Tuesday, July 29, 2014

துருவ நட்சத்திரம்

சொல்வனத்தில் அவ்வப்போது மேய்ந்திருக்கிறேன். லய சமாச்சாரங்களை வெகு நயமாக எழுதியிருந்தார் லலிதா ராம். போன புத்தகக் காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனிடம் துருவ நட்சத்திரம் கேட்டு வாங்கினேன். காஞ்சி மடத்தில் ரம்மியமான ஒரு நாதலயம் கேட்டபிறகு வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும் கீ கொடுத்த பொம்மை போல புஸ்தக அலமாரியிலிருந்து ஒரு வருடமாகத் தூங்கிய அந்தப் புத்தகத்தை உருவினேன். பழனி சுப்ரமணிய பிள்ளையைப் பற்றிய அற்புத ஆவணம். லலிதா ராம் அசாத்தியமாக உழைத்திருக்கிறார். பக்கத்துக்குப் பக்கம் மிருதங்கம், கஞ்சீரா, தவில் என்று தோல்கருவிகளின் கோடை இடி தனியாவர்த்தனங்கள்.

அரண்மனையில் லாந்தர் சேவகம் செய்த மான்பூண்டியா பிள்ளையின் கஞ்சீரா பற்றிய ஒரு கதாகட்டுரை அற்புதம். புஸ்தகத்துக்கு கொடுத்த காசு அதுக்கே போச்சு. மத்த பக்கமெல்லாம் போனஸ். ஆர்வமே அனைத்து சாகசங்களுக்கும் மூலாதாரம் என்பது மான்பூண்டியாப் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றில் தெரிகிறது. வயதோ, வாழ்வின் தராதரமோ எந்தவொரு முன்னேற்றத்திற்கும் தடை போட முடியாது. குருவின் அறிவுருத்தலாம் ஒற்றைக் கை வாத்தியத்தை தயாரித்து அதை ஊர் ஊராக சுற்றுப்பயணம் செய்து மேடையேற்றி கடைசியில் கச்சேரிகளில் கோபுரமேற்றிய கதையைப் படிக்கும் போது சிலிர்த்தது.

புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் பரம்பரை என்று இரு தரப்பினர் மிருதங்கத்தோடு வாழ்க்கை நடத்தி கச்சேரியும் பண்ணியிருக்கிறார்கள். வலந்தலையின் மத்தியில் அடுக்கடுக்காக வைக்கப்படும் சோறு என்றழைக்கப்படும் சிட்டத்தைப் பற்றியும் பல கோயில் தூண்களில் காணப்படும் தாளவாத்திய சிற்பங்களைப் பற்றியும் ஒரு அத்தியாயம் எழுதி வாசகர்களுக்கு மிருதங்கச் சோறும் ஊட்டியிருக்கிறார். சபாஷ்! புத்தகமெங்கும் பழனி அங்கம் வகித்த மேடைகளில் ஜியென்பி செம்மங்குடி போன்றோர் அமர்ந்திருக்க பழனிக்காக சம்பிரதாயம் மாற்றி வலப்புறம் உட்காந்திருக்கும் வயலின் கலைஞர்களையும் பார்க்கலாம். பாடகருக்கு வலது புறம் மிருதங்கம் இடது புறம் வயலின் அமர்வது வழக்கம். அதாவது ”தீ.. நம்” வாசிக்கும் கரணையுடைய வலந்தலை ரசிகாளுக்குத் தெரிய உட்காருவது வழக்கம். பழனி இடதுகை ஆட்டக்காரர். மரபை மீறி இடப்புறம் அமர வைத்தனர்.

இதில் பேசப்பட்ட, பகிரப்பட்ட ஒவ்வொரு இசைக்கலைஞர்களின் உழைப்பும் அசாத்தியமானது. வாத்தியத்தை தெய்வமாக மதித்திருக்கிறார்கள். அசுர சாதகம் செய்திருக்கிறார்கள். வலக்கை தொப்பியிலும் இடக்கை வலந்தலையிலும் விழ வாசிக்கும் பழனி சுப்ரமணிய பிள்ளை அவரது தந்தையிடம் கற்கும் பாடங்களைப் பற்றிய பாராக்கள் ”சொகசுதா ம்ருதங்க தாளமூ”. பழனியும் செம்பை வைத்தியநாத பாகவதரும் இணைந்து ரயில் பிரயாணம் செய்வதாக ஆரம்பித்த புத்தகம் பக்கம் பக்கமாக எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர்கிறது. அபுனைவாக இருந்தாலும் சுவாரஸ்யமாக பல நிகழ்ச்சிகளோடு புனைந்திருக்கிறார். மிருதங்கத்தின் சொற்கட்டுகள் கணக்கு வழக்குகள் பற்றி எடுத்துரைத்த இந்தப் புத்தகம் கணக்காகவும் நல்ல சொற்கட்டோடும் எழுதப்பட்டிருக்கிறது.

ஃபுல் பெஞ்ச் கச்சேரி என்றழைக்கப்படும் வித்வத் நிரம்பியவர்கள் இணையும் கச்சேரிகள் களை கட்டுமாம். ஜியென்பி, பழனி, கோவிந்தராஜ பிள்ளை மூவரும் வாசானாதி திரவியங்கள் மேல் ஈடுபாடு கொண்டவர்களாம். இவர்கள் சேர்ந்து செய்யும் கச்சேரிகள் கந்தர்வரகள் பங்கு கொண்டது போலிருக்கும் என்றும் ”if their music was scintillating, their presence was scentillating" என்பார்களாம். இது போன்று மிருதங்க வாசனை இல்லாதவர்களும் தம் பிடித்து இழுத்து ரசிப்பது போன்ற விவரணைகள்.

மிருதங்கத்தை எப்போதுமே நான் பக்க வாத்தியம் என்று சொல்வதில்லை. ”பக்கா” வாத்தியம் என்பேன். கடம் போன்று மிருதங்கத்திற்கும் ஸ்ருதி உண்டென்றபோதும் பிரத்யேகமாக பலவிதமான த்வனிகளை எழுப்ப முடியுமாம். அதனால் இதனை ராஜவாத்தியம் என்கிறார்களாம். லலிதா ராம் எழுதியிருக்கிறார். கொஞ்சம் எறும்பு கடித்தது போல ரொமாண்டிக்காக உள்ளவர்களுக்குச் சட்டென்று ராஜாவின் மிருதங்கமாக ”ஆயிரம் தாமரை மொட்டுக்களே...” அசரீரியாய்க் காதுக்குள்ளே கேட்கக்கூடும். மேனியெங்கும் திகுதிகுவென்று பற்றிக்கொண்டுக் காதல் தீயில் வேகுபவர்களுக்கு ”பூ மலர்ந்திட மலர்ந்திடும் பொன்மயிலே”வில் பாடலுக்கு முன்னர் பட்டாசாய் ஒலிக்கும் மிருதங்கமும் விசேஷமாகக் கேட்கக்கூடும்.

ஆதி தாளம் வரைக்கும் வந்து நிறுத்திவிட்டோமே என்கிற என் வேதனை இந்தப் புத்தகத்தை முடிக்கும் வரை ”தத் தின் தின்னா.. தக...தின் தின்னா..” என்று காதுகளில் இடித்துக்கொண்டேயிருந்தது. நான் மிருதங்கம் கற்றுக்கொண்ட காவியக் கதையை “மிருதங்கிஸ்ட்” என்ற தலைப்பில் முன்பே எழுதியிருக்கிறேன். பிறிதொரு சமயத்தில் மீளாக இம்மீளாத்துயரைப் பகிர்வேன்.

தா....தீ. தொம்... நம்.

No comments:

Post a Comment