Sunday, August 28, 2011

மன்னார்குடி டேஸ் - கம்ப்யூட்டர் கதைகள்


தொன்னூறுகளின் தொடக்கத்தில் கைபேசி தொல்லையற்று பிக்கல் பிடுங்கல் இல்லாமல் சுகஜீவனம் நடத்திக்கொண்டிருந்தோம். அக்காலத்தில் ”கம்ப்பியூட்டர்” என்பது ஒரு மாயச் சொல். கம்ப்பூட்டர், கம்ப்பியூட்டர், கம்ப்யூட்டர் என்று பூன்னு சொல்லலாம், புஷ்பம்னு சொல்லலாம், புட்பம்னு சொல்லலாம் இல்ல நீங்க சொல்ற மாதிரி கூட சொல்லலாம்ங்கிற ரீதியில் போட்டா போட்டியில் கம்ப்யூட்டர் பாஷை பேசிக்கொண்டார்கள். ”ஒன்னை வாங்கி வீட்ல வச்சுக்கிட்டா.. வீட்டோட வரவுசெலவை கவனிச்சுக்கிட்டு  மொத்த கணக்கு வழக்கும் பார்த்துக்குமாமே!” என்று திண்ணையில் சப்ளாங்கால் கட்டி உட்கார்ந்து இருனூரு பக்க அக்கௌண்ட்ஸ் நோட்டில் கோடு கிழித்து எழுதும் ஒரு கணக்குப்பிள்ளையாய் கம்ப்யூட்டரை பாவித்து மூக்கின் மேல் விரலை வைத்து வியந்தவர்கள் அனேகம் பேர்.

ஒரு ஃபூல்ஸ்கேப் டம்மித் தாளை சைக்கிள் ஹாண்ட் பார் இடுக்கில் சொருகிக்கொண்டு அப்போதும் நிறைய பேர் லொட்டு லொட்டென்று தட்டி விரலொடிய மளுக்மளுக்கென்று சொடுக்கி டைப்ரைட்டர் கற்றுக்கொண்டிருந்தார்கள். சைட் அடிக்கும் காலத்தில் டைப் அடித்தார்கள். சிலருக்கு டைப் பழகும் இடத்திலேயே சைட்டும் வாய்த்தது. காலை மாலை இருவேளையும் ஒரு மணி நேர ஸ்பீட் விரல் பயிற்சி. டைப் அடித்துவிட்டு வந்து கேரம்போர்டு விளையாடினால் நிச்சயம் பேக் ஷாட்டில் ரெட் அண்ட் ஃபாலோ போட்டு கேமை கெலிக்கலாம். “ட்ர்ர்ரிங்... டிங்..டிங்..டிங்”கென்று கேரேஜ் ரிட்டர்ன்கள் மெல்லிசையாய் கினிகினித்துக்கொண்டிருந்த காலம். ”என்னங்க கம்ப்யூட்டர் வந்துருச்சே இன்னும் ஏன் டைப்ரைட்டிங் பழகுறீங்க?” என்று யாரையாவது வழிமறித்துக் கேட்டால் “அதுல வேலை பார்க்கறதுக்கு மொதல்ல இதுல தட்டிப் பளகனும். தெரியும்ல...” என்று தொழில் நுட்ப வல்லுனர்கள் போல அட்வைஸ் செய்து ராகமாக இழுப்பார்கள்.

கல்லூரி மாணவன் ஒருவன் கக்கத்தில் புஸ்தகத்தை சொருகிக் கொண்டு கம்ப்யூட்டர் க்ளாஸ் போகிறான் என்றால் அந்தக் காலத்தில் அவன் ஒரு படிப்பு பயில்வான். ஏதோ தேவ பாஷை பயிலும் நினைப்பில் மெதார்பாகத் திரிவார்கள். அவர்களிடமிருந்து ஒரு இரண்டடி இடைவெளி விட்டு ஒதுங்கி சர்வஜாக்கிரதையாக நடந்து கொள்வோம். பேச்சினிடையே தமிழிலிருந்து அவ்வப்போது தாவி ஆங்கிலத்தில் “பீட்டர்” விடுவதைப் போல அப்போது கம்ப்யூட்டர் பற்றி படிப்பாளி யாராவது பேசினால் அது மெகா யந்திர தந்திர பீட்டர். அல்டாப்பு. அதன் அமரத்துவத்தன்மை நமக்கு அப்போது தெரியவில்லை.

ஏசி என்கிற குளிரூட்டும் சாதனம் இல்லாவிட்டால் கம்ப்யூட்டர் உயிர் வாழாது என்று நெற்றி வியர்வையைக் கர்சீப்பால் துடைத்துகொண்டு சுடச்சுட பயமுறுத்தினார்கள். பக்கத்து இலை பாயசம் மாதிரி ”மெஷினுக்கு வேணுங்க” என்று சொல்லி கோடைக்காலத்தில் மன்னையில் கொடைக்கானல் குளிர் சுகம் கண்டவர்கள் ஏராளம். தெரியாத்தனமாக கம்ப்யூட்டர் அறையின் கதவை வேவு பார்க்கும் ஒற்றன் போல லேசாக திறந்து எட்டிப்பார்த்தால் “தூசி போயிடுச்சுன்னா அது ஸ்ட்ரக் ஆயிடும். எப்பவும் கதவை சார்த்தியே வையுங்க” என்று அதன் டஸ்ட் அலர்ஜிக்கு வக்காலத்து வாங்கி கடுப்படித்து வைவார்கள்.

கல்லூரியில் இயற்பியல் படிக்கும் பொழுது கடைசி பெஞ்சில் தூங்கி எழுந்து அரட்டையடித்த நேரம் போக கவனித்த முதல் கம்ப்யூட்டர் பாடம்- ஃபோர்ட்ரான் 77. பூவுலகில் இருக்கும் வஸ்தாது கம்ப்யூட்டர்களை சோதிக்கும் வல்லிய பாஷை இது என்றும் விஞ்ஞானிகளுக்கான பிரத்தியேக கம்ப்யூட்டர் மொழி என்றும் சரம் சரமாக ஒரு மீட்டர் அளவிற்கு பீட்டர் விட்டுக் கற்பித்தார்கள். ”இது விஞ்ஞானிகளின் சாய்ஸ்” என்று எடுத்தவுடன் ஏகத்துக்கும் மிரட்டியவுடனேயே உள்ளுக்குள் ஒரு உதறல் எடுத்துவிட்டது.

தாயுமானவன் என்ற மூக்குக் கண்ணாடியை மூக்கின் நுனியில் தொங்கவிட்ட பேராசிரியர் இந்த வகுப்பு எடுத்தார். வகுப்பறைக்குள் சிகரெட் பசியைத் தூண்டிவிடும் மனித அப்பிடைஸர். உள்ளே நுழைந்தவுடன் ‘குப்’பென்று வில்ஸ் மணக்கும். சாக்பீஸை சிறு சிறு துண்டாக்கி தூங்குபவர்கள் முகத்தில் குறி பார்த்து எறிந்து தாக்குவதில் வல்லவர். நரிக்குறவர்களின் உண்டிவில் (கல்ட்டாபில்ட்டு மற்றும் கவண்கல் என்று தேசத்தின் பல்வேறு பிரதேசங்களில் பலவாறு அழைக்கப்படும் ஆயுதம்.) இவரிடம் பிச்சை வாங்க வேண்டும். அவ்வளவு இலக்குத் தவறாத துல்லியம். வேகம்.  PROGRAM என்று கரும்பலகையில் ஆலாபனை எழுத ஆரம்பித்து நடுவில் வர்ணம், கீர்த்தனை பாடி கடைசியில் END என்று ஃபோர்ட்ரானில் மங்களம் பாடுவார். இதுதான் கணிப்பொறி என்கிற வலையில் நான் எலி போல அகப்பட்டுக்கொண்ட முதல் சம்பவம். ஆரம்பத்திலேயே “விஞ்ஞானி” வேப்பிலை அடித்துவிட்டதால் ஒருவித பேய் அடித்த ஜுரத்தோடு கற்றுக்கொண்டோம். அன்று தெரியாது இதுதான் எமது இன்றைய வாழ்வாதாரமாகப் போகிறது என்று.

நான் இயற்பியல் இளங்கலை பயின்று “அறிவியல் இளைஞராக” தேறி அறிஞர் பட்டம் விட்ட ஸாரி பட்டம் பெற்ற கல்லூரியிலேயே எம்.சி.ஏ என்கிற முதுகலை கணினி பாடத்திட்டம் கன ஜோராக அறிமுகப்படுத்தப்பட்டது. டொனேஷன் என்கிற காரல் இல்லை கேபிடேஷன் ஃபீஸ் என்கிற கசப்பு கிடையாது. பி.எஸ்.ஸி என்ற மூன்றெழுத்துக்கு மேல் படிப்பதாக கிஞ்சித்தும் எனக்கு எண்ணமில்லை. ஒரு மனிதன் பதினைந்து வருடங்கள் படித்துக் கிழித்த பிறகு வேறு என்னதான் எதிர்ப்பார்க்கிறார்கள் என்ற வேதனையில் நான் இருந்தபோது என் அக்காளின் அறிவுரைப்படி எம்.சி.ஏ படிக்க முடிவானதும் ”கம்ப்யூட்டர் என்றால் என்ன?” என்ற பால பாடத்தில் இருந்து ஆரம்பித்தேன். தற்போது அமெரிக்காவில் ஆரக்கிள் நிறுவனத்தில் டேட்டாபேஸ்களை பதம் பார்க்கும் தொழிலிலிருக்கும் ரெங்காவின் தயவால் படிப்பின் பால் பற்றுதலோடு ஈர்க்கப்பட்டேன். கடைசி பெஞ்சிலிருந்து முதல் பெஞ்சிற்கு ப்ரமோஷன் பெற்றேன். முதல் வருட இறுதியில் கம்ப்யூட்டரின் மேல் ஒரு பிடிமானமும் அபிமானமும் ஏற்பட்டது.

இப்போது வீட்டுக்கு வீடு கம்ப்யூட்டர் ஒரு அழுக்கு டேபிளில் சிரிப்பா சிரிப்பது போல அப்போது மலிந்திருக்கவில்லை. அது ஒரு அதியசப் பொருள். ஏசி கேட்கும் வெகுமதியான பொருள். பழகுவதற்கு ஊரிலும் ஒரு கம்ப்யூட்டர் கிடைத்தால் சௌகரியமாக இருக்கும் என்று எண்ணிய எனக்கும் ரங்காவிற்கும் தோதாக அமைந்தது தான் சத்யா கம்ப்யூட்டர்ஸ்.

ஸ்ரீராமநவமி பதிவில் மிருதங்கத்தை தவிடுபொடியாக வாசித்த கோபால் அண்ணாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அவர் ஒரு தொழில் முனைவர். சதா சர்வகாலமும் பார்க்கும் இடங்களில் எல்லாம் ஓயாமல் பிஸ்னெஸ் பேசும் தொழிலார்வம் மிகுந்த ஆண்ட்ரப்ரனர். ஐந்து நிமிட இடைவெளியில் அமெரிக்காவில் ஆரம்பித்து ஐயம்பேட்டை கடைத்தெரு வரையில் ஒரு ஆயிரம் சுயதொழில் தொடங்குவதற்கான உத்திகளை அரைகுறையாய் மடித்த முழுக்கச் சட்டையின் உள்ளேயிருந்து அள்ளி வீசுபவர். அவருக்கு திடீரென்று ஒரு நாள் கம்ப்யூட்டர் செண்டர் தொடங்கும் விபரீத ஆசை முளைத்தது. “டேய் ஆர்.வி.எஸ். நா கம்ப்யூட்டர் செண்டர் ஆரம்பிக்கிறேன். நீயும் ரெங்காவும் வந்து க்ளாஸ் எடுக்கிறீங்களா?” என்று ராஜகோபாலஸ்வாமி கோயில் துவஜஸ்தம்பம் வாசலில் வைத்து கேட்டவுடன் மனம் ரெக்கை கட்டி சிறகடித்துப்  பறந்தது. சார்லஸ் பாபேஜே கோபால் உருவில் நேரே வந்து “வாப்பா...வா” என்று இருகரம் நீட்டி பாசத்தோடு அழைத்தது போல இருந்தது.

சாந்தி தியேட்டரில் ஈவினிங் ஷோ இண்டெர்வெல் பெல் சத்தம், வேலையில் மூழ்கிய நம்மை தூக்கிவாரிப் போடச் செய்யும் அருகாமையில் சத்யா கம்ப்யூட்டர்ஸுக்கு கடை பிடித்தோம். தியேட்டர் எதிர்புறம் மாரீஸ் டைலர்ஸ் மொட்டை மாடியில் கீற்றுக் கொட்டகையில் தட்டிக் கதவு போட்ட இடத்தில் சத்யா கம்ப்யூட்டர்ஸ் இயங்கியது. ”இங்க டைப் ரைட்டிங்கும் சொல்லித் தருவீங்களா?” என்று ரெண்டு பேர் இடுப்பில் கூடையோடு வந்து விசாரித்துவிட்டு போனார்கள். அப்புறம் ஒரு மாதத்திற்கு வேறு ஒரு பயல் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. ஈ ஓட்டுகிறோம் எறும்பு ஓட்டுகிறோம் என்று ஊரே பழித்தாலும் நானும் ரெங்காவும் தீவிர “சி” பயிற்சியில் ஈடுபட்டோம். முதல் போட்ட கோபால் ஒழிந்த நேரத்தில் வந்து உட்கார்ந்து “டேவ்”, “ப்ரின்ஸ் ஆஃப் பெர்சியா” போன்ற அரும்பெரும் கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் மூழ்கி முத்தெடுத்து சந்தோஷித்தார். ”ஏ இன்னிக்கு டேவ்ல அஞ்சு லெவெல் முடிச்சேன்” என்று காலரைத் தூக்கிப் பெருமைப்பட்டுக்கொண்டாரே தவிர கம்ப்யூட்டர் செண்டர் அடுத்த லெவலுக்கு வளரவேயில்லை.

வாஸ்து பார்த்து முதல் தெருவிற்கு சென்ட்டரை மாற்றினால் சித்ரகலாவும், சரவணனும் டிபேஸ் படிக்க வந்தார்கள். கொஞ்ச நாள் கூத்தடித்து இந்த கம்ப்யூட்டர் பழசான பின் நாங்களிருவரும் ப்ராக்டீஸ் செய்வது ஒன்றுதான் நடக்கிறது என்று தெரிந்து நவ்தால் பூட்டு போட்டு மூடிவிட்டு கைத்தொழில் சிலதுகளை நேர்த்தியான வேலைப்பாட்டுடன் முடிக்கத் தெரிந்த கோபால் அண்ணா வேறு பூவா தரும் தொழில்களை தொடங்கினார். ரோஸ் கலர் சம்க்கியில் வெங்கடாஜலபதியை நீலக் கலர் வெல்வெட் துணியில் குத்தி வரைந்து கோல்டன் கலர் ஃப்ரேம் மாட்டி பீஸ் 25 ரூபாய் மேனிக்கு விற்க ஆரம்பித்தார்.

முதல் தெரு க.சென்டர் வாசலை மூடி ஒத்தைத் தெருவில் புதியதாக ஒரு க.சென்டர் வாசலை எங்களுக்காகத் திறந்தான் இறைவன். செக்கச்செவேலென தேசலான ஸ்ட்ரைப்ஸ் போட்ட முழுக்கைச் சட்டையை மடக்கி விட்ட ஒரு இளைஞர் பிர்லா இன்ஸ்டிட்டியூட் போல பாஸ்கர் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி (BITS) என்று மன்னையில் கம்ப்யூட்டர் புரட்சி ஏற்படுத்த பூஜை போட்டு கடை விரித்தார். அன்றிலிருந்து ரெங்கனுக்கும் எனக்கும் அந்த ஆஸ்பெஸ்டாஸ் மாடி புகலிடமாயிற்று.

பானையை ஒருக்களித்து வைத்தது போல பதினான்கு இன்ச்சுக்கு ஒரு கருப்பு-வெள்ளை ஸ்க்ரீன், வெள்ளாவியில் வெளுத்த வெள்ளை டவர் ஸி.பி.யூ, விண்டோஸ் 3.1, ஸி.பி.யூ வரை வால் நீண்ட மௌஸ், அதைத் தாங்கும் மெத்மெத் அட்டை,  ஆளைத் தூக்கும் காற்றடிக்கும் ஆளுயர உஷா பெடஸ்டல் ஃபேன், கதவடைத்த கேபின் என்று நவநாகரீக சென்டர் அது. எட்டு இன்ச், அஞ்சே கால் இன்ச், மூனரை இன்ச் என்று பல சைஸ்களில் ப்ளாப்பி டிஸ்க் சொருகும் அறை வைத்த கம்ப்யூட்டரில் ஆண் பெண் கூட்டம் அலையலையாய் குவிந்தது. ”ஏ ராக்காயி மூக்காயி எல்லோரும் ஓடி வாங்கடி” என்ற கணக்காக காலை ஐந்து மணியில் இருந்து இரவு பதினொன்று வரையில் மன்னை மக்கள் பேட்ச் பேட்சாக வரிசையில் நின்று கம்ப்யூட்டர் கற்றார்கள்.

டாஸ் ப்ராம்ப்ட்டில் தாஸான தாஸனாக பேஸிக் பயின்றார்கள். இராப்பகல் அகோராத்திரியாக டிபேஸ் மூன்று ப்ளஸில் கம்பெனி கணக்கு எழுதினார்கள். நரி ப்ரோவில் நிறைய ஸ்க்ரீன் வரைந்து கணக்கு எழுதினார்கள். ஃபிபனோக்கி சீரிஸ் எழுதுவதற்கு ‘ஸி’ உபயோகித்தார்கள். கோபால் அண்ணா கம்ப்யூட்டர் கடையில் இல்லாத கோபால்-85 இவரிடம் பெரிய பெரிய ஃப்ளாப்பிகளில் இருந்தது. கோபால்-85-ல் நூறு வரி கோடில் ஒரு வரி ஃபுல் ஸ்டாப் வைக்காமல் எழுதினால் முன்னூறு முழம் நீளத்திற்கு “தப்பு..தப்பு..தப்பு...” என்று இரக்கமேயில்லாமல் கம்ப்யூட்டர் காறித் துப்பியது. மிகவும் ப்ரயத்தனப்பட்டு எழுதிய ஒரு வகுத்தல், பெருக்கல், கூட்டல் கழித்தல் இருக்கும் ப்ரோகிராமை தன்னிடம் காண்பித்த பையனை “இதுக்குப் போயா இவ்ளோ காசு குடுத்து படிக்கிற... இத ரெண்டு நிமிசத்ல சொல்லாலாமே” என்று நாலு பேர் முன்னால் கண்றாவியாக காலை வாரினார் ”இவன் தந்தை என்னேற்றான் கொல்” என்ற சொல் வேண்டாத அப்பா ஒருவர்.

எம்.சி.ஏவின் மூன்றாவது வருடத்தில் INFOFEZ என்ற கல்லூரியின் தொழில்நுட்ப ஆண்டு விழாவிற்கு தஞ்சாவூர் ஓரியண்டல் டவர்ஸில் வாத்தியார் சுஜாதாவுக்கு ரூம் ரிசர்வ் செய்தோம். குத்துவிளக்கேற்றிய விழாவில் வாத்தியாரை பேச அழைத்தவுடன் அவர் பேசிய திருவாசகமாகிய முதல் வாசகம் “இங்க எல்லாருக்கும் தமிழ் தெரியும்ல”. ”ஹோ” என்று ஒருமுறை அரங்கம் அதிர்ந்து அடங்கியது. கம்ப்யூட்டரின் தற்கால பயன்பாட்டைப் பற்றி அக்காலத்தில் ஒரு பதினைந்து நிமிடங்கள் பேசினார். ஏட்டுச் சுரைக்காயாக படித்தது கறிக்கு உதவாது என்பதை நாசூக்காக எடுத்துரைத்தார். கையில் கொண்டு வந்திருந்த ஒரு வீடியோ கேசட்டை பெருந்திரையில் போட்டுக் காட்டினார்.

எல்லாம் கிராஃபிக்ஸ் காட்சிகள். திரையிட்ட நூறு காட்சிகளில் ஆண்-பெண் உருவம் இரண்டு முகத்தோடு முகம் புதைத்து முத்தமிடுவதைப் போன்ற ஒரு காட்சியில் கூட்டம் கூக்குரலிட்டதை பார்த்து அதை நிறுத்தி “நீங்கள் இதுபோல செய்ய முடியுமா?” என்று ஒரு போடு போட்டார். இரு வினாடிகள் அரங்கு நிறைந்த மௌனத்திற்கு பின்னர் ”இது போன்ற காட்சிகளை வடிவமைக்க முடியுமா? என்று கேட்டேன்” என்று சிரித்தார், பலத்த கரவொலிகளுக்கிடையே! என் ந்யூரான்களில் அழியாமல் புதைந்து கிடந்த அந்தக் கைத்தட்டல்களும், நெடிய நெடுமாலாக சற்றே கூன் விழுந்தும், முன் நெற்றியில் முடி புரள மேடையில் நின்று வாத்தியார் புன்னகைத்ததும் காலம் அழிக்கமுடியாத மூளையின் ஒரு முடிச்சில் நிரந்தரமாக செதுக்கப்பட்டவை.

காலையில் கல்லூரியில், மாலையில் பிட்ஸ்ஸில் என்று மன்னையில் கம்ப்யூட்டர் வாழ்க்கை  நாளொரு பிட்ஸும் பொழுதொரு பைட்ஸுமாக வளர்ந்தது. நாங்களும் விற்பன்னர்களாகி(?!?!) திசைக்கு ஒருவராக பிழைப்பு தேடி வந்துவிட்டோம். இன்னமும் மன்னை மக்கள் அதே தீவிர முனைப்புடன் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று பயில்கிறார்களா? மன்னை BITS-இன் சர்ட்டிஃபிகேட் வெளியூர்களில் மரியாதையுடன் செல்லுபடியாகிறதா? பாஸ்கருக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் மூன்றாம் தெரு ஆக்ஸ்போர்டு கம்ப்யூட்டர் பயிற்சி மையம் உள்ளதா? இராவில் எவ்வளவு பேர் இணைய உலா வருகிறார்கள்? ஐ 3, ஐ 5, ஐ 7 போன்றவைகளில் பழகுகிறார்களா? எக்கச்சக்க கேள்விகள். அடுத்த முறை மன்னை விஜயத்தின் போது BITS ஐ எட்டிப் பார்க்கணும்.

பட உதவி: படத்தில் இருப்பவர் சார்லஸ் பாபேஜ் (1791-1871) http://www.willamette.edu

-

58 comments:

  1. ஒத்தை தெருவுல நானும் கம்பியூட்டர் படிச்சது ஞாபகம் வருது...

    மன்னை days.......
    - Findlay student

    ReplyDelete
  2. nice article. its remembering those days.

    ReplyDelete
  3. என் ந்யூரான்களில் அழியாமல் புதைந்து கிடந்த அந்தக் கைத்தட்டல்களும், நெடிய நெடுமாலாக சற்றே கூன் விழுந்தும், முன் நெற்றியில் முடி புரள மேடையில் நின்று வாத்தியார் புன்னகைத்ததும் காலம் அழிக்கமுடியாத மூளையின் ஒரு முடிச்சில் நிரந்தரமாக செதுக்கப்பட்டவை.

    ஒரு ரோட்டரி கிளப் இருபத்தி ஐந்தாவது ஆண்டு விழாவிற்கு நெல்லை வந்த போது நடந்த நிகழ்ச்சிகள், எனக்கும் இப்படித்தான் நினைவில் உள்ளது

    ReplyDelete
  4. இயற்பியல் என்றால் என்ன?
    நல்ல லூட்டி அடித்திருக்கிறீர்கள். very good. நினைவுகள் சுவையானவை. வாத்தியார் உள்பட.

    ReplyDelete
  5. மைனர் வாள் கண்கள் அகல விரிகிறது எவ்ளோ நியாபகம் உங்களுக்கு
    ம் மறுமுறை படித்து விட்டு வருகிறேன்
    அங்க அங்க நமது பள்ளி ஆசிரியர்களை நினயுகூர்ந்ததை கண்டு வியக்கிறேன்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. ஆரம்ப கால கணிணி மலரும் நினைவுகள் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. வகுப்பறைக்குள் சிகரெட் பசியைத் தூண்டிவிடும் மனித அப்பிடைஸர். உள்ளே நுழைந்தவுடன் ‘குப்’பென்று வில்ஸ் மணக்கும். சாக்பீஸை சிறு சிறு துண்டாக்கி தூங்குபவர்கள் முகத்தில் குறி பார்த்து எறிந்து தாக்குவதில் வல்லவர். நரிக்குறவர்களின் உண்டிவில் (கல்ட்டாபில்ட்டு மற்றும் கவண்கல் என்று தேசத்தின் பல்வேறு பிரதேசங்களில் பலவாறு அழைக்கப்படும் ஆயுதம்.) இவரிடம் பிச்சை வாங்க வேண்டும். அவ்வளவு இலக்குத் தவறாத துல்லியம். வேகம்.

    ஆஹா.. ஆஹா.. கல்லூரி நினைவுகள் எனக்குள்ளூம் இப்போது.

    என் ந்யூரான்களில் அழியாமல் புதைந்து கிடந்த அந்தக் கைத்தட்டல்களும், நெடிய நெடுமாலாக சற்றே கூன் விழுந்தும், முன் நெற்றியில் முடி புரள மேடையில் நின்று வாத்தியார் புன்னகைத்ததும் காலம் அழிக்கமுடியாத மூளையின் ஒரு முடிச்சில் நிரந்தரமாக செதுக்கப்பட்டவை.

    ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹை ஸ்கூலுக்கு வந்தார்.. ‘லாப்ல நா படிக்கற காலத்துல ஒரு எலும்புக்கூடு இருக்கும்.. அதை வச்சு அனாடமி சொல்லித் தந்தாங்க..’ ஒரு இடைவெளி விட்டு ‘இப்பவும் அதே ஆள்தான் இருக்காரா’ என்றாரே பார்க்கலாம். என்ன அனாயசமாய் ஒரு ஜோக்.
    கிழக்கு ரங்கா மேனிலைப் பள்ளிக்கும் வந்தார். ‘அப்போ நாங்க கிழக் குரங்கான்னு படிப்போம்.. அடிக்க வருவாங்க’
    அவருக்கு அறிவியலும் நகைச்சுவையும் பின்னிப் பெடலெடுத்தன வார்த்தைகளில்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. சுவாரசியமான பதிவு.வாத்தியார் பற்றிய மலரும் நினைவு சுகந்த மணம் வீசியது
    பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  10. நல்ல நினைவுகள். விகடனில் சுகா வின் நினைவுகளுக்கு சமமாக சுவாரஸ்யமாக இருந்தன. சுஜாதா என்ற பெயர் பதிவுக்கு வண்ணமும் சுவையும் கூட்டுகின்றது.

    ReplyDelete
  11. உங்கள் மன்னை கம்ப்யூட்டர் நினைவுகள் சுவாரசியாமாக இருக்கு. திரு. சுஜாதா பற்றிய உங்க நினைவுகள் அருமை.

    ReplyDelete
  12. சண்டே கூட எம்புட்டு பேர் நல்ல பிள்ளையா வந்து படிச்சிட்டு கமென்ட் போடுறாங்க. எல்லாம் மன்னை மகிமை

    ReplyDelete
  13. சம்பவங்களை, சுவைபட எழுதும் உங்கள் திறன், வியக்க வைக்கின்றது.

    ReplyDelete
  14. //மோகன் குமார் said...
    சண்டே கூட எம்புட்டு பேர் நல்ல பிள்ளையா வந்து படிச்சிட்டு கமென்ட் போடுறாங்க. எல்லாம் மன்னை மகிமை//

    haa haa haa :-))

    ReplyDelete
  15. போர்ட்டானும் கோவாலும் பயப்படுத்திய காலங்களை கிளறி எடுத்து விட்டீர்கள்...

    வாத்தியாரிடம் நேரில் வாழ்த்து..அது தான் இந்த போடு போடுகிறீர்கள்..

    வாத்தியார் 90 களில் ஒரு கட்டுரையில் ..போட்டது போட்டபடி விட்டுவிட்டு ஜாவா படிக்கச் சொன்னார்.. அதை கேட்டவர்கள் இன்று கில்லிகளாக ஜல்லி அடிக்கிறார்கள்...

    ReplyDelete
  16. you registered the experience in an excellent fashion.Mannargudi has produced so many people who made silent revolution,Baskar is one among them.

    ReplyDelete
  17. நல்லப்பதிவு,நானும் வெகு நாட்களுக்குப்பிறகு மன்னை போய் வந்தேன். மன்னார்குடி அப்படியேத்தான் இருக்கிறது,ஆனால் அங்கு வசிப்பவர்கள் அப்டேட்டாகத்தான் இருக்கிறார்கள்.பாமினி ஆறு கூவமாக மாறி ஓடிக்கொண்டிருக்கிறது,

    ReplyDelete
  18. அருமையான பதிவு.
    அழகான எழுத்து நடை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. கேஸ் அடுப்புக்கு முன்னால் மண்ணெண்ணை அடுப்பு
    உபயோகித்தவர்கள் போலநாங்களெல்லாம் உங்களுக்கு
    கொஞ்சம் முந்தியவர்கள்
    டிகிரி படிச்சா போறாது எந்த வேளைக்கானாலும்
    டைப் தான் முக்கியம் எனச் சொல்லப்பட்டு
    ஆங்கிலம் ஹையர் மட்டும் போறாது தமிழும் வேண்டும்
    சார்ட் ஹேண்ட் லோயராவது வேண்டும் என
    தொடர்ந்து பெற்றோர்கள் அனுப்ப
    தட்டச்சு மையங்கள் எல்லாம் ஒரு புதிய
    பிருந்தாவனகள் போல காட்சியளித்தும்
    தங்கள் பதிவைப் படிக்க நினைவில் வந்து போனது
    சுவரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. காதல் கணினி காணவில்லை ? எங்க போச்சு.

    ReplyDelete
  21. ஆரம்ப கால கணிணி மலரும் நினைவுகள் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. எங்கள் பள்ளியில் எங்கள் பேட்ச் +1 படிக்கும் போது தான் கணினிபாடம் அறிமுகம்.... அந்த நினைவுகள் இனிமையானவை... அவற்றை மீட்டெடுத்தது உங்கள் பகிர்வு...

    ReplyDelete
  23. மன்னார்குடி டேய்ஸ் ஒரு ஆயிரத்து ஐநூறு எபிஸோட் போகும் போல இருக்கே ஆர்.வி.எஸ். அருமையா இருக்கு. ரசித்துச் சிரித்தேன்.

    ReplyDelete
  24. வாத்தியார் நெஞ்சில் நிற்பதால் தான் அவரைபோலவே எழுதவும் வைத்தோ உமக்கு மண்ணை மைனரே!
    மிகவும் ரசித்தேன். நம்ம வாத்தியாரின் அதே எழுத்து நடை. நல்லாஇருக்கு ஆர்.வீ.எஸ்.

    ReplyDelete
  25. சூப்பர் போஸ்ட்'ங்க... சொல்லாடல்'களுக்கு காப்பிரைட் வாங்கிட்டீங்க போல... :)
    என் கம்ப்யூட்டர் class நினைவுகளையும் கண் முன் கொண்டு வந்தது... நானும் அடுத்த வாட்டி ஊருக்கு போறப்ப அந்த lotus computers இருக்கானு பாக்கணும்னு நெனச்சுக்கறேன்...:)

    ReplyDelete
  26. ஜூப்பரு.. வாத்தியார் பற்றிய அருமையான மலரும் நினைவுகள்.

    விண்டோஸ்-95 வந்த புதுசுல, அதை கத்துக் கொடுக்கறோம்ன்னு சொல்லிட்டு கடைசி வரை கத்துக்கொடுக்காம, விண்டோஸ் 3.1-ஐ வெச்சே சமாளிச்சிட்டாங்க எங்க இஞ்சியூட்ல :-)))

    ReplyDelete
  27. கம்ப்யூட்டர் கதைகள் நல்ல நடையுடன் அருமையாக இருந்தது.

    இதைப் படித்ததும் என்னுடைய கல்லூரி படிப்பின் இறுதியில் கற்ற AUTOCAD, CNC PROGRAMMING பற்றிய நினைவுகளைத் தூண்டியது.

    எவ்வளவு PROGRAMME எழுதியிருக்கிறோம்.

    பாட்டு பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே........

    ReplyDelete
  28. @ParthaSarathy Jay

    வாங்க..வாங்க... நீங்களும் மன்னார்குடியா?

    வருகைக்கு நன்றி. :-))

    ReplyDelete
  29. @Maya

    மிக்க நன்றி. :-)

    ReplyDelete
  30. @Ramachandranwrites
    கருத்துக்கு நன்றிங்க... :-)

    ReplyDelete
  31. @அப்பாதுரை

    தல பௌதீகம்னும் சொல்லலாம். //வாத்தியார் உட்பட..// ஹா..ஹா..

    ReplyDelete
  32. @siva

    நன்றி சிவா! :-)

    ReplyDelete
  33. @இராஜராஜேஸ்வரி
    பாராட்டுக்கு நன்றி மேடம். :-)

    ReplyDelete
  34. @ரிஷபன்

    சார்! கிழக் குரங்கா அட்டகாசமான ஜோக்.. டைமிங்ல அசத்துவார் வாத்தியார். :-)

    ReplyDelete
  35. @raji
    நன்றிங்க மேடம். :-)

    ReplyDelete
  36. @ஸ்ரீராம்.

    நன்றி ஸ்ரீராம். என்னை ரொம்ப தூக்குறீங்க... பயமா இருக்கு. :-))

    ReplyDelete
  37. @RAMVI

    தொடர் வாசிப்பிற்கு மிக்க நன்றி மேடம். :-))

    ReplyDelete
  38. @மோகன் குமார்

    இந்த நீடாவை ஞாயிற்றுக்கிழமை இழுத்தது கூட மன்னையின் மகிமையில் ஒன்று.. சரியா மோகன்..

    நன்றி.. நன்றி.. :-)

    ReplyDelete
  39. @kggouthaman

    சார்! தன்யனானேன். நன்றி. :-)

    ReplyDelete
  40. @பத்மநாபன்

    ரெண்டு வரியில கம்ப்யூட்டர் மொழிகளின் ஜாதகத்தை சொல்லிட்டீங்களே தல.. வாழ்க... :-)

    ReplyDelete
  41. @Ram Balaji

    Thanks for your comments Balaji. :-))

    ReplyDelete
  42. @பொ.முருகன்

    மன்னை பற்றிய அப்டேட்டுக்கு நன்றிங்க..

    முதல் வருகைக்கும் கமெண்ட்டிற்கும் மிக்க நன்றி. மீண்டும் வருக.

    கூவமாக மாறும் பாமணியை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. :-(

    ReplyDelete
  43. @Rathnavel

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! :-)

    ReplyDelete
  44. @Ramani

    புதிய பிருந்தாவனங்கள்.... இருவரியில் பின்னூட்டக் கவிதை எழுதுறீங்களே!!!

    கருத்துக்கு நன்றி சார்! :-)

    ReplyDelete
  45. @எல் கே
    ஆஹா.. கேட்க ஆரம்பிச்சுட்டாரே! எழுதனும்... எழுதறேன்.. :-))

    ReplyDelete
  46. @சமுத்ரா

    நன்றிங்க... :-)

    ReplyDelete
  47. @வெங்கட் நாகராஜ்

    தல எப்பவுமே பர்ஸ்ட்டுதான்... கருத்துக்கு நன்றி.. :-)

    ReplyDelete
  48. @ஆதிரா

    ரெண்டாயிரம்... நாலாயிரம் தேறும்... ஆதிரா...

    ரொம்ப நாளா ஆளைக் காணோம். உங்களை வலைச்சரத்திலெல்லாம் அறிமுகப்படுத்திய போதெல்லாம் நீங்க இந்தப்பக்கம் எட்டிக் கூட பார்க்கலையே!! :-)

    ReplyDelete
  49. @கக்கு - மாணிக்கம்

    தலைவா!! ரொம்ப நாளா ஆளையே காணுமே.. உங்களையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருந்தேன்... புலின்னு.. எங்க போயிட்டீங்க..

    வாழ்த்துக்கு நன்றி :-)

    ReplyDelete
  50. @அப்பாவி தங்கமணி

    lotus computers வாடாம இருக்கான்னு பார்த்துட்டு வாங்க...

    கருத்துக்கு நன்றிங்க.. :-)

    ReplyDelete
  51. @அமைதிச்சாரல்

    சாரல்.. கோர்ஸ் சேரும்போது... கம்ப்யூட்டர் பளபளப்பா இருக்கான்னு பார்த்து சேரக்கூடாது...

    சொல்லித்தரும் ஆளோட மூளை பளபளப்பா இருக்கான்னு பார்க்கனும்.

    கருத்துக்கு நன்றி சகோ! :-)

    ReplyDelete
  52. @கோவை2தில்லி

    மிக்க நன்றி சகோ!
    ஆட்டோ கேட் தெரியுமா... அப்ப ஆட்டோ ஓட்டவும் தெரியும்.. இப்படித்தான் எங்க ப்ரெண்ட்ஸை கிண்டல் பண்ணுவோம்.

    கருத்துக்கு நன்றி. :-)

    ReplyDelete
  53. கம்ப்யூட்டர் சயன்ஸ், MCA படித்தவர்களை எங்கள் ஊரில் 'பொட்டி படிப்பு படிச்சவண்டா' என்று வம்புக்கிழுப்பது வழக்கம்.
    படிக்க சுவையாக இருந்தது உங்கள் கம்ப்யூட்டர் கதைகள்.

    ReplyDelete
  54. @geetha santhanam
    மேடம்.. பொட்டிப் படிப்பு படிச்சுட்டு பொட்டிப் பாம்பா அடங்கி இருக்கேன்...

    பாராட்டுக்கு நன்றி!! :-)

    ReplyDelete
  55. RVS said...


    ரொம்ப நாளா ஆளைக் காணோம். உங்களை வலைச்சரத்திலெல்லாம் அறிமுகப்படுத்திய போதெல்லாம் நீங்க இந்தப்பக்கம் எட்டிக் கூட பார்க்கலையே!! :-)

    என்ன ஆர்.வி.எஸ். சொல்றீங்க. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளீர்களா? எப்போது? லிங்க் கொடுங்க..

    நான் சொல்லிட்டுத்தானே விடுமுறை எடுத்தேன் ஆர்.வி.எஸ். இனிமேல் வருவேன்.

    ReplyDelete
  56. @ஆதிரா

    கீழே பாருங்கள்!
    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_30.html

    ReplyDelete
  57. //சத்யா கம்ப்யூட்டர்ஸுக்கு கடை பிடித்தோம்.//

    நல்ல ஞாபகம் இருக்கு..
    முதலில் பதிவு செய்தவர்களில் நமிதா முறையில்(அதாங்க குலுக்கல்) தேந்தெடுத்து.. நீங்கள் பயிற்சி நிதியை தள்ளுபடி / குறைத்தல் செய்தீர்கள்.
    எனது நண்பர் ஆசைத்தம்பி முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு, ஃப்ரீயாக பயிற்சி (!) பெற்றான்...

    ReplyDelete
  58. ப்ளாக் & ஒயிட் காலத்துல நடந்த விஷயங்களை 42 இன்ச் LED டிவில ஓடவிட்ட மாதிரி தெளிவா ஓட விட்டாலும் அதே ப்ளாக் & ஒயிட்ல பார்த்த திருப்தியை தரக்கூடிய எழுத்துக்காரர் நம்ப மைனர்வாள்னு சொன்னா அது மிகையாகாது ஓய்ய்! 2 முறை வாசித்தேன் இந்த பதிவை! :))

    ReplyDelete