சென்னையெங்கும் இசைமழை பொழிகிறது. சபாக்கள் நிரம்பி வழிகின்றன. தனுர் மாச குளிருக்கு காஷ்மீர் கம்பளி சால்வையை கழுத்தை சுற்றியும் காதுகளை மறைத்தும் முகத்தில் மூக்குக் கண்ணாடி மட்டும் தெரியும்படி இழுத்து போர்த்திக்கொண்டு தள்ளாத வயதிலும் கடமை தவறாமல் கச்சேரி அட்டென்ட் செய்கிறார்கள். மயிலையை சுற்றியுள்ள இடங்கள் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இசை தெரியாதவர் கால் வைத்தால் சர்.....ரென்று வழுக்குகிறது. ஒபாமா ஆளும் யூஎஸ்ஸில் மைக்ரோசாஃப்டில் பில் கேட்ஸ் அலுவலகத்தில் பணிபுரியும் என் பள்ளிகால நண்பன் விஜய் "மத்தியான்னம் ஒன்னரைக்குள் வந்து என்னைப்பார் இல்லேன்னா நான் கச்சேரிக்கு போய்விடுவேன்" என்று மிரட்டி நட்புக்கு கண்டிஷன் போடுகிறான். பக்கத்து வீட்டு மாமி கூட காதால் சங்கீதம் கேட்பதோடு நிறுத்திவிட்டாள். எனக்கும் பூனை கரண்டுவது போலிருக்கும் மியூசிக்கிலிருந்து விடுதலை. மாமி இப்போது மருந்துக்கு கூட வாயைத் திறப்பது இல்லை. மகா நிம்மதி. சரி. ஏதாவது ஒரு சபாவை கொஞ்சம் நெருங்கி டிக்கெட் வாங்கலாம் என்றால் ஐநூறு ஆயிரம் என்று விலை. அப்படி இல்லை என்றால் ஏதாவது தேங்காமூடி கச்சேரிக்கு ஃப்ரீ பாஸ் தருகிறார்கள். ஆளை விட்டால் போதும் என்று ஓடி வந்து பனியில் நனையாமல் காலையில் ஜெயா டிவியில் மார்கழி மஹா உற்சவம் பார்த்து என்னுடைய சங்கீத அறிவை வளர்த்துக்கொள்கிறேன்.
இவ்வளவு விஸ்தாரமான முதல் பாராவை படித்துவிட்டு நாளைக்கு ஜிப்பாவோடு மேடையேறி கச்சேரி பண்ணும் லெவெலில் எனக்கு இசை ஞானம் இருப்பதாக யாரும் கிஞ்சித்தும் எண்ணி விடவேண்டாம். எனக்கு தெரிந்த ரஞ்சனி, வசந்தா, கல்யாணி, பைரவின்னு ராகத்தோட பெயர்களைச் சொன்னால் கூட என் தர்மபத்தினி "எல்லாம் பொம்னாட்டி பேர்ல இருக்கு. அதான் கரெக்டா ஞாபகம் வச்சுருக்கீங்க." என்று நாலு பேர் முன்னால் நாட்டியாக பேசி தாறுமாறாக காலை வாறுகிறாள். கர்நாடக சங்கீதம் கேட்க வேண்டும் என்றால் மனதை ஒருமுகப்படுத்தி, இப்போது சினிமாக்களில் பாடும்/கத்தும் பாடகர்களின் அவலமான உச்சரிப்பையும் அபஸ்வரமான சுரப்ரஸ்தாபங்களையும் நினைவில் நிறுத்திக் கேட்டால் போதும். கர்நாடக சங்கீதம் பேதமில்லாமல் புரிந்துவிடும். ராகம், தாளம் தெரியவேண்டும் என்று தேவையில்லை. சுபபந்துவராளியில ஷட்ஜமத்தில இழுத்து பஞ்சமத்தில இறங்கி காந்தாரத்தில ஏறினா என்ன ராகம் வரும் போன்ற இசையறிஞர்கள், சங்கீத ஜாம்பவான்கள் பதிலளிக்கும் பத்து மார்க் பெரிய கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கும் ஞானம் வளர்ந்த பிறகுதான் கர்நாடக சங்கீதம் கேட்கவேண்டும் என்பது அத்தியாவசியம் இல்லை. அவசியமும் இல்லை.
கேட்கும் இசை தமிழிசை என்றால் உங்கள் காதுகளுக்கு பாதி சுமை குறைந்தார்ப் போல் இருக்கும். ஏனென்றால் பாடலுக்கு அர்த்தம் புரிதலில் கொஞ்சம் முழித்துக் கொள்வீர்கள். கையை தொடையில் தோசை திருப்பி போல தப்புத்தப்பாக திருப்பிப் போட்டு தூக்கத்தை கலைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக மாட்டீர்கள். இயக்குனர் கே.பி சார் சிந்துபைரவியில் இதைத் தான் அழுத்தம் திருத்தமாக சுஹாசினியை வைத்து சொல்லியிருப்பார். உன்னால் முடியும் தம்பியில் கூட மானிட சேவை துரோகமா என்று கர்நாடகத் தமிழ் கச்சேரியில் மேடையில் கமலை பாட வைத்து அசத்தியிருப்பார். இந்த மனோதிடத்துடன் போய் யார் வேண்டுமானாலும் எந்தப் பாடகரின் கச்சேரியை வேண்டுமானாலும் கேட்கலாம். பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மாமா "இந்த ராகம்னா எனக்கு உசுரு.. என்ன ராகம் சொல்லுங்கோ பாப்போம்..." என்று ரொம்ப சீண்டிப்பார்த்தால் "இது அபூர்வமான ராகமாச்சே..."ன்னு சொல்லிட்டு வலது பக்கம் உட்கார்ந்திருக்கும் வாட்ச் இல்லாத அன்பரிடம் "இப்ப டயம் என்ன?" என்று கேட்டு தப்பித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் உங்களை சங்கீத மும்மூர்த்திகளாலும் காப்பாற்ற முடியாது.
தமிழ்ப்பண்ணை வெளியீடாக 1947-ல் வெளிவந்த சங்கீத யோகம் என்ற புஸ்தகத்தை வானதி பதிப்பகத்தார் முதல் வெளியீடாக 1998-ல் வெளியிட்டார்கள். அதன் ஒரு பதிப்பு என்னிடம் பத்திரமாக இருக்கிறது. இசைக்கடலில் மூழ்கி முத்தெடுத்து விட வேண்டும் என்ற உத்வேகத்தில் இப்படி படித்ததெல்லாம் பார்த்திருக்கிறேன். அந்த யோகம் எனக்கு வாய்க்கவில்லை. இன்று அதைப் புரட்டிப் பார்த்ததில் கிடைத்த சங்கதிதான் கீழே உள்ளது. கல்கி அவர்களின் கைவண்ணத்தை அப்படியே தட்டச்சு கைங்கர்யம் செய்து இங்கே வழங்கியிருக்கிறேன். படித்து ரசியுங்கள்.
சங்கீத சபைகளில் டிக்கெட் வைத்து சங்கீதக் கச்சேரி நடத்தும் வழக்கத்தைப் பற்றிச் சமீபத்தில் ஒரு வாதம் எழுந்தது.
தமிழ் நாட்டில் உள்ளவை போன்ற சங்கீத சபைகளும், டிக்கெட் வைத்துக் கச்சேரி நடத்தும் வழக்கமும் வட இந்தியாவிலே கிடையாது.
அதாவது வெகு சமீபகாலம் வரையில் இல்லை; இபோதுதான் தமிழ் நாட்டிலிருந்து இந்த ஏற்பாடு வடக்கே போயிருக்கிறது.
சரியோ, தவறோ, தமிழ் நாட்டுக்கே சிறப்பாக உரிய இந்த ஏற்பாடு எப்போது ஆரம்பமாயிற்று?
ஏதோ அறுபது வருஷம், நூறு வருஷத்துக்கு உட்பட்டதாயிருக்கும் என்று இதுவரை நினைத்திருந்தேன்.
தமிழ் நாட்டில் சுமார் ஆயிரத்து நூறு வருஷகாலமாகப் பணங் கொடுத்துப் போட்டுக் கேட்கும் வழக்கம் உண்டு என்று சில நாளைக்கு முன்புதான் தெரிய வந்தது.
இதற்கு ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அத்தாட்சி கூறுகிறார்.
சாக்ஷாத் பரமசிவனேதான்!
அதிலும் அவர் காசுகொடுத்துக் கேட்டது தமிழிசை தானாம்!
"தெரிந்த நான்மறையோர்க்என்று திருவீழிமிழலைப் பதிகம் எட்டாவது பாசுரத்தில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி அருளியிருக்கிறார்.
கிடமாய திருமிழலை
இருந்துநீர் தமிழோ டிசைகேட்கும்
இச்சையாற் காசுநித்தம் நல்கினீர்!"
அந்தக் காலத்தில் சிவபெருமான் தமிழிசை கேட்டதற்காகக் கொடுத்த காசு, பொற் காசு! இந்த நாளில் நாம் கொடுக்கும் காசு கடிதாசு! அவ்வளவுதான் வித்தியாசம்.
தமிழிசை ஒரு நாள் கேட்டதோடு சிவபெருமான் திருப்தியடைந்து இருந்து விட்டாரா? இல்லை. நித்தம் நித்தம் காசுகொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போய்க் கேட்டார்! தமிழோடு சேர்ந்த இசை அவ்வளவாக அவரை கவர்ந்திருந்தது!
சிவபெருமான் அவ்விதம் காசு கொடுத்துத் தமிழிசை கேட்ட இடம் எது? நாலுவேதங்களையும் ஓதி உணர்ந்த மறையோருக்கு இருப்பிடமான திருவீழிமிழலை என்னும் ஊர். வேத கோஷங்களுக்கு மத்தியில் தமிழிசையும் பெருமான் கேட்டு அனுபவித்திருக்கிறார்!
இப்படியெல்லாம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் சொல்லியிருப்பதிலிருந்து, அந்த நாளில் நமது முன்னோர்கள் தமிழிசையை எவ்வளவாக மதித்தார்கள் என்பது நன்கு தெரிகிறது.
பின் குறிப்பு:
இத்தனை வலுவான மேற்கண்ட பாராக்களுக்கு பிறகு நான் எழுதுவது அவ்வளவு உசிதம் இல்லை. ஆகையால் எனக்கு மிகவும் பிடித்த கீழ்கண்ட தாயுமானவர் பாடல் சஞ்சய் சுப்ரமண்யத்தின் குரலில்... ராகமாலிகா ராகத்தில்... மனுஷன் அப்படியே ஆளை உருக்கியிருப்பார்... மீண்டும் சொல்கிறேன்... கர்நாடக சங்கீதம் தெரியாவிட்டாலும் என்னை போல் அவர் பாடியிருக்கும் பாவத்தை வைத்து பாடலை முழுமையாக கேளுங்கள்.. உங்கள் மன மகிழ்ச்சிக்கு நான் உத்திரவாதம்.
கர்நாடக சங்கீத தமிழ்ப் பாடல்:
பெற்ற தாய் தனை மகமறந்தாலும்..
சஞ்சய்க்கு மீசை நன்றாக இல்லை...
படக் குறிப்பு:
2008 திருவீழிமிழலை விஜயத்தின் போது அடியேன் எடுத்த மாப்பிள்ளை ஸ்வாமி என்றழைக்கப்படும் கல்யாண சுந்தரேஸ்வரர் படம்.
நன்றி ;-)
-
இத்தனை வலுவான மேற்கண்ட பாராக்களுக்கு பிறகு நான் எழுதுவது அவ்வளவு உசிதம் இல்லை. ஆகையால் எனக்கு மிகவும் பிடித்த கீழ்கண்ட தாயுமானவர் பாடல் சஞ்சய் சுப்ரமண்யத்தின் குரலில்... ராகமாலிகா ராகத்தில்... மனுஷன் அப்படியே ஆளை உருக்கியிருப்பார்... மீண்டும் சொல்கிறேன்... கர்நாடக சங்கீதம் தெரியாவிட்டாலும் என்னை போல் அவர் பாடியிருக்கும் பாவத்தை வைத்து பாடலை முழுமையாக கேளுங்கள்.. உங்கள் மன மகிழ்ச்சிக்கு நான் உத்திரவாதம்.
கர்நாடக சங்கீத தமிழ்ப் பாடல்:
பெற்ற தாய் தனை மகமறந்தாலும்..
சஞ்சய்க்கு மீசை நன்றாக இல்லை...
படக் குறிப்பு:
2008 திருவீழிமிழலை விஜயத்தின் போது அடியேன் எடுத்த மாப்பிள்ளை ஸ்வாமி என்றழைக்கப்படும் கல்யாண சுந்தரேஸ்வரர் படம்.
நன்றி ;-)
-