Wednesday, March 9, 2011

ஃபைனான்ஸ் கம்பெனி மாப்பிள்ளை

padithurai

வடகிழக்கு ஈசான்ய மூலையில் இருக்கும் பிள்ளையார் படித்துறைக்கு யாரும் குளிக்க வரமாட்டார்கள். எப்போதாவது சுழன்று அடிக்கும் காற்றோடு படிக்கட்டுகளுக்கு மேலே குடியிருக்கும் சுகவாசிப் பிள்ளையார் அதை அனுபவித்துக்கொண்டு முப்போதும் ஏகாந்தவாசி. சதுர்த்தி அன்று மோதகத்துடன் பக்தகோடி தெருவாரால் நன்றாக கவனிக்கப்படுவார். சரீர சுத்திக்கு குளமும் ஆத்ம சுத்திக்கு பிள்ளையாரும் அங்கே நித்யவாசம் செய்கிறார்கள். குளம் ரொம்ப பெரிசு. பிள்ளையார் படித்துறை கால் வைத்ததும் சர்ரென்று வழுக்கும். ஒரே பாசி. பச்சைக் கலரில் பாசித் தண்ணீர் ஒரு வினோத நாற்றத்துடன் எல்லோரையும் மூக்கின் மேல் விரலை வைக்க தூண்டும். சுண்டிவிரல் நீளத்திலிருந்து முழம் நீளம் வரைக்கும் மீன்கள் குடும்பத்தோடு துள்ளி விளையாடும். ஒன்றுக்கும் உதவாத கழிசடைகள் முக்குக்கு முக்கு கும்பலாக அணிதிரண்டு நிற்பது போல ஊர்க் குப்பையெல்லாம் ஒன்றாக ஜோடி சேர்ந்து அந்த மூலையில் ஒதுங்கி மிதக்கும். துக்கம் எல்லை மீறிப் போய் கஷ்டம் தாங்கமாட்டாமல் அடுத்த பிறவிக்கு முயற்சி செய்து ப்ராணஹத்தி செய்துகொண்டவர்களின் உப்பிய உடல் அந்த ஈசான்ய மூலைப் படித்துறையில் தான் எப்போதும் பிரேதமாய் ஒதுங்கும்.

புற அழுக்கு களைவதற்கு பொதுஜனங்கள் இதைத்தவிர வேறு படித்துறைகளில் குளிப்பர். ஒருவர் துணி அலசுவது படியில் இருக்கும் இன்னொருவரின் காய்ந்த துண்டை நனைத்தாலோ அல்லது கை அழுந்த அழுக்கு போக அக்குள் தேய்க்கும் போது லைஃப்பாய் சோப்பு அடுத்தவர் கண்ணிலும் தெறிக்க கரையெங்கும் மாமாங்க கூட்டம் அம்மியது என்றால் ஐந்தாறு பேர் சேர்ந்து அரைமணி கையால் தண்ணீரில் அலையடித்து குப்பைகளை ஒதுக்கிவிட்டு பிள்ளையார் படித்துறையில் முழுகுவதற்கு ஆயத்தமாவார்கள். பிற கரைகளில் ஆட்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த ஆளில்லாப் படித்துறையில் தான் எப்போதும் மதி குளிப்பான்.

"ஏண்டாப்பா மதி? இன்னும் ஸ்நானம் பண்ண ஆரம்பிக்கலையா... நின்னுண்டே இருக்கியே.." படித்துறை பிள்ளையாருக்கு தலையில் குட்டிக்கொண்டே கேட்டார் சந்தானம். ரிடையர் ஆனதிலிருந்து தவறாமல் இந்தப் பிள்ளையாரை தரிசனம் செய்கிறார். தலையின் இரு ஓரத்து வழுக்கையில் பட்டையாக இட்டிருந்த விபூதி விரல் குட்டிய இடங்களில் தேய்ந்து விரல் முட்டிகளுக்கு வெள்ளையடித்தது.

"ஹி..ஹி.. இல்லைங்க...இன்னிக்கி சனிக்கிளமை.. எண்ணெய் தேச்சுக்கணும்.."
"நல்லா உச்சந் தலையில தேச்சு குளி... உஷ்ணம் குறையும்.. அதோட ஒரு மூடி எலும்பிச்சம்பழம் வாங்கி அதையும் தலயில அழுந்த தேச்சு விடு.. பித்தம் தெளியும்..." என்று சொல்லிக்கொண்டே மூன்று தோப்புக்கரணம் போட்டு எழுந்துவிட்டார். கீழே விழுந்த அங்கவஸ்திரத்தை எடுத்து தோளில் தொங்கவிட்டு சரி செய்துகொண்டார்.

"சரிங்க... " என்று தலையை ஆட்டிவிட்டு சின்னத் தூக்கில் இருந்த எண்ணையை குழித்த வலது கையில் விட்டு இடது தோளில் இருந்து பரபரவென்று தேய்க்க ஆரம்பித்தான். உடம்பு காலை வெயிலில் பளபளக்க ஆரம்பித்தது. பொன்னார் மேனியன் ஆனான். தோள் மேல் குமிழ்த்திருக்கும் முண்டுகள் அவனது புஜபலத்தை பறைசாற்றின. விசாலமான மார்பு நடுவில் உள்ள வாய்க்கால் பள்ளத்தால் சமபாகமாக இருபக்கமும் விரிந்து பரந்து மேடாக இருந்தது. அவன் வீட்டிற்கு நிச்சயம் ஒட்டடைக் கம்பு தேவைப்படாது. நின்று கொண்டே உத்தரத்து ஒட்டடை தட்டும் அளவிற்கு விண்ணுக்கும் மண்ணுக்குமாக இருப்பான். மா நிறம். கட்டழகன் தான். அந்தக் குளத்தின் முதல் படிக்கட்டில் இருந்து பார்த்தால் விஜி வீட்டின் சட்டை போட்ட நீலக் கலர் ஜன்னல் கதவு தெரியும். ஜன்னலருகில் விஜி வந்தால் இன்னும் பளிச்சென்று கோடி சூர்யப் ப்ரகாசமாக தெரியும். தலையில் எண்ணெய் வைக்கும் போது அவன் கண் அந்த ஜன்னலில் நிலைகுத்திக் கிடந்தது.

"உக்க்ஹும்..." சந்தானம் லேசாக கனைத்தார். "என்ன யாரையோ தேடராப்ல இருக்கே.." என்று பின்னால் நெருங்கி வந்து கேட்டார்.
"இல்ல சார்... "
 "சரி..சரி.. ஆகட்டும்.. முன்ன தேச்ச எண்ணையே உள்ள இழுத்துண்டுடுத்தே.. மளமளன்னு ஆகட்டும்..இன்னிக்கி ஆபீசுக்கு போகலையா..."
"கலெக்ஷன் ரொம்ப டல்லு சார்... மாசக் கடைசி. வாங்கின காசுக்கு வட்டி தரமாட்டேங்கரானுங்க.. வீட்டுக்கு வீடு அம்மா தாயேன்னு திருவோட்டை ஏந்திக்கிட்டு நிக்கரத்துக்கு  பதிலா "சார்... சார்.."ன்னு கணக்கு நோட்டை வச்சுக்கிட்டு கூப்பிட்டு பிச்சை கேக்கறேன்"
"நல்லா படிச்சுட்டு இப்படி வட்டிக் கடையில லேவாதேவி வேலை பாக்கிறியேப்பா. எங்காவது பட்டணம் பக்கம் போனா நல்ல வேலையா தேடிக்கலாமே.."
"சார்! வட்டிக்கடைன்னு சொல்லாதீங்கன்னு எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன். ஃபைனான்ஸ் கம்பெனின்னு சொல்லுங்க! திருமுருகன் ஃபைனான்ஸ் கம்பெனி"
"சரிப்பா.. ஃபைனான்ஸ் கம்பெனின்னாலும் வட்டிக்கு தானே பணம் கொடுக்கறேள்! ஃப்ரீயா இல்லையே!" என்று கேட்டுவிட்டு எகத்தாளமாக சிரித்துக்கொண்டே படித்துறையை விட்டு கிளம்பி விட்டார் சந்தானம்.

இடது கால் மிதிக்கு "க்ரீச்..." ஆரோஹனத்திலும் வலது கால் மிதிக்கு எழும்பும் "க்ரீச்..." அவரோஹனத்திலும் பாடிய சைக்கிளை பூப்போல மிருதுவாக பெடலுக்கு வலிக்குமோ காலுக்கு வலிக்குமோ என்று மிதித்துக்கொண்டு வந்த சந்தானம் மாமாவை வழியில் கிட்டு சார் பிடித்துக்கொண்டார்.

"என்ன சார்! கொஞ்சம் ஆயில் விடப் ப்டாதோ.. சத்தம் ஊரைக் கூட்றதே..."
"அந்தப் புள்ளையார் படித்தொறையில குளிக்கரானே கட்டுமஸ்தான புள்ளையாண்டான்.. அவன் உடம்புக்கு சதும்ப தேச்சுக் குளிக்கற அளவுக்கு இதுக்கு எண்ணெய் விட்ருக்கேன். எல்லாத்தையும் குடிச்சுபிட்டு இந்த காலத்ல பாடரவாளுக்கு சரியா பாடத் தெரியலைங்கரத்துக்காக தானா சங்கீதக் கச்சேரி பண்றது போலருக்கு..." என்று கிண்டல் தொனிக்க இடது காலை தரையில் ஊன்றி எக்கிச் சொன்னார் சந்தானம்.

இருவரின் வீடுகளும் இருகரையில் இருந்தாலும் கிட்டுவும் சந்தானமும் ஒரே வங்கியில் பக்கத்து பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து ஸ்டேப்ளர், பென்சில் பகிர்ந்துகொண்டு ஒன்றாக பணியாற்றியவர்கள். கிட்டுவின் சீமந்த புத்ரியை சிங்கப்பூர் சீமையில் வேலை பார்க்கும் வரனுக்கு கலியாணம் செய்துகொடுத்தார். அவ்வப்போது தீபாவளிக்கும், பொங்கலுக்கும் பேத்தியோடு அவர்கள் வந்துபோகும் போது தெருவே கமகமவென்ற சென்ட் வாசனை வீசும். கனிஷ்ட குமாரத்தி விஜி. அவளுக்குதான் எதுவும் அமையவில்லை. ஏதோ வயற்காட்டில் மத்தியில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துவிட்டு உள்ளூரில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் ஒரு அரதப் பழசு P-IV கணினியில் பாடம் எடுக்கிறாள்.

"உள்ள வந்து ஒரு வாய் காப்பி குடிச்சுட்டு போங்கோளேன்..." விடாப்பிடியாக அழைத்தார் கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி.
"தலைக்கு மேல வேலை கிடக்கு சார். அரிசி மண்டி போகணும்.. ஈ.பிக்கு பணம் கட்டனும். போன தடவை கொடுத்த பொன்னி அரிசி பூரா சொக்கானும்.. கல்லும்... பூச்சி சாதம் சாப்பிடறேளான்னு கேக்கறா.. ஒரு அரிசி வாங்கக் கூட பவுஷு இல்லைன்னு காட்டுக் கத்தல். ஆத்துல உச்ச ஸ்தாயில ஒரே ராகமா பாடறா. காது கொடுத்து கேக்கமுடியலை... ஓடி வந்துட்டேன்..."
"பரவாயில்ல... அஞ்சு நிமிஷம் ஆகுமா?... உள்ள வாங்கோ.." என்று கிட்டு வற்புறுத்த தட்டமுடியாமல் சைக்கிளை காம்பவுண்டு சுவற்றில் ஒருக்களித்து சாய்த்துவிட்டு உள்ளே நுழைந்தார்.
வாசல் ஜன்னல் பக்கத்தில் இருந்த மர பெஞ்சில் உட்கார்ந்து விஜி ஏதோ புஸ்தகம் புரட்டிக்கொண்டிருந்தாள்.
"என்னம்மா..கொழந்தே.. பாட புஸ்தகமா"
"ஆமாம் மாமா.. இன்னிக்கி சென்டர்ல எடுக்கப்போற பாடம்.. ஒரு தடவை பார்த்துக்கறேன்.."
"சௌக்கியமா.. உள்ள வரதுக்கே ரொம்ப பிகு பண்ணிக்கிறேளே!!" என்று புடவை தலைப்பை இழுத்துக் போர்த்திக் கொண்டு வந்தாள் சரஸ்வதி மாமி. அழைப்பிலும் நடையிலும் ஒரு மிடுக்கு தெரிந்தது. புதுசாய்ப் பார்ப்பவர்கள் எவராயினும் டக்கென்று சொல்லிவிடுவார்கள் அந்த வீட்டிற்கு குடும்பத் தலைவி தான் உண்டு தலைவன் கிடையாது என்று.

"சௌக்கியமா இருக்கேன். ஒரு வேலையா கடைத்தெருவுக்கு போயிண்டிருந்தேன்.. கிட்டு சார் கூப்ட்டார். அதான்.. அப்புறம் வேற என்ன விசேஷம்.. விஜிக்கு பார்த்துண்டிருக்கேளே.. எதுவும் அமைஞ்சுதா.." என்று கேட்டுக்கொண்டே விஜியைப் பார்த்து சிரித்தார் சந்தானம்.
"இன்னமும் ஒன்னும் தகையலை. கெக்கபிக்கேன்னு சிரிச்சுண்டு இவாள்லாம் வெளியில போயிட்டு ஆத்துக்குள்ள திரும்பி வரதுக்குள்ள வயத்துல நெருப்பை கட்டிண்டு இருக்க வேண்டியிருக்கு. பின்னாடி பஸ் வருதான்னு கொஞ்சம் திரும்பி பார்த்தாலே இழுத்துண்டு ஓடிடரானுகள்.." என்று பேச்சிலேயே பயத்தை காட்டினாள் மாமி. "சித்த இருங்கோ" என்று சொல்லிக்கொண்டே காபி கலக்க உள்ளே சென்றாள்.
தோள் மேலே கிடந்த துண்டை எடுத்து உதறி "உக்காருங்கோ..." என்று உள் திண்ணையைக்  காட்டினார் கிட்டு.

வாசலில் "கிணிங்..கிணிங்..கிணிங்.." என்று பம்பாய் மிட்டாய்க்காரன் மாதிரி தொடர்ச்சியாக மணி ஒலி கேட்க விஜி நிமிர்ந்து ஜன்னலைப் பார்த்தாள். உத்தராயணக் காலத்துக் கதிரவன் போல குளித்துவிட்டு ஜோதிமயமாக, மதி கழுத்து சுளுக்க திரும்பிப் பார்த்து சிரித்தபடி சைக்கிளில் சென்றான். விஜியும் பதிலுக்கு ஜாடையாக அரை செ.மீ புன்னகைத்தாள். இதைப் பார்த்த சந்தானம் சாருக்கு அடிமனதில் திக்கென்றிருந்தது.

தொடரும்...

பின்குறிப்பு: சத்தியமாக இதை ஆரம்பிக்கும் போது தொடர்கதை எழுதுவதாக துளிக்கூட உத்தேசம் இல்லை. ஒரு ஃப்ளோவில் ரொம்ப பெரியதாக செல்கிறதோ என்று நினைத்து தொடரும் போட்டுவிட்டேன். பெரியோர்கள் ஷமிக்கணும். அடுத்த எபிசோட்ல கண்டிப்பா முடிச்சுடறேன்.

பட உதவி: http://www.flickr.com/photos/rarun_prasad

-

40 comments:

  1. கரும்பு வில்லை கன்டின்யூ பண்ணுங்க

    ReplyDelete
  2. என்ன ஒய், மன்னார்குடி மைனர்வாள், ஆரம்பிச்சிடீராங்கனம் ஒம்ம காளிதாச புராணம். வர்ணனையும் விளக்கமும் தூள் படறதே.
    என்னமோ, உம்ம குருநாதர் பெற நன்னா காவந்து பன்றீரும். வெளுத்து கட்டும் ஒய்.

    ReplyDelete
  3. சகஜமாக கதை சொல்லும் விதம், பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  4. அட்டகாசம் ஒய் .. வார்த்தைப் பிரயோகம் அருமையா இருக்கு ..

    ReplyDelete
  5. அருமை கதையின் நீளத்தை கதையே
    முடிவு செய்யும்படி விட்டுவிடவும்
    கதை சொல்லிப்போகும் விதம்
    அருமையாக உள்ளது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வர்ணனைகள் சூப்பர்........ எழுத்துக்கள் அருமையா வருது..
    இருந்தாலும் ரொம்ப சாதி வாடை வருது..

    கதையில் வரும் சம்பவங்களும், பெயர்களும் கற்பனையே..
    யாரையும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ குறிப்பான அல்ல..


    இந்த டிஸ்கி (டிஸ்க்ளைமர்) போடலையா ?

    ReplyDelete
  7. அரதப் பழசு P-IV கணினியில் பாடம் எடுக்கிறாள்.....:)

    ReplyDelete
  8. //சத்தியமாக இதை ஆரம்பிக்கும் போது தொடர்கதை எழுதுவதாக துளிக்கூட உத்தேசம் இல்லை.//

    //நல்லா உச்சந் தலையில தேச்சு குளி... உஷ்ணம் குறையும்.. அதோட ஒரு மூடி எலும்பிச்சம்பழம் வாங்கி அதையும் தலயில அழுந்த தேச்சு விடு.. பித்தம் தெளியும்//

    திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை குழுவிற்கு சொல்லும் மறைமுக செய்திதானே இது?

    ReplyDelete
  9. வார்த்தைப் பிரயோகம் அருமையா இருக்கு ..

    ReplyDelete
  10. கதை சொல்லும் பாங்கு நன்றாக உள்ளது. தொடருங்கள்.

    ReplyDelete
  11. அருமை.

    எழுத்து நடை நிறைந்தோடும் காவேரி ஆற்றங்கரைக்குச் சென்றது போல இருந்தது.

    ReplyDelete
  12. குளத்துக் கரேல கதயச் சொன்னாலும் காவேரி நதி தீரத்துல ஒரு முழுக்குப் போட்டு எழுந்தாப்பல இருந்தது ஓய்!

    ஒம்ம கூர்ப்பு மனுஷாள உத்து கவனிக்கறதுல ரொம்ப நன்னாவே இருக்கு!

    சரஸ்வதி மாமியப் பத்திச் சொன்னதும்
    சந்தானம் மாமாவோட சைக்கிளைப் பத்திச் சொன்னதும் அப்படித்தான்.

    கும்மோணத்து நெய்சீவலும் பன்னீர்ப் பொகயெலயும் கொடிக்கால் துளிர் வெத்தலயும் சேர்த்து அரச்சுண்டே பேசற மனுஷா கிட்டப் பேசற ஒரு வாசனை.

    நிறைய எழுதும்!

    ReplyDelete
  13. அண்ணே அட்டகாசம். இன்னும் ரெண்டு மூணு பகுதி வந்தாலும் மகிழ்ச்சிதான்! :)

    ReplyDelete
  14. இப்போ எல்லாம் பைனான்ஸ் மாப்பிள்ளைக்குதான் மவுசு !!

    ReplyDelete
  15. நாளைக்கே அடுத்த பகுதி போடறதா இருந்தால் மட்டும் ஷமிக்கறோம்..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  16. Nice micro details RVSM. Felt like I was sitting somewhere in Haridhra Nadhi and watching this happening!

    ReplyDelete
  17. You've some writing Talent da!

    ReplyDelete
  18. எனக்கு கோழி கூவுது விஜி, சுரேஷ் காதல் ஞாபகத்துக்கு வந்துடுச்சு
    Super. Continue it.

    ReplyDelete
  19. இரண்டாவது அத்தியாயம் எழுதி முடிக்க நேற்றிரவு பனிரெண்டு ஆகிவிட்டது.இப்போதுதான் வலையேற்றினேன். ஒரு அவசரத்தில் இருக்கிறேன்.. எல்லோருக்கும் மதியமாக வந்து பதில் மரியாதை செய்கிறேன். கருத்துரைத்தமைக்கு கோடி நன்றிகள். ;-)))

    ReplyDelete
  20. @raji
    பண்ணியிருக்கேன்.. படிச்சுட்டு சொல்லுங்க.. ;-)))

    ReplyDelete
  21. @கக்கு - மாணிக்கம்
    வாழ்த்துரைக்கு நன்றி மாணிக்கம். முழுவதும் படித்து இன்புறுக.. . ;-))

    ReplyDelete
  22. @Chitra
    நன்றி சித்ரா! ;-))

    ReplyDelete
  23. @எல் கே
    நன்றி எல்.கே. முழுசாப் படிச்சுட்டு சொல்லுங்க.. ;-))

    ReplyDelete
  24. @Ramani
    உங்கள் அறிவுரையின் பேரில் நீளத்தை கதையே முடிவு செய்யும்படி செய்திருக்கேன். படித்து கருத்து சொல்லவும். ;-))

    ReplyDelete
  25. @வேடந்தாங்கல் - கருன்
    Thank You!! ;-))

    ReplyDelete
  26. @Madhavan Srinivasagopalan
    மாதவா.. கேரெக்டர் பேசுது.. ஜாதி வாடை இல்லாமல் இருக்காது..
    சிறுகதை என்றாலே கற்பனைதான்... இப்படித்தான் போன கதைக்கு சித்ரா சொன்னாங்க.. ;-))

    ReplyDelete
  27. @siva
    நன்றி சிவா!! ;-)))

    ReplyDelete
  28. @! சிவகுமார் !
    ஏங்க என்னை வம்புல இழுத்து விடறீங்க.. நான் அறியாப் பையன்.. ஏதோ கதை எழுதறேன்.. கருத்துக்கு நன்றி. ;-)))

    ReplyDelete
  29. @சே.குமார்
    பாராட்டுக்கு நன்றி குமார். ;-))

    ReplyDelete
  30. @கோவை2தில்லி
    நன்றி சகோதரி.. ;-))

    ReplyDelete
  31. @மாதேவி
    // எழுத்து நடை நிறைந்தோடும் காவேரி ஆற்றங்கரைக்குச் சென்றது போல இருந்தது.//
    உங்க பின்னூட்டமே பொங்கி ஓடும் காவிரி போல இருக்கே.. ரொம்ப நன்றி. ;-))

    ReplyDelete
  32. @சுந்தர்ஜி
    ரொம்ப ரொம்ப நன்றி சுந்தர்ஜி. உம்ம பின்னோட்டம் தஞ்சாவூர்க்காராகிட்ட பேசின மாதிரியே இருக்கு... நன்றி.. ;-))

    ReplyDelete
  33. @Balaji saravana
    தம்பி சொல்லை தட்டாமல் மூன்று பாகமாக எழுதுகிறேன்.. ரெண்டாவது போட்டாச்சு.. ;-))

    ReplyDelete
  34. @sriram
    பாஸ்டன் பெரியவரே!! போட்டாச்சு அடுத்த பாகம்... உங்களோட கமேன்ட்டுக்காக வைட்டிங். ;-)))

    ReplyDelete
  35. @இளங்கோ
    நீங்களும் பைனான்ஸ் மாப்ஸ் தானே.. ;-)))

    ReplyDelete
  36. @Krish Jayaraman

    Thanks Sekar! Thank you very much for your greetings.

    ReplyDelete
  37. @சிவகுமாரன்
    நன்றி சிவகுமாரன். இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். முழுசாப் படிச்சுட்டு கருத்து சொல்லுங்க... ;-))

    ReplyDelete
  38. முதல் பாகத்தின் முதல் இரண்டு வரிகளை படித்தவுடன், இது ஒரு அனுபவக் கதை என்று தான் நினைத்தேன்.. (முதல் இரண்டு வரிகள் ஒத்துப் போகிறதே)

    ReplyDelete
  39. அட..சூப்பராப் போறதே? எப்படி இத மிஸ் பண்ணினேன்...

    ReplyDelete