Wednesday, July 6, 2011

பாட்டியின் பரிசு!

என்னுடைய இலக்கிய அறிவு அப்படி ஒன்றும் பிரமாதமாக சொல்லிக்கொள்ளும்படி கிடையாது. நட்சத்திரமாக எழுதச் சொல்லுகிறார்களே நமக்குத் தெரிந்த சில இலக்கியங்களைப் பற்றி லேசாக கண்ணடிக்கலாம் என்று ஒரு அல்ப அவா சொல்பமாக எனக்குள் முளைக்கிறது. கொஞ்சம் வளர்ந்து தொண்டையைக் கூட இப்போது முட்டுகிறது! சின்னஞ் சிறிய வயதில் நான் அறிந்ததெல்லாம் எங்கள் ஊர் பெரிய கோவில் திருவிழாவில் நடைபெறும் பட்டிமன்ற இலக்கியங்கள் தான். இப்போது முக்குக்கு முக்கு டிவிக்கு டிவி பண்டிகைக்கு பண்டிகை நடக்கும் "பொண்டாட்டியிடம் தர்ம அடிவாங்குவது கணவனே! அம்மாவிடம் மண்டகப்படி பெறுவது பிள்ளைகளே! மருமகளிடம் சாத்துப்படி வாங்குவது மாமியாரே!" என்று புரட்சிகரமான தலைப்பு அணிந்த; பக்கத்துக்கு ரெண்டு பேர் உட்கார்ந்து பங்கேற்கும் வெட்டி பட்டிமன்றங்கள் அல்ல. எல்லாமே கொட்டும் மழையிலும் கூட அக்மார்க் இலக்கியத் தமிழ் சொட்டும் விவாத அரங்கங்கள். வழக்குகளுக்கு "கணம் நீதிபதி" அவர்கள் தீர்ப்பு சொல்லும் வரை உட்கார்ந்து கைதட்டும் ஆர்வலர்கள் நிறைந்த தமிழ் பேசும் வழக்காடு மன்றங்கள்.

"செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதில் முதன்மையானவன் கர்ணனா! கும்பகர்ணனா!" போன்ற தலைப்புகளில் இதிகாச நாயகர்களை தெரிவு செய்து எட்டரை ஒன்பது மணிக்கு தொடங்கி விடிய விடிய ஸ்பீக்கர் அசர தமிழ் பேசுவார்கள். ஒல்லியான கே.பி.சுந்தராம்பாளாக நெற்றியில் விபூதிக் கீற்றோடு காந்திமதியம்மாவும், பேராசிரியர் செல்வகணபதியும் தான் சட்டென்று நினைவுக்கு வருகிறார்கள். பாதிப் பேச்சில் தொண்டை கரகரக்கத் தண்ணீர் கொஞ்சம் சாய்த்துக்கொண்டு மீண்டும் சொற்போர் தொடருவார்கள்.

"எங்களோடு வந்துவிடேன்" என்று கெஞ்சிக்கேட்டவன் கண்ண பரமாத்மா, "அர்ஜுனன் மேல் ஒரு முறைதான் நாகாஸ்திரம் தொடுக்கவேண்டும்" என்று இறைஞ்சியது தன் தாய் குந்தி, எதிர்க்கப்போவது தன் உடன்பிறந்த தம்பிகளை என்று தெரிந்தும் அறிந்தும் ஒருவன் "எடுக்கவோ.. கோர்க்கவோ" என்றவனுக்காக உயிர் நீத்தானே அது தான் செஞ்சோற்றுக் கடன் என்று அம்மாவும், தன் அண்ணன் செய்வது தவறு என்று தெரிந்தும், நியாய அநியாயங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தன் அணி தோற்கும், தாம் இறப்போம் என்று தெரிந்தும், அண்ணனுக்காக, ஆறாறு மாதங்கள் அவனிடத்தில் உண்டு உறங்கியதர்க்காக களம் புகுந்து வீரமரணம் அடைந்தவன் கும்பகர்ணன். ஆகையால் அவனே அத்தர்மத்தில் சிறந்தவன் என்றும் கட்சி பிரித்து "நீதிபதி அவர்களே!" என்று அடிக்கடி உரிமையாகவும், செல்லமாகவும், கிண்டலாகவும், அதிகாரமாகவும், ஆக்ரோஷமாகவும் விளித்து வாதாடுவார்கள்.

அரை டிராயரை இடுப்புக்கு மேலே இழுத்துப் போட்டுக் கொண்டு என் சின்னம்மாவின் கையோடு கைகோர்த்து ராஜகோபாலசுவாமி கலையரங்கில் காற்று கவரி வீச மணலில் உட்கார்ந்து கேட்ட அற்புதமான இலக்கிய இரவுகள் அவை. கலையரங்கத்திர்க்கு எதிரே ராஜகோபாலன் ஏகாந்தமாக 'குளுகுளு' காற்று வாங்கிக்கொண்டு புன்னகைத்துக் கொண்டே சேவை சாதிப்பார். அன்று வானில் பௌர்ணமி என்றால் மனமகிழ்ச்சிக்கு கேட்கவே வேண்டாம்! கூடுதல் சந்தோஷத்தில் உள்ள உவகை பொங்கி வழியும்.



ரெண்டாவது படிக்கும் என் இளைய வாண்டு ஒப்பிக்கும் "அறம் செய விரும்பு, ஆறுவது சினம்" எழுதிய 'ஆத்திச்சூடி' ஔவையார் நானனறிந்த நாடறிந்த இலக்கியத் தமிழுக்கு இலக்கணமான பாட்டி. குழந்தைகள் சிலபசுக்கு பாடல் எழுதிய முதல் குழந்தைக் கவிஞர் அவர். சிறார்களை நல்வழிப்படுத்தினால் நாட்டை சீர்திருத்த முடியும் என்று மனதில் நிறுத்தி அவர்கள் மேம்பாட்டுக்கு எழுதியவர். கலாமின் ஆதர்சமாகக் கூட இருக்கலாம். சங்ககாலத்தில் மொத்தம் மூன்று ஔவையார் இருந்தார்கள் என்று ஆள் கணக்கு ஒன்று சொல்கிறார்கள். ஒரே ஒளவையாருக்கு இறைவன் மூன்று அவதாரம் கொடுத்தாரோ என்னமோ.

பாரி, அதியமான் போன்ற மன்னர் பெருமக்களோடு கை குலுக்கி நண்பியாகவும், சபை நாற்காலியில் அமர்ந்து ஆலோசகர் போலவும் நெருங்கிப் பழகி தமிழ்த் தொண்டாற்றிய ஒரு ஔவையார் சங்ககால எள்ளுப்பாட்டி. அந்தக்காலத்தில் எழுத்தாளர்களுக்கு அவ்வளவு மவுசு என்று புரிகிறது. கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற புலவர் பெருமக்களோடு வார்த்தை ஜாலம் செய்து கவிச் சண்டை போட்டு விளையாடியவர் ஒரு கொள்ளுப்பாட்டி ஔவையார். கடைசியாக விநாயகர் அகவல், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் எழுதியவர் பாட்டி ஔவையார் என்று ஔவை பரம்பரையை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். நான்காவதாக நாம் அறிந்த ஔவையார் 'திருவிளையாடல்' மற்றும் 'ஔவையார்' படப் புகழ் "ஔவை" கே.பி. சுந்தராம்பாள். என்னது அவ்வை ஷன்முகியா? அது கமல் படம்ங்க. இன்னும் சில தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் அந்தக் காலத்தில் தமிழில் தேர்ச்சியுடன் வெண்பா பாடிய அனைத்து பெண்பாற் புலவர்களுக்கும் ஔவை என்ற மரியாதை அடைமொழி இருந்ததோ என்றும் சந்தேகிக்கிறார்களாம்.

எது எப்படியோ. அவ்வையின் தமிழ் விசேஷ அழகு. சம காலத்தில் இயற்றப்பட்ட கம்பராமாயணம் போன்றவைகள் பல்லை உடைக்கும் தமிழில் இருந்தாலும் மிக எளிமையாக புரிந்துகொள்ளும் படி எழுதிய ஔவைக்கு ஒரு சல்யூட். அந்தக் காலத்தில் இது ஒரு "பின் நவீனத்துவ" எழுத்தோ?. ஒரு ஐந்து தலைப்புகளில் ஒளவையின் தனிப் பாடல்களை தொகுத்து இங்கே தருகிறேன்.

1. அழகு.
சிலருக்கு தமன்னா அழகு, சிலருக்கு நமீதா, சிலருக்கு இந்தக் கால சரோஜாதேவி, இன்னும் சிலருக்கு மல்லிகா ஷெராவத். ஷாரூக், ரஜினி, கமல், அஜித், விஜய் என்று பெண்பாலருக்கு ஹாண்ட்சம் ஆண்கள் பலர். ஆனால் சான்றோருக்கு அழகு எது என்று ஔவையார் சொல்வதை இந்தப் பாடலில் பாருங்களேன்.

சுரதந்தனில் இளைத்த தோகை; சுகிர்த 
விரதந் தனில் இளைத்த மேனி; - நிரதம்
கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல்அபிரா மம்.
கணவனுடன் கூடி சந்தோஷம் சுகித்துக் களைத்த மனையாளும், சொட்டுத் தண்ணி உள்ளே போகாமல் பரிசுத்தமான  விரதம் இருந்து இளைத்த பக்தர் மேனியும், "வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது" என்கிற ரீதியில் செல்வங்களை வாரி வாரிக் கொடுத்து இளைத்தவர்களும் (இவர்கள் தான் அக்காலத்தில் தாதா, இக்காலத்தில் அடி கொடுப்பவர்கள் தான் ஏரியா தாதா), உக்கிரமான போரில் அடிபட்டதனால் ஏற்பட்ட விழுப்புண் வடுவும், அதில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு நடப்படும் நடுகல்லும் சான்றோருக்கு அழகு.



2.பிறவிக் குணம்.
அவ்வப்போது கமறிக்கொண்டு கனைப்பது, கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, அசிங்கமான பெண்களை பார்த்தாலும் பழக்க தோஷத்தில் ஒற்றைக் கண் அடிப்பது, சதா காலாட்டிக்கொண்டே இருப்பது, எதையெடுத்தாலும் "ஹும்.ஹும்" என்று மோந்து பார்ப்பது, இருட்டிய பிறகு வேஷ்டியை தூக்கிக்கொண்டு தெரு முக்கில் அற்ப சங்கைக்கு ஒதுங்குவது என்று பல விஷயங்கள் "அது அவரோட பளக்கம்" என்றும் "அவரோடைய கூடப் பொறந்த குணம்" என்றும் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றது. எதெது நடைமுறை பழக்கத்தில் வருகிறது, எதெது பிறவியிலிருந்தே குணமாக இருக்கிறது என்பதை பற்றிய ஒரு அற்புதமான பாடல் கீழே.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

மெருகேறிய ஆளை அசத்தும் உயிர்ப்பான ஓவியங்கள் கைப் பழக்கத்தாலும், பேசப் பேச, பாடப் பாட அனைவரையும் கவர்ந்து இழுக்கும் செந்தமிழ் நாப் பழக்கம், கவனமுடன் கூர்ந்து படிக்கும் கல்வி எப்போதும் மனப் பழக்கம் என்றும் சாதாரணமாக நடப்பது கூட நடைப் பழக்கம் என்றும் சொன்ன ஔவை பிறரிடம் நட்பு பாராட்டுதல், ஐயோ பாவம் என்று இரக்கம் காட்டுதல் மற்றும் இல்லையென்று சொல்லாத வள்ளல் தன்மை இம்மூன்றும் பிறவிக் குணம் என்று போற்றுகிறார்.

நட்பு, தயை, கொடை இம்மூன்றுக்கும் மஹாபாரதத்தில் வரும் கர்ணன் பொருத்தமாக இருக்கிறான் அல்லவா?

3.பெரியார் சிறியர் கயவர்:
அறுத்த கைக்கு சுண்ணாம்பு கொடுக்க மாட்டான் என்று சிலரை எங்கள் பக்கத்தில் சொல்வார்கள். நகர வாழ்வு கூட அப்படிப்பட்டதுதான். காக்கா வலிப்பு வந்து ரோட்டில் விலுவிலுக்கென்று இழுத்துக்கொண்டு கிடந்தாலும் மணிக்கட்டை திருப்பி மணியை பார்த்து விட்டு "அச்சச்சோ. லேட் ஆயிடிச்சு" என்று ஆபீசுக்கு ஓடிவிடுவார்கள். சில பரோபகாரிகள் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று உதவி செய்து விட்டு தான் இடத்தை விட்டு நகர்வார்கள். "ஏம்பா. இதைக் கொஞ்சம் எனக்காக செய்யக்கூடாதா?" என்று கேட்டால் சிரமேற்கொண்டு செய்து முடிக்கும் பாங்குடையவர்கள். வலிய வந்து தானாகவும் செய்யாமல் தாவாங்கட்டையைப் பிடித்து கெஞ்சி கேட்டாலும் செவி சாய்க்காமல் அவர்கள் போக்கில் திரிபவர்கள் சிலர். இந்த மூவரைப் பற்றி ஒளவையின் பாடலும் விளக்கமும் கீழே.

சொல்லாம லேபெரியார் சொல்லிச் செய்வர்சிறியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே - நல்ல 
குலாமாலை வேற்கண்ணாய் கூருவமை நாடில் 
பலாமாவைப் பாதிரியைப் பார்.
நல்ல குலத்தில் தோன்றிய வேல் போன்ற விழியாளே, நம்மை ஒரு ஆபத்தில் பார்த்தவுடன் தாமாகவே முன்வந்து உதவிக்கரம் நீட்டுபவர்கள் உன்னதமான பெரியோர்கள். நாம் சென்று "உதவி" என்று கேட்டவுடன் ஓடோடி வந்து உதவுபவர்கள் நற்பண்பு சிறிதேனும் உள்ள சிறியோர்கள், உதவி கேட்டும் செய்யாமல் இருப்பவர்கள் கயவர்கள். இம்மூவரையும் அடையாளம் காண உனக்கு உவமை வேண்டுமா? பெரியோர்கள் பலாமரம் போன்றவர்கள். பூக்காவிட்டாலும் காய்த்துவிடுவர். சிறியவர்கள் பூத்து பின்னர் காய்க்கும் மாமரம் போன்றவர்கள். பூத்தாலும் காய்க்காத பாதிரியைப் போன்றவர்கள் உதவி கேட்டாலும் உதவாத கல்நெஞ்சக் கயவர்கள்.

4. யாரோடு எது போம் 
பக்கத்து பிளாட்டில் குடிவந்து, இரண்டு வருடத்தில் காலி செய்த காதலியான நண்பியை இழந்தவுடன் தாடியுடன் சோகராகம் பாடுபவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர் ஆபீஸ் நட்புகளை இழந்து வேறோர் இடம் செல்லும் போது "வலிக்குது" என்று துன்புறுவர். இன்னும் சிலர் "மச்சான்! வாழ்க்கையே வெறுத்துப் போச்சுடா" என்று அல்ப விஷயத்திற்கெல்லாம் அலுத்துக் கொள்வார்கள். யாரோடு எது போகிறது என்ற ஒளவையின் எளிதான பாடல் கீழே.
தாயொடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம் 
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் - மாயவாழ்வு
உற்றா ருடன்போம் உடன்பிறப்பால் தோள்வலிபோம் 
பொற்றாலி யோடெவையும் போம்.
பெற்ற தாயோடு அறுசுவையான உணவு போய்விடும்; தந்தை இறந்துவிட்டால் கல்வி கற்பதற்கான பொருளாதாரம் இழந்து அதுவும் போம்; தான் பெற்ற மக்கள்  இறந்தபின் செல்வம் அனைத்தும் சென்றுவிடும்; உறவினர்களுடன் மாய வாழ்வு நலம் மரிக்கும்; குடும்பத்தை சுமக்கும் தோள் வலிமை உடன்பிறப்புடன் சென்று விடும், பொன் தாலி அணிந்த மனைவி மறைந்துவிட்டால் எல்லாமே போம். என்கிறார் ஔவை.

5. பேஷ் பேஷ்
புகழுரைக்கு மயங்காதவர் எவரும் இலர். "சூப்பர்டா" என்று ஒரு வார்த்தை சொல்லி பல ஆயிரத்திற்கு ட்ரீட் வாங்கிக் கொண்டவர்கள் ஏராளம். "நீங்க நல்லா பண்றீங்க... அடி வெளுத்துட்டீங்க.. இதுல நீங்க தான் ராஜா உங்களை அடிச்சுக்க ஆளே இல்ல.." என்று வகைவகையாய் பாராட்டுரைகள் இவ்வையகத்தில் உண்டு. இருந்தாலும் யார் யாரை எங்கே புகழவேண்டும் என்று ஔவை கொடுக்கும் இந்த லிஸ்ட் நிச்சயம் கவனிக்கப் படவேண்டிய ஒன்று.

நேசனைக்கா ணாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல் 
ஆசானை எவ்விடத்தும் அப்படியே - வாச 
மனையாளைப்  பஞ்சணையில் மைந்தர்தமை நெஞ்சில்
வினையாளை வேலைமுடி வில்.
நண்பர்களை அவர்கள் முகத்துக்கு நேரே புகழக் கூடாதாம். அவர்கள் இல்லாதபோது புகழவேண்டும். நாம் படித்த குருவின் புகழ் எப்போதும் பாட வேண்டும். மனைவியை பஞ்சணையில் புகழ வேண்டும். நம் குலக்கொழுந்துகளை நெஞ்சுக்குள்ளேயும், நம்மிடம் வேலைப் பார்க்கும் வேலையாட்களை அவர்களது பணி முடிந்தவுடனும் வாயாரப் புகழ வேண்டும் என்கிறார் ஔவை. இந்த பட்டியல் அனைத்துமே இன்றும் அப்பட்டமான உண்மையல்லவோ.

காலம் கடந்து நிற்கும் ஒளவையின் பாடல்கள் இலக்கியம் தானே!

பின் குறிப்பு: இது என்னுடைய முதல் இலக்கிய ஜல்லி. பிடித்திருந்தால் பாராட்டுங்களேன், தொடர்ந்து அடிப்போம் இ.ஜல்லியை. இல்லையேல் "பேஷ் பேஷ்"ஷில் நண்பர்களுக்கு ஔவை சொன்னது போலவாவது செய்யுங்கள். நன்றி.

பட உதவி: http://www.manithan.co


இந்த ஜல்லியடிப்பதற்கு உந்துகோலாகவும் ஒளவைப் பாட்டியின் ஊன்றுகோலாகவும் இருந்த நூல், ஔவையார் தனிப்பாடல்கள். தெளிவுரை புலியூர்க்கேசிகன். பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்.

-


45 comments:

  1. பேஷ் பேஷ்.....பிடிச்சுருக்கு இந்த ஜல்லி:-)))))))

    ReplyDelete
  2. இது போன்ற இலக்கிய சுவை கொட்டும் (சொட்டும்) ஜல்லிகளை பல எதிர் பார்க்கிறேன். தங்களின் பதிவு படிக்கும் பெரும்பாலானோர் இது போன்ற தமிழ் சுவை உணர இது ஒரு நல்ல வாய்ப்பு.
    உங்களின் தமிழ் தொன்று தொடர வாழ்த்துக்கள்.
    வேண்டுகோள்:
    இதனை ஒரு தனி தொடர் பதிவாக எழுத வேண்டுகுறேன்.
    -ஈஸ்வரி.

    ReplyDelete
  3. ///தாயொடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
    சேயோடு தான்பெற்ற செல்வம்போம் - மாயவாழ்வு
    உற்றா ருடன்போம் உடன்பிறப்பால் தோள்வலிபோம்
    பொற்றாலி யோடெவையும் போம்///

    சத்தியமான வார்த்தைகளை
    சரித்திரம் நம்பிய
    உணர்ந்த வார்த்தைகளை
    இனிமையான
    இலக்கியத்தில்
    இயல்பான தமிழில்
    தந்திருப்பது
    அருமை நண்பா

    ReplyDelete
  4. காலத்தோடு இணைந்து இந்த இலக்கிய சிந்தனை நன்றாக இருந்தது... ஔவையின் கவிகளை எடுத்துக் கொண்டது நல்ல தேர்வு...
    வலைப்பூ எனும் களத்தில் ...’’உன்னால் எல்லாம் முடியும் தம்பி’’ என சொல்லவைக்கிறீர்கள்.....

    ReplyDelete
  5. மிகச் சிறப்பாக உள்ளது
    தொடர்ந்தீர்கள் ஆயின் மிக்க
    மகிழ்ச்சி கொள்வோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஔவை சொற்படி கேக்கணும்னா நான் உங்களை
    இங்கே புகழ முடியாது.அப்பறமா வேற எங்கயாவது புகழ்ந்துக்கறேன்.
    இலக்கிய ஜல்லியை தொடரவும்.

    ரொம்ப நாளா என் மனசுல உறுத்திக்கிட்டு இருந்த ஒரு விஷயம்
    ஔவை மனையாளை புகழ சொல்லிய இடம்.என்னவோ அந்த கருத்தோட
    ஒத்துப் போக முடியலை.புகழக் கூடிய தகுதி இருந்தா மனையாளை எந்த நேரத்திலும்
    எந்த விஷயத்துக்காகவும் புகழலாமே

    ReplyDelete
  7. நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  8. இன்றுதான் தங்கள் பக்கத்திற்கு முதலில் வருகைதருகிறேன்.

    மிகவும் நன்றாகவுள்ளது.

    தங்கள் இலக்கிய முயற்சியும் பாராட்டுதலுக்குரியது.

    :)

    ReplyDelete
  9. வணக்கம் ஆர்.வி.எஸ். என் வலைக்கு யார் உலை வைத்தனர் என்று தெரியவில்லை. ஆப்டர் எ ஷார்ட்/லாங் ப்ரேக்...வந்துட்டேன். அதுக்குள்ள ஏகப்பட்ட விசயங்களை எழுதி குவிச்சிட்டீங்க. கொஞ்சம் கொஞ்சமாக படித்து விடுகிறேன். நன்றி!!

    ReplyDelete
  10. @துளசி கோபால்
    நன்றிங்க மேடம்! ;-)

    ReplyDelete
  11. @Eswari
    பாராட்டுக்கு நன்றி.
    நிச்சயம் செய்கிறேன்! ;-))

    ReplyDelete
  12. @A.R.ராஜகோபாலன்
    நன்றி கோப்லி! ;-))

    ReplyDelete
  13. @பத்மநாபன்
    அப்ப இலக்கிய ஜல்லி அடிக்கலாம் அப்டீங்கறீங்க....;-)
    ஜமாய்ச்சுடலாம்... நன்றி பத்துஜி. ;-))

    ReplyDelete
  14. @Ramani
    நன்றி சார்! முயற்சிக்கிறேன்! ;-))

    ReplyDelete
  15. @raji
    பின்னால் பிறிதொரு இடத்தில் பாராட்டப்போவதற்கு நன்றி...
    ஔவை... மனையாள் பற்றிய பாராட்டு... முடிந்தால் அப்புறம் விவாதிப்போம்.. நிச்சயம் அது ஒரு பொருளில் இருக்காது என்பது திண்ணம். ;-))

    ReplyDelete
  16. @முனைவர்.இரா.குணசீலன்
    நன்றி நண்பரே! முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்.
    அடிக்கடி வாருங்கள். நன்றி. ;-))

    ReplyDelete
  17. @! சிவகுமார் !
    பரவாயில்லை பாஸ்! பொறுமையா படிச்சுட்டு வாங்க.. நன்றி.. ;-))

    ReplyDelete
  18. இலக்கிய ஜல்லி நன்றாயிருக்கிறது. தொடருங்கள் சகோ.

    ReplyDelete
  19. அருமையான பதிவு.
    அருமையான எழுத்து நடை.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. மோஹன்ஜி!ராஜி!இந்த ஆர்விஎஸ் ஒடைச்சிருக்கற ஜல்லி நல்ல முக்கால் ஜல்லி போல ஒரே அளாவா அழகா ஒடஞ்சிருக்கில்ல.அடிக்கடி இப்படியும் இவர் எழுதலாம். அவர்கிட்ட இதைச் சொல்லிடாதீங்க.

    அப்புறம் மனையாளைப் பஞ்சணையில் என்பதற்குப் அவளைப் பஞ்சு போல் மென்மையாய் அணைத்து எல்லா நேரமுமே பாராட்டும்படியே ஔவை சொல்கிறாள்.

    ReplyDelete
  21. ஒரு முடிவோடதான் இருக்க போல..
    ம்ம்ம்.. ஜமாய்..

    பயனுள்ள / கருத்துள்ள பாடல்கள்..

    ReplyDelete
  22. இலக்கிய கிளறல் அருமையாக இருந்ததால் ஜல்லி எனும் வார்த்தையை தவிர்த்து சிந்தனை என்று மாற்றினேன்... தொடரவும் இலக்கிய சிந்தனையை ...

    ReplyDelete
  23. ஒரு பேச்சுக்காக சொல்வதாயிருந்தாலும், 'அசிங்கமான பெண்கள்' என்று யாருமே கிடையாது நண்பரே :)

    கணினி மாயையா கண் மாயையா தெரியவில்லை - பாட்டி வரிகள் குலாமலி ஒபாமா என்று கண்ணில் விழுந்தன என்றால், சுந்தர்ஜியின் 'மனையாளைப் பஞ்சணை' கண்ணில் 'மலையாளப் பஞ்சணை' என்று கண்ணில் பட்டு தீவிரமாகப் படிக்கச் சொன்னது:)

    இலக்கியம்னீங்களே...? இதானா?

    ReplyDelete
  24. நல்ல இலக்கியப் பதிவு அண்ணா...
    எனது பள்ளிக் காலத்து தமிழ் ஆசிரியர் நினைவுக்கு வந்து விட்டார்..
    அவ்வபொழுது இது போலவும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  25. தமிழ்மண நட்சத்திர வாரம்னுட்டு தமிழ்மணப் பட்டையே காணோமே ஆர் வி எஸ்....?

    ReplyDelete
  26. RVS,
    ஆயிரத்தில் ஒன்று!

    ReplyDelete
  27. @கோவை2தில்லி
    நிச்சயமாக தொடர்கிறேன்.. நன்றி சகோ. ;-)

    ReplyDelete
  28. @Rathnavel
    நன்றி ஐயா! ;-))

    ReplyDelete
  29. @Madhavan Srinivasagopalan
    எப்படியும் எல்லோரையும் காலி பண்ணிவிடுவது என்ற முடிவோடுதான் மாதவா....
    நன்றி.. ;-))

    ReplyDelete
  30. @சுந்தர்ஜி
    ஜி! உங்கள் விளக்கம் அருமை!
    பின்னூட்டத்திலேயே பதிவெழுதும் பதிவர்கள் நீங்கள்! ;-))

    ReplyDelete
  31. @பத்மநாபன்
    கிளர்ந்த சிந்தனை.. கிளரும் சிந்தனையாக.... நன்றி பத்துஜி! ;-))

    ReplyDelete
  32. @அப்பாதுரை
    சரி தலைவரே! எல்லாத்தையும் ஒத்துக்கறேன்....
    இலக்கியம்ன்னா......இலக்கியம்ன்னா.... இ - ல - க் - கி - ய - ம். அவ்வளவுதான் எனக்கு தெரியும் தல! ;-))

    ReplyDelete
  33. @இளங்கோ
    நன்றி தம்பி. ;-))

    ReplyDelete
  34. @அன்புடன் அருணா
    அட! நன்றிங்க... ;-)))

    ReplyDelete
  35. @ஸ்ரீராம்.
    அவர்களிடமே கேட்டுவிட்டேன்.. ஏதோ பிரச்சனையாம்.. நாம ஸ்டாரா இருக்கிறது வலைக்கே பொறுக்கலை... என்ன பண்ணலாம்? ;-))

    ReplyDelete
  36. @Anonymous
    நன்றி அனானி! ;-)) யாருங்க நீங்க... இலட்சத்தில ஒருத்தர் நீங்க... ;-))

    ReplyDelete
  37. நல்ல பதிவு.

    நட்சத்திர வாழ்த்துகள் மன்னார்குடியாரே!!!

    ReplyDelete
  38. அடடா! அவ்வையை அழகாய் பதிவிட்டிருக்கிறீர்கள்.. பாடல்கள் நல்ல தேர்வு. உங்கள் விளக்கங்கள் ரசிக்கும் படி இருந்தது..

    நீங்கள் மேலும் இது போன்ற சில பதிவுகள் இடுங்கள். அப்புறமா சொல்றேன் எப்படி இருக்குன்னு. சரிதானே!

    ReplyDelete
  39. @ரவிச்சந்திரன்
    நன்றிங்க வெட்டிக்காட்டாரே! ;-))
    ரொம்ப நாளா இந்தப் பக்கமே காணோம்;-(

    ReplyDelete
  40. @மோகன்ஜி
    சரிங்கண்ணா! ;-))

    ReplyDelete
  41. நீதிபதி அவர்களே!" என்று அடிக்கடி உரிமையாகவும், செல்லமாகவும், கிண்டலாகவும், அதிகாரமாகவும், ஆக்ரோஷமாகவும் விளித்து வாதாடுவார்கள்.//

    அருமையான மலரும் நினைவுகள் சுவைக்கிறது.

    இலக்கிய ரசம் இனிக்கிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  42. அட அட
    பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு ...

    ReplyDelete
  43. எவ்ளோ நயம்பட எழுதி இருக்கீங்க

    நன்றி.

    ஔவையின் பாடல் மிக அருமை

    ReplyDelete
  44. ஜல்லி,.. ஜெல்லி வித் ஐஸ்க்ரீம் சாப்பிட்ட மாதிரி இருந்தது.

    இந்தமாதிரியான இலக்கியரசத்தையும் அடிக்கடி பரிமாறுங்க :-)))

    ReplyDelete