Monday, April 11, 2011

மன்னார்குடி டேஸ் - ஸ்ரீராம நவமி

Lord Rama

ஓய்வொழிச்சல் இல்லாமல் வெய்யில் புயல் மழை சிரமம் பார்க்காமல் சதா சர்வகாலமும் நாங்கள் அசராமல் உட்கார்ந்து உலகளாவிய சத் விஷயங்கள் பேசிக்கொண்டிருக்கும் மதில் கட்டைக்கு கீழே இருப்பது அ/மி கோதண்டராமர் திருக்கோவில். எங்கள் எல்லா பேச்சுக்கும் அவர் தான் சாட்சி. மார்கழி மாதக் குளிரில் சாரங்கன் மாமா மூலம் எங்களுக்கு சுடச்சுட வெண்பொங்கல் படி அளந்த பிரான். வேப்பமர நிழற்காற்றில் ஏகாந்தமாக சேவை சாதித்திக் கொண்டிருப்பவருக்கு ஹாப்பி பர்த் டே கொண்டாடும் திருநாள் ராம நவமி உற்சவம். கிரிக்கெட் ஆனாலும் சரி ராம நவமி ஆனாலும் சரி எங்களுடையுது ஒரு டீம் வொர்க். ஒரு அணியாக திரண்டு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வோம். அந்த ராமர் கோவிலுக்கு நவமி இன்சார்ஜ் எங்கள் ரவி சார். ரவி சார் ஒரு அற்புதமான மனிதர். நான் படித்த பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வொகேஷனல் பிரிவில் ஆசிரியர். இடுப்புக்கு மேலே ஷர்ட்டை டக் செய்த பேன்ட். நாள் கிழமைகளில் நெற்றியில் திருமண். பெடலுக்கு வலிக்காமல் சைக்கிள் ஓட்டுவார். விடுமுறைகளில் வெளியூர் செல்லும் போது கொத்துச் சாவியுடன் வீட்டை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்லும் எங்களுடைய நெருங்கிய தோஸ்த். குளக்கரை கோதண்டராமர் ஒரு இருபது டிகிரி இடது பக்கம் திரும்பி அம்பு விட்டால் அது ரவி சார் வீட்டை தாக்கும். 

ராம நவமிக்கு ரெண்டு நாள் முன்னால் மணி டீக்கடை மூலையில் இருந்து தொடங்கும் எங்கள் வசூல் பணி. நானும் ஸ்ரீராமும்தான் நவமி கலெக்ஷன் நிரந்தர ஏஜெண்ட்ஸ். ஸ்ரீராம் கக்கத்தில் இடுக்கிக்கொள்ளும் இனாமாக வந்த ஒரு பையும், அடியேன் கையில் ஒரு ரசீதுப் புஸ்தகமுமாய் களப்பணி ஆற்றுவோம். திருவிழாக் கமிட்டி பொருளாளர்கள். ஸ்ரீராம் தனது ஹாஸ்யப் பேச்சால் நிறைய வசூல் செய்வான். ஒரு வீட்டிற்குள் நன்கொடை வசூலிக்கப் போனால் குறைந்தது பத்து பதினைந்து நிமிடம் ஆகும். 
"என்ன மாமி சௌக்கியமா இருக்கேளா? அடையாளமே தெரியாம மெலிஞ்சுட்டேளே!"
"ஆமா. ஆமா.. ரொம்ப சரி.."
"எல்லாம் கோபாலன் பார்த்துப்பான்"
"குளத்த சுத்தி பிரதக்ஷிணம் இப்போ போறதில்லையோ"
"ச்.ச்.ச்.சோ..முடியலன்னா டாக்டர்ட்ட காமிக்கப்படாதோ"
"உங்காத்து காப்பிக்கு உங்கள்ட்டே ஆயுசு பூரா அடிமையா இருக்கலாம் "
"இந்த ராமனுக்கா தரேள். இல்லையே. பில் வச்சுண்டிருக்கிற எனக்கா தரேள்! கையில வில் வச்சுண்டிருக்கிற பகவானுக்குன்னா தரேள்!"
"நிச்சயமா பாருங்கோ.. வர வாரத்திலேர்ந்து மதில்ல யாரும் உக்கார்ந்து அரட்டை அடிக்கமாட்டோம்"
"நீங்க யாரு... ஒரு ராம நவமி உற்சவம் மொத்தமாவே நீங்க பண்ணலாம்"
"உங்க தாராளம் இந்தத் தெருவில யாருக்கு வரும்."
மேற்கண்ட வகை வசனங்கள் சர்வ சாதாரணமாக அவன் வாயிலிருந்து பிரவாகமாக கொட்டும். இடம் பொருள் ஏவல் அறிந்து சாதுர்யமாக பேசி துட்டு கேட்டு வாங்குவதில் சர்வ வல்லமை படைத்தவன். 

கிழக்கு தெருவிற்கும் வடக்கு தெருவிற்கும் சேர்த்து மொத்தம் இரண்டு ராமநவமி கொண்டாட்டங்கள் உண்டு. கிழக்கு தெருவில் ராதாக்ருஷ்னைய்யர் வீட்டில் காலையில் வருவோருக்கு டிபனுடன் உஞ்சவிருத்தியில் ஆரம்பித்து மாலையில் ராம மடத்தில் திவ்ய நாம அகண்ட பஜனையில் மங்களம் பாடி பூர்த்தி செய்வார்கள். உஞ்சவிருத்தியில் தியாகராஜரை ஒத்த முக தீட்சண்யம் மிக்க பெரியவர் ஒருவர் கச்சலான தேகத்துடன் அரிசி பருப்பு பிக்ஷை வாங்கி சப்ளாக் கட்டை ஜலஜலக்க வீதியில் பஜனை வருவார். ஆனால் சாயந்திரம் பஜன் நன்றாக களை கட்டும். தெருவின் சங்கீதப் பிரியைகள் கூட்டம் அன்று மடத்தில் கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருக்கும். கிழக்கு தெருமுனையில் இருக்கும் ராம மடத்தில்தான் அந்த விசேஷ பஜனை நடக்கும். வடக்குத் தெரு கோபால் அண்ணா மிருதங்கம். அவர்தான் அந்த மடத்தின் ஆஸ்தான இசை வாத்தியக் கலைஞர். ஒன்று அந்த மிருதங்கம் இருக்கவேண்டும் இல்லை தன் கை இருக்கவேண்டும் என்று இரண்டில் ஒன்று பார்ப்பது போல உக்கிரமாக வாசிப்பார் கோபால். அண்ணன் தாளத்தில் மடம் தவிடுபொடியாகும். கட்டம் போட்ட பிரேம் கொண்ட பாக்கியராஜ் கண்ணாடி. மீசை அதன் வாழ்நாளுக்கு கத்தரி பார்த்திருக்காமல் காடாக மேலுதட்டை மூடியிருக்கும். குடிக்கும் காப்பியை ஃபில்ட்டர் செய்து வாய்க்குள் இறக்கும். ஆனால் கோபால் அண்ணா சிகரெட்டும் நிஜாம் பாக்கும் கலந்த வாசனையுடன் பஜனை மேடை ஏறும் ஒரு மிருதங்க வித்வான். அவருக்கு மிருதங்கம் என்ற தாள வாத்தியம் வாசிக்கும் பழக்கம் தவிர்த்து 'வெண்'குழல் ஊதும் பழக்கமும் இருந்தது. பிரச்சனைகளை ஊதித் தள்ளுவதற்கு.

"ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு" என்ற மேடையின் பிரதான பஜனை பாடகரின் குரலுக்கு மடம் முழுக்க கோரஸாக "ஜெய்!" போடும். அந்த பக்திக் கடலில் சிறுதுளியாய் என்னுதும் ஈனஸ்வரத்தில் ஒரு சோனி "ஜெய்". நான்கிற்கு ஆரம்பித்தால் ஆறு மணி வரை கை சிவக்க மேனி முழுவதும் வியர்வை ஆறாய் பெருக்கெடுத்து ஓட வாத்தியத்தை தட்டி எடுத்துவிடுவார் கோபால் அண்ணா. தலையை ஆட்டி ஆட்டி ஆவேசத்துடன் கழுத்து சுளுக்கு பிடித்துக் கொள்ளுமோ என்று பார்ப்பவர் அஞ்சி பதற பதற வாசிப்பார். காண்போருக்கு அவர் அதனுடன் ஒரு யுத்தம் புரிந்து கொண்டிருப்பது போல தோன்றும். சில சமயங்களில் பாடுபவர் கூட விக்கித்துப் போய்விடுவார். அவரிடம் தாளம் தப்பாது ஆனால் வாசிப்பு அபிநயங்களில் பக்கத்தில் உட்கார்ந்து பாடுபவருக்கு பயத்தில் நா எழாது. அந்த மடத்து சுவற்றில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் பஜனை பாடும். கூட்டத்தின் காதுகளில் ராம நாமம் நிறையும். பஜனை முடிந்ததும் மிக முக்கியமான ஐட்டமான பொங்கல் பிரசாதம் கட்டாயம் உண்டு. அங்கே செவிக்கும் வயிற்றுக்கும் சேர்த்து ஈயப்படும்.

ராம மடம் பஜனை முடிந்து கோபால் அண்ணா மிருதங்கத்துக்கு அந்த "ஒரு வண்டி" அழுக்கு உள்ள 'வாசனை' உறை போடும் வேளையில் வடக்குத் தெரு ராமர் மணியொலி எழுப்பி வா..வாவென்று அழைக்க அவரைப் பார்க்க பறந்து போவோம். போகிற வழியில் நீர் மோரும், பானகமும் எனது கிரஹத்தில் வாங்கி  மிச்சம் மீதி இடம் இருக்கும் வயிற்றில் ரொப்பிக் கொண்டு ஓடுவோம். கோதண்டராமர் கோயிலில் அபிஷேகம் ஆராதனை என்று அமர்க்களப் படுத்துவார்கள். அன்றைக்கு ராமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல ஏகப்பட்ட விசிட்டர்ஸ் வரிசையில் காத்திருப்பார்கள். ஏனைய நாட்களில் ராமருக்கு நாங்களும் எங்களுக்கு ராமரும்தான் ஜோடி. கடைத்தெருவிற்கு போய் அபிஷேக சாமான்கள் மற்றும் ஏனைய பொருட்கள் வாங்கி வந்ததால் ஸ்ரீராம் நடுவில் நின்று அலம்பல் விட்டுக்கொண்டிருப்பான். விழாவிற்கு கடைசி நேரத் தேவைகள் எதுவும் இருப்பின் திசைக்கு ஒருவராய் சைக்கிளில் ஏறிப் பறப்போம்.

எட்டு மணி வாக்கில் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்வோம். முக்கால் வாசி எங்கள் தேசிய மேல் நிலைப் பள்ளி தமிழ் வாத்தியார் ஜெம்பகேச தீட்சிதரின் ராமாயணம் உபன்யாசம். எதிர்த்தாற்போல் ராமன் அண்ணா வீட்டில் இருந்து ரெண்டு பெஞ்ச், ஏ.ஆர்.ஆர். கோப்லி வீட்டில் இருந்து ரெண்டு பெஞ்ச், ஸ்ரீராம் வீட்டு பென்ச் என்று உருவி சேர்த்து மேடையமைப்போம். குளத்துப் படித்துறையில் உட்கார்ந்து அந்த ஜகம் புகழும் ராமனின் புண்ணிய கதையை கேட்போம். எல்லா வருஷமும் ஜெம்பகேசன் சார் ராமாயணம் கேட்டு பழகியிருந்தது அந்த படித்துறை. தேங்காய் மூடி பிரசாதமும் சொற்ப சம்பாவனையையும் சந்தோஷமாக வாங்கிக்கொள்ளும் பக்குவத்தை ராமர் அவருக்கு கொடுத்திருந்தான். கலெக்ஷனை பொறுத்து சில வருடங்கள் கலை நிகழ்ச்சிகள் மாறும். ஆனால் அதற்கான சந்தர்ப்பங்களும் சாத்தியங்களும் மிக மிகக் குறைவு. ஒரு முறை தஞ்சையிலிருந்து என்று நினைக்கிறேன், ஒரு பொம்மலாட்டம் ஏற்பாடு செய்திருந்தோம். ராமர் தன் சந்நிதியிலிருந்து நேராக கண்டுகளிக்கும் வகையில் குளத்தோரத்தில் மேடை அமைத்திருந்தோம். நிழலாக ஒரு மெல்லிய வாயில் புடவைத் திரைக்கு பின்னால் அமர்ந்துகொண்டு ரெண்டு பேர் ராம-ராவண யுத்தம் கைகளால் ஆட்டிக் காட்டிக்கொண்டிருந்தார்கள். ஆர்வக் கோளாறில் பொம்மலாட்ட டெக்னாலஜி பற்றி தெரிந்து கொள்வதற்கு மேடைக்கு பின்னே சென்று செமத்தியாக வாங்கிக் கட்டிகொண்டோம்.

ஒன்பதரை வாக்கில் பெருமாளின் அருள் பெற்று எல்லோரும் விடை பெற்ற பின்னர் பெஞ்ச் எடுத்த வீட்டில் எல்லாம் கொண்டு போய் சேர்பித்துவிட்டு ஜமக்காளம் சுருட்டி பிரசாதங்களை எல்லோரும் பங்குபோட்டு சாப்பிடுவோம். அன்றைக்கு மதில் இரவு ஒரு மணிவரை விழித்திருக்கும். காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளின் ஹைலைட்ஸ் ஒலிச்சித்திரமாக ஓடிக்கொண்டிருக்கும். யார் வழுக்கி விழுந்தா, யார் யாரை பார்த்தார்கள், யார் யாரை முறைத்தார்கள், யார் யாரைப் பார்த்து சிரித்தார்கள், யாருக்கு யார், யாரோடு யார் போன்ற பல யார்கள் விஸ்தாரமாக விவாதிக்கப்படும். கூத்தடிக்கும் அந்த கெக்கெக்கே சிரிப்பில் விழாக் கொண்டாடிய ராமருக்கு தொந்தரவாக இருக்கும் என்ற பட்சத்தில் சங்கத்தை கலைக்கும் அந்த அகால வேளையில்..
"வெங்குட்டு, ஸ்ரீராம் ரெண்டு பேரும் நாளைக்கு காலயில வந்துடுங்கோ. ராமநவமி அக்கௌண்ட்ஸ் பார்த்துடலாம்" என்று அவசரமாக அற்பசங்கைக்கு எழுந்திருந்த ரவி சார் ஜெனரல் பாடி மீட்டிங்கிற்கு அழைப்பு விடுப்பார்.

பின் குறிப்பு: நாளை ஸ்ரீராம நவமி. தசரத மஹாராஜா அப்பாவான நாள்.

பட உதவி: in.ygoy.com

-

60 comments:

  1. ராமநவமிக்கு என்ன ஸ்பெஷல் சாப்பாடு? விசேஷ சாப்பாட்டு ஐட்டம் இல்லாத ஒரு பண்டிகை இது தானோ?

    ReplyDelete
  2. சுண்டலுக்கு முதல் / முதல் வரிசையில் வந்தாச்சு .

    ராமர் பஜன் ஜாங்கட்டையும் சதங்கையும் சல சலக்க ராம நவமி வர்ணனை..

    நண்பரோடு விழா வசூல் சாதுர்யம் அட்டகாசம் ..

    நகைச்சுவை துளிகளுக்கு பஞ்சமில்லை ...

    கூடி கொண்டாடிய குதூகலங்கள் தொலைக் காட்சியில் தொலைந்து போய் கொண்டிருக்கின்றன ..

    பதிவு போட்டு நினைவு படுத்துகிறிர்களே அதே பல புண்ணியம் .....

    ReplyDelete
  3. ஸ்ரீராமநவமி பானகம் super..

    ReplyDelete
  4. @அப்பாதுரை
    பானகமும் நீர்மோருந்தான்... வேறென்ன...
    வெண்பொங்கல் எப்போதும் பெருமாளுக்கு ப்ரியம் தானே அப்பாஜி! ;-))

    ReplyDelete
  5. ஓய்வொழிச்சல் இல்லாமல் வெய்யில் புயல் மழை சிரமம் பார்க்காமல் சதா சர்வகாலமும் நாங்கள் அசராமல் உட்கார்ந்து உலகளாவிய சத் விஷயங்கள் பேசிக்கொண்டிருக்கும் மதில் கட்டைக்கு கீழே //
    Super description.

    ReplyDelete
  6. //இருபது டிகிரி வலது பக்கம் திரும்பி அம்பு விட்டால் அது ரவி சார் வீட்டை தாக்கும். //

    Are you sure ?
    that's left side, I think. (from Ramar's view)

    ReplyDelete
  7. @பத்மநாபன்
    நன்றி பத்துஜி!
    அனைத்தையும் டி.வி பொட்டியில் இழந்துவிட்டோம். சரிதான். வடையை அப்பாஜி தட்டிக்கொண்டு போய்விட்டார்.
    கிராமத்து தேவதை உங்களுக்காக முடிவோடு காத்திருக்கிறாள். ;-)))

    ReplyDelete
  8. ராமநவமி கலை கட்டு பொ
    ..வழக்கம்போல செமையா இருக்கு.. எழுத்துக்கள்.

    ReplyDelete
  9. @Madhavan Srinivasagopalan
    ஏலக்காய் பச்சை கற்பூரம் தட்டிப் போட்ட பானகம். நன்றாக இருந்ததா? நன்றி. ;-))

    ReplyDelete
  10. @இராஜராஜேஸ்வரி

    Thank You!! ;-)

    ReplyDelete
  11. @Madhavan Srinivasagopalan
    நா நம்ப வியூல எழுதிட்டேன். மாற்றிவிட்டேன். நன்றி. ;-))

    ReplyDelete
  12. @Madhavan Srinivasagopalan
    நன்றி மாதவா! ;-))

    ReplyDelete
  13. என்னுடைய பள்ளிநாட்களும் ராமநவமி கொண்டாட்டங்களும் நாமிழந்திருக்கும் சந்தோஷங்களும் அலைமோதுகிறது ஆர்விஎஸ்.

    நம்முடைய அடையாளங்களை நேரமில்லை என்ற பொய்யைச் சொல்லி ஏமாற்றுகிறோம்.

    உங்களின் வார்த்தைகளில் நான் வாழ்ந்த நாட்களை மீட்டெடுக்கிறேன்.

    ReplyDelete
  14. தகவலும் சரி narration -ம் சரி, வெகு நன்று!

    ReplyDelete
  15. @சுந்தர்ஜி
    கருத்துக்கு நன்றிங்கண்ணா! சென்னையில் காலையில் ராமருக்கு ரெண்டு புஷ்பத்தை போட்டுட்டு நீர் மோர் குடிச்சுட்டு வேலைக்கு ஓடவேண்டியதுதான். வேற ஒன்னும் இல்லை. ;-))

    ReplyDelete
  16. @கே. பி. ஜனா...
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அடிக்கடி இந்தப் பக்கம் வந்து போங்க சார். ;-))

    ReplyDelete
  17. Sure. How quick a reply! Thank you. Visit my blog too if u have time to.

    ReplyDelete
  18. //கிராமத்து தேவதை உங்களுக்காக முடிவோடு காத்திருக்கிறாள் /// ஓரு தேவதை எடுத்த முடிவு அடுத்த தேவதைக்கு முடிவாக அமைந்த கதையை முடிவாக படித்துவிட்டேன் .....

    ReplyDelete
  19. @கே. பி. ஜனா...
    I visited your Blog. You have a good collection of posts. ;-)

    ReplyDelete
  20. @பத்மநாபன்
    தன்யனானேன் பத்துஜி! இறுதிப் பகுதி பின்னூட்டத்தில் உங்களுக்கு நன்றி கூறியிருக்கிறேன். இங்கும் ஒரு நன்றி. ;-))

    ReplyDelete
  21. கோடி புண்ணியம்....

    ReplyDelete
  22. நல்லாருக்கு; இது மாதிரி சுவாரஸ்யமான கேரக்டர்களை கதை ஆக்கினால் இன்னும் நல்லது

    ReplyDelete
  23. ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் படித்து பானகமும், நீர் மோரும் எடுத்துண்டாச்சு.

    ReplyDelete
  24. @கோவை2தில்லி
    ஸ்ரீ ராமபிரானின் அருள் உங்களுக்கு கிட்ட என் பிரார்த்தனைகள். நன்றி சகோ. ;-))

    ReplyDelete
  25. @மோகன் குமார்
    எழுதுகிறேன் மோகன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ;-))

    ReplyDelete
  26. @ஸ்ரீராம்.
    ஆமாம். கோடி புண்ணியம்.. ;-)))

    ReplyDelete
  27. நம் இளமை இனிமை காலங்களை உன் அபூர்வ எழுத்தால் திறந்ததற்கு நன்றி
    மன்னார்குடியை ரொம்ப மிஸ் பண்றோம்....... இல்லையா...... வெங்கட் ??
    நாம சின்ன பசங்களாவே இருந்திருக்க கூடாதா?? அட்சரம் பிசகாத , பிழறாத ஸ்ரீராமனின் உரையாடல்கள் ...... கண்ணாடி கோபாலின் மேனரிசங்கள் .........

    ReplyDelete
  28. ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!

    பதிவு, அருமையாக, சுவையாக அதுவும் நகைச்சுவையாக எழுதப்பட்டுள்ளது.
    பாராட்டுக்கள்.

    ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே!

    ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநநே!!

    ReplyDelete
  29. ராஜவம்சத்துல பிறந்திருந்தாலும் எளிமையா
    கொண்டாடப்படுகிற (நீர் மோர்,பானகம்)
    ஆனால் உயர்ந்த வைபவம்.
    இல்லாதப்பட்டவங்களும் கொண்டாட முடியும் இல்லையா
    அதுவும் வெயில் காலத்துக்கேத்தாப்புல ஆகாரம்

    ராமம் பஜே ஷ்யாமம் மனஸா.... :-)

    ReplyDelete
  30. //'வெண்'குழல் ...பிரச்சனைகளை ஊதித் தள்ளுவதற்கு//

    //அந்த பக்திக் கடலில் சிறுதுளியாய் என்னுதும் ஈனஸ்வரத்தில் ஒரு சோனி "ஜெய்"//

    You are rocking RVS.

    ReplyDelete
  31. அண்ணா ராமநவமிய இவ்வளோ ஸ்பெசலா ஆக்கிட்டீங்க! வெல் டன் :)

    ReplyDelete
  32. @A.R.RAJAGOPALAN
    அன்பின் கோப்லி,
    இனிமேல் நினைவுகளை அசை போட மட்டுமே முடியும். என்ன செய்ய... ;-)))

    ReplyDelete
  33. @வை.கோபாலகிருஷ்ணன்
    சார்! மிக்க மகிழ்ச்சி.
    ராம நாம மகிமை நம் எல்லோரையும் காக்கட்டும். ஸ்ரீராமஜெயம். நன்றி சார்! ;-))

    ReplyDelete
  34. @raji
    ஆமாம். எளிமையின் திருவுருவம் ராமன். மக்களை நல்வழிப்படுத்தும் தெய்வம். கருத்துக்கு நன்றி ராஜி. ;-))

    ReplyDelete
  35. @! சிவகுமார் !

    Thank you Siva! Ponnar-Sankar review is very good. ;-))

    ReplyDelete
  36. @Balaji saravana
    மிக்க நன்றி பாலாஜி. தொடர் வாசிப்பிற்கும் ஒரு நன்றி. ;-))

    ReplyDelete
  37. அடேயப்பா ராம நவமி உற்சவத்தை நேரில் பார்த்தார் போலிருந்தது. சுவையான வர்ணனைகள். என்ன சொல்லுங்கள் அனுபவங்களை எழுதும்போது, அதன் அழகே தனிதான்.

    ReplyDelete
  38. நல்ல பகிர்வு. நீர்மோர் - பானகம் குடித்து ராமனை நினைத்தாயிற்று! நல்ல பகிர்வு மன்னை மைனரே.

    ReplyDelete
  39. பஜனை மடம்,பிள்ளையார் கோவில்,ஆத்தங்கரை,அம்புஜா மாமியாத்து திண்ணை,.... இது எல்லாம் எப்போதுமே மறக்கமுடியாத அனுபவங்கள் தான் அண்ணா!..:) ஏகப்பட்ட பத்தினி விரதராய் இல்லாமல், ராமர் மாதிரியே ஏகபத்னி விரதராய் இருக்கும் மன்னார் குடி மைனருக்கு ராம நவமி வாழ்த்துக்கள்!...:)

    ReplyDelete
  40. என்ன ஒரு ஃப்ளோவில் அமைந்த எழுத்து..

    அற்புதமான நடை..வாழ்த்துக்கள்..

    சிற்சில இடங்களில் புன்னகையை மீறிய வாய்விட்டுச் சிரித்தலைத் தவிர்க்க இயலவில்லை.

    Feel Good பதிவு.

    ReplyDelete
  41. @வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
    கரெக்ட்டுதான் மேடம். என்னுடைய மன்னார்குடி நாட்கள் ஆயிரம் பதிவுகள் பிடிக்கும். எனக்கும் அதை எழுதப் பிடிக்கும். எவ்ளோ பேர் படிப்பார்கள்?... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ;-))

    ReplyDelete
  42. @வெங்கட் நாகராஜ்
    நன்றி தலைநகரமே!
    ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்! ;-))

    ReplyDelete
  43. @தக்குடு
    //ஏகப்பட்ட பத்தினி விரதராய் இல்லாமல், ராமர் மாதிரியே ஏகபத்னி விரதராய் இருக்கும் மன்னார் குடி மைனருக்கு ராம நவமி வாழ்த்துக்கள்!...:)//
    இந்த குசும்பு தானே வேண்டாங்கறது.....

    உங்களோட காதுக்கு மட்டும் ரகசியமா சொல்றேன்..
    போன மாசம் ஆத்துக்காரியோட கபாலி கோயில் போயிருந்தப்ப நாலஞ்சு மாமி வந்து சட்டுன்னு என் கால்ல விழுந்துட்டா.. என்னன்னு கேட்ட.. சாட்சாத் ராமச்சந்திர மூர்த்தி மாதிரியே இருக்கேனாம்.. அதான் கால்ல விழுந்துட்டாளாம்.. சந்தேகம் இருப்பின் என் அகமுடையாளிடம் கேட்டு விளக்கம் பெறலாம்..
    ரைட்.. ;-)))

    ReplyDelete
  44. @அறிவன்#11802717200764379909
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சார்! அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க... நன்றி. ;-)

    ReplyDelete
  45. //பில் வச்சுண்டிருக்கிற எனக்கா தரேள்! கையில வில் வச்சுண்டிருக்கிற பகவானுக்குன்னா தரேள்//
    வாவ்... சூப்பர்...:)))

    ராமநவமி ஸ்பெஷல் போஸ்ட் சூப்பர்...

    ReplyDelete
  46. நீங்க! ராமசந்திரமூர்த்தி!! நம்பிட்டோம்!..:P 4-5 மாமி உங்க கால்ல விழுந்துட்டானு சொன்ன உடனே எனக்கு ராமர் ஞாபகம் வரலை அவரோட அப்பா ஞாபகம் தான் வந்தது..:)

    ReplyDelete
  47. 50...
    எந்த விழாக்களில் பங்கு எடுக்காத குறை பதிவை படித்ததும் நிறைவேறியது
    ஸ்ரீராம ஜெயம்...இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நம்ம ஊரு மைனருக்கு..

    ReplyDelete
  48. ராம நவமி வர்ணனை ஆஹா.. நமக்குக் கிடைத்தது இந்த நாள் பசங்களுக்கு இல்லை..

    ReplyDelete
  49. @அப்பாவி தங்கமணி
    நன்றிங்க அப்பாவி! ஜில்லுன்னு ஒரு கமெண்ட்டு.. ;-))

    ReplyDelete
  50. @தக்குடு
    வெறி(ரி) குட் தக்குடு.. இப்படித்தான் இருக்கணும்.. ;-)))

    ReplyDelete
  51. @siva
    அரை செஞ்சுரி கமேன்ட்டிற்கு இந்தப் பதிவை இட்டுச் சென்ற சிவாவிற்கு,
    புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி. ஸ்ரீராமனுக்கு ஜெயம். ;-))

    ReplyDelete
  52. @ரிஷபன்
    நிஜம்தான் ரிஷபன் சார்! கம்ப்யூட்டர் மற்றும் டி.வி பொட்டி முன்பு உட்கார்ந்து நிறைய இழக்கிறார்கள். கருத்துக்கு நன்றி... ;-)))

    ReplyDelete
  53. நானும் மன்னார்குடி தான்.
    உங்கள் மன்னார்குடி டேஸ் ஃபுல்லா படிக்கனும்.
    Thanks for your posts.

    ReplyDelete
  54. எப்படி இந்த வலைப்பக்கத்தை இத்தனை நாள் கவனிக்கவில்லை என்று தெரியவில்லை. அது என்னுடைய அதிர்ஷ்டக் குறைவுதான். அற்புதமான கட்டுரை. இலாவகமான, சரளமான எழுத்து நடை வாழ்த்துகள் RVS!. இந்தக் கட்டுரை நான் சிறுவனாய் இருந்து அந்த இராமர் கோவில் வாசலில் நின்று கவனித்துக் கொண்டிருந்ததைப் போல் ஒரு உணர்வை தோற்றுவித்தது. மற்ற்வைகளையும் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  55. @வெங்கட்ராமன்
    ஊர்க்காரருக்கு ஒரு சலாம். மிக்க மகிழ்ச்சி. ;-))

    ReplyDelete
  56. @நல்லதந்தி
    உங்கள் கருத்து எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது. உங்கள் வாழ்த்துக்கு நன்றி. அடிக்கடி இந்தப் பக்கம் வாருங்கள் நண்பரே! ;-))

    ReplyDelete
  57. லேட்டா வந்தாலும் ப்ரசாதம் கிடைக்கும்தானே :-)

    நேரில் கலந்துகொண்ட ஒரு உணர்வு..

    ReplyDelete
  58. @அமைதிச்சாரல்
    நிச்சயமாக பிரசாதம் உண்டு. அந்த ரகுவம்ச வீரனுக்கு பானகமும் நீர் மோரும்தானே நெய்வேத்தியம். உங்களுக்கும் உண்டு. பாராட்டுக்கு மிக்க நன்றி. ;-))

    ReplyDelete