ஒன்னாம் நம்பர் புள்ளத்தாச்சி டவுன் பஸ் பாலத்தில் எதிர்பட்டால் ஏழாம் நம்பர் பெருகவாழ்ந்தான் பஸ் மரியாதையாக ஓரங்கட்டி நின்று வழிவிட்டு பின்னர் பயணத்தை தொடரச் சொல்லும் கண்டிப்பு மிகுந்த பாலம் கீழப்பாலம். பெரிய வாகனம் வருவது தெரிந்தும் அவசரக்குடுக்கையாக சைக்கிள் ஓட்டி பாலத்தின் மதில் சுவற்றோடு பல்லி போல சைக்கிளோடு ஒட்டிக்கொண்டு "போ..போ.." என்று கை காட்டி பஸ்சுக்கு வழிவிடும் அதி புத்திசாலி பிரகிருதிகளும் உண்டு. கொஞ்சம் வயிறு புடைத்த லாரிகள் தடதடத்து கடந்து போகும் போது பாலத்திற்கு குளிர் ஜுரம் கண்டது போல ஒரு சின்ன உதறல் எடுக்கும். பாலத்தின் இக்கரையில் அரசினர் தொடக்கப்பள்ளி. அதன் வாசலில் கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக என்று சகல கட்சிக் கொடிகளும் அரசியல் வாசத்தோடு புழுதிக் காற்றில் பறந்துகொண்டிருக்கும். கொடிக்கம்பத்துக்கு வலப்புறமாக நேர் எதிரே மணி டீக்கடை. அவர் ஒரு தீதிமுக. தீவிர திமுக அபிமானி. டீ பாய்லர் பின்னால் வெந்நீர்ப் புகை ஆவிகளுக்கு நடுவில் கலைஞர் மஞ்சள் துண்டு இல்லாமல் வசீகரப் புன்னகையுடன் படத்தில் இருப்பார்.
மாரியம்மன் கோவில் திருவிழாவிழாவின் போது மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்துகளுக்கு நாலு வீல் மட்டும் நுழையும் ஒரு சந்து விட்டு ரோட்டில் வெள்ளை வேஷ்டி கட்டி திரைப்படம் போடும் இடம் கீழப்பாலத்தை தொட்டடுத்து ஊர் எல்லையில் இருக்கும் டி.டி.பி ரோடு. நான் ஜனித்த இடம். இப்போதும் "அம்ம்ம்ம்மா.. அப்ப்ப்ப்ப்பா... அனைத்தும் வந்துவிட்டது.. அனைத்தும் வந்துவிட்டது..." என்றும் "வித்யாபதி.. மகனே வித்யாபதி" என்று நாகையாவும் சிவாஜியும் உச்சிமோந்து கட்டியணைத்து பரசவசப்பட்ட சரஸ்வதி சபதம் காட்சியை வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டில் போட்டு முதுகில் கயிறு குறுகுறுக்க படுத்துக்கொண்டு பார்த்தது கருப்பு வெள்ளையில் என் நினைவுகளில் ஓடுகிறது. இரண்டு நாட்களாக மன்னைக்குள் சென்று வரும் பஸ்களை பலவந்தமாக நிறுத்தி கை நோக ஒரு தகர டப்பா உண்டியல் குலுக்கி வசூலித்ததை வைத்து ஆத்தாளுக்கு கஞ்சி காய்ச்சி ஊர் மக்களுக்கு ஊற்றுவார்கள். ருசியோ ருசி!
நான் மண் தரையில் தவழ்ந்த இடம் கீழப்பாலம். கைகால் முளைத்து ஓடியாடி வளர்ந்த இடம் மேலப்பாலம்(ஹரித்ராநதி). மன்னையின் இரு முனைகளையும் இரு வீட்டால் இருக்கக் கட்டி முடிச்சு போட்டவன் நான். லக்ஷ்மியும் கண்ணுக்குட்டிகளுமாக ஒரு ஆறு பேர் வீட்டுவாசலில் ஆஸ்பெஸ்டாஸ் ஷெட் போட்ட ஹாலில் புல்லுக்கட்டு வைக்கோல் தின்று எங்களுடன் சுக ஜீவனம் நடத்தி வந்தார்கள். "ம்மா..." என்று அடிவயிற்றிலிருந்து என் அம்மா போகும்போதும் வரும்போதும் மணி ஒலிக்க தலையாட்டி வாஞ்சையுடன் கூப்பிடுவார்கள். சிகப்பு லக்ஷ்மிக்கு கருப்பு லக்ஷ்மி நெற்றி நடுவில் வெள்ளை பொட்டோடு பிறந்து எங்களை அளவில்லா சந்தோஷத்தில் ஆழ்த்தினாள். "ரொம்ப ராசி!" என்று பூரித்துப் போனாள் என் தாய்!. அன்று "தெருவிற்கே சீம்பால் ஃப்ரீ" என்று மகாராணியாய் இலவசம் அறிவித்தாள்.
என் அம்மா தாடியும் கொம்பும் வளர்ந்த ஒரு முரட்டு ஆடும் வளர்த்தாள். தன் உடலில் எழும் நாற்றத்தையும் மீறி அதன் துறுதுறுப்பால் நம்மை வசீகரிக்கும் அந்த துடிப்பான கிடா. ஒரே சமயத்தில் கொல்லையில் "ம்மே"வும் வாசலில் "ம்மா"வும் சேர்ந்திசையாக இசைத்த காலங்கள் அவை. கதவை திறந்து போட்டுவிட்டு கீழப்பாலம் தாண்டி பாரி மளிகை சென்று ஓல்ட் சிந்தால் சோப்பு வாங்கி வரலாம். ஒரு பயல் வீட்டினுள் நுழைய முடியாது. தெருவே தன்னை காவல் காத்துக் கொண்டது. தெருவின் உண்மையான பலம் அறியாமல் திருட வந்த பலே திருடர் ஒருவர் மாட்டிகொண்டபின் கரண்ட்டு கம்பத்தில் கட்டி வைத்து விளாசினார்கள்.
ஒற்றை நாடி சரீரமாய் தோல் சுருங்கி வாயில் பீடிப் புகையோடும், தோளில் பூணலோடும் பக்கத்து அய்யனார் பட்டறை பெஞ்சில் காலாட்டி உட்கார்ந்திருப்பார் நாகப்ப ஆசாரி. பட்டை நிமிர்த்தும் பட்டறைக்கு அவர் தான் உரிமையாளர். எந்நேரமும் வேனோ, அம்பாசிடர் காரோ, ட்ராக்டரோ தன் அடிப்பாகத்தை அவிழ்த்துப் போட்டு பட்டையை கழற்றி அவர்கள் கையில் கொடுத்துவிட்டு தேமேன்னு நின்றுகொண்டிருக்கும். ஹரித்ராநதி போன்று ஒன்பது மணிக்கு ஊர் அடங்காமல் பன்னிரண்டு ஒருமணிவரை கொட்டக்கொட்ட விழித்திருக்கும். நாகப்ப ஆசாரியின் தலைச்சன் பிள்ளை பெத்தபெருமாள் அண்ணன் முதன் முதலில் துபாய் சென்று கை நிறைய சம்பாதித்து கிழங்கு கிழங்காக கையிலும் கழுத்திலும் தங்க நகை அணிந்து ஊர்வலம் வந்தார். கரிய மேனியில் தங்கம் எடுப்பாக தெரிந்தது. தெருவில் உதவாக்கரையாக ஊர்சுற்றித் திரிந்த எல்லோரையும் தங்கச் சங்கிலி காண்பித்து வெளிநாட்டுக்கு விரட்டினார்.
பாக்கியம் ஆத்தா கடையில் தேன்மிட்டாய் அமிர்தமாய் இருக்கும். ஒரு கூரைக் கொட்டாயில் முன்புறம் கடையும், பின்புறம் ஒரு ஓலைப்பாய் விரித்த வீடுமாய் ஜீவனம் நடத்தி வந்தது. "ராசா... கார்த்தி! நீங்க வேலைக்கு போயி இந்த ஆத்தாவுக்கு ஒரு சீலை எடுத்துக் கொடுப்பீங்களா.. மவராசா..." என்று கன்னம் இரண்டையும் வழித்து திருஷ்டி விரல் சொடுக்கி ஆசையாய் கேட்டுவிட்டு நான் பள்ளிப் படிப்பு முடிக்கும் முன்னரே இறைவனடி சேர்ந்துவிட்டது. "அய்யனார் குட்டை தாண்டி தெனமும் ராத்திரி பன்னெண்டு மணிக்கு மல்லிப்பூ வாசமும், ஜல்ஜல்ன்னு சலங்க சத்தமும் கேக்குது. மோகினின்னு தலையாரி வீட்ல பேசிக்கிறாங்க.. பத்திரமா இரும்மா.." என்று பளயதுக்கு தொட்டுக்க அம்பது காசு எம்ப்ளிச்சை ஊறுகாய் வாங்க கடைக்கு வரும் பெண்மணிகளுக்கு அட்வைஸ் மழை பொழிந்த ஆத்தா தன் எழுபது வயது அல்பாயுசில் உயிர்நீத்தது.
சசி, சின்னாச்சி, திருநாவுக்கரசு, பக்கிரி, கட்டை கார்த்தி என்று ஒரு பெரிய பட்டாளமே உண்டு. மாரி மட்டும் குடும்ப சுமை தாங்குவதற்கு சிறுவயதிலேயே லோடு லாரிக்கு கிளீனராக போய் சேர்ந்தான். கை ரெண்டும் கொட்டி "பிரமாணப் பிள்ளை.. பிராமணப் பிள்ளை.." என்று நான்கு முறை பாடிவிட்டு, "பி.ரா.ம.ண. பி.ள்..ளை" என்று எழுத்துக்கு எழுத்து நிறுத்தி பாடி முடித்து அழகு காண்பிக்கும் மாரி வயதில் பெரிதானாலும் இன்னமும் எனக்கு உயிர் நண்பன். பக்கிரி ஒரு முறை சிங்கப்பூர் சென்று வந்துவிட்டான். கழுத்தில் ஸ்வர்ணம் மினுக்கிறது. சின்னாச்சி சொந்தமாக லாரி வாங்கிவிட்டான். முதலாளி ஆனதற்கு அடையாளமாக தொந்தியும் தொப்பையுமாக பெருத்துவிட்டான். சசி இன்னமும் அய்யனார் பட்டறையில் தன் அப்பாவுக்கு அப்புறம் பட்டை நிமிர்த்துகிறான். திருநாவு சென்னையில் ஒரு டி.வி சானலுக்கு கார் ஒட்டுகிறானாம். நண்பர்கள் அனைவரும் நலம்.
சுப்பையண்ணன் போடும் வெல்லப்பாகு டீ குடிக்காதவர்கள் நாக்கு இருந்தும் வீண். சுப்பையண்ணன் நிர்கதியாக இருந்தபோது எங்கள் வீட்டு வாசல் மாட்டுக்கொட்டாயை கொஞ்சம் சுருக்கி அவருக்கு கடை போட இடம் கொடுத்த மன்னார்குடி வள்ளல் என் அம்மா. மேலப்பாலத்தில் இருந்து கீழப்பாலம் செல்லும் போதெல்லாம் காசு கொடுத்து வெல்லப்பாகு டீ குடித்திருக்கிறேன். இம்முறை மன்னை சென்றபோது சுப்பையண்ணனை பார்த்தேன். டீக் கடை மாரியம்மன் கோவில் குட்டையருகே ஷிப்ட் ஆகியிருந்தது. கொட்டகை குறுகியிருந்தது. முதுகு கூன் விழுந்து, தலை நரைத்து, நடை தளர்ந்து மூப்பு தட்டியிருந்தார். ஆனாலும் ரொம்ப சௌக்கியமாக சுருட்டு குடித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் சென்றதும் இருக்க அணைத்து "கார்த்தி! எப்படியிருக்கே..." என்று சுப்பையண்ணனின் உதடுகள் சிரித்தாலும் கண் தாரைதாரையாய் கண்ணீர் சொரிந்தது. சட்டையில்லாமல் கட்டிக்கொண்ட அவர் மீதிருந்து எனக்கு வெல்லப்பாகு டீ வாடை அடித்தது.
பிறந்த இடமும், கள்ளம் கபடமற்ற வெள்ளந்தி மனிதர்களின் நினைவுகளும் எப்போதும் அழியாத சுவடுகளாய் தீர்க்கமாக நெஞ்சில் நிறைந்திருக்கிறது.
படக் குறிப்புகள்: முதல் படம் கீழப்பாலம் அல்ல. மன்னை-திருவாரூர் சாலையில் கோரையாற்றாங் கரையில் அமைந்துள்ள ஒரு பாலம். இது சற்றேறக்குறைய கீழப்பாலத்தை ஒத்து இருப்பதால் http://balajiworld.blogspot.com/ என்ற முகவரியில் இருந்து எடுத்தேன். இரண்டாவதாக இருப்பது இப்போது அகலம் பெரிதான கீழப் பாலத்தை கூகிள் மேப்பில் இருந்து எடுத்தேன்.
பின் குறிப்பு: மாரியம்மன் கோயில் திருவிழா மிகவும் விமரிசையாக நடக்கும். அது பற்றி தனி பதிவாக எழுதுகிறேன்.
-