Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Thursday, June 1, 2017

ரெண்டு தட்டு தட்டு...

மானஸாவுடன் ஸ்கூட்டியில் கிளம்பும் போது ஹெட்லைட் எரியவில்லை. ஸ்கூட்டியின் கழுத்தருகே கிச்சுக்கிச்சு மூட்டுவது போல பதவிசாகத் தடவிக்கொண்டிருந்தேன். ஊஹும். நோ ரிசல்ட்.
“அப்பா.. முன்னால ரெண்டு தட்டு தட்டு...”
“ஏன்?”
“வண்டியையும் ஹஸ்பண்டையும் ரெண்டு தட்டு தட்டினாதான் ஒழுங்கா வேலை செய்யுமாம்....”
“யாருடி உனக்கு இந்த மாதிரியெல்லாம் அடாவடியா சொல்லித்தரா?”
“கலக்கப் போவது யாருல சொன்னாங்கப்பா...”
“ரெண்டு தட்டுல வேலை செய்யலைன்னா...”
“நாலு தட்டு...”
இதுக்கு மேல நான் தட்டுக் கணக்குக் கேட்கலை. டு பவர் இன்ஃபினிட்டி தட்டுவாங்கோ...
”ஹஸ்பண்ட தட்டு”ன்னு மானஸா சொன்னத்துக்கப்புறம் ஆம்பிளைப் பசங்களைப் பார்த்தா பாவமா இருக்கு! வாழ்க வையகம்!! :-)

Thursday, December 15, 2016

நாரதரின் பூலோக பேங்க் அக்கௌன்ட்

”நீங்கள் ஹாயாக சயனித்து பாற்கடலில் தெப்பம் விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.. பூலோகத்தில்... பரதக் கண்டத்தில்.... பூராப் பயலும் நாறிக்கொண்டிருக்கிறான்... கரன்ஸியை கலர் ஜெராக்ஸ் எடுத்து மார்க்கெட்டில் விடுகிறான்கள்... ” என்று புலம்பி தம்பூராவின் பிரம்பு அறுந்து போகும்படி மீட்டிக்கொண்டே வைகுண்டத்திற்குள் நுழைந்தார் நாரதர்.
”ஏனப்பா? என்னவாயிற்று?” கண்களில் கவலை மிதக்கக் கேட்டார் நாராயணன். அவருக்குப் படுக்கையான ஆதிசேஷன் இருமுறை நாக்கைத் துருத்தி நாரதரை வினோதமாகப் பார்த்தான்.
“சந்தெங்கிலும் ஏடியெம் வாசலில்... போலீஸ் காவல் காக்கும் வங்கிகளின் வாயிற்படி இடுக்குகளில்... என்று கிடந்து திண்டாடுகிறான்...சாவுறான்கள்..”
“வசவசவென்று நீட்டிமுழக்காமல் விஷயத்தைச் சொல்....”
“எல்லாம் கறுப்புப் பண விவகாரம் ஸ்வாமி.. “
”அதென்ன கறுப்புப் பணம் நாரதா? விளங்கவில்லையே... நீதான் திரிலோக சஞ்சாரியாயிற்றே... சரியாகச் சொல் பார்க்கலாம்..”
”உங்கள் காலடியில் ஒரு தேவி அமர்ந்து கால் அமுக்கி விடுகிறார்கள் அல்லவா? அவர்களிடமே கேளுங்களேன்.. அவர்கள் தானே சர்வசெல்வங்களுக்கும் அதிபதி....வெள்ளைக்கும் கார்மேக வண்ணனாகிய உம்மைப்போன்ற கறுப்புக்கும் வித்யாசம் தெரியும்”
”என் செல்ல ஸ்ரீ... அதென்ன கறுப்புப் பணம் டார்லிங்...”
“கணக்கில் காட்டாத பணம் கறுப்புப் பணம்” என்று ஷார்ட்டாக முடித்துக்கொண்டார் திருமகள். அறிதுயில் ஆளுக்குச் சொல்ல விருப்பமில்லை.
ஊஹும். திருமாலுக்குத் திருப்தியில்லை.
“கணக்கில் என்றால்? யார் கணக்கில்? குபேரனுடைய கணக்கிலா.. உன் கணக்கிலா?.. என் கணக்கிலா?... இல்லை காந்தி கணக்கிலா?” என்று சரமாரியாய்க் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.
”இதோ இந்த நாரதனுக்கு மாசம் ஆயிரம் பொன் சம்பளமாகத் தருகிறீர்கள்... அதில் இருநூறு பொன்னை எடுத்து அங்கவஸ்திரத்தில் முடிந்து கொண்டு, எண்ணூறுதான் பெற்றுக்கொண்டேன்..... என்று தேவலோக கஜானாக்காரர்களுக்கு கணக்குக் கொடுத்தால்.. அந்த இருநூறு கள்ளப்பணம்.. கறுப்புப் பணம்.”
“யார் கணக்குக் கொடுத்தால்.. கொடுக்கும் நானா... வாங்கும் அவனா”
“இரண்டு பேருமே... யார் செய்தாலும்... ஆயிரம் தருகிறேன் என்று கணக்கெழுதிவிட்டு.. எண்ணூறு கொடுத்துவிட்டு உம் மடியில் இருநூறை நீர் முடிந்து கொண்டாலும்.... அல்லது எண்ணூறுதான் பெருமாள் கொடுத்தார் என்று நாரதன் இருநூறை அழுத்தினாலும்...”
“ஓஹோ... கலகம் செய்வதோடு.. இப்போதெல்லாம் கறுப்புப் பணமும் செய்கிறானா நாரதன்?”
“ப்ரபோ.அபச்சாரம்.. அபச்சாரம்... உங்களுக்குப் புரியவைக்க தேவி கொடுத்த எக்ஸாம்பிள் அது... அஷ்டாக்ஷ்ரத்தை விட பெருஞ்செல்வம் எனக்கேது? ஓம் நமோ நாராயணா.. ” தசாவதார அந்தரத் தொங்கு கமலாக ராகம் இழுத்தார் நாரத்.
“நாரதா.. சீன் போடாதே... நிறுத்து...” நாரதனுக்கு ஏக கடுப்பு. "அடப்போய்யா... கிடக்கு..." என்பது போல தம்பூராவில் ஒரு ஸ்ட்ரம்மிங் கொடுத்தார்.
”தேவி.. கறுப்புப்பணம் என்ற ஒன்று எதற்கு?”
“பொருளீட்டும் அனைவரும் ஒரு பங்கை வரியாக ராஜாங்கம் செய்யும் சர்க்காருக்கு செலுத்த வேண்டும். அதைக்கொண்டு பொதுக்காரியங்கள், சர்வஜன க்ஷேமத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவார்கள்... அந்த வரியைக் கட்டாமல் தங்களது அதீத சுயதேவைக்காக ஏய்த்துக் கறுப்புப் பணம் சேர்க்கிறார்கள்”
”ஏன் வரி கட்ட மறுக்கவேண்டும்? நல்ல காரியங்களுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டியதுதானே? உரிய நேரத்தில் கணக்கு தீர்த்து அவர்களை நாம் பரமபதம் அழைக்கும்போது கையில் ஒன்றுமில்லாமல்தானே இங்கே வரவேண்டும்?”
இப்போது நாரதன் இடை மறித்தான்.
”ஆம் ஸ்வாமி. இருந்தாலும் பூலோகத்தில் ஜீவித்திருப்பதற்கு எதற்கெடுத்தால் மால் வெட்ட வேண்டும்.. அந்தச் செலவுக்கு தாராளமாக காசு வேண்டுமே... ”
“என்னதுதிது? என்னை வெட்டவேண்டுமா?” திடுமென உருவிவிட்டது போல எழுந்து உட்கார்ந்துகொண்டார் திருமால்.
“ஓஹோ.. தவறாகப் புரிந்து கொண்டீர்கள்... மால் வெட்டுதல் என்றால்.. டப்பு கொடுக்கவேண்டும்.. கில்மா தள்ளவேண்டும்.... என்றும் சொல்வார்கள்...”
நாரதர் "ஹெஹ்" என்று கனைப்பது போலச் சிரித்தார். வைகுண்டபதியின் திருக்கூட்டமும் அந்தச் சிரிப்பில் கலந்து ஐக்கியமானது. திருமால் சிரிமால் ஆனார்.
“டேய் நாரதா!! என்னை வைத்துக் காமடி பண்ணுகிறாயா? ஒரு வார்த்தை தெரியாதென்றால் ஒன்பது வார்த்தைகள் தெரியாதபடிக்கு பேசுகிறாய்...”
“பொருத்தருள வேண்டும் ப்ரபோ... உங்களது வக்காபுலரி ரொம்பவும் வீக்... சரி.. சொல்கிறேன்... கையூட்டு தரவேண்டும்.. அதாவது... எதாவது அரசாங்க அலுவலகம் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்..”
“எதற்கு?”
“உங்களுடன் ஒரே லொள்ளாகப் போச்சு...”
“குரைக்கிறேன் என்கிறாயா?”
“அடச்சே... இக்கால மொழிபுரியாமல்... ஃப்ரீயாகப் பேசக்கூட முடியாத இடமாக வைகுண்டம் ஆயிற்றே...”
“சரி சரி... முணுமுணுக்காதே.. மேலே சொல்.. நான் ஏன் அரசாங்க அலுவலகம் செல்ல வேண்டும்?”
“ட்ரைவிங் லைசன்ஸ்... வீடு ரிஜிஸ்ட்ரேஷன்.. பட்டா வாங்குதல்... திருமணம் பதிவு செய்தல்... ரேஷன் கார்டு புதுப்பித்தல்.... மெட்ரோ வாட்டர் கனெக்ஷன்... கழிவுநீர் இணைப்பு... மின்சார இணைப்பு... கட்டிட ப்ளான்...... ஜாதிச் சான்றிதழ்... வங்கிக் கடன்... அரசுப்பணி... அரசுப் பள்ளிகளில் ஆசிரியப் பணி... சாலை போடும் காண்ட்ராக்ட்... சாக்கடை வெட்டும் காண்ட்ராக்ட்.. சாக்கடை வெட்டியதை மூடும் காண்ட்ராக்ட்.. ஸ்பீட் ப்ரேக்கருக்கு வரி வரியாக வெள்ளையடிக்கும் ஒப்பந்தம். மேம்பாலம் கட்டுதல்... ”
“ஸ்ப்பா... நிறுத்தப்பா.. கண்ணைக்கட்டுதே... போதும்... தேவி.. நாரதனுக்குக் குடிக்க தீர்த்தம் கொடு... ம்.. மெதுவாக.. மெதுவாக ஆசுவாசப்படுத்திக்கொண்டு மேலே சொல்லப்பா... எனக்கே கிறுகிறுவென்றிருக்கிறது... ”
நிமிட நேர நிசப்தம்.
“இப்படியாக நீங்கள் செல்லும் எல்லாவிடத்திலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டத் தொகையை விட எக்ஸ்ட்ராவாக ஒரு தொகை செலுத்த வேண்டும். அந்த தொகை செலுத்தினால்தான் காரியம் ஆகும்.. அதை அவர்கள் கணக்கில் காட்டாமல் “ஈ..ஈ...” என்று இளித்துக்கொண்டே பரிசாக ஏற்றுக்கொள்வார்கள்... ”
“இது அரசாங்க அலுவலகத்த்ல் மட்டுமா?”
“இல்லையில்லை.. எங்குமே... உங்களுக்கு தொழில் இலகுவில் முடியவேண்டுமென்றால்... பைசா தள்ள வேண்டும்... அதைக் கணக்கில் காட்டாமல் மறைத்துக்கொள்பவர்கள்.. அந்தப் பணத்தை உள்ளூர் வங்கியில் போட்டால் மாட்டிக்கொள்வார்கள்.. ஆகையால் படுக்கைக்குக் கீழே கரன்ஸியாகவேப் போட்டுக்கொண்டு தூக்கமில்லாமல் பிராணாவஸ்தைப்படுவார்கள்.......”
“கையூட்டைத் தடுத்தால் கறுப்புப்பணத்தை ஒழித்து விடலாமா?”
“அதெப்படி? வெளிநாட்டிலிருந்து கடத்திக்கொண்டு வரப்படும் தங்கம்...உள்நாட்டிலேயே அக்ஷய திருதியை போன்ற நாட்களில் நுகரப்படும் தங்கள்... கஞ்சா போன்ற லாஹிரி வஸ்துகள். இத்யாதி.. இத்யாதி...என்று கள்ளப்பணம் பண்ணுவதற்கு பல உபாயங்கள் உண்டு...”
“சரி... உள்ளூர் வங்கியில் போடாமல் கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்?”
“வங்கியில் சேமித்தால் கணக்குக் காட்ட வேண்டும்... கையில் வைத்துக்கொண்டால்.. அன்றாடச் செலவுகளாகத் தீர்த்து விடலாம்... அதுவே மூட்டை மூட்டையாக வைத்திருந்தால்.. ஹவாலாவில்... வெளிநாட்டுக்குக் கடத்தி.... ஸ்விஸ் வங்கியில் வரவு வைத்துவிடுவார்கள்...”
“ஓ... அதானா சங்கதி!! குபேரனுக்குக் கூட ஒரு தடவை கணக்கு அதிகமாக வந்ததாம்.. யாராவது ஸ்விஸ் வங்கிக்கு வழி தெரியாமல் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்களா?”
ஹா..ஹா.. என்று வைகுண்டமே சிரித்தது.
“இதிலென்ன சிரிப்பு.. குபரேனிடம் கணக்குவழக்குகளைச் சரிபார்க்கச் சொல்... அந்தக் கறுப்புப்பணம் இங்கே வேண்டாம்..”
“பயப்படாதீர்கள் ஸ்வாமி... ஐந்நூறு ஆயிரம் என்று இரண்டு வகையறாக்களை ஒழித்திருக்கிறார்கள்...கையிருப்பில் அந்த நோட்டுகள் இருந்தால் இரண்டரை லட்சம் வரை வங்கிக் கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.. வரியெல்லாம் கிடையாது என்று சலுகைக் காட்டி தூண்டில் போடுகிறார்கள்...”
"லட்சியவாதிகள்.. சுத்தமானவர்கள்... யோக்கியதாம்சம் பொருந்தியவர்களுக்குக் கவலையில்லை.. இல்லையா?”
“அடப்போங்க நாராயணா... இரண்டரை லட்சம் என்பது இப்போது ஒரு ஜூஜூபி....”
“ஜூஜூபியா? அப்படியென்றால்... ”
“வேண்டாம் ட்ராக் மாறாதீர்கள். இது உங்களுக்கு ஸ்பெஷல் வேர்ட்ஸ் சொல்லிக்கொடுக்கும் வகுப்பல்ல... இந்த இரண்டரை லட்ச வரம்பை மீறாமல் தன்னிடமிருக்கும் கறுப்புப்பணத்தை எப்படியெல்லாம் வங்கியில் சேர்க்கிறார்கள் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டேன்...”
“எப்படியாம்?”
“தமக்கு நம்பகமானவர்களைத் தேர்ந்தெடுத்து... அவர்களிடம் தலா இரண்டரை லட்ச ரூபாய்களை வழக்கொழிக்கப்பட்ட ஐந்நூறு ஆயிரம் நோட்டுக்களைக் கொடுத்து அவர்களது வங்கிக் கணக்கில் போட்டுக்கொள்ளச் சொல்வார்கள்...”
“ம்.. பின்னர்..”
“அவர்களுடைய இந்த உதவிக்கு பரிசாக ஐம்பதினாயிரம் ரூபாய் வைத்துக்கொள்ளலாமாம்.. “
“சரி...”
“மீதமிருக்கும் இரண்டு லட்ச ரூபாயை செக்காகவோ... இணைய வழி மாற்றாகவோ... கொடுத்தவருக்கே அனுப்பி விடுவார்கள்... இப்படியாக கறுப்பெல்லாம் வெளுப்பாக்கலாமாம்...”
“அடப்பாவமே.. வேறு எதாவது வழி இருக்கிறதா?”
“ஏன் ப்ரபோ?”
“என்னிடம் ஒரு கட்டு ஐந்நூறு.. இரண்டு கட்டுகள் ஆயிரமும் இருக்கிறது.. நேற்றுதான் திருப்பதி உண்டியலில் இருந்து கைச்செலவுக்காக எடுத்துக்கொண்டேன்... உனக்கு பூலோகத்தில் அக்கௌண்ட் இருக்கிறதா நாரதா?”
”ஐயகோ... இதை யாதெனச் சொல்வேன்.....” என்று பாரதியின் வரிகளை உரக்கச் சொல்லி தலைதெறிக்க ஓடிப்போனான் நாரதன்.

காசு..பணம்.. துட்டு... மணி..மணி...

அவன் என்னை அவமானப்படுத்திட்டாண்டா...

ஏன் தலவரே...
ஐநூறு ரூவா நோட்டு மாலையும் ஆயிர ரூவால க்ரீடமும் வைக்கறான்... நா ஒரு செல்லாக்காசுன்னு சிம்பாலிக்கா சொல்றாம்ப்பா... கட்சிய வீட்டுத் தூக்கணும்..
**
ச்சே... இவன் பர்ஸ ஏண்டா அட்சோம்னு ஆயிடுச்சுப்பா...
ஏன்?
வெறும் ஐநூறு ரூவா.. ஆயிர ரூவாதாம்ப்பா வச்சுருக்கான்... பிச்சக்காரப்பய..
**
அவனே பாவம்ப்பா... ஐநூறும் ஆயிரமமுமாக் கொட்டிக் கிடந்தும்.. பத்துக்கும் அஞ்சுக்கும் நாயா பேயா அலையறான்..
**
ஐநூறை அழித்தவனே போற்றி...
ஆயிரத்தை ஒழித்தவனே போற்றி..
அயோக்கியர்களை நசுக்கியவனே போற்றி...
கறுப்பை நீக்கிய ஒளியே போற்றி...

என்னதிது? ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்யச் சொன்னா... குருக்கள் மாமா....
**
கட்டப்பைய எடுத்துக்கிட்டு காய் வாங்கப் போறீங்களா?
ச்சே..ச்சே.. ஏடியெம்முக்கு..
லட்சலட்சமாக் கூட பணம் எடுக்க முடியாதே...
யோவ்.. ஒரு ரூபாய்.. பத்து ரூபாய்தான் டினாமினேஷனாம்... ஆயிர ரூபா எடுத்துக்கிட்டு வரச்சொல்லியிருக்கா பொண்டாட்டி...
**
வணக்கம். முக்கிய செய்திகள்.
சென்னை அண்ணாசாலையிலுள்ள ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க ட்ரெயிலர் லாரியில் வந்த கொள்ளையர்களை மக்கள் துரத்திச்சென்று பிடித்தனர்....

**
என்னங்க இது அநியாயமா இருக்குது... ஒரு ஆம்பிளை கொலுசு போட்டுக்கிட்டுக் கூச்சமேயில்லாம நடந்து போறாரு....
அடப்போய்யா... அவரு ஐநூறு ஆயிரத்தையெல்லாம் சில்லறையா மாத்தி பேண்ட் பாக்கெட் ஃபுல்லா காயினா வச்சுருக்காரு.... நடந்து போகும் போது அதுதான் ஜல்..ஜல்.ஜல்ன்னு ரிதமிக்காச் சத்தம் கேட்குது...
பின் குறிப்பு: பழைய ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை என்ன செய்யவேண்டும் என்று தெரிந்திருந்தாலும் ஒரு ஃபன்னுக்காக எழுதிப்பார்த்தேன்.

Friday, August 19, 2016

பொண்டாட்டிக்கு ப்ரூஃப்

"என் பொண்டாட்டி பேர்லதான் வண்டி எடுக்கிறேன்."
"பேரு சார்?"
"சங்கீதா"
"ப்ரூஃப் எதுவும் இருக்கா சார்?"
"எதுக்கு?"
"அவங்க உங்க வொய்ஃபுங்கிறத்துக்கு"
"அப்பா அம்மா பேர் சொல்றாமாதிரி நல்லா வளர்ந்த ரெண்டு பசங்க இருக்கு. கூட்டிக்கிட்டு வரட்டா?"
",,,"

Monday, October 26, 2015

கொ.கு.அ.கூ.வே‬

ஒரு பரம தரித்ரன் வீட்டுக்கு ஒருநாள் திருடன் வந்துட்டானாம். பாதம் தரையில பட்டும் படாமலும் மொதக்கட்டு இரண்டாம் கட்டைத்தாண்டி பதமா ரேழிக்குள்ள நுழைஞ்சுட்டான். அதான் தரித்ரன் வீடாச்சே.... சுத்தமா துடைச்சுக்கிடக்கு... ஒண்ணுமில்லே... வீட்டுக்கு உடமைக்காரி ரேழில படுத்துண்டிருக்கா... புருஷங்காரன் வெளியூர் போயிருக்கான்... அவளுக்கு திருடன் நுழைஞ்சது தெரிஞ்சுபோச்சு... வீட்ல ஒரு தம்படி கிடையாது... இப்படி வந்து மாட்டினுட்டானே திருடர் பிரகிருதின்னு..... அவனுக்காகப் பரிதாபப்பட்டாளாம்....
அவனும் கொல்லையோட வாசல் அலைஞ்சுப் பார்த்துப்பிட்டு... என்னடா இது ஒண்ணுமே தேரலை...விடியாமூஞ்சி வீட்டுக்குள்ள வந்து மாட்டினுட்டோமே... இவ்ளோ தூரம் வந்துட்டோம்... ஒண்ணுமேயில்லாம வீட்டுக்குப் போறது செய்யற தொழிலுக்கு இழுக்காச்சேன்னு...ரெண்டு மூணு ஜாமமா தயங்கித் தயங்கி வீட்டுக்குள்ளேயே சுத்தறான்...கால் ஓஞ்சுபோச்சு... ஏதும் ஆம்படலை.... கடைசியா சமையக்கட்டுல ஒரு ஓரமா ஈர உமி கிடந்ததை பார்த்துப்புட்டான்....சரி... வந்தத்தத்துக்கு உமியை அள்ளிண்டு போய்டுவோம்னு.. ஹால் மித்தத்துல நிலா பிரகாசமாத் தெரிஞ்சுதாம்.. அதனால அந்த வெளிச்சத்துல இடுப்புல கட்டிண்டிருந்த வேஷ்டியை அவுத்து கீழே விரிச்சுட்டு.. உமியை அள்ள உள்ள போனானாம்....
அவன் சமையக்கட்டுக்குப் போனபோது... ஹால்ல முழிச்சுண்டே படுத்துண்டு இருந்தவ... அந்த வேஷ்டியை சுருட்டிண்டு வாசல் ரூமுக்குள்ள போய் கதவைச் சாத்திண்டாளாம்... இடுப்புல வஸ்திரமில்லை... ரெண்டு கை நிறைய உமியை அள்ளிண்டு.... இன்னும் ரெண்டு கையில்லையே.. இந்த ஐஸ்வர்யத்தை அள்ளிண்டு போகன்னு....வந்து பார்க்கிறான்.. ஹால் தரையிலே விரிச்சிருந்த வேஷ்டியைக் காணலை... இது ஏதுடா வம்பாப் போச்சு... கௌபீனம் கூட இல்லாம வந்துட்டுமே...வேஷ்டியையும் காணலையே.. இப்ப என்னடா பண்றதுன்னு... இப்டியே வீதியிலே போனா ஊர்ல யாரெல்லாம் பயப்படுவாளோன்னு... வெளிறிப்போயி சுத்திமுத்தி தேடறான்...
அப்போ வாசல் ரூம்லேர்ந்து “ஐயோ.. திருடன்..திருடன்....”ன்னு ஜன்னல்ல நின்னுண்டு சத்தம் போட்டாளாம் அந்த வீட்டுக்காரி... கௌபீனம் இல்லைன்னாலும் பரவாயில்லைன்னு வாசல் தாண்டி அந்த ஜன்னல் கிட்டே ஓடி வந்து அந்த திருடன் ஆங்காரமா..... “அடியே.... நீ கொள்ளைக் குடுத்த அழகுக்கு கூப்பாடு வேறயோடி.....”ன்னு கேட்டுப்புட்டு அப்படியே ஓடிப்போயிட்டானாம்...
பி.கு: சே.அ.தீக்ஷிதர்வாள் பாகவத சப்தாகத்தில் சொன்ன ஜோக். லோக க்ஷேமார்த்தம் எழுதிப்பார்த்தேன். 
smile emoticon

Saturday, May 9, 2015

மிஸஸ் ஜோஷி

"தோ பார்றா... நானு உன்ன மாதிரி அறிவுக்கொழுந்து கிடியாது... மூளை புடைக்கிற மாதிரி புத்திஜீவித்தனமான சோக்குகீக்கெல்லாம் பண்ணாத... அப்புறம் ’நீ ஏன்டா சிரிக்கலை... நீ ஏன்டா சிரிக்கலை’ன்னு நாள்பூரா முதுகுல ரத்தம் வர பிராண்டக்கூடாது.. கேட்டியா...”

“ஹக்காங்..... ரொம்பதான் சிலுத்துக்கிறியே.. சொல்றேன்.. புர்தா பாரேன்....”

“ம்... சொல்லித் தொலை....”

“ஒரு நாளு மிஸஸ் ஜோஷிக்கு ஒரு ஃபோன்... ஹலோ.. மிஸஸ் ஜோஷி இருக்காங்களா? ம்... மிஸஸ் ஜோஷிதான் பேசறேன்....என்ன வேணும்னு அப்டீன்னாங்க....”

“போச்சுடா.. இது க்ராஸ் டாக் மொக்கையா?”

“இருடா.... பல்பு வாங்காதே... பொறுமையாக் கேளு.. மேடம்.. நானு டாக்டர் காந்தன் மெட்ரோ லேபாரேட்டரிலேர்ந்து பேசறேன்னுதும்... மிஸஸ் ஜோஷிக்கு கையும் ஓடலை.. காலும் ஓடலை...”

“காலு ஓடும். கை எங்கியாவது ஓடுமாடா?”

“இப்ப நீ வாயைப் பொத்தலைன்னா என் கை உன் கன்னத்துல ஓடும்.... என்னாச்சு என்னாச்சு...ன்னு வார்த்தைக்கு வார்த்தை எக்கோ போட்டுக் கேட்டாங்க மிஸஸ் ஜோஷி..... அதுக்கு லாப் டாக்டரு... போன வாரத்துல உங்க டாக்டர் மிஸ்டர் ஜோஷியோட சாம்பிளை பயாப்ஸிக்கு கொடுத்தாரு... அதே டயத்துல இன்னொரு ஜோஷியோட சாம்பிளும் பயாப்ஸிக்கு லேப்புக்கு வந்திச்சு.. எப்படியோ சாத்தான் க்ருபையால ரெண்டு சாம்பிளும் கலந்துடிச்சி.. இப்ப யாரோட ரிசல்ட் யாரோடதுன்னு எங்களுக்கே விளங்கலை.. ஆனாலும் ரெண்டு ரிசல்ட்டுமே சொல்லிக்கும்படியா இல்லை... ஒன்னுக்கு அல்ஸீமர். இன்னொன்னுக்கு ஹெச்ஐவி பாஸிட்டிவ்.”

”மணாளனே மங்கையின் பாக்கியம்.... மேலே சொல்லு....”

“உடனே மிஸஸ் ஜோஷி.... அச்சச்சோ டாக்டர்.. எம்புருஷனுக்கு திரும்பவும் சாம்பிள் எடுங்க.. டெஸ்ட் பண்ணிப்பார்த்துடுங்க...அப்படீன்னு துடிச்சுட்டாங்க... லேப் ஆள் ரொம்ப பொறுமையா சொன்னான்.. பதறாதீங்க மேடம்... இது ரொம்ப காஸ்ட்லியான டெஸ்ட். இன்ஷூரன்ஸ் ஆசாமிங்க இன்னொரு தபா இதுக்கே பணம் தரமாட்டாங்க...”

“புருஷனை அடிச்சுத் துரத்திட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ..ன்னு லாப் ஆசாமி ஆசை காட்டினானா?”

“டேய் அது ஜோக்காடா.. கிராதகா... காலை காட்சி மலையாள படம்டா... முடிச்சப்புறம் பேசுடா... மிஸஸ் ஜோஷி... லாப் டாக்டர்கிட்டே இப்ப என்ன பண்ணலாம்னு யோசனை கேட்டாங்க.... உடனே லேப் டாக்டர்.. மேடம் மேடம்... இன்ஷூரன்ஸ் ஹெல்ப் டெஸ்க்ல கேட்டேன் அவங்க ஒரு ஐடியா கொடுத்துருக்காங்க... செய்யறதும் சுலபம். பைசாவும் பெரிசா செலவில்லை...”

“உங்க கல்யாண புடவை எதுன்னு கேளுங்க.. தெரியலைன்னா உங்க புருஷனுக்கு அல்ஸீமர்... டிவோர்ஸ் பண்ணிடுங்க... இதானே ஜோக்கு.... போடாங்....”

”நாக்கை மடிக்காதடா பேக்கு... அப்படிப் பார்த்தா உலகத்துல 99 பர்செண்ட ஹஸ்பெண்ட்ஸுக்கு அல்ஸீமர்தான்.. டிவோர்ஸ்தான்.... ஹெல்ப் டெஸ்க்ல சொன்னாங்களாம்.... புருஷனை வண்டியில ஏத்திக்கிட்டு கண்காணாத இடத்துல கொண்டு போய் இறக்கிட்டு திரும்பிப் பார்க்காம வீட்டுக்கு வந்துடணுமாம்....”

“அப்ப நான் சொன்னதுதானே... புதுசா கல்யா.....”

“டேய்.... குரவளையை கடிச்சுருவேன்.. வெறியேத்தாதே.... அவங்க சொன்னதை அப்படியே அடுத்த வரில சொல்றேன் கேட்டுக்கோ...

மேடம் நீங்க வீட்டுக்கு வந்தப்புறம்.... எங்கியோ கொண்டுபோய் இறக்கி விட்ட புருஷன் அட்ரெஸ் மாறாம வீடு தேடி கரெக்டா வந்து கதவைத் தட்டினா.... தயவுசெய்து கிட்ட சேர்த்துக்காதீங்க....அது ஆபத்து... அப்டீன்னு சொன்னாங்களாம்..”

”புரிஞ்சுதுன்னு சொல்லிட்டு படார்னு சிரிச்சுடறேன்.. இல்லைன்னா நீ திரும்பவும் இதோ ஜோக்கை சொல்லிப் படுத்துவே... ஹி.ஹி.ஹி.ஹி... ஹாஸ்யம் பரம ஔஷதம்....”

Wednesday, September 17, 2014

மல்லிகை இளவரசன்

ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தானாம். அவன் சிரிச்சா எட்டூருக்கு மல்லியப்பூ வாசனை வீசுமாம். ஆனா வலிய சிரிக்க வைச்சா அந்த மாதிரி மணம் வராது. அவனா மெய்மறந்து ரசிச்சு சிரிச்சாக்க வாசனை மூக்கைத் துளைக்குமாம். அப்படியிருக்கும் போது அவன் கப்பம் கட்டிக்கிட்டிருக்கிற ராஜாவுக்கு இந்த விஷயம் காதுக்கு எட்டிச்சாம். “யாரங்கே! போய் அவனை இங்கே அழைத்து வாருங்கள்...” என்று மீசை முறுக்கிக்கொண்டே வீரர்களைப் பார்த்துக் கட்டளையிட்டானாம்.

ரெண்டு பேர் வேலேந்திய கையோட அந்த ம.இ கிட்டே போய் “ராஜா கூட்டியாறச் சொன்னாங்க... வாங்க...”ன்னு அழைச்சிக்கிட்டுப் போய் தர்பார்ல நிறுத்தினாங்களாம். சக்கரவர்த்தி “ஏம்ப்பா... நீ சிரிச்சா மல்லியப்பூ வாசனை வீசுமாமே.. ஜனங்க பேசிக்கிறாங்க.. இப்ப சிரி...”ன்னு கேட்டானாம். ”பஹ்பஹ்..” சிரிக்கிறான் ம.இ வாசனை வரலை. கிச்சுக்கிச்சு மூட்டிப் பார்த்தாங்க. சிரிக்கிறான். கொஞ்சகூட மணம் வீசலை. ராஜாவுக்குப் பயங்கர கோவம் வந்திருச்சு. “டேய்.. இவன் என்னை அவமானப் படுத்தறான். நா சிரிக்கச் சொன்னா வாசனை வரலை..இவனைத் தூக்கி ஜெயில்ல போடுங்கடா..”ன்னு ஆர்டர் பண்ணினான். தரதரன்னு இழுத்துக்கிட்டுப் போய் ஜெயில்ல போட்டாங்க.

இந்த ம.இ இருந்த ஜெயில் அறையோட ஜன்னல் வழியா பார்த்தா ஒரு முடவனோட குடிசை இருந்ததாம். ஜன்னல் வழியா தெனமும் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தப்போ ஒரு விஷயம் கவனிச்சானாம். ராத்திரியானாக்க அந்த தேசத்து ராணி முடவனோட குடிசைக்கு வந்து அவனோட குஜால இருக்கிறத பார்த்தானாம். அப்படி வர்ற போது ராஜ போஜனம் எடுத்துக்கிட்டு வந்து அவ கையாலயே அவனுக்குப் பரிமாறுவாளாம். அவனுக்கு அப்படி ஒரு கொடுப்பினை.

ஒரு நாளு ராணி வந்து அவனுக்கு சோறு போட ரொம்ப லேட்டாயிடிச்சாம். அவனுக்கு பிபி ஏறிப்போயி கண்டமேனிக்கு அடிச்சு வெளுத்து வாங்கிட்டானாம். எல்லாத்தையும் சகிச்சுக்கிட்ட ராணி வாயைத் தொறக்காம அவனுக்கு சோறு போட்டா. அவன் சாப்பிட்டு முடிச்சவுடனே “ராணி.. எம்மேல கோவமா.. ஸாரி”ன்னு கையக் காலப் பிடிச்சிக்கிட்டுக் கெஞ்சினானாம். அதுக்கு அந்த ராணி சொன்னாளாம் “ச்சே.,.ச்சே., உங்க மேலே கோவமெல்லாமில்லை. நீங்க அடிச்சபோதெல்லாம் நான் ஈரேழு பதினாலு லோகத்துக்கும் போய்ட்டு வந்தேன்”ன்னு ஒண்ணுமே நடக்காத மாதிரி சகஜமாச் சொன்னாளாம்.

அப்போ அந்தக் குடிசைக்குப் பக்கத்துல மழைக்கு ஒதுங்கி ஒரு சலவைத் தொழிலாளி உட்கார்ந்திருந்தானாம். வெடவெடன்னு நடுங்கிக்கிட்டு சோகத்துல இருந்தான். குடிசை உள்ளாற ராணி இருக்கான்னு அவனுக்குத் தெரியாது. ”ஈரேழு பதினாலு லோகமும் போய்ட்டு வந்தேன்னு” அந்த லேடி சொன்னது இவனுக்கு காதுல விழுந்தது. உடனே பாய்ஞ்சு உள்ள நுழைஞ்சு “ஏம்மா.. ஈரேழு பதினாலு லோகமும் போனேன்னு சொன்னியே... எங்கயாவது தொலைஞ்சு போன என்னோட கழுதையைப் பார்த்தியா”ன்னு கேட்டானாம்.

இதைக் கேட்டுக்கிட்டு இருந்த ம.இக்கு சிரிப்புப் பொத்துக்கிட்டு வந்திச்சாம். ஜெயிலே அதிரும்படி சிரிச்சானாம். அப்ப கிளம்பிச்சாம் மயக்கும் மல்லிகை வாசனை. இது கற்கல்ல நடந்துச்சு.. ஜெயிலரெல்லாம் ஓடிப்போய் ராஜாவை எழுப்பி “ராஜாதி ராஜனே... இப்ப அவன் சிரிக்கிறான். வாசனை வருது பாருங்க.. ஆளை மயக்குது...”ன்னு அழைச்சுக்கிட்டு ஜெயிலுக்கு ஓடி வந்தானுங்க. அந்த ராஜாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியலை..

ஓடி வந்தான். “ஏம்ப்பா.. நான் கேட்டப்ப நீ சிரிச்ச.. அப்பெல்லாம் வாசனை வரலை. இப்ப எப்படி?”ன்னு கேட்டான். ம.இ காரணத்தைச் சொன்னான்.

இவனை ரிலீஸ் பண்ணிட்டு அந்த ராணியைத் தூக்கிச் சுண்ணாம்புக் காளவாய்ல போட்டானாம் அந்த சக்கரவர்த்தி.

***
A.K. Ramanujan தொகுத்த Folktales from India (பெங்குயின்) படித்துக்கொண்டிருக்கிறேன். இருபத்தியிரண்டு இந்திய மொழிகளில், வட்டார வழக்கில், கர்ணபரம்பரையாகச் சொல்லப்படும் நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். மூலம் கெடாமல் என்னளவில் ஒரு கதையைத் தமிழ்ப்படுத்தினேன். ஏகேயாரையெல்லாம் என்னைப் போன்ற சிறியோனுக்கு அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீரெங்கம் எஸ்ஸார்! வாழ்க நீ எம்மான்!

Wednesday, September 18, 2013

24 வயசு 5 மாசம்

சத்யாவிற்கு அசாத்திய டைமிங் சென்ஸ். வாயாலேயே கிச்சுகிச்சு மூட்டுவதில் கில்லாடி.

காரில் வரும் போது காதல் ஜோடிகள், கல்யாணம், கத்திரிக்கா என்று பல திசைகளில் பேச்சு போனது.

பேசினதுல ஒரு சின்ன க்ளிப்.

“டெண்டுல்கரை விட அஞ்சலி அஞ்சு வருஷம் பெரியவளாம்...”

“அதனால என்ன... அப்படிதான் இப்பெல்லாம் கன்னாபின்னான்னு இருக்காங்க...ட்ரிங்கிங் டுகெதர்...லிவிங் டுகதெர்... டையிங் டுகதர்னு.... ”

”திருநீர்மலைல அம்மா பொண்ணு ரெண்டு பேருமே காதலன் கூட ஓடி வந்து கல்யாணம் பண்ணிகிட்டாங்களாம். தாலிகட்டி படி இறங்கும் போது மாலையும் கழுத்துமா ஜோடியாப் பார்த்துக்கிட்டாங்கன்னு போன வருஷமோ என்னமோ தந்தியில படிச்சேன்.”

“நல்லவேளை. இதே ரீதியில பேத்தியும் ஓடி வந்து க்யூல நின்னு பண்ணிக்காம இருந்துதே. நீர்வண்ணப்பெருமாள் பெருமாள் பொட்டிய கட்டிண்டு இடத்தைக் காலி பண்ணிண்டு வேற ஊருக்குப் போய்டுவார்...”

“ஏன். கமல் கூட கொழந்தை பொறந்தத்துக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணிண்டார்..”

”அதெல்லாம் எதுக்கு? எனக்குத் தெரிஞ்ச இடத்துல நடந்த கூத்தை சொல்லட்டா?”

“ம்.”

“வீட்டுக்கு ஒரே பையன். லவ் பண்ணினப் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அழிச்சாட்டியமா ஒத்தைக் கால்ல நின்னு பண்ணிண்டான்”

“சரி..”

“தாலி கட்டின நாள்லேர்ந்து எண்ணி சரியா அஞ்சாவது மாசம் குழந்தை பொறந்தது..”

“ஐயய்யோ!!”

“வீட்ல எல்லோரும் அதிர்ந்து போய்.. ஏண்டா? ஊர்ல சிரிக்கமாட்டாங்களா? என்னாடாச்சுன்னு கேட்டாங்க..”

“அதுக்கு என்ன சொன்னான்?”

“நாந்தான் முன்னாடியே உங்ககிட்டல்லாம் சொன்னேனே.. அப்டீன்னு சதாய்க்கிறான்.”

“என்னடா சொன்னேன்னு அவனோட அம்மா அப்பா அழாக்குறையா கேட்டாங்க.”

“அவன் சொல்றான். நான் அப்பவே சொன்னேன் பொண்ணுக்கு 24 வயசு 5 மாசம்னு”.

Thursday, September 12, 2013

கொத்தவரங்காய் நறுக்குவது எப்படி? - ஒரு ரிப்போர்ட்

கொத்தவரங்காய் நறுக்குவது அப்படியொன்றும் லேசுப்பட்ட காரியம் இல்லை. பளபளக்கும் ப்ரஸ்டீஜ் ட்ரு-ப்ளேடு கத்தியும் மெல்மாவேர் தட்டையும் எடுத்துக்கொண்டு சப்பரக்கா என்று நடு கூடத்தில் உட்கார்ந்து கொண்டேன். விஜய் டிவியில் “நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி”யை சூப்பர் சிங்கி யாரோ சரியான கட்டையில் எடுக்காமல் பாடினார்கள். டார்ட் போல கத்தியை டிவியை நோக்கி வீசலாமா என்று எண்ணினேன். பொறுப்பான காரியத்தை கையிலெடுத்ததால் அதில் மனத்தை ஒருமுகப்படுத்திச் செலுத்தினேன்.

ஒத்த நீளமுடைய சரிசமமான ரெண்டு கொத்தவரங்காயை ( க்ரூப் ஃபோட்டோவுக்கு முன்னும் பின்னுமாக ஆட்களை நிறுத்துவார்களே... அது போல) நுணி ஆய்ந்து எடுத்துக்கொண்டேன். சீரிய இடைவெளி கொடுத்து பொடிப்பொடியாய் ப்ரஸ்டீஜ்ஜால் நறுக்க ஆரம்பித்தேன். இப்படிச் செய்வதால் நம் ப்ரஸ்டீஜ் என்னாவது என்று வீராப்பாய் வெட்டி நியாயம் பேசுவோர் மறுநாள் கால் வயிற்றுக்குக் கஞ்சிக்கு சிங்கியடிக்க வேண்டுமே என்று யோசித்தால் தாராளமாக வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிடுவார்கள்.

ரெண்டுரெண்டாய் நறுக்குவது இடுப்பொடியும் காரியமாக இருந்தது. கத்தியால் ஒரு கிலோ கொத்தவரங்காய் நறுக்குவது ஆத்து வாசல்ல காத்திருந்து யூயெஸ்ஸுக்கு பஸ் பிடித்து தேசாந்திரம் போவது போல என்று என் குருவி மூளைக்கு உரைத்தது. குடுகுடுவென்று சமையக்கட்டுக்கு ஓடிப்போய் இரும்பு அருவாமனையை எடுத்துவந்து மடக்கின காலுக்கு அடியில் கொடுத்து செருகிப் பிடித்துக்கொண்டேன். இரண்டுக்குப் பதிலாக நான்கு ஆறு எட்டு என்று ஈவன் நம்பரில் ஈவனாகக் கையிலெடுத்து அடிக்கிக்கொண்டு சரக்...சரக்.. என்று நறுக்க ஆரம்பித்ததில் நிமிஷ நேரத்தில் அரை வானாய் நறுக்கிப்போட்டுவிட்டேன். ஆச்சரியத்தில் இப்போதே கொத்தரங்காய் கூட்டு பண்ணின சந்தோஷம்.

இப்படி நறுக்குகையில் கைக்கு அடங்கிய கொத்தவரங்காய் கொத்தின் இடையில் முத்தின காய் ஒன்றிரண்டு இருந்தால் அவ்வளவு சௌகரியமாக நறுக்கமுடியாது. இளசுகளுக்கு இடையே பூந்து கலாசும் பெருசுகள் போல அந்த முத்திய கொத்தவரைகள். அடுக்கும் போதே கைக்குப் பதமாகவும் இளசாகவும் இருந்தவைகளை ஒதுக்கி டீம் பண்ணிக்கொண்டு நறுக்கினால் காரியம் சுலபத்தில் முடியும். முத்தின காய்களை களைந்து ஓரத்தில் எடுத்துவைத்து இராத்திரி பிசாசாய் சென்னை வீதிகளில் அலையும் பசுமாட்டிற்குக் கொடுத்தால் போற வழிக்குப் புண்ணியமாய் போகும்.

கறிகாய் நறுக்குவது சுலபமான வேலை என்று அலக்ஷியம் செய்பவர்களுக்கு நீதிபோதனை செய்வதற்காக சுயமாக சோதித்துப் பார்த்து இங்கு இவ்வியாசத்தை எழுதினேன். மாமியாரைச் சபித்துக்கொண்டு மாமியாரின் விரலாகக் கொத்தவரங்காயை நறுக்குவது ”அவர்களு”க்கு யானை பலத்தைத் தந்து கண்ணிமைக்கும் நேரத்தில் காரியம் முடியும் வாய்ப்பிருக்கிறது. நம்மாட்களுக்கு அந்த யுக்தி ஒத்துவராது. தினப்படி இந்தக் கார்யத்தில் என்னை ஈடுபடுத்திக்கொண்டல் இன்னும் பல தத்வார்த்தமான விஷயங்கள் புலப்படலாம். அர்த்தபுஷ்டியான பல ஐடியாக்களையும் வழங்கலாம்.

ம்.. முக்கியமாக ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். கூடத்தில் உட்கார்ந்து காய் நறுக்கின இடத்தைச் சுத்தமாகப் பெருக்கி டஸ்ட் பின்னில் போடவேண்டும். நம்மாட்கள் வீட்டில் எவ்ளோ காரியம் செய்தாலும் இதுபோன்ற நகாசு வேலைகள் செய்யத் தெரியாமல் “அவர்கள்” வாயில் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறோம்.

கற்றுக்கொண்டவர்கள்.. நாளை வீட்டில் காய் நறுக்கிவிட்டு பதிலுரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கு அடாவடியாக கமெண்ட் இடுவோர் அவர்கள் வீட்டில் ஒட்ட நறுக்கப்படுவார்கள். நன்றி!!

Tuesday, September 10, 2013

திருக்கைலாய "லைக்" அரசியல்


கயிலாயம்.காம்மின் ரிடிசையனிங் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் நந்திதேவர். லேப்டாப்பில் டிசயன்களைப் பார்த்துக்கொண்டிருந்தவரை துளிக்கூடச் சட்டை செய்யாமல் உள்ளே புகுந்தார் நாரத். தோளில் தம்புராவிற்கு பதிலாக எலெக்ட்ரிக் கிடார் சாய்ந்திருந்தது. நாராயண என்று ராகமாக இழுத்துச் சொல்லாமல் “நாராயண்..நாராயண்...” என்று வெட்டிவெட்டி இழுத்த ராப் ம்யூசிக்கோடு கயிலைநாதனைக் காண உள்ளே நுழைந்தார்.

“என்ன நாரதரே! ஃபார்முலா ஒன் மைக்கேல் ஷூமாக்கர் போல ஸ்பீடாக உள்ளே செல்கிறீர்கள்?”

“மிஸஸ்.உமையாளும் அவரது ஹஸ்பெண்ட் சர்வேஸ்வரனும் உள்ளே இருக்கிறார்கள் தானே!”

“இருக்கிறார்கள். கணேஷ் சதுர்த்தியில் என்ன கலகம் புரிய வந்திருக்கிறீர்கள்?”

“கயிலாய வெப் டிசையன் ஒர்க் தலைக்கு மேலே கிடக்கும் போது என் காலை ஏன் வாருகிறீர்கள் ஐயா. கிடாரிஸ்ட் என்றால் இளப்பமா...” என்று புலம்பும் சாரு போல பேசிவிட்டு....”சிவகணங்களுக்கு எதாவது வெட்டிமுறிக்கும் வேலை தாரும். அல்லது உங்களது மத்தளத்தை எடுத்து தையத்தக்கா என்று எதாவது வாசியும். இவ்வளவு வேலையை வைத்துக்கொண்டு கார்ப்பரேட் கம்பெனி விபிமாதிரி ஹாயாக உட்கார்ந்து வம்பு பேசிக்கொண்டிருக்கிறீரே...அந்த ஈஸ்வரனுக்கே வெளிச்சமய்யா,,,” என்று கடித்தார் நாரதர்.

“ம்ஹும்... சரி...சரி.. அந்த சுடலையன் குடும்பத்துக்கு ஆச்சு. உங்களுக்காச்சு... எனக்கென்ன.. வந்தது.. இந்த ஜாவாஸ்க்ரிப்ட் செரியில்லை. சியெஸ்யெஸ் எழுதவே தெரியலை.. நான் அதைப் பார்க்கிறேன்..”

திருவிளையாடல் படத்தில் கேவிமஹாதேவன் கொடுத்த “ட்ர்ர்ர்ரெய்ங்....” என்ற பின்னணி ஒலிக்க உள்ளே நுழைந்தார் நாரதர். சிவபெருமான் லாப்டாப்பில் மும்முரமாக கூகிள் சர்ச் செய்துகொண்டிருந்தார். உமையம்மை ஐஃபோனில் சீர்காழி கோவிந்தராஜனின் “காக்கும் கடவுள் கணேசனை நினை..”யை ஓடவிட்டு பிள்ளையின் பிரதாபங்களை எண்ணியெண்ணி ரசித்துக்கொண்டிருந்தார்.

”ம்..கும்...ம்..கும்..” என்று இருமுறை முக்கி முனகி பார்த்துவிட்டு நாரதர் “நாராயண...நாராயண.... உலகைக் காக்கும் பரம்பொருளாகிய நீங்களிருவருமே கேட்ஜெட்டுகளில் மூழ்கிவிட்டீர்கள். இனி யாரிந்த பூலோகத்தைக் காத்து ரட்சிக்கப்போகிறார்களோ? திருமால் கூட சங்குசக்கரம் ஏந்தவேண்டிய இருகரங்களில் ஐஃபோன் ஒரு கையிலும் லாப்டாப் மற்றொருகையிலும் ஏந்தி சதாசர்வகாலமும் சோஷியல் நெட்வொர்க்கில் காலத்தைப் போக்குகிறார்.” என்று சவுண்ட் விட்டார்.

“நாரதா! என்ன விஷயமா வந்திருக்கிறாய். ஆக்ரோஷமான ஆகாய கங்கையை என் சிரசில் வாங்குவதுமாதிரியான ரவிவர்மா பெயிண்டிங்கை கூகிளில் தேடிக்கொண்டிருந்தேன். இன்றைக்கு கணேசனுக்கு பிறந்தநாள். பழமெதுவும் கொண்டு வந்திருக்கிறாயா? நீயாகவே உன் நாடகத்தைத் துவங்கு. உன்னை கேட்க யாரிருக்கிறார்கள்...”

“நாரதா ஞானப்பழம் சூனியக்கிழம் என்று எதாவது கர்நாடகத்தனமான போட்டிகள் எதுவும் வைத்து என் பிள்ளைகளை வெறுப்பேற்றாதே. லேட்டஸ்ட் டெக்னாலஜிக்கல் போட்டி ஏதாவது வை. எனக்கும் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.”

“அகிலமாளும் ஈஸ்வரியே! சிவபதியடைந்து கைலாயத்தில் குடியேறியிருக்கும் சீர்காழி கோவிந்தராஜரை லைவ்வாகவே உங்கள் முன் பாட வைக்கலாமே. இன்னும் ஏன் ரெக்கார்டிங்கில் 128 bitrate mp3யில் ஐஃபோனில் கேட்கிறீர்கள்”

“உன்னைக் கர்நாடகம் என்று கேட்டதற்கு என்னிடம் பாய்கிறாயா? நன்றாக இருக்கிறது”

“இல்லை தாயே! உண்மையைச் சொன்னேன். அது கிடக்கட்டும். எங்கே தங்களது தவப்புதல்வர்கள்.”

“அதானே பார்த்தேன். கலகமில்லாமல் வருவாயா? என்ன விஷயம்.”

“அம்மையே! அனைவரும் ஃபேஸ்புக்கில் நித்யவாசம் செய்கிறோம். கயிலாயம்.காம் வெப்சைட்டாகவும் நிறைய ஹிட்ஸ் பெறுகிறது. ”பூலோகத்தில் தங்களுக்குக் கிட்டாத நிம்மதிக்கு இன்றே எமலோக யாத்திரை மேற்கொள்ளுங்கள்” என்று ”Early bird" ஆஃபருடன் எமதர்மராஜன் பாசக்கயிற்றை தலைக்கு மேலே சுற்றும் விளம்பரம் வேறு. ஃபேஸ்புக்கிலும் கயிலாய பேஜ் லைக்ஸுக்கு கணபதி புண்ணியத்தில் குறைவில்லை. முறையே கௌமாரம்.காம் மற்றும் காணாபத்யம்.காம்க்குக் கூட கூட்டம் அம்முகிறது. ஏன் எல்.ஆர்.ஈஸ்வரியின் மாரியம்மா பாடல்களை காதைச் செவிடாக்கும் டெஸிபலில் அலறவிட்டிருக்கும் தங்களது சாக்தம்.காம் கூட பரவாயில்லை என்ற அளவிற்கு போகிறது.”

“எதற்கு இந்த கூகிள் அனாலிடிக்ஸ் போல ஸ்டாட்டிஸ்டிக்ஸெல்லாம் கூறுகிறாய். உனக்கு என்ன வேண்டும்.”

”இப்படி வெப்சைட் காலத்தில் உங்கள் ஃபேமிலி இருந்தாலும், ஃபேஸ்புக்கில் அதிகம் கோலோச்சுவது யார் என்று என்றைக்காவது சிந்தித்திருக்கீர்களா?”

“ஓ! லேட்டஸட்டாக போட்டி வை என்று நான் கேட்டதற்கு ஃபேஸ்புக்கோடு வந்துவிட்டாயா? கணபதிக்கு ஹிட்ஸ் அதிகமா அல்லது ஆறுமுகனுக்கு அதிகமா என்று போட்டி வைக்கப்போகிறாயா?”

”உங்களுடனேயே பேசி எனக்கு அலுத்துவிடுகிறது அம்மையே. புத்திரர்கள் இருவரையும் அழையுங்களேன். பலப்பரிட்சை செய்து பார்த்துவிடுவோம்.”

மறுபடியும் முன்னால் சொன்னது போல திருவிளையாடல் கேவிமஹாதேவனின் “ட்ர்ர்ர்ர்ர்ரெய்ங்..” பின்னணி ஒலி இசைக்கிறது.

மூஞ்சுருவை ஸ்கேட்டிங் போர்டாக்கி கையில் கொழுக்கட்டையுடன் கணபதி உருட்டிக்கொண்டு முன்னால் வருகிறார். சைக்கிளை ஹாண்டில்பாரைப் பிடித்து தள்ளிக்கொண்டு வருவது போல பின்னால் முருகப்பெருமான் மயிலின் கழுத்தைப் பிடித்துக்கொண்டு நடந்துவருகிறார்.

“மூத்தபிள்ளைதான் எப்பவும் முதலில் வரும் பிள்ளை...” என்று சொல்லிவிட்டு கனைக்கிறார் நாரதர்.

“பிரிவினை முயற்சியை ஆரம்பித்துவிட்டாயா?” என்று நாரதரிடம் சொல்லிவிட்டு.. “இங்கே இவ்வளவு களேபரம் நடக்கிறது. உமக்கு உம் பிரச்சனைதான் முக்கியம். அவளை நீங்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடியதை இப்போது பார்க்காவிட்டால் என்ன மோசமாகப் போகிறது. உம்.. இந்த நாரதனையும் நம் பசங்களையும் தான் பாருங்களேன். இந்த கூகிள் சர்வர்களுக்குள் ஒரு நாள் அக்னி தேவனை ஏவி விட்டு சுட்டுப் பொசுக்கிவிடுகிறேன் பாருங்கள்...அப்போதுதான் இவ்வுலகமும் எவ்வுலகமும் உய்யும்..” என்று கர்ஜித்தாள் உமையம்மை.

லாப்டாப்பை ஷட்டவுன் செய்துவிட்டு சிவனேன்னு நடக்கவிருக்கும் ரகளைகளைப் பார்க்க ஆரம்பித்தார். நாரதன் நீயா நானா கோபிநாத் போல கோட்டும் சூட்டும் அணிந்து போட்டி நடத்த தயாராக இருந்தார். காலில் ஷூ வேண்டாம் என்று தனது சௌகரியத்துக்காக மரத்தாலான பாதரட்சையே அணிந்திருந்தார். இந்தப் புது மோஸ்தர் கணபதிக்கும் முருகனுக்கும் ரொம்பவும் பிடித்திருந்தது. “அண்ணா! இனிமேல் தேவலோகத்தின் புது ஃபேஷன் டிசையனர் நாரதர் தான். இதுதான் லேட்டஸ்ட் ஹிட்டாகப்போகிறது” என்று முருகன் பிள்ளையாரின் காதைக் கடித்தான்.

”முருகா... கணபதி... உங்களிருவரின் முகப்புஸ்தக பக்கத்தில் எவ்வளவு லைக்ஸ் இருக்கிறது? முருகா நீ அதிகமா அல்லது விநாயகன் அதிகமா?”

“யார் அதிகமானல் என்ன? கௌமாரர்கள் என்னை தொடர்ந்து ஆதரிப்பார்கள். அவ்வைக் கிழவி “ஒன்று..இரண்டு..மூன்று...” என்று வரிசைப்படுத்தி என் புகழ் பாடி மகிழ்வாள்.” என்றான் முருகன்.

”எந்த பேஜிலும் என்னை முதலாகத் துதிபாடிவிட்டுதான் செயலெதுவும் துவங்குவார்கள். இந்தப் புள்ளிவிவரங்களை எடுத்தால் நான் நிச்சயம் முன்னணியில் இருப்பேன். இருந்தாலும் தம்பி முருகன் சொன்னது போல காணாபத்யக்காரர்கள் எனக்கு லைக்கிட்டு மகிழ்வார்கள்.”

“அடடா.. இருவருமே கான்செப்ட்டை புரிந்துகொள்ளவில்லை. உங்கள் இருவருக்கும் யாருக்கு லைக் அதிகமாக உள்ளதோ அவரே வெற்றிபெற்றவர்.”

“ஒரு சந்தேகம்” என்றான் கணபதி.

“கேள் அப்பனே!” என்றார் நாரதர்.

“ஔவைக்கிழவியை நாந்தான் சேரமானுக்கும் சுந்தரருக்கும் முன்னால் யானையேற்றி கைலாயத்திற்கு அழைத்துவந்தேன். எனக்கும் முருகனுக்கும் ம்யூச்சுவல் ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் அவள் இருக்கிறாள். அவளது லைக் இட்டால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?”

“நல்ல கேள்வி. ம்யூச்சுவல் ஃப்ரெண்ட்டாக இருப்போர் இருபக்கச் சண்டைக்கும் தூபம் போடுவார்கள். அவர்களைப் பொருத்தமட்டில் காரசாரமாக நடந்தால் அன்றைக்குப் பொழுது நன்றாக போகும். ஆதலால் ம்யூச்சுவல் ஃப்ரெண்ட்ஸ் லைக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது”

“எனக்கும் ஒரு சந்தேகம்” என்று இடிமுழங்கும் குரலில் கேட்டான் அழகன் முருகன்.

“ம்... சூடு பிடிக்கிறது. கேளப்பா...” என்றார் நாரதர்.

”இன்றைக்குதான் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து புதிதாக நண்ப பக்தராயிருப்பர் சிலர். அவர்கள் இடும் லைக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்வீர்களா?”

“ம்... சரிதான். அவர்களுக்கு புதிதாய் சேர்ந்ததின் கவர்ச்சி இருக்கும். அதுவும் கிடையாதுதான்...”

“மீண்டும் எனக்கொரு சந்தேகம். “ என்று கை தூக்கினான் கணேசன்.

மூஞ்சுரு கடிக்காத தூரத்தில் நின்றுகொண்டு “என்னப்பா...” என்று வினவினார் நாரதர்.

“லைக்கை வைத்து ஒருவரின் ப்ரபல்யத்தை அறிய முடியாது என்பது என் கருத்து. எவ்வளவுக்கெவ்வளவு ஷேர் அதிகமாக இருக்கிறதோ..அவ்வளவுக்கவ்வளவு அவர்களது புகழ் இப்புவியெங்கும் பரவியிருக்கிறது என்று அர்த்தம்...”

“இதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்...” என்று மறுத்தான் முருகன்.

“இன்றைக்கு கணேஷ் சதுர்த்தி. அண்ணனின் படங்களும் கதைகளும் நிறைய பகிரப்படும். சஷ்டியில் பார்த்தால் என்னுடையவை அதிகமாக ஷேர் செய்யப்பட்டு கம்ப்யூட்டர் திரைகளுக்கு தீபாராதனைக் காட்டுவார்கள். வீட்டிலேயே என் படம் பேக்கிரௌண்ட் இமேஜாக உள்ள லாப்டாப்பை கரகம் காவடி போல் எடுத்து ஆடியாடிக் கொண்டாடுவார்கள். இதெல்லாம் ஒத்துவராது.” என்று படபடத்தான் முருகன்.

”பிள்ளைகள் இரண்டும் அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. மீண்டும் நீர் லேப்டாப் திறந்து படம் தேட ஆரம்பித்துவிட்டீர். குடும்பம் உருப்பட்டார் போலத்தான்.” என்று கழுத்தை ஒடித்து தோளை உயர்த்தி இடித்துக்கொண்டாள் பார்வதி.

“முருகன் சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று அந்த மாயவனுக்கு லைக்கும் ஷேரும் மலைபோல் குவிந்தது. ஆயுத பூஜையில் மிஸஸ் பிரம்மா அதிகமாகத் தென்படுவார். இப்போது என்ன செய்யலாம்?” என்று கையிலிருந்த எலெக்ட்ரிக் கிடாரை தரையில் வைத்துவிட்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிவகணத்தின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு யோசிக்கலானார் மிஸ்டர். நாரதர்.

“நான் ஒரு யோசனை சொல்லட்டுமா? எதிரிகள் லைக்குகளை சேர்த்தால் யாருக்கும் அதிகமாக வருகிறதோ.. அவர்களே ஜெயித்தார் என்று முடிவெடு...” என்று நாட்டாமை கணக்காக சொல்லிவிட்டு பார்வதியை பெருமையாகப் பார்த்தார் சிவன். இருகையாலும் வயிற்றில் அடித்துக்கொண்டு பழிப்பு காண்பித்து திரும்பிக்கொண்டாள் பார்வதி.

“அட்டகாசமான யோசனை... நீங்களே ஐடியாஸ்வரன்...” என்று கிடாரில் ரெண்டு ஸ்ட்ரம்மிங் கொடுத்து பாராட்டினான் நாரதன்.

”ரொம்ப அழகாயிருக்கே.... கஜமுகாசுரன் கணபதிக்கு லைக் போடுவான். சூரபத்மன் முருகனுக்கு. இந்த ரெண்டு ஓட்டை வச்சுண்டு யார் பெரியவர்னு முடிவெடுத்துடுவேளா? சிவ..சிவா..” என்று தலையடித்துக்கொண்டாள் பார்வதி.

“ஆமாம். இதுவும் சரிதானே. ” என்று கிடார் வாசித்து பூரித்துப்போனான் நாரதன்.

“இது என்னடா கொடுமையா இருக்கே. ரெண்டு பேருக்கும் ஜால்ரா.. ச்சே...கிடார் போடறே...” என்று எக்கினார் சிவனார்.

”நான் இதுக்கொரு முடிவு சொல்றேன்.. கேட்டுக்கோங்கோ...”

சிவனார் புலித்தோலை ஒருதடவை அரையில் இறுக்கிக்கட்டிக்கொண்டார். நாரதர் முன்னால் வந்து நின்றார். முருகனும் கணபதியும் தோளில் கைபோட்டுக்கொண்டு தோழமையுடன் நின்றார்கள். பார்வதி அட்ரெஸ் பண்ணினாள்.

“ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் இருந்தாலும் இல்லாங்காட்டியும் நல்லதாக எது கண்ணில் பட்டாலும் லைக் போடுகிறவன் அன்பயாஸ்டு ஃபெல்லோ. அதுபோல தன் மூலமாக இதை பலருக்கும் சென்றடையட்டும் என்று ஷேர் செய்பவனும் அதே கேட்டகரியில் வருகிறான். விசேஷத்துக்கு விசேஷம் விழுந்து சேவிப்பவர்கள் எவராயினும் குறுகியகால புண்ணியத்திற்கு அடி போடுபவர்கள். அவர்களின் பூஜைகள்...லைக்குகளை லைட்டாக எடுத்துக்கொள்ளவேண்டும். நாட்டு நலனில் அக்கறை கொண்டு பகிரப்படும் ஸ்டேட்டஸ் எதுவாகிலும் முன்னுரிமை கொடுத்து லைக்க வேண்டும். வீட்டிற்காகவும் பதியப்படுபவைகளுக்கும் ஸ்பெஷல் லைக்கிங்ஸ் கொடுக்கலாம். கருத்துரைக்காமல் அறிவுசார் பதிவுகளை ரெண்டடி தள்ளி நின்று பார்த்து இடும் லைக்குகளை ஆயிரமாக எடுத்துக்கொளல் வேண்டும். மொக்கைப் பதிவுகளுக்கு தேடித்தேடி லைக்கிட்டு ஆதரவளிப்பவர்களுக்கு “காலை வணக்கம்” என்ற அவர்களது ஸ்டேட்டஸிற்கு லட்சோபலட்சம் லைக்குள் கொடுத்து உற்சாகமூட்டவேண்டும்...”

அம்மாவின் இந்த அறிவுரைகளைக் கேட்டு கணேசனும் முருகனும் நெளிந்தார்கள். சிவபெருமான் மீண்டும் லாப்டாப்பில் படம் தேடப் போய்விட்டார். (இப்பதிவுடன் அந்தப் படத்தை இணைத்துள்ளேன்.) நாரதன் கிடாரை துவம்சம் பண்ணி ஒலியெழுப்பி ஆரவாரித்தான். கடைசியில் கணேசனும் முருகனும் கோரஸாக பின்வருமாறு பேசினார்கள்.

“நாங்கள் இருவருமே சண்டை போட்டுக்கொள்ளவில்லை. இந்த லைக் அரசியலில் நாங்கள் உள்ளே நுழையமாட்டோம். அவரவர் கர்மவிதிப்படியே லைக்கும் ஷேரும் அனைவருக்கும் கிடைக்கிறது. எங்களை கும்பிடும் பக்தர்கள் அனைவரும் ஆர்.வி.எஸ்ஸின் இந்த போஸ்டிற்கு பெருவாரியான லைக்கும் மகத்தான எண்ணிக்கையில் ஷேரும் செய்து ஆதரவளித்தால் கைலாய ப்ரதர்ஸான எங்களின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்று ஆசிகூறுகிறோம்” என்று சொல்லிவிட்டு அப்பாவின் இந்த ஃபோட்டோவைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள்.

நாரதர், சிவன், பார்வதி மூவரும் கையில் கிடைத்த கேட்ஜெட்டை எடுத்து http://www.facebook.com/mannairvs என்ற பக்கத்தைத் திறந்துபார்த்து கல்லை எடுத்துக்கொண்டு அடிக்க பூலோகத்திற்கு ஒடிவந்தார்கள்.

Wednesday, July 31, 2013

காஃபியாயணம்

கம்ப்யூட்டர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கரண்ட் கம்பியைப் பிடித்தது போல கட்டுப்பாடின்றி கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது. வெடவெடத்த மணிக்கட்டை திருப்பிப் பார்த்தால் மணி ஆறைத் தொட்டு ஐந்து நிமிடமாயிருந்தது. காஃபியடிமைகளான நாங்கள் மந்திரித்து விட்டது போல எழுந்து அந்த ஈக்கள் அண்டாத உணவுக் கோட்டைக்குள் புகுந்தோம். அது ஒரு சுயசேவைப் பிரிவு கடை. நான் காசை நீட்டுவதற்கு சற்று முன்னர் விநியோகப் பலகை எட்டாமல் எக்கி டபரா செட்டுகளை எடுத்து தளும்பாதவாறு அடிமேல் அடியெடுத்து ஒரு மாது சென்றுகொண்டிருந்தார். கவிச்சக்கரவர்த்தி அயோத்தியின் மகளிரை வர்ணிப்பது போல அன்னம் அந்தப்பெண்ணின் நடையை ஒத்திருக்கலாம் என்று தோன்றுமளவுக்கு மெதுவாக நகர்ந்து தனது இணைபிரியா இணைக்கு காஃபியை சிந்தாமல் டேபிளில் சேர்த்துவிட்டு தானும் சிதறாமல் அமர்ந்து கொண்டது.

நாங்களும் சிங்க நடை (கந்தன் கருணையில் சிவாஜி இடுப்பில் ஒரு முழம் துண்டோடு வீரபாகுவாக நடந்து வருவதை நினைத்துப் பார்த்து சிரிக்காமலிருக்க உங்களுக்குச் செந்திலாண்டவன் அருள் புரிவானாக!) நடந்து டேபிளை அடைந்து டபராவில் காஃபியை விட்டு ஆற்றிக் குடித்துக்கொண்டிருந்தோம். இன்னொரு டேபிளில் இவ்வளவு நாழியாக மொபைலைத் தேய்த்து நம்பர்களை அழித்துக்கொண்டிருந்த மாது தனக்கு இஷ்டப்பட்டவர் அங்கே பிரசன்னமானவுடன் விருட்டென்று புள்ளிமானாய் துள்ளிக்குதித்து ஓடி அன்னபக்ஷியாக காஃபியைக் கொத்திக்கொண்டு திரும்பியது. ஓரிரு வினாடிகளில் வலப்புறம் ஓரமாய் இருந்த டேபிளுக்கு வந்தடைந்த ஜோடியில், இரண்டு கைகளிலும் காஃபியேந்தி வந்தது அந்த ஒடிசலான மாதுதான். கலர் நிழலாய் பின்னால் வந்தவர் கைவீசம்மா கைவீசி கடைக்கு வந்திருந்தார்.

பக்கத்திலிருந்த ஃப்ரெண்ட் இந்தப் பெண்ணடிமைத் தனத்தைக் கண்டு பொங்கி எழுந்து கேட்டார் “ஏங்க இதுவரைக்கும் வந்த Pair எல்லாத்திலையும் ஒரு ஒத்துமையைக் கவனிச்சீங்களா? பாவம் பொண்ணுங்கதான் கஷ்டப்பட்டு காஃபி எடுத்துக்கிட்டு வருது. தடிமாடாட்டம் ஆம்பிளைங்க கையை வீசிகிட்டு பேசாம வர்றாங்க.” பதிலுக்கு என்னோடு கூட வந்த பாஸ் சொன்னார் “பாவம் அவன் வீட்டுக்கு போனவுடன் சாதம் வடிச்சு பத்துபாத்திரம் தேய்ச்சு பாக்கி காரியமெல்லாம் பார்க்கணும்னு இங்கே இந்தமாதிரி நாடகமெல்லாம் நடக்குது”. நான் சொன்னேன் ”இதுவரைக்கும் காஃபியடித்த ஜோடி எதுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை. அதான்.....”. பக்கத்திலிருந்து இன்னொரு நண்பர் “அப்புறம் பையன் தான் பெட்காஃபி கொடுத்து இவங்களை எழுப்பணும்”. சுற்றிலும் வருவோர் போவோர் கண்ணுக்குத் தெரியாமல் யமலோக அட்மிஷன் கதை ஒன்று உடனடியாக ஞாபகம் வந்தது.

”நீ நரகத்துக்குப் போகணுமா? சொர்க்கத்துப் போகணுமா?” என்று கோடியில் ஒருத்தனுக்கு யமகிங்கரர்கள் பெப்சி உங்கள் சாய்ஸ் போல தருவார்கள். பல நல்லவைகள் அல்லவைகள் செய்து மரித்து மேலோகம் அடைந்த அப்புருஷனுக்கு லாட்டரி போல அன்றைய தினம் அந்த அதிர்ஷ்டம் அடித்தது. “எனக்கு ரெண்டுத்தையும் ஒரு தடவை சுத்திக் காமிங்க. அதுக்கப்புறம் நான் எதுவேணும்னு டிஸைட் பண்றேன்”ன்னு சிரம் தாழ்த்தி வணங்கி விண்ணப்பித்தான்.

சொர்க்கத்துக்கு அழைத்துப் போனார்கள். கதவைத் திறந்ததும் அமைதியாக இருந்தது. ஒரு மூலையில் அரையாடை காந்தி ராட்டையில் நூற்றுக்கொண்டிருந்தார். தெரேஸா அங்கேயும் சிலருக்கு மானுட சேவை புரிந்துகொண்டிருந்தார். வள்ளுவர் கீபோர்டும் கையுமாகக் காமத்துப்பாலுக்கப்புறம் கம்ப்யூட்டர்பால் என்று புதியகுறட்பாக்களை எழுதிக்கொண்டிருந்தார். அங்கே கிங்கரர்களால் அழைத்துவரப்பட்டவன் குஷால் பேர்வழி. அவனுக்கு இவையெல்லாம் சிலாக்கியமாகப்படவில்லை. “ஐயா! நரகத்தைப் பார்க்கலாங்களா?” என்று கிங்கரர்களைத் தொழுது கேட்டான்.

பூலோகத்தில் ஸ்பீட் ப்ரேக்கராக பார்த்த அதே எருமையை பறக்க வைத்து அழைத்துப் போனார்கள். நரகத்துக்கு நானூறு மீட்டர் முன்னாலேயே “யே..ஆத்தா.. ஆத்தோரமா வாரியா...”ன்னு குத்துப் பாட்டுக் கேட்டது. நெருங்க நெருங்க “மல்லிகா நீ கடிச்சா நெல்லிக்கா போல் இனிப்பா.. “ன்னு ரிக்கார்ட் மாற்றப்பட்டு சிலுக்கு ஆடிக்கொண்டிருந்தார். ஜானிவாக்கர் ஷிவாஸ் ரெமிமார்ட்டின் என்று கைகளில் மதுபானங்களினால் நிரப்பப்பட்ட தம்ப்ளர்கள் ததும்ப எல்லோரும் ஹெடோனிஸ்டுகளாக நடனமாடிக்கொண்டிருந்தார்கள். ஒரே கூத்தும் கும்மாளமுமாக அந்த இடம் அல்லோகலப்பட்டது. இவனுக்கு பார்த்தவுடனேயே சட்டென்று அந்த இடம் ரொம்ப பிடித்துவிட்டது. “சார்..சார்.. நான் நரகத்துலேயே இருக்கேன்..” என்று நச்சரித்து அவர்களிடம் கேட்டுக்கொண்டான்.

“சரிப்பா.. உன் இஷ்டம்...”ன்னு விட்டுட்டு போய்ட்டாங்க. விடியவிடிய ஒரே கும்மாளம். ஜாலியா பொழுதைப் போக்கிட்டு தூங்கி எழுந்திருந்தான். பகல் பனிரெண்டு மணிக்கு யாரோ சுளீர் என்று சாட்டையால் அடிக்க எழுந்திருந்தான். நேரே நரகத்தின் சமையற்கட்டிற்கு தூக்கிக் கொண்டு போய் கை கால் நகத்தையெல்லாம் ஒவ்வொன்னா பிடிங்க ஆரம்பிச்சாங்களாம். பயபுள்ள அலறிப்போய் ”ஐயோ.. என்ன பண்ணப்போறீங்க”ன்னான். எண்ணெய்ச் சட்டியில போட்டு வறுக்கறதுக்கு முன்னாடி நகத்தையெல்லாம் எடுக்கிறோம். கத்திரிக்காவுக்கு பாவாடையை உறிச்சு குழம்புல நறுக்கிப்போடறதில்லையா. அது மாதிரி”ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாங்களாம். இவன் உடம்பெல்லாம் வேர்த்து “டே...டே.. நேத்திக்கு நல்லாத்தானே நடந்துக்கிட்டீங்க. அதுக்குள்ளாற இந்த நரகத்துக்கு என்னடா ஆச்சு”ன்னான். அதுக்கு அங்க ஹெட்குக் மாதிரி இருந்தவன் நெருங்கி வந்து ரகஸியம் மாதிரிச் சொன்னான் “நேத்திக்கு நீ ந்யூ எண்டரெண்ட். அதான் வெல்கம் பார்ட்டி கொடுத்தோம். ஒருநாள்ல இண்டக்ஷன் முடிஞ்சு போச்சு. இதுதான் ரியல்.”

இந்தக் கதைக்கும் கல்யாணம் ஆவதற்கு முன் அப்பெண்கள் காஃபியெடுத்து வந்து கொடுப்பதற்கும் கிஞ்சித்தும் ஒற்றுமையில்லை என்பதை தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி தெரிவித்துக்கொண்டு இவ்வியாசத்தை இந்த அளவில் பூர்த்திசெய்கிறேன். வணக்கம்.

Wednesday, November 21, 2012

உற்சாகபானப் பிரியர்கள்

சுவரெல்லாம் காரை பெயர்ந்த பெரியாஸ்பத்திரி. மூலைக்கு மூலை கறைபடிந்த சுவர்கள். அழுக்குக் கோட்டுடன் ஸ்டெத் மாலையணிந்த டாக்டர்கள். முட்டிவரை ஸ்டாக்கிங்ஸ் போட்ட கொண்டை நர்சுகள். ஃபினாயில் நாற்றத்தையும் பொருட்படுத்தாது ஆப்பிளையும் ஹார்லிக்ஸ் பாட்டிலையும் சுமந்தபடி பேஷண்ட்ஸ்ஸைப் பார்க்கக் கூட்டம் அம்முகிறது. மாலை நேரத்து விசிட்டிங் ஹவர்ஸ். கலெக்ஷன்னில்லையே என்று வருத்தப்படும் வார்டு பாய்கள். “உம்புள்ளை நாளைக்கே எந்திரிச்சு நடப்பான் பாரு” என்று ஆரூடமாக ஒரு அன்புத்தாயிடம் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த ஆயாவென்று சுறுசுறுப்பாக இருந்தது.


வார்டு நம்பர் 8. எமன் எப்போ வருவான் என்று பாசக்கயிற்றுக்காக வெயிட்டிங்கில் ஒரு பேஷண்ட். ”இனிமே நம்ம கையில ஒண்ணுமில்லை” என்று டாக்டர்கள் கையை விரித்துவிட்டார்கள். தொண்டைக்குக் கீழே உள்ளேயிருக்கும் அவயங்களெல்லாம் சாராயத்தினால் கரைந்துவிட்டது. எக்ஸ்ரேயெடுத்தால் உள்ளே ஹாலோவாகத்தான் தெரியும். சாவதற்கு முன்னாலேயே வெறும் கூடாக படுத்திருந்தான். ஆனால் சாகக் கிடந்தவன் இப்படியொரு நிலை தனக்கு வந்துவிட்டதென்று கவலைப்படுபவனாகத் தெரியவில்லை.

உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் கடைசியாக ஒருதடவைப் பார்க்கலாம் என்று ஒவ்வொருத்தராக வார்டுக்குள் வந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கண்கள் சொருக கடைசி நிமிடத்தை எண்ணிக்கொண்டிருந்தான் அவன். சிறுவயது முதலேயே பழகிய நண்பனொருவன் மிகவும் வருத்தமாக அவன் பக்கத்தில் உட்கார்ந்து ஒரு கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தன்.

“இப்படியெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொன்னா கேட்டியாடா?”

அவனால் பேசக்கூட முடியாத நிலை. வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஸ்வாமிகிட்ட நல்ல புத்தி வேணும்னு கேட்டிருக்கலாம்ல”

இதைக் கேட்டவுடன் பதிலுக்கு படுக்கையிலிருந்து அவன் ஏதோ முனகினான்.

“ஸ்வாமிகிட்ட நல்ல புத்தியைக் கொடுன்னு வேண்டியிருக்கலாம்லனேன்” என்று கூரை இடிந்து விழுமளவிற்குச் சத்தமாகக் கேட்டான்.

சாகற நேரத்தில் தன் நண்பனிடமிருந்து இப்படியொரு வசனத்தை அவன் எதிர்ப்பார்க்கவில்லை.

கண்ணாலையே சைகை செய்து பக்கத்தில் கூப்பிட்டான். நண்பன் போய் அவன் தலைமாட்டருகில் உட்கார்ந்தான். படுக்கையில் கிடந்தவனின் காதுக்கருகில் தலையைக் குனிந்தான்.

“எ......ன்....ன....... சொ.....ன்....ன....” என்று ஒவ்வொருவார்த்தையாக உதிரியாய் அவன் காதுக்கு சேருமளவிற்கு மட்டும் கேட்டான்.

“ஸ்வாமிகிட்ட நல்ல புத்திக் கொடுன்னு வேண்டியிருக்கலாம்ல”

“நான் அப்படித்தான் வேண்டிக்கிட்டேன். ஆனா.....”

“ஆனா...”

“அந்தப் பாழாப் போறத் தெய்வத்துக்கு “நல்ல புட்டி”யைக் குடுன்னு காதுல விழுந்துடிச்சு. நான் என்ன பண்ணட்டும்”ன்னு சொல்லிட்டு மண்டையைப் போட்டான்.
 
**************
 
போதையடிமைகள் மாதிரி மெட்ராஸ் காஃபி ஹவுஸின் ஃபில்டர் காஃபிக்கு ஆஃபிஸிலிருந்து ஒரு திருக்கூட்டமாக அடிமையாகி விட்டோம்.

சிக்கரி கலந்த காஃபிங்கறதுனாலத்தான் இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கு. அப்படிக் குடிச்சா உடம்புக்கு ஆகாது என்று யாராவது இன்னா நாற்பதாக நீதி சொன்னாலும் நாக்குக்கு புரிய மாட்டேன் என்கிறது. “கள்ளிச்சொட்டான்னா இருக்கு காஃபி” என்று காஃபியார்வலர்கள் சிலாகிப்பதற்கு எதுவும் உள்ளர்த்தம் உண்டாவென்று தெரியவில்லை.

திரும்பத் திரும்ப சப்புக்கொட்டிக்கொண்டு சாயந்திரமானா மெ.கா. ஹவுஸின் முன்னால் காசைக் கொடுத்துவிட்டு கையேந்தி நிற்கச் சொல்கிறது.

சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் சொன்ன ஒரு சன்னியாசக் கதை ஞாபகம் வருகிறது.

ஒருத்தர் ரொம்பவும் ஆச்சார அனுஷ்டானத்தோட இருக்கிற சாஸ்திரிகள். ஆத்துக்காரி கொஞ்சம் அப்பர் ஹாண்ட். உஹும் நீங்க நினைக்கிறா மாதிரி அடிக்கெல்லாம் மாட்டா. பிலுபிலுன்னு பிடிச்சிண்டு வாயாலையே வகுந்துடுவா. இந்த மனுஷனுக்கும் விஷமம் ஜாஸ்தி. எதாவது சொல்லி ஆத்துக்காரியை சீண்டிண்டே இருப்பார். ஒரு நாள் காலங் கார்த்தாலையே சண்டை முத்திப்போச்சு. அக்கம்பக்கமெல்லாம் கூடிப் போய் தெருவில ஒரே வேடிக்கை.

”இனிமே என்னால உங்கூட குடுத்தனம் பண்ண முடியாதுடி. ராட்சஷி. நா சன்னியாசியாப் போய்டறேன்”ன்னு ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதியாக் குதிச்சார்.

“எம்பளது வயசுல நீர் அப்படிப் போகணும்னு உமக்குத் தலையெழுத்து இருந்தா யாரென்ன பண்ண முடியும். பேஷாப் போங்கோ”ன்னு மாமி சொல்லிட்டு பக்கத்தாத்து மாமியோட சகஜமா பேச ஆரம்பிச்சுட்டா.

இவருக்கும் ரோஷம் தலைக்குமேல ஏறிண்டு கடகடன்னு திண்ணைய விட்டு இறங்கி வடக்கப் பார்க்க புறப்பட்டு போய்ட்டார். தோள்ல காசித் துண்டோட. பக்கத்தாத்து மாமியெல்லாம் வந்துக் கூடி நிண்ணுண்டு “இருந்தாலும் மாமாவை நீங்க இப்படி விரட்டியடிச்சுருக்கக்கூடாது”ன்னு ஒரே புலம்பல். மாமி அதெல்லாம் கண்டுக்கவேயில்லை.

“அடுப்புல ஸாம்பார் கொதிக்கறது”ன்னு உள்ளே போய்ட்டா. ”மாமி இப்படியொரு கல்நெஞ்சக்காரியா இருக்காளே”ன்னு எல்லோரும் முணுமுணுத்துட்டு அவாவா ஆத்துக்குப் புறப்பட்டு போய்ட்டா.

சாயந்திரம் நாலு மணியாச்சு. பால்காரன் பாலைக் கொடுத்துட்டு இந்தப் பக்கம் போனான் கார்த்தால வடக்கே போன மாமா விறுவிறுன்னு அந்தப் பக்கத்திலேர்ந்து திரும்பி வந்துண்டிருந்தார். ஃபர்ஸ்ட் செஷன்ல ஃபைட் சீன் பார்த்தவாள்லாம் திரும்ப ஒரு சண்டை பார்க்க ஆசையா ஓடி வந்தா.

திண்ணைமேல ஏறி சப்ளாங்கால் போட்டுண்டு ஜம்முன்னு உட்கார்ந்துண்டாராம் மாமா.

“சன்னியாசம்னு கிளம்பினேளே. சாயந்தரமே ஆத்துக்கு வந்துட்டேளே. என்னாச்சு மாமா”ன்னு எல்லாரும் நக்கலா விஜாரிச்சாளாம்.

“நாலு மணிக்கு காஃபி குடிக்கணும். அதான் திரும்பி வந்துட்டேன். ஆனா நிச்சயமா நாளைக்கு சன்னியாசம் போய்டுவேன்.”ன்னு ஜம்பமா சொன்னாராம்.

“உக்கும். ஆனானப்பட்ட காஃபியையே இந்த மனுஷ்யரால விடமுடியல. கஷாயத்தை எப்படிக் கட்டிப்பராம்”ன்னு தாவாங்கட்டையை குலுக்கி தோள்ல இடிச்சுண்டு சுடச்சுட காஃபியை கொண்டு வந்து திண்ணையில வச்சாளாம் மாமி.

#கஷாயம் கட்டிக்க ஆசை வந்தாலும் காஃபி ஆசை போகாதாம். காசிக்குப் போனாலும் காஃபிக்குதான் ஜெயமாம். தீக்ஷிதர்வாள் சொல்லியிருக்கார்.

Monday, October 8, 2012

போட்டியில் வென்ற ஞொய்யாஞ்சி


கல்யாணமான அபாக்கியசாலிகளுக்கு சர்வதேச அளவில் ஒரு கட்டுரைப் போட்டி நடந்தது. தலைப்பு “மனைவி”. பல்லாயிரக்கணக்கானோர் முண்டியடித்துக்கொண்டு கலந்துகொண்டனர். தங்களது உள்ளக்குமுறல்களைக் கொட்டிப் பக்கம்பக்கமாக எழுதித்தீர்த்தனர். சாயந்திரம் இறுதித் தீர்ப்பு என்று அறிவித்தார்கள். உணர்வுப்பூர்வமாக எழுதியவர்கள் தனக்குத்தான் முதல் பரிசு என்று பார்ப்போரிடமெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தார்கள்.

ஆறு மணியானது. முடிவை அறிவிக்க மைக் பிடித்தார் ஒருவர். ”இந்த மகத்தான போட்டியில் வெற்றி பெற்றவர் திருவாளர்.ஞொய்யாஞ்சிசீசீஈஈஈ” என்று ஓலமிட்டார். திருவாளர் ஞொய்யாஞ்சியைச் சுற்றி ஈக்களாக செய்தியாளர்கள் மொய்த்தார்கள்.

”உங்களுக்கு கல்யாணமாகி எவ்ளோ வருசமாச்சு?”

“இந்தப் போட்டிக்கு உங்க அனுபவம் எப்படி கைகொடுத்தது?”

“மனைவியைப் புரிஞ்சு வச்சுக்கிற அளவிற்கு நீங்க அவ்ளோ ஸ்மார்ட்டா?”

“நீங்க அடிபட்டதெல்லாம் எழுதி இந்தப் பரிசு வாங்கினீங்களா?”

என்றெல்லாம் பலவாறு கேள்வி எழுப்பினர். எல்லாவற்றிற்கும் அமைதியாக புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தார் மிஸ்டர் ஞொய்.

“நீங்க எவ்வளவு பக்கம் எழுதினீங்க?”

என்கிற கேள்வி எங்கிருந்தோ அவர் காதுகளில் வந்து விழுந்த மறுகணம் அவர் எழுதிய கட்டுரையை எல்லோருக்கும் உரக்கப் படித்துக் காண்பித்தார்.

“She has a problem for every solution".
 
#ஞொய்யாஞ்சி என்று நாமகரணம் சூட்டி இவ்வுலகிற்கு இவரை தாரை வார்த்த வானவில் மனிதன் மோகன் அண்ணாவுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

Saturday, October 6, 2012

செயக்கெடும்... செய்யாமையானும் கெடும்..

"செய்யவேண்டிய வேலையைச் செய். செய்யக்கூடாத வேலையைச் செய்யாதே. எதைச் செய்யணுமோ அதை செய்யலைன்னா கெட்டுப்போயிடுவே. எதை செய்யக்கூடாதோ அதை செஞ்சென்னா கெட்டுப்போயிடுவே."


மருத ஸ்டேஷன். ஒரே கூட்டங்க. ”டீஈஈ.. காப்ப்ப்பி.. வடே..வடே..” சத்தத்தோட சேர்ந்து ”மாப்ள... மெட்ராசு... சாக்கிரத..”. ”பத்திரமா போய்ட்டுவாம்மா”, “போய் மறக்காம ஃபோன் பண்ணுங்க”, “சேகரு அவ நிச்சியம் வருவாடா”, “புள்ளைங்கள உள்ள போவச்சொல்லு” என்று பொட்டி பொட்டியாக ஜனங்களின் வாய் ஓயாத விசாரிப்புகள். பாண்டியன் இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பப்போறான். பிஸ்லெரி பாட்டில் வாங்கிட்டு ஒருத்தர் ஓடறாரு. இதோ கார்டு பச்சை காமிச்சுட்டாரு. கொஞ்சகொஞ்சமா வண்டி நகர ஆரம்பிச்சுடுச்சு.

கடைசியா கோர்த்துவிட்டது அன்ரிஸர்வ்ட் கம்பார்ட்மெண்ட். ரொம்பி வழியுது. ஆம்பளை பொம்பளை வித்தியாசமில்லாம நெருக்கியடிச்சுக்கிட்டு சமதளமா தெரியற எல்லா இடத்திலையும் தன்னோட ’பேக்’கை நகர்த்தி உட்கார்ந்திருக்காங்க. பக்கத்துல யாராவது வஞ்சனையில்லாம வளர்ந்திருந்தா அவங்க தொடையைக் கூட சீட்டா நினைச்சுக்கிட்டு உட்கார்ந்த ஆளுங்களும் உண்டு. இவ்வளவு அமளிதுமளியிலையும் ரெண்டு பேர் திருப்தியா இருந்தாங்க. ஏன்னா அவங்க ரெண்டு பேருக்கும் ஜன்னலோரச் சீட்டுக் கிடைச்சிருந்தது. பொட்டிக்குள்ள பார்த்தா யாராவது வயசானவங்க முடியாதவங்க நின்னுக்கிட்டிருந்தாங்கன்னா அவங்களுக்கு உட்கார சீட் கொடுக்கும்படியாயிடும்னு கழுத்தை உள்பக்கமா திருப்பாம வெளியில பார்த்துகிட்டே வந்தாங்க.

ஒரு பக்கமா பார்த்து கழுத்து வலி கண்டு போய் ரெண்டு பேரும் நேருக்கு நேர் பார்த்துக்கிட்டாங்க. முதல்ல பல்லு தெரியாம சிரிச்சுக்கிட்டாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஊரு பேருன்னு விசாரிச்சுக்கிட்டாங்க. ”அப்படியா! நம்ம பய ஒருத்தன் அங்கத்தேன் இருக்கான்”ன்னு ஒருத்தரும் “அட! இது தெரியாம போயிட்டுதுங்களே. முந்தாநேத்தி நா அங்கிட்டுதான் வந்துருந்தேன். நம்மூர்ல ஒரு பயலுக்கு அங்கதான் பொண்ணு எடுத்தோம்..”ன்னு எதிர்ல இருந்த ஆளும் ரொம்ப அன்னியோன்னியமாயிட்டாங்க. கொஞ்ச நேரத்திலயே ரயில் சிநேகிதம் பூத்துக் காயாகி பழமாகிட்டுது.

“இப்ப எங்க போறீங்க?”

“விளுப்புரம்”

“ம்.. நா மெட்ராஸ் போறேன்...”

“ஓ அப்டியா.. சந்தோசம்.... எனக்கு ரயில்ல வர்றதாயிருந்தா ஒரு சின்ன சிக்கல்”

“என்ன?’

“இல்ல.. ரயில் ஸ்டேசன விட்டு நவுந்த கொஞ்ச நேரத்தில எனக்குத் தூக்கம் வந்துடும்.”

“எனக்கு வேற விதமான சிக்கல்”

“என்ன?”

“கொஞ்சம் கூட தூக்கமே வராது. கொட்டக் கொட்ட முழிச்சுக்கிட்டிருப்பேன்”

“ஓ. எனக்குதான் பயமாயிருக்கு. இறங்காம தூங்கிடுவேனோன்னு..”

“நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க.. நா எளுப்பி விடறேன்.. நல்லா தூங்குங்க..”

“இல்ல.. போற வேலை ரொம்ப முக்கியம். நிச்சயம் விளுப்புரத்தில இறங்கிரணும்”

“அட.. நான் சொல்றேன்ல.. நிம்மதியா தூங்குங்க.. நா எளுப்பி விடறேன்..”

“நிச்சியம் எளுப்பி விடுவீங்கல்ல. ரொம்ப முக்கியமான வேலை... அதான்...”

“என்னங்க நீங்க. நம்ப மாட்டேன்றீங்க.. நிச்சயம் எளுப்பி விடறேன்.. நீங்க எளும்பலைன்னு வச்சுக்குங்க.. அப்படியே உங்களை தரதரன்னு புடிச்சு இளுத்து ப்ளாட்பாரத்தில இறக்கிட்டுப் போயிடறேன். போதுமா?”

“ரொம்ப நல்லதுங்க..நன்றிங்க.. மறக்காம விளுப்புரத்தில இறக்கிவிட்ருங்க.. தயவுசெஞ்சு... சரிங்களா”

“கவலைப்படாம நல்லாத் தூங்குங்க.. நிச்சியமா இறக்கிவிடறேன்..”

****************

எக்மோர் ஸ்டேஷன். மருத மல்லி வாசனை மாறி கூவம் வாசனை. அலுங்கி குலுங்கி அன்ரிஸர்வர்ட்ல வந்த எல்லாரும் அலுப்போட இறங்கறாங்க. விழுப்புரத்தில இறங்கவேண்டியவனும் இறங்கறான் மெட்ராஸ்ல இறங்கவேண்டியவனும் இறங்கினான். பழி சண்டை. விழுப்புரத்தில இறங்கவேண்டியவன் இறக்கிவிடறேன்னு சொன்னவனைப் புடிபுடின்னு புடிச்சான்.

“நா உங்கிட்ட கேட்டேனா? விளுப்புரத்தில இறக்கிவுடுன்னு. கேட்டேனாய்யா? நீயாத்தானே சொன்னே.. ஏன்யா.. நீயாத்தானே சொன்னே.. ஏன்யா இப்படி பண்ணின.. நானா இறங்கிறதா இருந்தா விளுப்புரத்தில இறங்கலைன்னாகூட முன்னாடியே விருத்தாசலத்துல இறங்கி விளுப்புரம் போயிருப்பேன்..இல்லைனா அட்லீஸ்ட் செங்கல்பட்டுல வந்து இறங்கியிப்பேன்.. இந்நேரம் விளுப்புரத்தில இருப்பேன்.. இப்படிக் கெடுத்துப்புட்டியேயா...நீ நல்லாயிருப்பியா..” ரயில் சிநேகம் நாறிப்போயிருச்சு.

விழுப்புரத்தில இறக்கிவிடறேன்னு சொன்னாம் பாருங்க ஒரு பய அவன் வாயே தொறக்கலை. கம்முன்னு இருந்தான்.

அந்த விழுப்புரம் பார்ட்டி கன்னாபின்னான்னு திட்டிட்டு போயிட்டான். அப்புறமும் இறக்கிவிடறேன்னு சொன்னவன் ஆழ்ந்த சோகத்தில இருந்தான். அவன் பக்கத்தில இருந்தவன் கேட்டான் “ஏன்யா இன்னும் சோகமா இருக்கே. அவந்தான் திட்டிட்டு போயிட்டானே. போய் ஆக வேண்டிய வேலை எதாவது இருந்தா பாருயா”ன்னான். அதுக்கு அவன் சொன்னான். “இல்ல.. இவன்னு நினைச்சு விளுப்புரத்தில ஒருத்தனை தரதரன்னு இளுத்து ப்ளாட்பாரத்தில போட்ருக்கேன். அவன் என்னவெல்லாம் திட்டுவான்னு நினைச்சு வருத்தப்படறேன்”னானாம்.

இப்ப திரும்ப ஒருதடவ மொத பாராவைப் படிச்சுப் பாருங்க.. விளங்கும்...

#இந்தக் கதையை இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் ”செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்” என்கிற குறளுக்கு எடுத்துக்காட்டாக சொன்னார். இப்படி விஸ்தாரமாக ”இளுத்து”ச் சொன்னது என் கை வண்ணம்.

பட உதவி: chanderifilm.com

Friday, September 21, 2012

....உன் கண்களைத் தழுவட்டுமே....

கடந்த சில நாட்களாகவே “இஜ் இட் மிஷ்டர் பெங்கட்?” என்று ஒரு பெங்காலி வாலிபன் கூப்பிட்டு “வரீங்களா?” என்று அழைக்கிறான். ”உங்களுக்கான சீட்டைப் பிடித்து வைக்கட்டுமா?” என்று அணுசரனையாகக் கேட்கிறான். தொழில்நுட்ப செமினார்கள் அட்டெண்ட் செய்து ரொம்ப நாளாகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் லெ ராயல் மெரிடியனில் ஒரு செமினாருக்குப் போய் தூங்கிவிட்டு வந்த கையோடு எழுதியது இது.


இந்த பொட்டி தட்டி வயிறு நிரப்பும் வேலையில் இருப்பதால் அடிக்கடி இது ஃபீல்டுக்கு புதுசு என்றும், ரோடு ஷோ என்றும், மென்பொருள் உருவாக்குபவர்கள் சங்கமம் என்றும், திட்ட அதிகாரிகள், முதன்மை தொழில்நுட்ப அதிகாரியில் (CTO) ஆரம்பித்து முதன்மை எக்ஸ் அதிகாரி(CXO) வரை நடத்தப்படும் கருத்தரங்குகள், பயிலரங்கங்கள் போன்றவற்றிற்கு ஃபோன் மேலே ஃபோன் போட்டும், ஈமெயில் அனுப்பியும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை கூப்பிடுவது மாதிரி வருந்தி வருந்தி அழைப்பார்கள். சமீபத்தில் இதுபோல் கூப்பிட்ட மரியாதைக்கு போய் எட்டிப்பார்க்கலாம் என்று போனதில் கிடைத்த திருவாசகம் தான் இது.

"அதே அலுத்துப்போன மேரி, சீதா, ராணி போன்ற கம்பனியின் கந்தர்வக் கன்னிகளை ஒருநாளேனும் கண்ணுறாமல் இருப்பதற்கும், கழனித்தண்ணி கேன்டீன் காப்பியை தவிர்ப்பதற்கும், துர்வாசம் வீசும் இயற்கைக்கு ஒதுங்கும் அறைகள் மேலும் வீசாமல் இருக்கவும், ஓயாமல் தொலைபேசி பிடுங்கும் உள்ளூர்/வெளியூர் ஆபிஸ் ராட்ஷசர்களிடம் இருந்து தப்பிப்பதற்கும், ஒரே இடத்தில் உட்கார்ந்து பொட்டி தட்டி கைகால்கள் மரத்து போகாமல் ஒரு உடற்பயிற்சி போல இருக்கவும், நம்போன்றோருக்கு அமையும் கபாலி கோயில் அருட்ப்ரசாதம்தான் ஸ்டார் ஹோட்டல் செமினார்கள்"

என்று இந்த தளத்தில் பத்து பதினைந்து வருடங்கள் பழம் தின்று கொட்டை போட்டு சுறுசுறுப்பாக ஒரு இளைஞன் போல் இயங்கிக்கொண்டிருக்கும் "செமினார் செல்வன்" ஒருவர் தெரிவித்தார். இவ்வகை செமினார்கள் பற்றியும் அதில் பக்குவமாக பார்வையாளனாக பங்குபெறுவது எப்படி என்பது பற்றியும் நம்மிடம் அவர் பகிர்ந்த விஷயங்களில் சில துளிகள் கீழே.

1. நாள்தோறும் கணினிப் பொட்டியை திறந்து மெயில் பார்க்கையில், முதலில் ஆரக்கிள், மைக்ரோசாப்ட், அடோபி, ஐ.பி.எம், இன்டெல் போன்ற உலக கம்பனிகளில் இருந்து மெயில் வந்திருந்தால், முதல் வேலையாக பார்த்தகையோடு நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்துக்கொண்டு "ஐயா/அம்மா நான் நிச்சயம் வருகிறேன், எனக்கு ஒரு சீட் போடுங்கள்" என்று ஒரு பதில் மெயில் அனுப்பி உடனே ஒரு இருக்கையை பிடிக்கவேண்டும். முக்கியமாக, இவ்வகை பிரசங்கங்கள் இலவசமாக இருக்கவேண்டும். அப்போதுதான் நிர்வாகத்தில் சுலபமாக ஓ.கே வாங்கி ஆபிசிலிருந்து தப்பிக்க முடியும்.

2. காலை 9.30 மணியளவில் பேசும் நிகழ்ச்சி ஆரம்பம் என்றால், ஒன்பது மணிக்கே போனால் வரவேற்பில் உட்கார்ந்திருக்கும் ஜீன்ஸ் வெள்ளை சொக்காய் போட்ட பெண்களின் புன்னகை அழைப்போடு தலையில் வெள்ளை குல்லா போட்ட நட்சத்திர சர்வர் கொடுக்கும் டீ காஃபி பிஸ்கட் போன்ற பதார்த்தங்கள் கிடைக்கும். ஜீன்ஸ் வனப்பிற்கு. டீ வாயிற்கு. கையில் உங்கள் முகவரி அட்டை இருந்தால் ஒரு பெட்டியில் போட்டுத் தப்பித்து விடலாம். இல்லையென்றால் வாசலில் நிற்க வைத்து ரெண்டுல ராகு ஏழில் சனி என்று உங்கள் ஜாதகம் எழுதச் சொல்லிப் படுத்துவார்கள்.

3 . உள்ளே சென்றதும், எந்த சீட்டுக்கு மேல் குழாய் விளக்கு இல்லையோ அதுவே நமக்கு தோதான இடம். பாடசாலையில் படிக்கும் காலத்தில்தான் மாப்பிள்ளை பெஞ்சு அதிசேஃப். இதுபோன்ற செமினார்களில் முதல் வரிசையில் இடதோ, வலதோ கோடி இருக்கை மிக மிக சௌகர்யம். உட்கார்ந்தவுடன் தூங்கக்கூடாது. அப்படியே தூங்கினாலும் குறட்டை விடக் கூடாது. அப்புறம் பேசுபவர் மைக் வழியே அரங்கத்திற்கே உங்கள் குறட்டைச் சென்றடைந்து நீங்கள் தூங்குவதைக் காட்டிக் கொடுத்துவிடும்.

4. ரொம்பவும் தூக்கம் தூக்கமாகக் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வந்தால், அழைப்பே வராத அலைபேசியை காதுக்குள் சொருகி, வாயைக் கையால் பொத்தாமல் பொத்தி, ஏதோ தலைபோகிற அவசர அழைப்பு போல எழுந்து வெளியே ஒட்டமும் நடையுமாகச் சென்றுவிடவேண்டும். ஓய்வு அறை பக்கம் சென்று மூஞ்சி அலம்பி, கை காயவைக்கும் இயந்திரம் கீழே இரண்டு நிமிடம் ஏந்திக் காட்டிவிட்டு திரும்பினால் இன்னொரு ஒரு மணி நேரம் தாங்கும். அதுவும் சிலபேருக்கு தான் அந்த கொடுப்பினை. அப்படி வரம் இல்லாதவர்கள் அந்த ஜீன்ஸ் பேண்ட் போட்ட பெண்கள் கொடுத்த ஒருபக்க அஜெண்டாவை வெறித்துப் பார்த்து நெட்ரு பண்ணிக்கொண்டோ, அல்லது விழா எப்படி நடந்தது, உங்களை அதிகம் தூங்க வைத்தப் பேச்சாளர் யார், விழாக் கம்பனியார் உங்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்த சௌகரியங்கள் பற்றி என்று நிகழ்ச்சி முடிவில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.

5. நாம் தூங்குகிறோம் என்று தெரியாத வண்ணம் அவ்வப்போது இரண்டு காலையும் ஆட்டுவது, தீடீரென்று யாரோ "டேய்.." சொல்லி கூப்பிட்டது போல பின்னால் திரும்பி பார்ப்பது, தலையை மையமாக வறுமையின் நிறம் சிகப்பு கமல் போல அசைப்பது, கொடுத்த கிறுக்கல் புத்தகத்தில் ஹார்டீன் போட்டு அம்பு விடுவது, பல தினுசுகளில் ஸ்டார் டிசைன் வரைவது, வீட்டில் உட்கார்ந்து சாவகாசமாக பார்க்கமுடியாத பால் கணக்கு போன்ற இத்யாதிகள் எழுதுவது, ரொம்ப மனசுக்குக் கஷ்டமாகவும் சங்கடமாகவும் இருந்தால் சஷ்டி கவசம் எழுதிப்பார்ப்பது போன்ற உபயோகமான செயல்களில் ஈடுபடலாம். போற வழிக்கு புண்ணியமாக போகும்.

6. ஒரு பதினொன்னரை மணி வாக்கில் லைட் போட்டு ஒரு இண்டர்வல் விடுவார்கள். எல்லோருக்கும் முன்பாக ஓடிப்போய் கையில் கப்பேந்தி ஒரு கட்டஞ்சாய் குடித்துவிட்டு, தட்டில் பரப்பி வைத்திருக்கும் பிஸ்கட்களில் நமக்கு பிடித்தவையாக ஐந்தாறு தேர்ந்தெடுத்து கையில் அடுக்கி வைத்து சாப்பிட்டுவிட்டு, யாராவது தெரிந்த முகம் போல இருந்தால் "எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே...போனவாரம் கன்னிமாரா வந்தீங்களா.." என்று கொஞ்சம் பேச்சுக்கொடுத்து பொழுதை போக்கிவிட்டு, எல்லோரும் போனவுடன் ஒருமுறை ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு ஆறஅமர மெதுவாக பன்னிரண்டு மணி வாக்கில் உள்ளே சென்று அமரவேண்டும்.

7 . பன்னிரண்டு மணியிலிருந்து அடுத்த அரைமணி நேரம் தாக்குப் பிடிப்பதுதான் இந்த உலகத்திலேயே பேரம் பேசாத சென்னை ஆட்டோ கிடைப்பது மாதிரி அவ்வளவு கஷ்டம். சர்வ நிச்சயமாக வெளியில் தட்டில் இருந்து பொறுக்கிக்கொண்டு வந்த மின்ட் எடுத்து சாப்பிட்டே ஆகவேண்டும். சப்பி சாபிடாமல் மின்டை கடித்து தின்று அதையும் தீர்த்த பின்னர், கள் உண்ட மயக்கத்தில் கண்கள் மூடுவது போல ஸ்லோ மோஷனில் இமைகள் மூடித் திறக்கும். பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் சகதூங்கியின் கால் தானாக நம் கால் மேல் இடிபட எழுந்துவிடவேண்டும்.

8. ஒருவாறாக ஒரு மணியளவில், பேச்சாளர் தனது உரையை ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து முடித்துவிட்டு "யாருக்காவது டவுட்ன்னா கேள்வி கேளுங்கப்பா..." என்று ஒரு குரல் விடுவார். மிகவும் சமர்த்தாக உட்கார்ந்து பிரசங்கம் கேட்ட ஏதாவது அதிகப்ரசங்கி சாப்பாடு நேரம் என்பதை மறந்து உலகளாவிய டெக்னாலஜி பற்றி சிப், டேட்டா குவஸ்ட் போன்ற ஊரில் கிடைக்கும் சஞ்சிகைகளை உருப்போட்டு படித்துவிட்டு தாறுமாறாக கேள்வி கேட்டு பேசியவரை படுத்துதோ படுத்து என்று படுத்தி குஷியடையும்.

9. எல்லோரும் கேட்கும்போது சம்ப்ரதாயத்துக்கு நாமும் கேள்விகனை தொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், "மைக்ரோசாப்ட்டை பில் கேட்ஸ் தான் இப்ப பார்த்துக்கராரா?", "ஆரகிள் டேட்டாபேஸ் என்னோட இஸ்த்திரி டேட்டா வைக்க பயன்படுமா?", "500 ஜிபி ஹார்ட்டிஸ்க்கில் 501 ஜிபி ஸ்டோர் பண்ண நான் என்ன செய்யணும்?" என்று உலகே அதிசயிக்கும் வண்ணம் ஆச்சர்யமான சிலபல கேள்விகளை கேட்டு இரண்டு மணிநேரம் பேசியவரை இரண்டே நிமிடத்தில் திக்குமுக்காட செய்துவிடவேண்டும். இந்த வினாக்களால் கொஞ்சநேரத்தில் அரங்கமே கப்சிப்பாகி எல்லோரும் சாப்பாட்டை பார்க்க நடையை கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். தப்பித்தது டெக்னாலஜி.

10. பசியூட்டி என்று சூப் வைத்திருப்பார்கள். காணாததை கண்ட மாதிரி நிறைய ஊற்றி குடிக்காமல் கொஞ்சமாக அரை கப் வாங்கி குடித்துவிட்டு மெயின் ஐட்டத்திற்கு போய்விட வேண்டும். முழு கப் வழிய வழிய வாங்கி ஏக் கல்ப்பில் அடித்துவிட்டால் சாப்பாடு சாப்பிட முடியாது. பசியூட்டி பசியாற்றி ஆகிவிடும். சமைத்துப் பார் போல நட்சத்திர ஹோட்டல் சாப்பாட்டை வெறித்துப் பார் என்றாகிவிடும். சைவ அசைவ ஐட்டங்களுக்கு பெயர்ப்பலகை வைத்திருப்பார்கள். நமக்கு வெறும் சாம்பார் உருளை கறிதான் வேண்டும் என்றால் அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு தயிர்சாதம் டேபிளை அடைந்து கொஞ்சமாக உள்ளே தள்ளிவிட்டு, வன்னிலா ஐஸ்க்ரீம் வித் ஃப்ரூட் சாலட் என்று மேற்படிகள் சாப்பிடுவதற்கு கொஞ்சூண்டு மேல் வயிற்றில் இடம் வைத்துக்கொள்ளவேண்டும். இவ்வளவையும் செமத்தியாக ஒரு கட்டு கட்டியபின், ஸ்வீட் சோம்பு ஒரு கை எடுத்து வாயில்போட்டுக் கொண்டு ஃபீட்பேக் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு சுகமாகத் தூங்குவதற்கு அலுவலகம் சென்றுவிட வேண்டும்.

தேவரீர் இதில் கண்ட விஷயங்கள் ஒரு அரை நாள் செமினாருக்காக எழுதப்பட்டது. முழுநாள் செமினாருக்கு இதைவிட அதிகமான விஷயங்கள் இருப்பதாகவும் அதற்கு இன்னொரு அடையார் ஹோடேல்லிலோ, சோளா ஷேரடானிலோ, தி பார்க்கிலோ சந்திக்கும்போது விலாவாரியாக பாடம் எடுப்பதாக சொல்லிச்சென்றார் அந்த அன்பர். காத்திருங்கள் முழு செமினாருக்கு.

#செமினார் செல்வங்கள்

Wednesday, March 7, 2012

நா ஆட்டோக்காரன்...

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தின் வாசலில் எப்போதும் 'ஜே ஜே' என்று தேர் கூட்டம் திருவிழா கூட்டம் போல இருக்கும். ரேஸ் கோர்ஸ் எதிரில் கிண்டி தொடர்வண்டி நிலையம் உள்ளதால் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள இடம். இந்த ஜென்மமே ரேஸ் விளையாட எடுத்தது போல கர்ம சிரத்தையாக ஒரு கூட்டம் எப்போதும் அங்கே சுற்றி அலைவதுண்டு. ரேஸில் தோற்ற பாபப்பட்ட ஆத்மாக்கள் நாளை எப்படி ஜெயிப்பது என்ற நினைப்பிலும், ஜெயித்த கோஷ்டியினர் நாளை எப்படி இன்னும் அதிகம் கெலிப்பது என்று அந்தரத்தில் பறந்தும் சாலையை கடந்த வண்ணம் இருப்பர்.

இருசாராரிலும் ஒரு சிலர் கார், பஸ் மற்றும் சைக்கிளைக்கூட இருபக்கமும் போக விடாமல் ரோடில் நின்று லாப நஷ்ட கணக்குளையும் அன்றைய செலவாணியையும் பற்றி தீவிர கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதை காணலாம். இதற்கிடையில் ஒரு காரின் இடது பக்க கண்ணாடியில் தனது முகம் பார்க்க வருவதுபோல் வந்த ஒரு ஆட்டோ அப்படியே அதன் முன் சென்று பிள்ளையாரை பிரதக்ஷிணம் வரும் பக்தன் போல் இடமிருந்து வலம் திரும்பி, வலது பக்கத்தில் பல இடையூறுகளை கடந்து வந்து கொண்டிருந்த எம்.டி.சி பேருந்தை நிற்க வைத்து வலது கோடி ரேஸ் கோர்ஸ் சுவர் பக்க ஓரத்தில் இருந்த தனது "xxxx xxxx சங்க ஸ்டாண்டு" வில் நின்றது.

அதன் ஓட்டுனர் ஒரு பீடியை எடுத்து பற்றவைத்தார். கணேஷ் பீடி பிடிப்பது ஒன்றுதான் இப்புவியில் இந்த தருணத்தின் அதிமுக்கியமான வேலை என்று ஒரு பஸ், கார் போன்றவற்றை நிறுத்திய வெற்றியின் களிப்பு அவர் முகத்தில் தெரிந்தது. இவ்வளவு நடந்தது ஒன்றுமே தெரியாததுபோல தன்னுடைய சக நண்பருடன் தினத்தந்தியில் வந்த அன்றைய முக்கிய கள்ளக்காதல் சம்பவங்கள் பற்றிய விவாதத்தை தொடர்ந்தார்.

இது போல் நிகழ்ச்சிகளை சென்னையில் பலரும் எதிர்கொண்டிருக்கலாம். சில பல நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த கீழ்வரும் ஆட்டோ வகைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

1. அச்சம் தரும் (அச்சமற்ற)ஆட்டோ
ஏதோ ஒரு எஃப்.எம் பாட்டு அலறிக் கொண்டிருக்கும். முன் சீட்டில் காக்கி சட்டைக்கு பதில் கலர் சட்டை உட்கார்ந்திருக்கும். ஒட்டுபவருக்கு முன் பகுதி முடியில் கட்டாயம் சிகப்பு வண்ண சாயம் பூசியிருக்கும். சீட்டில் இடம் இருந்தால் கூட எப்போதும் ஓவர்லோடு அடிக்கும் போது ஒருவரை பக்கத்தில் உட்கார்த்தி சவாரி அடித்த பழக்கத்தால் கொஞ்சம் இடம் விட்டு ஒரு 45 டிகிரி சாய்வாக ரோடை பார்க்க உட்கார்ந்திருப்பார். ஆட்டோவின் பின் புறம் சிவப்பு/மஞ்சள் வண்ணத்தில் ஆங்கில எக்ஸ் குறி அல்லது ஃபார்முலா ஒன் நம்பர் மிக பெரியதாக இரண்டு அல்லது மூன்று முறை ஸ்டிக்கராய் ஒட்டப்பட்டிருக்கும். இதுதான் அச்சமற்ற ஆட்டோவின் அடையாளங்கள். இவர்கள் லெஃப்ட்ல இன்டிகேட்டர் போட்டு, ரைட்ல கையை காட்டி, நேராக நகைச்சுவை நடிகர் விவேக் சொன்னது போல் செல்வார்கள்.  எதாவது கேட்டால் காண்டாகி விடுவார்கள்.

2. தக்ஷிணாமூர்த்தி ஆட்டோ
கைலி அல்லது லுங்கி உடுத்தியிருப்பார். பேண்ட் கிடையாது. எப்போதும் கண்கள் வெளியே எங்கோ பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு காலை மடக்கி சிவன் கோவிலில் கோஷ்ட தக்ஷிணாமூர்த்தி அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கும்படி உட்கார்ந்திருப்பார். பின்புறம் ஒபாமாவே வருவதாக ஓசை வந்தாலும் மெய்வருத்திக் கொள்ளமாட்டார். ஆட்டோ இருபது கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் அது அதிசயம். அவர் மட்டும் சாலை வரி செலுத்துபவர் போல நடு சாலையில் செல்வார். சில தக்ஷிணாமூர்த்திகள் இந்தப் பாராவின் முதல் வரியை பொய்யாக்கும் வகையில் பேண்ட்டோடும் உலவுவார்கள்.

3. சவாரி ஆட்டோ
ரோடில் மையமாக இருபது கி.மீயில் இம்மியளவும் வலது இடது திரும்பாமல் ரசமட்டம் பிடித்தாற்போல் ஒரே நேர்கோட்டில் சென்றால் அது சவாரி ஆட்டோ. ஹார்ன் அடித்து முன்னால் சென்று முறைத்தால் “போடா கய்தே” என்னும் பட்டம் உங்களுக்கு நடுரோட்டில் வழங்கப்படும்.

4. சவாரி எதிர்நோக்கும் ஆட்டோ
சாலையின் இடது ஓரத்தில் இருந்து பத்து அடி உள்ளே மித வேகத்துடன் சென்று கொண்டிருக்கும், மனைவி பிள்ளைகளுடன் பிராணாவஸ்தையில் நிற்கும் கணவர்களைப் பார்த்தோ, யாரையோ எதிர் நோக்கும் உதட்டுச் சாய புஷ்டியான இளம் பெண்ணிடமோ, தேமேன்னு ஓரமாக நிற்கும் தேசல் பாட்டியையோ சாலையின் இருமருங்கிலும் பார்த்தால் சடாரென்று எந்த பக்கமாக இருந்தாலும் பல்டியடித்துத் திருப்பி தலையை வெளியே நீட்டி "எங்க போணும்?" என்றால் அது சவாரி எதிர்நோக்கும் ஆட்டோ. ஆனால் நீங்கள் எந்தத்திசைக்கு கூப்பிடுகிறீர்களோ அத்திசைக்கு கும்பிடு  போட்ட “அங்கெல்லாம் வராது” என்று பதிலுரைப்பர்.

5. "டர்" ஆட்டோ
ஒரு தகர டப்பாவில் கயிறு கட்டி, தார் சாலையில் கட்டி வேகமாக இழுத்தால் வரும் சப்தம் கேட்டால் அது ஒரு நவீன யுக சப்த ஆட்டோ. ஊர் திருவிழாக்களில் மரணக்கிணறு என்று ஒரு ஐட்டம் உண்டு. கிணறு போன்ற ஒரு பள்ளத்தில் படிகட்டி ஒரு மோட்டார்பைக்கில் காது குடையும் சப்தத்துடன் வேகமாக மேலும் கீழும் மரணவேகத்தில் ஒட்டுவர். அதுபோன்று "டர்ர்ர்ர்ர்ர்ர்ர்................................." என்ற ஒலியுடன் ஒளி என சென்று கேட்டவர்களின் காதை கே. காதாக மாற்றும் ஒலி மாசு ஆட்டோ.

6. "ஷேர்" ஆட்டோ
ஆண் பெண், மணமானவர் ஆகாதவர், கிழவன் கிழவி, குளித்தவர் குளிக்காதவர், உடலுக்கு/சட்டைக்கு நாற்ற மருந்து அடித்தவர் அடிக்காதவர், ஒல்லி பெண் குண்டு பையன், ஒல்லி பையன் குண்டு பெண்மணி, மொபைலில் சதா சிரித்துப் பேசிக்கொண்டே பயணம் செய்பவர், வெளியே வேடிக்கை பார்த்து உள்ளே பக்கத்து பெண்ணின் பேச்சை கேட்பவர்கள், நடுத்தர வயது, முடி உள்ளவர், முன் பின் சொட்டை, மஞ்சள் துணிப்பை வைத்திருப்பவர், ஆபீஸ் பேக் சுமப்பவர், இளவயது ஜோடி, சில்லரை வைத்திருப்பவர் இல்லாதவர், அரசுப் பணி தனியார் பணி சொந்த 'தொழில்' செய்பவர், சேலை அணிந்திருப்பவர் சுடிதார் போட்டவர், கண்ணாடி அணிந்தவர் அணியாதவர், ஹிந்தி பேசுபவர் 'தமிலில்' பேசுபவர்கள் என பால், மொழி, இன, மத வேறுபாடுகளின்றி ஒரே சவாரியில் அரை பஸ் கூட்டத்தை ஏற்றி பயணத்திற்கு பத்து ரூபாய்க்கு வருவது இந்த பங்குச்சந்தை(ஷேர்) ஆட்டோ.

இந்த பிரிவுகளுக்கு அப்பாற்பட்ட நல்ல உள்ளம் படைத்த ஆட்டோகாரர்கள் இப்பட்டியலுக்காக என்னை மன்னிப்பார்களாக! ஏதேனும் தவறிருப்பின்.

பின் குறிப்பு: இதை எழுதும் போது வெகு தொலைவிலிருந்து எஸ்.பி.பி "நான் ஆட்டோக்காரன்.... ஆட்டோக்காரன்..... நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்"  என்று ரஜினிக்காக பாடிக்கொண்டிருப்பது மெலிதாக காதில் விழுந்தது.
படம் நன்றி: http://www.rickshawchallenge.com
 -

Monday, July 18, 2011

சனியின் ஆதிக்கத்தில் சர்வர்கள்!

துஷ்ட கிரஹங்கள் மற்றும் துர்தேவதைகள் எல்லாம் அமாவாசை பௌர்ணமி போன்ற தினங்களில் மிகவும் உக்கிரமாக தாண்டவமாடுமாம். அதனால் தான் அலைகடல் கூட அந்த நாட்களில் பேரிரைச்சலுடனும் கொந்தளிப்புடனும் காணப்படும். நாம் அன்றாடம் மாரடிக்கும் இந்த இயந்திரப் பிசாசுகளுக்கு எப்படித்தான் வீக் எண்டுனு தெரியுமோ? கொஞ்சம் கொஞ்சமாக சுதி இறங்கி சனிக்கிழமை காலையில் ஒரேடியாக மண்டையைப் போட்டு படுத்துப் போர்வையை இழுத்து தலையோடுகால் போர்த்திக்கொள்ளும். நம்முடைய வாரக்கடைசியை கழுத்தை நெறித்துக் கொன்றால் தான் இவைகளுக்கு பரம திருப்தி. நம் உயிரை எடுக்கும்; வாட்டி வதைக்கும் உயிரற்ற வஸ்த்துக்கள்.

ஒரு கல்யாணம், காதுகுத்து என்று விசேஷங்களுக்கு பாஸிடம் லீவு கேட்கும் முன் இந்த சர்வர் எஜமான் முன் நின்று "ஐயா! சாமி! நான் என் புள்ளக்குட்டிகூட வெளியூர் போறேன். நல்லபடியா போய்ட்டுவான்னு ஆசீர்வாதம் பண்ணுங்க" என்று மானசீகமாக வேண்டிக்கொண்டு பிரயாணம் மேற்கொள்ள வேண்டும். தவறினால் ஊர் எல்லைத் தாண்டும் முன் நோக்கியா ட்யூனில் மொபைல் கதறி காது சூடேறும் வரையிலும் பாட்டரி ட்ரைன் ஆகும் வரையிலும் தீர்வு வரும் வரையிலும் போகவேண்டிய ஊர் வரை காதும் மொபைலும் ஒட்டி வைத்த போஸில் லோல்பட வேண்டியிருக்கும். ஃபேமிலியுடன் Physically present. Mentally absent என்றாகி விடும். அப்புறம் வீட்டிலுள்ளோர் "மெண்டல் ப்ரெசென்ட்"என்று கூறி எள்ளி நகையாடுவார்கள்.

வெள்ளி இரவோ, சனி காலையிலோ "சார்! கிடைக்கலை" அப்படின்னு அலுவலகத்திலிருந்து குறுஞ்செய்தியாகவோ, மொபைல் மூலம் செவிவழிச் செய்தியாகவோ கிடைத்தால் எல்லையோர இராணுவ வீரனைவிட சுதாரிப்பாக பல முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் பயனாளர்களுக்கு ஒரு ஃபோன் போட்டு "உயர்திரு ஐயா, மன்னித்துக் கொள்ளுங்கள். ஏதோ சிறு தொழில்நுட்பப் பழுது ஆகிவிட்டது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எழுப்பிவிடுகிறோம்" என்று தண்டன் சமர்பித்து விஞ்ஞாபனம் செய்து விட வேண்டும். ஃபோனில் அவர்களை பிடிக்கமுடியவில்லை என்றால் respect -ஆக ஒரு மெயில் அனுப்பவேண்டும். வித் ரிகார்ட்ஸ் கட்டாயம் மெயிலின் காலடியில் போடவேண்டும்.

மாப்பிள்ளை முறுக்கோடு "அது எப்படி ஆகும். எவ்ளோ செலவு செய்தாலும் ஒன்றும் உருப்படி இல்லை."  ஆச்சா போச்சா என்று வானத்திற்கும் பூமிக்குமாய் குதிப்பவர்களுக்கு புன்னகையை முகத்தில் அணிந்து பொறுமையே வடிவான சாந்த சொரூபியாக நின்றால் பிழைத்தீர்கள். ஒரு வார்த்தை "இல்ல சார்.... அது வந்து...." என்று சாக்கு சொல்ல ஆரம்பித்தால் உங்கள் கதை கந்தல். வாயாலேயே புரட்டி புரட்டி எடுத்துவிடுவார்கள். விழுந்து விழுந்து தாஸான தாஸனாக சேவை புரிந்தாலும் கடைசியில் பயனாளர்கள் "இந்த ஐ.டி டிபார்ட்மென்ட்டே சுத்த வேஸ்ட். ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லை" ன்னு நாலு வார்த்தை நாக்கு மேல பல்லைப் போட்டு ஏசாமல் இருக்க மாட்டார்கள்.

உட்கார்ந்த சர்வரை எழுப்புவது அவ்வளவு லேசுப்பட்ட காரியமல்ல. முதலில் சர்வரை நாம் புதுப் பெட்டியோடு வாங்கிக் கொண்டு வந்த முதலாளியை  நடுக்கடலில் மூழ்கியோர் எஸ்.ஓ.எஸ் குரலெழுப்பும் பாணியில் கதறி, கசிந்துருகி, கண்ணீர் மல்கி கூப்பிடவேண்டும். அவருக்கு மாமன் மச்சினர்களுக்கு தட்டுநிறைய பூ, பழம், வெற்றிலைப் பாக்கோடு பத்திரிகை வைப்பது போல, சர்வரின் முழு ஜாதகத்தையும் மெயிலில் "கனவான்களே! நீங்கள் கொடுத்த சர்வர் கட்டையை நீட்டிப் படுத்துவிட்டது. உடனடியாக கவனிக்க உங்கள் ஆட்களை அனுப்பவும்"  என்று எழுதி "அவசரம்! அவசரம்!" என்று Subject:-இல் இட்டு டாப் ப்ரியாரிட்டி மார்க் செய்து அனுப்பவேண்டும். மெயில் போய் சேரும் முன் ஒரு முறை ஃபோனில் கூப்பிட்டு பேசிவிடுவது உத்தமம்.

நம்முடைய சப்போர்ட் அக்ரீமென்ட்டை பொறுத்து "கையில ஆளே இல்லையே" "பசங்க எல்லாம் கஸ்டமர் ப்ளேசுக்கு போயிருக்காங்க" "வந்தவுடனே ஃபர்ஸ்ட் கால் உங்களுதுதான்" என்று பல டயலாக்குகளை அள்ளி வீசுவார்கள். உடனே மறுமுனையில் "சரி ஆமாம் ஓ.கே" போன்ற தலையாட்டி ஒத்துக்கொள்ளும் பூம்பூம் மாடு வார்த்தைகளை உதிர்த்துவிட்டீர்கள் என்றால் போயே போச்சு. குடி கெட்டது. நாலு நாள் கழித்து வந்து இருக்கோமா செத்தோமா என்று எட்டிப் பார்ப்பார்கள். "இன்றைக்கே வந்து பார்த்தால்தான் எங்களின் நூறு கோடி ரூபாய் பிசினஸ் செழிக்கும். இல்லையேல் என்னுடைய சீட்டைக் கிழித்து விடுவார்கள்" என்று கூவ வேண்டும். முடிந்தால் ரெண்டு சொட்டு கண்ணீர் கூட விட்டுக் காட்டி ஃபோனிலேயே மூக்கைச் சிந்தலாம். பலனிருக்கும்.

ஒரு குரல் அழுத பிறகு, சப்போர்ட்டுக்கு ஒரு ஆள் அனுப்புவார்கள். முதலில் நமக்கு சர்வர் கொடுத்த நாட்களில் அட்டென்ட் செய்த பிள்ளையாண்டானை வேறு எங்காவது கண்காணாத சைட்டுக்கு அனுப்பிவிட்டு, "ஏதாவதுன்னா அவரை ரிமோட்ல எடுத்துக்கலாம் சார்!" என்று நமக்கு தெம்புவூட்டுவார்கள். "சரிண்ணே!" என்று ஆமாம் சாமியாக இப்போது தலையாட்டித்தான் தீரவேண்டும். அவர்களிடம் இருந்து வந்த இளைய வல்லுநர் மரக்கட்டையாய் படுத்த சர்வரை சுற்றி ஒரு முறை வந்து ஆய்வு செய்வார். "எப்டி ஆச்சு?" என்று ஃபார்மலாக ஒருமுறை துக்கம் கேட்பார். இடையிடையே "தொச்..தொச்.." என்று உச்சுக்கொட்டி ஆபிஸ் தெருமுனையில் இருந்து பைரவர் வரும்வரை ராகமாக அழைப்பார்.

முழு புராணமும் பாடிய பின்னர் ஐந்தாறு முறை Login Logout செய்து விளையாடுவார். இதை நாம் பொறுமையாக வேடிக்கை பார்க்கவேண்டும். யார்யாருக்கோ கால் செய்வார். பலபேரின் உதவிக்கரத்தை வேண்டுவார். கடைசியில் இரவு பத்து மணிக்கு, "நாளைக்கு முடிச்சிடலாம் சார்" என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டு பொட்டியைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்.

மறுநாள் சர்வர் பார்க்க வருபவர் அன்றைக்குத்தான் கம்பெனியில் சேர்ந்து முதல் கையெழுத்து போட்டிருப்பார்.  வேலை கற்றுக்கொள்ள அப்ப்ரண்டீசாக நம்மிடம் அனுப்பிவைப்பார்கள். "என்ன ஆச்சு?" என்று தாவாங்கட்டைக்கு முட்டுக்கொடுத்து சோகத்தோடு கேட்பார். மீண்டும் இவருக்கும் அந்த சர்வர் புட்டுகிட்ட கதையை உருக்கமாக சொல்லவேண்டும். மீண்டும் Login Logout ஆட்டம் ஆரம்பித்துவிடும். நாம் "நீ ஆணியே புடுங்க வேண்டாம்" என்று வெறுத்துவிடுவோம். உங்களுடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருந்தால், குல தெய்வ வழிபாடுகளை செம்மையாக வருஷம் தவறாமல் செய்து இஷ்ட தெய்வங்களை குளிர்வித்திருந்தால் எனக்கு சர்வர் அப் ஆனது போல உங்களுக்கும் ஓரிரு நாட்களில் நல்லது நடக்கலாம். இல்லையேல் திக்கற்றவர்க்கு தெய்வமே துணை. ஈஸ்வரோ ரக்ஷிது.

இவ்வளவு வருஷங்களாக அப்டேட்  அப்டேட் என்று ஒன்று விடாமல் போஷாக்காக வளர்த்ததை எல்லாம் ஓரிரவில் அந்த சர்வருக்கு ஊட்டவேண்டும். ஐந்து வயசில் காலரா தடுப்பூசி, ஆறுவயதில் மலேரியா தடுப்பூசி, எட்டுவயதில் பன்றிக் காய்ச்சல் என்று சிறுவயதிலிருந்து இதுகாறும் நாம் கொடுத்து வந்த தடுப்பூசிகள் அனைத்தையும் ஒரே ஷாட்டில் பாடச் பாட்ச்களாக (patches) ஏற்றி முடிக்க வேண்டும். ஆன்ட்டி வைரஸ், ஆன்ட்டி ஸ்பாம் என்று சர்வரின் பரிவார துவாரபாலகர்கள் இருவரையும் ஒருசேர நிற்கவைத்து அவரை ஓட விடுவது வானத்தை வில்லாக வளைப்பதற்கு சமானம்.

ஹோட்டல் சர்வரிடம் “ஏம்ப்பா! இன்னும் தோசை வரலையா” என்ற தொனியில் “என்னப்பா ஆச்சா?” என்று நச்சரிக்கும் கைபேசி எனும் கொலைபேசி அழைப்புகளை “ஒரு அரை அவர் ஆகும் சார்!" "இன்னும் ஜஸ்ட் பிஃப்டீன் மினிட்ஸ்” "டூ மினிட்ஸ்" என்று ராக்கெட் கவுன்ட்டவுன் கொடுத்து 'ஹிஹி'த்து பேசி அவர்கள் முகம் கோணாமல் மனம் நோகாமல் நடந்துகொள்ள வேண்டும். இல்லையேல் "இந்தா! பிடி சாபம். ஏழேழு ஜென்மத்துக்கும் நீ ஐ.டி துறையில் குப்பை கொட்டக் கடவது" என்று துர்வாஸர் போல சபித்து விடுவார்கள்.

இப்படி அப்டேட்டோ அல்லது கட்டையை நீட்டிய அந்த சர்வர் சார்ந்தவைகளையும் வரிசைக்கிரமாக அள்ளிப் போடவேண்டும். மாற்றிக் கொடுத்தால் "ச்சீ போ!" என்று விரட்டியும் "இது எனக்கு வேண்டாம் போ" என்றும் துப்பி நம்மை விரட்டிவிடும். பொறுமையாக ஒன்றன் பின் ஒன்றாக தட்டிக் கொடுத்து உள் நுழைத்து அவரை எழுப்பவேண்டும்.எழுந்து நின்று ஓட ஆரம்பித்த சர்வர் சௌக்கியமாக இருப்பார் என்று உடனே உத்திரவாதம் தரமுடியாது. ஐ.சி.யு பேஷண்டுகளை எப்படி ஆப்செர்வேஷனில் வைத்திருப்பார்களோ அது போல "ரெண்டு நாள் பார்த்துட்டு சொல்றோம்" என்று சொல்லி நமது துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்களிடம் விண்ணப்பிக்கவேண்டும். "முடிந்தது?" என்று சொல்லிவிட்டால் காலை க்ளோஸ் செய்துவிட்டு பறந்துவிடுவார்கள். மீண்டும் வலைவீசி பிடிக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவீர்கள். ஜாக்கிரதை!!

இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு ஆசுவாசமாக டேபிளில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கும் போது "என்ன சார்! சர்வர்லாம் சரியாயிடுச்சு போலருக்கு" என்று அலுவலகத்தில் 'ராசி'யான வாக்குச் 'சுத்தமான' ஆள் யாராவது சிரித்துக்கொண்டே விசாரித்தால் அடிவயிற்றில் கதிகலங்கும். டீ உள்ளுக்குள் இறங்காது.

பின் குறிப்பு: இதை ஒரு சர்வர் படுத்திய பாடாகவும் படித்து மகிழலாம். என் துறையில் பணிபுரிவோர் நிச்சயம் இதுபோல அனுபவத்திருக்கலாம். அனுபவம் இல்லாதோர் இதை ஒரு டம்மீஸ் கைடாக பயன்படுத்தலாம். ஆரம்பித்த க்ரைம் ஸ்டோரியை பலரின் ஊகத்திற்கு இடம் கொடுக்காமல் முடிக்க வேண்டும். பராசக்தி! சக்தி கொடு!!

பட உதவி: http://www.techday.co.nz
-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails