Friday, November 26, 2010

குறையொன்றுமில்லை


mumoorththi


மார்கழி கச்சேரி சீசன் இன்னும் கொஞ்ச நாளில் களை கட்டத் தொடங்கிவிடும். சுப்புடுக்கள் அதிகம் தலைப்பட ஆரம்பித்துவிடுவார்கள். நிரவல் சரியில்லை கேண்டீனில் வறுவல் சரியில்லை என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் வரும். பத்திரிக்கைகள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு சிறப்பு பக்கங்களில் வளர்ந்த மற்றும் வளரும் கலைஞர்களைப் பற்றி பத்தி பத்தியாக கமெண்டு எழுதுவார்கள். அழகழகான சங்கீத பூஷனிகள் வைர வைடூர்ய ஜிமிக்கிகள் போட்டுக்கொண்டு உடம்பெல்லாம் பட்டாக ஜிலுஜிலுவென்று பாட வருவார்கள். சாரீரம் மற்றும் அந்த வார்த்தையின் துணைக்கால் எடுத்தது போக மீதி வரும் வார்த்தை என்று எல்லாவற்றுக்கும் சேர்ந்து கூட்டம் அம்மும். சபாக்கள் திமிலோகப்படும். தெரிந்தோ தெரியாமலா அறிந்தோ அறியாமலோ கையை திருப்பி திருப்பி தொடை சிவக்க தாளம் போடுவர். திருமனும் பட்டையும் போட்டுக்கொண்டு நிறைய மாமாக்கள் தங்கள் இல்லத்தரசிகளுடன் சபாக்களில் ராப்பகல் அகோராத்திரியாக குடியிருப்பர். இந்த மாதிரியான விசேஷ சந்தர்ப்பங்களிலாவது மாமியின் உப்பில்லா ரசஞ்சாத்திலிருந்து ஒரு பெரிய எஸ்கேப்.

ஆரம்பிக்காத சீசனுக்கு இப்போ என்ன பில்டப் என்ற உங்கள் மானசீக கேள்வி நியாயமானதே. எங்கள் தெருவில் நீங்கள் குடியிருந்தால் இந்த பதிவின் கோலாகல ஆரம்பம் உங்களுக்கு என்னவென்று புரியும். மொத்தம் ஒரு நாற்பதடியே உள்ள தார் சாலை அது. "உன் தலையில எவ்வளவு பேன்?" என்று எதிர்த்தவீட்டு மாமி தன் தலைவிரி கோலப் பெண்ணிடம் பல்லைக்கடித்துக்கொண்டு வாரிக்கொண்டே கேட்டால் அது எங்கள் வீட்டு சமையலறை வரை மிகத் தெளிவாக காது கேட்கும். இப்படியான ஒரு அன்யோன்ய சென்னை வாழ்க்கையில் காலை ஐந்தரை மணிக்கு முழுவாய் பிளந்து வாய்ப்பாட்டு கச்சேரி ப்ராக்டீஸ் செய்தால் எப்படி இருக்கும். மிகவும் புரியும்படியாக விளம்ப வேண்டும் என்றால் ஒரு மண்வெட்டியை எடுத்து தார் ரோட்டில் போட்டு இப்படியும் அப்படியும் கரண்டினால் எப்படி இருக்குமோ அதுபோல ஒரு அசாத்திய குரல் வளம் அந்த  மாமிக்கு.

ஒரு பக்கம் ஆடியோ சிஸ்டத்தில் பாம்பே ஜெயஸ்ரீயோ, சுதா ரகுநாதனோ வர்ணம் இழுத்துக் கொண்டிருப்பார்கள். பின்னாலேயே மாமியும் கொஞ்சம் கொஞ்சமாக "உ...ஆ...." என்று இழுக்க ஆரம்பிப்பார்கள். ஏரியா  தாண்டி வந்த சக பைரவரை பார்த்து ராகம் பாட ஆரம்பிக்கும் உள்நாட்டு பைரவர் போல. நேரம் ஆகஆக சூடு ஏறும். எவ்வளவு நாழி சங்கீதப் பயிற்சி எடுத்துக்கொள்வார்கள்? உட்கார்ந்து பாடுவார்கள்? இது போன்ற மேலான கேள்விகளுக்கு நான் பதில் சொல்லவேண்டும். கடமைப்பட்டுள்ளேன். முதலில் இப்படி பாடுவார்கள் என்று நீங்கள் கேட்பதே தவறு. கத்துவார்கள். காட்டு கத்தலாக கத்துவார்கள். கீழ் ஸ்தாயியில் போகும்போது ஒரு வளர்ந்த பூனையின் வித்தியாசமான மியாவ் போல இருக்கும். இது போன்ற அசாதாரணமான சமயங்களில் மாமியின் பெண்ணும் பையனும் கண் காணாத காது படாத இடத்திற்கு ஓடிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். எப்போது அந்த அம்மணி பாட ஆரம்பித்தாலும் அந்தப் பையன் அவர்கள் மேல் உள்ள ஆத்திரத்தில் வண்டியை ஒரு ஜென்மாந்திர எதிரி போல ஓங்கி மிதித்து எங்கோ பறந்துவிடுகிறான். ஒரு மகளிர் நூறு மீட்டர் பந்தயம் ஓடும் வேகத்தில் அந்தப் பெண் பையை தோளில் மாட்டிக்கொண்டு கல்லூரிக்கு பின்னங் கால் பிடரியில் அடிக்க ஓடுகிறது. சில சமயங்களில் அந்தப் பெண் மூச்சிரைக்க பிடிக்கிறது ஓட்டம். அந்த மாமா, தாலி கட்டிய புண்ணியவான் ஆள் அட்ரசே காணோம். அவருக்கு தான் ஆயுள் தண்டனை.

என்றைக்காவது அந்த மாமியின் சத்தம் கொஞ்சம் குறைச்சலாக இருக்கும். இரண்டொரு நாள் காது தீட்டி கவனித்ததில் தான் எனக்கு அந்த மர்மம் விலகியது. என்னவென்று பார்த்தால் அன்றெல்லாம் நித்யஸ்ரீ மகாதேவன் சிடியில் பாடுகிறார். அவரின் குரலுக்கு ஈடாக நம்ம லக்ஷ்மன் சுருதி மாலதி கூட "மன்மத ராசா" எட்டிப் பிடித்து பாட முடியாது. எட்டெட்டும் பதினாறு கட்டை. இந்தக் காலத்தில் கூட மைக் இல்லாமல் ஒருவர் ஆயிரம் பேருக்கு கச்சேரி செய்யவேண்டும் என்றால் அது நித்யஸ்ரீயால் நிச்சயம் முடியும். நான் நித்யஸ்ரீயின் பரம ரசிகன். பாட்டு காதை துளைத்து மூளையை திருகி இதயத்தில் நுழைந்துவிடும். அவ்வளவு ஒரு காத்ரம். அவர் பாடும் போது வேறு எங்கும் கவனிக்க முடியாது. மேளமும் நாதஸ்வரமும் பக்க வாத்தியங்களாக கொண்டு நித்யஸ்ரீயின் ஆல்பம் ஒன்று கேட்க நேர்ந்தது. "அதரம் மதுரம்.." கிருஷ்ணாஷ்டகம். நிச்சயம் வேறு எந்த பிஞ்சுக் குரலும் பக்கவாத்திய மேளத்திற்கு பாட முடியாது. வயலினுக்கே எகிறாத சாரீரங்கள் இருக்கும் இந்தக் காலத்தில் இவர் நாதசுரத்திற்கு பாடுகிறார். நல்ல கெட்டியான குரல்.

முந்தாநாள் சாயங்காலம் வெளியே விளையாட சென்ற என் பெண்ணை கூப்பிட்டு "நான் எப்படி பாடறேன்?" என்று கருத்து கேட்டிருக்கிறார் மாமி. அலறியடித்துக் கொண்டு மேலே ஓடிவந்த என் பெண் ஏதோ பேயறைந்தது போல என்னிடம் "அந்த மாமி.. மாமி.. " என்று சுரம் பாடினாள். "என்ன சொல்லு" என்று பயந்து கேட்டதற்கு அவர்கள் கேட்டதை சொல்லி சொல்லி சிரிக்கிறாள். அவர்கள் ஆர்வம் பாராட்டக்கூடியதே. மறுப்பதற்கில்லை. ஆனால் ரோடில் ஒரு ஈ காக்கா போக விடாமல் இப்படி படுத்துவது நியாயமா? ஏ.சி. நீல்சன் மாமிக்கு ஒரு கருத்துக் கணிப்பு நடத்திக் கொடுத்தால் தேவலை.

இன்று காலை வண்டி துடைத்துக் கொண்டிரும்க்கும்போது மீண்டும் சிடி ஆன். மாமியும் பாட்டும் ஆன். இந்த முறை எம்.எஸ். பாட்டு "குறையொன்றுமில்லை... மறை மூர்த்தி கண்ணா... " மாமி மனமுருகி எம்.எஸ் பாடுவதை பீட் செய்வதற்கு முயன்றுகொண்டிருந்தார்கள். ஒரு டூ வீலர் காரர் அவர்கள் வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்தது போல திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே போனார். மாமி பாட்டு அவரை காவு வாங்கிவிடப் போகிறதே என்று பயம் எனக்கு. விடாமல் சிடி தேயும் வரை இரண்டு மூன்று முறை பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனுக்கு கேட்கும் வரை "குறையொன்றுமில்லை.." என்று பாடிவிட்டார்கள். கேட்ட எனக்கும் அந்த பரம்பொருளுக்கும் தானே தெரியும்...

ஸ்யாமா சாஸ்த்ரி, முத்துஸ்வாமி தீக்ஷிதர், தியாகப் ப்ரம்மத்திர்க்கே வெளிச்சம்.

பட உதவி: http://picasaweb.google.com/esridhar

பின் குறிப்பு: சீசனில் இன்னொரு முழு பதிவு உண்டு. ஜாக்கிரதை!!

-


49 comments:

  1. ஆஹா... சங்கீத சீசன் ஆரம்பிச்சுடுச்சே.... உங்களுக்கு எதிர் வீட்டிலே பாட்டு கச்சேரி, ரொம்ப வசதி... :)))))

    இங்க எனக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து பயணம் செய்யும்போது ஆலாபனை செய்யும் ஒரு 50 வயது இளைஞர். அவர் இப்போது தான் சங்கீதம் பயில்கிறார் என்பது கூடுதல் செய்தி.... :))))))

    ReplyDelete
  2. என் குரலை விட மாமி சூப்பரா பாடுவாங்க போல் இருக்கே. இந்த முறை பெரிய தலைகள் அதிக கச்சேரி ஒத்துக்கொள்ளவில்லை என்று பேப்பரில் படித்தேன்

    ReplyDelete
  3. @வெங்கட் நாகராஜ்
    அவசியம் நீங்களும் வந்து இந்த கச்சேரியில கலந்துக்கனும். ;-) ;-)

    ReplyDelete
  4. @LK
    ஆமாம் எல்.கே. நிறைய தேங்காமூடி கச்சேரி இருக்கும் என்று நினைக்கிறேன். ;-)

    ReplyDelete
  5. சங்கித சீஸனுக்கு அறிமுகம் கல கலன்னு இருக்கு....

    பக்கத்து மாமியை ரொம்பவே கலாய்க்கிறிங்க ..கட்டைய விட்டுட்டு ``கட்டை``ய எடுத்துட்டு வரப்போறாங்க பாருங்க...

    ReplyDelete
  6. @பத்மநாபன்
    மாமி ப்ளாக் படிக்காது என்ற அசாத்திய தைரியத்தில்.. ;-)

    ReplyDelete
  7. //தெரிந்தோ தெரியாமலா அறிந்தோ அறியாமலோ கையை திருப்பி திருப்பி தொடை சிவக்க தாளம் போடுவர்.//

    //அது எங்கள் வீட்டு சமையலறை வரை மிகத் தெளிவாக காது கேட்கும்.//

    //ஏரியா தாண்டி வந்த சக பைரவரை பார்த்து ராகம் பாட ஆரம்பிக்கும் உள்நாட்டு பைரவர் போல.//

    சரளமா நகைச்சுவை.

    இவ்வளவு பேரை காதடைக்கச் செய்தும், விடாமல் தொடர்ந்து பாடும் அந்த மாமியின் ஆர்வக்கோளறு என்னை ஆச்சரியப் படுத்துகிறது.
    :)

    ReplyDelete
  8. @இளங்கோ
    நன்றி இளங்கோ. அந்த பெருமூச்சு கவிதை அருமை. ;-)

    ReplyDelete
  9. தங்கள் பாராட்டுக்கு நன்றிங்க அண்ணா.

    ReplyDelete
  10. பாடப் பாட ராகம், மூட மூட ரோகம். நீங்கதான் அவங்களை ஊக்குவிக்கனும்:)

    ReplyDelete
  11. @Gopi Ramamoorthy
    தங்கள் உத்தரவு ஐயா... ;-) ;-)

    ReplyDelete
  12. ஏரியா தாண்டி வந்த சக பைரவரை பார்த்து ராகம் பாட ஆரம்பிக்கும் உள்நாட்டு பைரவர் போல.//
    மிகவும் ரசித்த வரி

    ReplyDelete
  13. intha katcheri and canteen sambanthangalai paththi naanum nerayaave kelvi pattirukken... pona varusham intha oorla irunthum naan katcheri yellaam pogala... ennaa enga porathukkum vazhi theriyaathu! intha varusham- vazhi yellaam kettu vachchirukken... paakkalaam! naan parama sanjay FAN!

    n antha maami-ya nenachchaa enakku perumayaa irukku! avaaloda enthusiasm is commendable! hats off! ennikkume paadaravaalukku- namma nannaa paadalangarathe theriyaathu.. kekkaravaalukku thaan theriyum..(munna pinna paadirunthelnaa therinjirukkum)... naan oru 2nd 3rd padikkumpothellaam yaaru engaaththukku vanthaalum "mamakku oru paattu paadi kaami"mbaa en appa.. appo rombave kushiyaa paaduven.. ellarum romba nannaa irukkumbaa.. appa record pannina caseette laam ippo pottu paakkum pothu thaan theriyarathu- appadi sonnavaalellaam "evvvvvvvaaaaaloooooo nalllllllavaaaaa"nnu!


    nice post!! :D

    ReplyDelete
  14. @நாய்க்குட்டி மனசு
    நன்றி ;-)

    ReplyDelete
  15. @Matangi Mawley
    எம்பொண்ணு கர்நாடிக் கத்துக்கறா.. அவா ரொம்ப ப்ராயாசைப் படரா ஒத்துக்கறேன். ஆனா.. கொஞ்சம் வால்யூம் கம்மி பண்ணலாம். ராகம் கொஞ்சம் கைகூடினப்புறம் எடுத்து பாடலாம். ஆனா எடுத்தவுடனே ஒரு ப்ரொபஷனல் பாடறதை பார்த்துட்டு நானும் அதுமாறி பாடப்ப்போறேன் அப்படின்னு அடம் பண்றதுதான் தாங்கலை...

    எனக்கும் சஞ்சய் ரொம்ப பிடிக்கும். சக்கரவாஹம் அப்படின்னு ஒரு ஆர்.டி.பி வச்சுருக்கேன். அண்ணே பின்னிடுவார். அது போல "ஜகன்மோகினி" அப்படின்னு நித்யஸ்ரீ பாடின ஆர்.டி.பி. அப்பப்பா... கேட்டுக்கொண்டே இருக்கலாம்..
    (எனக்கு ரொம்பல்லாம் ராகம் தாளம் தெரியாது... கேள்வி ஞானம் மட்டுமே... மற்றபடி நான் ஒரு சங்கீத அஞ்ஞானி!!!. ஏதோ நல்லா இருக்கிற மாதிரி இருக்கே அப்படின்னு என் காதுக்கு பட்டுதுன்னா பேஷ் பேஷ் அப்ப்டின்னு ரசிப்பேன். கமகம், ஏற்ற இறக்கங்கங்கள், பிருகா, மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி என்று சில வர்ணனைகள் ரசிக்க கத்துண்ட்ருக்கேன். அவ்வளவுதான்... குழந்தைல எப்படி பாடினாலும் எல்லோரும் நன்னா இருக்குன்னுதான் சொல்லுவா.. எம்பொண்ணையும் அப்படித்தான் சொல்றேன்... ;-) ;-) ;-) )

    ReplyDelete
  16. @வித்யா
    ஸ்மைலிக்கு பதில் ஸ்மைலி ;-) ;-) ;-) ;-) ;-)

    ReplyDelete
  17. அகோராத்திரியாக என்றால் என்ன?

    பாடும் ஆர்வம் அந்த மாமிக்கு...மற்றவர் படும் பாடு தெரியலை. உங்களுக்கு பதிவு போடும் ஆர்வம்...நித்யஸ்ரீ பாடும்போது முகத்தை ஒரு பக்கமாகத் திருப்பி செய்யும் சேஷ்டைகள் கூட பிடிக்கும்!

    ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா...ஒன்றும் குறை இல்லை....

    ReplyDelete
  18. சீசனுக்கு முன்னாடியே கலாய்ச்சிருக்கீங்க சூப்பர். “அதரம் மதுரம்” எம்.எஸ் அம்மா குரலில் கேட்டிருக்கிறேன் அற்புதமாக இருக்கும். நித்யஸ்ரீ குரலில் கேட்டதில்லை.

    ReplyDelete
  19. அதான் தெரியுமே (முத்துலெட்சுமி, தங்கவேலு ஜோக்கு)..

    டாக்டர்(!) விஜய், சார்லி, மீசை முருகேசன், தெரு மக்கள்..
    "பாட்டும் நானே, பாவமும் நானே (பாவம் தெரு மக்கள்)"

    ReplyDelete
  20. மாமியின் பாட்டு உங்களைப் படுத்தும் பாடு கேட்டு ரசிச்சேன்! கூடவே எசப்பாட்டு ஏதும் பாடிடாதேள்! என் தங்கச்சி உங்களை தனி ஆவர்த்தனம் வாசிச்சிடுவாள்!
    குழந்தைகள் பாட்டு எப்படி பாடினாலும் நல்லாத்தான் இருக்கும். நாம் அதை ரசிப்பதே அவர்களுக்கு ஊக்கம் தரும்.

    ஜான்சன் ஒரு இசை நிகழ்ச்சிக்கு போனாராம். உங்களுக்கு என் இசை பிடிக்கிறது என்று அவரைக் கேட்டார்கள்.
    "எல்லா ஒசைகளிலும் எனக்கு குறைவாக தொல்லை கொடுப்பது இசை. அதனால் தான் எனக்கு இசை பிடிக்கும்" என்றாராம்!

    உங்கள் மார்கழிப் பதிவுக்கு இப்பவே மடிக்கணணி முன் துண்டு போட்டு எடம பிடிச்சுட்டேன்! பேஷா மகராஜனா எழுதுங்கோ!

    ReplyDelete
  21. @ஸ்ரீராம்.
    என்னோட பாட்டி கால்த்லேர்ந்தே தொன்றுதொட்டு அகோரத்திரி யூஸ் பண்ணுகிறார்கள். நானும் பண்ணிவிட்டு போறேனே. விடுங்கள்.
    சரி ஒத்துக்கறேன்.. குறை ஒன்றும் இல்லை. ;-) ;-)

    ReplyDelete
  22. @கோவை2தில்லி
    நித்யஸ்ரீ சூப்பெரா இருக்கும். முடிந்தால் வலையேற்றுகிறேன். கேட்டு ரசியுங்கள்.. ;-)

    ReplyDelete
  23. @Madhavan Srinivasagopalan
    அவர்கள் வீட்டில் மொத்தம் எவ்வளவு சிடி இருக்குன்னு இப்ப எனக்கு தெரியும் ;-)

    ReplyDelete
  24. @மோகன்ஜி
    ராஜன்னு.. உங்கள் தங்கை ரொம்ப சமர்த்து.. தனிஆவர்த்தனம் பிடிக்காது.. என் பெண்களோடு சேர்ந்து பெரிய ஜமா வைப்பாள். கில்லாடி.
    மார்கழிக்கு நிச்சயம் ஒரு கச்சேரி மாமா பதிவு இடனும்ன்னு ஆசை. பார்ப்போம். உம்மாச்சி நடத்தி வைக்கறதான்னு.. நன்றி ;-)

    ReplyDelete
  25. @ Sriram & RVS

    As heard from my parents..

    அகோராத்ரி என்றால் அர்த்த ராத்திரி என்று பொருள் படும்.

    சாஸ்திரத்தின்படி இரவில் புஷ்கரணியில் குளிக்கக் கூடாது.....
    ஆனால் ஒப்பிலியப்பன் கோவில் புஷ்கரணியில் இரவில் கூட குளிக்கலாம்..
    அதன் பெயர் 'அகோராத்திரப் புஷ்கரணி'
    --------- Ref
    'அகோராத்திரப் புஷ்கரணி'

    ReplyDelete
  26. இலவசமாவே கச்சேரி கேக்குறீங்கன்னு சொல்லுங்க அண்ணே ;)

    ReplyDelete
  27. நான் இப்படித் தான் ஃப்ளூட் கத்துக்கும்போது பெரிய சண்டையே வந்தது. வளரும் கலைஞர்களுக்கு நான் செய்வது பிறருக்கு தொந்தரவு செய்கிறோம் என்பது புரியாது!
    ’இன்னா செய்தாரை ஒறுக்காமல்,
    அவர் வாட மீண்டும் இன்னா செய்து விடல்’ தானே இன்றைய நிலவரம்!

    ReplyDelete
  28. மாமி பாட்டு அவரை காவு வாங்கிவிடப் போகிறதே என்று பயம் எனக்கு. விடாமல் சிடி தேயும் வரை இரண்டு மூன்று முறை பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனுக்கு கேட்கும் வரை "குறையொன்றுமில்லை.." என்று பாடிவிட்டார்கள். கேட்ட எனக்கும் அந்த பரம்பொருளுக்கும் தானே தெரியும்...

    அச்சோ பாவம் ::))

    ReplyDelete
  29. ச்சே ச்சே...இசைக்குத்தான் எத்தனை எதிரிகள்!இதே போல் ரொம்பக் கஷ்டப் பட்டு பணம் சேர்த்து என் நெடு நாள் கனவு கிடார் வாங்கி பிராக்டிஸ் ஆரம்பித்த மூன்றாம் நாள் பக்கத்து வீட்டுப் பெண் கைக்குழந்தையுடன் படி ஏறி வந்து என் அம்மாவிடம் பையனை வீணையை கொஞ்சம் மெதுவா வாசிக்கச் சொல்லுங்க குழந்தை குடிச்சதெல்லாத்தியும் கக்கிடுது பாருங்க என்று சொல்லி ஒரு வருங்கால இளையராஜாவை முதல் கம்பியோடு எண்டு கார்டு போட்டுவிட்ட்டது நினைவு வந்து நரம்பெல்லாம் ஒரு மாதிரி குன்னக்குடி வயலின் போல ஒரு பக்கமாய் இழுக்கிறது....

    ReplyDelete
  30. :))))

    சீசன் முடியுமட்டும் உங்களுக்குக் கொ(தி)ண்டாட்டம்தான்.

    ReplyDelete
  31. @Balaji Saravana
    நீயும் வரியாப்பா இந்த கச்சேரி கேக்க.. ப்ளீஸ்... ;-)

    ReplyDelete
  32. @”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
    காது கொடுத்துக் கேட்க முடியலை சார்! அதான் பதிவாயிடுச்சு.. ;-)

    ReplyDelete
  33. @sakthi
    நிஜமாவே நான் ரொம்ப பாவம். இதை எழுதினா நான் என்னமோ இசைக்கு எதிரிங்கற ரேஞ்சுக்கு எல்லாரும் என்னை திட்டறாங்க.. ;-)

    ReplyDelete
  34. @bogan
    நான் கூட மிருதங்கம் கத்துக்கிட்டேன். ஒரு வருஷம் கழித்து ஆதிதாளம் வந்தார். அதுக்குள்ளையும் எனக்கு விட்டுப்போச்சு... மிருதங்கம் என்னைவிட்டு ஓடிப்போச்சு.. ;-)

    இன்னொரு இளையராஜாவை இழந்து தமிழ்நாடு தவிக்குது.. :-(

    ReplyDelete
  35. @மாதேவி
    திண்டாட்டம்தான்.. கொண்டாட்டம் ஒன்னும் இல்லை.. ;-)

    ReplyDelete
  36. தலைவா....

    உங்க கச்சேரி எங்கே, என்னிக்குன்னு சொல்லிடுங்க...

    வந்துடுவோம்...

    ஆனாலும், இந்த சபாக்கள்ல கச்சேரி களை கட்டுதோ இல்லையோ, அங்கே அறுசுவை நடராஜன், எழுசுவை கங்காதரன்னு ஸ்டால் போட்டு, சபா உள்ள உட்கார விடாம, பந்திக்கு இழுக்கறாங்களே, அது சூப்பர் களை கட்டுகிறது....

    ReplyDelete
  37. நான் வேலை விட்டு வரும் போது இரவாகிவிடுவதால் அந்த மாமி குடலை கேட்க முடியவில்லை என்று நினைக்கிறேன் இருந்தாலும் சாலை பேரை சொன்னால் தைரியமாக தவிர்க்கும் முடியும். :-)

    ReplyDelete
  38. dear rvs

    anda mami blog padikka mattal
    apdinnu nenakkadeengo.

    avo sondama blog vachirukkalakkum

    jagradai

    balu vellore

    ReplyDelete
  39. @R.Gopi
    செவிக்கு உணவில்லைன்னு வயற்றுக்கு ஈயப் போயடராங்கலோ!!! ;-)

    ReplyDelete
  40. @வடுவூர் குமார்
    இன்பத் தேன் வந்து உங்க காதில் பாய வேண்டாமா.. ;-)

    ReplyDelete
  41. @balutanjore
    ரொம்ப பயமா இருக்கு சார்! ;-) ;-)

    ReplyDelete
  42. பக்கத்து மாமியை ரொம்பவே கலாய்க்கிறிங்க ..கட்டைய விட்டுட்டு ``கட்டை``ய எடுத்துட்டு வரப்போறாங்க பாருங்க...

    பதிவோடு சேர்த்து இதையும் ரசித்தேன்..

    ReplyDelete
  43. சங்கீத சம்பந்தமான பதிவை மிஸ் பண்ணாம படிக்க முடிஞ்சது. நன்னாவே எழுதி இருக்கேள் அண்ணா! தோஹால நேத்திக்கிதான் ஒரு கர்னாடக இசை கச்சேரி கேட்டேன்!..:) ஐ லவ் யூ ரஸ்னா!னு சொல்லும் குழந்தை போல எனக்கும் நித்யஷ்ரீ பாட்டு பிடிக்கும்!..:)

    ReplyDelete
  44. ஆனாலும் அந்த மாமியை இப்படி வாரி இருக்க வேண்டாம். (குறிப்பு - இப்போ உலகம் முழுசும் எல்லா மாமிகளும் ப்ளாக் படிச்சுண்டு இருக்காங்கர்தை மறக்க வேண்டாம்)..:)

    ReplyDelete
  45. @ஆதிரா
    பத்துஜி கமென்ட் ரசிக்காதோர் உண்டோ? ;-)

    ReplyDelete
  46. @தக்குடுபாண்டி
    உங்களுக்கு மட்டும் தான் எவ்ளோ மாமி சமையல் ப்ளாக் எழுதறா, சங்கீத ப்ளாக் எழுதறா, இலக்கியம் எழுதறா போன்ற புள்ளி விவரங்கள் தெரியும். இந்த மாமி நிச்சயம் ப்ளாக் எழுதி படிக்கமாட்டா. ஏன்னா அவாளுக்கு கம்ப்யூட்டரே தெரியாது. ;-) ;-)

    ReplyDelete
  47. நகைச்சுவை இழையோட நீங்கள் எழுதியிருக்கும் விதம் சூப்பர். பல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன்.

    ReplyDelete
  48. @geetha santhanam
    நன்றி மேடம். முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும். ;-)

    ReplyDelete