Wednesday, October 17, 2012

பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை

கொஞ்ச நாட்களாக கம்பராமாயணக் காதலில் மயங்கி இருக்கிறேன். படிப்பது கேட்பது இரண்டும் பெரும்பாலும் கம்பன் பக்கமே சாய்ந்திருக்கிறது.

காந்திஜி ஒரு சமயம் தமிழகத்திற்கு வந்திருந்த போது சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரிடம் “உங்களது தமிழில் ஏதோ ராமாயணம் இருக்கிறதாமே. நான் ஒரு வாரம் இங்கே தான் இருக்கிறேன். எனக்குக் கற்றுக்கொடுக்க முடியுமா?” என்று ஆர்வமாகக் கேட்டாராம்.

அதற்கு ராஜாஜி இதற்கு சரியான ஆள் ரசிகமணி டி.கே.சிதான் என்று முடிவு செய்து அவரிடம் காந்திக்கு கம்ப ராமாயணம் கற்றுக்கொடுக்க கேட்டுக்கொண்டாராம். எதிரில் அமர்ந்திருந்த ரசிகமணியிடம் காந்தி ஆர்வத்துடன் “எங்கே ஆரம்பிக்கலாம்? எப்போது ஆரம்பிக்கலாம்?” என்று துடித்தாராம். அதற்கு ரசிகமணி மிகப்பொறுமையாக “அடுத்த ஜென்மத்தில் பார்க்கலாம்” என்றாராம். காந்தி “ஏன்?” என்று கேட்டதற்கு “இந்த மகா காவியத்தை எழுத்துக்களாகப் படித்துப் புரிந்துகொள்வதைவிட தமிழனாய் பிறந்தால்தான் உணர்வுப்பூர்வமாக அனுபவிக்க முடியும். அதனால் அடுத்த ஜென்மத்தில் நீங்களும் தமிழனாய்ப் பிறந்து நானும் தமிழனாய் பிறந்து சந்தர்ப்பம் வாய்த்தால் சொல்லித்தருகிறேன்” என்றாராம்.

தேசப்பிதா காந்தியிடம் இல்லாத தகுதி எனக்கிருக்கிறது என்கிற கர்வத்துடன் கம்பராமாயணம் படிக்கிறேன்.

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே

இவ்வுலகத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளையும் தன் விருப்பத்திற்கேற்ப ஆக்கலும் அவைகளை காப்பதும் அல்லவைகளை அழிப்பதுவும் முடிவுறாத அளவில்லாத விளையாட்டாக உடையவர் அவரே தலைவர் அவர் சரண் நாங்கள்.

நான் படித்த உரைகள், சொற்பொழிவுகள், புலவர்கள் நயம் பாராட்டிய கம்பனின் கவி ஆழங்கள் இவைகளைக் கொண்டு எனக்குத் தெரிந்த வகையில் இதை எழுதலாம் என்று விருப்பம். என்னைப் போலவே இதில் கிண்டர் கார்டன் அளவில் மட்டும் வளர்ந்திருப்பவர்கள் இதை ஆசையுடனும் ஆர்வத்துடனும் படிக்கலாம். இதைக் கண்ணுரும் அறிஞர் பெருமக்கள் சான்றோர்கள் குறைகள் இருப்பின் தோழமையுடன் சுட்டிக் காட்டித் திருத்தலாம். 
இக்காவியத்தை எழுத ஆரம்பித்த கம்பன் ஒரு பெரிய பாற்கடலை சிறு பூனை நக்கிக் குடித்துவிட ஆசைப்பட்டதைப் போல இந்த இராமன் கதையை எழுதுகிறேன் என்று முன்னுரைப் பாவோடு ஆரம்பிக்கிறான்.
ஓசை பெற்று உயர் பால் கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கு என
ஆசை பற்றி அறையல் உற்றேன்; மற்று இக்
காசு இல் கொற்றத்து அத்து இராமன் கதை அரோ


இதில் பூசை என்ற சொல்லுக்குப் பொருள் பூனை. ஓசையுடன் அலை உயர அடிக்கும் பாற் கடல் முழுவதையும் ஒரு பூனை நக்கிக் குடித்துவிட ஆசைப்பட்டதைப் போல என்ற அர்த்தத்தில் வருகிறது... காசு இல் கொற்றத்து என்பது... குற்றமில்லாத வெற்றியை உடைய என்கிற பொருளில் வருகிறது...
 
நான் பூனை கூட இல்லை.

#அவ்வப்போது இனி கம்பராமாயண அப்டேட்ஸுடன்...

24 comments:

  1. இந்தப் பால் இனிக்கும்.. தொடருங்கள், நாங்களும் பூசைகளாக வரிசையில் நிற்கிறோம் :-)
    (ம்லையாளத்திலும் பூனையை 'பூச்சை' என்றுதான் சொல்வார்கள்)

    ReplyDelete
  2. ஆர் வி எஸ்,
    மிக்க மகிழ்வாயிருக்கிறது..

    கம்பனின் கவி ஒரு போதை.மாயச் சுழல்;மயக்கும் காதலி;இனிய தோழமை;இதம் தரும் நிழல் சுகம்..

    பாரதியையும், திருக்குறளையும், கம்பனையும் படித்தவன் வாழ்வில் தோற்பதில்லை-ஒரு மனிதனாக!

    வெல்கம் டு த க்ளப்.

    ReplyDelete
  3. கவிச்சக்ரவர்த்தி கம்பனின் தமிழ் அழகு, உவமை அழகு என்பது அனைவரும் அறிந்தது. தொடருங்கள். உங்களுடன் சேர்ந்து நாங்களும் தமிழமுதம் பருகுகிறோம்.

    ReplyDelete
  4. கம்பனின் அழகு தமிழை பாராட்ட வார்த்தைகள் இல்லை.. அருமையான பகிர்வு

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்.
    அறிவன் சொல்வது அத்தனையும் வாய்மை, வெறும் வார்த்தையில்லை.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. @அமைதிச்சாரல்
    தமிழிலிருந்து மலையாளத்திற்கு போன நல்ல தமிழ் சொற்கள் என்று ஒரு லிஸ்ட் படித்தேன். பிரிதொரு பதிவில் பகிர்கிறேன். நன்றி

    ReplyDelete

  8. @அறிவன்#11802717200764379909 | * |

    // கம்பனின் கவி ஒரு போதை.மாயச் சுழல்;மயக்கும் காதலி;இனிய தோழமை;இதம் தரும் நிழல் சுகம்..// படித்துக் கேட்ட ஓரிரு பாக்களிலேயே இதை அனுபவித்தேன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. முடிந்தவரை எழுதலாம் என்று விருப்பம். நன்றி.

    வாழ்வில் தோற்பதில்லை-மனிதனாக.. சூப்பர்ப். :-)

    ReplyDelete

  9. @பால கணேஷ்
    நன்றிங்க.. :-)

    ReplyDelete

  10. @Ayesha Farook
    முதல் வரவிற்கும் பாராட்டிற்கும் நன்றி. :-)

    ReplyDelete

  11. @அப்பாதுரை
    நன்றி! எழுதறேன். அறிவன் நீங்களெல்லாம்தான் அடிக்காமல் இருக்கணும். முயற்சி பண்றேன். :-)

    ReplyDelete
  12. பாற்கடல் என்றால் விடுவோமா சுவைக்க வருகின்றோம்.

    ReplyDelete
  13. @மாதேவி
    வருக வருக... :-)

    ReplyDelete
  14. கம்பனின் கவிச்சுவை பருக நாங்களும் ரெடி.....

    தொடரட்டும் இனிய பகிர்வு...

    ReplyDelete
  15. அவசியமான சாய்வு. இதுபோலவே சாய்ந்து இருக்கட்டும் உங்கள் ரசனை. அது உங்கள் எழுத்துக்கும் பெரும்பலம் உண்டுபண்ணும்.

    கம்பன் வீட்டு நாட்டித்(naughty) தறி நெசவை ஆரம்பித்திருக்கிறது.வாழ்த்துக்கள் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  16. @வெங்கட் நாகராஜ்
    சரிங்க தலைநகரமே! செய்யறேன். :-)

    ReplyDelete
  17. @சுந்தர்ஜி
    தறிகெட்டுப்போன நாட்டித் தறிக்கு இப்போதுதான் இதை நாடவேண்டும் என்று பட்டிருக்கிறது. நன்றி ஜி! :-)

    ReplyDelete
  18. @ஸ்ரீராம்.
    ஓஹோ!!! :-)

    ReplyDelete
  19. neenga poonai illai oru e appadiththaane?

    ReplyDelete
  20. நன்றி. இதுவே எனது முதல் கருத்து உங்கள் ப்ளாக்கில். நீங்கள் பூனையாக எழுதுங்கள். நாங்கள் பூனைக்குட்டி போல் தொடர்கிறோம்.

    ReplyDelete
  21. கம்பரசத்தைப் பருகக் காத்திருகின்றோம்.நல்லதொரு முயற்சி பாராட்டுகள்!.

    ReplyDelete
  22. படிக்க நாங்களும் தயாராக உள்ளோம்....தொடருங்கள்.

    ReplyDelete