)

    ஆமாம்... தெப்பகுளத்திலிருந்து NHSS தூரம் அதிகம்!

    ReplyDelete
  54. பொழைக்க தெரிஞ்ச பையன் பிழைப்புக்காக சென்னை வந்தப்புறம் அந்த NHSS தூரம் ரொம்ப குறைந்ததாக தெரிகிறது ரவி. எங்கு பார்த்தாலும் புகை மற்றும் வண்டிகளுடன் நகர வாழ்க்கை நரக வாழ்க்கை. ;-)

    ReplyDelete
  55. அருமையான ஆரம்பம். நெறய கிளிக்கதைகள் சொல்லுங்க!

    ReplyDelete
  56. நிச்சயமா தஞ்சாவூரான்!! ;-)

    ReplyDelete
  57. அருமையாக இருந்தது. உங்களது கிரிக்கெட் அனுபவங்களை படிக்கும் போது எழுத்தாளர் சுஜாதா “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” புத்தகத்தில் கிரிக்கெட் பற்றி எழுதியதை ஞாபகப்படுத்தியது நன்றி.

    ReplyDelete
  58. @கோவை2தில்லி
    இது கிரிக்கெட்டுக்கான முன்னோட்ட பதிவு மட்டுமே. கிரிக்கெட்டுக்காக ஒரு முழு பதிவே காத்துகிட்டு இருக்கு. ;-) ;-)

    ReplyDelete
  59. உங்களின் இந்த பதிவினை 'வலைச்சரத்தில்' அறிமுகம் செய்துள்ளேன்.
    படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும். நன்றி.

    madhavan 17-12.2010

    ReplyDelete
  60. @Madhavan Srinivasagopalan
    வலைச்சரத்திலேயே நன்றி சொல்லிவிட்டேன் மாதவா!! மீண்டும் ஒரு நன்றி ;-)

    ReplyDelete
  61. superb rvs
    i am also belongs to great mannargudi
    and now i am working as a
    teacher in great....nhss
    thank you

    ReplyDelete
  62. @NATIONAL
    வருகைக்கு நன்றி நான் படித்த பள்ளியே! ;-);-)

    ReplyDelete