Showing posts with label அயல்நாட்டு சினிமா. Show all posts
Showing posts with label அயல்நாட்டு சினிமா. Show all posts

Saturday, May 9, 2015

தி ஜட்ஜ்

”சபரி.. செமையா படம் பார்க்கிற மூட்ல இருக்கேன்.. ஏதாவது நல்ல படம் வச்சுருக்கியா?”

”மாமா.. ராபர்ட் டௌனி ஜூனியர் நடிச்சுருக்கான்.. அம்பது வயசு... அயர்ன் மேன்.. ஷெர்லாக்ஹோம்ஸ்லல்லாம் நடிச்ச ஆளு.. ஃபர்ஸ்ட் க்ளாஸ் மூவி.. பாரு...”

மருமான் Sabareesh Hariharan புண்ணியத்தில் நல்ல ஆங்கிலப் படங்கள் ஒரு கொத்து பார்த்திருக்கிறேன். நல்ல ரசிகன். கல்லூரியில் படிக்கும் போதே ஞானஸ்வரூபனாக இருக்கிறான். நாம் தோள் மேலேயும் மார் மேலேயும் போட்டு ”பட்டுக் குட்டி... ஜில்லு.. குல்லு..” என்று உச்சிமோந்து கொஞ்சிக் குலாவி வளர்த்த குழந்தைகளின் ரசனைகள் நல்ல ஸ்திதியில் இருப்பது நமக்கு பெருமை பூசிய சந்தோஷம். பெருமிதம்.

அவனுடைய சிபாரிசின் பேரில் டேவிட் டாப்கின் இயக்கத்தில் The Judge பார்த்தேன். அற்புதமான படம். குடும்ப படம். நான்கு அண்ணா தம்பிகள் ஒரே மாதிரி வெள்ளையில் தொளதொளா குடும்ப சட்டைப் போட்டு “லாலாலி... லாலாலி...” என்று கோரஸாகப் பாட்டுப் பாடி... குடும்ப வில்லனை பழிக்குப் பழி வாங்கி... ஒரே குடும்ப பாட்டில் கலெக்டர் ஆகி.. ஒரே குடும்ப மொக்கை காமடி... ஒரே குடும்ப ராக பாட்டில் கழுத்தை அறுக்காமல்.... மெல்லிய குடும்ப பின்னணியும்... கொஞ்சம் சஸ்பென்ஸும்.. கொஞ்சம் பப்பி லவ்... கொஞ்சம் பிள்ளைப் பாசம்... கொஞ்சம் சின்னப்பிள்ளைத்தனம்.. கொஞ்சம் ரொமான்ஸ்... கொஞ்சம் சகோதரத்துவம்... கொஞ்சம் ஹீரோயிஸம்.. கொஞ்சம்.. கொஞ்சம்.. வாட் நாட்?

கச்சாமுச்சாவென்று புஸ்புஸ் கிராஃபிக்ஸில் பளீர் ஒளியில் கண்வலி வரவழைத்து படார் ஒலியில் செவிடாக்கும் டப்பாப் படங்களுக்கு மத்தியில் அழுத்தமானக் கதையையும் அதற்கேற்ற நடிகர்களும் வலிமையான திரைக்கதையையும் திரைச்சூழ்சிலைக்கேற்ற இசையும் காட்சியோடு கரைந்து போகும் வசனங்களையும் வைத்து எடுக்கப்படும் சாதாரண படங்களே வெள்ளித்திரையில் அசாதாரணமாகக் கோலோச்சுகின்றன என்று திரைச்சினிமாவின் சூத்திரமாக கோயிந்து ஒருவர் அசால்ட்டாகச் சொன்னார்.
ஹங்க் பாமர் சிகாகோவில் சிகரத்திலிருக்கும் அட்வகேட். ஜித்தன். எப்படியாகப்பட்ட கேஸிலும் க்ளையண்ட்டை விடுவிக்கும் அசாத்திய திறன் படைத்தவர். அவரது தந்தை ஜோஸஃப் பாமர் சொந்த ஊரான கார்லின்விலேயில் நீதிபதியாக இருக்கிறார். நீதித்தராசின் முள்ளை ஸ்திரமாக நடுவில் நிறுத்தி பெருமையுடன் தலைநிமிர்ந்து வாழ்பவர்.

அண்ணா தம்பி மூன்று பேரில் ஹங்க் நடுவர். தந்தை ஜோஸஃப் பாமருடன் எப்போதுமே ஒரு உரசல். சிறுவயதில் காரைக் கொண்டு போய் மோதி மூத்தவர் டேலின் ப்ரகாசமான பேஸ்பால் வாய்ப்பை கெடுத்துக்குட்டிச் சுவராக்கிவிட்டார் என்று ஹங்க்கைக் கறுவிக்கொண்டே இருக்கிறார் ஜோஸஃப். மேலும் அந்த வழக்கில் தானே நடுவராக இருந்து மனுநீதி சோழன் போல தன் சொந்த பிள்ளையை சிறுவர் சிறைக்கு அனுப்புகிறார். அப்புறம் ஒரு உள்ளூர் வழக்கில் ஹங்க்கைப் போன்ற சிறுவனுக்கு ஒரு முறை தீர்ப்பில் சலுகைக் காட்டியும் மறுமுறையும் அதே தவறு செய்ததால் இருபது வருடங்கள் சிறைதண்டனை விதித்தும் தீர்ப்பளித்து தர்மதேவனாகிறார்.

இச்சூழ்நிலையில் தனது தாயார் இறந்துபோன செய்தி கிடைத்து கோர்ட்டிலிருந்து பாதியில் சொந்த ஊருக்கு வருகிறார் ஹங்க். அன்னையின் சாவிலும் தந்தை பாமர் ஹங்க்குடன் முகம் கொடுத்துப் பேச மறுக்கிறார். தமிழில் எழுதினால் சிதைந்துவிடும் வாய்ப்புகள் அதிகமிருப்பதால் சினிமாடோகிராஃபரின் பெயரை இங்கே அப்படியே தருகிறேன். Janusz Kamiński. சின்ன ஊரான கார்லின்விலேயின் நீல வானத்தை, அதே வண்ண அமைதியான ஏரியை, சுற்றிலும் படர்ந்திருக்கும் மரம்செடிகொடிகளின் பச்சைகளை வண்ணம் கெடாமல் குளிர்ச்சியாகக் காட்டுகிறார். ஆங்கிலப் படங்களில் கழுகுப் பார்வையாக ஆகாசத்திலிருந்து ஒரு ஊரையும் அதன் இயற்கைச் சூழலையும் காட்டுவது மரபாகயிருக்கிறது. இருபக்க பயிர்களுக்கிடையே கிழித்துக்கொண்டு போகும் தார்ச்சாலை நம்ம மாயவரம் சுற்றுப்பகுதியை ஹாலிவுட்டில் காட்டுகிறது.

அம்மாவின் துஷ்டிக்கு வந்துவிட்டு வழக்கம்போல ஏற்படும் வாய்த்தகராறோடு சிகாகோவிற்கு திரும்புகிறார் ஹங்க். விமானம் கிளம்புவதற்கு முன்னர் க்ளென் ஹங்க்கைக் கூப்பிட்டு தந்தையை போலீஸில் விசாரிக்கின்றனர் என்று கூப்பிடுகிறார். வந்து பார்த்தால் இவர் இருபது வருடங்கள் சிறைத்தண்டனை விதித்த அந்த குற்றவாளி விடுதலையாகி வந்து பின்னர் அவனைக் காரேற்றிக் கொன்றுவிட்டார் என்பது வழக்கு. இங்கிருந்து சூடுபிடிக்கிறது படம். ஹங்க் அவரது தந்தைக்காக வாதாடுகிறார். நீதிபதி தந்தைக்கு இளம் குற்றவாளியாக இருந்த ஹங்க்கை இன்னமும் பிடிக்கவில்லை. சட்டக்கல்லூரியில் முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றதை சொல்லி தந்தையை குளிரிவிக்கப் பார்க்கிறார். ஊஹும். இடையில் தன்னுடைய பால்ய ஸ்நேகியின் பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் பார்த்துக்கொள்கிறார்கள். பேசுகிறார்கள். கிஸ்ஸுகிறார்கள். அந்த ஸ்நேகிதியின் பெண்ணை அதற்கு முன்னர் ஒரு பாரில் பார்த்து கட்டிப்பிடித்துக்கொள்கிறார். அது தனக்குப் பிறந்த பெண்ணோ என்கிற சந்தேகம் அவரை குற்றக் குறுகுறுப்படையவைக்கிறது. வேண்டாம் இந்த சினிமாவின் கதையை சொல்வதை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

எத்துனை வாய்த் தகராறு வந்தாலும் அப்பா-மகன் பாச சீன்களைக் கொட்டிவைத்திருக்கிறார்கள். நீதியரசராக நடித்த ராபர்ட் டுவல்லுக்கு ஹாலிவுட் ஃப்லிம் அவார்ட்களில் Best Supporting Actor கிடைத்திருப்பதை அறிகிறோம். யதார்த்தமான நடிப்பு. பின்னணி இசை படத்திற்கு பக்கபலம். பல இடங்களில் இசை சரளமாக வசனம் பேசுகிறது. காட்சிகளைக் கெட்டிப்படுத்துகிறது.

க்ளைமாக்ஸ்? நான் எழுதப்போவதில்லை. ஒன்றுமட்டும் சொல்வேன். தமிழ்சினிமாத்தனமான முடிவு இல்லை. நாம் ஏன் இதுபோன்ற படங்கள் எடுப்பதில்லை என்கிற கேள்வி எழாமல் இல்லை. நல்ல படங்கள் வெற்றியடைவதில்லை என்று இயக்குநர்களும், எங்கள் பார்வையில் இது நல்ல படமாக இல்லை என்று ரசிகர்களும் ஆதிகாலத்து இக்கட்டான கேள்வியான கோழியா? முட்டையா? என்று கருத்து அடிதடியில் காலத்தைப் போக்கிக்கொண்டிருக்கிறோம்.]

தி ஜட்ஜ் படத்தின் சில காட்சிகள் அடங்கிய சின்ன பிட்டு இங்கே: https://www.youtube.com/watch?v=wXWe0IM_sEM#t=77

Monday, December 12, 2011

டைம் கரன்ஸி!

கீழ் வரும் சீன்களைப் படித்துவிட்டு கடைசியில் “**********”க்கு அப்புறம் படிக்கலாம். அல்லது “***********”க்கு கீழ் படித்துவிட்டும் மேலிருந்து சீன்களைப் படிக்கலாம். உங்கள் விருப்பம்.

கொத்தடிமைகள் போல வரிசையாக நின்று கவுண்டருக்குள் கை நீட்டிச் சம்பளம் வாங்குகிறான் ஹீரோ.  ஆனால் சம்பளம் கரன்ஸிகளாக இல்லை!

ஓப்பனிங் சீன்
அது ஒரு மங்கலான வெளிச்சத்தில் இயங்கும் நட்சத்திர மது விடுதி. அறை முழுக்க ஆக்ஸிஜெனில் போதையிருந்தது. நீட்டிமுழக்கி நாலு பேர் ”ழ்..ழ்ழ்.ழ்ழ்.” என்று வழுக்கும் ஆங்கிலம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நெருக்கிப் போடப்பட்டிருக்கும் டேபிள் சேர்களை கண்ணெதிரே மறைய வைக்கும் சிகரெட் புகை. புதிதாய் நுழைபவர்கள் வெண்புகைக்குக் கண் பழகிய பின் தான் எவரையும் பார்க்கமுடியும். பார் சிப்பந்தி ஷெல்ஃபிலிருந்து எடுத்து மது கொடுக்கும் கவுண்டர் அருகே போடப்பட்டிருக்கும் கழுத்து நீண்ட க்ரோர்பதி சேரில் உட்கார்ந்து சில அனுபவஸ்தர்கள் நிதானமாக மதுவருந்திக் கொண்டிருக்கிறார்கள். குடிமகன்களின் டேபிள் சேர்களை சுற்றி ’ஒரு மாதிரி’யான மாதுக்கள் சிலர் குட்டைப் பாவாடையோடு கையில் போத்தல்களுடன் நளினமாக குனிந்து நிமிர்ந்து வளைய வருகிறார்கள். ஒரு சாந்தமான வாலிபன் தனியனாய் சத்தமில்லாமல் மக் பீர் அடித்துக்கொண்டிருக்கிறான். ஹீரோவும் அவனுடைய நண்பனொருவனும் உள்ளே நுழைகிறார்கள். சரக்கு ஆர்டர் செய்யும் முன்  திடீரென்று விடுதி வாசலில் ”ஆ.. ஊ...” என்று கூச்சல். ரகளை. தொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம். உற்சாகபானமருந்திக்கொண்டிருந்த அனைவரும் யோகநிலை கலைந்து தலைதெறிக்க ஓடுகிறார்கள். கையில் பிஸ்டலுடன் மூக்கு விடைக்க வில்லன் பாருக்குள் எண்ட்ரீ கொடுக்கிறார்.

வில்லன் பீர் பையன் அருகில் வந்து நம்பியார் சிரிப்பு சிரித்து அவன் கையைப் பிடித்து இழுத்து கை குலுக்கப் பார்க்கிறார். அவன் உதறிவிட்டுத் தப்பி ஓடுகிறான். வில்லனிடமிருந்து தப்பித்து டாய்லெட்டில் ஒளிந்த அவனைக் காப்பாற்றி விடுதிக்கு வெளியே இழுத்துக்கொண்டு ஓடுகிறான் ஹீரோ. போக்குவரத்து நெரிசல் இல்லாத நிர்ஜனமான சாலைகளில் வேகமாய் ஓடுகிறார்கள். சிறிது தூரத்தில் சுவரேறிக் குதித்து, இரும்பு ஷட்டர் திறந்து முதல் மாடியில் ஒரு மறைவிடத்தில் போய் ஆசுவாசமடைகிறார்கள். இரவுப் பொழுது அங்கேயே கழிய காலையில் சூரியன் கண்ணைக் குத்த சேரில் உட்கார்ந்த வண்ணம் தூங்கியிருந்த ஹீரோ எழுந்து பார்க்கையில் பக்கத்தில் இருந்தவனைக் காணவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தால் எதிரே இருக்கும் பாலத்தின் கட்டைகளில் ஏறி நின்றுகொண்டிருக்கிறான் அவன். ஏதோ நினைவுக்கு வந்தவனாய் ஹீரோ தனது வலது மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையில் பார்க்கிறான். அவனது ஆயுட்காலம் அந்த பீர் பையனால் மேலும் நூறு வருடங்களாக அதிகரித்திருக்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பீர் பையனின் ஆயுள் முடிந்து மரக்கிளை முறிவது போல ”மளுக்”கென்று ஒடிந்து சரிந்து கீழே ஓடும் நதியில் விழுகிறான்.

செண்டிமெண்ட் சீன்
தனது பிள்ளையைப் பார்க்க பஸ்ஸேரி செல்ல முயல்கிறாள் தனது வாழ்நாளின் இறுதிக்கட்டதிலிருக்கும் ஒரு தாய். பிரயாணத்திற்காக தனது வாழ்நாளை கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும் என்பது பொது விதி. அதுதான் டிக்கெட் எடுக்க பேருந்துக் கட்டணம். தேவைப்படுவது பதினைந்து நிமிஷங்கள். அவளிடம் எஞ்சியிருப்பதோ பத்து நிமிஷங்கள். அதையும் கொடுத்துவிட்டால் பிள்ளையைப் பார்க்க முடியாது. ஓடலாம் என்று முடிவெடுக்கிறாள். தாய்ப் பாசத்துடன் இரைக்க இரைக்க ஓடி அவனது இருப்பிடைத்தை அடைகிறாள். நான்கு தெருக்கள் சந்திக்கும் ஓரிடத்தில் இருவரும் எதிரெதிராக ஓடிவர, நொடிகள் கரைய, ஓடிவர, நொடிகள் கரைய, மகன் தனது சக்தியனைத்தையும் ஒன்று திரட்டி வேங்கையாய்ப் பாய்ந்து வர, தடுமாறாமல் ஜாக்கிரதையாக தாய் விரைய இருவரும் நீட்டிய கையோடு கை கோர்க்கும் சமயத்தில் தாயின் வாழ்நாள் மணித்துளிகள் 00:00:00:00 ஆகி கரைந்து ஜீவன் பிரிகிறது.

காதல் சீன்
செத்துப்போன மக் பீர் பையன் கொடுத்த வாழ்நாள் மணித்துளியையும் சேர்த்து ஹீரோவின் கணக்கில் நிறைய மணிநேரங்கள் சேர்ந்துவிடுகிறது. காஸினோ க்ளப்பில் சென்று சூதாட்டம் விளையாடுகிறான். எதிராளி மில்லியன் வருடங்கள் வாழ்நாள் தன் பங்கில் இருக்கும் பில்லியனர். ஆட்டத்தில் வென்ற ஹீரோ மில்லியன் வருடங்கள் வாழும் வல்லமை படைத்தவராகிறார். இரவு க்ளப்பில் தோற்ற மணிச் செல்வந்தரின் வீட்டில் ஒரு பார்ட்டி அட்டெண்ட் செய்கிறார். இயற்கையாகவே அவர் மேல் அந்த தனவானின் பெண்ணான அந்த ஹீரோயினுக்கு காதல் மலர்கிறது. அவரிடம் அடியாளாய் வேலை பார்க்கும் வில்லன் கோஷ்டி ஹீரோவின் வாழ்நாள் மணிகளை உள்ளடக்கிய “மணிச் சொத்தை” அபகரிக்க திட்டமிடுகிறான். துரத்துகிறான். பறிக்கிறான். காதலர்கள் தப்பிக்கிறார்கள். எதிர் கோஷ்டியினர் துரத்துக்கிறார்கள். காதலர்கள் தப்பிக்கிறார்கள்.

படம் முழுக்க காலம் உயிர் போன்றது என்று காட்டப்படுகிறது. ஜீவனோடு இப்புவியிலிருக்கும் கால அவகாசம் கடனாகக் கொடுக்கப்படுகிறது. வாழ்நாள் மணித்துளிகளை லோன் கொடுப்பதற்கு நிறைய வங்கிகள் இருக்கின்றன. ஸேஃப் டெப்பாசிட் லாக்கர்கள் இருக்கிறது. குற்றவாளிகளைப் பிடித்துக்கொடுப்பவர்களுக்கு இன்னும் பத்து வருடங்கள் அவர்களது வாழ்நாளுக்கு பரிசாக வழங்கப்படுகிறது. அங்கேயும் அம்மா செண்டிமெண்ட், காதல், துரோகம், நட்பு, அடிதடி என்று சகலமும் இருக்கிறது.

க்ளைமாக்ஸில் ஹீரோவும் ஹீரோயினியும் கையோடு கை கோர்த்துக்கொண்டு சில்ஹூட்டில் சந்தோஷமாகச் செல்கிறார்கள்.

***************

வியாபாரங்களில் பண்டைய காலத்தில் பண்ட மாற்று முறை இருந்தது, அதற்கப்புறம் இப்போது கரன்ஸி பயன்படுகிறது. எதிர்காலத்தில் உலக மக்களுக்கு 25 வருடங்கள் ஆயுள் என்று பிறக்கும்போது நிர்ணயம் செய்து, வேலை செய்தால் பணத்துக்கு பதில் வாழ்நாள் மணித்துளிகளை சம்பளமாக கொடுத்தால்? இந்த விபரீத கற்பனைதான் கதைக் கரு. ஊருக்கு பிரயாணம் போக வேண்டுமா? காருக்கு டீசல் போடவேண்டுமா? கார் வாங்கவேண்டுமா? டெலிபோன் பேச வேண்டுமா? காதலிக்கு வைர மோதிரம் பரிசளிக்க வேண்டுமா? ஹோட்டலில் சாப்பிட மற்றும் தங்க வேண்டுமா? எதுவாகினும் வலது கை மணிக்கட்டுக்கும் முழங்கைக்குமிடையே பச்சையில் நொடி நொடியாகக் கரைந்து ஒளிரும் நமது ஆயுளின் மணித்துளிகளை பணமாகக் கொடுத்தால் அது கிடைக்கும்.

25 வருடங்கள் தான் வாழ்க்கை என்ற தலையெழுத்தை கையில் எழுதி ராக்கெட் விடும் கவுன்டவுன் மாதிரி லைஃப் க்ளாக் பச்சையாய் ஒளிர்ந்து ஒவ்வொருப் பிரஜையின் கண்ணெதிரேயும் நொடி நொடியாகக் கரைகிறது. இன்னும் எவ்வளவு நாட்கள் உயிர்வாழ்வோம் என்று ஒவ்வொரு பிரஜைக்கும் சத்தியமாகத் தெரிந்துவிடுவதால் டுபாக்கூர் ஜோசியர்கள், அடாவடி சாமியார்கள் இல்லாத மற்றும் சாமி கும்பிடாத சமதர்ம சமுதாயமாக இருக்கலாம். எங்கு சென்றாலும், எதை வாங்கினாலும், எதற்கும் எவரும் காசு கேட்பதில்லை. பதிலாக கையோடு கை கோர்த்தோ அல்லது ஸ்வைப்பிங் கருவியிலோ வாழ்நாளின் மணித்துளிகளை தியாகம் செய்தால் நீங்கள் விரும்பியதை அடையலாம்.

இதன் ட்ரெய்லர் சுட்டி.
http://www.youtube.com/watch?v=efNzhEKm3w4

#இது ஆங்கிலப் படமான IN TIME என்பதன் கதை. படத்திலிருக்கும் சீன் வரிசை எனது எழுத்தில் துளியூண்டு மாறியிருக்கலாம். அது என்னுடைய ரசனைக்காக அப்படி எழுதப்பட்டது. நிறைய சீன் சீனாக எழுதலாம் என்றிருந்தேன். மக்கள் பிழைத்துப்போகட்டும் என்று பெரியமனது பண்ணி இத்தோடு நிறுத்திவிட்டேன்.

##தமிழில் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்றவர்களின் உழைப்பிலும் கைவண்ணத்திலும் நியர் ஃப்யூச்சரில் தமிழ்ப் படமாக்கப்படலாம். நல்ல சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails