Friday, January 21, 2011

கையெழுத்து தலையெழுத்து

நாலு வரி நோட்டு ரெட்டை வரி நோட்டு என்று ரகம் வாரியாக வரி வரியா நோட்டு வாங்கி பக்கம் பக்கமா எழுதியும் கோட்டுக்குள்ளேயும் வெளியேயும் வரவேண்டிய எழுத்தின் தலை மற்றும் கால் பாகங்கள் நீட்டிக்கொண்டும் விரைத்துக்கொண்டும் நெளிந்தும் கோனிக்கொண்டும் சரியாக வராமல் துருத்திக்கொண்டு என்னை ஏமாற்றி எகத்தாளமாக நொண்டியடித்த பாடசாலையில் படிக்கும் பருவம் அது. மேல்கோடு பார்த்தா கீழ்கோடு பாலன்ஸ் போய்டும். கீழயும் மேலையும் பார்த்தா நடுவுல சரிஞ்சுடும். "நீட்டுடா கையை.." என்று நாக்கை மடக்கி கண்ணிரண்டையும் மோத்தா கோலி மாதிரி முழிச்சு கைகளில் மாஸ்டரிடம் இருந்து வரி விழும்படி பிரம்படி வாங்கினாலும் வலிக்கு உதறின கை ஒழுங்காக எழுத வளையவில்லை. எவ்ளோ தடவை சொல்லிக்கொடுத்தாலும் எங்க நீட்டனும் எங்க வளைக்கனும்ன்னு தெரியாம "கோழி கிறுக்கின மாதிரி எழுதறான்டா" என்று வாத்தியாரிடம் பாராட்டு பத்திரம் வாங்கியது தான் மிச்சம். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அன்ரூலியாக ஒரு அன்ரூல்ட் பேப்பர் கொடுத்து ஒரு நாள் வாழை மரம் கட்டுரை எழுத சொன்ன போது மன்னார்குடியில் கிளம்பி கும்பகோணம், வடலூர், சேத்தியாதோப்பு, பண்ருட்டி, திண்டிவனம் என்று சாலை மார்க்கமாக சென்னை வந்து சேர்ந்தன என் எழுத்துக்கள்.

நீல அரை டிராயர் முதல் பட்டன் போன வெள்ளை சட்டை போட்ட ஏழாவதில் குமரேசு ரெண்டு முட்டையை ஒன்னு மேல ஒன்னு அடுக்கி எட்டுப் போட்டதைப் பார்த்துட்டு வெறுத்து போய் கணக்கு வாத்தியார் கிளாஸுக்கு வராம ரெண்டு நாள் கண் காணாமப் போய்ட்டார். அவனோட சேர்த்து "எவன்டா உனக்கு முட்டை போட்டு எட்டு எழுத சொல்லிக்கொடுத்தான்" என்று அவனுக்கு அரிச்சுவடி சொல்லிக் கொடுத்த வாத்தியாருக்கும் அனாவசியமாய் ஒரு பாட்டு விழுந்தது. வந்த வெறியில குமரேசு அந்த வருஷம் முழுவதும் எட்டு மட்டும் போட்டு பழகினான். ராப்பூரா தோம்ததீம்தா என்று புன்னகை மன்னன் ரேவதி ஆடினா மாதிரி அந்த வருஷம் முழுக்க எட்டெட்டா போட்டு தீர்த்தான். ஃபைனல் பரீட்சையில் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நெட்டை கொக்கு மெக்ராத் பந்து போட்டா பத்து தாண்டாத நம்ம குள்ள வாத்து பேட்ஸ்மேன்கள் மாதிரி ஒற்றை இலக்கத்தில் அதே எட்டு வாங்கி அவுட் ஆனான். நல்லவேளை டக் அவுட் ஆகவில்லை. ஆனால் வாழ்க்கையில் நன்றாக எட்டு போடத் தெரிந்து கொண்டு ஃபாமிலி லைஃப் லைசென்ஸ் வாங்கி எங்கும் குட்டுப் படாமல் இப்போது குடும்பம் குட்டியாய் வசதி வாய்ப்போடு இருப்பதாக தகவல்.

தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம், அன்றிலிருந்து இன்றுவரை கையை விறகு அடுப்பில் காட்டி பழுக்க காய்ச்சினால் கூட (சுட்டுப் போட்டா கூட என்று சொல்வது போல..) அட்சரங்கள் அவலட்சணமாக வந்துத் தொலைக்கிறது. அழகாக எழுதவேண்டும் என்று ஒருநாள் ஆத்ம சங்கல்பம் பண்ணிக்கொண்டு பேனாபிடித்து மெதுவாக எழுத இல்லை.. இல்லை... வரைய ஆரம்பித்தால் குடிகாரன் கைபோல "டிங்கு...டிங்கு..டிங்கு.." என்று ஆடியது. நெர்வஸ் வீக்னஸ் கூட எதுவும் இல்லை. ஆடிய கையில் ஒரு மணியை மாட்டினால் கோயிலில் ஐந்து சந்நிதிக்கு நெய்வேத்தியம் செய்து திரையை திறந்து விடலாம். எங்கேயோ போகிற போக்கில் இதை பார்த்த பெரியவள் "அம்மா.. அப்பா எழுதவே ரொம்ப பயப்படராம்மா.." என்று கூவி வீட்டில் எல்லோருக்கும் தம்பட்டம் அடித்தாள். "என்னன்னா ஏதாவது திகில் கதையா? குலை நடுங்க எழுதறேள்.." என்று வாய்க்கு கிடைத்த அவலாக அவள் மென்றாள். நாம நல்ல நாள்லயே தில்லைநாயகம். இப்போ நாள்பூரா தக்கட தக்கடன்னு (தக்குடு தக்குடுன்னும் தட்டுவோம்) கீபோர்ட் தட்டறோம். இதற்கப்புறம் கேட்கவா வேண்டும். பெரியவளோ சின்னவளோ நாலு வரி நோட்டு எழுதினால் அந்த திக்குக்கே ஒரு கும்பிடு போட்டுவிட்டு கண்டும் காணாதது போல ஆகாத மாமியாரை கண்டு ஷார்ப்பாக மின்னல் வேகத்தில் முகத்தை வெட்டும் நாட்டுப் பெண்ணாய் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடிக்கிறேன்.

பள்ளி நாளிலிருந்து பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் நான் படித்த ஆண்கள் மட்டும் படித்த துர்பாக்கிய கல்லூரி நாட்கள்  வரை பரீட்சை எழுதும் போது நான் வணங்கும் தெய்வங்களின் புண்ணியத்தால் கோழி கிறுக்கலிலும் கூடை கூடையாய் நிறைய மார்க் வாங்கி தெய்வாதீனமாக பாஸ் பண்ணியிருக்கிறேன் என்று ரெண்டு நாளைக்கு முன்னர் தான் எனக்கு ஸ்திரமாக பட்டது. எம்.சி.ஏவில் SAD (System Analysis and Design) என்ற பேப்பரில் வகுப்பில் முதல் மாணவனாக வந்த போது இப்படி எழுதுவதில் கூட ஒரு சௌகரியம் இருப்பதை தெரிந்துகொண்டேன். "மாப்ள.. எப்படிடா... யாருக்கும் புரியாமலேயே எழுதி ஃபர்ஸ்ட் மார்க் வாங்குற.." என்று என் பிச்சுப் போட்ட ஜாங்கிரி எழுத்துக்களை பார்த்து ஸ்டமக் பர்ன் ஆகி கேட்டதில் அவர்கள் கண் திருஷ்டியில் எனக்கு ரெண்டு நாள் ஜுரம் கண்டுவிட்டது. கண்ணடி தாங்க அந்த நேரத்தில் ஒரு வைராக்கியத்தில் டைப் ரைடிங் கற்றுக்கொண்டு அந்த பேப்பரி கொண்டு போய் வாய்க்கு வந்தது பேசிய மக்களிடம் காண்பித்து இதுவும் என் கையால் எழுதியதுதான். என்ன கையால் எழுதுவதற்கு பதில் தட்டி அடித்து கொண்டுவதிருக்கிறேன் என்று சொல்லிய என்னை ஆகாங்கே தட்டி எடுத்து நிமிர்த்து விட்டார்கள். டிங்கரிங் பார்த்த கார் போல.

இப்படி பலகாலமாக கிறுக்கி எழுதிவந்த நான் முதன் முதலாக மன ஆறுதல் அடைந்தது தஞ்சாவூர் பெரிய கோவிலில்தான். அந்த பளபளா கருங்கற்களில் சோழநாட்டு எழுதப் படிக்க தெரிந்தவர்கள் எழுதியிருந்த கிரந்த எழுத்துக்களை பார்த்து நம்மை விடவும் கேவலமா ஒருத்தன் கிறுக்கியிருக்காண்டா என்று என் தோளை நானே தட்டிக்கொண்டேன். கன்னியாக்குமரியில் விஸ்வரூப தரிசனமாக நிற்கும் நம்ம வள்ளுவர் அண்ணாச்சி எப்படி ஒரு ஆணியை வச்சு பனை ஒலையில  எழுதியிருப்பாரு அப்படின்னு ஐன்ஸ்டைன் மாதிரி யோசித்து பார்த்ததில் மதுரை நாயக்கர் மஹால் அரண்மனையில் பெரிய தூண்களுக்கு ஓரத்தில் ரகசியமாக ஒளிந்து இருந்த தொல்லியல் துறை லைப்ரரியில் ஆதி காலத்தில் இருந்து தமிழ் எழுத்துக்கள் எப்படி உருமாறி இருக்கிறது என்பதற்கான நான் பார்த்த ஐந்தாறு கருங்கற்கள் சான்றுகள் கண்முன்னே தோன்றின. அங்கே 'க'வே பல டிசையன்களில் பார்க்க முடிந்தது. இப்போது நாம் எழுதறது தான் ரொம்ப கஷ்டமான கயொடிக்கும் எழுத்துருக்கள் போலிருக்கிறது. அவர் காலத்தில் ஈசியா எழுதக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். பால் பாய்ன்ட் பேனா கண்டுபிடித்தால் அதற்கு ஜோடியாக கை விரலுக்கு சுளுக்கு ஏற்படும் வகையில் ஜிலேபி எழுத்துக்களாக உருவாக்குகிறார்கள்.

"நீ எழுதறியா இல்லை கிறுக்கலா கையெழுத்து(signature) போடறியா" என்று புருவம் தூக்கி கேட்டவர்களிடம் நான் புன்னகைத்து சர்வ மரியாதையாக சொல்லும் பதில் "கையெழுத்து சரியில்லைனா தலையெழுத்து சரியா இருக்கும்ப்பா.. அப்டீன்னு எங்க பாட்டி சொல்லியிருக்கா..". என்னதான் நான் சால்ஜாப்பு சொன்னாலும் நீங்க நம்பப்போறதில்லை. அப்பன்னா அழகா எழுதுற எல்லாரும் நாட்டுக்கு ஜனாதிபதியா ஆயிட்டாங்களா அப்படின்னு பிரதீபா பாட்டிலை பார்த்ததுக்கு அப்புறம் கூட நீங்க கேட்டீங்கன்னா அதற்க்கு நான் பொறுப்பேற்க முடியாது. ஆனா கீழே நான் இங்க கொடுத்திருக்கற கையெழுத்தை பாருங்க. யாரோடதுன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க. என்னது "ஆண்டவனாலும் கண்டுபிடிக்க முடியாது ஒரு க்ளூ குடுங்களா..". ஒன்னு இருக்கு சொன்னா எல்லோரும் கரெக்ட்டா சொல்லி அடிச்சு தூள் கிளப்பிடுவீங்க. Magnet... ஏதோ வாய் தவறி உளறிட்டேன்..


Photobucket













-

49 comments:

  1. தலைவர் ரஜினிகாந்த் ??

    ReplyDelete
  2. மற்றப் பின்னூட்டங்கள் விரைவில் வரும்

    ReplyDelete
  3. Thalaivar ...Rajinikanth ..Rightaaaa!!!!! (silent follower of your blog)

    ReplyDelete
  4. ஆகா அது தலைவர் கை எழுத்தா ? கலக்குங்க ...
    என் கை எழுத்து கூட ரொம்ப கேவலமா இருக்கும் ,இப்ப வர அப்படி தான் ,அதா பாத்து வாத்தியார் எல்லாம் நீ பெரிய டாக்டர வருவன்னு அப்பவே சொல்லிடாங்க :)

    ReplyDelete
  5. // நெர்வஸ் வீக்னஸ் கூட எதுவும் இல்லை. ஆடிய கையில் ஒரு மணியை மாட்டினால் கோயிலில் ஐந்து சந்நிதிக்கு நெய்வேத்தியம் செய்து திரையை திறந்து விடலாம்.//
    chance less ha ha :)

    ReplyDelete
  6. மணி மணி எழுத்துக்கள் காலமெல்லாம் இப்பொழுது மலையேறிப் போயிடுச்சு...

    கணினியில் தட்ட ஆரம்பித்த பிறகு ..கையெழுத்தின் தலையெழுத்து மாறிப்போய்டுச்சு..

    அந்த கையெழுத்து....``ஒரு தடவை கையெழுத்து போட்டா நூறு தடவை போட்டதற்கு சமம்.... அவருது தானே... நீங்க கொடுத்த 2 க்ளுவும் இதுக்கு தான் சரியா வருது..

    அது சரி அந்த காலத்தில் கடுதாசி எல்லாம் எப்படி பரிமாறிட்டிங்க...டவுட் கேட்டே பரிமாற்றம் கூடீருமே....
    .

    ReplyDelete
  7. ஹா ஹா ஹா ஹா சூப்பரா இருக்கு...

    ReplyDelete
  8. இந்தப் பதிவை நகலெடுத்து பிரதிபா பாடிலுக்கு அனுப்ப வேண்டாமென்று மக்களை மண்டியிட்டு தண்டனிட்டு கேட்டுக் கொள்கிறேன். அப்படி அனுப்பினாலும் மொழி பெயர்க்க வேண்டாமென்று.. மொழி பெயர்த்தாலும் தமிழில் எழுதியவர் டிஆர் மன்றத் தலைவரென்று சொல்ல வேண்டாமென்று.. சொன்னாலும் அவர் ஒரே ஒரு முறை தலை நிமிர்ந்த புகைப்படத்தை அனுப்ப வேண்டாமென்று..

    ReplyDelete
  9. ஹ்ம்ம்.. ஒழுங்கா எழுதுனாவே படிக்க முடியாது.. இதுல இந்தக் கையெழுத்தை எங்க போய்க் கண்டுபிடிக்கறது...

    நீங்களே சொல்லிடுங்க.. :-)

    ReplyDelete
  10. ஒருவரின் கையெழுத்துதான் அவரின் தலைஎழுத்தினை நிர்ணயிக்கும் என்று சொல்லுவார்கள். உங்கள் கையெழுத்தினைப் பற்றிய பகிர்வு நன்று. நன்றி.

    ReplyDelete
  11. அட!நம்ம ரஜினிகாந்த் கையெழுத்துதான!(எப்டிகண்டுபிடிச்சேன் பாத்தீங்களா? ஹா ஹா ஹா....)

    மீ தி ஃப்ஸ்ட்?

    ReplyDelete
  12. //ஒரு நாள் வாழை மரம் கட்டுரை எழுத சொன்ன போது மன்னார்குடியில் கிளம்பி கும்பகோணம், வடலூர், சேத்தியாதோப்பு, பண்ருட்டி, திண்டிவனம் என்று சாலை மார்க்கமாக சென்னை வந்து சேர்ந்தன என் எழுத்துக்கள்//

    ரசித்தேன்

    கையெழுத்து சரி கிடையாதா உங்களுக்கு
    அடடா!அப்டின்னா நீங்க டாக்டருக்கு படிச்சிருக்கலாமே

    ReplyDelete
  13. சூப்பர் ஸ்டாரா.. சூப்பரோ சூப்பர். ஸ்கூல்ல‌ என்னோட பெரிய அஸெட்டா இருந்த கையெழுத்துக்கு இப்பல்லாம் வேலையே இல்லை! வருத்தமா இருக்கு. :(

    ReplyDelete
  14. இதுக்கா இதனை பீடிகை? கையெழுத்து நல்லா இல்லையினா அவாளோட தலையெழுத்து நன்னா பேஷா இருக்கும் அம்பி. நோக்கு தலையெழுத்து நன்னாத்தா கீது (ஐயோ ஐயோ என் புத்தி மாறலியே! ) இருக்கும் . கவலை படாதீரும்
    ஒய் .:)))

    ReplyDelete
  15. அன்றிலிருந்து இன்றுவரை கையை விறகு அடுப்பில் காட்டி பழுக்க காய்ச்சினால் கூட (சுட்டுப் போட்டா கூட என்று சொல்வது போல..) அட்சரங்கள் அவலட்சணமாக வந்துத் தொலைக்கிறது. அழகாக எழுதவேண்டும் என்று ஒருநாள் ஆத்ம சங்கல்பம் பண்ணிக்கொண்டு பேனாபிடித்து மெதுவாக எழுத இல்லை.. இல்லை... வரைய ஆரம்பித்தால் குடிகாரன் கைபோல "டிங்கு...டிங்கு..டிங்கு.." என்று ஆடியது. நெர்வஸ் வீக்னஸ் கூட எதுவும் இல்லை. ஆடிய கையில் ஒரு மணியை மாட்டினால் கோயிலில் ஐந்து சந்நிதிக்கு நெய்வேத்தியம் செய்து திரையை திறந்து விடலாம்.

    ..... ha,ha,ha,ha... You have a good sense of humor.

    ReplyDelete
  16. அண்ணே நாமதான் எழுத தெரிந்த கடைசி தலைமுறையாம்.அதனால எப்படி எழுதினாலும் சந்தோசப்படுங்க.அப்புறம் எழுதவே தெரியாத எத்தனையோ பேர் தலையெழுத்து பற்றி என்ன சொல்றது?

    ReplyDelete
  17. கையெழுத்துக்காக ஒரு பதிவா நல்லாருக்கு.

    ReplyDelete
  18. @எல் கே
    சூப்பர் ஸ்டார் தான்.. மற்ற பின்னூட்டங்கள் எதுவும் வரலையே எல்.கே. ;-) ;-)

    ReplyDelete
  19. @புவனேஸ்வரி ராமநாதன்
    சூப்பர் மேடம்!!! என்ன ரொம்ப நாளா ஆளைக் காணோம். ;-) ;-)

    ReplyDelete
  20. @flytoravi
    ஏங்க ரகசியமா ஃபாலோ பண்றீங்க.. நான் என்ன மாஃபியா கும்பலா? உள்ள வந்து ஊடு கட்டுங்க.. கரெக்டான விடை. ;-) ;-)

    ReplyDelete
  21. @Madhavan Srinivasagopalan
    கரீட்டுதான்.. ;-)

    ReplyDelete
  22. @dr suneel krishnan
    விளையும் டாக்டர் எழுத்திலே தெரிவான் அப்படின்னு புதுமொழி இருக்கோ?
    எழுத்தை ரசித்ததற்கு நன்றி டாக்டர். ;-) ;-) ;-)

    ReplyDelete
  23. @பத்மநாபன்
    ரொம்ப சரியான பதில். காந்த க்ளு வொர்க் அவுட் ஆயிடுச்சு.. எல்லோருக்கும்...
    எழுத்தை பார்த்தா கண்ல ஒத்திக்கலாம் போல இருக்குன்னு சொன்ன காலம் போய் பிரிண்ட் அவுட் நல்லா இருக்குன்னு சொல்ற காலம் இது அப்டீன்றீங்க..
    கருத்துக்கு நன்றி பத்துஜி ;-)

    ReplyDelete
  24. @MANO நாஞ்சில் மனோ
    வடை இல்லை.. தவறிடுச்சு...
    ஆனா பதில் கரக்ட்டு.. நன்றி ;-)

    ReplyDelete
  25. @அப்பாதுரை
    தமிழ்நாட்டையே கலக்கும் பரட்டை!! (இப்போ சொட்டை!!!) ;-) ;-)
    என்னோட மூஞ்சி காமிச்ச போட்டோவை வைத்து விளையாடாதீங்க....அப்புறம் ... நான் என்னோட புறமுதுகு போட்டோவை ப்ரோஃபைல் ஆக்கிடுவேன். அது என்னோட இன்னோர் முகம். பார்க்காதீங்க.. நொந்துடுவீங்க.. (ரஜினி டயலாக்... ) ;-) ;-)

    ReplyDelete
  26. @இளங்கோ
    நம்ம ரஜினி தான்!! எவ்ளோ பேர் சொல்லியிருக்காங்க பாருங்க.. கொஞ்சம் உத்துப் பார்த்தீங்கன்னா கண்டுபிடிச்சிருக்கலாம். பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம். ;-) ;-)

    ReplyDelete
  27. @வெங்கட் நாகராஜ்
    என் தலையெழுத்து அப்படின்னு என் பேப்பரை கரெக்ட் பண்ணும் ஆள் நினைச்சிருப்பார்!! கருத்துக்கு நன்றி வெ.நா. ;-) ;-)

    ReplyDelete
  28. @raji
    ஸாரி!! நீங்க லிஸ்ட்ல ஃபர்ஸ்ட் இல்லை. ;-)
    இப்பயும் நான் டாக்டர் தாங்க.. கம்ப்யூட்டர் டாக்டர். ;-) ;.-)

    ReplyDelete
  29. @Porkodi (பொற்கொடி)
    குண்டு குண்டா மணி மணியா எழுதுவீங்களா பொற்கொடி! என்னோட பிரண்ட் ஒருத்தன் அழகா எழுதுவான். பசங்க எல்லாம் அவனை பொம்பளை கையெழுத்து மாதிரி இருக்குன்னு கிண்டல் பண்ணுவானுங்க.. இவனுகளுக்கும் ஒழுங்கா எழுத வராது.. எழுதரவனையும் நக்கல் வேற.. உருப்புடாதவனுங்க.. ;-) ;-)

    ReplyDelete
  30. @கக்கு - மாணிக்கம்
    நன்றி மாணிக்கம். நல்லாத் தான் கீது. ;-)

    ReplyDelete
  31. @Chitra
    Thanks Chitra! Your new profile picture is Excellent! ;-)

    ReplyDelete
  32. @Samudra
    சமுத்திரத்திலிருந்து ஒரு துளி. இதைவிட சுருக்கமா கமென்ட் யாராலையும் போட முடியாது. நன்றி. ;-)

    ReplyDelete
  33. @சேக்காளி
    எங்க படிச்சீங்க.. யாராவது ஆரூடம் சொன்னாங்களா. போகிற போக்கை பார்த்தா அப்படித்தான் இருக்கு. ரொம்ப அபூர்வமாத்தான் நானும் பேனா பிடிக்கிறேன். கருத்துக்கு நன்றி. முதல் வருகைக்கும் சேர்த்துதான். அடிக்கடி வந்து போங்க.. ;-)

    ReplyDelete
  34. @கோவை2தில்லி
    நன்றிங்க.. கையெழுத்துப் பிரதி நடத்திய நடத்தும் மக்களுக்கு இது எவ்வளவு முக்கியமான ஒன்னு.. ஹும்... பெருமூச்சு தான் வருது.. கருத்துக்கு நன்றி. ;-)

    ReplyDelete
  35. நல்ல எழுதி இருக்கீங்க.. நகைச்சுவையாக எழுத எல்லோருக்கும் வராது.படிக்க படிக்க சுவாரசியமாக இருந்தது.
    நன்றாக எழுதுகிறீர்கள்.. நன்றி..

    ReplyDelete
  36. unga handwriting nalla ille-ngara oru matter-kaaka sozha kaala ezhuththu, thanjavur kovil, madurai library, thiruvalluvar-laam izhuththathu- konjam 'over bit' nu enakku thoniththu! :D

    semma comedy aana... :)


    athu namma super star signature-aa?

    ReplyDelete
  37. நாம ரெண்டு பேரும் இதுல(யும்) ஒன்னா இருக்கோம். என்னோட கையெழுத்து அச்சுகுண்டா ஆகர்த்துக்காக என்னோட டீச்சர் ஒரு பொண்ணு எழுதர்தை ஒரு பீரியட் முழுக்க பக்கத்துல உக்காச்சுண்டு பாக்க சொன்னாங்க. பீரியட் முடிஞ்சு என்னடா புரிஞ்சுதா?னு கேட்டா அந்த டீச்சர். நகம் கடிக்கர்துனால அவளுக்கு சுண்டு விரல்லையும் மோதர விரல்லையும் நையில் பாலிஷ் சீக்கரமே அழிஞ்சு இருக்கு, மத்த விரல் எல்லாம் சரியா இருக்கு!னு சொல்லி கையில் அடி வாங்கினேன்...:)

    ReplyDelete
  38. கையெழுத்து நிறைய சமயங்களில் தலைஎழுத்தை அல்லவா எழுதிவிடுகிறது ...

    ReplyDelete
  39. சே! நேக்கு இப்படி ஒரு டீச்சர் வாக்கலியே?

    ReplyDelete
  40. @எதிர்வீட்டு ஜன்னல்
    முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க... உங்களோட பேர் ரொம்ப கவர்ச்சியா இருக்கு. ;-) அடிக்கடி வாங்க... ;-)

    ReplyDelete
  41. @Matangi Mawley
    எக்ஸ்ட்ரா பிட் போட்டே பழக்கப்பட்டவர்கள் நாங்கள்... ஒன்றும் சொல்வதற்கில்லை... ;-)))))
    Thanks Matangi. ;-) ;-)

    ReplyDelete
  42. @தக்குடு
    கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் பார்க்க சொன்னா ஆளப் பார்த்துட்டு.. நெயில் பாலிஷ் பார்த்துட்டு.. அடிக்காம என்ன செய்வாங்க.. (அது சரி ... அந்தப் பொண்ணு இப்போ என்ன பண்ணுது... ) ;-)

    ReplyDelete
  43. @கே.ஆர்.பி.செந்தில்
    மிகச் சரி செந்தில்.. ஆனால் எல்லா இடத்திலும் அல்ல.. . எழுத்து கிறுக்கலாக இருந்தாலும் பாய்ன்ட் போட்டு பரீட்சையில் எழுதுவேன்.. அதனால் வெற்றி.. கருத்துக்கு நன்றி செந்தில்.. ;-)

    ReplyDelete
  44. @அப்பாதுரை
    தக்குடு கொஞ்சம் சாரை கவனிப்பா!!! ;-)

    ReplyDelete