Tuesday, March 15, 2011

யோஷிகி என்ற ஜப்பானிய நாயன்மார்

ரொம்ப நாட்களாக திண்ணை துடைச்சு விட்ட காலி. பக்கமே வரமுடியவில்லை. ஒரு நான்கு நாட்களாக சிறுகதை, குறுந்தொடர் என்று என் வலைப்பக்கம் வரும் நிறைய(?!?) பேரை ஏகத்துக்கும் பேனாக்கத்தி காட்டி மிரட்டியாயிற்று. அச்சத்தில் அரண்டு மிரண்டு போயிருக்கிறார்கள்.

**************** அரசியல் *********************
பங்கீடுகள், பணப் பட்டுவாடா, தொகுதிப் பட்டுவாடா போன்ற மரியாதை இல்லாத "வாடா.வாடா..."க்கள் அனுதினமும் நம்மைச் சுற்றி அரங்கேறிய வண்ணம் இருக்கிறது. ஐயாக்களும், அம்மாக்களும், தளபதிகளும், மொழிமான இனமானத் தலைவர்களும், ஏழைப் பங்காளர்களும், தோழர்களும் நம் மேல் புழுதி படர காரில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள்.

ஐந்து வருடம் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு இந்த ஒரு மாதம் இரவுபகல் பாராது ரத்தம் சிந்தி ரவுண்டு கட்டி உழைப்பார்கள். தொண்டர்கள் பிரியாணியிலும் மில்லியிலும் மிதப்பார்கள். குண்டர்கள் அடிதடியை விட்டுவிட்டு வாக்கு சேகரிப்பார்கள். இச் சூறாவளியில் மாட்டிக்கொள்ளாமல் இந்த தேர்தல் போர் காலகட்டத்தில் ஒழுங்கு மரியாதையாக காந்தி மகானின் மூன்று குரங்குகள் போல ஓட்டுரிமை உள்ள குடிமகன்களான நாம் நடந்து காட்ட வேண்டும். தேர்தல் ஆணைய உத்தரவுக்கு கட்டுப்பட்டு சென்னையை வாகனங்கள் ஓட்டுவதற்கும், பிளாட்பாரங்கள் மேல் பொதுஜனங்கள் நடப்பதற்கும், மற்றவர்கள் புழங்குவதற்கும் தாராள மனது வைத்து பதாகைகள் நீக்கி ஒரு மாதத்திற்கு ஒழித்துக் கொடுத்திருக்கிறார்கள்.  தானைத் தலைவர்களுக்கு நன்றி. அடுத்த மேட்டர் போவோம்...

**************** யோஷிகி என்ற நாயன்மார் ********************
போன ஞாயிறு டிவிக்கு டிவி ரியாலிட்டி எண்டர்டைன்மென்ட் ஷோ காண்பிப்பது போல சுனாமி படம் காட்டிவிட்டார்கள். ஒரு கூகிள் எர்த்  படத்தில் ஆங்காங்கே வீடுகளும் பசும்புற்களும் இருக்கும் இடத்தை ஒருபக்கமும் அலை வந்து அழித்துவிட்டு போனபின் மொட்டையடிக்கப்பட்ட இடத்தை இன்னொரு பக்கத்தில் வைத்து ஒப்புமை படுத்தி காண்பித்தார்கள். இயற்கையின் அளப்பரிய முடியாத ஆற்றல் மனித குலத்திற்கு இன்னமும் சவால் தான். இந்த சுனாமி பற்றிய ஒரு சில புல்லட் பாய்ண்ட்கள் கீழே
  1. பெண்ணென்றும் பாராமல் பூமா தேவியை ஒரு தட்டு தட்டி தனது பாதையில் இருந்து நான்கு இன்ச் அளவிற்கு நகர்த்தி போட்டுள்ளது சமீபத்திய ஜப்பான் சுனாமி என்கிற ராட்சஷன்.
  2. கிழக்கு ஜப்பானின் சில பாகங்களை பல ஜீவராசிகளின் சேத செலவில் பன்னிரண்டு அடிகள் வடஅமேரிக்கா பக்கம் அலேக்காக நகர்த்தி வைத்துள்ளது.
  3. இந்த பூகம்பம் பூமிப் பந்தை கொஞ்சம் வேகமாக சுற்றிவிட்டு ஒரு நாளின் ஆயுசை 1.8 மைக்ரோ செகண்டுகள் குறைத்து விட்டது. சர்வ நாட்டிலும் எல்லோருடைய ஆயுசுளும் ஒவ்வொரு நாளுக்கும் அவ்ளோ செகண்ட் அப்பீட். எமனும் சித்ரகுப்தனும் எல்லோருடைய ஆயுள் கணக்கையும் டேலி செய்வதற்கு ஓவர் டயம் செய்யணும்.
  4. ஜப்பானிய மக்களுக்கு இதோடு மட்டுமல்லாமல் அணு உலைகள் வெடித்து சிதறியது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல மற்றொரு அதிர்ச்சி. 
  5. சகல இன்பங்களையும் அனுபவித்துக்கொண்டு தமிழக அரசின் வண்ணத் தொலைக்காட்சி வாங்கும்போது அடாவடி செய்யும் நாமெங்கே, இத்தனை துயரத்திலும் நிவாரணங்களைப் பெறுவதற்கு ஒரு தள்ளுமுள்ளு அடிதடியில்லாமல் வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளும் ஜப்பானியர்கள் எங்கே! பார்க்கும்போது நெஞ்சு நெகிழ்கிறது.
சுனாமி மேட் இன் ஜப்பான் பார்த்த போது சமீபத்தில் படித்த தி.ஜாவின் யோஷிகி ஞாபகத்திற்கு வந்தது.

ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலாவிற்கு செல்லும் ஒருவர் அந்நாட்டில் சந்திக்கும் நண்பரின் பெயர் யோஷிகி. யோஷிகி இங்கு இந்தியாவில் இருக்கும் சுற்றுலா சென்ற நண்பரின் நண்பர். முதல் நாள் சாயந்திரம் விடுதிக்கு வந்து ஊர் சுற்றிக் காண்பிப்பதாக வாக்களித்திருந்தார் யோஷிகி. அவரால் வர இயலவில்லை என்று விடுதியில் சொல்லிவிட்டு வந்த விருந்தாளியின் சௌகரியத்திர்க்கு பங்கம் வராமல் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடுகிறார். மறு நாள் காலையில் வந்து நாள் முழுக்க சிரிக்க சிரிக்க ஊர் சுற்றிக் காண்பிக்கிறார். நடு நடுவே நிறைய முறை போன் பேசினார். அவர் ஒரு வியாபாரி. ஜப்பானிய மக்களின் பழக்க வழக்கங்கள் அந்த சிரிப்பு இவற்றை பற்றியெல்லாம் அங்கு சுற்றுலா போனவர் சிலாகித்து யோஷிகியிடம் பேச அவர் பெருமகிழ்ச்சியுருகிறார். இரவு கொண்டு வந்து மீண்டும் விடுதியில் விட்டுவிட்டு மறுநாள் தன்னால் வர இயலாது என்றும் பத்திரமாக நாடு திரும்ப வாழ்த்தையும் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

மறு நாள் காலையில் அந்த விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணோடு கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு வருகையில் அந்தப் பெண் "யோஷிகி ஏன் முதல் நாள் சாயந்திரம் வரவில்லை தெரியுமா?" என்று இவரிடம் கேட்க இவர் என்னவென்று தெரியாமல் முழிக்க அதற்கு அந்தப் பெண் அவருடைய ஒரு கிளைக் கடை பெருந்தீயில் பற்றி எரிந்து நாசமாகிப் போனதை சொல்கிறாள். அதோடு மட்டுமலாமல் அவருடைய ஒரே தம்பி அந்த தீவிபத்தில் பலத்த காயமடைந்ததையும் சொல்கிறாள். அவரால் ஏன் நாளை வரமுடியாது தெரியுமா என்று கேட்கிறாள். ஏற்கனவே விக்கித்துப் போயிருந்தவர் "ஏன்?" என்று கேட்க, பலத்த தீக்காயமடைந்த அவரது தம்பிக்கு நினைவு தப்பிப்போய் பிழைப்பாரா மாட்டாரா என்ற கதியில் கிடப்பதாக ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் வந்ததாக சொன்னாள். சுற்றுலா சென்ற மனிதர் என்ன சொல்வதென்று தெரியாமல் ஆடிப்போய் விட்டார். கடைசியில் இந்த விவரங்களை அந்த சுற்றுலா நண்பருக்கு அளித்ததற்காக வருத்தப்படுகிறாள் அந்த சப்பை மூக்கு சப்பான் பெண்.
 .....என்பதாக கதை முடிகிறது..

இந்தக் கதை முழுவதும் ஜப்பானியர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களுடைய எதற்கும் அயராத உழைப்பு, அத் தேசத்தின் அழகு என்று பல விஷயங்களை எழுதியிருக்கிறார் தி.ஜா. தனக்கு ஏற்பட்ட பேரின்னலைக் கூட பொறுத்துக்கொண்டு விருந்தினரைக் கவனித்த யோஷிகி,  இறைவனிடம் அளவு கடந்த அன்பு கொண்டு மகன் பாம்பு கடித்து இறந்ததைக் கூட மறைத்து திருநாவுக்கரசுப் பெருமானுக்கு அமுது படைத்த அடியார்க்கு அடியாரான அப்பூதியடிகள் போலத்தானே. கதையாக இருந்தாலும் அவருக்கு ஒரு ஜே!

***************** கைலி கம்பெனியார் கவனத்திர்க்கு ******************
இடுப்பில் வெறும் ஒரு அடையாளமாக கைலியை கட்டிக்கொண்டு வடிவேலு நடித்த பல படங்களை பார்த்திருக்கிறோம். அதுமாட்னுக்கு தேமேன்னு இடுப்புல தொங்கும். ஆனால் ஆடுகளத்தில் ஒரு பாட்டு முழுக்க கைலியை தூக்கி இரண்டு கையிலும் கிளிப் போட்டு மாட்டிவிட்டு ஆடும் தனுஷ் இவ்வளவு நாள் வடிவேலு செய்த சாதனையை முறியடித்திருக்கிறார். யாராவது கைலி கம்பெனியார் விளம்பரத்துக்கு யூஸ் பண்ணிக்கலாமே! அதை அவுத்து பக்கத்தில் வைத்துவிட்டு துணித் தொந்தரவு துளியும் இல்லாமல் ஒரு குத்த்தாட்டம் போட்டிருக்கலாம். சின்னப் பசங்க மத்தியில் பிரபலமான இந்தப் பாடல் பக்கத்து வீட்டு யு.கே.ஜி படிக்கும் குட்டிப்பொண்ணு ரேவதி ஸ்கர்ட்டை தூக்கிக்கொண்டு ஆடும் போது தான் ரொம்ப விகாரமாயிருந்தது. இந்தப் படத்தில் பாட்டுகொருத் தலைவர் எஸ்.பி.பி தனது புத்திரனுடன் சேர்ந்து பாடிய அய்யய்யோ நெஞ்சு அலையுதுடி சூப்பெர்ப் சாங். பாக்கறதுக்கு ஓ.கே. கேக்கறதுக்கு டபுள் ஓ.கே.



******************** ரம்மியமான குட்டை *******************
 கீழ்காணும் படம் எனது கோயில் சுற்றுலாவில் பத்து வீடு, நாலு பசு மாடு, ரெண்டு எருமை மாடு, ஆறேழு ஆட்டுக்குட்டி மட்டும் இருந்த ஒரு இயற்கை எழில் கொஞ்சும், குருவிகளும் மைனாக்களும் குக்கூ பாடிக்கொண்டிருந்த ஒரு அமைதியான கிராமத்தில் இருந்த ரம்மியமான குட்டை. அந்த ஊருக்கு இது குளமாக இருந்தாலும் ஏழு வேலி பரப்பளவில் ஏரி போன்ற குளம் பார்த்த எனக்கு இது குட்டை போலத்தான் காட்சியளித்தது. இந்தப் படம் என் கை வண்ணம்.

scene


பின் குறிப்பு: பதிவின் நீளம் கருதி இம்முறை திண்ணையை இத்தோடு கலைத்தாயிற்று. நன்றி.

-


36 comments:

  1. காரின் கண்ணாடியில் தெரியும் சிற்பம்(தானே) அழகு. ஜப்பான் சுனாமி பற்றி தெரிந்தவை பாதி தெரியாதவை மீதி.

    ReplyDelete
  2. @ஸ்ரீராம்.
    படத்தையெல்லாம் நல்லா உத்த்...துப் பாக்கறீங்க...நன்றி.. ;-))
    நம்ம தியேட்டர்ல ஒரு தொடர் ஓடிச்சு... ஆளையே காணோம்... ;-))

    ReplyDelete
  3. nice...yes they take everything easy..டி.வி யில் கூட ரெண்டு ஜப்பானியப் பெண்கள் சிரித்துக் கொண்டே 'மெழுகுவர்த்தி' வாங்க
    வந்தோம் என்று சொல்கிறார்கள்..இங்கேயாக இருந்திருந்தால் மிகைப் படுத்தி இன்னும் கொஞ்சம்
    அதிக சுருதியில் அழுவார்கள்..

    ReplyDelete
  4. @சமுத்ரா
    அவர்களது வாழ்க்கை முறையில் பெரிய தத்துவமே அடங்கியிருக்கிறது...
    அடிக்கடி ஏற்படும் எரிமலைகள் வெடிப்பு, பூகம்பம் போன்றவை அவர்களுக்கு நிலையற்ற வாழ்வைப் பற்றி போதித்திருக்கிறதோ? ;-))
    கருத்துக்கு நன்றி. ;-)

    ReplyDelete
  5. கதம்பம் போல மாறுபட்ட தகவல்களை
    ஒரு பதிவில் சேர்த்துத் தருவது கூட
    மிக நன்றாகத்தான் உள்ளது
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. @Ramani
    இது திண்ணைக் கச்சேரியின் பத்தாவது எடிஷன். கொஞ்ச நாட்களாக இது போல் செய்து வருகிறேன். கருத்துக்கு நன்றி சார்! ;-))

    ReplyDelete
  7. திண்ணையில் பதிவிடப்படும் செய்திகள் அனைத்தும் சுவாரஸ்யம்...பதிவிற்கு நன்றிகள்..

    ReplyDelete
  8. // ரம்யமான குட்டை //

    நல்ல அழகு.

    ReplyDelete
  9. @வேடந்தாங்கல் - கருன்
    நன்றி கருன்!!

    ReplyDelete
  10. @கக்கு - மாணிக்கம்
    நன்றி மாணிக்கம். ;-))

    ReplyDelete
  11. அவர்கள் வாழ்க்கையை அதன் போக்கில் எதிர் கொள்கிறார்கள் போல.. ஜென் தத்துவம் உருவான நாடல்லவா!...

    ReplyDelete
  12. குட்டை நல்லா இருக்கு

    ReplyDelete
  13. திண்ணையின் 10-வது பகுதி நன்று! பகிர்ந்த விஷயங்களும்!

    ReplyDelete
  14. ஜப்பான் பற்றி கேள்விப்படும்போதெல்லாம் அந்த மாதிரி நம் நாட்டிலும் மக்கள் இருந்தால் ?! ம்ஹூம்..
    கதம்பம் சுவையும் மணமும் கலந்த விருந்து

    ReplyDelete
  15. @Balaji saravana
    ஜென் குருமார்கள் இருக்கும்-இருந்த நாடு அது. சரிதான் தம்பி. ;-))

    ReplyDelete
  16. @எல் கே
    நன்றி எல்.கே ;-))

    ReplyDelete
  17. @வெங்கட் நாகராஜ்
    வாழ்த்துக்கு நன்றி தலைநகரத் தல... ;-))

    ReplyDelete
  18. @ரிஷபன்
    ஜப்பான் போல ஆகிவிட்டால் அப்புறம் நமக்கும் அவர்களுக்கும் வித்யாசம் ஏது? என்ன சொல்றீங்க? ;-))
    பாராட்டுக்கு நன்றி சார்!

    ReplyDelete
  19. திண்ணைக் கச்சேரி அருமையாத்தான் இருக்கு.
    திண்ணையில காத்தும் நல்லா வருது.தொடரவும்

    ReplyDelete
  20. நடப்பு விஷயங்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டு
    அவற்றை நமது பெருமைகளோடு தொடர்பு படுத்தி
    எழுதிய விதம் மிக அழகு. வழக்கமான தங்களது
    இயல்பான எழுத்து நடை இதிலும் வெளிப்படுவது
    சிறப்பு. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கதை பேசும்
    அனுபவம் உண்டாகிறது திண்ணையை வாசிக்கும்போது.
    நன்றி RVS

    ReplyDelete
  21. புகைப்படம் ஒரு கவிதை
    ம் வழக்கம் போல பதிவும் சூப்பர்

    ReplyDelete
  22. உங்க கதையை இந்த வாரகடைசிலதான் படிக்கனும் அண்ணா! திண்ணைல தக்குடுவும் கொஞ்ச நேரம் காலை ஆடிண்டு காத்து வாங்கிண்டு போச்சு!..:)

    ReplyDelete
  23. இத்தனை துயரத்திலும் நிவாரணங்களைப் பெறுவதற்கு ஒரு தள்ளுமுள்ளு அடிதடியில்லாமல் வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளும் ஜப்பானியர்கள் எங்கே! பார்க்கும்போது நெஞ்சு நெகிழ்கிறது.

    ReplyDelete
  24. @raji
    காற்று வாங்கியதற்கு நன்றி ராஜி.
    அப்பூதியடிகளும் அறுபத்துமூவரில் ஒருவரே! நன்றி ;-)

    ReplyDelete
  25. @புவனேஸ்வரி ராமநாதன்
    ஆழ்ந்து படித்து அழகான கருத்தை வெளியிட்டமைக்கு நன்றி ;-))))

    ReplyDelete
  26. @siva
    நன்றி சிவா! என்ன லேட்டா லேட்டா வராப்ல இருக்கு... ;-))

    ReplyDelete
  27. @தக்குடு
    அடடா... யாரது.. தக்குடுவா.. வாங்கோ..வாங்கோ...
    படிச்சுட்டு மெதுவா சொல்லுங்கோ... ;-) ;-)
    திண்ணைக் காத்து வாங்கினத்துக்கு நன்றி.. ;-)

    ReplyDelete
  28. @இராஜராஜேஸ்வரி
    ஆமாம்... பார்த்தீர்களா... எவ்வளவு நிதானம் அந்த மக்களிடம்.. ;-)))

    ReplyDelete
  29. விளக்கத்திற்கு நன்றி :-)

    ReplyDelete
  30. திண்ணைக் கச்சேரியில் பகிர்ந்த விஷயங்கள் அனைத்துமே நன்று.
    திண்ணையிலும் பாட்டா!

    ReplyDelete
  31. @raji
    நன்றிக்கு நன்றி.. ;-))

    ReplyDelete
  32. @கோவை2தில்லி
    நன்றிங்க.. திண்ணையில் பாட்டு முன்னாடியே போட்ருக்கேனே.. ;-))

    ReplyDelete
  33. உண்மையில் யோகிஷி(!) நாயன்மார்தான்

    ReplyDelete
  34. தி.ஜா தேடிப்படிக்க வேண்டும்; அறிமுகத்துக்கு நன்றி. பதாகை என்றால் என்ன?

    ReplyDelete
  35. @சிவகுமாரன்
    யோகிஷி (!) பலே..பலே.. ;-))

    ReplyDelete
  36. @அப்பாதுரை
    விளம்பர தட்டி மாதிரிங்க... துணியிலோ அல்லது ரெக்ஸ்னிலோ ஆளுயரத்துக்கு தொங்க விட்ருப்பாங்களே.. அது தான்...;-)

    ReplyDelete