Thursday, September 8, 2011

லிஃப்ட் மாமா


"ஸார்! ஸார்!! என்னை சைதாப்பேட்டையில இறக்கிவுட்றீங்களா?”

“இல்லீங்க... நான் கிண்டி வரைக்கும்தான் போறேன்”

“சரி அப்ப கிண்டியில இறக்கி விடுங்க..” 

“இல்லீங்க எனக்கு அதுக்கு முன்னாடி ஆதம்பாக்கத்தில ஒரு சின்ன வேலை இருக்கு. அத முடிச்சிட்டு அப்புறம் தான் கிண்டி போவேன்”

“சரி அப்ப ஆதம்பாக்கத்தில இறங்கிக்கிறேன்”

விடாக்கொண்டனாக வண்டியில் தொற்றிக் கொள்வதற்கு நெற்றி பூரா பட்டையோடு நின்றார் அந்த மொட்டை மாமா. குழைத்துப் பூசியிருந்த பழனி சித்தனாதன் ஜவ்வாது விபூதி அரைக் கிலோ மீட்டருக்கு மணத்தது. அது மொட்டை மாதிரியும் இல்லை கிராப் மாதிரியும் இல்லை. ஒரு பத்து நாள் முடி வளர்ந்த முக்கால் மொட்டை அது. ஆங்காங்கே லேசாகத் தூவினாற் போல கருப்பு முடி. அடித்த வெய்யில் தலையில் சதும்பத் தடவிய தேங்காயெண்ணையில் பட்டுத் தெறித்தது. தோளில் போர்வையை மடித்துக் கை வைத்துத் தைத்த மாதிரி ஒரு ஜோல்னாப் பை. உபரி சாமான்களால் அரைப் பை நிரம்பியிருந்தது. அன்றைய ‘தி ஹிந்து’ சோனியாவுக்கு கட்டுப்பட்ட மன்மோஹன் படத்துடன் ஜோ.பைக்கு வெளியே அடங்காமல் துருத்திக்கொண்டிருந்தது.

தோளை அழுத்திப் பிடித்து பில்லியனில் ஏறும் போது மூவ் தடவியும் முட்டி வலிக்கும் வேதனையில் “ராமா..ராமா” என்று முனகினார். இரண்டு புறமும் காலைப் போட்டுக்கொண்டு முன்னும் பின்னுமாய் சீட்டில் அரைத்து அட்ஜஸ்ட் பண்ணி, வேஷ்டியை தூக்கி இழுத்து தொடை நடுவில் சொருகிக்கொண்டு லிஃப்ட் கொடுத்த மகானுபாவனை நகர்த்திப் பெட்ரோல் டேங்க்கிற்கு ஏற்றிவிட்டார்.

இவரை அடிக்கடி நீங்கள் பல இடங்களில் பார்த்திருக்கலாம். காவிப் பற்களைக் காட்டி, ட்ரைவர் - கண்டக்டர் இருவர் மட்டும் உல்லாசப் பயணம் செல்லும் காலிப் பேருந்து அருகில் நின்றாலும், ஸ்பீட் ப்ரேக்கரில் ஏறி இறங்குவதற்கு ஸ்லோவாக டூவீலரில் செல்லும் அனைவரையும் தம்ஸ் அப் காண்பித்து நிறுத்துவார். ஒருவராகச் செல்லும் அனைத்து இருசக்கரமும் இவரைப் பொருத்தவரையில் தர்மசக்கரம். நான்குக்கு மூன்று பேர் அவருடைய தயவு கெஞ்சும் முகத்துக்கு தாட்சண்யம் பார்த்து “ம்.. ஏறிக்கிங்க” என்பார்கள். இவரது ”ராம ராமா”வுக்கும், “ஹம்மாடி”க்கும் அவ்வளவு மவுசு. பெரியவர் சிரமப்படுகிறார் என்று கிழக்கே போகவேண்டிய சஹ்ருதர்யர் ஒருவர் திசை மாறி தெற்கே பயணித்து இவரை வீட்டு வாசற்படியில் போன வாரம் இறக்கிச்சென்றார்.

“நா அந்தப் பக்கம் போகணும். நீங்க இங்க இறங்கிக்கிறீங்களா?” வலுக்கட்டாயமாக ஆதம்பாக்கத்தில் ரிலையன்ஸ் தாண்டி இறக்கி விட்டான்.

ஒரு முறை காலை ஊன்றி அரைவட்டமடித்து வந்த வழியே திரும்பியவன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஏதோ ஒரு காகிதம் காற்றில் பறந்து வந்து அவர் காலடியில் தஞ்சமடைந்தது. அதை முட்டி வலிக்கக் குனிந்து எடுத்தார் லிஃப்ட் மாமா.

“தம்பி! தம்பி! நில்லுங்க!!” தொண்டைக் கிழிய உரக்கக் கத்தினார். வெறுமனே குரல் ஒருமுறை தெருவில் அலைந்து ஓய்ந்தது. வீதியில் சென்ற ஐந்தாறு வேறு தம்பிக்களும் சில தங்கைகளும் கூட திரும்பிப் பார்த்தார்கள். அவன் திரும்பவேயில்லை. உஹும். பலனில்லை. க்ஷண நேரத்தில் பறந்துவிட்டான்.

பறந்து வந்து காலடியில் விழுந்த காகிதம் ஏதோ புகைப்படம் போல இருந்தது. திருப்பிப் பார்த்தார். மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்தார். எடுத்துச் சட்டைப் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டார். லிஃப்ட் கேட்பதற்கு பின்னால் யாராவது வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டே நடையைக் கட்டினார்.

***

”உங்களுக்கு எவ்ளோ தடவ சொன்னாலும் புத்தியில்லை. பல்லை ’ஈஈ...’ன்னு காட்டி இளிச்சுண்டு கண்ட கண்டவா பின்னாடி கையைக் காட்டி லக்கேஜ் மாதிரி ஏறி ஊர் சுத்தறத்துக்கு “அக்கடான்னு” ஆத்தில உக்காரப்படாதோ! அப்டி எந்த ராஜா எந்த பட்டணத்துக்கு வரான்னு இப்படி அலையறதுன்னேன்” என்று பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டாள் லல்லி மாமி. வெள்ளிக்கிழமையும் அதுவுமாய் அக்கம்பக்கம் யாரிடமும் வம்பு பேசக்கூடாது என்று டி.வி நியூஸில் இருந்து கண்ணை எடுக்காமல் லலிதா ஸகஸ்ரநாமம் சொல்லிக்கொண்டிருந்தவள் வாசலில் புல்லட் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள். கருங்குரங்கு மாதிரி சடை வைத்து காதில் கடுக்கன் போட்ட எவனோ ஒருவன் “நாளைக்கும் என் கூடவே வாங்கோ மாமா”னு அனுகூலமாய்ச் சொல்லி இறக்கிவிட்டு போனதும் பேயாய் ஆரம்பித்தாள்.

“இப்ப என்னாச்சு! மாசம் பூரா எல்லா இடத்துக்கும் லிஃப்ட்ல போனதில முன்னூறு ரூபா அம்பது காசு சேவிங்ஸ். தாராளமா ரெண்டு கிலோ காஃபிப் பொடி வாங்கலாம், டிகாஷன்ல ஜலம் விடாம ரெண்டாந்தரம் மூனாந்தரம் காஃபி குடிக்கலாம்” திறமையை புள்ளிவிவரமாக மாற்றி குடும்பத்தின் எக்கானமிக்கு தனது அரிய பங்களிப்பின் சிறப்பை எடுத்துரைத்தார்.

மாமிக்கு பொத்துக்கொண்டு வந்தது. “.....ணா. நா ரொம்ப பொமையா இருக்கேன்! வாயக் கிளறாதீங்கோ. உமியில அரிசி பொறுக்கற கும்பல்னு நீங்க தாலி கட்டறத்துக்கு முன்னாடியே எங்காத்ல எல்லாரும் தலைப்பாடா அடிச்சுண்டா. கேட்டாரா என் தோப்பனார். இப்டி ஒரு ’தொத்து’வியாதிக்கு கட்டி வச்சுட்டு கண்ணை மூடிட்டார்” என்று ஆத்துப்போனாள்.

”இப்ப என்னடி உங்காத்துப் பழம் பெருமை பாழாப் போறது. மனுஷன் அஞ்சாறு வண்டி ஏறி இறங்கி காலெல்லாம் விட்டுப்போய் வந்துருக்கேன். விண்விண்னு வலிக்கறது. ஒரு வா காப்பிக்கு வழியைக் காணும். நிலவாசப்படி தாண்ட விடாம குதிராட்டம் நின்னுண்டு சாயரட்சை நேக்கு ஸகஸ்ரநாம அர்ச்சனையா? வழியை விடுடி” மாமி தோளில் இடித்துக்கொண்டு உள்ளே வந்து கை கால் அலம்பிக்கொண்டு தோளில் காசித்துண்டோடு ஈஸிச் சேரில் சாய்ந்தார்.

ஒத்தரூபா குங்குமப்பொட்டு தீர்க்கசுமங்கலி பூக்காரி வந்து முக்கால் முழம் அளந்து முழுமுழத்துக்கு காசு வாங்கிக்கொண்டு போனாள். ஈஸி சேர் அசையாமல் இருந்தது. பக்கத்திலிருந்து ஒரு சுமங்கலிப் பொண்டுகளுக்கு தம்பதி சமேதராய் கூப்பிட வந்தார்கள். மாமியின் எகத்தாள “ஏண்ணா”க்கு கூட ஈஸி சேர் அசையாமல் இருந்தது. நாளைக்கு ஹேரம்ப விநாயகர் பஜனை மண்டலியில் எங்கோ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் என்று கூப்பிடவந்தார்கள். வளையல் ஜலஜலக்க பட்டுப்புடவை சரசரக்க மல்லிகை எட்டூருக்கு மணக்க மணக்க “மாவாவுக்கு என்ன இப்பவே தூக்கமோ?” என்ற வக்கீலாத்து மாமியின் வம்பு விஜாரிப்புக்கும் ஈஸி சேர் ஆடாமல் அசையாமல் இருந்தது.

ஆபிஸில் இருந்து ஒன்பது மணிக்குத் தான் வந்தாள் பூரணி. செருப்பை அவிழ்த்து ஸ்டாண்டில் சொருகிவிட்டு தோல்பையை கழற்றி சோஃபாவில் எறிந்தபோது காலைத் தூக்கி முக்காலி மேல் நீட்டிக்கொண்டு டி.வியில் தங்கம் பார்த்துக்கொண்டிருந்தாள் லல்லி மாமி.

“சாப்ட்டியா?”

“இல்லடி. இன்னும் இந்த மனுஷர் சாப்ட வரக்காணும். ஏழெட்டு வண்டியேறி ஊர் சுத்திட்டு வந்ததில அசதியா ஈஸி சேர்ல கட்டையை நீட்டி தூங்கியாறது”

“நீ அப்பாவைக் கூப்டியா?”

“ஊக்கும். என்னத்துக்கு. காலாகாலத்துக்கு ஆத்துக்கு வரமா ஊர் சுத்தின களைப்புல கண்ணை அசந்தாச்சு. வயத்துக்கு மணியடிச்சதுன்னா தன்னால சாப்ட வரார்.”

“என்னம்மா நீ! டெய்லி எட்டு மணிக்கெல்லாம் சாப்பிடுவார். இன்னமும் தூங்கறார்ங்கிற. எதாவது சண்ட கிண்ட போட்டியா?”

“அப்பறம். போடாம.. சாயரட்சை ஆறு மணிக்கு வாசல்ல வெளக்கு வச்சதும் வைக்காததுமா ஒரு கருங்குரங்கோட வண்டியில வந்து ஆத்து வாசல்ல இறங்கறார்! எவ்ளோ நாளைக்கு சொல்லியாச்சு! கண்டவா பின்னாடியெல்லாம் இதுமாதிரி பிச்சைக் கேட்டு உட்கார்ந்துண்டு வராதீங்கோன்னு. கேட்டாரா?”

“ச்சே அதுக்காக சண்டை போடுவியா? அவருக்கே உடம்பில ஏகப்பட்ட ப்ராப்ளம். பி.பி. ஷுகர்னு. இதுல நீ வேற எனக்கு கல்யாணம் பண்ணலையான்னு கேட்டு நித்யமும் அவரைப் பிச்சுப் புடுங்கிற. பாவம் தனியாளாய் அப்பா என்னதான் பண்ணுவார்?”

“வந்துட்டாடியம்மா. அப்பாச் செல்லம். போயி நீயே எழுப்பி அழைச்சுண்டு வா. நா தட்டை எடுத்து வக்கறேன். சாப்டுட்டு உள் அலம்பிவிட்டுட்டு படுத்துக்கணும்”

ஹால் ஓரத்தில் பெடஸ்டல் ஃபேன் காற்றை வீசியடித்துக்கொண்டிருந்தது. பக்கவாட்டிலிருந்து அவரது சாந்தமான முகம் குளிர் நிலவாகத் தெரிந்தது. மேலுக்கு காசித்துண்டோடு ஒரு பக்கம் தலையைச் சாய்த்து படுத்திருந்தார் பூரணியின் அப்பா. 

“அப்பா”

அசையவில்லை. பூரணிக்கு கொஞ்சம் அச்சமாக இருந்தது. இன்னொரு முறை அசைத்தாள்.

“அப்பா”

உஹும். பிடித்து லேசாக உலுக்கினாள். கண்ணத்தில் டப்டப்பென்று தட்டினாள். அசைவில்லை. ரத்தநாளங்கள் வெடித்துவிடும் போல இருந்தது. கையைப்பிடித்து முக்குக் கடைக்கு அழைத்துப் போய் ஃபைவ்ஸ்டார் வாங்கிக் கொடுத்தது ஞாபகம் வந்தது. ரெட் கலர் எஸ்.எல்.ஆர் சைக்கிள் வாங்கிக்கொடுத்து பின்சீட்டை பிடித்துக்கொண்டே “பார்த்து...பார்த்து.. நேராப் பாரு.. முதுகை நிமிறு” என்று வேஷ்டி அவிழ சாலையெங்கும் ஓடி வந்தது, மேஜர் ஆனதற்கு ஐந்து மாடி நகைக்கடைக்கு அழைத்துச் சென்று “அண்ணா.. ரொம்ப ஆறதே” என்ற அம்மாவின் சிணுங்கலையும் பொருட்படுத்தாமல் “நம்ம குழந்தைக்குத் தானே”ன்னு தேர் வடம் மாதிரி ரெட்டை வடம் செயின் வாங்கிப்போட்டு அழகு பார்த்தது.....

.....ட்யூஷன் போகும்போது தெருமுனையில் காலிப்பசங்கள் பின்னாடியே வந்து “பூரணி... நீ தான் என் இதயராணி” என்று கிண்டல் செய்ததில் ஒரு வாரம் ஆபீசுக்கு பர்மிஷன் சொல்லிவிட்டு நாலு மணிக்கே வந்து சைக்கிளை தள்ளிக்கொண்டே நடந்து துணைக்கு வந்தது, முதல் நாள் காலேஜில் கொண்டுபோய் விட்டுவிட்டு பக்கத்து பஸ் ஸ்டாப்பில் சாயந்திரம் வரைக்கும் கையோடு கொண்டுவந்திருந்த “பொன்னியின் செல்வ”னைப் படித்துக்கொண்டு தேமேன்னு உட்கார்ந்திருந்தது என்று சீன் பை சீனாக நினைவடுக்குகளில் நீந்தி வந்தது. அப்பா அன்பின் திருவுருவம். பிரியப் பிசாசு. ஒரு நாள் கூட அதட்டியது கிடையாது. அதிர்ந்து பேசியது கிடையாது. “கொழந்தைக்கு என்ன வேணும்?” என்று தலையைத் தடவி கேட்கும் போது அப்படியே மனசு விட்டுப்போய்டும். ”இது ஒன்னே போதும்”னு சொல்லத்தோணிடும்.

அப்பா எழுந்திரு. ப்ளீஸ் எழுந்திரு. அன்பின் திருவுருவமே எழுந்திரு. வானத்தின் நீலம் போல அவரோடு ஒட்டியிருந்தது பாசம். அம்மாவின் அத்தனை வசவுகளையும் சிரித்துக்கொண்டே சமாளிப்பார். “அவளுக்கு முடியலைம்மா!!” என்று சொல்லிவிட்டு கோயிலைப் பார்க்க போய்விடுவார்.

அப்பா “உன் செல்லம் வந்துருக்கேன்!!” எழுந்திறேன். ப்ளீஸ். ஒவ்வொரு பிடியா பிசிஞ்சு கையில போடேன் . நான் சாப்பிடறேன். வாப்பா... வா...

மீண்டும் கண்ணத்தில் டப்டப்பென்று தட்டினாள். உள்ளங்கை இரண்டையும் இறுகக் கோர்த்து எலும்பும் தோலுமாய்த் தெரிந்த நெஞ்சுக் கூட்டில் வைத்து அரைத்தாள். “ப்..பா.....ப்...ப்பா......” பூரணிக்கு இரைத்தது. வானம் கீழேயும் பூமி மேலேயும் பறந்தது.

“பா....பா...”

உஹும். அப்பா கடைசிவரை எழுந்திருக்கவேயில்லை.

“அப்..................பா..............”  கிறீச்சிட்டு அலறினாள்.

ஈஸி சேரின் துணிக்கும் கட்டைக்கும் நடுவில் அப்பாவின் தலை தொங்கியது.

இந்த அலறலைக் கேட்டு அடுக்களையிலிருந்து பூரணியின் அம்மா கொலுசு அதிர ஓடி வந்து எட்டிப்பார்த்தாள். லிஃப்ட் மாமா அசையவே இல்லை.

சுவற்றோரத்து நைலான் கொடி ஹாங்கரில் மாட்டிய அவரது வெள்ளைச் சட்டைப் பையில் இருந்து வெளியே எட்டிப்பார்த்த ஃபோட்டோவில் பூரணியும் காலையில் அவருக்கு லிஃப்ட் கொடுத்த இளைஞனும் காதலாய்ச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்!

பட உதவி: http://www.flickr.com/groups/fatherslove/pool/tags/blackandwhite/

-

49 comments:

  1. அருமையான கதை சார். கடைசியில் லிஃப்ட் மாமா, தன் பெண் பூரணியையும், அவள் காதலனையும் சேர்த்து வைக்க சம்மதம் தெரிவித்து, உயில் எழுதி வைத்தால் போல அவரின் சட்டைப்பையில் அந்த போட்டோ. ஆஹா! அருமையான முடிவு தான். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk

    ReplyDelete
  2. மூவ் தடவியும் முட்டி வலிக்கும் வேதனை...!
    பிரியப் பிசாசு...லிப்ட் கொடுக்கும் புண்ணியவானை பெட்ரோல் tank வரை ஏற்றி விடும் புண்ணியவான்...இவை எல்லாம் படித்து முடித்தவுட கூட நினைவில் நிற்கும் வரிகள்...ஆனா பொசுக்குனு போட்டுத் தள்ளிட்டீங்களே....போட்டோ பார்த்த நிம்மதியிலா, அதிர்ச்சியிலா, அயர்ச்சியிலா எதில் செத்துப் போனார் அவர்...?

    ReplyDelete
  3. மனம் கனமாகி விட்டது சார்

    ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரசத்தை வெளிப்படுத்தும்.
    இது.......... இந்த ரசம் உங்களிடமிருந்து இப்பொழுதுதான் நான் படிக்கிறேன்

    ReplyDelete
  4. கடைசியில் மனதை கனக்க வைத்துவிட்டீர்

    ReplyDelete
  5. என்னைப் பொறுத்தவரையில் பொதுவாக சில விஷயங்ககில்
    பெண்களுக்கு இருக்கும் மனோதைரியம் ஆண்களுக்கு இருப்பதில்லைதான்.
    அந்த மனோதரியம் இருந்திருந்தால் லிஃப்ட் மாமா உயிரை விட்டிருக்க மாட்டார்.
    இருந்து பெண்ணுக்கு தன் ஆசிர்வாதத்துடன் திருமணம் முடித்திருப்பார்

    நிச்சயமாக லல்லி மாமி இதை வேறு விதமாக ஹாண்டில் செய்திருப்பாள்

    ReplyDelete
  6. அருமையான கதை.
    அருமையான முடிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அசத்திடீங்க எப்படித்தான் யோசிபீங்களோ.
    ரியலி யு ஆர் கிரேட்
    வாழ்க வளமுடன்
    அருமையான தொடக்கமும்
    கனக்கும் முடிவும்

    ReplyDelete
  8. லிஃப்ட் மாமா இப்படி பொட்டுன்னு போனதுதான் மனதுக்கு கஷ்டமா இருக்கு.
    நல்ல கதை.

    ReplyDelete
  9. மாமாவுக்கு குடுமா குடுமா..
    அட ஒண்ணே ஒண்ணு..
    -- லிஃப்ட்தான்.. வேறென்ன..

    ReplyDelete
  10. மாமா கை காமித்து ஒரு பைக் ஓட்டியை நிறுத்துகிறார்
    மாமா : என்ன, போற வழில இறக்கி விடறீங்களா ?
    பைக் ஒட்டி : பத்து மீட்டர்ல லெஃப்ட்ல திரும்பிடுவேன்..
    மாமா : பரவாயில்ல பத்து மீட்டர் வரைக்கும் வர்றேன்..

    ReplyDelete
  11. அருமையான கதை
    அவர் திரும்ப வீட்டுக்கு வந்தபோது
    பொருளாதாரக் கணக்கு பேசாமல் இருந்தால்
    இன்னும் கூடுதல் சிறப்பாக இருக்குமோ எனத் தோனியது
    ஆனாலும் டையலாக் எல்லாம் ரொம்ப சூப்பர்
    குறிப்பா உமியிலே அரிசி பொறுக்கிற குடும்பம் என்பதை
    வீட்டில் எல்லோரும் திரும்ப திரும்ப படித்துச் சிரித்தோம்
    தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. நல்ல கதை. நல்ல நடை. லிப்ட் மாமாவுக்கான வர்ணனைகள் நன்றாக இருந்தது.கடைசியில் மனதை கனக்க வைத்து விட்டது.

    சென்ற முறை உங்கள் பதிவில் தான் பாட்டுப் பதிவுகளை நெடுநாளாக காணோமே என்று கேட்டிருந்தேன். நேயர் விருப்பம் சகோ.

    ReplyDelete
  13. இது தான் rvs என்றால், இத்தனை நாள் எங்கே ஒளிந்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்கத் தோன்றுகிறதே? பிரமாதம் என்று சொல்லி அடக்கிவிட முடியாத கதை, நடை, முடிவு.

    "பத்து நாள் முடி வளர்ந்த முக்கால் மொட்டை" இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும் தோன்றியது :)

    ReplyDelete
  14. அந்த லிஃப்ட் மாமா... அசத்தல். வர்ணனை அசத்திட்டீங்க ஆர்.வி.எஸ். இப்படி ஒரு சரளமான நடை.. சிறப்புப் பயிற்சி ஏதேனும் உண்டா? வீட்லயே இப்படித்தானா?

    இன்று உங்கள் குடும்பத்தை ரசித்தேன். லவா குசா இருவருடன் உங்கள் சீதையையும்... அழகான குடும்பம்...வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. வர்ணிப்புகள் அமர்க்களம்... அச்சுப்பிச்சு மாமா ஆகட்டும் , அழகு சுந்தரிகளாகட்டும் வார்த்தைகளை பிடித்து வர்ணித்து தள்ளிவிடுகிறீர்கள்...

    முடிவு சோகம் கஷ்டமாக இருந்தாலும், சில கதைகளுக்கு அதுதான் முற்றுப்புள்ளியாக மாறும்....

    ReplyDelete
  16. ஆஹா!!.. பிரமாதம்.

    'உமியில் அரிசி பொறுக்கற கும்பல்' கன்னியாகுமரி மாவட்டத்திலும் இந்த வழக்குச்சொல் உண்டு :-)

    வெறுமே அப்பேர்ப்பட்ட கும்பலா மட்டும் இருந்திருந்தா, நிம்மதியாத்தான் உயிர் விட்டிருக்கணும். ஆனா, பொண்ணுக்கு செய்யறதுல கணக்குப் பார்க்காத பாசமுள்ள அப்பாவாச்சே!!.. அதிர்ச்சியில்தான் போயிருக்கணுமோ????????????

    கேள்விகள்.. கேள்விகள் :-))

    ReplyDelete
  17. அப்பா அன்பின் திருவுருவம். பிரியப் பிசாசு. ஒரு நாள் கூட அதட்டியது கிடையாது. அதிர்ந்து பேசியது கிடையாது. “கொழந்தைக்கு என்ன வேணும்?” என்று தலையைத் தடவி கேட்கும் போது அப்படியே மனசு விட்டுப்போய்டும். ”இது ஒன்னே போதும்”னு சொல்லத்தோணிடும்.

    அப்பாவை வர்ணித்த விதம் அமர்க்களம்.

    ReplyDelete
  18. கனமான கதை!!!

    அருமை..

    ReplyDelete
  19. நிச்சயமா அவர் சந்தோஷத்துல மட்டும் போகலை அது உறுதி!! அட்டகாசமான வர்ணனைகளுக்கு மத்தில பொண்ணை பெத்த சாதுவான ஒரு அப்பாவோட மனசு எப்பிடி இருக்கும்னு அழகா சொல்லிட்டேள்!! ம்ம்ம்....

    ReplyDelete
  20. அருமையான கதை மைனரே... கடைசியில் இப்படி பொட்டென்று மாமாவை காலி செய்து விட்டது எதனால்?

    மனதை கனக்கச் செய்த முடிவு....

    ReplyDelete
  21. @வை.கோபாலகிருஷ்ணன்
    மனம் நிறைந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் சார்! :-))

    ReplyDelete
  22. @ஸ்ரீராம்.
    கதையின் முடிவு வாசகரின் எண்ணத்துக்கு விட்டுவிட்டேன்.

    உங்களுக்கு என்ன தோன்றுகிறது ஸ்ரீராம்! :-))

    ReplyDelete
  23. @raji

    என்னிடமிருந்து இது ஒரு வித்தியாசமான முயற்சி. பாராட்டுக்கு மிக்க நன்றி! :-))

    ReplyDelete
  24. @எல் கே
    சரிதான். கதை கொஞ்சம் கனம்தான். நன்றி எல்.கே!! :-)

    ReplyDelete
  25. @raji
    ஆமாம் மேடம். எனக்கு நன்றாகத் தெரியும். பெண்களுக்கு மனோதைரியம் ஜாஸ்தி.

    கருத்துக்கு நன்றி. :-)

    ReplyDelete
  26. @Rathnavel

    நன்றி ஐயா! :-)

    ReplyDelete
  27. @siva
    இரசித்த மன்னையின் மைந்தனுக்கு நன்றி! :-)

    ReplyDelete
  28. @RAMVI

    பாவம். என்ன பண்றது?

    ரசித்ததற்கு நன்றி மேடம். :-)

    ReplyDelete
  29. @Madhavan Srinivasagopalan

    ஜோக்குக்கும் கருத்துக்கும் நன்றி மாதவா! :-)

    ReplyDelete
  30. @Ramani

    சார்! பொண்ணுக்காக அவரோட காஸ்ட் கான்ஷியஸ்னெஸ் பத்தி சொல்லனும்னு அப்படி எழுதினேன்!

    கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்! :-))

    ReplyDelete
  31. @கோவை2தில்லி
    நன்றி சகோ!! ஒரு அற்புதமான பாடல் பதிவு உங்களுக்காக தயார் செய்துகொண்டிருக்கிறேன். நன்றி. :-)

    ReplyDelete
  32. @அப்பாதுரை
    I am floored. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி. ரொம்ப நன்றி தலைவரே. இது இன்னும் நிறைய எழுத ஊக்குவிக்கும். நன்றி! :-)

    ReplyDelete
  33. @ஆதிரா
    பாராட்டுக்கு நன்றி சகோ! :-)

    முகனூலில் பார்த்தீர்களா? உங்களுடைய ஐடி என்ன? :-))

    ReplyDelete
  34. @பத்மநாபன்
    அச்சுப்பிச்சு மாமா.. அழகு சுந்தரி... அமர்க்களமான கமெண்ட் தல... பாராட்டுக்கு மிக்க நன்றி ஜி! :-)

    ReplyDelete
  35. @அமைதிச்சாரல்

    ஆமாங்க சாரல். பொண்ணு மேல உசிரையே வச்சுருந்தாரு. இப்படி இன்னொருத்தன் கூட போட்டோல பார்த்தவுடனே மனசு பொருக்காம உசிரை விட்டுட்டாருன்னு ஒரு முடிவு..

    கேள்வியை பதிலோட கேட்ட ஜீனியஸ் நீங்க...

    பாராட்டுக்கு மிக்க நன்றி!! :-))

    ReplyDelete
  36. @ரிஷபன்

    பாராட்டுக்கு மிக்க நன்றி சார்! :-))

    ReplyDelete
  37. @ஜ.ரா.ரமேஷ் பாபு
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...

    அடிக்கடி வாங்க ப்ரதர்!! :-)

    ReplyDelete
  38. @தக்குடு
    கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டப்பா.. நீ க்ரேட்!

    கருத்துக்கு நன்றி!! :-)

    ReplyDelete
  39. @வெங்கட் நாகராஜ்

    கருத்துக்கு நன்றி தல. ரொம்ப கனமோ? :-))

    ReplyDelete
  40. Karuppa iruntha koranguna vellayaa irunthaa panniya?

    ReplyDelete
  41. @கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )

    அதிரடியான கேள்விக்கு அமைதியா பதில் கொடுப்போம்!

    குரங்குல கூட வெள்ளைக் குரங்கு இருக்கு சாரே!! :-))

    ReplyDelete
  42. Venkatasubramanian sir ஆறு மணிக்கு வாசல்ல வெளக்கு வச்சதும் வைக்காததுமா ஒரு கருங்குரங்கோட வண்டியில வந்து ஆத்து வாசல்ல இறங்கறார்! ithu padikka konjam kaattama irukku... athan sonnen

    ReplyDelete
  43. @கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )

    அது கொஞ்சம் காட்டமா எழுதினதுதான்.. மாமிக்கு பொத்துக்கொண்டு வர்ற கோபத்தை எப்படி எழுதுவது...

    விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது ப்ரதர்!! நோ ப்ராப்ளம். :-))

    ReplyDelete
  44. கடைசீல, லிஃப்ட் மாமா LEFT ஆ..அச்சச்சோ..பாவம்!

    ReplyDelete
  45. கடைசி முடிவு எம்மை கலங்க வைத்துவிட்டது.. அருமையான கதை.. அருமையான எழுத்து நடை.. யாதார்த்தமான பாத்திரப் படைப்பு, நிகழ்வுகள்..!! பாராட்டுகள் பல..! தொடருங்கள்..!!

    ReplyDelete
  46. இங்கே சில குப்பைகள் இருக்கின்றன. குப்பையில் குண்டுமணிகளும் காண கிடைக்கலாம். நீங்கள் தான் கண்டுபிடித்து தர வேண்டும். நேரமிருக்கும்போது எமது வலைப்பூவையும் ஒரு முறை வருகை தாருங்களேன்..! இணைப்பு: தங்கம்பழனி

    ReplyDelete
  47. @”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
    ஆமா சார்! பொட்டுன்னு மண்டையப் போட்டுட்டார்! :-)

    ReplyDelete
  48. @தங்கம்பழனி
    மனமார்ந்த பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றிகள் ப்ரதர்!

    அடிக்கடி வாங்க..

    ReplyDelete
  49. Sir,

    This Story is great and Same Character man Still in Adambakkam. He always using Lift only as you said. I think You also faced the situation. I am correct?

    ReplyDelete