Thursday, March 17, 2011

மன்னார்குடி டேஸ் - பங்குனிப் பெருவிழா

rajagopalaswamy templeசாயங்காலம் ஆறு மணிக்கு மேல் "டன்..டன்..டன்.." என்று ஒத்தைக் கொட்டு கொட்டிக்கொண்டு செல்வர் ஸ்வாமி (சேனை முதல்வர்) நான்கு வீதிகளையும் வலம் வந்து நகரசோதனை போட்டு முடிந்த  பிறகுதான் மறுதினம் பெரிய  திருவிழா ஆரம்பம் ஆகும். கூடவே "கிணிங்...கிணிங்...கிணிங்..." என்ற ஒரு முழம் நீளம் இருக்கும் பெரிய கண்டாமணியின் ஓசையுடன் ஒரு பட்டர், ஏளப் பண்ண முன்னாடி ஒரு அரை ஆள் பின்னாடி ஒரு பொடி ஆள் என்று ரெண்டே பேர், ஒரு கையில் எண்ணைத் தூக்கோடும் மறுகையில் தீவட்டியோடும் மேல் சட்டைபோடாமல் அழுக்கு வேஷ்டியுடன் பிசுக்கு கையுடனும் ஒரு குட்டையான பிரகிருதி, ஒரு அமேரிக்கா பயணத்திற்கு மொத்த இந்தியாவையே அள்ளிக் கொண்டு போகும் பொட்டி சைஸ் பல்லக்கில் ஜிங்குஜிங்குன்னு தனியாக வீதியுலா வருவார். செல்வரை முள்ளுப் பொறுக்குற ஸ்வாமி என்று என்னைப் போன்ற அஞ்ஞானிகள் அந்நாளில் சொல்வர். பெரிய கோவிலில் பங்குனிப் பெருவிழா மன்னையையும் அதைத் தொட்டடுத்த பதினெட்டுப் பட்டி கிராமங்களையும் இணைக்கும் ஒரு கோலாகல பிரம்மோற்சவம்.  வான வேடிக்கைகளும், ஆட்டமும் பாட்டத்தோடும் ஊரே ஜேஜேவென்று இருக்க திருவிழா மொத்தம் பதினெட்டு நாட்கள் நடக்கும். மன்னை கலகலக்கும். திமிலோகப்படும். அப்புறம் விடையாற்றிக் கலை  விழா நிகழ்ச்சிகள் ஒரு பன்னிரண்டு நாட்கள். ஆக மொத்தம் குன்றம் ஏந்திக் குளிர் மழைக் காத்தவனுக்கு, அன்று ஞாலம் அளந்த பிரானுக்கு முப்பது நாட்கள் வருஷாவருஷம் தப்பாமல் விமரிசையாக நடக்கும் ஒரு பெருவிழா.

வரும் இறுதியாண்டுப் பரீட்சைக்கு ராப்பகல் அகோராத்திரியாக விழுந்து விழுந்து படித்து மூஞ்சி முகரை எல்லாம் ரத்த விளாராக அடிபட்டிருக்கும் போது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அருள்புரிய ஸ்ரீவித்யா ராஜகோபாலனுக்கு பங்குனியில் விழா எடுப்பார்கள். தேரடி காந்தி சிலை தாண்டும்போது என்றைக்கு கீழக் கோபுரவாசல் தாண்டி வெளியே இருக்கும் மண்டபம் வரை கீற்றுப் பந்தல் போட்டு, நீலம் போட்டு வெளுத்த வெளிர்நீல வேஷ்டி துணியால் பந்தலுக்கு கீழே Upholstery அமைத்து, சீரியல் செட்டு தோரணங்கள் கட்டிக்கொண்டிருக்கிறார்களோ அன்றைக்கு மறுநாள் துவஜாரோஹனம். கொடியேற்றம். அதற்கு அடுத்த நாள், முதல் திருவிழாவான கொடிச்சப்பரத்தில் இருந்து தினமும் பாட்டியுடன் கோபாலன் தரிசனத்திற்கு கோயிலுக்கு சென்றுவர வேண்டும் என்றும் அர்த்தம்.

aandal alangaram

எண்பதுக்கு மேல் வயதாகியிருந்தாலும் கோயிலுக்கென்றால் இருபதை விட வேகமாக ஓடிவருவாள் என் பாட்டி. இறைநம்பிக்கை ஒரு உந்து சக்தி. புறப்பாடுக்கு முன்னர் முதலில் ஆகாயத்தை பார்க்க ஐந்தாறு ராக்கெட் பாண வேட்டு போடுவார்கள். "உஷ்.ஷ்...ஷ்ஷ்ஷ்..... டமால்...." ஐந்து முறை. அது தான் ஊராருக்கு சிக்னல். கோயிலை அடைய இன்னும் ஐந்து நிமிடம் பிடிக்கும் என்பதற்கு முன்னர் இருக்கும் தீயணைப்பு நிலையம் அருகில் வரும்போது அந்த வேட்டுச் சத்தம் கேக்காத காதில் ரவையூண்டு கேட்டுவிட்டால் அந்தக் கூன் விழந்த முதுகோடு "கோபாலா....கோபாலா..." என்று பக்தியில் கதறிக்கொண்டு மான் போல துள்ளி ஓடுவாள். முதல் நாள் ராத்திரி முழுக்க கழன்று போகும் படி வலித்த பாட்டியின் கால் வெடி சத்தத்திற்கு பின் நூறு மீட்டர் தடகள ஓட்டப்பந்தய போட்டிக்கு முயன்றுகொண்டிருக்கும். "பாட்டீ... மெல்லப் போலாமே.." என்று எதிர்ப்படும் யாராவது கேட்டால் "புறப்பாடு பார்த்தால் எமப்பாடு இல்லடா...." என்ற தனது உயர்ந்த இறை நம்பிக்கையை உதிர்த்துவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் விசுக்விசுக்கென்று வேகமாக நடையை கட்டுவாள்.

ஒரு கச்சலான தேகத்தோடு குழி விழுந்த கன்னத்தோடும் சர்ஃப் போட்டு வெளுத்த தலையோடு முதலாம் குலோத்துங்கன் கட்டிய பிரம்மாண்டமான, நீங்களோ நானோ ஒத்தையாக கட்டிப்பிடிக்க முடியாத, கருங்கல் தூண் அருகில் ஒருவர் பட்டுத்துணி சுற்றியிருக்கும் மேளம் போல ஒரு வாத்தியத்தை கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு வாசிப்பார். இரண்டு பக்கமும் ஜவ்வுத் தோல் இருக்கும் ஆனாலும் அது மேளம் என்ற வகையறாவிலும்  அடங்காது. அதை குச்சியால் தட்டி வாசிக்கலாம் ஆனால் கையால் அடித்து வாசிக்கமுடியாது. அலக்கு போல நுனி வளைத்த மூங்கில் குச்சியால் "டன்..டன்.." என்று அடித்துவிட்டு அரைவினாடி இடைவெளி விட்டு மீண்டும் ஒரு "டன்.டன்..." என்று தொடர்ந்து ஸ்வாமி புறப்பாடு ஆகும் வரை வாசிப்பார். அது நம் செவிகளை நிரப்பும் ஒரு ஆனந்தக் கொட்டு.

maadumeikkumதலையை முண்டனம் செய்த பாட்டிகள், இளம் அம்மாக்களின் இடுப்பில் தொத்தியிருக்கும் விரல் சூப்பும் கைக்குழந்தைகள், அங்கே இங்கே ஓடி விளையாடும் அரை டிக்கெட்டுகள், வேஷ்டி சட்டையில் ஸ்கூல் வாத்தியார்கள், ரிடையர் ஆன பாங்க் மானேஜர்கள், மடிசாருடன் வந்திருக்கும் தீர்க்கசுமங்கலி மாமிகள், தன் வயதொத்த தசை சுருங்கிய சகாக்களுடன் "அந்தகாலத்லேல்லாம்..." பேசும் அழகுத் தாத்தாக்கள், நண்பர்கள் புடைசூழ முற்றிய பக்தியில் வாலிப வயசுக் காளைகள்,  பாவாடை சட்டையிலும் மற்றும் பாவாடை தாவணியிலும் அமர்ந்திருக்கும் மன்னார்குடியின் மயில்கள் என்று சகலரும் ஸ்வாமி சன்னதி முன்பு ஆளுக்கொரு படியில் உட்கார்ந்து திரை திறக்கும் வரை காத்திருப்போம். திரை திறக்கும் வரை கன்னியரும் காளையரும் எதற்கோ திரும்பி திரும்பி ஒருத்தரை ஒருத்தர் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருப்பார்கள். எங்களோடு சேர்ந்து உள்கோபுரங்களின் இடைவெளிகளில் ஊடாக சந்திர பகவானும் அந்த கள்ளனின் தரிசனத்திற்கு மேகத்திலிருந்து எட்டிப்பார்த்து ஆவலோடு காத்திருப்பான். ராஜா அலங்காரத்திலோ, கண்ணன் அலங்காரத்திலோ கோபாலனை பார்க்கும்போது ஒரு இனம்புரியாத பூரிப்பு வந்து நம்மை ஒட்டிக்கொள்ளும். ஏகோபித்த "கோபாலா...கோபாலா.." கோஷம் எல்லோரையும் ஒரு பரவசம் ஆட்கொள்ளும். ஸ்வாமி புறப்பாட்டின் போது பார்த்த கற்பூர ஆரத்தியுடன் அந்த யானைப் பிளிறல் வாத்தியத்தையும், இடைவெளியில்லாமல் அடித்த கொட்டு மேளமான "டன்...டன்..டன்"ன்னும் வெகு நேரம் வரை காதில் ஒலிக்கும் கண்ணிலும் ஒளிரும். எமப்பாடு நீங்கும்.

பந்தலடி தாண்டி திருப்பாற்கடல் தெருவில் இருக்கும் யானைவாகன மண்டபத்தில் இருந்து தான் முக்கால்வாசி நாட்கள் இரவு ஒன்பது மணி வாக்கில் ஸ்வாமி புறப்பாடு செய்வார்கள். எங்கள் வீட்டிலிருந்து பாட்டியால் அந்த மண்டபம் நடந்து போகும் தூரத்தில் இல்லாததால் ஒரு மேற்கூரை உள்ள ஒத்தை மாட்டு வாடகை வண்டியில் செல்வோம். வண்டி உள்ளே வைக்கோல் பிரி போட்டு மேலே ஐந்தாறு உர சாக்கை ஒன்றாய் தைத்து பாயாய் விரித்திருப்பார் எங்கள் ஆஸ்தான வண்டிக்காரர் வெங்கடாசலம். வைக்கோல் சோஃபா அப்பப்போ வண்டியின் குலுங்களுக்கு தக்கபடி சுருக்கென்று குத்தும் அல்லது இடுப்பில் கிச்சுகிச்சு மூட்டும். குச்சிகுச்சியான கையும் காலும் ஒடுங்கிய வயிறும் சேர்த்து காற்று சற்று வேகமாக அடித்தால் பஞ்சாய் பறந்து விடும் ஈர்க்குச்சி சரீரம். கண்கள் இரண்டிலும் வெள்ளை விழுந்து மல்லிப்பூ பூத்திருக்கும். வாழ்நாள் முழுவதும் சட்டை காணாத திறந்த கரிய மார்பு. இடுப்பில் மடித்துக்கட்டிய நாலுமுழம் வேஷ்டி. அரைமணிக்கொருதரம் அடைத்து குதப்படும் பன்னீர்ப் போயிலை வாய்.

புறப்பாட்டிற்கு வேட்டு போட்டால் "ஹை... ஹை..." என்று மாட்டை வாலைத் திருகி விரட்டி திருக்கைவால் சாட்டையால் மாடு பூட்டியிருக்கும் கட்டையில் "சுளீர்..சுளீர்" என்று சத்தம் வர இரண்டு முறை அடித்து விளாசுவார். மாட்டின் மேல் ஒரு அடி விழாது. டாப் கியர் மாற்றிய நெடுஞ்சாலை பி.எம்.டபிள்யு போல "டக்..டக்..டக்.."கென்று மாட்டு வண்டி குதிரை வண்டியாய் ஜில்லென்று பறக்கும். ஏ.ஸி கோச்சுகளில் கிடைக்காத ஒரு குளிர்ந்த காற்று முகத்தை வருடும் போது சொர்க்கபூமியில் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். மனசு விட்டுப்போகும். இதே வண்டிதான் பாட்டியை சந்திரசேகரன் டாக்டர் வீட்டிற்கு போகும்போதும்.


gopalanசங்கும் சக்கரமும் போட்ட நீலத் திரை திறந்து பாற்கடல் வாசனான கோபாலனை கண்டபேரண்ட பட்சியிலோ, சிம்ம வாஹனத்திலோ, தங்க சூர்யப் பிரபையிலோ பார்த்துவிட்டால் பாட்டிக்கு நிலை கொள்ளாத பேரானந்தம். வண்டியேறி வீட்டில் வந்து இறங்கும் வரை "கையில அந்த சாட்டையும், சேப்புக் கல் ரத்தனம் பதிச்ச ஜிகுஜிகு பேண்ட்டும், இடுப்புல தொங்கற ஸ்வர்ண சாவிக்கொத்தும், தலைக்கு தகதகன்னு ஜொலிக்கிற ரத்ன கிரீடமும், நெஞ்சுல பச்ச பசேல்னு மரகத பதக்கமும், கொழந்த மாதிரி சிரிச்ச முகமும், கொஞ்சமா சாஞ்சு நின்நுண்டுருக்கிற ஒய்யாரமும்..... நம்மூர் கோபாலன் அடாடா... அழகு...கொள்ள அழகுடா..." என்று கோபாலனை வாயார வர்ணிப்பாள். இத்தனைக்கும் வெறும் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் பாட்டியோட கண்ணாடி போட்ட பழைய கண் காட்டிய கோபாலனின் திருக்கோலம் இது. கண்ணாடியோ கண்ணோ இல்லாமலேயே ஐம்பது வருடங்கள் கோபாலனைப் பார்த்துப் பழகிய பாட்டியின் மனக்கண் காண்பித்த கோலமல்லவா அது!

பதினாறாம் திருநாளான வெண்ணைத்தாழி உற்சவத்தில் வெள்ளிக் குடத்தை இடுப்போடு கட்டிக்கொண்டு தவழும் கண்ண பரமாத்மாவை பல்லக்கில் வைத்து ஊர் சுற்றிக் காண்பிப்பார்கள். முன் புறம் வெண்ணைக் குடத்தை கட்டியிருக்கும் கண்ணனின் திருமுகத்தை காணவும், பின்புறம் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட பின்னல் அலங்காரத்தை கண்டு தரிசிக்கவும் பல்லக்கின் முன்னும் பின்னும் மக்கள் அலைமோதுவார்கள். ஒரு ரூபாய்க்கு பூவரசு இலையில் பொட்டு வெண்ணை வாங்கி கண்ணன் மேல் வீசி எறிவது அன்றைய தினம் எங்கள் ஊர் பக்தகோடிகளுக்கு ஓர் ஆன்மீக விளையாட்டு. பக்தர்கள் தாகசாந்தி செய்துகொள்வதற்கு கடைத்தெருவெங்கும் இலவச மோர் விநியோகப் பந்தல்கள் இருக்கும். இக்காலத்தில் பலூன் மற்றும் விளையாட்டு சாமான்கள் விற்போர் வயிறு நிறையும். வாழ்வு தழைக்கும்.

அன்றிரவு வெண்ணைத்தாழி மண்டபத்தில் இருந்து புறப்படும் தங்கக் குதிரை வாகனம் ஒரு முக்கியமான திருவிழா. ராஜா அலங்காரத்தில் ராஜகோபாலனை வெட்டுங்குதிரையில் அமர்த்தி வையாளி ஓடி வீதியுலா நடத்துவார்கள். ஒவ்வொரு ஓட்டத்திற்கும் "ஊய்...ஊய்...ஊய்.." என்ற விசிலடிச்சான் குஞ்சுகளின் விசில் சப்தம் இரவு முழுவதும் விண்ணைப் பிளக்கும். பந்தலடி பகுதியில் எள் போட்டால் எண்ணெய் எடுக்கலாம். வான வேடிக்கைகளும் கரகாட்டம் குறவன் குறத்தி என்று பந்தலடி மற்றும் ராஜ வீதி திமிலோகப்படும். கூட்டம் அம்மும்.

thirutherஅடுத்த நாள் திருத்தேர். தேரின் முன் பகுதியில் நான்கு பெரிய அசுவங்களை கட்டி வைத்திருப்பார்கள். தேர்வடம் பிடிப்பது எங்கள் பள்ளியின் கைங்கர்யம். மூன்று மணியளவில் சீருடையில் வந்து வடம் பிடித்து ஆறு ஆறரை மணிக்கு நிலைக்கு கொண்டு வந்து நிறுத்துவோம். நடுநடுவே தேர் நிற்கும்போது பள்ளியின் பொடிப்பயல்களை அந்த வடத்தில் உட்காரவைத்து தலைக்கு மேலே தூக்கி தொப்பென்று கீழே போட்டு விளையாடுவார்கள். பல கிராமத்தில் இருந்து ரோட்டில் கடைவிரித்திருக்கும் வியாபாரிகள் சட்டிப்பானை, மஞ்சள் கிழங்கு போன்றவை விற்பார்கள்.

பின் குறிப்பு: கருட வாகனத்தில் இரட்டைக்  குடை சேவையும், தங்க சூர்யப் பிரபையும், தேரடியில் கோபாலன் எழுந்தருளும் ஹனுமந்த வாகனமும், கோபிநாதன் கோயிலில் இருந்து புறப்படும் வெள்ளி சேஷ வாகனமும், சின்னதாக உருண்டு வரும் கோரதமும்  இந்தப் பதிவில் நான் விட்ட மற்றும் சில முக்கிய திருவிழாக்கள். இதுமட்டுமன்றி விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக் கடைகள் பற்றி ஒரு தனி பதிவு போடும் அளவிற்கு சரக்கு உள்ளதால் சட்டென்று இந்தப் பதிவை முடித்துவிட்டேன். நிச்சயம் அடுத்த பார்ட் உண்டு. இந்த வருடம் மார்ச் 23-லிருந்து ஏப்ரல் 9-வரை பங்குனிப் பெருவிழா நடைபெறுகிறது.

பட உதவி:
  1.  முன்னால் இருக்கும் மண்டபத்துடன் பெரியகோயில் படம் கிடைத்த இடம் http://www.travel247.tv/
  2. சொக்க வைக்கும் ராஜகோபாலனின் ஆண்டாள் அலங்கார படம் கிடைத்த இடம்  http://divyadarisanams.blogspot.com 
  3. மாடு மேய்க்கும் திருக்கோலத்தில் எம்பெருமான் கிடைத்த இடம் http://municipality.tn.gov.in/Mannargudi/
  4. பேண்ட் போட்ட கோபாலன் படம் கிடைத்த இடம் http://4krsna.wordpress.com
  5. திருத்தேர் கிடைத்த இடம் http://mannargudirajagopalaswamytemple.com

-

63 comments:

  1. சென்னை வந்த பின்னர் வருடாவருடம் ,அல்ல எப்போதாவது திரும்ப பங்குனி பெருவிழா சென்றதுண்டா மைனரே!

    ReplyDelete
  2. திருவிழாக் காட்சிகள் கண்முன்னே....

    ReplyDelete
  3. @கக்கு - மாணிக்கம்
    ஊஹும்.. நேரங்காலம் அமையவில்லை. இம்முறை முடிந்தால் செல்லலாம் என்று விருப்பம்.. பார்க்கலாம் மாணிக்கம். ;-))

    ReplyDelete
  4. @ஸ்ரீராம்.
    நன்றி ;-))

    ReplyDelete
  5. @சமுத்ரா
    நன்றி ;-)))

    ReplyDelete
  6. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப............... நன்றி ஆர் வி எஸ் சார்.

    பல நாளாக நான் சேவிக்க விரும்பும் அந்த மன்னார்குடி ராஜகோபாலனை
    கண்முன் கொண்டு வந்து நிறுத்தியமைக்கு.இருப்பினும் எனக்கு இன்னமும் ஒரு குறை.
    வெண்ணைத்தாழி கண்ணனைப் போட்டிருக்கலாம் அல்லவா?
    என்னைக் கேட்டால் இப்பிடி சுருக்க முடிக்காமல் இன்னும் இரண்டு பதிவாக கூட
    போட்டிருக்கலாம்.எங்கள் வீட்டிலும் இப்படி பாட்டி உண்டு(பாஸ்ட் டென்ஸ்)

    எங்க ஊரிலும் பங்குனித் திருவிழா ஆரம்பிக்க உள்ளது.(நவதிருப்பதியில் ஒன்றான பெருங்குளம்)
    நான் அதுக்கு இந்த வருஷம் போறேன்.மார்ச் 31 கிளம்பிடறேன்.
    அப்பறமும் வேறு ஊருக்கெல்லாம் போகும் ப்ளான் இருப்பதால்
    இனி பதிவுலகம் பக்கம் மார்ச் 31 லேருந்து மே 17 வரை
    வரமாட்டேன்(ஐயா! ஜாலின்னா சொல்றீங்க.இருக்கட்டும் பாத்துக்கறேன்)

    ReplyDelete
  7. மால்குடி டேஸ் போல உங்களைக் கவர்ந்த
    மன்னார்குடி டேஸை மிக அழகாக வர்ணித்துள்ளீர்கள்
    படங்களும் அருமை
    நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அண்ணே
    என்ன சொல்றது
    திருவிழா போகாத குறை
    தீர்ந்துவிட்டது ..

    அட அட அங்க அங்க மோரும் பானகம்
    அப்புறம் தயிர் பட்டை எல்லாம் இலவசமா தருவாங்களே ....

    கோபால ராஜகோபால எல்லாரயும் நல்ல வை

    ReplyDelete
  9. @raji
    அந்தப் படம் போட்டா கோபாலனுக்கு திருஷ்டி பட்டுடும்.. நேரே போய் பார்க்கவேண்டும்.. ;-))

    நம்மாழ்வார் மங்களாசாஸனம்.. நெட்டில் பார்த்தேன்..

    கூடச் சென்றேன் இனியென் கொடுக்கேன் கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம் பாடற்றொழிய இழிந்து வைகல் பல்வளையார் முன் பரிசழிந்தேன் மாடக்கொடி மதிள் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக் கூத்தன் ஆடற் பறவை யுயர்த்த வல்போர் ஆழி வளவனை யாதரித்தே.

    லீவுக்கு போறீங்க... கரெக்ட்டா? ;-))

    ReplyDelete
  10. @Ramani
    நன்றி சார்!
    மத்த எபிசோடெல்லாமும் படிச்சு பாருங்க... ;-))

    ReplyDelete
  11. @siva
    நிச்சயம்.... கோபாலனை நம்பினார் கெடுவதில்லை.. நான்குமறை தீர்ப்பு.. ;-)

    ReplyDelete
  12. entha theer elukkum pothu சூப்பரா இருக்குன்னா நம்ம பள்ளிகூட தேர்
    திரு சேது ராமன் கிட்ட லீவ் கேட்க அங்க அங்க முட்டுக்கட்டை போடறது
    அது எல்லாம் ஒரு நல்ல நினைவுகள்
    கடைசியாக அடுத்த நாள் லீவ் விட்டு
    அடுத்த சனிகிழமை பள்ளியும் வைத்து விடுவார்கள்

    ReplyDelete
  13. @siva
    அதெல்லாம் எழுத ஆரம்பிச்சா ஒரு பதிவு தாங்காது தம்பி.....ஒவ்வொரு நாள் உற்சவமா வர்ணிக்கலாம்... அவ்ளோ பெருசு எழுதினா எல்லோரும் ஓடிப் போய்டுவாங்க.. ;-))

    ReplyDelete
  14. பங்குனிப் பெருவிழா கண்முன்னே வருகிறது.

    ”விசிலடிச்சான் குஞ்சுகளின்” திருவிழா இன்னும் தொடரும் ;-)))

    ReplyDelete
  15. @மாதேவி
    பாராட்டுக்கு நன்றிங்க... முடிஞ்சா கொஞ்ச நாள் கழித்து பிறபகுதிகளையும் சேர்க்கிறேன். ;-))

    ReplyDelete
  16. என்னால் முழுசாகப் படிக்க முடியவில்லை.
    கண்ணில் ஜலம் கோர்த்துக் கொண்டு நிற்கிறது.
    இந்த ஆனந்தக் கண்ணீர் ராஜகோபால சுவாமி தரிசனம்
    உங்கள் மூலம் இந்த நிமிடம் கண்முன்னே கிடைத்ததற்கா,
    உங்கள் பாட்டியின் பக்தியை நினைத்தா என்று தெரியவில்லை.
    நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுடி வாழ நமது
    மன்னை ராஜகோபாலன் அருள்புரியட்டும்.
    நன்றிகள் கோடி RVS

    ReplyDelete
  17. @புவனேஸ்வரி ராமநாதன்
    நான் இந்தப் பதிவை எழுதும்போது தழுதழுத்ததை விட உங்கள் கமென்ட்டில் கரைந்துவிட்டேன். மிக்க நன்றி. ;-))

    ReplyDelete
  18. உங்க பதிவு வழியா என் சிறு வயது பங்குனி திருவிழா நாட்களை பார்த்துக் கொள்கிறேன் அண்ணா! :)

    ReplyDelete
  19. வரும் இறுதியாண்டுப் பரீட்சைக்கு ராப்பகல் அகோராத்திரியாக விழுந்து விழுந்து படித்து மூஞ்சி முகரை எல்லாம் ரத்த விளாராக அடிபட்டிருக்கும் போது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அருள்புரிய ஸ்ரீவித்யா ராஜகோபாலனுக்கு பங்குனியில் விழா எடுப்பார்கள். //
    Interesting.

    ReplyDelete
  20. @Balaji saravana
    நீங்களும் மன்னார்குடியா? அல்லது உங்கள் ஊரிலும் பங்குனியில் தன திருவிழாவா..;-)))
    பாராட்டுக்கு நன்றி. ;-)

    ReplyDelete
  21. @இராஜராஜேஸ்வரி

    Thank You!! ;-)

    ReplyDelete
  22. //கையில அந்த சாட்டையும், சேப்புக் கல் ரத்தனம் பதிச்ச ஜிகுஜிகு பேண்ட்டும், இடுப்புல தொங்கற ஸ்வர்ண சாவிக்கொத்தும், தலைக்கு தகதகன்னு ஜொலிக்கிற ரத்ன கிரீடமும், நெஞ்சுல பச்ச பசேல்னு மரகத பதக்கமும், கொழந்த மாதிரி சிரிச்ச முகமும், கொஞ்சமா சாஞ்சு நின்நுண்டுருக்கிற ஒய்யாரமும்..... நம்மூர் கோபாலன் அடாடா... அழகு...கொள்ள அழகுடா..//

    பாட்டி சொன்னது உண்மை.. ஐந்து அல்லது ஆறு வருசத்துக்கு முன் நானும் மன்னார்குடியில் பார்த்து வியந்திருக்கிறேன்...

    ReplyDelete
  23. உங்கள் பங்குனிப் பெருவிழா பதிவு பார்த்ததும் நெய்வேலியில் நடக்கும் பங்குனி உற்சவம் பற்றிய நினைவுகள் வர ஆரம்பித்து விட்டது. எல்லா வருடமும் மிகவும் ரசித்த அனுபவங்கள் அவை. நினைவுகளை மீட்ட உதவிய உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  24. அண்ணே, ஊர் திருவிழாவை கண்முன் காட்டிவிட்டீர். அந்த கோபாலன் அருள் உண்டு உங்களுக்கு

    ReplyDelete
  25. "கூடச் சென்றேன்" கரெக்ட்.ஆனா நம்மாழ்வார் மங்களாசாசனம்ஆழ்வார் திருநகரியில.
    பெருங்குளம் எங்க அம்மா ஊர்,ஆழ்வார் திருநகரி எங்கப்பா ஊர்.
    ஆழ்வார் மங்களாசாசனம் சேவிக்க ரொம்ப திவ்யமா இருக்கும்.
    அதுக்கு நவ திருப்பதில எழுந்தருளி இருக்கும் ஒன்பது
    உம்மாச்சிகளும் ஒண்ணா சேவை சாதிக்கும் பொழுது
    அற்புதமா இருக்கும்.ஒரு தடவை எந்த பெருமாள் ஆழ்வார் மங்களாசாசனத்துக்கு முதல்ல எழுந்தருளறாரோ
    அவருக்கு தங்க கவசம்னு உபயதாரர் சொல்ல பெருங்குளம் உம்மாச்சி ஓடி வந்து ப்ரைஸ் அடிச்சுட்டார்.
    தாமிரபரணியில் தீர்த்தவாரி நல்லா இருக்கும்.

    ReplyDelete
  26. @இளங்கோ
    அட நம்மூருக்கு வந்த தம்பியா நீங்க.. வெரி குட் வெரி குட் ;-)))

    ReplyDelete
  27. @வெங்கட் நாகராஜ்
    நீங்களும் மனச்சுரங்கம் ஒன்னு போட்டுடுடங்க..;-))

    ReplyDelete
  28. @எல் கே
    நன்றி எல்.கே ;-))

    ReplyDelete
  29. @raji
    உங்க அம்மா ஊரு சூட்டிகைன்னு சொல்ல வரீங்க.. ரைட்டா.. ;-)))

    ReplyDelete
  30. அருமையான இறைதரிசனம்
    நன்றி RVS.
    அருட்கவி தளத்திற்கு வாருங்கள.

    ReplyDelete
  31. குளிர்மழை காக்க மலை குடை பிடித்த கிரிதாரி!க்கு மைனர் போட்ட பதிவு அட்டகாசமா இருந்தது. வார்த்தைகளால் காட்சிகளை மாட்சிமையுடன் காட்டும் உங்கள் அழகான நடைக்கு இந்த பதிவு(ம்) ஒரு சாட்சி என்று சொல்லலாம்....:) அருமை!!

    ReplyDelete
  32. என் பின்னூட்டம் பப்ளிஷ் ஆனப்பறம்தான் அதுல இருந்த பிழையைப் பார்த்தேன்.
    சாரி.தப்பா அடிச்சுட்டேன்.பெருங்குளம் பெருமாள் ப்ரைஸ் அடிச்சது தங்க கவசம் இல்லை.தங்க கருடன்.
    ஊரைப் பத்தி சொல்ற சந்தோஷத்துல தப்பா அனுப்பிட்டேன்.சாரி

    ReplyDelete
  33. Excellent sir. Kanmunnadi appadiyei thiruvizhavai niruthi vittiergal.

    One more news, enadhu ex-manager Raja is also from Mannargudi and i had sent him the link and he says that you are his class mate from School. He might get in touch with you. World is truly small.

    Venki

    ReplyDelete
  34. அப்படியே நேரில் பார்ப்பதுபோல் இருக்கிறது. இவ்வளவு விஷயங்களையும் எப்படி இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? ரொம்ப ஆச்சரியம்.

    ReplyDelete
  35. சின்ன வயசில எல்லாவற்றையும் நன்றாக உற்று கவனித்திருப்பது உற்சவத்தின் முதல் நாள் டண்டண் முதல் இறுதிவரை புலப்படுகிறது ஆர்விஎஸ்.

    அதே போல் நடுநடுவே பாட்டிகள் வந்துவிட்டால் உங்க ட்ராக்கை மீட்டெடுப்பதற்குள் படாத பாடு பட்டுவிடுகிறீர்கள். எனக்கும் பாட்டிகள் என்றாலே ஒரு இது உண்டு.

    அப்புறம் இது ராஜிக்கு:

    நீங்கள் எப்போ பெருங்குளத்துல இருந்தீங்க? நான் 1985 வரைக்கும் ஸ்ரீவைகுண்டத்துல இருந்திருக்கேன். அப்ப ஒருநாள் பஸ்ல பாத்தது உங்களத்தானா? சே!தெரியாமப் போச்சே.

    ReplyDelete
  36. @சிவகுமாரன்
    நன்றி சிவகுமாரன். அருட்கவிக்கு வந்து அம்பிகையை பற்றி படிச்சாச்சு.. ;-))

    ReplyDelete
  37. @தக்குடு
    இன்னும் நாலு லோடு மேட்டர் இருக்கு. பதிவின் நீளம் அகலம் கருதி நிறுத்திவிட்டேன். பாராட்டுக்கு நன்றி தக்குடு. ;-)

    ReplyDelete
  38. @raji
    சந்தோஷத்துல கவசம் கருடன் புரியலைன்னு சொல்லுங்க... ;-)))

    ReplyDelete
  39. @Venki

    Thanks. You are also hails from Mannai?
    My Classmate Raja...B.Raja... stout one... right.. Very Nice. Till now he has not contacted.
    Anyway, thanks.

    ReplyDelete
  40. @Uma
    நீங்களும் மன்னையா?
    பாராட்டுக்கு நன்றி.. பிறந்தது முதல் இருபத்தேழு வருடங்கள் மன்னையில் மைனர் வாழக்கை வாழ்ந்தாயிற்று.. மறக்குமா? ;-))

    ReplyDelete
  41. @சுந்தர்ஜி
    பாராட்டுக்கு நன்றி ஜி!
    ஆமாம்.. பாட்டிக்கு நான் அடிமை.. ;-))

    ReplyDelete
  42. @சுந்தர் ஜி

    நான் சின்ன வயசுல பண்ணிண அலம்பல் தாங்காம
    தாமிரபரணி எங்கப்பா அம்மா கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணினதன் பேர்ல
    என்னை அங்கிருந்து கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க.
    அதுக்கப்பறம் வருஷா வருஷம் சம்மர் ஹாலிடேஸ்க்கு போறதோட சரி.

    நடுவுல கொஞ்ச நாளா அதுவும் போக முடியாம ஆகிடுத்து.
    இந்த வருஷம் போகப் போறேனே.

    அட! 1985 ல ஒரு பஸ்ஸுல திரு திருனு முழிச்சுகிட்டு உக்காந்திருந்தது நீங்கதானா!!!! :-)
    எவ்வளோவு நாளாகிப் போச்சு உங்களைப் பார்த்து

    ReplyDelete
  43. //தாமிரபரணி எங்கப்பா அம்மா கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணினதன் பேர்ல
    // ராஜி அக்கா, நீங்களும் தரணி புகழும் பரணி பாயும் நெல்லை சீமையா?? சூப்ப்ப்பர்! நம்ப சைடு நடக்கும் கருடசேர்வை எப்போதுமே ஒரு தனிஅழகுதான். சில அப்பா/தாய்மாமன்கள் நண்டு சிண்டை எல்லாம் தூக்கி கழுத்துல உக்காசுக்க வெச்சுண்டு அவாளுக்கு உம்மாச்சியை காட்டுவா. பாக்கர்த்துக்கு எதோ எதிசேர்வை மாதிரி இருக்கும்...:)

    ReplyDelete
  44. காட்சிகளை வார்த்தையால் விவரிப்பவர்கள் மத்தியில் வார்த்தைகளில் காட்சியை காண்பித்த உன் எழுத்துக்கு வண்ணமிகு வந்தனம். வேண்ணைதாழியில் நீர் மோர் முட்ட முட்ட குடித்ட திருப்தி .

    ReplyDelete
  45. வழக்கம் போல் அருமை. பங்குனிப் பெருவிழாவை நேரில் கண்டது போல் இருந்தது. உங்க பாட்டி போல் தான் என் அம்மாவும். எவ்வளவு முடியலைன்னாலும் 108 பிள்ளையாரை 108 சுற்று சுற்றாமல் காலை உணவு உள்ளே போகாது. இருந்த வரை.

    பங்குனி உத்திர பெருவிழாவை நெய்வேலியில் 2007 ல் கண்டு களித்திருக்கிறேன்.

    ReplyDelete
  46. ஆஹா.. ராஜகோபால தரிசனம்!
    மன்னார்குடி டேய்ஸ் மனசுக்குள் ரம்யம்.
    அது ‘ஏலப் பண்ணுவது’ அல்ல.
    ‘ஏளப் பண்ணுவது’ அதாவது எழுந்தருளப் பண்ணுவது. பெருமாளைப் பற்றி சொல்லும்போது தூக்குவது என்று சொல்ல மாட்டார்கள்.

    ReplyDelete
  47. வெங்கடாசலத்தை யும் அவரின் வண்டியையும் நம்பித்தான் ஹரித்ராநதி வடகரையில் வாழ்ந்தவன் என்பதால் வெங்கடாச்சலத்தை நினைத்தால் கண்ணில் நீர்வருகிறது. இப்போது இல்லை என்று தெரிகிறது.
    நினைவூ ட்டியதர்க்கு நன்றி .

    ReplyDelete
  48. @ரிஷபன்
    தூக்குவது என்று எழுதக்கூடாது என்று தெரிந்துதான் எழுதினேன்.
    பிழையை இப்போது சரிசெய்து விட்டேன். நன்றி சார்! ;-))

    ReplyDelete
  49. @kasaikannan
    வடகரையிலா? எந்த வீடு சார்! தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன். ;-))

    ReplyDelete
  50. Yes Mr. RVS, Raja B is correct. His email is brajamng@gmail.com. My native is Mannargudi 63 Pudhu Theru, near kailasanathar temple. My grandparents are from Santhanallur village near vedapuram/kalappal. But I have g8 memories because I used to be there most of holidays.

    ReplyDelete
  51. இல்ல, நான் கும்பகோணம். இப்போ இருப்பது டில்லியில்.

    ReplyDelete
  52. @Venki
    கைலாசநாதர் கோயில் பக்கமா? புதுத் தெருவா? குன்னியூர் பண்ணைக்கு அந்தப் பக்கமா? ராதா டுடோரியலுக்கு அந்தான்டையா? ;-)))

    ReplyDelete
  53. @Uma
    மிக்க மகிழ்ச்சி.. நன்றி. ;-)

    ReplyDelete
  54. Radha tutorials, I am not sure.. But Kunniyur Pannai was 3 houses from my granparents house.. we used to go and play there ....

    ReplyDelete
  55. ரங்கா ரேடியோ விற்கும் வேங்கடாச்சலம்தானே ஆஸ்தான சுமந்திரன் /பார்த்தசாரதி/ !!
    யாரென்று நினைவு வருகிறதா?

    ReplyDelete
  56. @kasaikannan
    உம்ஹும்.. இல்லை.. ரெங்கா ரேடியோ மாமாவைத் தெரியும்.. Physically Challenged person.. நீங்க......

    ReplyDelete
  57. He is not B Raja.. but B Rajah, I think.

    RVS.. great post..

    I am also planning to write abt. panguni thiruvizha in my style.. of course it can't be to your level.

    ReplyDelete
  58. ரங்கா ரேடியோ மாமாவேதான். மன்னார்குடி பற்றிய ப்ளாக் களை
    தேடியபோது உங்கள் ப்ளாக் கண்டேன் .
    வாழ்க உங்கள் எழுத்துத் திறமை . பாட்டி தவிர பாக்கி அனைவரும் நலமா?
    பட்டி நலமென்று பகவான் சொன்னார் .

    ReplyDelete
  59. @Madhavan Srinivasagopalan
    Thanks Madhavaa! Yours is different Style. ;-))

    ReplyDelete
  60. @kasaikannan
    மாமா! அனைவரும் நலமே.. பாட்டி தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். பிரவாகமாக பேசுவாள். அது என்னிடம் ஒட்டிக்கொண்டு சும்மா எழுதிப் பழகுகிறேன். உங்கள் பாராட்டுக்கு தன்யனானேன். நன்றி. ;-))

    ReplyDelete
  61. மன்னை தேர்... மனதின் ஆழத்தில் புதைந்த நினைவுகளை மீட்டெடுத்த பதிவு. நன்றி

    ReplyDelete