தேசப்பிதா காந்தியடிகள் மேற்படிப்பிற்கு லண்டனுக்கு சென்றது போல என் பிதா நான் மென்மேலும் படித்துச் சிறக்க தேசிய மேல்நிலைப் பள்ளியில் முதுகில் புத்தக மூட்டையும் நீல டிராயர் வெள்ளை சொக்காய் சீருடை சகிதம் ஆறாம் வகுப்பில் சேர்த்து விட்டார். அது ஒரு நூற்றாண்டு கால பெருமை வாய்ந்த ஸ்கூல். நிறைய வகுப்பறைகளுடன் வாசலில் ரங்கன் நினைவு பேஸ்கட் பால் கோர்ட்டுடன் பெரிய ஸ்கூல். வீணை ஏந்தி வெள்ளைத்தாமரையில் சரஸ்வதி ஸ்கூல் உச்சியில் வெயில் மழை பாராது கருணையோடு வீற்றிருப்பாள். ஐந்தாம் வகுப்பு வரை சின்ன கான்வென்டில் தமிழ் வழிக் கல்வியில் ஆனா ஆவன்னா என்று படித்து தீந்தமிழில் வளர்ந்தவனை ஆறாவதில் தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீசு மீடியம் படிக்கச் சொன்னார்கள். ஐந்தில் வராதது ஆறில் வருமா?
ஹரித்ராநதியில் இருந்து தே.மே.பள்ளி நிச்சயம் இரண்டு கிலோ மீட்டர் இருக்கும். காலார தேரடி, பெரிய போஸ்ட் ஆபிஸ், கிக்கான குஷ்பூ ஒயின்ஸ், புள்ளித்தாள்* விற்கும் சோழன் மளிகை, வாசலில் பொம்மைக்கு அலங்கோலமாக சேலைக்கட்டி வைத்திருக்கும் லக்ஷ்மிராம்ஸ் சில்க் ஹௌஸ், பிஸ்கட் மற்றும் கேக் நறுமணம் கமழும் ஜீவா பேக்கரி, அரிசிக்கடை சந்து ஏற்றம், முதலியாரின் நாட்டு மருந்துக் கடை, அந்த 'மருந்து' விற்கும் கலா ஒயின்ஸ், யுவராஜின் டில்லி ஸ்வீட்ஸ் திரும்பியதும் அழகப்பா தாளகம், ஒத்தைத் தெரு ஆனந்த விநாயகரை மொத்த குத்தகை எடுத்திருக்கும் ஆர்.ஆர். ட்ராவல்ஸ், வெண்ணைத்தாழி மண்டபம் என்று கடைத்தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்தால் இருபது நிமிஷத்தில் ஸ்கூலை அடையலாம். ஏற்கனவே பள்ளிப் பிராயத்திலே என்ற பதிவில் பள்ளிப் போக்குவரத்து பற்றி நிறைய எழுதிவிட்டேன். இம்முறை நான் கல்விச் செல்வம் பெற்ற ஆசிரியர்கள் பற்றியது.
ஆறாம் வகுப்பில் தாண்டான் சார் தான் வகுப்பாசிரியர். முதன் முறையாக கையில் பிரம்போடு நான் பார்த்த ஆசிரியர். ஆளைப் பார்த்தால் பரமசாதுவாக இருப்பார். குளிருக்கு தோதாக காதை மறைக்கும் ஸ்டெப் கட்டிங். கையில் இருக்கும் பிரம்பு சற்றே வீங்கினார்ப் போன தேகம். மணிக்கட்டிலிருந்து நழுவி எந்நேரமும் கீழே விழும் அபாயத்துடன் தொங்கும் கைக்கடிகாரம். அவருக்கு உடம்பு முழுவதும் கண்டிப்பு ரத்தம் கன்னாபின்னாவென்று ஓடியது. ஒரு கையடக்க பால் கணக்கு நோட்டு போட்டு நாங்கள் தினமும் வீட்டுப்பாடம் படித்ததை அதில் எழுதி வீட்டாட்களிடம் கையொப்பம் பெற்று வரவேண்டும். தினமும் காலையில் முதல் முப்பது நிமிடங்கள் நல்ல ராகு காலம். சங்கர ஹாலில் மரக்கட்டை கால் கொண்ட இரும்பு தடுப்பு போட்டு மூன்று வகுப்புகள் சத்தமாக நடக்கும். இரண்டாம் தடுப்பின் அறிவியல் முதல் தடுப்பின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து அறிவரலாறாக காதில் விழும். சான்ட்விச் கோர்ஸ். முதல் மறைவுத் தடுப்பில் தரையில் ஆறாவது 'ஏ' பிரிவு ஆங்கில மீடியம். அப்புறம் 'பி'. 'ஸி' என்று எங்களோடு இணையான பிரிவுகள்.
நடுஹாலில் தோளில் சார்த்திய தண்டத்துடன் நாங்கள் படிப்பதை கவனித்துக் கொண்டிருந்த ஆதிசங்கரர் ஒரு தடவை கூட தாண்டான் சாரிடம் இருந்த தண்டத்திடம் இருந்து என்னைக் காப்பாற்றவில்லை. கம்பை சுழற்றி அடிக்கும் போது தொழில்முறை சிலம்பாட்டகாரர்கள் எல்லாம் அவரிடம் பிச்சை எடுக்கவேண்டும். காற்றில் "விர்..விர்.." என்ற ஓசையுடன் கணுக்கால், உள்ளங்கை, தோள்பட்டை என்று சகல இடங்களிலும் விளாசி "சாந்து பொட்டும் சந்தன பொட்டும்" தேவர் மகன் ஸ்டைலில் அசால்ட்டாக வைப்பார். அவரால் தான் புஸ்தகத்தை எடுத்து நித்யமும் படிக்கவேண்டும் என்ற அடிப்படை பள்ளி ஒழுங்கை கற்றுக்கொண்டேன். வாழ்க அவரது சிலம்பமும், கண்டிப்பும்!
ஏழாம் வகுப்பில் இங்கே சொல்லிக்கொள்ளும்படி வரலாறு படைக்கும் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. சங்கர ஹால் கடந்து போனால் மூன்றாம் கட்டு ஒன்று எங்கள் பள்ளிக்கு உண்டு. ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு கீழே மூளைக்குச் சூடு வைத்து எட்டாம் வகுப்பு பாடத்தை புத்தியில் பதிய வைத்துக்கொண்டிருப்போம். பாஸ் செய்யும் அளவுக்கு படித்தால் போதும் என்ற பொன் செய்யும் மனது படைத்தவனாக இருந்தேன். ஆங்கில மீடியம் என்ற ஃபாரின் கோஸ்ட் படாத பாடு படுத்திய பாட்டில் எனது பால்யம் அழிக்கப்படுவதாக உணர்ந்தேன். எப்படியும் எழுபது சதவிகிதம் குறையாமல் மார்க் எடுத்து எனது புகழை நிலைநாட்ட மிகவும் பிரயர்த்தனப்பட்டேன்.
ஒரு காலாண்டு தேர்வில் விளையாட்டு புத்தியில்(?!) கொஞ்சம் குறைவாக மார்க் எடுத்து வசமாக மாட்டிக்கொண்டேன். சாந்தகுமாரி டீச்சர் மிகவும் அமைதியானவர் தான். Not Satisfied என்று இரண்டு வார்த்தை எழுதி கையெழுத்திட்டு ரேங்க் கார்டில் ராங்கு காட்டினார் எனது தகப்பனார். இதைக் கண்ட சாந்தகுமாரி டீச்சர் கோபாக்கினியில் கோபகுமாரி ஆகிவிட்டார்கள். "நீ படிக்கறது உங்க அப்பாவுக்கு Not Satisfied-ஆ இல்ல நான் சொல்லிக்கொடுக்கறது Not Satisfied-ஆ" என்ற கிடிக்கிப்பிடி கேள்வி ஒன்று என்னைக் கேட்டு இரண்டு நாளைக்கு படுத்தி எடுத்துவிட்டார். மேற்கூரையும், டீச்சரும் ஒரு டீமாக சேர்ந்து என்னை உஷ்ணப்படுத்தினார்கள். காய்ந்து கருகி விட்டேன்.
கையில் கொண்டுபோகும் மோர்சாதத்தை ஸ்கூலுக்கு எதிரில் இருக்கும் சுதர்சன் காப்பி கடையின் பின்னால் இருக்கும் முற்றத்தில் உட்கார்ந்து சாப்பிடுவேன். ஓடு சரிந்து இறக்கும் பின்கட்டில் காப்பிக் கொட்டை சரக்கு அடுக்கி வைத்திருப்பார்கள். ஒரு மண் பானையில் தண்ணீர் நிரப்பி மூடி அதன் மேல் சிகப்பு கலர் பிளாஸ்டிக் டம்பளர் வைத்திருப்பார்கள். ரெண்டு ரூபாய்க்கு வாங்கின காசிற்கு அது இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கலாம். நான் சாப்பிட்டு முடித்ததும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஃப்ரிட்ஜிலிருந்து வெண்ணை எடுத்து பேப்பரில் மடிக்கவும், சுடச்சுட அரைத்த காப்பிபொடியை மெஷின் வாயில் தட்டி எடுத்து மணம் குறையாமல் காக்கி பொட்டலத்தில் மடித்துக் கொடுத்தும் தொண்டு புரிந்தேன்.
கை வைத்த பனியனோடு கை ஒழியாமல் வேலை பார்த்த பவானந்தம் மற்றும் துரைக்கண்ணு இருவருக்கும் இன்னமும் நான் நினைவில் இருப்பேனா என்று தெரியாது ஆனால் சுதர்சன் காப்பி மணம் என் மனத்தில் இன்னமும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. ஒரு முறை பிஞ்சு வெள்ளரிக்காய் என் பிஞ்சு மனத்தை அபகரித்ததில் ஒரு எட்டணா சுதர்சன் கடையில் கடன் வாங்கி சாப்பிட்டதற்கு ஒரு வாரம் என்னை வீட்டில் வறுத்து எடுத்துவிட்டார்கள்.
ஆர்ட்டும் கிராஃப்ட்டும் இரண்டு ஜாலி வகுப்புகள். சுருட்டை முடி ஸ்ப்ரிங் போல அசைந்தாட, செல்லமான கெட்ட வார்த்தை திட்டோடு பள்ளியின் பின்னால் கொல்லைப்புறத்தில் டாய்லட் அருகில் நீலக் கலர் இரும்பு சேர் போட்டு ஆர்ட் வாத்தியார் ரெங்கராஜன் சொன்ன திகில் கதைகள் அழியாப் புகழ் பெற்றவை. "சிங்கபெருமாள் கோவில்ங்கற ஊர்ல ராத்திரி பன்னெண்டு மணிக்கு அவன் வந்து இறங்கறான்...அப்போ..." என்று அவர் கதையில் சொன்ன அந்த ஊர்ப் பெயர் முதன் முறையாக சென்னை வந்தபோது அவரை கொண்டு வந்து அந்த ஊர்ப் பெயர்ப்பலகை முன்னால் நிறுத்தியது.
கிராஃப்ட் ஜெயராமன் சார் கொஞ்சம் 'மூடி' பேர்வழி. ஆர்ட் போல குலுங்ககுலுங்க சிரிக்க மாட்டார். எப்பவும் ஒரு இனம்புரியா சோகத்தை முகத்தில் தாங்கி இருப்பார். எப்பவாவது அதிசயமாக புன்னகை பூப்பார். போலீஸ் கட்டிங்கில் அவரது கறார்த்தனம் தெரியும். எல்லோரையும் ஒரு பீரியட் முழுக்க கைகட்டி வாய்பொத்தி பேசாமல் உட்கார்த்தி வைத்து அப்போதே எங்களுக்கு யோகா கிளாஸ் எடுத்த ஆசிரிய யோகி அவர்.
எட்டாம் வகுப்பில் இருந்து கிரிக்கெட் என்னை முழுவதுமாக ஆட்கொண்டது. படிப்பின் வலுவான இரும்புப் பிடியில் இருந்து தப்பிக்க விருப்பத்துடன் நான் என்னை கிரிக்கெட்டிற்கு அர்ப்பணித்துக் கொண்டேன். அக்காலத்தில் ஸ்போர்ட்ஸ்க்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. வீதியில் லோக்கலாக மட்டையும் பந்துமாக திரிந்தவன், விசேஷ அங்கீகாரம் கிடைத்தது போல பள்ளி அணிக்கு கிரிக்கெட் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டேன். கை காலை உதறி வேகவேகமாக ஓடிவந்து சாப்பிட்ட பருப்பு சாதத்தின் ஒட்டுமொத்த இரும்புச் சத்தையும் பயன்படுத்தி வேகப்பந்து வீசியதில் "டேய்.. இவனோட பந்து பிட்ச் பண்ணினதும் ஃபாஸ்ட்டா வருதுடா. ஒரு நிப் இருக்கு" என்று ஊக்கப்படுத்தி கிரிக்கெட் ஜோதியில் ஐக்கியப்படுத்தினார் ராமு சார். போன வருஷம் கூட ராமு சாரிடம் தொலைபேசி தொல்லை கொடுத்து அறுத்துக் கொண்டிருந்தேன்.
கோகோ, ரிங் பால், பால் பேட்மிண்டன், கூடைப் பந்து, வாலி பால், சுக்ரீவன் பால் என்று இன்னபிற விளையாட்டுக்களுக்கும் பிரமாதமாக பயிற்சி கொடுக்கப்பட்டது. இதில் சிறப்பு கவனத்திற்கு உரியவர் பெல்பாட்டம் ராமதாஸ். இவரும் ஸ்டேப் கட்டிங் பார்ட்டி. பெல் பாட்டம் பேன்ட் சிகப்பு ரோஜாக்கள் கமலஹாசனிடம் இருந்து வாங்கிப் போட்டது போன்று இருக்கும். மைதானத்தின் குப்பைகூளங்களை தனது பெல் பாட்டத்தினால் பெருக்கி சுத்தம் செய்துவிடுவார். உங்கவீட்டு பெல் எங்கவீட்டு பெல் இல்லை. உலக மகா பெல் பாட்டம் அது.
ஸ்ரீதரன் சார் ஒன்பதாம் வகுப்பாசிரியர். நிமிட்டாம்பழத்தில் விற்பன்னர். அரைக்கை சட்டைக்குள் கைவிட்டு ஒரு சிட்டிகை புஜத்தின் தோலை கையில் பிடித்து கிள்ள ஆரம்பித்தால் மாட்டிக்கொண்டவர்கள் தானாக ஹைஜம்ப் போல எம்பிக் குதிப்பார்கள். எல்லாம் உள்காயம். அந்த பீரியட் முழுக்க எரியும். சில இ.பி.கோ பிரிவுகளுக்கு அவரை விட்டு இந்தத் தண்டனை கொடுத்தால் சமுதாயம் திருந்தலாம். அவரிடம் எலும்பர்கள் தப்பிப்பதற்கு சாத்தியம் உண்டு. மூன்றாம் தெருவில் கணிதம் டூஷன் எடுத்தார். கிள்ளுக்கு பயந்தே அந்த தெருப்பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டேன். சோதனையாக அந்த வருடம் எங்கள் வகுப்பறையின் மேலே உத்தரத்தில் எங்களோடு சேர்ந்து ஒரு ஆந்தையும் குடிவந்து விட்டது. சில விஷமிகள் "ஆந்தை இருக்கும் வகுப்பில் படிப்பவர்கள் பேர் பாதி பாஸ் பண்ணுவது கடினம்" என்று ஆந்தை ஆருடம் சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். ஆனால் நிறைய பேர் தேறினார்கள்.
மகாலிங்கம் சார் புட்டபர்த்தி சாய்பாபாவின் அதிதீவிர பக்தர். குழந்தைகள் "பாபா" ப்ளாக் ஷீப் என்று பாடினால் கூட கண்ணை மூடி கன்னத்தில் போட்டுக்கொள்வார். அவ்வளவு பயபக்தி. அவருக்கு எல்லாம் சாய் மயம். ஒரு முறை எனது சீனியர்களின் வகுப்பில் இடது கையை மேலே உயர்த்தி ஆட்டி காண்பித்து "புட்டபர்த்தி போயிருந்தப்ப இந்த வாட்ச் சாய் பாபா எனக்கு கிஃப்ட்டா கொடுத்தார்" என்று சொல்லிவிட்டு மெய்சிலிர்த்துக் கொண்டார். வகுப்பில் ஒரு குல்லேரிப் பயல் "சிடிசன் வாட்சா பார்த்துதான் குடுத்தாரா?" என்று எதிர்கேள்வி கேட்டு மடக்கியதாக நினைத்துக்கொண்டவனை அந்த ஆண்டின் இறுதி வகுப்புவரை திரும்பிப் பார்க்கவில்லை என்று மேல்வகுப்பு அண்ணாக்கள் பேசிக்கொண்டார்கள்.
ஸ்கூல் பாடங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எண்ணம் போன போக்கில் ஜன்னல் வழியாக ரோடை பிலாக்குப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு அலாதியான விஷயம். மனசுக்கு சுகம் தரும் காரியம். ஜன்னலுக்கு வெளியே தெரியும் பிரசித்தி பெற்ற ஒத்தைத் தெரு பிள்ளையார் கோவிலுக்கு எவ்ளோ பேர் அர்ச்சனை செய்கிறார்கள், சிதறு தேங்காய் எவ்ளோ பேர் உடைக்கிறார்கள், புதுவண்டி பூஜை இன்று எவ்வளவு என்று உபயோகமான தகவல் தேடல்களும் உண்டு. உபாத்தியாயர் சாக்பீஸை கிள்ளி முகத்தில் விட்டெறியாதவரை இன்பம் தெருவிலே.
வேடிக்கையின் போது காக்கி பேன்ட்/ட்ராயர் மற்றும் வெள்ளை சட்டைப் போட்டுக்கொண்டு யாராவது வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தார்கள் என்றால் அளவில்லா ஆனந்தம் எங்களுக்கு. காக்கி யூனிபார்ம் ஃபின்லே மேல்நிலைப் பள்ளியுடையது. ராஜகோபாலசுவாமி கலைக் கல்லூரி அண்ணாக்கள் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக ஸ்ட்ரைக் செய்தார்கள் என்றால் வரும் வழியில் முதலில் நுழைவது ஃபின்லே. அப்புறம் தே.மே.பள்ளி. ஒரு நாளைக்கு ஸ்ட்ரைக் நடந்தது என்றால் ஒரு பத்து நாளைக்கு கண் அந்தப் பக்கமே அலைபாயும். யாராவது ஃபின்லே ஸ்கூல் பையன் வயிறு சரியில்லை என்று பாதியில் வீட்டுக்கு போனான் என்றால் கூட ஸ்ட்ரைக் இன்னிக்கும் தொடருமோ என்று மனது அல்பமாக கற்பனை செய்து கொள்ளும்.
முதல் இரண்டு பட்டனை கழற்றி காற்றுவாங்க மைனர் கணக்காக திரிந்த என்னை "சட்டை பித்தானை போடுடா.." என்று விரட்டிய பாட்டனி பாலு சார் ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பப்படும் என்று போற்றியவர். சட்டையை டக்கின் செய்து டீக்காக ஆங்கிலேய துரைமார்கள் வியக்கும் வண்ணம் வலம் வந்தவர் ஆங்கில ஆசிரியர் கௌதமன். ஆங்கிலத்தின் இன்றியமையாத தன்மையை புத்தியில் உரைக்கும்படி எடுத்துரைத்தவர். என்.எஸ்.எஸ் என்ற அமைப்பின் பள்ளித் தலைவர். இயற்பியல் பாடம் சொல்லிகொடுத்த இளங்கோவன் தோழனாய் இருந்த ஆசிரியர். தோளில் கைபோட்டு பேசியவர். கெமிஸ்ட்ரி சந்தானம் சார் ரிடையர் ஆகி அந்த வருடம் வந்து சேர்ந்தவர் ராதாக்ருஷ்ணன். ஃபிசிக்கலா தேசலான சரீரத்துடன் இருப்பார். சோமு சார் எனக்கு வகுப்பு எடுக்கவில்லையானாலும் கிரிக்கெட் மூலமாக பந்தம். கண்ணில் பூ விழுந்த தியாகராஜன் சார் ஏழு எட்டில் எனக்கு சரித்திரம் எடுத்தார்.
இன்னும் ஒரு பத்து பதினைந்து பேர் இருக்கிறார்கள் சொல்வதற்கு. "டின்.டின்.டின்." என்று பள்ளி முடிந்து லாங் பெல் அடிப்பது போல காதில் கேட்கிறது. மற்றவை அடுத்த பதிவில். நன்றி.
*புள்ளித்தாள் என்பது இரு ஓரங்களிலும் perforation இருக்கும் டாட் மாட்ரிக்ஸ் பிரிண்டரில் உபயோகப்படுத்தும் பேப்பர். ஒரு பக்க ரஃப் பேப்பராக கணக்கு போட்டு பார்க்க வாங்குவோம். கால் கிலோ அரைக்கிலோ என்று வெயிட் போட்டு தருவார்கள்.
படம்: நானே... நானே...
-
நல்ல பதிவு
ReplyDelete"அது ஒரு நூற்றாண்டு கால பெருமை வாய்ந்த ஸ்கூல்" நூற்றான்டு இல்ல சார், பத்து வருடம் முன்புதான் பொன்விழா கொண்டாடினாங்க...
டான்டன் சார் நான் படிக்கும் காலத்தில் எல்லாம் ரொம்பவே மாறி இருந்தார்.
சங்கர ஹாலில் நீங்கள் சொல்லும் அதே இடத்தில் நானும் ஒரு வருடத்தை ஓட்டினேன்... ஆதிசங்கரர் படத்தின் பின்னே நான் ஒரு ரகசிய சங்கதியை ஒட்டி வைத்தேன், இன்னும் இருக்குமா என்று தெரியவில்லை.
"சங்கர ஹால் கடந்து போனால் மூன்றாம் கட்டு ஒன்று எங்கள் பள்ளிக்கு உண்டு" ஏனோ காரணத்தால் இந்த இடத்திற்கு "நியு பிளாக்" என்பதெ பள்ளியின் அதிகாரபூர்வ பெயர்.
பள்ளியின் புதிய முகப்பை பார்க்கும் போது அன்னியமான உணர்வே வருகின்றது. அழகான அந்த பழைய கட்டிடத்தை ஏன் இப்படி கான்க்ரீட் குப்பையாக்கினார்கள் என்று தெரியவில்லை :(
@siva
ReplyDeleteதம்பி சிவா! 1899 - ம் வருடம் தொடங்கிய பள்ளி அது! ;-)
நினைவலைகள் இன்னும் உண்டு. பதிவின் நீளம் கையை சுருக்கி விட்டது.
கருத்துக்கு நன்றி. ;-))
மால்குடி டேஸ் மாதிரி மன்னார்குடி டேஸ் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது! சின்ன வயதில் St.Joseph Girls High School பள்ளியில் படித்த நினைவலைகளை தட்டி எழுப்பியது உங்களின் அருமையான பதிவு! ரங்கூன் ஸ்டோர்ஸை விட்டு விட்டீர்களே! அப்புறம் உங்கள் பள்ளிக்கு வருமுன் ஒரு ஃபோட்டோ ஸ்டூடியோ கூட இருக்கும். பெயர் தான் மறந்து விட்டது!
ReplyDeleteஹரித்ராநதியில் உங்கள் வீடு எங்கேயுள்ளது என்று தெரிந்து கொள்ள ஆவல். 1974 வரை தெப்பக்குளத்தின் மேலக்கரையில்தான் எங்கள் வீடு இருந்தது!
மகாலிங்கம் சார் புட்டபர்த்தி சாய்பாபாவின் அதிதீவிர பக்தர். குழந்தைகள் "பாபா" ப்ளாக் ஷீப் என்று பாடினால் கூட கண்ணை மூடி கன்னத்தில் போட்டுக்கொள்வார். அவ்வளவு பயபக்தி.
ReplyDeleteஆஹா ரசித்தேன் இந்த ரசனையை மனதார ரசித்தேன்
அப்படியே மகாலிங்கம் சார் மனம் முன்னே காதர் ஜிப்பா வேஷ்ட்டியுடன் வந்து போனார்
எப்படி வெங்கட் இப்படி ஒரு ஞாபக சக்தி உன்னிடம்
சுவாரசியமான விவரங்கள். மன்னார்குடி பள்ளிக்கூடம் என்றால் கட்டிடம் எல்லாம் இருக்கிறதே! மரத்தடி என்று நினைத்தேன் :). நிமிட்டாம்பழக் காரர்கள் ஹோமோ என்பார்கள். அந்த நாளிலேயே மைனர் பெயரா உங்களுக்கு?!
ReplyDelete//தம்பி சிவா! 1899 - ம் வருடம் தொடங்கிய பள்ளி அது! ;-)
ReplyDeleteநினைவலைகள் இன்னும் உண்டு. பதிவின் நீளம் கையை சுருக்கி விட்டது.
கருத்துக்கு நன்றி. ;-))//
அட ஆமா அண்ணே..... என்னோட நினைவலைகள்தான் மங்கி போய்கிட்டு இருக்கோ :( :(
@மனோ சாமிநாதன்
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி மேடம்!
என் அக்காவும் St.Joseph Girls High School ல் தான் படித்தார்கள்.
ரங்கூன் ஸ்டோர்ஸ், லக்ஷ்மி சில்க் ஹவுஸ், நாதன் ஸ்டுடியோ.....
ஹரித்ராநதி கீழ் கரை! மங்கம்மா படித்துறை எதிரில். என் சித்திகளை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அவர்கள் இருவரும் டீச்சர்.
அதற்கு ஒரு வருடம் முன்பு தான் இந்தப் புண்ணியபூமியில் ஜனித்தேன் மேடம். ;-))
அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க... நன்றி ;-))
@A.R.ராஜகோபாலன்
ReplyDeleteகோப்லி.. மன்னை நினைவுகள் இன்னமும் கனலாய் இருக்கிறது என் மனதில்..
வாழ்த்துக்கு நன்றி. ;-))
@அப்பாதுரை
ReplyDeleteநன்றி சார்!
நிமிட்டாம்பழம்... அப்படியா? ஆ..
மரத்தடி இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ;-))
மன்னார்குடியில் நிறைய மைனர்கள் உண்டு. நான் அதில் தக்கினியோண்டு மைனர். ;-))))
@siva
ReplyDeleteபராவாயில்லை தம்பி. இதெல்லாம் ஜகஜம்!!! எனக்கு இருக்குற கொஞ்சநஞ்ச மன்னார்குடி ஞாபகங்கள்... ;-))
மன்னையின் மைந்தரே... ஒவ்வோரு விஷயத்தையும் விடாமல் ஞாபகம் வைத்து பகிர்ந்துள்ளீர்கள்... இதில் வார்த்தை கோர்ப்புகள் அருமை... பிதா ...ரேங்க் ராங்க்... பாபா...
ReplyDeleteசரி மத்ததெல்லாம்... அடுத்த பதிவிலா.. மைனரிடம் இல்லாத மைனர்த்தனமா...
அஹா.. என்னுடைய பள்ளிப் பருவ நாட்களையும் எனது நினைவிற்கு கொண்டு வர வைத்தது இப்பதிவு..
ReplyDeleteநிற்க..
ஆறாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் ஆங்கிலப் மீடியம், 'ஏ' பிரிவு அல்ல..
முறையே D மற்றும் C பிரிவுகள்.
எட்டாம் வகுப்பு முதல் தான் ஆங்கிலவழிக் கல்வி பிரிவுகள் 'ஏ' பிரிவாக கொண்டுவரப் பட்டது.. (அந்த வருடம் முதல் அவ்வழக்கத்தினை பின்பற்றினார்கள், நமது பள்ளியில்)
என்ன கொப்லி,.. என்னோட ஞாபகசக்தி ஆர்.வீ.எஸ் ஞாபகசக்தியைவிட பெட்டரா இருக்கா ?
@பத்மநாபன்
ReplyDeleteஉங்களுக்கு கீழ இருக்குற பின்னூட்டத்தை பாருங்க... அவரு மெமரி ப்ளஸ் சாப்பிடாமலேயே புஷ்டியான மூளை வச்சிருக்கார்.. திரு. மாதவன், ஞாபகங்களின் தலைவன். ;-))
பாராட்டுக்கு நன்றி பத்துஜி. ;-)
@Madhavan Srinivasagopalan
ReplyDeleteசெக்ஷன் ஞாபகம் வச்சுக்கலையே... பாக்கி எல்லாம் சரியா மாதவா? ;-))
ஆ... இப்ப ஞாபகம் வந்துடுச்சு.. ஆனா எட்டாவதும் ஸி தான்னு நினைக்கறேன்..
தப்பாயிருந்தா மன்னிச்சுருங்க மாதாவன்.. ;-))
ஒரு நாளைக்கு ஸ்ட்ரைக் நடந்தது என்றால் ஒரு பத்து நாளைக்கு கண் அந்தப் பக்கமே அலைபாயும். யாராவது ஃபின்லே ஸ்கூல் பையன் வயிறு சரியில்லை என்று பாதியில் வீட்டுக்கு போனான் என்றால் கூட ஸ்ட்ரைக் இன்னிக்கும் தொடருமோ என்று மனது அல்பமாக கற்பனை செய்து கொள்ளும்.
ReplyDeleteஅபாரமாய் மலரும் நினைவுகளில் களித்ததற்கு வாழ்த்துக்கள்.
//பாக்கி எல்லாம் சரியா மாதவா? ;-))//
ReplyDeleteபாக்கி எல்லாம் சரிதான்..
சும்மா நா எடுத்து கொடுத்தேன்.. தப்ப கண்டுபிடிக்குறதுக்காக இல்லை..
மன்னிப்புலாம் கேட்டு நம்ம நட்புக்கு இடைஞ்சல் பண்ணாதப்பா....
வழக்கம்போல உனக்கே உரித்தான வர்ணனைகளோட -- பதிவு சூப்பர்..
மன்னை நினைவுகள் – மலரும் நினைவுகளாய் எங்களையும் ஆட்கொண்டது மைனரே. பள்ளியில் சந்திக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள் நமது நினைவில் இருக்கிறார்கள். நல்ல பகிர்வு. தொடருங்கள் உங்கள் பள்ளி நினைவுகளை…
ReplyDelete@இராஜராஜேஸ்வரி
ReplyDeleteநன்றிங்க மேடம்! ;-))
@Madhavan Srinivasagopalan
ReplyDeleteச்சும்மா.... நன்றி... ;-))
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteநன்றி தலைநகரத் தமிழே! ;-))
மன்னார்குடி நினைவுகள் எம்மையும் பின்னோக்கி இனிய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றன.
ReplyDeleteஉங்கள் நியாபக சக்திக்கு ஒரு சல்யுட்
ReplyDeleteநிசமா
பழைய காட்சிகள் எல்லாம் கண்முன்னே படிக்கும் பொது
சந்தோசம் அண்ணா
இருந்தாலும் இந்த புதிய கட்டம் அவளோவாக நல்லா இல்லை
பழைய கட்டிடடம் அவ்ளோ கம்பீரமாக இருக்கும்
தற்போது பழைய கோச்சிங் இல்லை என்று கேள்வி பட்டேன்.வருத்தமாக இருந்தது
பாபா.. நல்ல சிரிப்பு வெடி
ReplyDeleteபதிலுக்கு அன்பார்ந்த நன்றி! அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது தஞ்சையிலிருந்து வந்து மன்னையைச் சுற்றிப்பார்த்து வருவதுண்டு. மீண்டும் ஒரு முறை தெப்பம் பார்க்க வேண்டும் என்ற ஆசைக்கு மட்டும் இன்னும் நேரம் கனிந்து வரவில்லை. எனக்கு பல வருடங்கள் நீங்கள் ஜுனியர் என்பதால் உங்கள் சித்திகளை வேண்டுமானால் எனக்குத் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.
ReplyDeleteஇனி நிச்சயம் தொடர்ந்து வருவேன்!!
நல்லப்பதிவு,மன்னார்குடி நாட்களை அப்படியே என் கண்முன்னால் நிறுத்தியது .தொடையை பிடித்துதிருக்கும் M.R.S சார்,மணிக்கட்டை த்ருப்பசொல்லி ஒரு தப்புக்கு ஒரு அடி என்றகணக்கில் ஸ்கேலில் பதம் பார்த்த சோடாபுட்டி ஸ்ரீனிவாசன்[கணக்கு]சார்,கணீரரென்று பாடம் நடத்தும் பாலு சார்,ஸ்கூலுக்கு லேட்டாக வந்தால் கிரௌன்ட்டை இரண்டு முறை சுற்றிவர சொலும் P.T சார்[போடா போ சாந்தி தியேட்டர்ல சிலுக்கு குட்ட பாவாட போட்டு டான்ஸ் ஆடுறா போய் தரடிக்கட் வாங்கி படுத்துகிட்டு பாரு] நிலைக்கு வந்தா லீவு வேணும் என்று ராஜகோபாலசுவாமி தேரின்வடத்தை பிடித்தபோது போட்ட கோசம் இன்னும் என்ன என்னமோ நினைவுகள் வந்து போகின்றன.
ReplyDelete@மாதேவி
ReplyDeleteநன்றிங்க... பள்ளி கால நினைவுகள் எல்லோருக்குமே ஒரு சுகமான நினைவுகள். ;-))
@siva
ReplyDeleteசிவா... சமீதத்தில் NHSS போயிருந்தேன்...
நீங்கள் சொல்வது சரிதான்..
பழைய கட்டிடம் இன்டர்நெட்டில் ஓரிடத்தில் பார்த்தேன். ஓடு வேய்ந்த முதல் தளம். நான் படிக்கும் பொது அப்படித்தான் இருந்தது..
கருத்துக்கு நன்றி சிவா. ;-))
@மனோ சாமிநாதன்
ReplyDeleteநன்றிங்க மேடம். நான் ரொம்ப ச்சின்னப் பையன். அடிக்கடி வாங்க. ;-))
@பொ.முருகன்
ReplyDeleteஎம்.ஆர்.எஸ் சார்... emperor அப்படின்னா என்ன? என்று கேட்டுவிட்டு "ராஜாதி ராஜா, மன்னாதி மன்னா.." என்று ரஜினி ஸ்டைலில் சொல்வது, சின்ன வி.ஆர்.பி, பெரிய வி.ஆர்.பி சார்கள், ஜி.என். (என்னை வெங்கேச்சு என்று செல்லமாக கூப்பிடுவார்), தமிழ் வாத்தியார் ஸ்வாமிநாதன், ரவி சார், ஆர்.வி.ஆர் சார், பி.டி சண்முகம் சார், கடுகு சார், அப்புறம் ஸ்கௌட் சார் நிறைய பேர்.. நிறைய சம்பவங்கள்.. ஒரு புக்கே போடலாம்.. அதான் அப்படியே நிறுத்திட்டேன்.
சென்ற முறை மன்னை சென்றபோது சீனு சாரிடம் பேசினேன்.
கருத்துக்கும் முதல் வரவுக்கும் நன்றி முருகன்! அடிக்கடி வாங்க.
@அப்பாதுரை
ReplyDeleteநன்றி சார்! இன்னும் நிறைய இது போல சரக்கு இருக்கு.. ரொம்ப எழுதினா நம்ம குட்டு வெளிப்பட்டுவிடுமொன்னு பயம்... ;-)))
"காலார தேரடி, பெரிய போஸ்ட் ஆபிஸ், கிக்கான குஷ்பூ ஒயின்ஸ், புள்ளித்தாள்* விற்கும் சோழன் மளிகை, வாசலில் பொம்மைக்கு அலங்கோலமாக சேலைக்கட்டி வைத்திருக்கும் லக்ஷ்மிராம்ஸ் சில்க் ஹௌஸ், பிஸ்கட் மற்றும் கேக் நறுமணம் கமழும் ஜீவா பேக்கரி, அரிசிக்கடை சந்து ஏற்றம், முதலியாரின் நாட்டு மருந்துக் கடை, அந்த 'மருந்து' விற்கும் கலா ஒயின்ஸ், யுவராஜின் டில்லி ஸ்வீட்ஸ் திரும்பியதும் அழகப்பா தாளகம், ஒத்தைத் தெரு ஆனந்த விநாயகரை மொத்த குத்தகை எடுத்திருக்கும் ஆர்.ஆர். ட்ராவல்ஸ், வெண்ணைத்தாழி மண்டபம் என்று கடைத்தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்தால் இருபது நிமிஷத்தில் ஸ்கூலை அடையலாம்."
ReplyDeleteஇந்த வரிகளை படித்ததும் கலவையான வாசனைகள் வரும் கடைத்தெருவின் மணத்தை உணர்ந்ததென்னவோ உண்மை.
பள்ளிப் பிராயத்தின் நினைவுகளை இவ்வளவு வருடங்கள் ஆன பின்னும் சிறு சிறு விஷயங்களையும் தனிபாங்குடன் அழகாக விவரித்துள்ளீர்கள். பாராட்டுகள் சகோ.
நானும் இந்த பள்ளியில் படித்தவன் என்று சொல்லி கொள்ள எப்போதும் பெருமை தான்
ReplyDeleteவருடங்கள் பல கடந்த பின்னும் பள்ளி நினைவுகளை அப்படியே வர்ணித்திருப்பது அழகு அருமை.
ReplyDeleteஅதுசரி மன்னார்குடியா நீங்க!!!!!!!!!!!!
அப்ப எனக்குதெரியாது ஹி ஹி..
@கோவை2தில்லி
ReplyDeleteஇன்னமும் ஒரு அஞ்சாறு கடை இருக்கு. நான் எது எழுத ஆரமிச்சாலும் ராமாயணமாப் போய்டுது... அதான் குறைச்சுக்கிட்டேன்.
கருத்துக்கு நன்றி சகோ. ;-))
@மோகன் குமார்
ReplyDeleteநம் பள்ளி. நல்ல பள்ளி.
மறக்கமுடியுமா மோகன்? ;-))
@அன்புடன் மலிக்கா
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி சகோ.
நீங்களும் மன்னார்குடியா? இல்லை பக்கத்துல கூத்தாநல்லூர், லக்ஷ்மாங்குடியா? என் நண்பர்கள் நிறைய அங்கும் உண்டு.
பாராட்டுக்கு நன்றி. அடிக்கடி வாங்க. ;-)
பள்ளி நினைவுகளும் கல்லூரி நினைவுகளும்
ReplyDeleteஅனைவருக்கும் பசுமையாய் இருக்கும் என்பது
உண்மையாயினும் கூட இத்தனை
துல்லியமாக இருக்குமா என்பது ஆச்சர்யம்தான்
சொல்லிவரும்போதே காலங்களைக்
கடந்துபோய் வருவது படிக்கச் சுவையாய்
இருக்கிறது(தில்லானா மோகனாம்பாள்
நாகேஷ்,சிவாஜி மாதிரி)
ஸ்ரீதரன் சார் ஒன்பதாம் வகுப்பாசிரியர். நிமிட்டாம்பழத்தில் விற்பன்னர். அரைக்கை சட்டைக்குள் கைவிட்டு ஒரு சிட்டிகை புஜத்தின் தோலை கையில் பிடித்து கிள்ள ஆரம்பித்தால் மாட்டிக்கொண்டவர்கள் தானாக ஹைஜம்ப் போல எம்பிக் குதிப்பார்கள். எல்லாம் உள்காயம். அந்த பீரியட் முழுக்க எரியும்.
ReplyDeleteஎல்லா ஊர்லயும் உண்டு போல.. கண்ணுல ஜலம் கட்டிண்டு.. யப்பா.. அந்த அவஸ்தையை சொல்லி மாளாது
Mama.. Very nice. I hope in your next episode, you will talk about Our 8th grade teacher Mr.VRB, 10th Grade Mr. MRS, 11th Grade Mr. GN, Our Tamil teachers during 6th - 12th.... and our friends who studies with us from 6th - 12th..
ReplyDelete@Ramani
ReplyDeleteரமணி சார்! என்னமோ தெரியலை எனக்கு நிறைய மன்னார்குடி நினைவுகள் பசுமையா துல்லியமா ஞாபகம் இருக்கு. பாராட்டுக்கு நன்றி. ;-))
@ரிஷபன்
ReplyDeleteகண்ணுலேர்ந்து எவ்ளோ ஜலம் வருதோ அவ்ளோ நிமிட்டாம்பழம் வீரியம் அப்படின்னு அர்த்தம். சரியா ரிஷபன் சார்! ;-))
@Sai
ReplyDeleteMama... sure.. Will try to give more episodes. thank you. ;-))
எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.
ReplyDeleteஎங்கடா ஊர் புராணம் காணோமேன்னு பார்த்தேன் . அதனை பேரையும் ஞாபகம் வெச்சிருப்பதே கஷ்டம். இதுலே அந்த அடையாளங்களுடன் . அட்டகாசம் ஆர் வீ எஸ்
ReplyDeleteஅழகான வர்ணனை.
ReplyDeleteஅட்டகாசமான எழுத்து
ஆர்வமுடன் படித்தேன்
Dei.. kalakalls RVSM! Adhu sari.. School photo-nu onna poturukkiye? Photoshop-a? Illa school ippdi maari pocha?
ReplyDeleteBTW, the school ground used to be past the Findley school, (our house) and church, right next to the fields. Hope you remember those bi-cycle trips!
//ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு கீழே மூளைக்குச் சூடு வைத்து எட்டாம் வகுப்பு பாடத்தை புத்தியில் பதிய வைத்துக்கொண்டிருப்போம்.//
ReplyDeleteஆர்.வி. எஸ்ஸின் ட்ரேட்மார்க் லைன்ஸ்.
ஆந்தை குடியேற வரிகளை படித்து சிரித்தேன். எங்கள் கிராப்ட் சார் வாரம் இரு முறை பள்ளியை சுற்றி உள்ள குப்பைகளை பொறுக்க சொல்லி உயிரை எடுப்பார். புஷ்பவனம் குப்புசாமியின் டூப் மாதிரி இருப்பார். தங்கள் கிராப்ட் சாரைப்போலவே உம்மணா மூஞ்சி.
அனைவரையும் ஆட்டோக்ராப் நினைவலையில் நனைய செய்துவிட்டீர்கள். சூப்பர்ப்!!
@உலக சினிமா ரசிகன்
ReplyDeleteஉங்களது வலைப்பக்கம் பார்த்தேன். இதப் பற்றியே ஒண்ணுமே சொல்லாம போறீங்களே ப்ரதர்! ;-))
@எல் கே
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி எல்.கே. குட்டிம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ;-))
@ViswanathV
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி விசு! ;-))
@Krish Jayaraman
ReplyDeleteசேகர்.. இன்னமும் எவ்ளோ எபிசொட் எழுதுவேன்னு தெரியலை.. நிச்சயம் அதெல்லாமும் வரும்... நன்றி. ;-))
@! சிவகுமார் !
ReplyDeleteமிக்க நன்றி சிவா..
எல்லா பள்ளியிலுமே இதுபோல ஆசிரியர்கள் உண்டு. ;-)
vallarai legium sapiduveengala.. vayasu narpathai nerungium (oru yuugam thaan) ithanai anoo anoo vaa nenaivuvaithuleeragale. en palli natkalum ninavu vanthathu anaal padipilum sari porukithanithilum sari soora puli illavitavlum oru sotha puli allavuku kooda ennal vesam poda mudyala.. athanaal entha aasiriyaritam naan ungalitam padithen aptadinu sonna.. OH APADIYA nu ketpargal.. athai veda kooda paditha sila nanbargalum machan naan un kooda padichendanu sonna OH APADIYAnu solluvanga.. ippa unga kitaye RVS naan unga kooda sila varudam padichen appadiunu naan sonna neenga OH APADIYANU kekalam.. aacharyam illai
ReplyDelete@murali
ReplyDeleteநான் "ஓ அப்படியா"ன்னு கேட்கமாட்டேன். தெற்குத் தெரு முரளியா? முதல் தெரு மீசை முரளியா? இல்லையென்றால் வேங்குழல் ஊதும் முரளியா? அப்புக்குட்டி முரளியா இருக்க முடியாது.. அவன் நிச்சயம் கம்ப்யூட்டர் தொட்டு கமெண்ட்டு போட மாட்டான்.
நோ சஸ்பென்ஸ். யாருப்பா நீயி? ;-))))
ungal memorykku en valthukkal.. ithanai murali-ei ungalukku theryumnu ennaku theryathu. annaal nammala vittuteengale.. bus eeri konjam kaloori pakkam vanga thnagaludan eyarbiyal 3 varudam ondraga padikum bakiyam petravan naan..
ReplyDeletemurali from tanjore. innum ninaivu varalena athu thaan intha murali
@murali
ReplyDeleteம்...ம்.. ஞாபகம் வந்துருச்சு.....
பாபநாசம் சிவகுமார் கூட வருவீங்களே!.... கட்டை மீசை... குண்டும் இல்லாம ஒல்லியும் இல்லாம நடுவாந்தரமா... ஒரு பக்கம் வகிடு எடுத்து தலைவாரி... ரைட்டா... கரெக்டா ஞாபகம் வச்சுருக்கேனா? இப்ப எங்க இருக்கீங்க? இளஞ்செழியனை நினைவிருக்கா? மணிவண்ணன் அப்புறம் தொம்பங்குடிசை ஒல்லி மணிவண்ணன்... அப்புறம் நம்ம குணாளன்... குடிகாடு அன்பு... இன்னும் எவ்ளோ பேர் வேணும்? சரியா இல்லையா.... ;-))
கல்லூரி நினைவுகள் எழுதும் போது வந்து பாருங்க....
இப்ப நீங்கதான் சொல்லணும்.. "ஓ அப்படியா"? ;-)))))
you are great, antha murali thaan.. poondi marathadiyil ungal perunthu, rayil kathai thinamum keta anubavam.
ReplyDeleteseekiram college pakkam vanga.. onnu onnum oru thani character illa. ungal eluthu arummai.. vidamal mudincha varai padikuren
//சங்கர ஹால் கடந்து போனால் மூன்றாம் கட்டு ஒன்று எங்கள் பள்ளிக்கு உண்டு. ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு கீழே மூளைக்குச் சூடு வைத்து எட்டாம் வகுப்பு பாடத்தை புத்தியில் பதிய வைத்துக்கொண்டிருப்போம்\\.
ReplyDeleteRVS SIR,நீங்க எந்த வருஷம் NHSS ல படிச்சிங்க. நீங்கள் சொல்லும் அதே மூன்றாம் பிளாக்கில் ஒன்பதாம் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் நான்கு வகுப்புகள் உண்டு.அது 1982 என்று நினைக்கிரேன் PT சண்முகம் சார் வகுப்பில் இருந்தநேரம்,அப்போதைய பிரதமர் இந்திராவின் மகன் சஞ்சைகாந்தி ஒரு விமானவிபத்தில் பலியானதால்,அவருக்கு அஞ்சலி செய்யும் பொருட்டு இரண்டு நிமிடம் மவுனஅஞ்சலி செய்ய எழுந்து நின்றோம் மொத்த பிளாக்கும் பின் டிராப் சைலேன்ட் அந்தநேரம் பார்த்து வெளியில் ஒரு காக்கை கத்தியதும் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை,முதலில் நான் சிரிக்க மொத்த பிளாக்கும் சிரிப்பில் மூழ்கியது.அஞ்சலி முடிந்ததும் எனக்கு சண்முகம் சார் பூஜை நடத்தியது தனிக்கதை.போகட்டும் பல இடங்களில் உங்களின் எழுத்து நடை சுஜாதாவின் எழுத்து நடை போல் உள்ளது,அது அவ்வளவு சுலோபமாக வந்து விடாது வாழ்த்துக்கள்.
@murali
ReplyDeleteவரேன்.. வரேன்.. நன்றி. ;-)
நம்ம செட் யார் கிட்டயாவது காண்டாக்ட் இருக்கா? ;-))
@பொ.முருகன்
ReplyDeleteசரியான ஜோக்குங்க... நான் 84 பாட்ச். PT சண்முகம் சார் தான் எனக்கு பேஸ்பால் கோச். கிரிக்கெட் தவிர நான் பேஸ்பாலும் விளையாண்டேன். நான் தான் ஸ்கூல் டீம் பிட்சர். ;-))
ஊர்க்காரவங்க... அடிக்கடி வாங்க.. ;-))
///முதல் இரண்டு பட்டனை கழற்றி காற்றுவாங்க மைனர் கணக்காக திரிந்த என்னை "சட்டை பித்தானை போடுடா.." என்று விரட்டிய பாட்டனி பாலு சார் ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பப்படும் என்று போற்றியவர். சட்டையை டக்கின் செய்து டீக்காக ஆங்கிலேய துரைமார்கள் வியக்கும் வண்ணம் வலம் வந்தவர் ஆங்கில ஆசிரியர் கௌதமன். ஆங்கிலத்தின் இன்றியமையாத தன்மையை புத்தியில் உரைக்கும்படி எடுத்துரைத்தவர். என்.எஸ்.எஸ் என்ற அமைப்பின் பள்ளித் தலைவர். இயற்பியல் பாடம் சொல்லிகொடுத்த இளங்கோவன் தோழனாய் இருந்த ஆசிரியர். தோளில் கைபோட்டு பேசியவர். கெமிஸ்ட்ரி சந்தானம் சார் ரிடையர் ஆகி அந்த வருடம் வந்து சேர்ந்தவர் ராதாக்ருஷ்ணன்.//// என்னோட 11 & 12 th ஆசிரியர்கள். பழைய ஞாபகங்கள் மலருது. 2004 Batch.
ReplyDeleteநான் படித்த பள்ளியையும் ஆசிரியர்களையும் பற்றி வலையில் படிக்கும்போது எனக்கே பெருமையாக இருக்கிறது, மலரும் நினைவுகளில் மூழ்கிவிட்டேன், நன்றி, மிக அருமையான பதிவு.
ReplyDeleteRVS உங்க பதிவு படிக்கும் போதே லைட்டா இடிச்சது. என்னடா நமக்கு நடந்ததே இவரும் சொல்றாரேன்னு. நாம ஒன்னா படிச்ருபோம்னு நினைக்றேன். பிறந்த வருஷம் 1973 , படிச்ச வருஷம் 1984 எல்லாம் ஒத்து வருது. ரொம்ப சந்தோசமா இருக்கு . என்னால மறக்க முடியாத ஊர் மன்னார்குடி, எவளோ ஊர் மாறிட்டாலும். நன்றி, பழச ஞாபக படுத்தனதுக்கு.
ReplyDelete