Monday, October 25, 2010

மன்னார்குடி டேஸ் - சைக்கிலோட்டிய சிகாமணிகள்

மன்னையில் பிறந்த வெள்ளையன் அவன். வாமன ரூபம். அதிரூப சுந்தரனாய் இல்லாவிட்டாலும் பார்த்தாலே அசால்ட்டாக சொல்லிவிடலாம் அவன் ஒரு அம்மாஞ்சியான வெகுளி என்று. அனந்தபத்மநாபன் எப்போது அப்புவானான் என்று சரியாகச் சொல்ல என் ந்யூரான்கள் இப்போது ஒத்துழைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. காலை எக்ஸாக்ட்டா 8:45 'துப்பாக்கி' மணிக்கு (Gun Time) "கிணிங்.கிணிங்." என்று வீட்டு வாசலில் சைக்கிள் பெல் கதறினால் நிச்சயம் அது அப்புதான். "வெள்ளக்காரன் தோத்தான் போ" என்று ராகம் பாடுவாள் பாட்டி. அப்படி ஒரு டைமிங். புத்தக மூட்டையை காரியரில் வைத்து நன்றாக இழுத்து ஒடிய ஒடிய கிளிப் போட்டு 8:46க்கு முன் வாசலில் இறங்கிவிடவேண்டும். இல்லையென்றால் இன்னும் நான்கு முறை ஓயாமல் மணி அடித்து படுத்துவான். எனக்கு இந்த சைக்கிள் எப்படி கிடைத்தது என்ற அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை இப்போது நான் கட்டாயம் சொல்லவேண்டும். வீட்டில் நட்ட நடு ஹாலில் குறுக்கால படுத்து தர்ணா, காலையில் டிபன் மட்டும் சாப்பிடாமல் உண்ணாவிரதம், எது கேட்டாலும் "உம்..உம்.." மட்டும் கொட்டி ஊமையான உம்மணா மூஞ்சி போன்ற எண்ணற்ற அறப்போராட்டங்களுக்கு பிறகு எட்டாம் கிளாஸ் முடித்தபின் ஒரு ஹெர்குலஸ் சைக்கிள், டயரின் ரெண்டு பக்கம் வெள்ளை கலரோடு கிடைத்தது. இத்தனைக்கும் நான் குரங்கிலிருந்து பாருக்கு ரெண்டே வாரத்தில் முழுத் திறமை காட்டி மாறி விட்டேன் என்று முக்கு சைக்கிள் கடை பூபதி நற்சான்றிதழும் பாராட்டு பத்திரமும் எல்லோருக்கும் தெரியும்படி வழங்கியிருந்தான். மேடை போட்டு கோட்டு மாட்டி தலையில் கருப்பு குல்லா அணியாத குறையாக நான் பெற்ற 'பெஸ்ட் சைக்கிளிஸ்ட் ஆப் தி இயர்' பட்டத்தை எல்லோரிடமும் பெருமையாக அவன் வாயாலேயே சொன்னான்.

haridhranadhi

அப்பு ஐந்தடிக்கும் ஓரங்குலம் ரெண்டங்குலம் கொஞ்சம் உயரமாக இருப்பான். ஆள் கட்டையாக இருந்தாலும் கட்டை சைக்கிள் ஓட்டுவது மரியாதைக் குறைவு என்றும் இந்த தேசத்திற்கே இழுக்கு என்றும் நினைத்தான். அவனை பொறுத்தவரையில் அது ஒரு அவமானகரமான செயல். ஒரு ஹை ஜம்ப்பில் ஏறி சீட்டில் உட்காரும் அளவிற்கு இருக்கும் ஒரு பெரிய சைக்கிள் வைத்திருந்தான். ஹாண்டில் பார் பிடித்து சைக்கிளை பரபரவென்று காலால் உந்தி தள்ளி எகிறி அவன் உட்காரும் போது எங்காவது பாலன்ஸ் தவறி கீழே விழுந்து மூஞ்சி முகரை எகிறி விடப்போகிறது என்று எதிரே வருவோர் சகல மரியாதையோடு சாலையை விட்டு இறங்கி வணங்கி வழி விடுவர். சின்னக் கவுண்டர், எஜமான்,சட்டை போடாத விஜயகுமார் நாட்டாமை போன்றோருக்கு மக்கள் இருமருங்கும் பக்தியோடு நின்று குலவை இட்டு மரியாதை தருவது போல தனக்கும் தருகிறார்கள் என்று அவன் அப்போது நினைத்துக்கொள்வான். எட்டாத பெடலை எட்டித் தொட சீட்டில் உட்கார்ந்துகொண்டே வலது இடது கால்களை கீழே இறக்கி ஏற்றும் போது பிரபு தேவா இவனை குருநாதராக வைத்து பிரேக் டான்ஸ் கற்றுக்கொள்ளலாம். இப்படி ஒட்டுவதால் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சைக்கிள் சீட்டும் நிஜாரும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது வாஸ்த்தவம்தான்.

இப்போது சாமியாகிய என் அப்பா சைக்கிள் வரம் கொடுத்தாலும் பூசாரியாகிய கடைக்காரர் எப்போது கொடுத்தார் என்று சொல்ல வேண்டிய கட்டம். மேல ராஜ வீதியில் முருகப்பா சைக்கிள் மார்ட்டில் சைக்கிள் ஆர்டர் கொடுத்தோம். கடைத்தெருவில் கிருஷ்ணா பிஸ்கட் பாக்டரிக்கு நேரெதிர் கடை. பெயர் கிருஷ்ணா என்று இருந்தாலும் பகுத்தறிவு பகலவன்கள் கூடும் இடம் அது. கோபால் ரெடிமேட் கடைக்கு நாலு கடை பீச்சாங் கை பக்கம் இருந்தது. இன்னென்ன ஸ்பேர் பார்ட்ஸ் போட வேண்டும் என்று மெனு சொல்லிவிட்டால் அதை அவர்கள் ஒன்றாக கோர்த்து தருவார்கள். ரிஃப்ளெக்டர் வைத்த பெடல், மஞ்சள் கலர் வெல்வட் துணி போட்டு மூடிய ஹெட் லைட், முன்னால் பாருக்கு குஞ்சலங்கள் வைத்த ஒரு கோட்டு, அடங்கிய ஆட்களை சுமக்க தோதாக ஒரு கேரியர், பிருஷ்டத்தை பாதுகாக்க குஷன் வைத்த சீட், "கிளிங்.கிளிங்" என்று ஓல்ட் பாஷனாய் அடிக்காத "ட்ரிங்...ட்ரிங்..." மணி, பின்னால் உட்காருபவர் கால் வைக்க ஃபுட் ரெஸ்ட் என்று எல்லா பாகங்களுக்கும் ஆர்டர் கொடுத்தாகிவிட்டது. காலையில் ஊரான் சைக்கிளில் ஸ்கூலுக்கு ஓ.சி சவாரி செய்யும்போதே டெலிவரி பற்றி கல்லாவில் விசாரித்ததில் "சாயந்திரம் வந்து எடுத்துக்கோங்க தம்பி" என்று பதவிசாக சொல்லி ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டார்கள். அன்றைக்கு படிப்பை கெடுத்தார்கள். பின்ன என்ன. நாள் முழுவதும் சாயந்திரம் வரப்போகும் புது சைக்கிள் ஞாபகம் வாட்டி எடுத்துவிட்டது. ஆள் மெலியாதது தான் குறை. ஸ்கூல் விட்டு சாயந்திரம் வந்து ஆசையில் வாய்பிளந்து கேட்டபோது, ஒரு சகடையில் ரிம்மை மாட்டி வைத்து உடுட்டி விளையாண்டு கொண்டிருந்தவரை காண்பித்து "உங்களுது தான் பார்த்துக்கிட்டு இருக்காரு. புது வீலு கோட்டம் எதுவும் இருக்கக் கூடாதுல்ல.." என்று பாந்தமாக சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். வீட்டிற்கு போய்விட்டு திரும்பவும் ஓட்டமும் நடையுமாக கடைக்கு வந்து இரவு பத்து மணிக்கு கடை அடைக்கும் வரை உட்கார்ந்திருந்து டெலிவரி எடுத்த சைக்கிள் அது. எவ்வளவு பேர் சீட்டு வாங்கினார்கள், டயர் டியூப், மட் பிளாப், பிரேக் கம்பிக்கு நய்லான் சட்டை என்று சகல சாமான் வாங்கினவர்களும் கடையில் நானும் ஒரு ஆள் என்று நினைத்திருப்பார்கள். மறு நாள் காலையில் ஒத்தைத் தெரு பிள்ளையார் கோயிலில் மல்லிப்பு மாலை போட்டு ரெண்டு வீலுக்கும் எலுமிச்சை பழம் வைத்து சைக்கிள் பூஜை. பூஜைக்கு முன்னாடியே ரெண்டு நாளைக்கு முன்னால் ஒரு புது சைக்கிள் திருட்டு போய்விட்டது என்று ஒரு நலம்விரும்பி என் காது பட கூறியதால் துள்ளிக்குதிக்கும் காளைக் கன்னுக்குட்டியை கயிறு கட்டி கையில் பிடித்திருப்பது போல ஹாண்டில் பாரில் வைத்த கையை எடுக்காமல் ஒரு கையால் சூடம் எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டேன்.

டெலிவரி எடுத்த ரெண்டாவது நாளே எனக்கு இடுப்பளவு உயரம் இருக்கும் பள்ளி சைக்கிள் ஸ்டாண்டில் தூக்கி ஏற்ற முடியாமல் செயின் கவரில் ஒரு டங்கு விழுந்து அமுங்கியது. நம்மை விட உயரத்தில் கம்மியான அப்பு எப்படி சமாளிக்கறான் என்று அந்த தேவ ரகசியத்தை அறிய முற்ப்பட்டபோது தான் தெரிந்தது அவன் பள்ளியின் பெரிய அண்ணாக்களின் தயையில் வண்டிக்கு அடிபடமால் பார்த்துக்கொள்கிறான் என்று. சைக்கிள் வந்ததிலிருந்து கால் ரெண்டையும் பப்பரக்கா என்று பரத்தி ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டது தான் சைக்கிள் மேனியாவின் உச்சக்கட்டம். "முக்கு கடையில் போய் சீயக்காய் பொட்டலம் வாங்கிண்டு வாடா" என்று பாட்டி சொன்னால் உடனே ஜிங் என்று பாய்ந்து வந்தியத் தேவன் குதிரை போல ஏறி ஆரோகணித்து பறந்து போய் வாங்கிக்கொண்டு வருவேன். "நதியா டைலர் ஜாக்கெட் தச்சுட்டானான்னு பாரு" என்றால் மறுபடியும் ஜிங், வ.குதிரை, பற. இப்படி எல்லாவற்றிற்கும் ஜிங், வ.குதிரை, பற என்று இருந்ததால் "எங்காத்து தம்பி விஸர்ஜனத்துக்கு கொல்லைப் பக்கம் போறத்துக்கு கூட சைக்கிள்ல தான் போவன்" என்று தன் உற்ற தோழி பக்கத்தாத்து கோபி பாட்டியிடம் உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள்.

இப்படி வாழ்க்கையில் சைக்கிள் போக்குவரத்து வந்ததும் தெருவிலிருந்தும் பள்ளி திசையிலும் செல்வோர் "சைக்கிளில் பள்ளி செல்வோர் சங்கம்" என்று எதுவும் ஆரம்பிக்காமல் ஒன்று கூடினோம். தினமும் காலையில் நான், கோபிலி, அப்பு மூன்று பெரும் ஒன்றாக செல்வோம். நான் ஸ்கூல் கிரிக்கெட் அணியில் இருந்ததால் மாலையில் ஒண்டியாக வீட்டிற்கு வருவேன். காலையில் மூவரும் சேர்ந்து ஒரு ஆறு கால் வாகனம் போல ரோடை அடைத்து  சேர்ந்து செல்வோம். எங்கள் தெருவிலிருந்து ஃபயர் சர்வீஸ் தாண்டி தேரடி தொடாமல் தாலுக்காபிஸ் ரோடில் திரும்பி தாமரைக்குளம் வந்தடைந்து குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடைக்கு நேரே பெரிய கடைத்தெருவை பிடித்து நேரே ஜீவா பேக்கரி தாண்டி பந்தலடி வந்து அழகப்பா தாளகம் தாண்டி ஸ்கூலுக்கு வந்து இறங்குவோம். சைக்கிளின் புது டயர் வாசனை இருக்கும் வரையில் யாரையும் ஒட்டாமல் உரசாமல் மிகவும் ஜாக்கிரதையாக ஓட்டினேன் என்று நினைவு.

சாயந்திரம் 05:30 மணிக்கே டைனமோவை தட்டி விட்டு ஹெட்லைட் போட்டு கையை முன்னாடி நீட்டி கையில் வெளிச்சம் அடிக்கிறதா தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே ஓட்டியதில் சீக்கிரத்தில் டயர் தேய்ந்து விட்டது. டைனமோ பக்கம் புள்ளைத்தாச்சி வயறு போல டயர் வீங்கியது தெரியாமல் மேலும் மேலும் ஏறி ஏறி அழுத்தி ஓட்டியதில் தாமரைக்குளம் முடியும் இடத்தில் "படார்" என்று பலத்த ஓசையுடன் வெடித்து உயிரை விட்டது. தீபாவளியின் போது நான் வெடித்த லெக்ஷ்மி வெடியை விட ஒரு மடங்கு சத்தம் அதிகம். அங்கே குளத்தோரம் நின்றுகொண்டே அற்பசங்கைக்கு ஒதுங்கிய ரெண்டு பேர் நாட்டு வெடிகுண்டு வெடித்தது போல திரும்பி பார்த்தார்கள். நிச்சயம் கையை ஈரம் பண்ணிக்கொண்டிருப்பார்கள். மாலை முரசில் செய்தி வராதது தான் பாக்கி. அப்படியே தள்ளிக்கொண்டு பக்கத்தில் இருந்த சை.கடைக்கு வந்தால் டயர் மற்றும் டுயூப்தான் மாற்றவேண்டும் என்று சொல்லிவிட்டான். நின்று டயர் மாற்ற லேட் ஆகும் என்பதால் கடை வரை உருட்டிக்கொண்டு வரும் வரை பொறுமையாக இருந்த அப்பு "வெங்குட்டு.. மாத்திகிட்டு வா..." என்று ரெண்டே வார்த்தையில் என்னை அறுத்து விட்டு விட்டு அந்தக் கூட்டத்திலும் அவன் பாணியில் சைக்கிள் ஏறி பறந்தான். ஸ்கூல் லேட்டாக போனால் பல பீரியட்கள் முட்டி போடுவது, உட்கார்ந்திருக்கும் சக மாணவர்களுக்கு ஜட்டி தெரிய பெஞ்சில் ஏறி நிற்பது போன்ற படுபயங்கர கொடுந்தண்டனைகளுக்கு நான் ஆளாக நேரிடும் என்று புரியும்படி எடுத்துச் சொன்னதில் "சரி.. அப்பாவிடம் வாங்கிக்கொள்கிறேன்...மாத்துப்பா..." என்று தயாளமூர்த்தியாக டயர் மாற்றிக்கொடுத்தார் அந்த புண்ணியவான்.

மிதிக்கும் போது அவ்வப்போது அப்பு பெடலை விட்டு விடுவான். உயரமின்மையால் ஸ்லிப் ஆகிவிடும். அந்த சமயங்களில் கத்துக்குட்டி சைக்கிள் ஓட்டுவது போல அப்புக்குட்டி ஹாண்டில் பாரை இப்படி அப்படி ஆட்டுவான். ஒரு நாள் இதே போல பள்ளி செல்லும் போது தாமரைக்குளம் ரோடில் ராஜா டிம்பர் டெப்போ அருகில் அவ்வளவாக கூட்டம் இல்லை. முன்னால் நானும், கோபிலியும் செல்ல அப்பு பின்னால் வந்தான். கோபிலி ஒரு தனி ரசனையாக சைக்கிள் ஒட்டுவான். அன்றைக்கு சாலையின் இடது கோடிக்கும் வலது கோடிக்கும் எஸ் போட்டு ஓட்டிக்கொண்டே வந்தான். பின்னால் வந்த கொடுவா மீசை வைத்த ஒரு பெருசு "ஏய்.. என்ன ரோடை அளக்குரீங்களா?" என்று அதட்டல் போட்டது. உடனே நம்மாளு "ஆ.. டயர்ல இன்ச் டேப்பு கட்டியிருக்கோம். அதான் அளக்குறோம்." என்றான். லெஃட்டு ரைட்டு என்று ஒரு பிடி பிடித்தார் கொ.மீசை. ஹாண்டில் பாரை பிடித்து சீட்டை விட்டு மரியாதையாக எழுந்து நின்று மாங்கு மாங்கென்று பெடலை அழுத்தி நாங்களும் ஒரு பிடி பிடித்தோம். பந்தலடி வந்து தான் திரும்பி பார்த்தோம். மணிக்கூண்டு பள்ளியின் முதல் மணிக்கு இன்னும் ஐந்து நிமிடம்  இருப்பதாக காட்டியது. அப்பு சொன்னான் "இப்படி தினம் யாராவது நம்மளை துரத்தினா நாம கரெக்டா டயத்துக்கு ஸ்கூலுக்கு வந்துருவோம்ல?" என்று அப்பாவியாக கேட்டான்.

பாவிகள் நாங்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தோம்.

பட விளக்கம்: மனதை மயக்கும் ஒரு மாலை வேளையில் மேல் கரையில் அன்றைய டூட்டி முடித்து இறங்கும் மிஸ்டர் பாஸ்கரனோடு ஹரித்ராநதியின் எழில்மிகு தோற்றம். ஊர்ப் படங்கள் கிடைப்பதில் கொஞ்சம் சிரமம் உள்ளது. அடுத்த பதிவுகளுக்கு எப்படியாவது ஏற்ப்பாடு செய்து பதிகிறேன்.

பட உதவி: panoramio.com

-

48 comments:

  1. நகைச்சுவைய அங்கங்க தெளிச்சு அழகா எழுதியிருக்கீங்க. நிறைய சிரிக்க முடியுது.

    எங்க வீடு ஒத்தை தெரு தான்.

    ReplyDelete
  2. @புவனேஸ்வரி ராமநாதன்
    ஒத்தை தெரு ஆளு முதல் கமெண்டு. நன்றி. ;-) ;-)

    ReplyDelete
  3. குரங்கு பெடலும், சைக்கிள் ஓட்டிய அனுபவங்களும் நன்று. என்னுடைய சைக்கிள் அனுபவங்களை நினைவு படுத்தியது. நன்றி.

    ReplyDelete
  4. ம்...முதல் சைக்கிள் அனுபவம் "ட்ரிங்"குன்னு இருக்கு.

    ReplyDelete
  5. @வெங்கட் நாகராஜ்
    அப்படியா.. நன்றி.. ;-)

    ReplyDelete
  6. @சைவகொத்துப்பரோட்டா
    நன்றி ;-)

    ReplyDelete
  7. ரொம்ப ஓட்டாம அளவா ஓட்டியிருக்கீங்க... சைக்கிளைத்தான் சொன்னேன்.

    ReplyDelete
  8. அருமையா எழுதிட்டு வர்றீங்க.அப்படியே ஆறாம் தெருன்னு சொல்ற கனகாம்பாள் கோவில் தெரு பதியும் சொல்லுங்க.அந்த பக்கம் எல்லாம் வந்திருகீங்களா?தெரியுமா?

    ReplyDelete
  9. //சைக்கிள் சீட்டும் நிஜாரும் மாற்ற வேண்டிய கட்டாயம் //
    அண்ணா செம காமெடி!
    சைக்கிள் பயணம் அடி தூள் :)

    ReplyDelete
  10. @ஸ்ரீராம்
    சைக்கிள் ஒழுங்கா ஓட்டியிருக்கேனா? ;-) ;-)

    ReplyDelete
  11. @ஜிஜி
    ம்.... பூக்கொல்லை பக்கம் வருதாங்க அது.. எந்த ஏரியா.. சொல்லுங்க..

    ReplyDelete
  12. @Balaji saravana
    நன்றி தம்பி.. ;-)

    ReplyDelete
  13. Fine.
    Details later.. due to my 'ஆணி பிடுங்கும்' tight schedule.

    ReplyDelete
  14. மொத்தத்தில் "சுவாமியும் நண்பர்களும் " போல ஒரு வானர கூட்டம் ! :))))))

    ReplyDelete
  15. @கக்கு - மாணிக்கம்
    அதெப்பிடி கக்கு அவ்வளவு கரெக்டா சொல்றீங்க? ;-)

    ReplyDelete
  16. @மாதவன்
    எல்லா ஆணியும் சரியா புடிங்கிட்டு வா ராசா.. ;-)

    ReplyDelete
  17. நாங்களும் அப்டிதானே இருந்தோம்ல !?

    ReplyDelete
  18. @கக்கு - மாணிக்கம்
    நாங்க இந்த பதிலத் தானே எதிர்பாத்தோம்ல...

    ReplyDelete
  19. சரி சரி, நம்ம வீட்டு பக்கம் ஆளையே காணோமே அம்பி?
    நல்ல பாட்டு ஒன்னு ஓடிண்டிருக்கே !!

    ReplyDelete
  20. @கக்கு
    தோ... வந்துட்டேன்... ;-)

    ReplyDelete
  21. // "மேல் மாடியில் நீயும் நானும்... " பாட்டு நல்லா இருக்கு என்ன படம் கக்கு..//

    அவசரகல்யாணம்

    ஜெய்ஷங்கர், வாணிஸ்ரீ ,நாகேஷ் ..ரமா பிரபா.

    இசை : கே.வி. மகாதேவன்.

    இன்னொரு பிரபல பாட்டும் இதில் உண்டு " பார்த்தால் முருகன் முகம் பார்க்கவேண்டும் ".

    ReplyDelete
  22. @கக்கு
    நன்றி கக்கு... ஓல்ட் இஸ் கோல்ட் ;-)

    ReplyDelete
  23. சைக்கிள் அனுபவங்கள் பிரமாதமா இருக்கு. அப்பாவின் சைக்கிளை ஓட்ட அப்பாவும் ,சகோதரரும் சொல்லிக் கொடுக்கையில் கீழே விழுந்தது. சகோதரர் சிரித்தவுடன் இனிமே ஓட்டவே மாட்டேன் என்று சொன்னது . இப்படி பல விஷயங்களை ஞாபகப்படுத்தியது. நன்றி.

    ReplyDelete
  24. @கோவை2தில்லி
    யாருக்குமே ஒரு சைக்கிள் நினைவுகள் நிச்சயம் இருக்கும். ;-) ;-)
    நன்றி

    ReplyDelete
  25. சைக்கிளை பேலன்ஸ் செய்தவுடன் கிடைக்கும் சுகம் ,காதலியின் முதல் முத்ததை விட சுகமானது.. குரங்குபெடல் தட்டி தட்டி கால் தூக்கி தூக்கி ஒரு வழியாக வைத்து அழுத்தி ஓட்டி அதை திருப்பவும் செய்த சுகமே அலாதி..

    நன்றி... கேட்டமாதிரி அனுபவங்களை கொடுத்திட்டிங்க..

    ReplyDelete
  26. ஆமாம் பத்துஜி. பேலன்ஸ் கிடைத்தவுடன் தான் சக்கரத்தின் மேல் நாம் சருக்கிக்கொண்டு போவது ஒரு இனிய அனுபவமாக இருக்கும். சைக்கிள் கற்றுக்கொள்ளாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் வாழ்வின் உன்னத தருணங்களை இழந்தவர்கள். சரிதானே ;-) ;-)

    ReplyDelete
  27. good view-theppakulam (from arasamaram-south east corner)

    niraiya padangal irukkum polarukkee
    thangalidam..

    sathish..

    ReplyDelete
  28. சதீஷ்... தங்களுக்கு எந்த தெரு? ;-);-)

    ReplyDelete
  29. இந்த சைக்கிள் கத்துகிற அனுபவம் இருக்கே.. அது ஹிமாலய சாதனை...

    ReplyDelete
  30. பிரமாதமா எழுதுற ஆர்.வி.எஸ்...' பூக்கு' போடலாமா பாரு..

    very good photo.. from south-east side.

    எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒரு 'சிகாமணி' தான் இருந்தான்.. .. அவனக் கூட இந்த மேட்டருல காணூம்.. அப்பறம் எதுக்கு 'சிகாமணிகள்' பண்மைல..?

    ReplyDelete
  31. ஆமாம் செந்தில்.... கீழே விழுந்து கை கால்ல சிராய்ச்சுக்கிட்டு.. ஆனா பாலன்ஸ் வந்து ஏறி ஓட்டும் போது சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்.. ;-)

    ReplyDelete
  32. @Madhavan
    நன்றி. புக்கா? சும்மா ஏத்தி விடாதீங்கப்பா... ;-)

    ReplyDelete
  33. "அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக கண்டு மயங்காதே..இடுப்பை இடுப்பை வளைக்காதே! ஹேண்டில் பாரை ஓடிக்காதே!!"
    தலைவர் சைக்கிள் கத்துக் கொடுத்த பாட்டு நினைவுக்கு வருது.
    சைக்கிள் கற்றுக் கொண்ட நினைவுகளும் அனுபவங்களும் யாருக்குமே மறக்க முடியாதவை.
    சுஜாதா, ஹவர் வாடகை சைக்கிளில் ஷேரிங் பேசிசில் சைக்கிள் கற்றுக் கொண்ட அனுபவத்தை வெகு சுவாரஸ்யமாய் எழுதியிருப்பார்.
    நீங்களும் உங்கள் பாணியில் கலக்கியிருக்கிரீர்கள் ஆர்.வீ.எஸ்!

    ReplyDelete
  34. பாராட்டுக்கு நன்றி மோகன் அண்ணா.. பரன்லேர்ந்தானும் ஏதாவது எடுத்து உடுங்கன்னா.. ;-)

    ReplyDelete
  35. dear rvs
    rendu naala oorle illai.
    innikkuthan vanden ippodan padithen
    kalakkittinga supera (as usual)
    nalaikku paarkkalam

    balu vellore

    ReplyDelete
  36. @balutanjore
    நன்றி ;-)

    ReplyDelete
  37. //ஃபயர் சர்வீஸ் தாண்டி தேரடி தொடாமல் தாலுக்காபிஸ் ரோடில் திரும்பி தாமரைக்குளம் வந்தடைந்து குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடைக்கு நேரே பெரிய கடைத்தெருவை பிடித்து நேரே ஜீவா பேக்கரி தாண்டி பந்தலடி வந்து அழகப்பா தாளகம் தாண்டி ஸ்கூலுக்கு வந்து இறங்குவோம்.//

    பெரும்மாலான NHSS பசங்களடோ ரூட் இதுதான்... ஆனால கலர் பாக்கிற பசங்க பஸ் ஸ்டாண்டு வழியாக காண்வென்ட் பக்கம் வந்து சைட் அடிச்சிட்டு கம்மாலத் தெரு வழியா வந்து சேருவாங்க:)

    நான் உன்னோட ரூட்தான்...ஸ்கூல் படிக்கிறப்ப மகா பேக்கு:(

    ReplyDelete
  38. நான் ரொம்ப சமர்த்து. காலேஜு படி மிதிச்சப்புறம் தான் அதெல்லாம் பண்ணனும் அப்படின்னு விவரம் தெரிஞ்ச அண்ணா ஒருத்தர் சொல்லிக் கொடுத்தார். இது போல கதைகளும் வைட்டிங் ரவி அண்ணே.. ;-)

    ReplyDelete
  39. super sir ....................naan cycle ootuna madiriyea irukku.................

    ReplyDelete
  40. no sir i am a college student from coimbatore............your marnnarkudi days are tooooooooooooooooooooooooooo interesting sir...............

    ReplyDelete
  41. @padma hari nandan
    நன்றி ;-)

    ReplyDelete
  42. சைக்கிள் கிடைத்த வரலாறு.... சிரித்துவிட்டேன். சைக்கிள் பூசை நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
  43. @மாதேவி
    ரசித்தமைக்கு நன்றி. ;-)

    ReplyDelete
  44. சைக்கிள் என்ன மேக் நினைவிருக்கிறதா?
    நாறுமேண்ணா..?
    >>>விஸர்ஜனத்துக்கு கொல்லைப் பக்கம் போறத்துக்கு கூட சைக்கிள்ல தான்

    (என்னோட வைத் தேடிப்பிடிச்சுப் போட்டத்துக்கு ரொம்பத் தேங்க்சுங்கோ.)

    ReplyDelete
  45. குரங்கு பெடல் ரேஸ் அனுபவமுண்டா?

    ReplyDelete
  46. ஹெர்குலஸ்.

    குரங்கு பெடல் அடிச்சு... பெடல் கழண்டு போய் மெயின் பாயிண்ட்ல அடிபடாம ஜஸ்ட் தப்பிச்ச அனுபவமும் இருக்கு அப்பா சார்.

    ReplyDelete
  47. மிதிவண்டி அனுபவங்கள் எல்லோரது வாழ்வேட்டிலும் வண்டி வண்டியாக இருக்கும். இது ஒரு வேறுபாடான கோணம். "அப்பு"றமா சொல்றேன்னு வாக்களித்ததை அற்புதமா சொல்லி வழக்கம்போல அசத்தியிருக்கேடா டேய் தம்பி..

    அத்தைகள் நலமா..?

    ReplyDelete
  48. எல்லோரும் சௌக்கியம். ;-) ;-)

    ReplyDelete