Sunday, September 5, 2010

ருது ஸம்ஹார காவ்யம்

ruthusamharaபருவகாலங்களைப் பற்றி எழுதுகிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து ஒவ்வொரு பருவத்திலும் தான் பார்த்த மரம் செடி கொடிகளின் பருவ மாற்றங்களையும், மக்கள் போக்கையும், காதலர்களின் நிலைமையையும் பிரித்து மேய்ந்திருக்கிறான் காளிதாசன். ஓட்டு மொத்தமா ஒரு திண்ணையில உட்கார்ந்து பார்த்து அனுபவிச்சிருக்கான். கையில எழுத்தாணியும், பனை ஒலையுமா எவ்வளவு நாழி மோட்டுவளையை பார்த்து உட்கார்ந்தால் இது மாதிரி யாரால் எழுதவரும்? ஆளைப் பார்த்தால் வேலையை விட்ருவோம் இல்லைனா வேலை பார்த்தா.... இல்லை இல்லை... அப்பவும் அழகான ஆளைப் பார்த்தால் வேலையை விட்ருவோம். காளி உட்கார்ந்து ஒன்னொன்னா ஆவணப் படுத்தியிருப்பதுதான் அழகு. தி லிட்டில் ப்ளவர் கம்பெனி பிரசுரித்த வே. ஸ்ரீ. வேங்கடராகவாசார்யர் ஸ்ருங்காரத் தமிழில் மொழிபெயர்த்த ருது ஸம்ஹார காவ்யம் படித்தேன். இன்புற்றேன். யான் படித்த இன்பம் பெருக இவ்வையகம்.

ருது என்றால் வருவன என்று பொருள்.  ஸம்ஹாராம் என்றால் தொகுப்பு. திரும்ப திரும்ப வரும் பருவங்களைப் பற்றின தொகுப்பு ருது ஸம்ஹாரம். நூற்று நாற்பத்தி நான்கு ஸ்லோகங்களை ஆறு ஸர்கங்களாக பிரித்து எழுதியது.

க்ரீஷ்ம ருது என்பது ஆனி, ஆடி மாதங்களில் வரும் கோடைகாலங்களை பற்றிய வர்ணனை.  சில வர்ணனைகள்..

இரவு முழுவதும் வெண்ணிற மாடியின் மேல் தளத்தில் திறந்த வெளியில் சுகமாகத் தூங்குகின்ற பெண்களின் முகங்களை அவர்கள் அறியாதவாறு ஆவலுடன் வெகுநேரம் பார்த்து வெட்கமுற்றவன் போல் சந்திரன் விடியற்காலையில் வெளிறிப்போய் இருக்கிறான்.
சந்தன நீர் தெளித்த விசிறியின் காற்றும், முத்து மாலையணிந்த ஸ்தனங்களும், பெண்கள் வாசிக்கின்ற வீணையிலிருந்து எழுகின்ற ஒலிகளும், ஆண்களின் மனத்தில், தூங்குபவன் போல் செயலற்று இருந்த மன்மதனை தட்டி எழுப்புகின்றன.
 வர்ஷ ருது என்பது ஆவணி, புரட்டாசி மாதங்களில் வரும் மழைக்காலத்தை பற்றிய வர்ணனை.

ஆகாயத்தில் சில இடங்களில் நீலோத்பல இதழ்கள் போல் நீல நிறமுடைய மேகங்கள் வியாபித்திருக்கின்றன. சில இடங்களில் நன்கு குழைத்த மை போல கருத்த நிறமுடைய மேகங்கள் இருக்கின்றன. கருவுற்ற பெண்களின் மார்பகம் போல கருநிறமுடைய மேகங்கள் வேறு சில இடங்களில் இருக்கின்றன. இவ்வாறு ஆகாயம் மேகத்தால் எங்கும் வியாபிக்கப்பட்டு இருக்கிறது.


மழைக்காலத்தில் மேகங்கள் அச்சமுண்டாக்கும் வகையில் கம்பீரமாக ஓசை செய்கின்றன. மின்னல்களும் கண்ணைப் பறிக்கின்றன. இவ்விரண்டினாலும் மிகவும் அச்சப்படுகின்ற மனமுடைய பெண்கள், தம் கணவர்கள் தவறு செய்தவர்களாயிருப்பினும், அவர்கள் செய்த தவற்றை மறந்து நெருக்கமாக அவர்களை சயனத்தில் அணைத்துக் கொள்கின்றனர்.
சரத் ருது என்பது ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வரும் இலையுதிர் காலத்தை பற்றிய வர்ணனை.

நாணல் மலர்க்கால் பூமியும், சந்திரனால் இரவுகளும், ஹம்சங்களால் நதிகளும், ஆம்பல் மலர்களால் குளங்களும், வெண்ணிற மலர் நிறைந்த எழிலைப் பாலை மரங்களால் வனப் பிரதேசங்களும், மாலதி மலர்களால் நந்தவனங்களும் சரத் ருதுவினால் வெண்ணிறமுடையனவாகச் செய்யப்பட்டன.


இக்காலத்தில் அன்னங்களின் நடை பெண்களின் அழகிய நடையையும், மலர்ந்த தாமரைகள் அவர்களின் முக அழகையும், கரு நெய்தல்கள் யவ்வனச் செருக்கினால் அழகு பெற்ற பெண்களின் கண்ணழகையும், நீர் நிலைகளில் தோன்றும் சிற்றலைகள்,  நெரிப்பதனால் தோன்றும் புருவ அழகையும் வென்றன.
 ஹேமந்த ருது என்பது மார்கழி தை மாதங்களில் வரும் குளிர் காலத்தை பற்றிய வர்ணனைகள்.
கலவியினால் களைப்புற்று வெளிறிய முகமுடையவர்களும், ஆயினும் கலவியினால் மனம் மகிழ்ச்சியுற்றவர்களுமான பெண்கள், கலவியில் காதலர்களின் பற்களாலே கீறல்கள் பெற்று, வலியுடயதாய் உதடுகள் இருப்பதை எண்ணி உரக்கச்  சிரிக்கவில்லை.


ஒரு பெண் கையில் கண்ணாடியை ஏந்தி இளம் வெய்யிலில் அமர்ந்து தாமரை போன்ற தன் முகத்தை அலங்கரிக்கிறாள். காதலனால் முற்றிலும் பருகப்பட்ட சுவையுடைய கீழுதட்டை விரலினாலே இழுத்து உதட்டின் நிலையைப் பார்க்கவும் செய்கின்றாள்.

சிசிர ருது என்பது மாசி பங்குனி மாதங்களில் வரும் பின் பனிக்காலத்தை பற்றிய வர்ணனைகள்.

இப்பனிக் காலத்தில் தாம்பூலம், சந்தனம், புஷ்பம் இவைகளைக் கையிலேந்தி, மதுவின் மனம் நிறைந்த வதனமுடையவர்களாக,  வேட்கை மிகுதியுடைய பெண்கள் (தம் கணவர்களைச் சந்திக்க) மிக அதிகமான காரகில் புகையினால் சூடும் வாசனையும் அடைவிக்கப்பட்ட சயனக்ருஹத்தில் புகுகின்றனர்.


பெண்கள் இரவுகளிலே மனக்களிப்புடன் தமது காதலர்க்களுடனிருந்து கொண்டு கிண்ணங்களிலே ஊற்றப்பட்ட மதுவில் வாசனைக்காகப் போடப்பட்ட கருநெய்தல் இதழ்களைத் தங்களது மனமுடைய மூச்சிக் காற்றினாலே அசையச் செய்துகொண்டு கலவியில் விருப்பத்தை தூண்டுகின்றதும்  மதம் தருகின்றதுமான மதுவைப் பருகுகின்றனர்.

வஸந்த ருது என்பது சித்திரையும், வைகாசி மாதங்களில் வரும் இளவேனிர்க் காலத்தைப் பற்றிய வர்ணனைகள்.

அன்பே! மலர்ந்த மாம்பூக்களான கூரான அம்புகளை உடையவனும், வண்டுகளின் வரிசை எனும் அழகிய நான் கயிறு உடையவனுமான வசந்த ருது என்ற வீரன், கலவியில் மிக ஈடுபாடுள்ளவர்களின் மனத்தை மென்மேலும் துன்புறத்த வந்துள்ளான்.


எந்த மன்மதனுக்கு மாம்பூ சிறந்த பானங்களோ, பலாச மலர் வில்லோ, வண்டுகளின் கூட்டம் நான் கயிறோ, களங்கமற்ற சந்திரன் வெண் கொற்றக் குடையோ, தென்றல் காற்று படையிலுள்ள யானைகளோ, குயில்கள் அவன் புகழ் பாடும் வந்திகளோ, இத்தைகைய பலம் பொருந்தியவனும், வசந்தனுடன் கூடியவனுமான மன்மதன் உங்களுக்கு நன்மைகளை மேன் மேலும் செய்வானாக.
கவி காளிதாசனின் கவிசாகரத்தில் மேலே நான் குறிப்பிட்டது சில துளிகள் தான். கவிதை எழுதுவோரும், கவிதை விரும்புவோரும் கட்டாயம் படிக்கவேண்டிய ஒரு கவிக்காவியம் இது.

பின் குறிப்பு: இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு இளையராஜா பாடல். காளிதாசன் என்று ஆரம்பித்து  தொலைத்ததால் என் நினைவுக்கு வர அதுவும் இங்கே....



பட உதவி: http://artword.net/

29 comments:

  1. இது என்ன புதிதாய் எனப் படித்தால்,
    ருது சம்ஹார காவ்யம் - முடித்தவுடன்
    மதுக் குடத்தில் மாந்திய வண்டு போல்,
    மயங்கினேன் நானும், இங்கே!!


    வெண்பாவில் ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  2. தமிழில் மூலத்தைக் கொஞ்சமும் சிதைக்காமல்
    சாகுந்தலம் படிக்க ஆசை. கிடைக்குமா?

    ReplyDelete
  3. இன்பமாக வெண்பா பாடிய ஆர்.ஆர்.ஆர் சாருக்கு ஒரு நன்றி.

    வெண்பா ரசித்த ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  4. சாகுந்தலத்தை தெரிந்த சோர்சுகளில் முயற்சி செய்கிறேன் ஆர். ஆர். ஆர் சார்.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  5. எனது தந்தையர் சொல்ல கேவிப்பட்டிருக்கிறேன்.. ருதுக்களைப் பற்றி... நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  6. காளிதாசரின் உவமை அலாதியானது ..
    குமாரசம்பாவதில் ஒரு இடம் வரும் ..குழந்தைக்கு தயிர் சதம் ஊட்டும் அன்னை ..அதில் அந்த தயிர் சாதமுக்கு ஒரு உவமை ..சரத் சந்திர - அதவது சரத் ருது சமயம் வரும் நிலவை போல் பொலிவாக இருக்கிறது என்று சொல்லுவார் :) எதுக்கு எதை உவமை என்று பாருங்கள் :)..(நான் படித்த காளிதாசர் வரிகள் இது மட்டும் தான் )

    ReplyDelete
  7. திரு ஆ.ஆ.ரா. :

    வெண்பா பற்றித் தெரியுமா? வெண்பா விதிகள் ஏதுமில்லாத ஒன்றை வெண்பா எனக் கூறாதீர். :(

    அதற்கு நன்றி வேறா?? :( :(

    ReplyDelete
  8. மகாகவிபாரதியையே சுற்றி வரும் எனக்கு,அதோடு மஹாகவி காளிதாசனின் அறிமுகமும் கிடைத்தது மகிழ்ச்சி.

    நி்ங்களும் நன்றாகவே தேர்வு செய்து அளித்துள்ளீர்கள்.

    என் பங்குக்கு பாரதியின் வரிகள்...

    பாலும் கசந்ததடீ - ஸகியே...
    படுக்கையும் நொந்தடீ,
    கோலக் கிளி மொழியும் - செவியில்
    குத்தலெடுத்தடீ.
    நாலு வைத்தியரும் - இனிமேல்
    நம்புவதற்கில்லை யென்றார்;
    பாலத்துச் சொசியனும் - கிரகம்
    படுத்து மென்றுவிட்டான்.

    ReplyDelete
  9. ரசித்த மாதவனுக்கு ஒரு நன்றி.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  10. டாக்டர் சுநீல், ரகு வம்சம், குமார சம்பவம் இரண்டும் காளியின் கவி உலக அமர்க்களங்கள். நிறைய இருக்கிறது. முடிந்த போது தனி பதிவாக... ஓ.கே

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  11. வினு, எங்காவது தளை தட்டுதா? நான் அரைகுறை. ஆர்.ஆர்.ஆர் சார் நிறைகுடம். சொல்லுங்களேன்.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  12. பத்மநாபன் அட்டகாசம்... பின்னூட்டத்திலேயே பெரும்பாலும் ஒரு பதிவு எழுதறீங்க.. நிஜமாவே அந்த மீசைக்கார முரட்டுப்பயல் மேல் நான் தீராத காதல் கொண்டவன். இந்த தீராத விளையாட்டுப் பிள்ளை தலைப்பு முதற்கொண்டு அவனே எல்லாம். //பாலும் கசந்ததடீ - ஸகியே... படுக்கையும் நொந்தடீ,/// எக்ஸலண்ட்... யாராவது இந்த பாட்டை கர்நாடிக் பாடியிருக்காங்களா.. தெரியுமா?

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  13. நல்லா எழுதியிருக்கீங்க.
    அருமை

    ReplyDelete
  14. அட....

    வித்தியாசமான பதிவு பாஸ்........

    ReplyDelete
  15. வித்யாசமா யாரும் நினைச்சுக்ககூடாதுன்னு பயமா இருக்கு. இந்த காளி ரொம்ப காலித்தனமா எழுதிட்டானோன்னு இப்ப படிச்சு பார்த்தா தான் தெரியுது.. :):):)

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கு நன்றி சே.குமார்.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  17. அழகிய பதிவு. பகிர்வுக்கு நன்றி. பதிவுக்கு சம்பந்தமில்லை என்று சொன்னாலும், நல்லதொரு பாடலைக் கொடுத்ததற்கு நன்றி :)

    வெங்கட்.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கு நன்றி வெங்கட்.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  19. இதெல்லாம் அந்த காலத்திலேயே கல்கியின் கதைகளில் வந்து, படித்த நினைவு. ஆனால் இப்போது படித்தாலும் சுகமாகவே இருக்கிறது RVS .

    ReplyDelete
  20. ரசிகன் கவிஞனானால் கல்லும் கவிதையாகும்

    ReplyDelete
  21. காளியை முன்னமே கரைத்து குடித்த கக்குக்கு ஒரு ஜெ! :):):)

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  22. அப்பா சார்.. அப்படியே ஒத்துக்குறேன்...:):):)

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  23. சாயின் வாவுக்கு ஒரு வாவ்.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.,

    ReplyDelete
  24. //பாலும் கசந்ததடீ - ஸகியே... படுக்கையும் நொந்தடீ,/// எக்ஸலண்ட்... யாராவது இந்த பாட்டை கர்நாடிக் பாடியிருக்காங்களா.. தெரியுமா?//
    RVS.

    என்ன இது? மறந்து விட்டதா அல்லது கேட்டதில்லையா RVS ?
    D.K. பட்டம்மாள் பாடியுள்ள பாரதியாரின் கவிதைகளை கேட்டதில்லையா?
    பழைய திரைப்படமான வேதாள உலகம் மற்றும் பல படங்களில் பாரதியின் கவிதைகளை D.K. பட்டம்மாள் இனிமையாக படியிருப்பாரே?
    நீங்கள் கேட்ட அந்த பாடல் :
    //தூண்டில் புழுவினைப்போல்
    தனியே சுடர் விளக்கினைப்போல் //

    ReplyDelete
  25. கக்கு.. நான் ஏதாவது யங் வாய்ஸ்ல கிடைக்குமான்னு கேட்டேன். இருந்தாலும் படம் பேர் சொன்னதுக்கு நன்றி..

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  26. ரொம்ப அற்புதமான படைப்பு இது. ஸ்ருங்காரத்தை காளிதாசன் கையாளும் விதமே அலாதி. தமிழ்லயும் இப்படி விளையாடியிருக்காங்க..கண்ணதாசன் உள்வாங்கிய இந்த ரசனைகளை எத்தனைப் பாடல்களில் பரிமாறியிருக்கிறார். இந்தப் பதிவில்
    நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் வரிகள் ரசமானவை. நாலு நாள் "ஓ"போய் விட்டதால் தாமதமான பின்னூட்டம். பொறுத்தருள்க !

    ReplyDelete
  27. //அப்பாதுரை said... ரசிகன் கவிஞனானால் கல்லும் கவிதையாகும்// மோகன்ஜி இது எப்படி இருக்கு?

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  28. தளை இருந்தால் தானே தட்டுவதற்கு... வெண்பாவிற்கு என்று உள்ள எந்த விதியும் இல்லையே :(

    ReplyDelete