Tuesday, May 31, 2011

மன்னார்குடி டேஸ் - கீழப்பாலம்


ஒன்னாம் நம்பர் புள்ளத்தாச்சி டவுன் பஸ் பாலத்தில் எதிர்பட்டால் ஏழாம் நம்பர் பெருகவாழ்ந்தான் பஸ் மரியாதையாக ஓரங்கட்டி நின்று வழிவிட்டு பின்னர் பயணத்தை தொடரச் சொல்லும் கண்டிப்பு மிகுந்த பாலம் கீழப்பாலம். பெரிய வாகனம் வருவது தெரிந்தும் அவசரக்குடுக்கையாக சைக்கிள் ஓட்டி பாலத்தின் மதில் சுவற்றோடு பல்லி போல சைக்கிளோடு ஒட்டிக்கொண்டு "போ..போ.." என்று கை காட்டி பஸ்சுக்கு வழிவிடும் அதி புத்திசாலி பிரகிருதிகளும் உண்டு. கொஞ்சம் வயிறு புடைத்த லாரிகள் தடதடத்து கடந்து போகும் போது பாலத்திற்கு குளிர் ஜுரம் கண்டது போல ஒரு சின்ன உதறல் எடுக்கும். பாலத்தின் இக்கரையில் அரசினர் தொடக்கப்பள்ளி. அதன் வாசலில் கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக என்று சகல கட்சிக் கொடிகளும் அரசியல் வாசத்தோடு புழுதிக் காற்றில் பறந்துகொண்டிருக்கும். கொடிக்கம்பத்துக்கு வலப்புறமாக நேர் எதிரே மணி டீக்கடை. அவர் ஒரு தீதிமுக. தீவிர திமுக அபிமானி. டீ பாய்லர் பின்னால் வெந்நீர்ப் புகை ஆவிகளுக்கு நடுவில் கலைஞர் மஞ்சள் துண்டு இல்லாமல் வசீகரப் புன்னகையுடன் படத்தில் இருப்பார்.

மாரியம்மன் கோவில் திருவிழாவிழாவின் போது மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்துகளுக்கு நாலு வீல் மட்டும் நுழையும் ஒரு சந்து விட்டு ரோட்டில் வெள்ளை வேஷ்டி கட்டி திரைப்படம் போடும் இடம் கீழப்பாலத்தை தொட்டடுத்து ஊர் எல்லையில் இருக்கும் டி.டி.பி ரோடு. நான் ஜனித்த இடம். இப்போதும் "அம்ம்ம்ம்மா.. அப்ப்ப்ப்ப்பா... அனைத்தும் வந்துவிட்டது.. அனைத்தும் வந்துவிட்டது..." என்றும் "வித்யாபதி.. மகனே வித்யாபதி" என்று நாகையாவும் சிவாஜியும் உச்சிமோந்து கட்டியணைத்து பரசவசப்பட்ட சரஸ்வதி சபதம் காட்சியை வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டில் போட்டு முதுகில் கயிறு குறுகுறுக்க படுத்துக்கொண்டு பார்த்தது கருப்பு வெள்ளையில் என் நினைவுகளில் ஓடுகிறது. இரண்டு நாட்களாக மன்னைக்குள் சென்று வரும் பஸ்களை பலவந்தமாக நிறுத்தி கை நோக ஒரு தகர டப்பா உண்டியல் குலுக்கி வசூலித்ததை வைத்து ஆத்தாளுக்கு கஞ்சி காய்ச்சி ஊர் மக்களுக்கு ஊற்றுவார்கள். ருசியோ ருசி!

நான் மண் தரையில் தவழ்ந்த இடம் கீழப்பாலம். கைகால் முளைத்து ஓடியாடி வளர்ந்த இடம் மேலப்பாலம்(ஹரித்ராநதி). மன்னையின் இரு முனைகளையும் இரு வீட்டால் இருக்கக் கட்டி முடிச்சு போட்டவன் நான். லக்ஷ்மியும் கண்ணுக்குட்டிகளுமாக ஒரு ஆறு பேர் வீட்டுவாசலில் ஆஸ்பெஸ்டாஸ் ஷெட் போட்ட ஹாலில் புல்லுக்கட்டு வைக்கோல் தின்று எங்களுடன் சுக ஜீவனம் நடத்தி வந்தார்கள். "ம்மா..." என்று அடிவயிற்றிலிருந்து என் அம்மா போகும்போதும் வரும்போதும் மணி ஒலிக்க தலையாட்டி வாஞ்சையுடன் கூப்பிடுவார்கள். சிகப்பு லக்ஷ்மிக்கு கருப்பு லக்ஷ்மி நெற்றி நடுவில் வெள்ளை பொட்டோடு பிறந்து எங்களை அளவில்லா சந்தோஷத்தில் ஆழ்த்தினாள்.  "ரொம்ப ராசி!" என்று பூரித்துப் போனாள் என் தாய்!. அன்று "தெருவிற்கே சீம்பால் ஃப்ரீ" என்று மகாராணியாய் இலவசம் அறிவித்தாள்.

என் அம்மா தாடியும் கொம்பும் வளர்ந்த ஒரு முரட்டு ஆடும் வளர்த்தாள். தன் உடலில் எழும் நாற்றத்தையும் மீறி அதன் துறுதுறுப்பால்  நம்மை வசீகரிக்கும் அந்த துடிப்பான கிடா. ஒரே சமயத்தில் கொல்லையில் "ம்மே"வும் வாசலில் "ம்மா"வும் சேர்ந்திசையாக இசைத்த காலங்கள் அவை. கதவை திறந்து போட்டுவிட்டு கீழப்பாலம் தாண்டி பாரி மளிகை சென்று ஓல்ட் சிந்தால் சோப்பு வாங்கி வரலாம். ஒரு பயல் வீட்டினுள் நுழைய முடியாது. தெருவே தன்னை காவல் காத்துக் கொண்டது. தெருவின் உண்மையான பலம் அறியாமல் திருட வந்த பலே திருடர் ஒருவர் மாட்டிகொண்டபின் கரண்ட்டு கம்பத்தில் கட்டி வைத்து விளாசினார்கள்.


ஒற்றை நாடி சரீரமாய் தோல் சுருங்கி வாயில் பீடிப் புகையோடும், தோளில் பூணலோடும் பக்கத்து அய்யனார் பட்டறை பெஞ்சில் காலாட்டி உட்கார்ந்திருப்பார் நாகப்ப ஆசாரி. பட்டை நிமிர்த்தும் பட்டறைக்கு அவர் தான் உரிமையாளர். எந்நேரமும் வேனோ, அம்பாசிடர் காரோ, ட்ராக்டரோ தன் அடிப்பாகத்தை அவிழ்த்துப் போட்டு பட்டையை கழற்றி அவர்கள் கையில் கொடுத்துவிட்டு தேமேன்னு நின்றுகொண்டிருக்கும். ஹரித்ராநதி போன்று ஒன்பது மணிக்கு ஊர் அடங்காமல் பன்னிரண்டு ஒருமணிவரை கொட்டக்கொட்ட விழித்திருக்கும். நாகப்ப ஆசாரியின் தலைச்சன் பிள்ளை பெத்தபெருமாள் அண்ணன் முதன் முதலில் துபாய் சென்று கை நிறைய சம்பாதித்து கிழங்கு கிழங்காக கையிலும் கழுத்திலும் தங்க நகை அணிந்து ஊர்வலம் வந்தார். கரிய மேனியில் தங்கம் எடுப்பாக தெரிந்தது. தெருவில் உதவாக்கரையாக ஊர்சுற்றித் திரிந்த எல்லோரையும் தங்கச் சங்கிலி காண்பித்து வெளிநாட்டுக்கு விரட்டினார்.

பாக்கியம் ஆத்தா கடையில் தேன்மிட்டாய் அமிர்தமாய் இருக்கும். ஒரு கூரைக் கொட்டாயில் முன்புறம் கடையும், பின்புறம் ஒரு ஓலைப்பாய் விரித்த வீடுமாய் ஜீவனம் நடத்தி வந்தது. "ராசா... கார்த்தி! நீங்க வேலைக்கு போயி இந்த ஆத்தாவுக்கு ஒரு சீலை எடுத்துக் கொடுப்பீங்களா.. மவராசா..." என்று கன்னம் இரண்டையும் வழித்து திருஷ்டி விரல் சொடுக்கி ஆசையாய் கேட்டுவிட்டு நான் பள்ளிப் படிப்பு முடிக்கும் முன்னரே இறைவனடி சேர்ந்துவிட்டது. "அய்யனார் குட்டை தாண்டி தெனமும் ராத்திரி பன்னெண்டு மணிக்கு மல்லிப்பூ வாசமும், ஜல்ஜல்ன்னு சலங்க சத்தமும் கேக்குது. மோகினின்னு தலையாரி வீட்ல பேசிக்கிறாங்க.. பத்திரமா இரும்மா.." என்று பளயதுக்கு தொட்டுக்க அம்பது காசு எம்ப்ளிச்சை ஊறுகாய் வாங்க கடைக்கு வரும் பெண்மணிகளுக்கு அட்வைஸ் மழை பொழிந்த ஆத்தா தன் எழுபது வயது அல்பாயுசில் உயிர்நீத்தது.

சசி, சின்னாச்சி, திருநாவுக்கரசு, பக்கிரி, கட்டை கார்த்தி என்று ஒரு பெரிய பட்டாளமே உண்டு. மாரி மட்டும் குடும்ப சுமை தாங்குவதற்கு சிறுவயதிலேயே லோடு லாரிக்கு கிளீனராக போய் சேர்ந்தான். கை ரெண்டும் கொட்டி "பிரமாணப் பிள்ளை.. பிராமணப் பிள்ளை.." என்று நான்கு முறை பாடிவிட்டு, "பி.ரா.ம.ண. பி.ள்..ளை" என்று எழுத்துக்கு எழுத்து நிறுத்தி பாடி முடித்து அழகு காண்பிக்கும் மாரி வயதில் பெரிதானாலும் இன்னமும் எனக்கு உயிர் நண்பன். பக்கிரி ஒரு முறை சிங்கப்பூர் சென்று வந்துவிட்டான். கழுத்தில் ஸ்வர்ணம் மினுக்கிறது. சின்னாச்சி சொந்தமாக லாரி வாங்கிவிட்டான். முதலாளி ஆனதற்கு அடையாளமாக தொந்தியும் தொப்பையுமாக பெருத்துவிட்டான். சசி இன்னமும் அய்யனார் பட்டறையில் தன் அப்பாவுக்கு அப்புறம் பட்டை நிமிர்த்துகிறான். திருநாவு சென்னையில் ஒரு டி.வி சானலுக்கு கார் ஒட்டுகிறானாம். நண்பர்கள் அனைவரும் நலம்.

சுப்பையண்ணன் போடும் வெல்லப்பாகு டீ குடிக்காதவர்கள் நாக்கு இருந்தும் வீண். சுப்பையண்ணன் நிர்கதியாக இருந்தபோது எங்கள் வீட்டு வாசல் மாட்டுக்கொட்டாயை கொஞ்சம் சுருக்கி அவருக்கு கடை போட இடம் கொடுத்த மன்னார்குடி வள்ளல் என் அம்மா. மேலப்பாலத்தில் இருந்து கீழப்பாலம் செல்லும் போதெல்லாம் காசு கொடுத்து வெல்லப்பாகு டீ குடித்திருக்கிறேன். இம்முறை மன்னை சென்றபோது சுப்பையண்ணனை பார்த்தேன். டீக் கடை மாரியம்மன் கோவில் குட்டையருகே ஷிப்ட் ஆகியிருந்தது. கொட்டகை குறுகியிருந்தது. முதுகு கூன் விழுந்து, தலை நரைத்து, நடை தளர்ந்து மூப்பு தட்டியிருந்தார். ஆனாலும் ரொம்ப சௌக்கியமாக சுருட்டு குடித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் சென்றதும் இருக்க அணைத்து "கார்த்தி! எப்படியிருக்கே..." என்று சுப்பையண்ணனின் உதடுகள் சிரித்தாலும் கண் தாரைதாரையாய் கண்ணீர் சொரிந்தது. சட்டையில்லாமல் கட்டிக்கொண்ட அவர் மீதிருந்து எனக்கு வெல்லப்பாகு டீ வாடை அடித்தது.


பிறந்த இடமும், கள்ளம் கபடமற்ற வெள்ளந்தி மனிதர்களின் நினைவுகளும் எப்போதும் அழியாத சுவடுகளாய் தீர்க்கமாக நெஞ்சில் நிறைந்திருக்கிறது.

படக் குறிப்புகள்: முதல் படம் கீழப்பாலம் அல்ல. மன்னை-திருவாரூர் சாலையில் கோரையாற்றாங் கரையில் அமைந்துள்ள ஒரு பாலம். இது சற்றேறக்குறைய கீழப்பாலத்தை ஒத்து இருப்பதால் http://balajiworld.blogspot.com/ என்ற முகவரியில் இருந்து எடுத்தேன். இரண்டாவதாக இருப்பது இப்போது அகலம் பெரிதான கீழப் பாலத்தை கூகிள் மேப்பில் இருந்து எடுத்தேன்.

பின் குறிப்பு: மாரியம்மன் கோயில் திருவிழா மிகவும் விமரிசையாக நடக்கும். அது பற்றி தனி பதிவாக எழுதுகிறேன்.


-

46 comments:

  1. மன்னார்குடியின் நதியில் பாலம் தொட்டு ஓடும் நீரின் படம் அழகோ அழகு.. ஹரித்ரா நதி என்று நீங்கள் திரும்ப திரும்ப எழுதுவதை படிக்கும் பொழுது தமிழ்நாட்டில் இருந்தும் மன்னார்குடியை இன்னமும் பார்க்கவில்லையே எனும் ஏக்கத்தை வரவைக்கிறது...

    அழகான நட்பு வட்டமும் அவர்களின் நெகிழ்ச்சியான வரவேற்பையும் படிக்கும்பொழுது நமக்கும் பால்ய நட்பை பார்க்கும் ஆவல் கூடுகிறது....

    ReplyDelete
  2. @பத்மநாபன்
    வாங்க பாஸு.... நா மன்னார்குடிக்கு அழைச்சுக்கிட்டு போறேன்! அது மன்னை கீ.பாலம் படம் இல்லை.. கிட்டத்தட்ட அதுபோலத்தான் இருக்கும். கருத்துக்கு நன்றி பத்துஜி! ;-))

    ReplyDelete
  3. அவசியம் மன்னார்குடி போகவேண்டும் என்ற ஆசை வந்து விட்டது எனக்கும்.

    தேன்மிட்டாய்! மறந்தே போன மகத்துவம்!

    ReplyDelete
  4. படம் பார்த்த உடன் கொஞ்சம் ஷாக் இந்த பாலமா? நீங்கள் சொன்னது நம்ம ஊரை எவ்ளோ அழகாக நினைவில் கொண்டு
    ம் மிக சந்தோசமாய் இருக்கிறது அண்ணா.விரைவில் உங்களை சந்திக்கிறேன்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  5. பாமினி ஆறுதான் ஹரிதுரா நதியா?

    ReplyDelete
  6. பால்ய நட்பை மறக்காத உங்கள் மரகத உள்ளம் வாழ்க
    ஒரு ஒரு வரிகளும் உச்சு கொட்ட வைக்கின்றன

    ReplyDelete
  7. அழகிய நினைவோடை......கார்த்தி...?

    ReplyDelete
  8. பால்ய கால சிநேகிதம் மட்டும் என்றும் எந்த வயதிலும்,எல்லோருக்கும் சுகம்தரும் ஒன்றுதான். அந்த நட்பு வட்டத்தில் வரும் உரிமையும், நேசமும் ,துளியும் தன் நலம் அற்ற உள்ளமும் அனைவருக்கும் வந்துவிடும்.நீங்காத நினைவுகள் மைனரே!

    ReplyDelete
  9. உங்கள் வீட்டில் ஆடு வளர்த்தார்கள் என்பது அபூர்வமான ,வேடிக்கையான செய்திதான்.

    ReplyDelete
  10. நம் ஊர் நினைவுகள் என்றுமே இனியவைதான் இல்லையா மைனரே. நாங்களும் ரசிக்க ஏதுவாய் தொடருங்கள் உங்கள் மன்னை நினைவுகளை...

    ReplyDelete
  11. @அப்பாதுரை
    ஒரு குரூப்பா போகலாம் வாங்க தல! ஊரை சுற்றி ஆறும்... ஊருக்குள்ளே ஓராயிரம் குளங்களும்...
    தேன் மிட்டாய் மாதிரி "பால் பன்" என்று இன்னொன்று விற்பார்கள். ;-)))

    ReplyDelete
  12. @siva
    சந்திக்கலாம் சிவா! நன்றி. ;-))

    ReplyDelete
  13. @siva
    இல்லை..இல்லை.. தெப்பக்குளம்.. பெரியகுளம் என்று ஒன்று இருக்கும்...அதுதான் ஹரித்ராநதி.. கும்பகோணம் போகும் பாதையில் இருக்கும்... ;-))

    ReplyDelete
  14. @siva
    ரசித்ததற்கு நன்றி சிவா! ;-))

    ReplyDelete
  15. @ஸ்ரீராம்.
    நன்றி.. என் அம்மா ஒரு முருக பக்தை. அவள் கூப்பிடும் பெயர் கார்த்தி. ஆகையால் அந்தத் தெருவில் கார்த்தி நான். ;-))

    ReplyDelete
  16. அருமைய்யா... பதிவும் லே அவுட்டும் . குறிப்பா முதல் பாரா அப்படியே காட்சியை கண் முன் கொண்டு வந்தது

    ReplyDelete
  17. @கக்கு - மாணிக்கம்
    நன்றி மாணிக்கம். அந்தத் தெருவில் "அய்யிரு வீடு" நாங்க மட்டும்தான். முதன் முதலில் டி.வி வாங்கினோம். எல்லோரும் எங்கள் வீட்டில் தான் டி.வி. பார்ப்பார்கள். எப்போதும் தியேட்டர் போல ஒரு கூட்டம் இருக்கும். இனிமையாக பழகினார்கள். ;-))

    ReplyDelete
  18. @கக்கு - மாணிக்கம்
    ஹா.ஹ்ஹா.. ஒரு கோழி கூட கொஞ்ச நாள் வளர்த்தார்கள். கோழிக்கூண்டு வாங்கி.. பக்.பக்..பக். என்று கூப்பிட்டுக்கொண்டே பின்னால் ஓடி... நிறைய ரகளை செய்வோம். இன்னும் எழுதினால் ரொம்ப நீள் பதிவாக அமைந்துவிடும். ஆகையால் நிறுத்திக்கொண்டேன். நன்றி மாணிக்கம். ;-))

    ReplyDelete
  19. @வெங்கட் நாகராஜ்
    நன்றி தல...
    //நாங்களும் ரசிக்க ஏதுவாய் தொடருங்கள் உங்கள் மன்னை நினைவுகளை...//
    ஏதும் அறுத்துட்டேனா! ;-))

    ReplyDelete
  20. //நாங்களும் ரசிக்க ஏதுவாய் தொடருங்கள் உங்கள் மன்னை நினைவுகளை...//
    ஏதும் அறுத்துட்டேனா! ;-))

    இல்லை மைனரே... ரசிப்பதால் தானே தொடரச் சொல்கிறேன்...

    ReplyDelete
  21. @மோகன் குமார்
    மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி மோகன். ;-))

    ReplyDelete
  22. @வெங்கட் நாகராஜ்
    நன்றி..நன்றி... ஒரு தடவை உறுதி செய்து கொண்டேன்... ஹி..ஹி... ;-))

    ReplyDelete
  23. கண்டிப்பு மிகுந்த பாலம் கீழப்பாலம்.//

    மலரும் நினைவுகளுக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் ஊர் நரசிம்மர் என் பதிவில் காட்சிதருகிறாரே! தரிசித்துவிட்டீர்களா??

    ReplyDelete
  24. மன்னார்குடி டேஸ் சூப்பர்..

    ReplyDelete
  25. @இராஜராஜேஸ்வரி
    நன்றிங்க...
    தங்கள் பதிவில் நரசிம்மரை தரிசித்தேன். ;-)

    ReplyDelete
  26. @அமுதா கிருஷ்ணா
    வாழ்த்துக்கு நன்றிங்க... ;-))

    ReplyDelete
  27. "ரொம்ப ராசி!" என்று பூரித்துப் போனாள் என் தாய்!. அன்று "தெருவிற்கே சீம்பால் ஃப்ரீ" என்று மகாராணியாய் இலவசம் அறிவித்தாள்.


    அது என்ன மஹாராணியாய், அத்தை நிஜமாவே மகாராணிதான்
    நல்ல பதிவு வெங்கட் ,நான் அறியாத உன் இன்னொரு பக்கம்

    ReplyDelete
  28. விறுவிறுப்பான பதிவு.. அதுவும் ஹரித்ரா நதி.. மன்னார்குடி என்றதும் சேரங்குளத்திலிருந்து நைட் ஷோ பார்க்க சைக்கிளில் வந்து, நள்ளிரவில் கும்மிருட்டில் முன்னால் போன சைக்கிளைப் பின் தொடர்ந்து சுடுகாடு வழியே திரும்பிப்போன ஞாபகங்கள் மேலெழும்பின..

    ReplyDelete
  29. @A.R.ராஜகோபாலன்
    நன்றி கோப்லி. ;-)

    ReplyDelete
  30. @ரிஷபன்
    சார்! நீங்க சேரங்குளமா? அப்ப நீங்களும் நம்ம ஏரியா..... வெரிகுட். அந்த சுடுகாடு தாண்டி ஒரு சைக்கிள் போற அளவுக்கு ஒரு இரும்பு பாலம் வருமே... அதைச் சொல்றீங்களா... சின்ன வயசில பயமா இருக்கும்..
    கருத்துக்கு நன்றி சார். ;-)

    ReplyDelete
  31. @ரவிச்சந்திரன்
    Thank you. ;-)

    ReplyDelete
  32. ஆர்.வீ.எஸ்! தாமதமாய் வந்துவிட்டேனோ? அந்த நாள் ஞாபகம் என்றுமே சுகம்.. அந்த சுகத்தின் ஊடே கடந்து போன அந்த மீளாக் காலம் பற்றிய சோகம்.. நல்ல பதிவு ஆர்.வீ.எஸ்.. வாரும் ஒரு தரம் மன்னார்குடி போகலாம்.

    அந்த ஆட்டை என்ன செய்தீர் மச்சினரே?
    (cc to கக்கு மாணிக்கம் )

    ReplyDelete
  33. Good one RVSM.. You are keeping the memories of Mannai alive. After all thats my dad's home town that I barely lived for a couple of (unforgettable) years. What about the cricket tournaments between first street and the rest?

    ReplyDelete
  34. அடடே... உங்க ஆத்தா
    ஆடு வளத்தா(ர்)
    கோழி வளத்தா(ர்)
    ஹ்ம்ம்.. உன்னையும் வளத்தா(ர்)...

    -- சும்மா..

    ReplyDelete
  35. இப்படி மன்னர்குடியைப் பற்றி எழுதி போகணும்னு ஆசையைத் தூண்டுறீங்களே சார் ? நான் மன்னர்குடிக்குப் போயி மூணு வருஷம் ஆச்சு.பாலத்தையும் தண்ணீரையும் பார்க்கும்போது போகணும்னு ஆசையா இருக்கு.

    ReplyDelete
  36. @மோகன்ஜி
    மன்னார்குடிக்கு நாம எல்லோரும் சேர்ந்து போகலாம் அண்ணா!
    அந்த ஆட்டை ஃப்ரீயா இல்லாதப்பட்ட ஒருவருக்கு கொடுத்துவிட்டோம் என்ற நினைவு. ;-))
    (சிசி: கக்கு மாணிக்கம்.)

    ReplyDelete
  37. @Krish Jayaraman
    Thanks Sekar. Have not seen you for many days. Busy? ;-)))

    ReplyDelete
  38. @ஜிஜி
    போயிட்டு வாங்க சகோ. இந்தியாவுல தானே இருக்கீங்க? சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா? ;-))

    ReplyDelete
  39. என்ன சார்வாள், இவ்வளவு சூப்பரா இருக்கு? எப்ப நாம மன்னார்குடி போலாம்?

    ReplyDelete
  40. @”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
    போலாம் சார்! எப்பன்னு சொல்லுங்க... ;-))
    பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  41. \\பிறந்த இடமும், கள்ளம் கபடமற்ற வெள்ளந்தி மனிதர்களின் நினைவுகளும் எப்போதும் அழியாத சுவடுகளாய் தீர்க்கமாக நெஞ்சில் நிறைந்திருக்கிறது.///

    --ஆமாம் இந்த நினைவுகளால் தான் சொச்ச காலத்தையும் ஓட்ட வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  42. RVS என் " வாராதோ அந்த நாட்கள்" நீங்கள் படிக்கவில்லையே ?

    ReplyDelete
  43. @சிவகுமாரன்
    கருத்துக்கு நன்றி. உங்களோடத்தை படிக்கிறேன் தலைவா.... ;-))

    ReplyDelete
  44. உங்கள் எழுத்து மன்னார்குடியை காண வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியுள்ளது.

    ReplyDelete
  45. @கோவை2தில்லி
    நன்றி சகோ. ;-))

    ReplyDelete