Thursday, January 31, 2013

உப்புமா எழுத்தாளன்

நான் ஒரு உப்புமா எழுத்தாளன்.

வெட்டி முறித்து ஆஃபீஸிலிருந்து வீட்டிற்கு திரும்பும்போது சம்பந்தமேயில்லாமல் சாப்பாடு பற்றிப் புகுந்த கார் பேச்சில் நண்பர்களிடம் அரிசி உப்புமாவின் குண விசேஷங்களைப் பற்றி அரை மணி அசராமல் பேசினேன். சிற்றுண்டிக் களத்தில் “அரிசி உப்புமா-கத்திரிக்காய் கொத்ஸு” என்னும் விசேஷ இணை அஜீரண ஆசாமிகளைக் கூட வசியம் செய்யவல்லது.

கூவம் நதிக்கரையில் காலை நனைத்துக் கொண்டு உட்கார்ந்து சாப்பிட்டாலும் “இன்னும் போடு..இன்னும் போடு..” என்று தட்டை நீட்டச் செய்யும் அபார சக்தி வாய்ந்தது. ஒரு வெங்கலப்பானை உப்புமாவை அப்படியே ஸ்வாஹா செய்துவிட்டு அடிப்பிடித்திருப்பதை காந்தலே ருசியென்று மிச்சம் வைக்காமல் தின்னத் தோன்றும்.

Survival of the Tastiest என்கிற சிந்தாந்த அடிப்படையில் இன்னமும் எனது “சொத்தெழுதி வைத்துவிடுவேன்” புகழ் சிற்றுண்டியான பேருண்டி இந்த அரிசி உப்புமா.

அரிசி உப்புமாவை அசை போடும் மனதிற்குள் குமுட்டி அடுப்பு வந்து குபீரென்று பற்றிக்கொண்டது.

ஸ்கூல் விட்டு வந்து புஸ்தக மூட்டையை ஹால் பெஞ்சில் விசிறி எறிந்துவிட்டு “இன்னிக்கி என்ன பாட்டி டிஃபன்?” என்று கேட்டால் “கரித்துண்டம் ஈரமாயிடுத்துடா.. குமுட்டியை மூட்டிக்குடு... அரிசி உப்புமா பண்றேன்” என்பாள் பாட்டி. டிஃபனின்றி அசையமாட்டான் ஆர்விஎஸ்.

கரித்தூள் போட்ட குமுட்டி அடுப்பை மூட்டுவதற்கே விஷய ஞானம் அதிகம் வேண்டும். பக்கத்தில் எரியும் சிம்னி விளக்கில் “மன்னையில் புதிய உதயம்” என்கிற விளம்பர நோட்டீசு பேப்பரைச் சுருட்டிக் கொளுத்தி, கீழ்ப்புறமிருக்கும் சிறிய பொந்தில் கையில் சுட்டுக்காமல் தூக்கிப் போட்டு, அதற்கு நேரே விசிறியால் கை அலுக்க விசிறினால் ஒன்றிரண்டு கரித்துண்டு பற்றிக்கொண்டு மேலே கனல் கண்களுக்குத் தெரியும். சட்சட்டென்று ஒன்றிரண்டு தீப்பொறி குமுட்டியிலிருந்து பறக்கும்.

“ம்... இன்னமும் வேகமா விசுறுடா.. கரித்துண்டம் நன்னா புடிச்சிக்கட்டும்” என்று பாட்டி ஏவிவிட்டதும் ”உப்புமா..உப்புமா..உப்புமா” என்று நொடிக்கொருதரம் அடித்துக்கொள்ளும் வயிறுக்காக மனசு சிறகடித்துக்கொள்ள கை நொடிக்கு நாலு தடவை விசிற வேண்டும்.

குமுட்டி அடுப்பில் வெந்த அரிசி உப்புமா அதுவும் வெங்கலப்பானையில் கிண்டிய அரிசி உப்புமாவுக்கு டேஸ்ட் ஒரு படி அதிகம். ஒரு கவளம் எடுத்து நுணியில் ஒரு சொட்டு கொத்ஸு தொட்டு வாய்க்குள் நுழையும் போதே அதன் பிரத்யேக ருசி நாலு முழம் வளர்ந்த நாக்குக்குத் தெரியும்.

டொமேடோ கெட்ச்சப் தொட்டுக்கொண்டு நூல்நூலாய் இழுத்துச் சாப்பிடும் பீட்ஸா மற்றும் பகாசுர வாய் பிளந்து சாப்பிடும் பர்கர் போன்ற மேற்கத்திய சம்பிரதாய உண்டிகளால் செத்துப்போன இக்கால இளைஞர்கள் நாக்குக்கு அரிசி உப்புமாவும் கத்திரிக்கா கொத்ஸும் டேஸ்ட் எப்படியென்று தெரியுமா? க.கொத்ஸால் துணைக்கு வர முடியாத துரதிர்ஷ்ட காலங்களில் தேங்காய் சட்னியும் வெங்காய சாம்பாரும் உப்புமாவுக்கு தொட்டுக்கொள்ள கம்பெனி கொடுப்பார்கள். (கொத்ஸு) மூத்தாள் இல்லாத துக்கத்தை(?!) இவ்விளையாள்களின் (ச,வெ.சா) கூட்டணி நம்மை குஷிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வளவு காலமாக தங்கம் ரூபத்தில் தமிழக மக்களை ஆட்டிப்படைத்த மங்கு சனி விலகும் நேரத்தில் வேஷ்டியை மடித்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தேன். ”சாயந்திரம் டிஃபனுக்குப் பண்ணினோம். உனக்கு பிடிக்குமேன்னு....” என்று ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அரிசி உப்புமா தட்டில் இட்டார்கள். கொத்ஸுயில்லையென்றாலும் உப்புமாமிர்தமாக உள்ளே இறங்கிற்று.

மீண்டும் ஒரு முறை சொல்லிவிடுகிறேன்.

நான் ஒரு உப்புமா எழுத்தாளன்.

பட உதவி: www.myscrawls.com 

33 comments:

  1. அரிசி உப்புமாவுக்கு மாங்கா இனிப்பு ஊறுகாய்தான் என் சாய்ஸ்.

    கும்மோணம் கோமளா மாமியின் குமுட்டி அடுப்பு வெங்கலப்பானை அரிசி உப்புமா ருசி இன்னும் நாக்குலேயே நிக்குது:-))))

    ReplyDelete
  2. நானும் அரிசி உப்புமா கொத்சு ரசிகன் என
    சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்
    அதன் பெருமையை அருமையாக பதிவு செய்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  3. அரிசி உப்புமாவுக்கு மாங்காய் இனிப்பு ஊறுகாய்தான் என் சாய்ஸ்!

    கும்மோணம் கோமளா மாமியின் குமிட்டி அடுப்பு வெங்கலப்பானை அரிசி உப்புமாவின் சுவை இன்னும் நாக்குலேயே நிக்குது 35 வருசத்துக்குப் பின்னும்!!!

    ReplyDelete
  4. ஐயோ... உடனே இப்போ அரிசி உப்புமா கொத்சு சாப்பிட வேண்டும்...

    ReplyDelete
  5. அரச உப்புமா..
    (எழுத்துப்பிழை இல்லை :-))

    ReplyDelete
  6. கரியடுப்பு விசேஷம். அதன் வாசனை விசீஅஹம். வெங்கலப்பானை.அடிக்கருகல்.என்ன சார்
    இவ்வளவு வர்த்தி ஏத்திட்டீங்களே.

    கொத்சும் சரி. தேங்காய்த் துகையலும் நன்றாக இருக்கும்.
    மிக நல்ல உப்புமாப் பகிர்வுக்கும் எழுத்துக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. ஹாஹா, நம்ம அரிசி உப்புமா புகழ் இங்கிலாந்து வரை போயிருக்காக்கும். இங்கிலாந்து சென்ற இன்னம்புராரை வழி அனுப்பி வைத்ததே என்னோட அரிசி உப்புமாவும், வெங்காய கொத்சுவும், அரிசி உப்புமாவின் அடிப்பிடித்தலும் தான். செய்முறை விளக்கத்தோடு பார்க்க வேண்டிய இடம்.

    http://tinyurl.com/bf4sape

    இங்கே என்றாலும் இன்னொரு இடமும் இருக்கு. அதன் சுட்டியும் தரேன். அன்னிக்குக் கூட்டத்தின் அளவைக் கருத்தில் கொண்டும், அன்னிக்குத் தான் நான் ஊரிலிருந்து வந்திருந்தபடியாலும் கத்திரிக்காய் கொத்சு பண்ண முடியலை. இருந்த வெங்காயத்தைப் போட்டு கொத்சு பண்ணினேன். :)))))

    ReplyDelete
  8. குமுட்டி அடுப்புப் படமெல்லாம் போட்டிருக்கேன்னு நினைக்கிறேன். அதையும் செக் பண்ணிட்டு வரேன். வர்ட்ட்டா??

    ReplyDelete
  9. உப்புமாவின் மணம் எல்லோரையும் அழைத்து வந்துவிட்டதே :))

    ReplyDelete
  10. உப்புமா பற்றி உறுத்தாத பகிர்வுகள்..

    ReplyDelete
  11. உப்புமா பற்றி உறுத்தாத பகிர்வுகள்..

    ReplyDelete
  12. கத்தரிக்காய் கொத்சு எப்படிப் பண்ணுவது என்று யாராவது ஒரு பதிவு போட்டா தேவலை!

    ReplyDelete
  13. அரிசி உப்புமாவின் மணம் ஆளை இழுத்து வந்து விட்டது.

    எங்கள் வீட்டில் எப்போதுமே வெங்கலப் பானையில் தான்...

    இரண்டு நாட்கள் முன்னாடி தான் அரிசி உப்புமா செய்தேன். அடிக்காந்தலுடன்....

    கொத்ஸு சாப்பிடல்லாம் இங்கு யாரும் இல்லாததால் நெய்யும் ,சர்க்கரையும் தான்...:)) தோசை மிளகாய் பொடி போட்டு பிரட்டி சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  14. பழனி.கந்தசாமி அவர்களே, சுட்டி கொடுத்திருக்கேன் பாருங்க. tinyurl link click செய்து பாருங்க. கத்திரிக்காய் சிதம்பரம் கொத்சுக்கான லிங்கும் பகிர்ந்துக்கறேன். :)))))

    ReplyDelete
  15. http://geetha-sambasivam.blogspot.in/2009/11/blog-post_20.html


    இங்கே சென்று பார்க்கவும். சிதம்பரம் ஸ்பெஷல் சம்பா சாதமும், கொத்சுவும் செய்முறையோடு பார்க்கலாம். :))))))

    ReplyDelete
  16. மிளகாய் பொடி தூவி, கொஞ்சம் தேங்கா எண்ணெய் விட்டு ஒரு பிசறு பிசறி சாப்பிட்டு பாருங்கோ..டிவைன்...

    ReplyDelete
  17. அரிசி உப்புமா, கொஞ்சம் கொத்ஸுவுடன், கொஞ்சம் நெய் சக்கரையுடன், கொஞ்சம் ஊறுகாயுடன், கொஞ்சம் சட்னியுடன், கொஞ்சம் மோருடன், பிறகு ஒன்றுமில்லாது காந்தலாக!..... என்ன டேஸ்ட்... நீங்கள் சொல்வது போல இன்றைய பர்கர் பீட்சாக்கள் இதன் முன் சேவகம் செய்தாலும் பிடிக்காது! :)

    ReplyDelete
  18. நீங்க நிஜமாகவே உப்புமா எழுத்தாளர்தான் சார். இப்படி ஒரு மணமான அரிசி உப்புமாவைப்போட்டு எங்களையெல்லாம் உடனடியாக உப்புமா சாப்பிட வேண்டும் என்று அல்லாட வைத்துவிட்டீங்களே!!

    எனக்கு அரிசி உப்புமாவுக்கு தேங்காய்த் தொகையல்தான்.

    ReplyDelete
  19. @துளசி கோபால்
    குமுட்டி அடுப்புதான் பெஸ்ட். அவசரத்துக்கு ஆகுமோ மேடம்? :-)

    ReplyDelete

  20. @Ramani S
    இதற்கு பெரிய ஃபேன் க்ளப்பே இருக்கு சார். :-)

    ReplyDelete

  21. @திண்டுக்கல் தனபாலன்
    சாப்டீங்களா இல்லியா? :-)

    ReplyDelete

  22. @அமைதிச்சாரல்
    // அரச உப்புமா..
    (எழுத்துப்பிழை இல்லை :-))
    //
    புரியுதுங்க.. கவிதை... :-)

    ReplyDelete

  23. @வல்லிசிம்ஹன்
    மிக்க நன்றிங்க.. உப்புமா... குட்டுமா... :-)

    ReplyDelete

  24. @geethasmbsvm6
    விரிவான கருத்துரைக்கு நன்றி. உங்களது தளத்தில் கொட்டிக்கிடக்கிறது உப்புமாவின் மகா தகவல்கள். நன்றி மேடம்.

    ReplyDelete

  25. @மாதேவி
    நீங்களும் அப்படித்தான் உள்ளே வந்தீர்களா? :-)

    ReplyDelete

  26. @Rathnavel Natarajan
    நன்றி சார்! :-)

    ReplyDelete

  27. @இராஜராஜேஸ்வரி
    நன்றி மேடம். :-)

    ReplyDelete
  28. @பழனி. கந்தசாமி
    சார்! இந்த இழையிலேயே சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.. :-)

    ReplyDelete

  29. @கோவை2தில்லி
    வெங்கலப்பானையின் விசேஷம் அது. நன்றி மேடம். :-)

    ReplyDelete


  30. @DaddyAppa

    ஓகே. ட்ரை பண்ணிடுவோம். நன்றி. :-)

    ReplyDelete

  31. @வெங்கட் நாகராஜ்
    நன்றி தலைநகரமே. அரிசி உப்புமா அரச உப்புமா... அமைதிச்சாரல் மேடம் சொன்னா மாதிரி.. :-)

    ReplyDelete

  32. @RAMVI

    அரிசி உப்புமா சாப்ட்டாச்சா? :-)

    ReplyDelete