Tuesday, March 22, 2011

ஒரு துணை நடிகையின் கதை

film cameraஇது ஒரு அப்பட்டமான கொலைதான். ராமிற்கு பயத்தில் கை கால்கள்  தடதடவென்று நடுங்கிற்று. இதயத்தின் லப் டப் சட்டென்று ஒரு வேக ஓட்டம் பிடித்தது. ஒரு தடவைக்கு இரண்டாம் முறை புத்தியை தீட்டிக்கொண்டு கண்ணை கசக்கி உன்னிப்பாக கவனித்தான்.  Strangulated. ஆயுதமாகப் பயன்பட்ட நைலான் கொடிக் கயிறு குழாயருகில் தேமேன்னு தொங்கிற்று. வெண்சங்கு கழுத்தில் கயிற்றின் அச்சு பீச் மணலில் கார் டயர் தடம் போல பதிந்திருந்தது. "சிர்ர்ர்.." என்று ஷவர் தண்ணீரை பூவாளியாய் இறைத்தது. கோணலாய் டைல்ஸ் தரையில் கொக்கி போல சரிந்து விழுந்து கிடந்த அவளுக்கு தண்ணீர் துளித்துளியாய் வாய்க்கரிசி போட்டதுபோல இருந்தது. சவத்திலும் லக்ஷனமாகத்தான் இருந்தாள். உயிர்ப்போடு இருந்தபோது கண்ணழகி என்று எல்லோரும் பாராட்டிய இரண்டும் கோலிக்குண்டு போல வெளியே பிதுங்கி வந்திருந்தது. நேற்று தான் ஐ ப்ரௌ த்ரட்டிங் செய்து புருவங்களை செயற்கை வில்லாக்கியிருந்தாள். கஷ்கட்டு வரை தூக்கி மேலே கட்டிய வெள்ளை உள்பாவாடை முட்டிக்கு கீழே வாக்சிங் செய்த வழுவழு வாழைத்தண்டை பளீரென்று காண்பித்தது. தங்க முலாம் பூசிய மாங்காய் டிசைன் போட்ட கொலுசு காலை அலங்கரித்திருந்தது. ஐப்பசி மாத அடை மழை போல ஷவர் தங்கு தடையில்லாமல் ஜோவென்று கொட்டி தீர்த்துக்கொண்டிருந்தது. மேனியில் வெள்ளைத் துணி இருக்கும் இடங்களின் உள்ளே இருப்பவைகளை வெட்கம் இல்லாமல் வெளியே காண்பித்துக் கொண்டிருந்தது விவஸ்த்தை கெட்ட பச்சைத் தண்ணீர். தலை முழுகாமல் இருப்தற்கு வெண்மை நிற ஷவரிங் கேப் அணிந்திருந்தாள்.


ஐம்பது நாட்கள் முக்கி முனகி ஓடிய அல்லது ஒட்டப்பட்ட 'ராஜா-ராணி' என்கிற அபூர்வ தமிழ்படத்தில் ஹீரோயினுக்கு பக்கத்தில் பச்சைத் தாவணியில் இடுப்பில் குடத்தோடு தண்ணீர் தூக்கிக்கொண்டு ஐந்தாறு பேரோடு பிரேமுக்கு ஓரத்தில் வந்து வெள்ளித்திரையில் ஒரு கால், ஒரு கை, அரை முகம் என்று பாதி தெரிந்தாள். அறிமுகம் என்று கூட டைட்டில் கார்டு போட முடியாத அளவிற்கு ஐம்பது செகண்ட் மட்டும் திரையில் நீடித்த புதுமுகம். பற்பசை விளம்பரங்களில் பவுடரோடும் லிப்ஸ்டிக்கோடும் பிரஷ் வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பது போல இவளும் முழு மேக்கப்போடு குளியலுக்கு இறங்கியிருக்கிறாள் போலிருக்கிறது. இப்போது இவள் குடியிருக்கும் இந்த அடையார் டூ பெட்ரூம் அப்பார்ட்மென்ட், தலையில் துண்டைப் போட்டுக் கொள்வதற்கு முன்பு தயாரிப்பாளர் 'ராஜா-ராணி' ராகவன் தனது அன்பு மிகுதியால் பரிசளித்தது. இழுத்து போர்த்திக்கொண்டு சில படங்களில் 'கௌரவமான' வேடங்களில் நடித்தாள். இழுத்து போர்த்திக்கொள்ள முடியாதபடி துணி உடுத்தி பல படங்களில் கிளுகிளுப்பாக வந்து பார்த்தாள். ஊஹும். ஒன்றும் பெயரவில்லை. எதிலும் சோபிக்கவில்லை. இண்டஸ்ட்ரியில் ராசியில்லாத நடிகையாகி பெயரிலிருந்து குடித்தனம் வரை ஒவ்வொன்றாக கைரேகை, வாஸ்து, ராசிக்கல், பெயரியல் என்று ஒருவர் பாக்கியில்லாமல் சேவித்து மாற்றிக்கொண்டு வந்து கடைசியில் 'ராஜா-ராணி'யுடன் பழக்கமாகி ஒருவழியாக அடையாரில் செட்டில் ஆனாள்.

ராகவன் படம் எடுக்கும் தொழிலில் படுத்துவிட்டாலும் இன்னமும் அதே கோதாவோடு வெளியில் நடமாடுகிறார். புதுப் பட பூஜைகள் கலந்துகொள்கிறார். மற்றவர்களுடன் தோளோடுதோள் கூட்டணியாக நின்று கொண்டு விஸ்வரூப பாடல்கள் ஸி.டி வெளியீட்டு விழாவில் முன்னணிகள் வழங்க சிரித்துக்கொண்டே பெற்றுக்கொள்கிறார். நகரின் தலைசிறந்த கிளப்களில் பதினொரு மணிக்கு மேலே சரக்கினால் வானத்தில் மிதக்கும் போது, அவரை நடுரோட்டிற்கு கொண்டு வந்த நட்சத்திர நடிகரை வாய்க்கு வந்தபடி வகைதொகை இல்லாமல் திட்டுவார். அவரினால் கலைத்துறையில் முன்னுக்கு வந்த தயாள குணம் படைத்த யாராவது ஒருவர் ஆட்டோகாரனுக்கு காசு கொடுத்து விருகம்பாக்கத்தில் இறக்கிவிடச் சொல்லுவார்கள். ஆட்டோகாரர் கைத்தாங்கலாக வீட்டில் இறக்கி விடுவதற்குள் அரை நூற்றாண்டு அசிங்க கதைகளை அரை மணி நேரத்தில் ராகவன் உளற கேட்டிருப்பார். சிலசமயங்களில் அடையார் முகவரி தெரிந்தவர்களின் உதவியால் அடையாறுக்கும் வந்து போகிறார்.

ஒரு சவத்திற்கு முன் எவ்ளோ நேரம் ராமை பாத்ரூம் வாசலில் நிற்க வைப்பது. பாத்ரூம் வரைக்கும் ராம் வந்தது தெரிந்தால் ராகவன் அவனை 'மேல்'நாட்டிற்கு நாடு கடத்திவிடுவார். "அண்ணி!" என்று சர்வமரியாதையாக அழைத்துக்கொண்டு மின்விசிறியால் கலைந்து கிடந்த புத்தகங்கள் படபடத்த படுக்கையை தாண்டி ஒரு கண் மட்டும் வைத்து பார்க்கும் அளவிற்கு கதவு ஒருக்களித்திருந்த குளியலறை வரைக்கும் வந்துவிட்டான். ஹால் வரைக்கும் அடிக்கடி வருபவன் தான். ராகவன் கொடுத்தனுப்பிய புது ஐந்து ரூ.1000 சலவை நோட்டுகள் சட்டைப்பையில் வெளியே துருத்திக்கொண்டு இருந்தது. அதில் காந்தி அலாதியாக சிரித்துக்கொண்டிருந்தார்.

மொபைலில் ராகவனைக் கூப்பிட்டான். ஏழு மணிக்கு கிளம்பும்போது ஏ.வி.எம்மில் யாரிடமோ "அப்போ அவங்க ஹிந்தியில புகழின் உச்சாணியில இருந்தாங்க.. அவங்களை தமிழுக்கு கொண்டு வந்து ஒரு படம் பண்ணினோம் பாருங்க.. அது படம்.. சில்வர் ஜூபிலி. சும்மா பிச்சுகிட்டு ஓடிச்சு" என்று பழைய பல்லவியை பாடிக்கொண்டிருந்தார். பசித்த புலியிடம் வசமாக சிக்கிய ஆடு போல தலையை ஆட்டி கேட்டுக்கொண்டிருந்தார் எதிர்த்தாற்போல் உட்கார்ந்திருந்த ஐம்பது வயது வெள்ளை அண்ட் வெள்ளை. இப்போது "ஹலோ மை டியர் ராங் நம்பர்..." என்று யேசுதாஸ் இரண்டு முறை பாடிவிட்டார். ராகவன் அண்ணன் ஃபோனை எடுக்க காணோம். ஷவரை நிறுத்துவதா, அங்கேயே இருப்பதா, போலிசுக்கு போன் செய்யலாமா, இந்த வீட்டில் எதையாவது தொடலாமா, தொட்டோமோ நாம் மாட்டிக்கொள்வோமா என்று பலவிதமான கட்டளைகள் மூளையின் பல ந்யுரான்களில் இருந்து வெள்ளமாக வடிந்த வண்ணம் இருந்தது. குழம்பினான். குலதெய்வம் அன்னியூர் பேச்சியம்மனை வேண்டிக்கொண்டு மொபைலில் கூப்பிட்டவுடன் இந்தமுறை ராகவன் எடுத்தார்.
"யாழு..." என்று பேசிய அவர் வாய் வழுக்கியது.
அவனுக்கு புரிந்துவிட்டது. அண்ணன் குடி சித்தராகி இப்போது நீரில் நடக்கிறார்.
"அண்ணே! அண்ணி.. செத்துட்டாங்க..."
"எழ்ந்த அழ்ன்னி" நாக்கு சுழற்றியடித்து பேசினார்.
ச்சே.. என்று தலையில் அடித்துக்கொண்டு
"அடையார்... அடையார்ண்ணே.."
"அழ்ன்னிங்கற.. அழ்ன்னங்க்ற..."
"அண்ணிதான்னே! ஐயோ.. யாரோ கொலை பண்ணிட்டாங்க..."
"யாழ்ழு.... நீழு..."
இனி அவரிடம் ஃபோனில் பேசி பிரயோஜனம் இல்லை என்று புரிந்துகொண்டான். மடமடவென்று வெளியே வந்து கதவை வெறுமனே சார்த்திக்கொண்டு கீழே வந்து ஹோண்டாவை உதைத்தான். வலுவான இளமை உதையில் உடனே உயிர்ப்பெற்று கிளம்பிற்று. இன்றைக்கு சனிக்கிழமை. நிச்சயம் பிக்னிக் பிளாசாவில் தான் கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் வரை அண்ணன் மது முகாமிட்டிருப்பார். யாராவது வகையாக சிக்கியிருப்பார்கள்.

மேம்பாலம் தாண்டி கூவம் பாலம் ஏறினான். படிப்படியாக வேகத்தை கூட்ட ஆக்சிலேட்டரை முறுக்கினான். ஆந்திர மஹிலா சபா வாசலில் நின்றிருந்த ரெண்டு கான்ஸ்டபிள்கள் கையை ஆட்டி மடக்கி அவனை ரோடோரத்துக்கு ஒதுக்கினார்கள். காக்கியை கண்டதும் குப்பென்று உடலில் இருந்து வியர்வை ஆறு போல பொங்கிற்று. நாக்கு வரண்டது. அவனையறியாமலேயே கண்களில் கலவரம் வழிந்தது. மின்சாரம் போல உடம்பெங்கும் ஒருவித பீதி பற்றிக்கொண்டது.


தொடரும்.

பின் குறிப்பு: மிகவும் ஜாக்கிரதையாக சிறுகதையாகத்தான் தொடங்கினேன். உஹும். முடியாது என்ற நிலையில் குறுந்தொடராக தொடர்கிறேன். போன முறை போல இல்லாமல் நிச்சயம் அடுத்த எபிசோடில் முடிக்கும் எண்ணத்துடன் இதை முடிக்கிறேன். நன்றி.
 
படக் குறிப்பு: படக் கேமரா கிடைத்த இடம் http://www.curtainsupinc.org
-

26 comments:

  1. த்ரில்லிங்? இதை சிறுகதையாக முடிப்பது சரியாக வராது என்றே எனக்கும் தோன்றுகின்றது.
    தொடருங்கள்.(டாஷ் போர்டு அப்டேட் ஆகலை)

    ReplyDelete
  2. //நேற்று தான் ஐ ப்ரௌ த்ரட்டிங் செய்து புருவங்களை செயற்கை வில்லாக்கியிருந்தாள்//

    அநியாயத்துக்கு டீட்டெயில் குடுக்கறீங்க. EYE like it!

    ReplyDelete
  3. கட் சாட்டில் அழகை வர்ணித்துப்போவது
    சிறப்பாக உள்ளது
    புலி ஆடு உவமை பிரமாதம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. யாருங்க கொலையாளி...ராம் இந்தப் பக்கம் வந்ததும் அந்தப் பக்கம் 'ஜலயோகா' செய்து கொண்டிருந்த நடிகை எழுந்திருக்கப் போகிறாள்...!!!

    ReplyDelete
  5. சவத்திலும் லக்ஷனமாகத்தான் இருந்தாள். ???????!!!!!!!!!

    ReplyDelete
  6. சுவாரஸ்யமாக இருக்கிறது...தொடருங்கள்...

    ReplyDelete
  7. கதை சுபெர்ப். அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. // மேம்பாலம் தாண்டி கூவம் பாலம் ஏறினான்.//
    அய்ய.....அத்து கூவம் கேட்யாது நைனா......அடையாறு பாலாம். இன்னா உன்க்கும் தமிளு சினிமா டைரடக்கர் மேரிக்கி தட்டு கேட்டு பூட்ச்சா.....


    அதசரி........யேவ் மைனரே ..............நம்ம குருநாதர் நைலான் கயிற அப்படியே காப்பி அடிக்காதே செல்லம் !! :)))

    ReplyDelete
  9. அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங்..

    ReplyDelete
  10. விறுவிறுப்பாக போகிறது. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்…..

    ReplyDelete
  11. தொடருங்கள்

    ReplyDelete
  12. அன்னியூர் பேச்சியம்மன் துணை.. அடுத்து என்ன ஆகுமோ? (ரெண்டு கண்ணும் வெளிய வந்தாச்சா..வேணாம்ப்பா.. கதை இப்ப்பவே பயங்கரமா இருக்க்கு..)

    ReplyDelete
  13. ஐ! அடுத்து த்ரில் தொடரா! ரொம்பத்தான் டீடைல் கொடுக்கறீங்க மைனரே துணை நடிகைக்கு :) நடக்கட்டும் நடக்கட்டும் :)

    ReplyDelete
  14. @raji
    நன்றி ராஜி!
    வர வர ரொம்ப பெரிய கதைகள் எழுத ஆரமிச்சுட்டேன். படிக்கறவங்களுக்கு ப்ராணா அவஸ்தை.
    ஏன் அப்டேட் ஆகலை? ;-)))

    ReplyDelete
  15. @! சிவகுமார் !

    EYE TWO LIKE IT!!! ;-)) Thanks Sivaa.

    ReplyDelete
  16. @Ramani
    நன்றி ரமணி சார்! தொடர்ந்து வாசியுங்கள்.. ;-)

    ReplyDelete
  17. @ஸ்ரீராம்.
    ஜலஜாவின் ஜலயோகான்னு ஒன்னு எழுதலாம். நன்றி ஸ்ரீராம். ;-)

    ReplyDelete
  18. @இராஜராஜேஸ்வரி
    Why Question Mark?????!!! ;-)))

    ReplyDelete
  19. @!* வேடந்தாங்கல் - கருன் *!
    தொடர்கிறேன்... தொடருங்கள்.. ;-)))

    ReplyDelete
  20. @Uma
    எழுதிவிட்டேன். படித்து விட்டு மேலான கருத்துக்களை சொல்லுங்கள்.. ;-))

    ReplyDelete
  21. @கக்கு - மாணிக்கம்
    கீழே கூவம் ஓடும் பாலம் மாணிக்கம்..

    சத்தியமாக தலைவரின் நைலான் கயிறு படித்ததில்லை. இந்த முறை புத்தகக் காட்ச்சியில் கிழக்கில் போட்டிருந்தார்கள். கையில் எடுத்து பார்த்துவிட்டு ஏனோ வைத்துவிட்டேன். படித்துவிட்டு சொல்லுங்களேன் தல. ;-)))

    ReplyDelete
  22. @வித்யா
    போட்டாச்சு.... கமெண்ட்ஸ் ப்ளீஸ். ;-))

    ReplyDelete
  23. @கோவை2தில்லி
    நன்றிங்க.. தொடருங்கள்..;-)

    ReplyDelete
  24. @VISA
    தொடர்ந்துவிட்டேன்.. ;-)

    ReplyDelete
  25. @அப்பாதுரை
    தல.. கலாய்க்காதீங்க.. எழுதிப் பழகுகிறேன்.. ;-)))))

    ReplyDelete
  26. @வெங்கட் நாகராஜ்
    வாங்க தலைநகரம்... தொடர்ந்து படித்து மேலான கருத்துக்களை இடுங்கள்.. ;-))

    ReplyDelete