Wednesday, December 12, 2012

பல்பு

"ஹலோ சுந்தரா?”

“ஆமாங்க.. சுந்தர்தான் பேசறேன்”

“இன்னிக்கி சாயந்திரம் கொஞ்சம் நேப்பியர் பிரிட்ஜ்ஜாண்ட வரமுடியுமா?”

“நீங்க யாரு? நா ஏன் அங்க வரணும்?”

“நேத்திக்கு சாயந்திரம் காந்தி சிலையாண்ட உங்களோட பர்ஸ் தொலைஞ்சு போச்சுல்ல”

“ஐயய்யோ! ஆமாங்க. போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடுத்துருக்கேன்”

“போலீஸ்லாம் எதுக்குங்க? நான் தான் கண்டுபிடிச்சிட்டேன்ல. சாயந்திரமா வந்து வாங்கிக்கோங்க”

“சரிங்க..”

“சரியா வந்துடுங்க.. வச்சிடட்டுமா?”

“ஹலோ... ஹலோ... இருங்க... .இருங்க.. இருங்க... நீங்க யாரு? எப்படி இருப்பீங்க.. அடையாளம் எதுவும் சொல்லாம ஃபோனைக் கட் பண்ணினா நேப்பியர் பிரிட்ஜ் கிட்ட வந்து உங்களை எப்படி பார்க்க முடியும்”

“உசரமா, POLICE னு முதுகில எழுதின ரெட் டீ ஷர்ட், முட்டியில கிளிஞ்ச ப்ளூ ஜீன்ஸ் போட்ருப்பேன். கண்ணுக்கு கூலிங்கிளாஸ் மாட்டியிருப்பேன்.”

“சரிங்க.. வந்துடறேன்... ரொம்ப தேங்க்ஸ்...”

”வாங்க.. சரியா 6 மணிக்கு வந்துடுங்க.. எனக்கு நிறையா வேலையிருக்கு...அப்புறம் கிளம்பிட்டேன்னா வருத்தப்படாதீங்க..”

******

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸுங்க..”

“ச்சே..ச்சே.. பரவாயில்லை.. எல்லாம் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க..”

“ம்..ம்.. இருக்குங்க.. உங்களுக்கு தங்கமான மனசுங்க...”

“பாராட்டறது இருக்கட்டும். உங்களோட கேஷ், கார்டு எல்லாம் இருக்கான்னு பார்த்துக்கோங்க.. உதவி பண்ணப்போயி அப்புறம் பொல்லாப்பாயிடப்போவுது...”

“5000 கேஷ் வச்சுருந்தேன். அடுக்கியிருந்தபடி அப்படியே இருக்கு. சிட்டிபேங்க் கிரெடிட் கார்டு வச்சுருந்தேன். அதுவும் இருக்கு. பான் கார்டு.. ட்ரைவிங் லைசென்ஸ்.. எல்லாமே இருக்கு...”

”ஓ.கேங்க.. நான் கிளம்பறேன்..”

“இருங்க சார். இந்த கலியுகத்துல இது மாதிரி யார் சார் ஹெல்ப் பண்ணுவாங்க.. இந்தாங்க என்னோட அன்பளிப்பா இதப் பிடிங்க”

“ச்சே.,.ச்சே.. இதெல்லாம் வேணாம்.”

“பரவாயில்லை வாங்கிக்கோங்க..”

“இல்லீங்க.. 500 ரூபாயெல்லாம் வேண்டாங்க..”

“அப்ப.. இந்தாங்க 1000”

“அடடா... வேண்ட்டங்க.. ப்ளீஸ்”

“அட... புடிங்க சார்.. உங்களுக்கு இந்தப் பணத்த கையில வாங்க கூச்சமாயிருக்கு போலருக்கு... நானே சர்ட் பாக்கெட்ல திணிச்சுடறேன்.. நன்றி சார்.,... ”

*****

“நேத்து ஒரு உத்தமமான மனுஷனப் பார்த்தேன்டா சேகர்!”

“யாரது?”

“என்னோட பர்ஸ் தொலைஞ்சு போச்சுன்னு சொன்னேன்ல.. அது கிடைச்சிடுச்சு”

“எப்படி?”

“சொன்னேனே அந்த உத்தமன்... அவன் ஃபோன் பண்ணிக் கூப்பிட்டுக் குடுத்தாண்டா. இந்த மாதிரி சிலபேர் வாழறதுனாலதான் சென்னையில மழை பெய்யுது”

“ஆச்சரியமா இருக்கே! எப்படி உன்னுதுன்னு கண்டுபிடிச்சான்”

“பர்ஸ்ல என்னோட விஸிடிங் கார்டு இருந்தது. அதப் பார்த்துட்டுக் கூப்பிட்டுக்கான்”

“ம்... இண்டெரெஸ்டிங். என்ன சொன்னான்? எங்க கூப்பிட்டான்.. ”

“நேத்திக்கு காந்தி சிலையாண்ட பர்ஸை தொலைச்சீங்கல்ல.. நா கண்டுபிடிச்சிட்டேன். நேப்பியர் பிரிட்ஜான்ட்ட வந்து வாங்கிக்கோங்கன்னான்..”

“ம்... அப்புறம்?”

“போய் பார்த்தேன். ஒண்ணுமே வேண்டாம்ட்டு பர்ஸை எங்கிட்ட குடுத்துட்டு கிளம்பினாரு. நாந்தான் வலுக்கட்டாயமா ஒரு ஆயிரம் ரூபா குடுத்தேன். அதுகூட கையால வாங்கமாட்டேன்னுட்டாரு. சர்ட் பாக்கெட்ல திணிச்சு அனுப்பிச்சேன். இந்த மாதிரி ஆளையெல்லாம் நாம என்கரேஜ் பண்ணணும். என்ன சொல்றே”

”திருடனை என்கரேஜ் பண்ணனுமா? போடாங்......”

“என்னடா இப்படி சொல்றே..எப்படி திருடன்றே...”

”அப்புறம்... உன் கிட்ட என்ன சொல்லி வரச்சொன்னான்?”

“காந்தி சிலையாண்ட........ நேத்திக்கி.......... நீங்க......... பர்ஸை..........”

“ம்...ம்.....”

“டேய்... அப்படீன்னா....நா ஏமாந்துட்டேனா....”

“நல்லா பல்ப் வாங்கியிருக்கே... மொதநாள் இல்லீகலா உங்கிட்டேயிருந்து பர்ஸை அடிச்சுட்டு.. மறுநாள் லீகலா ஆயிரம் ரூபா வாங்கி திருட்டுல புரட்சி பண்ணியிருக்கான்டா அவன்.. தி கிரேட் தீஃப்...”

25 comments:

  1. லாஜிக் மிஸ் ஆகுதே வெங்குட்டு..
    திருடன்ன்னா 5000ஐக் கொடுத்துட்டு 1000த்தை வாங்கிப் போவானா?

    அவன் நல்லவனா இருந்தா - தொலைத்தவருக்கு வேணா எங்க தொலைத்தோம்னு தெரியாமல் இருக்கலாம், கண்டெடுத்தவனுக்கு இங்கதான் எடுத்தேன் அதனால் தொலைத்தவர் இங்கதான் தொலைத்திருக்கணும்னு தெரியும்தானே - அப்படியானால் அவன் இடத்தை சொன்னதை வச்சி அவன் திருடன்னு எப்படி சொல்ல முடியும்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  2. @sriram

    ரொம்ப பெரிசா மண்டையப் போட்டுக் குழப்பிக்காதீங்க. எந்த லாஜிக்ல எழுதினேன்னா..

    அவன் ஒரு பிக்பாக்கெட் ஆசாமி. இது மாதிரி ஐஞ்சு பர்ஸ் அடிச்சா ஐயாயிரம். வித்தவுட் எனி ரிஸ்க். போலீஸ் ஜெயில் எதுவும் கிடையாது.

    அம்புட்டுதேன்.. காந்தி சிலையாண்ட ஐஸ்க்ரீம் சாப்புட்டுட்டு காசு கொடுத்துட்டு பர்ஸை பின்னாடி வச்ச வரைக்கும் பர்ஸைப் பரிகொடுத்தவருக்கு ஞாபகம் இருந்திருக்குன்னு வச்சுக்கோங்களேன்.. இப்ப எங்க தொலைச்சோம்னு ஞாபகம் வருமா?

    இன்னுமும் லாஜிக் இடிக்கறா மாதிரி இருக்கா பாருங்க.. அப்படி இடிச்சா சொல்லுங்க லாஜிக் உருவாக்கிடுவோம் ஸ்ரீராம். :-)

    ReplyDelete
  3. @துளசி கோபால்

    :-)

    ReplyDelete
  4. @அப்பாதுரை

    ஏமாந்தா பல்புனு சொல்லுவோம். எதுக்கு வொய்னு புரியலையே சார்!

    ReplyDelete
  5. திருட்டுல புரட்சி !!!

    ReplyDelete
  6. @இராஜராஜேஸ்வரி
    புரட்சித் திருடன். :-)

    ReplyDelete
  7. //இது மாதிரி ஐஞ்சு பர்ஸ் அடிச்சா ஐயாயிரம். வித்தவுட் எனி ரிஸ்க். போலீஸ் ஜெயில் எதுவும் கிடையாது. //

    I agree with Boston Sriram. Simply a thief wud have thrown the purse & other items taking cash/valuables (certainly not ATM/DEBit/Credit cards)

    ReplyDelete
  8. ஆர்விஎஸ், லாஜிக் உதைக்குதுதான். திருடறப்ப மாட்டினாத்தான் உண்டு. அல்லது க்ரெடிட் கார்ட் எதையாவது பயன்படுத்தப்பாத்தா. இல்லைன்னா என்ன ரிஸ்க் இருக்கு? காஷ் ஐ எடுத்துகிட்டு பர்ஸை தூக்கி போட்டுட்டு போயிடலாம்.

    ReplyDelete
  9. @அமைதிச்சாரல்

    நன்றிங்க. :-)

    ReplyDelete
  10. @Madhavan Srinivasagopalan

    @Vasudevan Tirumurti

    ஒரு புரட்சிகரமான திருடன்னு வச்சுப்போமே! அதைத்தான் கடைசி வரியா எழுதினேன். அவனை ஏன் திருடன்னு சொல்லனும்னு கேட்டதுக்கு ஸ்ரீராமுக்கு பதில் சொன்னேன். அந்த பதில்ல லாஜிக் கண்ணை மறைச்சுடுச்சு..

    திருட்டுலையும் பெருந்தன்மையா நடந்துக்கிற ஒரு திருடன்.

    இந்த பதிலும் ரொம்ப பேத்தறமாதிரி இருந்துதுன்னா ஏதாவது ஓட்டை தமிழ் சினிமா சீன் பார்த்தா மாதிரி நினைச்சு மன்னிச்சு விட்டுடங்க. ப்ளீஸ். :-) :-)

    ReplyDelete
  11. செம பல்பு தான்...:))

    ReplyDelete
  12. // இந்த பதிலும் ரொம்ப பேத்தறமாதிரி இருந்துதுன்னா ஏதாவது ஓட்டை தமிழ் சினிமா சீன் பார்த்தா மாதிரி நினைச்சு மன்னிச்சு விட்டுடங்க. ப்ளீஸ். :-) :-) //

    oh! my dear RVS.. I'm not criticising you... Your style of writing never gets 'sour'..

    Take this, like 'criticising Tendulkar for getting out cheaply...' though he has talent..

    # but, Tendulkar should retire now.. but not you... :-)

    ReplyDelete
  13. பாஸ்டன் ஸ்ரீராம் தெளிவா கேட்டாரு.
    அதான் ஓய் என் ஒய் :-)

    ReplyDelete
  14. //திருட்டுலையும் பெருந்தன்மையா நடந்துக்கிற ஒரு திருடன்

    எங்கே பெருந்தன்மை?

    சும்மா ஏதாவது சொல்லிக் கழண்டுக்கலாம்னு பாக்கறீங்களா?

    ReplyDelete
  15. @கோவை2தில்லி
    இதை எழுதிப்புட்டு பின்னூட்டத்திலையும் பல்பு வாங்கிட்டிருக்கேன் சகோதரி. எதைச் சொல்றீங்க? :-)

    ReplyDelete
  16. @வெங்கட் நாகராஜ்

    திரும்பவும் என் சைட்லேர்ந்தும் அதே அதே சபாபதே.. :-)

    ReplyDelete
  17. @Madhavan Srinivasagopalan

    மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுப்பா... மனசுக்கு நிம்மதியாயிடும். :-)

    ReplyDelete
  18. @அப்பாதுரை

    மாதவன்கிட்டே மாப்பு கேட்டா மாதிரி உங்க கிட்டயும் கேட்டுக்கிறேன் சார். சின்னதா ஒரு தீம் கிடைச்சுது. புனைவு எழுதி ரொம்ப நாளாச்சுது. நிதானமா யோசிச்சு பெரிசா எழுதியிருக்கலாம். என் கெட்ட நேரம் அவசரப்பட்டு கிறுக்கிப்புட்டேன் சாமீ.

    உட்கார்ந்து யோசிச்சா எதாவது சாக்குபோக்கு சொல்லலாம். எனக்கு இஷ்டமில்லை. வேணாம் விட்டுடுங்க.. வலிக்குது... அழுதுடுவேன்... ம்...ம்...ம்... (அழுகுரல் கேட்டுதா?)

    :-) :-) :-)

    ReplyDelete
  19. நவீன திருடர்கள். :))

    நம்நாட்டு திருடர்கள் பர்சில் போதிய காசு இருந்தால் மட்டும் அடையாள அட்டையை போஸ்ட் செய்துவிடுவார்கள். இல்லாதுவிட்டால் அது குப்பைமேட்டில் கிடக்கும்.

    ReplyDelete
  20. அட..எப்படி எல்லாம்...இப்பூடீயுமா

    ReplyDelete
  21. @மாதேவி

    அது சரி! போஸ்ட் செய்யக் காசு வேணாமா? :-)

    ReplyDelete
  22. @முத்தரசு

    இப்படியும்தான் என்பதற்காக எழுதினேன். :-)

    ReplyDelete