Wednesday, November 23, 2011

அன்னதானப் பிரபு - இளையான்குடி மாற நாயனார்

நல்ல கும்மிருட்டு. வெளியே நசநசவென்று மழை. ஊரடங்கிவிட்டது. நிசப்தமான நிர்ஜனமான வீதியில் பெய்துகொண்டிருந்த மழையில் நனைந்து கொண்டே ஒரு முதியவர் அவர் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். ”யாரிந்த வேளையில்?” என்ற சந்தேகத்துடன் வந்து எட்டிப் பார்க்கிறார் அந்த வீட்டின் உரிமையாளர். வாசலில் சொட்டச் சொட்ட நின்ற அந்த வயதானவர், “ஏதேனும் உணவு கிடைக்குமா?” என்று கேட்கிறார். சட்டிப் பானையெல்லாம் கழுவிக் கவிழ்த்து மூன்று நாளாயிற்று. கோயிலில் தெருவில் கிடைத்ததை உண்டு வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தனர் அந்த முந்நாள் செல்வந்த தம்பதியினர். முதியவரின் அந்தக் கேள்வியினால் விதிர்விதிர்த்துப் போகிறார்கள். என்ன செய்வதென்றியாது கையைப் பிசைகின்றனர். வந்தவர் மனம் கோணாது “உள்ளே வந்து அமருங்கள். உணவு படைக்கிறோம்” என்று உபசாரம் செய்து முதல் கட்டில் உட்கார வைத்தார்கள்.

இருவரும் என்ன செய்யலாம் என்று பதறி சமையலறையில் கூடிப் பேசுகிறார்கள். செல்வச் செழிப்புடன் இருந்த காலத்தில் உற்றாருக்கும் ஊராருக்கும் நித்தம் நித்தம் அன்னமளித்த அந்த அம்மையின் உள்ளம் பதறுகிறது. நடைதளர்ந்த ஒரு பெரியவருக்கு அன்னமிட வழியில்லையே என்று மருகுகிறாள். ஆனால் அந்த வீட்டின் பெண்மணி கூர்மதியாள். கணவனை மீறிப் பேசத் தயக்கப்பட்டு சிறிது நேரத்தில் மெதுவாக ஒரு உபாயம் கூறுகிறாள். “நேற்று நமது வயலில் நட்ட செந்நெல் இருக்கிறது. இப்போது எப்படியாவது ஒரு மரக்கால் அந்த நட்ட நெல்லை களைந்து எடுத்துவந்தால் இவருக்கு வயிராற சோறு படைக்கலாம்” என்றாள். அவருக்கு மிக்க மகிழ்ச்சி. மனையாளின் நுண்ணறிவைப் பாராட்டி, இடையறாது கொட்டும் மழைக்காக தலையில் ஒரு கூடையைக் கவிழ்த்துக் கொண்டு வயலுக்கு ஓடுகிறார்.


மை பூசிய இருட்டில் வயலுக்கும் வீட்டுக்கும் போய் பழகிய கால்கள் சரியாக அவரது வயலை கண்டடைகின்றன. அந்த சேற்றிலிருந்து துழாவித் துழாவி கணிசமான நெல் விதைகளை எடுத்துவிடுகிறார். பக்கத்தில் ஓடும் வாய்க்காலில் அவ்விதைகளை கழுவி எடுத்துக்கொண்டு நேரமாகிவிட்டதே என்று ஓடுகிறார். நெல் கொண்டு வரச் சென்ற கணவன் வரவில்லையே என்று வாசலில் வந்து நிற்கிறார் அந்த அம்மணி. ஈர நெல்லைக் கையில் கொடுத்தவுடன் ஓடிப்போய் அடுப்பிலிட்டு வறுக்கிறார். பின்னர் அதையெடுத்து குத்தி அரிசியாக்கி உளையிலிடுகிறார். “அவருக்கு கறி சமைக்க என்ன செய்வது?” என்று கணவனைப் பார்த்து வினவுகிறார். வெறும் சோற்றை எப்படியளிப்பது என்று அப்போது தான் அவரும் யோசித்தார்.

கொல்லையில் போட்டிருந்த கீரைச் செடிகளை வேரோடு பிடிங்கி எடுத்துக்கொண்டு வருகிறார் அன்பர் பூசையில் ஈடுபட்டிருந்த அந்தப் பண்பாளர். அந்த ஒரே கீரையை கறியாக்கி, குழம்பாக்கி எல்லாமுமாக சமைக்கிறார் அவர் மனைவி. சாப்பாடு தயாரான அந்த நடுநிசியில் வாசலில் அமர்ந்திருக்கும் அந்த முதியவரை இல்லாளுடன் சேர்ந்து கூப்பிடுவதற்காக வந்தவருக்கு அதிர்ச்சி. திண்ணையில் அவரைக் காணோம். இவ்வளவு கஷ்டப்பட்டு அமுது சமைத்து அவருக்கு விருந்து வைக்கும் நேரத்தில் அவர் எங்கே போயிருப்பார் என்று குழம்பினார். அவரைத் தேடும் போது....

மனிதநேயமே சமயப் பண்பு என்று விருந்து வைத்த சமய இலக்கியங்களில் வருபவர் இவர் யாரென்று தெரிகிறதா?

விடை தெரிந்தால் பின்னூட்டத்தில் அந்த அன்னதானப் பிரபுவின் பெயரைத் தெரிவிக்கவும்.

பின் குறிப்பு:  இந்தக் கதைக்கு லேபிள் கொடுத்தால் கண்டுபிடிப்பது எளிது. க்ளைமாக்ஸும் எழுதாமல் விட்டிருக்கிறேன். கூகிள் படம். கிரெடிட் கொடுப்பதற்கு யூஆரெல் விடுபட்டுவிட்டது.

பின் பின் குறிப்பு: நேற்று எழுதி இன்றைக்கு லேபிள் மற்றும் தலைப்பு மாற்றுகிறேன்.  க்ளைமாக்ஸ் என்னவென்றால் விண்ணிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது. அவருடைய சிவபக்தியை மெச்சி உமையம்மையுடன் ரிஷபாரூடராக காட்சியளித்தான் இறைவன்.

-

30 comments:

  1. கதை சிறப்பாக உள்ளது
    கதா நாயகர் யாரெனத்தான் தெரியவில்லை
    த.ம 2

    ReplyDelete
  2. இலக்கியங்களில் வரும் அந்த அன்னதான ப்ரபு "சிவபாத ஹிருதயர்" திருஞான சம்பந்தரின் தந்தையார், என்ன என் விடை சரியா?

    ReplyDelete
  3. பள்ளிப் பாடத்தில் தமிழில் இந்தக் கதை படித்துள்ளேன். முதல் பாரா படிக்கும்போது கதையை ஊகித்து விட்டேன். அவர் பெயர் மறந்துவிட்டது.... இந்தக் கதை தமிழ் துணைப்பாடத்தில் வந்தது. வகுப்பில் சொன்னவர்/படித்தவர் ஆசிரியர் திரு. நாராயண சாமி என்று நினைக்கிறேன். (ஆறு அல்லது ஏழாம் வகுப்பில்)

    ReplyDelete
  4. கதையும், கதையின் நடையும் அருமையாக உள்ளது.

    அன்னதான பிரபு என்று பார்த்தால் ஐயப்பன் கதை என்று நினைத்தேன்.

    கதையின் நாயகர்- சிவபெருமான் அல்லது வள்ளலாராக இருக்கலாம்.

    தெரிந்து கொள்ள ஆவல்.காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. கதை நல்லா இருக்கு எங்கோ கேட்டா மாதிரியும் இருக்கு. ஆனா அந்த அன்னதான பிரபு ஞாபகம் வரல..

    ReplyDelete
  6. பெரிய புராணத்தில் வரும் கதை என்று நினைவில் இருக்கிறது.. பெயர்கள் எல்லாம் நினைவில் இல்லை அண்ணே :)

    ReplyDelete
  7. சிவாஜி படம் எதிலும் இது மாதிரி ஸீன் பார்த்த ஞாபகம் இல்லையே...!

    ReplyDelete
  8. பெரிய புராணத்தில் வரும் இளையான் குடி மாற நாயனாரும் அவர் மனைவியும்தான் அந்த அன்னதானப் பிரபுக்கள்.. ரைட்டா :-)))

    //செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்நெல்
    மல்லல் நீர் முளை வாரிக் கொடு வந்தால்
    வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று
    அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வுற

    மற்ற மாற்றம் மனைவியார் கூற முன்
    பெற்ற செல்வம் எனப் பெரிது உள் மகிழ்ந்து
    உற்ற காதலினால் ஒருப் பட்டனர்
    சுற்று நீர் வயல் செல்லத் தொடங்குவார்

    உள்ளம் அன்பு கொண்டு ஊக்கவோர் பேரிடாக்
    கொள்ள முன் கவித்துக் குறியின் வழிப்
    புள்ளும் உறங்கும் வயல் புகப் போயினார்
    வள்ளலார் இளையான் குடி மாறனார்

    காலினால் தடவிச் சென்று கைகளால்
    சாலி வெண் முளை நீர் வழிச் சார்ந்தன
    கோலி வாரி இடா நிறையக் கொண்டு
    மேல் எடுத்துச் சுமந்து ஒல்லை மீண்டார்

    முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்துப் பதம் முன் கொள்ள
    வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து
    வெறுப்பில் இன் அடிசில் ஆக்கிமேம் படு கற்பின் மிக்கார்
    கறிக்கு இனி என் செய்கோம் என்று
    இறைஞ்சினார் கணவனாரை

    வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே
    அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று
    குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப்
    பழி முதல் பறிப்பார் போலப் பறித்து அவை கறிக்கு நல்க//

    அருமையான சிச்சுவேஷன் :-))

    ReplyDelete
  9. அடியவருக்கு செய்யும் தொண்டே ஆண்டவருக்கு செய்யும் அரும்பணி என உணர்ந்தார்.

    ReplyDelete
  10. பெரியபுராண கதா பாத்திரங்கள். பெயர் நினைவில் இல்லை

    ReplyDelete
  11. உருகினேன் RVS . பலமுறை படித்து மெய்சிலிர்த்த பெரிய புராணம். அமைத்தச் சாரலின் புண்ணியத்தால் மீண்டும் படித்து இன்புற்றேன். சிறுவயதில் என் பெரியப்பாவிடம் சுவாமி ஹரிதாஸ் என்பவரின் கேசட் தொகுப்பு கேட்டிருக்கிறேன். பெரிய புராண கதைகளை உணர்ச்சி பூர்வமாக கூறுவார். அந்த கேசட் எங்காவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி. ( மோகன்ஜி படித்தால் மிகவும் சந்தோசப்படுவார்)

    ReplyDelete
  12. இளையான்குடி மாற நாயனார் - தான் அந்த அன்னதானப் பிரபு.

    ReplyDelete
  13. முன்னாடியே விடை சொல்லிட்டங்களே!நாம லேட் :(

    இருந்தாலும் மீண்டும் படிக்க சுவாரசியத்துடன் தந்த சிறுகதை வள்ளல் பிரபுக்கு என் நன்றிகள் :)

    ReplyDelete
  14. அமைதிச்சாரலின் இந்தப் பரிமாணம் அதிசயிக்க வைத்தது. அபாரம்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  15. சம்பவமும் பெயரும் மட்டுந்தான் ஞாபகம் இருந்தது. பாடல்கள் முழு வரிகளும் ஞாபகத்திலிருந்து எடுத்துப்போடலைப்பா. அதுக்கு இணையத்துக்கும் ஒரு பெரிய பங்கிருக்கு.

    http://www.shaivam.org/tamil/thiru12u.htm

    http://noolaham.net/project/18/1719/1719.htm

    ReplyDelete
  16. அந்த நாள் பக்தி முழுக்க முழுக்க மனிதநேயம் சார்ந்துதான்.

    ReplyDelete
  17. @Ramani

    இப்போது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி. :-)

    ReplyDelete
  18. @கும்மாச்சி
    இல்ல சார்! இளையான்குடி மாற நாயனார். :-)

    ReplyDelete
  19. @Madhavan Srinivasagopalan
    மாதவா! இப்போ தெரிஞ்சுதா? :-)

    ReplyDelete
  20. @கோவை2தில்லி
    சகோ இப்போது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். :-)

    ReplyDelete
  21. @!* வேடந்தாங்கல் - கருன் *!
    நன்றி கருன். :-)

    ReplyDelete
  22. @இளங்கோ
    ரொம்ப நாளா ஆளைக் காணோமே இளங்கோ! :-)

    ReplyDelete
  23. @ஸ்ரீராம்.

    :-))))

    ReplyDelete
  24. @அமைதிச்சாரல்
    கருத்துக்கும் பாடலை எடுத்துப் போட்டதற்கும் நன்றிங்க. :-)

    ReplyDelete
  25. @வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
    இளையான்குடி மாற நாயனார் மேடம். :-)

    ReplyDelete
  26. @சிவகுமாரன்
    நன்றி சிவா! :-)

    ReplyDelete
  27. @raji
    மேடம் என்ன வள்ளலா? எள்ளலா? :-))))

    ReplyDelete
  28. @அப்பாதுரை
    ஆமாம் சார்! :-)

    ReplyDelete
  29. @ரிஷபன்
    கரெக்டுதான் சார்! நன்றி. :-)

    ReplyDelete