Monday, December 30, 2019

தாவணி போட்ட தீபாவளி

சின்னப் பசங்களாக இருக்கும் வரையில் வெடி கொளுத்தி குஜாலான மனசு வாலிபம் தலைப்பட புத்தாடையில் குஜிலிகளைக் காணும் ஆசை அரும்புமீசையோடு சேர்த்துத் துளிர்விட்டது. கன்னியரின் மனசைத் தெரிந்துகொள்ளாத கபோதிகள் சிலர் வெங்காய வெடியைக் கையில் கொண்டு போய் சாலையில் மெல்ல நடந்து செல்லும் பாவாடைத் தாவணிகளின் காலருகே அடிப்பார்கள். தீவிரவாதிகள். அப்போது திடுக்கிட்டு நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு மான் போல மிரளும் குட்டிகளைக் கண்டு சிரித்துக்கொண்டே சைக்கிளில் இரண்டு கைகளையும் ஹாண்டில் பாரிலிருந்து எடுத்து அகலவிரித்து ஹீரோயிஸம் காட்டி மகிழ்வார்கள். அது உண்மையில் வில்லத்தனம் என்று அந்த அறிவிலிகளுக்குத் தெரியாது. இந்தப் பூர்வ பீடிகையின் பின்னே சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது. சொல்கிறேன்.
மன்னை ஹரித்ராநதியின் கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு என்று பிரதக்ஷிணமாக வரும் தெருக்களில் சக ஸ்நேகிதர்கள் யாரையெல்லாம் சைட் அடித்துச் சுற்றுகிறார்களோ அந்த மங்கல பெண்டிர் தீபாவளிக்கு என்ன கலர் ட்ரெஸ் போடுவார்கள் (தாவணியோ பாவாடையோ) என்பதை முட்டை மந்திரிக்காமல் தெரிந்து கொண்டு அதே கலருக்கு மேட்ச்சிங்காக சட்டை பேண்டு போட்டு அன்று அவள் முன்னால் உலாத்துபவன், நேரம் கனிந்து வரும்போது அப்பெண்ணின் மணவாளனாகிவிடுவான் என்ற கிறுக்குத்தனம் கலந்த மூட நம்பிக்கை ஒரு தீபாவளியில் உதயமானது.
அந்த தீபாவளியில் டெய்லர்கள் எல்லாம் படு பிசி. ஸ்டைலோ மணி உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் ஆஸ்தானம். என் அப்பா ஒரு பண்டில் கதர் துணி வாங்கிக்கொடுத்தால்... பத்து பதினைந்து சட்டைகளாக தைத்துக் கொடுப்பார் மணி. குரலில் கொஞ்சம் நளினமாக பெண்கள் சாயலில் இருந்தாலும் ஆண்களுக்கான முதல்தர டெய்லர். அடுத்ததாக சூப்பர்ஃபைன் டைலர் என்னுடன் பள்ளியில் படித்த ஸ்நேகிதனின் அப்பா. பந்தலடியில் இந்தப் பக்கம் கலா ஒயின்ஸ் எதிர்புறம் ஸ்டைலோ. அந்தப் பக்கம் உடுப்பி கிருஷ்ணபவன் எதிரில் சூப்பர்ஃபைன். இளைஞர்களின் அந்தக்கால விருப்பமாக சூப்பர்ஃபைனும் சாந்தி தியேட்டர் எதிர்புறம் இருக்கும் மாரீஸ் டைலர்ஸும் ஆடைப்புரட்சி நடத்தி கோலோச்சிக்கொண்டிருந்தார்கள்.
மாரீஸ் டைலர்ஸ் அண்ணன் தம்பி மூன்று பேர். 2 அண்ணன் ஒரு தம்பி. ஒரு அண்ணனுக்கு இரண்டு தம்பி. சரி இப்போது அந்த சர்ச்சை வேண்டாம். அங்கே சட்டை பேண்ட் தைத்த கதைக்கு வருவோம். அந்த வருஷம் சத்தியராஜ் "பூ விழி வாசலிலே" படத்தில் கொசுவலை போல உள்ள துணியை சும்மா கை வைத்துத் தைத்து ஃப்ரீ சைஸில் சட்டை மாட்டிக்கொண்டு "அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே?" என்ற பாடலுக்கு திரையில் ஆடியாடி நடந்து வந்ததைப் பார்த்து இளைஞர் உலகமே அதே சட்டையை (சத்யராஜ் கொடுப்பாரா? கொடுத்தால் எவ்வளவு பேருக்குக் கொடுப்பார்?  ) ..ச்சே... அந்த சட்டை மாதிரியே போட்டுக்கொண்டு கன்னியரை அசத்தத் துடித்தார்கள். அதே போல துணியை வாங்கும் முயற்சியில் அனைவரும் இறங்க ஆபத்பாந்தவனாக வந்தவன் புவனேந்திரன். "நண்பேன்டா" புவனேந்திரன் கம்மாளத் தெரு நாகோடா டெக்ஸ்டைல்ஸில் பகுதிநேர ஊழியன். தானுண்டு கடையுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் ஒரு உத்தமன்.
அவரவருக்கு என்ன கலரில் அந்த கொசுவலைத் துணி வேண்டும் என்பதில்தான் இந்த வியாசத்தின் இரண்டாம் பாரா சங்கதி அடங்கியிருக்கிறது. தெற்குத் தெருவில் அழகான அக்கா தங்கை இருந்தார்கள். ஆமாம். இருவருமே அழகிகள். சிலசமயம் அக்கா நன்றாக இருந்தால் தங்கை இராவணனின் தங்கை போலவும்; தங்கை பார்க்க லக்ஷணமாக இருந்தால் அக்கா ஜ்யேஷ்டாதேவி போலவும் இருப்பது பொது மரபு. இங்கே இருவருமே அற்புதமான சைட். அப்படி "சைட்" என்றுத்தான் சைத்தான்கள் பேசிக்கொள்வார்கள். அக்காவைச் சிலரும் தங்கையைச் சிலரும் பின்தொடர்ந்தார்கள். இந்த ஃபேஸ்புக் போன்று ஃபாலோயர்களைக் கணக்கிடும் காலமாக இருந்தால் மன்னை மக்கள்தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை எவ்வளவோ அவ்வளவும் அவர்கள் பின்னாடிதான். சரி. இதற்கு மேல் டீட்டெயிலிங் தேவையில்லை. நிறுத்துவோம். இவ்வியாசத்தில் இங்கிருந்து அக்கா என்றால் மேற்படி 'அழகிய' அக்காவும் தங்கை என்றால் மேற்கண்ட 'லவ்லி' தங்கையுமாக வாசகர்கள் படித்துக்கொள்ளவும்.
அந்த அக்காவின் உடை என்ன கலராக இருக்கும் என்ற யூகத்தில் சிலரும் தங்கையைப் பின்பற்றுபவர்கள் வேறு யூகத்திலும் துணியெடுக்கப் படையெடுத்தார்கள். அக்கா கலருக்குப் போட்டியிட்டவர்கள் சிகப்பு மஞ்சள் பச்சையென்று வண்ணமயமான கற்பனையில் துணியெடுத்துக்கொண்டார்கள். தங்கையின் அபிமானியாக இருந்தவன் ஆப்தன் ஸ்ரீராம். ஸ்ரீராமுக்கு தங்கையின் தாவணி நிச்சயம் நீலம்தான் என்று ஏதோ ஒரு பட்சி சொல்லியது. நீலக்கலரில் சொக்காயும் அதற்கேறவாறு அன்ட்ராயரும் தைத்துக்கொள்ளமுடிவு செய்தான்.
மாரீஸுக்கு தீபாவளி ஆர்டர்கள் மலைபோலக் குவிந்தது. மாரீஸில் அண்ணன் வெட்டித் தர ஒரு தம்பி மூட்டிக்கொடுக்க இன்னொருத்தர் காஜா. அசுரத்தனமாக அனைவரும் ஒரு மாதகாலமாக வேலைப்பார்த்ததில் கைவேறு காலர்வேறாக தைத்துவிடுவார்களோ என்றஞ்சி துணி கொடுத்தவனே அருகில் இருந்து கண்காணிக்கும்பணியில் ஈடுபடவேண்டியதாயிற்று. அடியேனின் கொசுவலை தீபாவளிக்கு ஒரு நாள் முன்னரே தயாராகியது அடியேன் முன்ஜென்மத்தில் செய்த புண்ணியம். தீபாவளி அதிகாலையில் "ஒரு பொதை வெய்யேன்டா தம்பி" என்று பாட்டிச் சொல்லைத் தட்டாமல் புஸ்வானம் வெடிக்கும் போது சரவணன் மாரீஸிடமிருந்து புதுச்சட்டை பேண்ட் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தான்.
கங்கா ஸ்நானம் ஆனபின் எல்லோரும் புதுத்துணி அணிந்துகொண்டாயிற்று. இப்போது துணி தைத்துக்கொண்டதின் புண்ணிய பலனாக அக்கா-தங்கைகளின் ஆடை நிறம் பார்க்க ரோமியோக்கள் தயாரானார்கள். சைக்கிள்தான் அப்போது எங்கள் ஹார்லே டேவிட்சன். ஐயனார் கோயில் திருவிழாவில் இரவு முழுவதும் பல்பு கட்டி இறங்காமல் சுற்றும் சாகசக்காரன் போல அதிகாலையிலிருந்து நாலுவீதியையும் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஏழு மணி போல ஒருவழியாக அழகிகள் தரிசனம் ஆனது. அக்காக்காரர்கள் எல்லோருக்கும் ஏமாற்றம். பச்சை மஞ்சள் சிகப்பு என்று தெலுங்கு ஹீரோக்கள் போல கண்ணைப்பறிக்கும் கலரில் ஸ்டைலாக துணிபோட்டிருந்தவர்கள் முகத்தில் ப்ரௌனைப் பூசி விட்டாள் அக்கா. தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டார்கள். இதுபோன்ற 'லவ்'கீக சமாசாரங்களில் ஸ்ரீராமின் குறிகள் என்றுமே தப்பியதில்லை. அத்தங்கையும் நீலம். ஸ்ரீராமும் நீலம். அன்று வானமும் நீலம். வானத்தின் வண்ணத்தை வாங்கிக்கொண்ட ஹரித்ராநதியும் நீலமாக இருந்தது. Blue Everywhere!
ஸ்ரீராமுக்கு ஒரே குதூகலம். அவன் நோட்டமிட்டவளும் அவனும் ஒரே கலரில் ட்ரெஸ் போட்டுக்கொண்ட சந்தோஷத்தை விட அந்த அக்காக்காரியை பின்தொடரும் பிரகஸ்பதிகள் அசடுவழிய ஏமாற்றம் அடைந்ததில் அலாதியான ஆனந்தம் அடைந்தான். தாவணி போட்ட தீபாவளிகள் என்றுமே அழகு என்ற கிளிஷேவுடன் இதை முடித்துக்கொள்கிறேன். 
~~~~~~
எல்லோருக்கும் என் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
~~~~~~~
பொறுப்புத் துறப்பு: நான் இந்த செயலில் ஈடுபடவில்லை எனவும் வெகுகாலத்திற்குப் பின்னர் இப்படியெல்லாம் கலரில் விளையாட்டு நடந்தது எனவும் ஸ்ரீராம் சொன்னதை கிளுகிளுப்பாக இருக்கட்டும் என்று சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் இங்கே இவ்வியாசம் எழுதப்பட்டது. நன்றி.

பாட்டிகளின் காதலன்


"அச்சச்சோ... கடந்துவிட வேண்டுமே" என்று பதட்டப்பட்டேன். இங்கே நான் எழுதியதை நீங்கள் படிக்க எடுத்துக்கொள்ளும் அவகாசத்தை விட அவசரமாக மனது அடித்துக்கொண்டது. வாகனங்கள் விரையும் மெயின் ரோடு. இரண்டு பக்கமும் சோழாவரம் பந்தயத்தில் முதலிடம் பெற போட்டியிடுவது போல வேகமாகச் சென்றுகொண்டிருந்தார்கள்.
இடுப்பில் தண்ணீர் தளும்பத் தளும்ப பெரிய பித்தளைக் குடம். நல்ல வெயிட். கச்சலான தேகம். தலை முழுக்க வெண்பஞ்சு கேசம். எண்பது வயதுக்கு மேல் இருக்கலாம். வைரம் பாய்ந்த கட்டையாய் ஒரு பாட்டி. விருட் விருட்டென்று தண்ணீர் குடத்தோடு ரோடைக் கிராஸ் செய்தார். தனக்குத் தானே ஏதோ பேசிக்கொண்டே வீறுநடை போட்டார்.
சிறுசுகள் இல்லாத வீடா? அல்லது இப்பாட்டி யார் வீட்டிலாவது வேலை பார்க்கிறார்களா? எதாகிலும் சதாபிஷேகப் பாட்டி தண்ணீர்க்குடம் தூக்குவது பிசகு என்றெண்ணும் அதே வேளையில் இக்காலத்து பெண்கள் யாரேணும் அந்த பித்தளைக் குடத்தை வெற்றுக்குடமாகவாவது தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்வார்களா என்பது சந்தேகம். பெற்ற குழந்தையையே தள்ளுவண்டியில் படுக்கப் போட்டு மொபைலை நிரடிக்கொண்டு செல்லும் சோஷியல் நெட்வொர்க்கிங் சமூகமாக மாறிவிட்ட பிறகு அவர்கள் குடம் தூக்க வேண்டும் என்று எண்ணுவது கொடூரமான ஆணாதிக்க சிந்தனையல்லவோ?
எப்பவோ 90களில் பார்த்த "வைகாசி பொறந்தாச்சு"வில் தோளில் தோல்பையுடன் மார்டன் ட்ரெஸ்ஸில் குதிரை போல நடந்து வரும் ஹீரோயினையைப் பார்த்து பிரசாந்த் "தண்ணிக் கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது... மனசு தவிக்குது..." என்று கிண்டலடித்துப் பாடும் காட்சி நினைவுக்கு வந்தது. ஆனால், ரியல் ஹீரோயினி இந்த பாட்டிதானே!
பாட்டியிடம் வளர்ந்ததால் எப்போதும் பாட்டிகளின் மேல் ஒரு காதல் பிறந்துவிடுகிறது! 

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails