Wednesday, May 30, 2012

உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா

அர்பணிப்புப் பாடல்கள், அர்த்தபுஷ்டிக் கட்டுரைகள், வியக்கவைக்கும் கதைகள், பொருள் பொதிந்த கவிதைகள், ஐன்ஸ்டீன் விஞ்ஞானம் என்று முழுமூச்சாக முகப்புஸ்தகலிக்கியத்தில் இயங்குபவர்கள் மத்தியில் ஏதேனும் உருப்படியாக எழுதவேண்டும் என்று நினைத்தாலும் ரெண்டுங்கெட்டானாக எதாவது கிறுக்கிப் பொழுதைப் போக்குகிறேன். உடனடி லாட்டரி போன்று தடாலடியாக உரசிப் பார்த்து ”நல்லாயிருக்கு.. நல்லாயில்லை” என்று சர்ட்டிஃபிக்கேட் தர ஒரு நண்பர் பட்டாளம் சேர்ந்துவிட்டதால் அங்கேயே பெரும்பொழுதைக் கழிக்கிறேன். என்னுடைய பிறந்தவீடான ப்ளாகிற்கு அதிலிருந்து சில விஷயங்களை திண்ணைக் கச்சேரியாக இங்கு பகிர்கிறேன்.

********சமூகசேவை*********
ஜிகுஜிகு உடையணிந்த அழகு தேவதைகள் கூட்டமாக சுற்றி வந்து லாலிலல்லி பாடுகிறார்கள். லாப்டாப்பில் கொக்கோகப் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது விதையில்லாத திராட்சையும் மன்மதன் தோட்டத்து முந்திரியும் தங்கத் தாம்பாளங்களில் பரப்பி ஊட்டி விடுகிறார்கள். வைரமும் வெள்ளியும் பணமும் அறையின் மூலை முடுக்கெல்லாம் குவியல் குவியலாகக் கொட்டிக்கிடக்கின்றன. ஏழெட்டு தன்னார்வலர்கள் பன்நாட்டு வர்த்தகத்தை 24x7 கவனித்துக்கொள்கிறார்கள். காலையும் மாலையும் ஊருக்குப் போதனை. இரவில் உள்ளுக்குப் போதை. வாழ்க்கை உல்லாசமாகக் கழிகிறது. திடீரென்று ஒருநாள் இரும்புக் குழாயை எடுத்து பின்னந்தலையில் ”டங்...”கென்று அடித்து கபாலத்தைப் பிளக்கிறான் கயவன் ஒருவன். பாதியில் உடைத்துக்கொண்ட பைப் போல செங்குருதி தலையிலிருந்து பீய்ச்சி சுற்றிலும் அடிக்கிறது. வெள்ளைச் சுவரெல்லாம் பளிங்குத் தரையெல்லாம் திட்டுத்திட்டாக இரத்தச் சேறு.

உடம்பெல்லாம் வெலவெலக்க வியர்த்து விறுவிறுத்துத் திடுக்கிட்டு எழுந்தான் உத்தமபுத்திரன்.

“என்னாச்சு?” பக்கத்தில் படுத்திருந்த ஃப்ரெண்ட் கேட்டான்.

“ச்சே. ஒரு கனவு”

“என்ன கெட்ட கனவா?”

”பாதி நல்லது பாதி கெட்டது”

“எப்புடீ”

“காவியும் ருத்ராட்சமுமா பளபளன்னு நான் சாமியாரா சமூகசேவை செஞ்சுகிட்டு இருக்கேன்... அப்போ....”

(இப்போது ஒரு முறை முதல் பாராவைப் படிக்கவும்)
 
*******”உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா.....”*********


இளையராஜாவைத் தவிர்த்து யாரும் இந்தப் பாடலுக்கு மெட்டமைக்க முடியாது. வாணி ஜெயராமின் குரலில் எதிரொலிக்கும் அந்த ஏக்கம் தீபாவின் முகத்தின் வழியாக திரையில் வழிகிறது. உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா என்று சொல்லி அடுத்தடுத்த கட்டமாக வண்டியை மைனர் நகர்த்தும் போது அமைத்த அந்த மலைப்பாதை காட்சியமைப்பும் அதற்கு பக்கபலமாக பின்னணியில் ஒலிக்கும் இளையராஜாவின் இசையும் காலம் கடந்து நிற்கும். க்ளாஸிக் பாடல். மதுவந்தி ராகம்!! போதையாக இருக்கிறது.

ராஜா துள்ளி விளையாண்டிருக்கும் என்னுள்ளில் எங்கோ....





**********வீட்டுக்கு வெள்ளை ***********
 ”டேய்! வீட்டுக்கு வெள்ளையடிச்சா மாதிரி இருக்குப் பாருடா”

என்று உடம்பெல்லாம் திருநீறு பூசிய வாரியார் சுவாமிகளைப் பார்த்து ஒருவன் கேலி செய்தானாம். அறிவில் பெரியவரான வாரியார் அமைதியாக அவனைப் பார்த்து புன்னகைத்து

“அப்பா! குடியிருக்கிற வீட்டுக்குதான் வெள்ளையடிப்பாங்க.. குட்டிச்சுவத்துக்கு இல்லை” என்றாராம்.

#காலையில் விஜய் டிவி பக்தித் திருவிழாவில் கேட்டது!!

*********கலகலப்பு@மசாலா கேஃப்: ***************

லாஜிக் இல்லாமல் மேஜிக் காட்டியிருக்கிறார்கள். கட்டையை எடுத்து மண்டையில் போடுவது, சீரியஸாக பேசி காமடி செய்வது என்று டிபிகல் சுந்தர்.சி படம். ரெண்டு ஹீரோ ரெண்டு ஹீரோயின் ரெண்டு வில்லன் நாலு பாட்டு படம் பூரா வெடிச் சிரிப்புன்னு ரவுண்டு கட்டி கலக்கியிருக்கிறார்கள்.

கேபிளார் (Sankar Narayan) வசன உதவியில் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. எங்கேயும் எப்போதும்மில் நடித்த அஞ்சலியா என்று ஒருமுறை கிள்ளிப்பார்க்கத் தோன்றுகிறது.(நம்மை நாமே கிள்ளிப்பார்க்கத் தோன்றுகிறது என்று எழுதியிருக்கவேண்டும்). எக்கச்சக்க தாராளம்.

படத்தில் ரகுவாக நடித்திருந்த சிவாவும் எங்கள் பின்னால் உட்கார்ந்திருந்தது இந்த துப்பறியும் சாம்புவால் இடைவேளையில் கண்டுபிடிக்கப்பட்டது. பக்கத்தில் போய் கை குலுக்கும்போது இடது கையால் முகத்தை மறைத்துக்கொண்டு ”படம் முடிஞ்சு பார்க்கலாமே! ப்ளீஸ்” என்று பணிவுடன் கேட்டு எங்களைவிட்டு அகன்று நட்சத்திரமாகிக் கொண்டார்.

இரண்டாவது பாதியில் நகைச்சுவைக்கு பஞ்சமேயில்லாமல் பல் சுளுக்கும் வரை சிரிக்கவைக்கிறார் சந்தானம். போதாக்குறைக்கு மனோபாலா வேறு ஈர்க்குச்சி உடம்பால் பல பயில்வான்களை கிச்சுகிச்சுவில் புரட்டிப்போட்டுவிடுகிறார்.

படம் முடிந்து இரண்டு வார்த்தைகள் சிவாவிடம் பேசுவிட்டு வந்தேன். 7 டிகிரிக்கு குனிந்து நெஞ்சில் வலது கரம் வைத்து என்னுடைய “நல்லா பண்ணியிருக்கீங்க”வைப் பெற்றுக்கொண்டார்.

அழுத்தம் நிறைந்த இக்காலகட்டத்தில் காசு கொடுத்து அழ விருப்பம் இல்லாத காரணத்தினால் சத்தியம் புன்னகை மன்னர்களால் நிரம்பியிருந்தது.

வயிறு வலிக்கச் சிரிச்சாச்சு. ஒரு முறை மகாநதி பார்க்கணும்.
 

***********ஓடுண்டு கந்தையுண்டு **************

ஸில்வர் ஸ்பூனோடு இம்மண்ணில் அவதரித்த அவதூதர் பட்டினத்தார். காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்ற ஞானம் ஏற்பட்ட பின்னர் இறைவன் திருவடிகளைத் தொழுது ஞாலத்திற்காக நிறையப் பாடினார். துறவிகளுக்குண்டான லக்ஷணங்களை ஒரு பாடலில் சொல்கிறார். படிக்கிற நமக்கே சுரீர் என்கிறது. காவி உடுத்துபவர்களுக்கு உரைக்கவில்லையே! சர்வாலங்கார பூஷிதர்களாக இருக்கும் ஆண்டிகள் ஓடுண்டு, கந்தையுண்டு என்கிற மூன்றாவது வரியைப் படித்திருப்பார்களா?

மாடுண்டு கன்றுண்டு மக்களுண்டென்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டெனும்படி கேட்டுவிட்டோ மினிக்கேண் மனமே
யோடுண்டு கந்தையுண்டுள்ளே யெழுத்தைந்து மோதவுண்டு
தோடுண்ட கண்டனடியார் நமக்குத் துணையுமுண்டே
--பட்டினத்தார்

வினை தீர்த்தவனை வேண்டும் இப்பாடலில் புலன்கள் ஒவ்வொன்றும் சிற்றின்பங்களில் ஈடுபட ஈடுபாடேயில்லாமல் செய்யும் பூசைகளை நீ எவ்வாறு ஏற்றுக்கொள்வாய் என்று சீறுகிறார்.

கையொன்று செய்யவிழியொன்று நாடக் கருத்தொன்றெண்ணப்
பொய்யொன்று வஞ்சகநாவொன்றுபேசப் புலால்கமழு
மெய்யொன்றுசாரச் செவியொன்று கேட்க விரும்புமியான்
செய்கின்ற பூசையெவ்வாறு கொள்வாய் வினைதீர்த்தவனே.
--பட்டினத்தார்

#பொருள் பொதிந்த பாடல்கள். பொருள் தேடுபவர்களுக்கும் அருள் தேடுபவர்களுக்கும் செய்திகள் நிறைய!!


**********அதிகாரம்*************
”ரெண்டு கேன்வாஸ் எடுங்க” அதிகாரமாய் குரல் வந்த திக்கில் நாலரை அடிக்கு அம்மா ஒருவர் ரெண்டு அடி வளர்ந்த தன் குழந்தைக்கு ஷூ கேட்டார்.

“நா இல்லீங்க... அவர்ட்ட.....” என்ற என்னுடைய தயக்கமான இழுவைக்கு “சொல்லுங்க மேடம்..” என்று பாட்டாக்காரர் பறந்து பந்தோபஸ்த்துக்கு வந்தார்.

அதன்பிறகு 5 முறை ”ஸாரி...ஸாரி” என்று அந்த சுடிதார் பெண்மணி மாப்புக் கேட்டு அந்தப் பக்கம் காலணி வாங்க வந்த எல்லோருக்கும் என்னை ”இவர் பாட்டாக்காரர் அல்ல” என்று அறிமுகப்படுத்திவைத்தார்.

#சிகப்புக் கலர் பனியன் போட்டதால் வந்த வினை! 

*********நடுநிசி மருத்துவர்கள் ***************
நேற்றிரவு ந்யூரோ ஸ்பெஷலிஸ்டிடம் சதாபிஷேகம் கண்டவர்கள் எல்லா சேர்களிலும் பளபளவென்று காத்திருந்திருந்தார்கள். வியாதியஸ்தர்கள் மற்றும் பேய் பிசாசு பிடித்தவர்களுக்கு ராத்தூக்கம் வராது என்பார்கள். டீக்காக இன் ஷர்ட் பண்ணிய தாத்தாக்களும் மற்றும் ஜீன்ஸ் பேத்திகளுடன் வந்த எந்தப் பாட்டிகளுக்கும் கண்ணில் பொட்டுத் தூக்கம் இல்லை! ஒவ்வொருவரும் டாக்டரிடம் அரை மணிநேரம் லோகாதய சமாச்சாரங்கள் பேசி வம்பளக்கும் திறமை படைத்தவர்கள்.

சென்னை வந்துதான் இதுபோல நடுநிசி வரை டாக்டர்கள் ஸ்டெத்தும் கழுத்துமாகத் தொழில் பார்ப்பதைப் பார்க்கிறேன். வயதானவர்களை அழைத்துக்கொண்டு க்ளினிக் போக வேண்டும் என்றாலே அன்றைக்கு சிவராத்திரிதான். மன்னையில் மாக்ஸிமம் ஒன்பது மணிக்கு க்ளினிக் நடை சார்த்திவிடுவார்கள். டாக்டர் ப்ரேம்மோஹனாக இருந்தாலும் சரி.. அல்லது டாக்டர் சந்திரசேகராக இருந்தாலும் சரி... 


***********கொரியர்களைப் பிடிக்கவில்லை **************
கொரியர்களைக் கண்டால் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர்களது குச்சிக் குச்சி முடிக்கோ சப்பை மூக்கிற்கோ குந்துமணி கண்ணிற்கோ இல்லை. இந்தியர்களை டமாரச் செவிடர்களாகப் பாவித்து வடிவமைத்த செல்ஃபோன்களை நமது சந்தையில் ஊடுருவ விட்டிருக்கிறார்கள்.

ஒரு அவசரத்திற்கு ரோட்டரி ஹாஸ்பிடல் சென்றால் மார்கழி மாத கூம்பு ஸ்பீக்கரை முழுங்கியது போல ஒரு செல்ஃபோன் முழங்கியது. கூர்ந்து நோக்கியதில் நோக்கியா போலிருந்தது. பெட்டில் வலியோடு படுத்திருந்தவர்களுக்கு ஹாஸ்பிடல் உள்ளே ஆம்புலன்ஸ் புகுந்தது போல இருந்திருக்கும். வியாதியின் உச்சத்தில் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு எமதர்மராஜாவின் வாகனத்தின் கூப்பாடு போலக் கூட கேட்டிருக்கும்.

கிட்டத்தில் பைலட் போல ஹெட்செட் மாட்டியிருந்தவரிடம் “என்ன மாடல்” என்று கேட்ட போது “அது கொரியன் செட்டு” என்றார். என்ன செட்டு? பெரிய ஷேவிங் செட்டு!!
  
-
 

Friday, May 25, 2012

வீடு வாங்கலையோ வீடு

”பெருமாட்டுநல்லூர் தெரியுமா?” இந்த ஒரே வினாவில் சென்ற ஞாயிற்றுக்கிழமை என்னை என் காரிலேயே நாடுகடத்தினார் நண்பர் பெருந்தகை ஒருவர்.

“இல்லீங்க.. எங்க இருக்கு?” என்று புருவம் சுருக்கினேன்.

“தெரியாதா?” என்று பிறந்த ஊரை மறந்தவன் போல என்னை ஏளனமாகப் பார்த்தார்.

“என்ன சார்! ஏதோ ஐஸ்வர்யாராயைத் தெரியாதுன்னு சொன்னா மாதிரிக் கேவலமாப் பாக்குறீங்க. பெருமாட்டு நல்லூரும் தெரியாது சிறுமாட்டு நல்லூரும் எனக்குத் தெல்லேது” என்றேன் அப்பாவியாய்.

“கூடுவாஞ்சேரி சிக்னலோட லெஃப்ட்ல கட் பண்ணினா கூப்பிடு தூரத்தில வரும்” என்று கொக்கி போட்டார்.

“கூ..ஊஊஊஊஊ.....டுவாஞ்சேரி பக்கத்துலையா?” என்று வாயாலேயே வண்டி ஓட்டிக் காண்பித்த என் கேள்விக்கு கூடுவாஞ்சேரி என்பது இந்த நந்தன வருஷத்திலிருந்து சென்னையின் சைதாப்பேட்டை, டி.நகர், மயிலாப்பூர் என்பது போன்ற ஷகரான ஏரியா என்றும் இந்த லோகத்தில் ஸகல ஸம்பத்துகளும் அங்கு கிடைக்கிறது என்றும் ஒரு முறை விஸிட் செய்தால் மோட்சம் கிட்டும் என்றும் என்னைத் தள்ளிக்கொண்டு போனார் அந்த (ஃ)ப்ளாட் விற்கும் நண்பர். ஒரு கணிசமான கமிஷன் அவருக்கு காத்திருக்கிறது என்பது அவரது தூண்டில் போடும் துடிப்பானப் பேச்சில் தெரிந்தது.

நம்மிடம் இன்னொரு வீடு வாங்கும் அளவிற்கு ஐவேஜு இல்லை என்றாலும் அவர் என் கையை விடுவதாக இல்லை. “ஒரு இன்வெஸ்ட்மெண்ட்க்காக வாங்குங்க” என்று வற்புறுத்தினார். “இன்வெஸ்ட்மெண்ட்டுக்கு இன்வெஸ்ட் பண்ண ஒரு இன்வெஸ்ட்மெண்ட் வேணுமில்ல” என்று சீரியஸாக விசு பாணியில் கேட்டாலும் அதை ஜோக்காக எடுத்துக்கொண்டு குலுங்கிச் சிரித்துவிட்டு “ஒரு தடவை பாருங்களேன்!” என்று அவரது விழிகளில் என்னுடைய வீடு வாங்கும் கனவோடு என் பதிலுக்காக ஆவலாகக் காத்திருந்தார். அன்புக்கு அடிமையான நான் அந்தச் சொற்களில் சரண்டர் ஆனேன்!

சூரியன் எனது காரின் ஏசியை சோதித்துப்பார்க்கட்டும் என்று இறுமாப்போடு சரியாக ஒரு மணிக்கு மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் புறப்பட்டோம். அனல் சுட்டெரித்துப் புழுங்கியது. ’அவன்’னில் இட்ட அரிசி போல வெந்துபோனோம். சென்னையின் தாகம் தீர்க்கும் தண்ணீர்ப் பந்தல்கள் வெறும் பானையோடு குடிக்க ஆளின்றி தாகமாக நின்றிருந்தது. நம்மைப் போல கூண்டில் அடைபடாத மிருகங்கள் வண்டலூரில் அடைத்த மிருகங்களைப் பார்க்க மந்தை மந்தையாய் போய்க்கொண்டிருந்தார்கள். பச்சை விழுந்ததும் காதல் தோல்வியில் ப்ராணஹத்தி செய்துகொள்ளும் பவுடர் கலையாத சினிமா ஹீரோயின் போல ஓடி வந்த அந்த பேரிளம் பெண்ணிற்காக ஒரு சடன் ப்ரேக் போட்டேன். டிசையர் குலுங்கியது. ஜூ தாண்டியதும் ஆக்ஸிலேட்டரை ஒரு அழுத்து அழுத்தியதில் நடு ரோட்டில் நாலு கானல் நீர்க் குட்டைகளைக் கடந்ததும் அதிசீக்கிரத்தில் கூடுவாஞ்சேரி வந்துவிட்டது.

பின்னாலிருந்து ”லெஃப்ட் லெஃப்ட்” என்ற குரலுக்கு சிக்னலில் லெஃப்ட் எடுத்தோம். ”அந்த மளிகைக் கடை பக்கத்துல நிறுத்துங்க” என்றார் ஃப்ளாட் அன்பர். வாசலில் படுத்திருந்த நாய் மேல் ஏற்றாமல் லேசாக ஒதுங்கியதும் அமரியாதையாக  காரில் உட்கார்ந்துகொண்டே ஜன்னலைத் திறந்து அக்னியில் அவிந்து போய்க்கொண்டிருந்தவரிடம் “பெருமாட்டுநல்லூர் இப்படித்தானே போகணும்” என்ற குரல் விட்டார். அவர் அசிரத்தையாக “நேரா போங்க வரும்...” என்று வாயில் புண் இருந்துப் படுத்துவது போன்று சிக்கனமாகப் பேசிவிட்டு தனதுரையை நிறுத்திக்கொண்டார்.

“ஏங்க.. உங்களுக்கு இந்த ஏரியா நல்லாத் தெரியும்னு சொன்னீங்க” என்ற எனது க்ராஸ் கொஸ்டினுக்கு “இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு” என்று இரண்டு ’ஹிஹி’க்களுடன் வழிந்தார். கும்பலாக பெரிய மாடுகள் ஹார்ன் அடிக்க ஒதுங்க மறுத்து தர்ணா செய்தன. “இதுதான் பெருமாட்டு நல்லூரோ?” என்று நக்கலடித்தேன். “பெரிய போர்டு வச்சுருப்பாங்க..இன்னும் போங்க சார்” என்று பின்னின்று வழிநடத்தினார்.

நதியோர நாகரீகங்கள் வழக்கொழிந்து போய் பொட்டல் காடு நாகரீங்கள் முளைக்கத் துவங்கியுள்ளது தெளிவாகத் தெரிந்தது. ஜிங்குச்சாங்..ஜிங்குச்சாங் என்று பச்சைக் கலரிலும் மஞ்சள் கலரிலும் ஏஷியன் பெயிண்ட்ஸ் எக்ஸ்டெர்னல் எமெல்ஷன் அடித்த வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பளீரென்று தென்பட்டன. மாநகர அவுட்டோரில் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்த செமி அர்பன் வகையறா இடம் அது. வீடுகள் குறைந்திருந்தாலும் ரோடோரத்தில் “லேஸ்” ஸும் “குர்குரே”வும் “கோலா” பாட்டிலும் சிதறிக் கிடந்தன. “குறைந்த விலை. ரெஜிஸ்ட்ரேஷன் ஃப்ரீ” என்று யார்யாரோ சுயதம்பட்டம் அடித்து அம்புக்குறி போட்டு அவர்கள் சைட்டுக்கு அம்புக்குறி போர்டு வைத்திருந்தார்கள். ஒரு டெம்போ ட்ராவலர் முழுக்க சுயவீட்டார்வலர்களை ஏற்றி என்னை முந்திச் சென்ற வாகனத்தைப் பார்த்தபோது ”என்னைப் போல் ஒருவன்” அக்கூட்டத்திலும் மாட்டியிருக்கக் கூடும் என்று என் நெஞ்சு பரிதாபத்தால் அடித்துக்கொண்டது.
  
வழி காட்டுப்பாதை போல கணக்கேயில்லாமல் நீண்டது. நம்மாளும் பேந்தப் பேந்த பார்த்துக்கொண்டே வந்தார். தூரத்தில் கடலூர், பாண்டிச்சேரியெல்லாம் கண்ணுக்குத் தெரிந்தது. “இது பாண்டிக்கு ஷார்ட்கட்டா?” என்று கேட்டதில் “ஹா..ஹா.. உங்களுக்கு எல்லாமே ஜோக்கு” என்று அந்தக் கேள்வியின் உக்கிரத்தை மாற்றி நகைச்சுவையாக்கிவிட்டார் அந்த மனுஷன்.

அவர் சொன்ன இடம் வந்தபோது இடதுபுறம் திரும்பச்சொன்னார். அந்த திருப்பத்தில் இருந்த மாடி வீட்டில் இருந்து எட்டிப் பார்த்தவர்கள் ஏதோ ஏலியன்களைப் போல வைத்த கண் வாங்காமால் பார்த்தார்கள். எனக்கே கண்ணம் சிவந்தது!

“அதோ! அங்க தெரியுது பாருங்க” என்று என் வெட்கத்தைப் பின் சீட்டிலிருந்து கலைத்தார் ஃப்.நண்பர். அவரது குதூகலத்திற்கு இரண்டி விநாடிகளுக்குப் பின்னர் வண்டி குடைசாய்வது போல  இருந்தது. ஆறடிக்கு ஆறடி யானைப்பள்ளம் ஒன்று. ஏதோ பேராபத்தில் மாட்டிக்கொண்டோமோ என்று பயந்தேன். “அப்படியே கதிர் அறுத்த வயலில் கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பிச்சுட்டாங்களோ?” என்று விசாரித்தேன். ”ச்சே..ச்சே.. இன்னும் ஒரு மாசத்தில இங்க சிமெண்ட் ரோடு போடப்போறாங்க” என்று பச்சையாய்ப் புளுகினார். பக்கத்திலிருந்த முட்புதர்களுக்குப் பின்னால் குத்த வைத்து உட்கார்ந்து நாலு பேர் கைலியுடன் சரக்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். கார் ஜன்னலைத் திறந்தால் சாராய நெடியில் நமக்கும் நட்டுக்கும் என்று தோன்றியது.

சைட் நெருங்க நெருங்க ஓரு குட்டி பீஹார் இரும்பு டெண்ட்களில் ஜாகையிருப்பது தெரிந்தது. ஏதோ ஒரு வடக்கத்திய ”ஹை..ஹை” பாஷை பின்னணியில் ஒலித்தது. கூடவே சப்ஜி வாசனையும் சேர்ந்து மணத்தது. அம்மணமாக குழந்தைகள் மூக்கொழுக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அம்மணிகள் தலைக்கு முக்காடோடு சமைத்துக்கொண்டிருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீசையில்லாத ஆண்கள் சிலர் ரிலாக்ஸ்டாக தரையில் உட்கார்ந்து காய் நகர்த்தி ஏதோ கேம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

“வேலை செய்யறது எல்லாருமே நார்த் இண்டியன்ஸ் போலருக்கு?” என்றேன்.

“லேபர் சீப். அதிக நேரம் வேலை செய்யறாங்க. எல்லாத்தையும் விட முக்கியமா இவ்ளோ கொடு அவ்ளோ கொடுன்னு கொடி பிடிக்கறதில்லை.” என்றார்.

கலால் துறை செக்போஸ்ட் போல ஒரு நீண்ட கழிக்கு சிகப்பு வர்ணம் அடித்து வழிமறித்தார்கள். கையெழுத்திட்டு உள்ளே சென்று முக்கால்வாசி முடிந்த ஃப்ளாட்டுகளை பார்வையிட்டோம்.

“இது இன்னும் எவ்ளோ வருஷத்தில டெவலப் ஆகும்?”

எண்திசைகளை நோக்கி கையை ஆட்டி நீட்டி “இங்க ஹாஸ்பிடல் இருக்கு, இங்கேயிருந்து ரெண்டு கிலோ மீட்டர்ல பாரதிய வித்யா பவன் இருக்கு, ஒரு ஷாப்பிங் மால் ஒரு கிலோ மீட்டர்ல வருது..” என்று ஒரு பத்து நிமிஷம் வாயாலேயே அனைத்து வசதிகளையும் காற்றில் செய்து காண்பித்தார் அந்த சுற்றிக் காண்பித்த மஹானுபாவர்.

“சார்! இது கேட்டட் கம்யூனிட்டி. எல்லா அம்னிட்டீஸும் கேம்பஸ் உள்ளயே வந்துடும்” என்று சொல்லிக்கொண்டிருந்த அந்த விற்பனைப் பிரதிநிதியிடம் இருந்து என் சிந்தனை கழன்று வந்து ஆத்மா வைத்து சுஜாதா எழுதியிருந்த ”எல்லாம் கிடைக்கும் ஒரு பலமாடிக் கட்டிடம்” சஃபி கதைக்குத் தாவியது.

“சரி சார்! நா அப்புறமா சொல்றேன்” என்று கைகுலுக்கிப் விடைபெறும் போது தூரத்தில் இரண்டு வடக்கத்திய ஜோடி வாக்கிங் போக அவர்களது செல்வங்கள் மணலில் உருண்டு சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்தன.

“சார்! சீக்கிரம் சொல்லிடுங்க. இந்த ஃபேஸ்ல இன்னும் நாலு வீடு தான் பாக்கியிருக்கு” என்று பின்னாலிருந்து குரல் கொடுத்தார். எனக்கு இன்னொரு வீடு வாங்கும் பாக்கியம் உள்ளதா என்று யாராவது காழியூரிடம் கேட்டுச்சொன்னால் சௌகரியமாக இருக்கும்!!

“திண்டிவனம் பக்கத்துல ஒரு லே அவுட் போட்ருக்காங்க. 3BHK, 2BHK எல்லாம் இருக்கு. அடுத்த வாரம் ஃப்ரீயா? வரீங்களா?” என்று கேட்டவரின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்குக் கூட எனக்குத் திராணியில்லை. ஜீவனற்றுப் போயிருந்தேன்.

படம்: நெட்டில் சுட்டது! :-)

-

Monday, May 21, 2012

திருநல்லம்


தரிசனம் முடித்து வெளிவருகையில் வைகலில் மொத்தமிருந்த மூன்று தெருக்களும் அலம்பித் துடைத்து விட்டாற் போல இருந்தது. விபூதி மணக்க கோயில் படி தாண்டி வந்து "கோனேரிராஜபுரம் இப்படி போலாங்களா?” கதவு திறந்து கோயில் காண்பித்த அந்த வைகல் அம்மாளிடம் கேட்டதற்கு “தோ.. இந்த மெயின் ரோடு திரும்பி நேரா ஒரு கிலோமீட்டர் போனா வந்துரும்” என்று அனுப்பிவைத்தார்கள்.

வண்டி கிளம்பியவுடன் அந்த அரணாக்கயிரில் ட்ராயர் சுற்றிய பையன் வாயில் எதையோ சப்பிக்கொண்டு கழுத்தில் கருப்புக்கயிற்றில் தொங்கிய முருகன் டாலருடன் கொஞ்ச தூரம் ஓடி வந்தான். வைகல்நாதர் ஏகாந்தியாகிவிட்டார். வைகல்நாதரைப் பார்க்க அன்றைய தினத்தில் அதற்கு மேல் யாரும் வருவார்கள் என்று தோன்றவில்லை. சேவார்த்திகளையும் குருக்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

டயர் மண் சரசரக்கவும் ஒரு ப்ளாக்கி தெருநாய் துரத்தவும் கொஞ்ச தூரம் போனதும் வைகல் ஊர் எல்லையில் ஒரு மாருதி ஆம்னி ஓரமாக தனியாளாய் நின்றுகொண்டிருந்தது. அது நின்ற கோலம் போட்ட வாசலில் “இங்கு ஜோதிடம் பார்க்கப்படும்” என்று அட்டை போர்டு தொங்கியது. ஆரூடம் பார்ப்பவரின் தரிசனத்திற்காக ப்ளாஸ்டிக் சேரில் ஒரு ஐந்தாறு பேர் எதிர்காலத்தை கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு” கேட்டுக்கொண்டிருந்தவரிடம் “கோனேரிராஜபுரம் இப்படிப் போலாங்களா?” என்றதற்கு “இந்தப் பக்கம் போய் அப்படிப் போங்க” என்று சைகையில் வீசிக் காட்டிவிட்டு “நாளானதே... ரொம்ப நாளானதே”ன்னு விட்டதை கேட்கப் போய்விட்டார்.

இடம் வலதாய் சுற்றிலும் பசுமையாய் பச்சைப் பாய் விரித்த நிலத்தைப் பார்த்துக்கொண்டே சரியாக தப்பாகப் போனேன். வண்டியகலம் இருந்த ஒரு இடுக்குத் தெருவில் போய் சந்தேகத்தில் “கோனேரிராஜபுரம்...” என்று இழுத்தவுடனேயே ”அது தெக்கால போணும்” என்று மீசைக்கு நடுவில் கொஞ்சூண்டு முகம் தெரிய இருந்த ஒரு பெரியவர் கை காட்டினார். அவரது நெஞ்சாங்கூட்டை ஒரு கிழிசல் துண்டு மூடியிருந்தது.


முற்றிலும் தென்னை ஓலைக் குடிசையையே பார்க்காத என் பெண்கள் இருவரும் ஆர்வத்தோடு எட்டிப் பார்த்தனர். இதுபோன்ற செம்மண் ரோடும், பெஞ்சு போட்ட டீக்கடையும், அடிபைப்பும், ஆட்டுக்குட்டியும் இருக்கும் குக்கிராமங்களுக்குள் சுற்றும் போது என்னுடைய காரின் கதவுகளை முழுவதும் திறந்துவிடுவது என் வாடிக்கை. புதுசாய் நாற்று நட்ட வயலிலிருந்து வரும் மண்வாசம் மனதைக் கொள்ளைகொண்டு போகும். அடுத்த வருட விசிட் வரை அதுதான் வாயு ரூப தெம்பு டானிக். பெரியவரின் பக்கத்தில் எட்டிப் பார்த்த பையன் காரின் அருகில் வந்து உள்ளே பார்த்தான். சின்னவளின் கையில் இருந்த சாம்சங் டேப்லட்டைப் பார்த்து “லேப்டாப்டா” என்று பல்லைக்காட்டி பக்கத்தில் குச்சி ஐஸ் சப்பிக்கொண்டிருந்தவனிடம் சொன்னான்.

ஜன்னலருகில் ஸ்நேகமாய் சிரித்தவனிடம் “உஹும். இது பேட்” என்றாள். முன்னும் பின்னுமாய் ஆட்டி ஸ்டியரிங்கை மாக்ஸிமம் டார்க் வளைத்து அதேயிடத்தில் திருப்பினேன். வழியில் ஒரு பாசனக் கால்வாயின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்தபோது வாத்துக்கூட்டம் ஒன்று அதில் நீந்தி எழுந்து குஞ்சுகுட்டிகளுடன் கரையேறி ”க்வாக்..க்வாக்..” என்று ஓடியது. சுற்றுவட்டாரத்தில் குச்சியோடு ரஞ்சிதா வருகிறாரா என்று எட்டிப்பார்த்தேன். நல்லவேளை இல்லை!
   
ஒதுங்க வழியில்லாமல் ஏர்கலப்பை ஏற்றிப்போய்க்கொண்டிருந்த இரட்டை மாட்டு வண்டியை ஹார்ன் அடித்துக் கிளப்பாமல் பின் தொடர்ந்தோம். கண்ணுக்கு குளிர்ச்சியான பச்சைப் பசேல் வயல்வெளி, மாட்டுவண்டி, சிறு குற்றாலமாக நீர் பொழியும் போர் செட்டு என்று அங்கே ஒரு ரம்மியமான சூழ்நிலை நிலவியது. கையில் வைத்திருந்த தேவாரப் புத்தகத்திலிருந்து சம்பந்தர் பாடிய ப்
”குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில்
தளிருந் திகழ்மேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே.”

என்ற பாடலை ஒரு முறை படித்துப் பார்த்தேன். இருபதாம் நூற்றாண்டிலும் நளிரும் வயல் சூழ்ந்திருப்பது நாம் செய்த புண்ணியமே!
 

மாட்டுவண்டி கோயிலுக்குப் பக்கத்தில் வேறு ஒரு அகலத் தெருவில் பிரிந்தவுடன் திருத்தலத்தை அடைந்தோம். இராஜகோபுரமில்லை. வாசலில் இரண்டு பிச்சைக்காரர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். முற்பகல் நேரத்தில் சிவன் கோயிலுக்கேயுரிய ஒரு மயான அமைதி வாசலில் தெரிந்தது. இங்கேயும் குருக்கள் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

கொடிமரத்தருகில் ஐந்தாறு பேர் உதிரியாய் உட்கார்ந்திருந்தார்கள். அதற்கு வலதுபுறம் ஸ்டாண்ட் இத்துப் போன ஒரு டிவிஎஸ் ஐம்பதை தூணில் சாய்த்து முட்டுக்கொடுத்து நிறுத்தியிருந்தார்கள். அதிகாரி போன்ற ஜாடையில் வெள்ளையுடையில் தூய கருப்பாக இருந்தவரிடம் “குருக்கள் இருக்காருங்களா?” என்று கேட்டேன். முகத்தை ஏற்றி “என்னாத்துக்கு?” என்று வினவியது சற்று இடறியது. ”சாமி பார்க்கதான்” என்று தழைந்தேன். “ப்ராகாரம் சுத்தி வாங்க.. காமிக்கிறேன்” என்றார் கொஞ்சம் அலுப்போடு.
   
உலகிலேயே மிகப்பெரிய சுயம்பு நடராஜர் என்று ஊர் எல்லையில் போர்டு வைத்திருந்தார்கள். நடன சபாபதி பக்கத்தில் சிவகாமி நிற்க கிரில் கதவுக்குப் பின்னால் ஆடிக்கொண்டிருந்தார். சிவசிவாவென்று உட்பிரகாரத்தை ஒரு முறைச் சுற்றி வந்தோம். திருவலம் முடித்தும் யாரும் வந்தபாடில்லை. வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வெளியில் வந்துபார்த்தபோது கனிசமாய் மக்கள் கூடியிருந்தார்கள். உச்சிகாலப் பூஜை முடிந்தவுடன் அன்னதானத்திற்காக காத்திருக்கிறார்கள் என்பது அவர்களின் பசிக் கண்களில் தெரிந்தது.

கையில் கொத்துச்சாவியுடன் அந்த மத்திம வயது கரியமேனி மெய்க்காவல் “வாங்க..” என்று நடராஜர் சன்னதி நோக்கி நகர்ந்து வந்தார். கொடிமரத்துக்கு வலதுபுறம் அவர் ஜாகையிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரது மனைவி ஈரத்தலையுடன் வெளியே தூணருகில் சாய்ந்து கொண்டு துண்டால் கேசத்தை தட்டிக்கொண்டிருந்தார்.

கற்பூரார்த்தி காண்பித்து ”சோழ ராஜா சிற்பியை பஞ்சலோகத்தில் மிகப்பெரிய நடராஜர் சிலை வடிக்கச் சொல்றார். சிற்பி எவ்வளவு தடவை செஞ்சாலும் அதுல ஒரு பங்கம் வந்துடுது. நாள் நெருங்க நெருங்க சிற்பிக்கு பயம் வந்துடுது. ராஜா ”இன்னும் ரெண்டு நாள்ல சிலை தயாரா இல்லைனா உங்க தலையை எடுத்துடுவேன் “ன்னு சொல்லிட்டான். ஒரு நாள் வாசல்ல ஒரு சிவனடியார் வந்து தாகத்துக்கு தண்ணி கேட்குறார். சுடுதண்ணியா இருந்தா தேவலாமென்கிறார். சிற்பிக்கு கோவம் வந்து ”தலையே போவப்போவுது இதுல உங்களுக்கு சுடுதண்ணியா? வேணுமின்னா பஞ்சலோகம் கொதிச்சுக்கிட்டு இருக்கு. போய் எடுத்துக் குடிங்க”ன்னு சொல்லிட்டு உள்ள போயிடறாரு.

சிவனடியார் அங்க பக்கத்துல கொதிச்சுக்கிட்டு இருக்கிற பஞ்சலோகக் குழம்பை எடுத்து குடிச்சுடறாரு. சிவனடியாரை திட்டிட்டோமேன்னு பதபதைச்சு வெளிய வாசலுக்கு ஓடி வந்துபார்த்த சிற்பிக்கு அதிர்ச்சி. வாசல்ல ஒரு நடராஜர் பஞ்சலோக சிலை இருக்கு. அதுக்கு மேலயும் அவருக்கு ஒரு அதிர்ச்சி என்னான்னா.. மார்ல ஒரு மரு. அந்த மருல ஒரு முடி. இந்த அடையாளங்கெல்லாம் அந்த சிவனடியாருக்கும் இருந்தது.” என்று சுயம்பு நடராஜரைப் பற்றிய உண்மைக் கதையைச் சொன்னார். மெய் சிலிர்த்தது! ”ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ” என்று நித்யஸ்ரீ மனசுக்குள் பக்தி சுரக்கும் கானமழை பொழிந்தார்.
 
 
மீண்டும் ஒரு முறை திருவலம் வந்தோம். வெளிப்பிரகாரத்தில் அம்மன் சந்நிதி தனிக்கோயில் போல அமைந்துள்ளது. அங்கேயே வைத்தியநாதர் சந்நிதியும் வடிவேலன் சந்நிதியும் எதிரெதிராய் அமைந்துள்ளது. “இது ரொம்ப விசேஷம். பூர்வஜென்மத்தில புண்ணியம் செஞ்சிருந்தாதான் இங்க வந்து தரிசனம் பண்ண முடியும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. சர்வ ரோக நிவாரணியாக இந்த வைத்தியநாதர் இருக்காரு” என்றார். பட்டனில்லாத சட்டையும் ஜிப்பில்லாத அரை டிராயருடனும் ஐந்தாறு பொடியன்கள் கால் சுடச்சுட ”உஸ்..உஸ்”ஸென்று எங்களுடன் வெளிப்பிரகாரம் சுற்றினார்கள். கூடவே பாவாடை சட்டையுடன் அவர்களின் அக்கா தங்கைகளும்தான்...

நிறைவான தரிசனம். கொடிமரம் அருகில் இருக்கும் சுவர்களில் ஓவியங்கள் வரைந்திருந்தது. அவற்றின் வண்ணத்தில் அதன் காலம் பிரதிபலித்தது. அவை பழங்காலத்தவை என்பதில் சிறிதும் ஐயமில்லை. அதில் சிவபெருமான் குடும்பமாக ஊர் சுற்றிக்கொண்டிருந்தார்.



இப்போது சாப்பிடத் தயாராக அனைவரும் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். ஓடியோடி பிரதக்ஷினம் சுற்றிய வாண்டுகளும் இலைக்கு வந்து உட்கார்ந்துவிட்டார்கள். மஹேஸ்வரனை நமஸ்கரிக்கும் போது எங்களை காந்தமாய்ப் பார்த்த அந்தப் பையனின் விழி ஈர்ப்பில் நான் விழுந்துவிட்டேன். பூர்வ ஜென்ம புண்ணியத்தால் இந்த க்ஷேத்திரத்தில் பிறந்த அந்தப் பையனையும் ஈஸ்வரன் ரக்ஷிப்பாராக!!
 
-


Thursday, May 17, 2012

இலும்பையங்கோட்டூர்

யோக தக்ஷிணாமூர்த்தி

”தம்பிக்குதான் இதுமாதிரி இடமெல்லாம் கிடைக்கும்” என்று நடுங்கிய என் சித்தியின் பயத்தில் நியாயம் இருந்தது.

சுற்றிலும் மை பூசின கும்மிருட்டு. எங்கோ தொலைந்து போன நிலா. எந்நேரமும் மழை பொழியலாம் என்று உறுமும் வானம். வழியோரத்தில் புதர் புதராக கருவேலம் முள் காடு. முன்னால் செல்லும் எங்கள் வாகனத்தின் ஒளியைத் தவிர வெளிச்சமே இல்லை. தொடுவானத்தில் எங்கேயோ மெயின் ரோட்டில் போகும் பஸ்ஸின் ஒளித்தீற்றல்கள். கண்ணாடி வழியாக உற்றுப் பார்த்தால் தூரத்தில் உருவங்கள் நிற்பது போன்ற பிரமையேற்படுத்தும் செடி கொடிகள். எட்டு மணியைத் தாண்டி காட்டிய பச்சையில் ஒளிரும் ரேடியம் வைத்த கைக்கடிகாரம் ”நேரமாகிவிட்டது” என்று எச்சரித்தது.

அந்த கிராமத்திற்கு போகும் உட்சாலையிலிருந்து ஒரு ஒற்றை விளக்கு எங்களது குவாலிஸ்ஸை விடாமல் பின் தொடர்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை முன்னாலும் பின்னாலும் வேறு நடமாட்டமே கிடையாது. நாங்கள் ஆக்ஸிலேட்டரிலிருந்து காலெடுத்தால் அதுவும் நிற்கிறது. நாங்கள் விரட்டினால் அதுவும் விரட்டுகிறது.

“தம்பி! பயமா இருக்குடா” என்றார்கள்.

“ஸ்வாமி பார்க்க போறோம். ஓன்னும் ஆகாது” என்று உதடுகள் தைரியம் சொல்ல உள்ளம் கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது. இருந்தாலும் அந்தப் பரமனை நினைத்துக்கொண்டு நெஞ்சுரத்தோடு முன்னேறினோம்.

கிராமத்தின் பிரதான வீதியை அடைந்ததும் ஆங்காங்கே ஒன்றிரண்டு தெருவிளக்குகள் மங்கலாக எரிந்தன. பின்னால் வந்த எம்.80 சரேலென எங்களை முந்திச் சென்றது. பின்னால் திரும்பியதில் அதன் பற்கள் தெரிந்தது. நட்பாகச் சிரித்தார். அப்புறம்தான் இருட்டில் பாதுகாப்பாக எங்கள் பின்னால் வந்தார் என்று புரிந்தது. அவரிடமே கோயிலுக்கு வழிகேட்டோம்.

“ரைட்ல போங்க.. இந்நேரம் திறந்திருப்பாங்களா தெரியலையே” என்றார்.

நான், என்னுடன் வயதான இரண்டு சித்திகள், குழந்தைகள் மனைவி என்று ஏழெட்டுப் பேர் ஒரு சனிக்கிழமை திருத்தல யாத்திரையாக சென்னைக்குப் பக்கத்தில் தொண்டை நாட்டுத் தலமான இலும்பையங்கோட்டூருக்கு விஜயம் செய்தோம். படாளம் கூட் ரோடிலிருந்து கிளைச்சாலையில் பிரிய வேண்டும். எலுமியன்கோட்டூர் என்று மக்கள் வழக்கில் இருக்கும் கிராமம் அது.

அந்த ஓரத்திலிருந்து கசிந்த வெளிச்சத்தைப் பார்க்கையில் கோயில் திறந்திருந்தது போலத்தான் இருந்தது. பக்கத்தில் வந்தும் கதவடைத்துவிடப்போகிறார்கள் என்று பதைத்தேன். நல்லவேளை திறந்திருந்தது. நாலைந்து அந்தணச் சிறுவர்கள் பட்டை பட்டையாய் திருநீறணிந்து உள்ளே உலவிக்கொண்டிருந்தார்கள்.

ஒரு ஜான் அளவிற்கு குடுமி வைத்த சிறுவன் ஒருவன் நாலு முழத்தை எட்டு முழம் போல இடுப்பில் சுற்றிக்கொண்டு அதற்கு மேலே சிகப்புக் காசித்துண்டு கட்டி ருத்ராட்ச கழுத்தோடு அழகன் முருகன் போல நின்றான்.

“நடை சார்த்திருக்குமோன்னு பயந்துட்டேன்” என்றேன்.

“இனிமே தான் அர்த்த ஜாமம் ஆகப்போறது” என்ற அந்தப் பையனை உற்றுப்பார்த்தேன். நல்ல தேஜஸாக இருந்தான்.

”நீங்கெல்லாம் யாரு“ என்றேன்.

“பக்கத்தில வேத பாடசாலை இருக்கு. அங்க வேதம் கத்துக்கறோம்” என்று அவன் சொல்லும்போதே உச்சரிப்பில் வேதம் வழிந்தது.

“அர்ச்சனை இருக்கா?” என்று கேட்டேன்.

“இல்ல. தீபாராதனை போதும்” என்றேன்.

குறைந்த வெளிச்சத்தில் கணீரென்று ஸ்ரீருத்ரம் சொல்லி அந்தப் பையன் காட்டிய தீபாராதனையில் சிவபெருமான் நேரே வந்து காட்சிகொடுத்தது போலிருந்தது. கற்பூர ஆரத்தியில் ஈஸ்வரன் ஜொலித்தார்.

சிவ வழிபாடு முடிந்து திருவலம் வருகையில் கோஷ்டத்தில் சின் முத்திரையுடன் இருக்கும் யோக தக்ஷிணாமூர்த்தியின் எழில் காணக் கண்கோடி வேண்டும்.

இரம்பை பூஜித்த தலம் அரம்பையங்கோட்டூர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். அரம்பேஸ்வரர் கனக குஜாம்பிகையுடன் அருள் புரிந்து வருகிறார். மூலவர் தீண்டாத் திருமேனி. வெளிர் செம்மண் நிற சிவலிங்கத் திருமேனி. பெரிய ஆவுடையார். யாருமே மூலவரைத் தொட்டு பூசை செய்வதில்லை. நல்ல பெரிய மூர்த்தம். அம்பாள் சந்நிதியில் மஹா பெரியவாள் சக்கரப் பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் தங்கியிருந்து வழிபட்டிருக்கிறார்.

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: | குரு: சாக்ஷாத் பரம்ப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம

நிறைவான தரிசனம். வரும்போதும் ஒரு இருசக்கரம் பின் தொடர்ந்தது. ஆனால் இப்போது பயமில்லை!

Wednesday, May 16, 2012

வைகல்


”வைகல் இன்னும் எவ்வளவு தூரம்?”

திருநீலக்குடி தாண்டி புளிய மர நிழலில் தள்ளுவண்டியில் சாத்துக்குடி ஜுஸ் கடை போட்டிருந்தவரிடம் கேட்டபோது ஹிஸ் அடித்தக் கீச்சுக் குரலில் “நேரா மேக்கால போங்க.. ஒரு பாலம் வரும்.. அதில தெக்கால கொஞ்ச தூரம் போனா வைகல் வரும்” என்றார். ”ஸ்ட்ரெயிட்டா போய் ஃபர்ஸ்ட் ரைட் அப்புறம் செகண்ட் லெஃப்ட்” என்று இதுகாரம் வழியறிந்த என் வாரிசுகள் ”தெக்கால மேக்கால” என்று திசையில் வழிகேட்டு திக்குமுக்காடிப்போனார்கள்.

அவர் சொன்ன மேற்கால போய்க்கொண்டே இருந்ததில் வலதில் ஒரு பழையப் பாலம் வந்தது. பாலத்துக்குப் பக்கத்தில் தென்னக கிராமங்களில் ஒட்டிப் பிறந்த ஒரு டீக்கடையும் இருந்தது. கொடிமரங்கள் நிறைந்த அந்தப் பகுதிதான் ஒரு பேருந்து நிறுத்தமாகவும் செயல்பட்டு வந்தது. அங்கே டவுனுக்குப் போக கையில் பாலிதீன் பேக்குடன் காத்திருந்த ஒரு சிகப்புக் கண்ணாடி வளையல் அம்மாளிடம் “வைகல் இப்படிப் போலாங்ளா?” என்று கேட்டதற்கு

“இப்டியே நேரா நாட்டார் வாய்க்கால் தாண்டி போனீங்கன்னா ஒரு கிலோ மீட்டர்ல வரும்” என்று சொல்லிவிட்டு ஜன்னல் எட்டிப் பார்த்த என் இளையவளைப் பார்த்து கடைவாய்ப் பல் தெரிய சிரித்தாள் அந்தம்மா. கன்னம் சிவக்கும் வெட்கத்தில் தலையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டாள் என் பெண்.

அவர் கைகாட்டிய திக்கில் ஒரு சிங்கில் பெட் ரோடு. சரசரவெனப் பிடித்தால் இரண்டு கி.மீட்டரில் சாகுபடி முடிந்த வயற்வெளிகளுக்கிடையில் மேய்ந்துகொண்டிருந்த மாடுகளுக்கிடையில் ஏதோ ஒரு குக்கிராமம் போலவும் நடுவே ஒரு சில தலைகளும் தெரிந்தன. துள்ளிக் குதித்த தாய் ஆடு தனது குட்டிகளுடன் நுழைந்த முள்வேலியில் பார்டர் போட்ட வீட்டைக் கடந்தவுடன் அந்தக் கிராமத்தில் மொத்தமாகவே இரண்டு தெருக்கள் இருந்தது. அதிக பட்சமாக புழுதி பறக்க நாங்கள் பயணித்து வந்த அந்த செம்மண் “மெயின்” ரோட்டையும் சேர்த்து மூன்று ராஜ வீதிகள். ஊருக்குள் நுழையும் இடத்தில் ஓரமாக அரசாங்க செலவில் ஒரு அடிபைப் போட்டிருந்தார்கள். தேகம் துருப் பிடித்திருந்த அந்த இரும்புப் பைப்பின் கைப்பிடி பளபளவென்று இருந்ததில் அவ்வூரில் இருந்த பத்து குடும்பத்திற்கு வாரி வாரி தண்ணீர் தரும் பைப் என்று தெரிந்தது.

வைகல் ஒன்றும் பெரிய கோவில் இல்லை. ராஜகோபுரம் கிடையாது. பெரிய மதிற் சுவர்கள் கிடையாது. மூலவர் சுயம்பு. ஒரு காலத்தில் செண்பகாரண்யமாக இருந்த இடம். கோச்செங்கட் சோழன் கட்டிய யானை ஏறாக் கோயிலெனப்படும் மாடக்கோயில் வகையறாவில் ஒன்று.

”குருக்கள் வருவாருங்களா?” பக்கத்து குட்டையிலிருந்து ப்ளாஸ்டிக் குடம் ஏந்தி குனிந்து வந்த பெண்மணியிடம் கேட்டேன்.

“தோ வாரேன்!” என்று பக்கத்தில் உதயசூரியன் போட்ட சிமெண்ட் ஜன்னல் வீட்டிலிருந்து கோயில் சாவி எடுத்து வந்தார். டிராயரை அரணாக் கயிரில் சொருகிய சட்டையில்லாத ஒரு பையன் எட்டிப் பார்த்தான்.

“மெய்க்காவல்...” என்று இழுத்த என்னிடம் “நாங்கதான்” என்றார்.

”ஆடுதுறையிலிருந்து தான் வரணும். தெனமும் ஒரு வேளை பூசைக்குதான் ஐயிரு வருவாரு” என்று குறைப்படும் தொனியில் பேசினார் அந்த அம்மணி.

கதவைத் திறந்துவிட்டு சந்நிதி வரை கூட வந்தார். தீபாரதனைத் தட்டை கொடுத்து “நீங்களே காமிங்க”. என்னுடைய மயில்கண் வேஷ்டியும் நெற்றியில் பட்டையாய் தரித்திருந்த விபூதியும் நான் அதற்கு தகுதியான ஆள் தான் என்று அவருக்கு தோன்றியிருக்கக்கூடும். நான் பாக்கியம் பெற்றவனானேன். சுயம்பு லிங்க மூர்த்திகளை சேவிப்பதற்கே புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்பார்கள். தீபாராதனை காண்பிப்பது என்றால் எவ்வளவு பெரிய பேறு!

”நமஸ்தே அஸ்து பகவன்” என்று ருத்ரத்திலிருந்து ஒரு ஸ்லோகம் செய்து வழிபட்டு “தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”யுடன் ஒரு ஆரத்தி எடுத்து மகிழ்ந்தேன்.

கையில் கொண்டு போயிருந்த தேவாரத் திருத்தலங்கள் புத்தகத்திலிருந்து கீழ்கண்ட தேவாரப்பாடல் படித்தது ஞாபகத்திற்கு வந்தது.
துளமதி யுடைமறி தோன்று கையினர்
இளமதி யணிசடை யெந்தை யாரிடம்
உளமதி யுடையவர் வைக லோங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே


துள்ளும் மானை கரத்தில் ஏந்தியவனும், பிறைச் சந்திரனை சடையிலணிந்தவனுமான என் தந்தை சிவபிரானை வணங்கும் மதி நிறைந்தவர்கள் தொழும் வைகல் கோயிலானது வானத்தில் வளரும் நிலவை தொடும் மாடக்கோயிலே என்று சம்பந்தர் பாடியிருக்கிறார்.

துளமதி, இளமதி, உளமதி, வளமதியை மதிநுட்பத்தோடு எழுதியிருக்கும் ஞானப்பால் குடித்த சம்பந்தன் நமக்களித்த தமிழ்ப்பால் அந்த தேவாரப்பாடல்.

மதி நிறைந்தவர்கள் தொழும் வைகலை இக் குறைமதியோனும் தொழுதேன்!

#தீர்த்தயாத்திரைக் கதைகள் வளரும்...

Monday, May 14, 2012

ஹாரனீயம்

சனிக்கிழமை சத்தியத்தில் கருத்துக் களேபரங்கள் முடிந்து காலையில் பின் வீல் பஞ்சரான அதே ஐராவத இன்டிகா, அதே பதினாறு வயது மீசை முளைக்காத ட்ரைவர், அதே லொடலொடா மற்றும் க்ரீச் க்ரீச் சத்தத்துடன் ஆஃபீஸ் திரும்பினேன். நிகழ்த்திய உபன்யாசத்திற்கு ஒரு தேங்காய் மூடியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்த என் எண்ணத்தில் மண். ”தேங்க்யூ சார்” என்று புன்னகையுடன் வாயார வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்கள்.

சென்னைப் பட்டிணத்தின் விசேஷ வாசனைகள் உட்புகா வண்ணம் நாற்புறமும் கண்ணாடி உசர்த்திக் காரோட்டிய நான் அன்று பொது வாகனத்தில் வீடு வந்தேன். டீ காஃபி குடித்துவிட்டு ஃப்ரெஷ்ஷாக ட்ரைவர் கண்டக்டர் ஏறும் பஸ் நிலையம் அருகில் என்னுடைய காரியாலயம் இருப்பதால் சிரமபரிகாரமாக உட்கார்ந்து வருவதற்கு நூறு சதவீதம் வாய்ப்பிருந்தது.  



சாலையில் சென்ற பேருந்துகள் புழுதியைக் கிளப்ப அஸ்வங்கள் ஓடிய குருக்ஷேத்திரம் போல பஸ்நிலையம் போர்க்களமாகக் காட்சியளித்தது. என்னுடைய தடத்தில் செல்லும் பேருந்து நிழலாகக் கண்ணில்பட்டது. இளந்தாடி ஓட்டுனர் ஹாரனைத் தடவிப் பார்த்துக்கொண்டு தீவிர யோசனையில் அமர்ந்திருந்தார். வண்டி ஹைட்லிங்கில் டீசலைக் குடித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தது. பரவலாக பல சீட்கள் அழுக்காக காலியாய் இருந்தன. கமலஹாசன்களுக்கு அமலாக்களுடன் வலையோசை கலகலவென பாடமுடியாதபடி கூட்டமில்லாத பஸ். ஜீன்ஸும் கலைந்த கேசமுமாய் இரண்டிரண்டாக இரண்டு சீட்களில் பொங்கும் இளைமையுடன் நால்வர் உட்கார்ந்திருந்தார்கள். கூடவே “ஏய்.....” “டேய்....” “ஹெஹ்ஹே...” என்று கேலியும் கிண்டலும் பஸ்ஸை உலுக்கியது. எதிர் வரிசையில் மெத்து மெத்து சீட்கள் பூவையருக்காக காத்திருந்தது.

துள்ளிப் பேருந்தில் ஏறிய கண்டக்டருக்கு ரஜினி இன்ஸ்பிரேஷனாக இருக்கக்கூடும். ”போலா ரை” என்று இருவார்த்தையையும் “ம்””ட்”டில்லாமல் ஸ்டைலாகப் பேசி வண்டியைக் கிளப்பினார். நான்கு முறை சக்கரம் சுற்றுவதற்குள் என்னிடம் வந்த கரகர "டிக்கெட்..டிக்கெட்”டிற்கு ”பொன்னியம்மன் கோயில் ஒன்னு” என்றேன். பத்தொன்பது ரூபாய்க்கு கிழித்துக் கொடுத்தார். பல வருடங்களுக்குப் பிறகு பஸ் பிரயாணம். பரீட்சைக்குப் படிப்பது போல ஆர்வமாய் டிக்கெட்டைப் படித்தேன். மேலே ஒரு ஆல்ஃபா ந்யூமரிக் சீரியல் நம்பர். வலமும் இடமும் “மே” “கீ” என்று தோரணமாய் கட்டம்கட்டி ஸ்டேஜ் நம்பர்கள் நடுவில் தடிமனான எழுத்தில் 19-00 என்று அச்சடித்திருந்தது. அதற்கு மேலே சக்கரத்தில் ”மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை” என்று லோகோ. கீழே மாற்றத்தக்கதல்ல, பரிசோதனைக்கு உட்பட்டது போன்ற அரசாங்க விதிமுறைகள்.

“டே! அந்தப் பொண்ணு தெலுங்கு. நம்மப் பய தமிலு. லாங்குவேஜு செட் ஆவல”

“இங்கிலீசுல பேசுறான்.”

“ஹி..ஹி.ஹி..ஹீ..”

“ம்..ம்.. இவனுக்குதான் ஏ பி சி டியத் தவிர இங்கிலீசு தெரியாதே. ஏதோ தஸ்ஸு புஸ்ஸுன்னு பீட்டர் வுடறான்”

“ஒரு வெளம்பரத்துல வேலைக்காரி இங்கிலீஸ் பாடி தர பெருக்குமே. அங்க போய் கத்துக்கறான்”

யாரிடமோ ஃபோனிலும் பக்கத்திலும் பார்த்து பார்த்து ஆணழகன் ஒருவன் பஸ் முழுவதும் கேட்கும்படி பொதுக்கூட்டமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

இப்போது ஒரு சிக்னல். நெட்டித்தள்ளும் கூட்டமில்லை. சாயந்திரமாக இருந்தாலும் காலையில் இருந்து சூடாக வறுத்தெடுத்ததால் வடாம் பொறித்த இரும்புச்சட்டி போல தரையிலிருந்து உஷ்ணம் தகித்தது. டிரைவரை அது இம்சித்திருக்கக்கூடும். விஷயம் என்னவென்றால் முன்னால் ஒரு வெள்ளைக் கார் நேரே போவதற்கு நின்றிருந்தது. இடதுபுறம் ஒரு ஆட்டோ நுழைய இடம் இருந்தது. அதில் அந்த ஆஜானுபாகுவான பஸ்ஸை அனாயாசமாக நுழைக்க முற்பட்டார். ஏனென்றால் நாங்கள் இடதில் திரும்பவேண்டும். அது ”இலவச” இடது கூடக் கிடையாது.

மூன்றாவது பாராவில் ஹாரனைத் தடவிக்கொண்டு உட்கார்ந்திருந்தார் என்று படித்திருப்பீர்கள். இப்போது அதை வாசிக்க ஆரம்பித்தார். இளையராவிடம் உதவியாளராக பணிபுரிந்தது போன்ற ஒரு திறமை அவரிடம் இருந்தது. சுதிலயம் மாறாமல் விட்டுவிட்டு வாசித்தார். காரின் கண்ணாடிகள் உறுதியாக மூடியிருந்தது. பின்னால் இருந்து பார்த்ததில் இவரது சங்கீத ஹாரனை மிஞ்சும் வகையில் காரினுள் ரஹ்மான் சிவமணியின் உதவியோடு அடித்து நொறுக்கி தவிடுபொடியாக்கிக்கொண்டிருந்தார். காரின் பின்புறக் குலுங்களில் ரஹ்மான் பீட் தெரிந்தது. பொறுமையிழந்த ஒரு பெரியவர் பஸ்ஸினுள் இருந்து குரல் கொடுத்தார் “லேசா இடிப்பா”. சிக்னல் இன்னமும் ரெட் காட்டிக்கொண்டிருந்தது.

போருக்குப் புறப்படும் மனோகராவிற்கு கலைஞரின் வசனம் தட்டி எழுப்பி ஒரு கிளர்ச்சியைத் தருவது போல பஸ் டிரைவர் இப்போது அந்த பெரியவரால் முடுக்கிவிடப்பட்டார். கிளைமாக்ஸ் காட்சியில் கொலையாளியை பிடிக்கும்போது பின்னணியில் ஒலிக்கும் ரத்தத்தைப் பாய வைக்கும் விரைவு இசை போல ஹார்ன் அடித்தார். வெர்னா அசைவதாக தெரியவில்லை. இங்கே பஸ்ஸில் அந்தக் கிழவர் வெகுண்டார். எழுந்து ட்ரைவர் சீட்டருகே சென்று சென்னைச் செந்தமிழில் வைதார். எங்கள் பஸ் ட்ரைவர் மணிக்கட்டு முறியும் வரை ஹார்ன் ஒலி எழுப்பினார். உஹூம். பலனில்லை.

சில விநாடிகளில் பச்சை விழுந்தது. தனது பீ.பியை ஏற்றிக்கொள்ளாதவர்கள் பொறுமையாக கோடு தாண்டினார்கள். இப்போது பின் சீட்டு இளைஞர்கள் காதலிப்பதற்கு பெண்களை வகைப்படுத்தி தேடிக்கொண்டிருந்தார்கள். பி.ஏ.கிருஷ்ணனின் “அக்கிரகாரத்தில் பெரியார்” என் பையில் இருந்தது. கொஞ்ச நேரம் திருப்பினேன். இடையிடையே வந்த நிறுத்தங்களில் பயணிகளை ஓடவிடமால் காலருகே கொண்டு போய் வண்டியை நிறுத்தி ஏற்றிக்கொண்டார் ட்ரைவர் உருவில் இருந்த அந்த ஹார்ன் இசைக் கலைஞர். எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அனிச்சை செயலாக ஒரு முறை ஹார்னை தட்டுகிறார். சில முறை லேசாக. பலமுறை பலமாக. தூக்கத்தில் எப்படி என்று தெரியவில்லை!

இரு முதல்வர்களின் பெயர்களை தாங்கிய பிரம்மாண்ட கல்வெட்டுகளைக் கொண்ட கோயம்பேடு என்கிற பன்னாட்டு பஸ் நிலையத்தில் அந்த இளைஞர் கோஷ்டி ”கெக்கெக்கே” என்றபடி படியிறங்கியது. பஸ் உள்ளே இருக்கைகள் தாராளமாக இருந்தும் ஈருடல் ஓருடலாக தள்ளுமுள்ளுவில் திபுதிபுவென ஏறினார்கள். நமது ஹார்ன் கலைஞர் பத்து பேர் ஏறுவதற்குள் இருபது முறை ஸ்ருதி பிசகாமல் சப்த சங்கீதம் வாசித்தார். என்னோடு புத்தகத்தில் பேசிக்கொண்டிருந்த பி.ஏ.கிருஷ்ணன் எழுந்து வந்துவிடுவாரோ என்கிற அச்சம் எழுந்தது.

சிறிதுநேரம் லேசாகக் கண்ணயர்ந்த நான் எழுந்தது இன்னொரு புதுவிதமான ஹார்ன் வாத்தியக் கலைஞரால். பின்னால் பாடி திறந்த ஒரு டாட்டா 407ல் குதிர் குதிராய் ஸ்பீக்கர்கள் அடுக்கி அதன் மேல் சிலர் பள்ளிகொண்ட பெருமாள் போல ஒரு கையை கொடுத்து தலையை தூக்கிப் படுத்துக்கொண்டு பயணப்பட்டிருந்தார்கள். 407 நெற்றியில் பாலு ஸ்ருதி என்று ஸ்டிக்கரால் எழுதியிருந்தது. அந்த ட்ரைவர் கொஞ்சம் முரட்டு வாத்தியமாக வாசித்ததில் எனக்கு முழிப்பு வந்தது. தனது வாகனத்தின் அகலத்திற்கு உள்ளே முன்னால் ஒரு ஈ எறும்பு நுழைந்தாலும் ஹார்னால் அலறினார். வெறித்த பார்வையும் முறுக்கிய மீசையும் அலறும் ஹார்னும் அந்தப் பிரதேசத்தையே காதைக் கழற்றி கீழே வைக்க நிர்பந்தப்படுத்தியது. திருமங்கலம் அருகே ஏறி வண்டி நான்கடி நகர்வதற்கும் குறட்டை விட்ட என் பக்கத்து சீட்டு ஆளைக் கூட எழுப்பிட்டது அந்த ஹார்ன் ஒலி. எழுந்து உதடோரத்தில் கோடவாய் வழிந்ததைத் துடைத்துக்கொண்டு அந்த 407வை சுட்டெரிக்கும் பார்வையால் பொசுக்கிவிடுவது போலப் பார்த்தார்.

நம்முடைய மெல்லிசை வாசிக்கும் பஸ் ஓட்டுனருக்கும் வல்லிசையில் விளையாடும் 407க்கும் இப்போது நடுரோட்டில் சங்கீதப் போட்டி ஆரம்பித்தது. ஒருவருக்கொருவர் கிராஸ் செய்வதும் பஸ் இரண்டு “பாம்..பாம்” அடித்தால் 407 நான்கு முறை நிறுத்தாமல் அடித்தது. நடுரோட்டில் ஹார்ன் இசைவெள்ளம் பிரவாகமாக வழிந்தோடியது. இவ்வளவு முறை சலிக்காமல் ஹார்ன் அழுத்தும் ஓட்டுனருக்கு இருதய நோய் நிச்சயம். ஒருசில சமயங்களில் 407 ட்ரைவர் எழுந்து ஹார்ன் மேல் நின்றுவிட்டது போல அந்த வண்டி பிளிறியது. பஸ்ஸில் இருந்த சொற்ப பயணிகளும் செவிடாக வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு நமது பஸ் ட்ரைவர் அடித்தார்.

கிண்டி எஸ்டேட் அருகில் இந்த சூப்பர் ஹார்னர் போட்டி நிறைவிற்கு வந்தது. எஸ்டேட் பக்கம் வண்டியை ஒடித்து இந்த போட்டியை முடித்துக்கொண்டதாக பஸ் ட்ரைவர் அறிவித்தார். கழுத்து ஒடியும் வரை திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றார் பாலு ஸ்ருதி டாடா 407. பிப்...பீம்..பிம்.

கிண்டி தொழிற்ப்பேட்டையில் வரிசையாக துரித உணவுக் கடைகள். பிளைன் பிரியாணி (குஸ்கா) என்று எழுதி போர்டில் தொங்கிய நித்யஸ்ரீ செட்டிநாடு ஹோட்டல் அருகே வண்டியை நிறுத்தினார். பயணிகளை துரிதகதியில் அழைத்து ஏற்றுவதற்காக இவ்வளவு நேரம் கையொடிய ஹார்ன் வாசித்தும் கவலையில்லாமல் மீண்டும் ஒலியெழுப்பினார். இப்போது இந்த சங்கீதம் என் காதுகளுக்குப் பழக ஆரம்பித்துவிட்டது. நிமிடத்திற்கு ஒருமுறை இதைக் கேட்காவிட்டால் எதையோ இழந்தது போல மனசு துடிக்க ஆரம்பித்தது.

ஒரு கொத்துப் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம். இம்முறை பெண்கள் பக்கம் ரொம்பி வழிந்தது. பேச்சு சத்தம் அதிகமானது. ஏறியவர்களுக்கு பேசுவதற்கு வீட்டிலும் நாட்டிலும் நடக்கும் அநியாயங்கள் தீனி போட்டன.

“ஹக்காங்.. இவன் மண்ணுமோகன் மேரியே இருக்கான். அவ தான் சோனியா. இளுத்த இளுப்புக்கு ஆடுறான் இவன்” தேசிய அரசியல் களத்திலிருந்து உதாரணங்களைப் பொறுக்கி வீட்டு அரசியலுக்கு ஒப்புமைப்படுத்தி சொல்லிக்கொண்டிருந்தாள் ஒரு கிழவி. ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கிழவியின் வாசகங்களுக்கு உயிரூட்டும் பின்னணி இசையாக ஹார்ன் அடித்தார் நமது பஸ் டிரைவர் போர்வையில் வாழும் இசைக்கலைஞர். மெய் சிலிர்த்தது!

பஸ் கொஞ்சம் கொஞ்சமாக பயணிகளை ஸ்டாப்தோறும் உதிர்த்துக்கொண்டே வந்தது. கிழவியும் அவளுடன் வந்த குமரியும் இறங்கிக்கொண்டார்கள். ஹார்ன் டிரைவர், நான், நடத்துனர் மட்டுமே பஸ்ஸில் இருந்தோம். இன்னும் இரண்டு ஸ்டாப் மிச்சம் இருந்தது. நான் ட்ரைவரைக் கூர்ந்து கவனிக்கலானேன். கியர் மாற்றுவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. அச்சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒரு வெறி வருகிறது. அதைப் போக்கிக் கொள்வதற்கு ஒவ்வொரு முறையும் ஹார்னைப் பதம் பார்க்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

இவ்வளவு நாட்கள் கண்ணாடி ஏற்றிய காரில் பயணித்தபோது இவ்வளவு விதமான ஹார்ன் சப்தங்களை என் காது கேட்டறியவில்லை. மொஸார்ட்டின் இசைக்கு ஒப்பாக இவ்வளவு கலைஞர்கள் நம் தேசத்தில் ட்ரைவர் ரூபத்தில் நடமாடுவது இந்த இசை ஏழைக்குத் தெரியவில்லை. எனது நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டேன். வண்டி எடுக்கும் போது மீண்டும் இருமுறை ஒலித்தார். ஆஹா.. அபாரம்! அபாரம்!! என்னவொரு ஸ்ருதி! என்ன ஒரு லயம்!! நடந்து வீடு வந்து சேரும் வரை காதுகளில் இசைத்துக்கொண்டே இருந்தது.

வீட்டினுள் நுழைந்தவுடன் பெயர் தெரியாத ஒரு சேனலில் நாதஸ்வரக் கலைஞர் ஒருவர் முழுத் தெம்புடன் பீப்பீ வாசித்துக்கொண்டிருந்தார். என் செவிக்கு ஹாரனீயமாய் அது எட்டியது. கொஞ்சம் உன்னித்துப் பார்த்தால் அவருக்கு இளந்தாடியும் இருக்கிறது. கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது.

பின் குறிப்பு: ஹார்மோனியம் போல ஒரு இசைக்கருவியாக ஹார்னை உபயோகித்தால் அதற்கு ஹாரனீயம் என்று பெயர்.
-

Sunday, May 13, 2012

சத்தியமாகப் பேசினேன்!

 நின்ற பொருள் அசையவும்; அசையும் பொருள் நிற்கவும் ஒரு கலந்துரையாடல் சத்தியம் டி.வியில் இனிதே நடந்து முடிந்தது. இளையராஜாவுக்கு முதல் கம்போஸிங் போது சுபசகுனமாகக் கரண்ட் போனது போல டி.வி ஸ்டேஷன் ஸ்டூடியோவிற்கு மூன்று கிலோ மீட்டர் முன்னதாக அவர்கள் அனுப்பிய கார் பஞ்சர்.

எப்பாடுபட்டேனும் இவ்வுலக மக்களுக்கு சகல சம்பத்துக்களையும் தரும் இந்த அரிய நிகழ்ச்சியை வழங்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் கட்டுக்கடங்காமல் பொத்துக்கொண்டு ஊற்ற ஒரு ஆட்டோ பிடித்து டி.வி ஸ்டேஷனை முற்றுகையிட்டோம்.

Extempore ஆகத்தான் பேசினோம். ரூம் போட்ட யோசனைகள் மற்றும் புத்தகப் பக்கங்களை கிழியும் வரை திருப்புதல் என்கிற பெரிய தயாரிப்பு எதுவும் இல்லை. நிறையக் கால் வந்ததாகச் சொன்னார்கள். முகப்புஸ்தக வட்டாரத்திலிருந்து நண்பர் Roaming Raman கால் செய்து கேள்விகேட்டு அசத்தினார். கேமரா முன்பு உட்கார்ந்திருக்கும்போது தெரிந்த அன்பர்கள் கிரஹாம்பெல் டெக்னாலஜி வழியாக நம் செவியில் நுழைவது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய ஆர்வலர்கள் தொடர்பு கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டார்கள். (காதைக் கொடுங்கள் ஒரு ரகசியம் சொல்கிறேன். இரண்டு பேர் அப்படிச் சொன்னார்கள். இன்னும் இரண்டு பேருக்கு நான் ஃபோன் செய்து ”ஒரு கால் பண்ணக்கூடாது?” என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டேன்.)

ஃபோனில் கேட்பது போலவே நிறைய புத்தகக் குறிப்புகளை அள்ளி வீசினார் Chandramowleeswaran Viswanthan. நான் பக்கத்திலிருந்து அடக்கமாக கேட்டுக்கொண்டேன். இரண்டு மூன்று பேர் ஐ.ஏ.எஸ் படிப்பதற்கான புத்தக பரிந்துரையை எதிர்பார்த்தார்கள்.

மெத்தப் படித்தவர்களுக்கு இந்தப் ப்ரோகிராம் இனித்திருக்குமா என்று தெரியவில்லை. மண் பயனுற பேசினோமா என்றும் தெரியாது. எதாவது படிக்கலாம் என்று தோன்றும் அநாமதேய அன்பர் எவரேனும் இதனால் பயனடைந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே!

#நண்பர் ஒருவர் “U LOOK SMART RVS" என்று SMS அனுப்பியிருந்தார். கோடம்பாக்கம் இயக்குனர்களின் கவனத்திற்காக இதை இங்கே சேர்த்தேன்!

##மூன்று நாட்கள் கழித்து காணொளி தருவார்கள். யூட்யூபில் ஏற்றிவிட்டு சுட்டி தருகிறேன். 

###நேரலையாகப் பார்த்த அல்லது நான் யூட்யூபில் ஏற்றிய பிறகு பார்க்க ஆவலாக காத்திருக்கும் அனைவருக்கும் நன்றியும் அன்பும் கலந்த வணக்கம்!!

Friday, May 11, 2012

டி.வியில் ஆர்.வி.எஸ்!

நிகழும் நந்தன வருடம் சித்திரை மாதம் 30ம் தேதி மே மாதம் 12ம் தேதி சனிக்கிழமை திருவோண நட்சத்திரம் சப்தமி திதி தேய்பிறை மரணயோகத்தில் காலை 9லிருந்து 10 மணிவரை சத்தியம் (http://www.sathiyam.tv) டிவியில்  ஒரு கலந்துரையாடலில் பேசுகிறேன். என்னுடன் என் நண்பர் திரு. சந்திரமௌலீஸ்வரனும் உரையாடுகிறார்.

தலைப்பு: இன்றைய காலகட்டத்தில் வாசிக்கும் பழக்கத்தின் நிலை என்ன?

இது ஒரு நேரலை!

ஃபோன் செய்து கும்ம விருப்பம் உள்ளவர்கள் தாராளமாகக் கும்மலாம்!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails