Wednesday, October 24, 2012

இணைய எழுத்துகள்


ப்ளாக் போன்ற இலவச பொது எழுதுமிடம் கிடைத்தது கிறுக்குபவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. வெளியே மழையாய்ப் பொழியத் தவமிருக்கும் எண்ணங்களுக்குக் கிடைத்த அரிய வரமாக நினைத்துக் கையொடிய இராப்பகலாக தட்டச்சி சிறுகதை, கவிதை, ஹைக்கூ, தொடர், நாவல் என்று ஜமாய்ப்பவர்களும் உண்டு. இரவல் புத்தகம் வாங்கி இன்புற்ற உலகிற்கு இப்போது சில ப்ளாக்குகளில் சில நிமிட சந்தோஷம் தாராளமாகக் கிடைக்கிறது. இலவசமாக. ப்ளாக்கில் ரத்தினச் சுருக்கமாகவும் எழுதலாம். அடுத்தவர் சுருக்கு போட்டுக்கொள்ளுமளவுக்கும் எழுதித் தள்ளலாம். நமக்குக் கிடைத்த வாசகரின் பேறு அது.

ப்ளாக்கில் முகமறியா நண்பர்களைப் பெற்று ”அருமை!”, “நல்ல நடை” ”இதைப் புத்தகமாகப் போடலாம்” என்று சிலாக்கியமான கருத்துக்களும் ““க், த், ப் விட்டு எழுதுகிறீர்கள்”, ”ந,ன,ண வித்தியாசம் தெரியாதா?” ”பறக்கற ‘ற’ பறக்காத ர வித்தியாசம் தெரியாதா?” என்றெல்லாம் மொழிப் போர்களைச் சந்தித்து எழுத்தார்வமிக்கவர்கள் அயர்ச்சியடைந்திருக்கையில் ஃபேஸ்புக் என்கிற சாதனம் திருமுகத்தையும் காண்பித்து ஜல்லியடிக்க உதவிக்கு வந்தது. முகத்தில் பாதி நிழலடிக்க அவுட் ஆஃப் ஃபோகஸ் ஃபோட்டோவை அப்லோட் செய்து “ஃபைன் டீ!” “லவ்லி” “மை லவ் பா” என்று நட்பு வட்டங்களால் அதீதமாய் புகழப்பட்டு இன்புறுகிறார்கள்.

சமுதாய விழிப்புணர்வு, புரட்சி, தாய் தடுத்தாலும் விடேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு வண்டி வண்டியாய் ஸ்டேட்டஸ் போடுபவர்களும் உண்டு. அகத்திலிருக்கும் மன மாசுகளைக் கொட்டிப் பிறரைப் பழிக்கும் பலர் பெரும்பாலும் முகமூடியுடன் உலவுகிறார்கள். எழுத்தில் கலவரத்தை உண்டு பண்ணும் இது போன்றவர்களது முகங்களை காண முடியாமல் ஏங்கும் ஏழை நெஞ்சங்கள் பல உண்டு. பட்டும் படாமலும் ஒட்டியும் ஒட்டாமலும் இலை மறை காயாக (முக்கியமான Cliche) எழுதுபவர்கள் பல தூற்றுதல்களிலிருந்து தப்பித்து பரம சௌக்கியமாக இங்கே காலம் தள்ள முடிகிறது.

குருவி வளர்ந்து குயிலான கதையாக முளைத்தது ட்வீட்டர். குயிலின் கச்சேரி அந்த ஒன்றிரண்டு கூக்கூக்கள் தான் என்பதற்கு வடிவம் கொடுத்துக் கச்சிதமாக கதைக்கச் சொல்கிறார்கள். உரைநடையில் குறுநடையாக 140 எழுத்துக்களில் சிக்கனமாக எழுதத் தெரிந்தால் நீங்கள் ஒரு சிறந்த கீச்சுக் குயில். இந்த ட்வீட்டர் சமாச்சாரம் என் போன்ற வாய் மூடா வளவளாவிற்கு (இந்தப் பதிவே இதற்கு நற்சான்று) உகந்ததாக இல்லை. ஆர்வமாகப் பதிந்துகொண்டேனே தவிர கீச்சுக்கள் பதிய முடிவதில்லை. நாலடியார், திருக்குறள் போன்ற பண்டைய ட்வீட்டுகளுக்கு மத்தியில் நம்முடையது சோபிக்குமா என்ற அக உறுத்தலில் அந்தப் பக்கம் எட்டிப்ப்பார்க்க பயமாக இருக்கிறது.

யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுத்துச் சுதந்திரத்திற்கு இலக்கணமாகத் திகழ்வதுதான் இம்மூன்றும். டிஜிட்டல் புரட்சியில் இந்த எழுத்துப் புரட்சி பல ரேழி எழுத்தாளர்களை கிளர்ந்தெழுந்து பொது வெளியில் வந்து போராடவைத்திருக்கிறது. இது போன்ற வார்த்தைப் போராட்டத்தில் ஒரு சௌகரியம் உள்ளது. “வெளியே வாப்பா” என்று யாரும் வந்து கையைப் பிடித்து வீதிக்கு இழுத்துவிடமாட்டார்கள். சேஃப் ஃபைட்.

”ப்ளாகா? ஃபேஸ்புக்கா? ட்வீட்டரா?” என்று ”கல்வியா செல்வமா வீரமா” பாணியில் தடுமாறுபவர்களில் நானும் ஒருவன். ஃபேஸ்புக்கால் அதிகம் ஈர்க்கப்பட்டாலும். எதில் எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஒருவருக்கும் நஷ்டமில்லை.

#இணைய எழுத்துகள் பற்றி பொதுவாக எழுந்த சில ”திடீர்”ச் சிந்தனைகள். இதில் சில இடங்களில் நானும் இருக்கலாம். யாரையும் குறிப்பிடுவன அல்ல!!
 
##ஃபேஸ்புக்கில் பகிர்ந்தது.

27 comments:

  1. நல்ல விஷயம்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //எதில் எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஒருவருக்கும் நஷ்டமில்லை.//

    உண்மை தான்.

    ReplyDelete
  3. கிறுக்குபவர்களுக்கு இடமாகப்போய்விட்டது என்றா சொல்கிறீர்கள் !!

    ஆச்சரியமாக இருக்கிறதே !!

    கிறுக்குகளுக்கு இடமாக இருக்கிறது என்று தானே நான் நினைத்தேன்.
    இங்கும் வந்தேன்.

    ஹி....ஹி...


    சுப்பு தாத்தா.
    www.menakasury.tumblr.com

    ReplyDelete
  4. நல்ல அலசல்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. //அகத்திலிருக்கும் மன மாசுகளைக் கொட்டிப் பிறரைப் பழிக்கும் பலர் பெரும்பாலும் முகமூடியுடன் உலவுகிறார்கள்.//

    மிகச் சிறப்பான வார்த்தைகள். சம்பந்தப்பட்டவர்கள் திருந்த வேண்டும். நல்லதொரு நடுநிலையான பதிவு.

    ஸ்ரீ....

    ReplyDelete
  6. நல்ல ஜல்லி! :) ஐ... இந்த மாதிரி கூட கமெண்ட் போடலாம் போல!

    ReplyDelete
  7. எல்லோருக்கும் ஐந்தைந்து நிமிடப் புகழ்!

    என் எழுத்தையெல்லாம் எந்தப் பத்திரிக்கை போடப் போகிறது? போடப் போகிறதா இல்லையா (இல்லை என்று நிச்சயம் தெரியும்... ஆனாலும் நப்பாசை!) என்பதைத் தெரிந்து கொள்ளவே நாற்பத்தைந்து நாட்கள் தபால் தலை ஒட்டிய சுயவிலாசமிட்ட கவரனுப்பிக் காத்திருக்க வேண்டும்! அதற்கு இது தேவலாம்! இன்ஸ்டன்ட் சாபல்யம்

    ReplyDelete
  8. அடுத்தவருக்காக எழுதாமல் தனக்காக, எண்ணங்களைப் பகிர்வதை வேறெந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதுவோர் - எழுதாமல் விடுவது நஷ்டம் என்றே தோன்றுகிறது. சாப்பிடுவது மூச்சு விடுவது போல ஒரு திறனாக அமையாததே எழுத்தின் சிறப்பு (?). இன்றைக்கு இணையத்தில் எழுதுவோர் சிலர் எழுதுவதை நிறுத்தினால் நஷ்டம் உண்டு என்பேன்.

    ReplyDelete
  9. வலைப்பதிவு என்பது கிறுக்குபவர்கள் இடமா ?
    இல்லை..கிறுக்கர்கள் இடமா ?

    ஆர்.வி.எஸ் எடுத்துக்கொண்ட தலைப்பில்
    ஓர் ஆய்வு.

    meenachi paatti
    h/o சுப்பு தாத்தா.

    ReplyDelete
  10. நல்ல கண்ணோட்டம் கொண்ட பதிவு...

    ReplyDelete
  11. அப்பாத்துரை ஸாரின் கருத்தே என் கருத்தும்.

    ReplyDelete
  12. அன்புள்ள RVS சார், நலமா?

    //யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுத்துச் சுதந்திரத்திற்கு இலக்கணமாகத் திகழ்வதுதான் இம்மூன்றும். டிஜிட்டல் புரட்சியில் இந்த எழுத்துப் புரட்சி பல ரேழி எழுத்தாளர்களை கிளர்ந்தெழுந்து பொது வெளியில் வந்து போராடவைத்திருக்கிறது. இது போன்ற வார்த்தைப் போராட்டத்தில் ஒரு சௌகரியம் உள்ளது. “வெளியே வாப்பா” என்று யாரும் வந்து கையைப் பிடித்து வீதிக்கு இழுத்துவிடமாட்டார்கள். சேஃப் ஃபைட்.//

    நான் அப்படி அர்த்தத்தில் டிவீட்டல. இப்படி அர்த்தத்தில் டிவீட்டல என்று இந்த் டிவீட்டால உலகமகா போர் போய்க்கொண்டிருப்பதை மறந்து விட்டீர்களா? (சின்மயி விவகாரத்தைத் தான் சொல்றேன்)

    வாய்க்கொழுப்பு இருந்தா எல்லாத்துலயும் க்‌ஷ்டம் இருக்கு.

    அழகான பதிவு. ரசித்தேன்.

    ReplyDelete
  13. @விமலன்
    கருத்துக்கு நன்றிங்க :-)

    ReplyDelete

  14. @RAMVI
    நான் என்னுடைய எழுத்தைச் சொன்னேன் மேடம். நன்றி. :-)


    ReplyDelete
  15. @sury Siva
    என்னைப் போல் கிறுக்குபவர்கள் என்று எழுதியிருக்க வேண்டும். மன்னிக்கவும்.

    நீங்கள் நினைத்துக்கொண்டு வந்தது சரியே!
    ஹி....ஹி...
    நட்புடன்
    ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  16. @திண்டுக்கல் தனபாலன்
    நன்றிங்க. :-)

    ReplyDelete
  17. @ஸ்ரீ...

    நன்றிங்க ஸ்ரீ..

    ReplyDelete
  18. @வெங்கட் நாகராஜ் said...

    அருமையான கமெண்ட்!! :-)

    ReplyDelete
  19. @ஸ்ரீராம்.

    நான் எல்லோரையும் வைதுவிட்டேன் என்று நினைக்கிறார்கள். அப்படியில்லை ஸ்ரீராம். காழ்ப்புணர்வோடு கன்னாபின்னாவென்று பதிவெழுதுபவர்களைத்தான் குறிப்பிட்டேன். மற்றபடி ஒன்றுமில்லை.. நீங்கள் சொன்னதுதான் என்னைப் போன்றோரும் நினைப்பது. அதுதான் நிதர்சனமான உண்மை. நன்றி. :-)

    ReplyDelete
  20. @அப்பாதுரை
    // சாப்பிடுவது மூச்சு விடுவது போல ஒரு திறனாக அமையாததே எழுத்தின் சிறப்பு (?). //

    சார் உங்களுக்கு அது வாய்த்திருக்கிறது. எந்த சப்ஜெக்ட்டிலும் புகுந்து விளையாடுகிறீர்கள். நஷ்டமில்லை என்று சொன்னது என் கட்சிக்காரர்களுக்கு தான். :-)

    ReplyDelete
  21. @sury Siva

    ஆய்வுக்குரிய தலைப்பா? சந்தேகமே வேண்டாம். என் போன்ற கிறுக்கர்கள் கிறுக்கும் இடம்தான். :-)

    ReplyDelete
  22. @Ayesha Farook
    நன்றிங்க.. :-)

    ReplyDelete
  23. @பால கணேஷ்
    நண்பரே! அப்பாஜிக்கு போட்ட பதிலை படித்துக்கொள்ளவும்.
    படித்ததற்கும் கருத்திட்டமைக்கும் நன்றி. :-)

    ReplyDelete

  24. @ஆதிரா
    வலைப் பக்கம் பார்த்து ரொம்ப நாளாச்சுங்க மேடம். எப்படியிருக்கீங்க. குமுதமில் இன்னும் தேக ஆரோக்கியம் பற்றி எழுதுகிறீர்களா? நீங்கள் கமெண்ட் போட்டதையும் மனதில் வைத்துக்கொண்டு எழுதியதுதான் இந்தப் பதிவு. பெண்ணறிவு நுண்ணறிவு. நன்றி. :-)

    ReplyDelete
  25. //யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுத்துச் சுதந்திரத்திற்கு இலக்கணமாகத் திகழ்வதுதான் இம்மூன்றும்.//

    கிடைத்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தாதவரை எதுவும் நல்லதே.

    ReplyDelete
  26. நீங்க சொல்லியுள்ளது மிகச்சரியானது தான். நம்முடைய கருத்தை, எண்ணங்களை உடனே பகிர்ந்து கொள்ள முடிகின்றது.....

    ReplyDelete
  27. ஆம் ஆர்.வி.எஸ். இப்போது குமுதம் குழுமத்தில் எல்லா இதழ்களிலும் எழுதுகிறேன். இந்த வாரம் 07.11.12 நாளிட்ட குமுதம் இதழில் கூட என் கட்டுரை வந்துள்ளது. மறந்து போன விருந்துகள் என்னும் தலைப்பில்.

    முகநூலில் கூட பார்த்துதான் பதிவிட வேண்டும் போல. கார்த்திக் சிதம்பரம் ஸ்டைல் தாக்குதல் எல்லாம் எதிர் கொள்ள தயாரா இருக்க வேண்டும் போல அதனால் சொன்னேன்.

    சரி நலம்தானா.. விட்டு போன எல்லா பதிவுகளையும் படித்தேன் இன்று.

    நீங்க தலைகீழா எழுதினாலும் அது நேரா மட்டுமில்ல அழகாகவும் இருக்கிறதே. ரகசியம் என்ன சொல்லுங்க ப்ளீஸ்..

    ReplyDelete