ஒரே கும்மிருட்டு. குமரகுரு சைக்கிளில் ஒத்தை ஆளாய் ஊருக்கு போய்கொண்டிருந்தார். கேரியரில் உர சாக்கு மூட்டை நிறைய மளிகை சாமான்கள். எண்ணெய் காணாத வீல் மற்றும் பெடலின் பேரிங்குகள் "கிரீச்...கிரீச்.." என்று கத்திக்கொண்டே துணைக்கு அவருடன் பேசிக்கொண்டே வந்தது. மழை விடாமல் நசநசவென்று பெய்துகொண்டிருந்தது. சில நேரம் ஊசியாய் சில நேரம் கொண்டை ஊசியாய் சில நேரம் கடப்பாரையாய் தனது உருவத்தை மாற்றி மாற்றி பூமியை தைத்தது. எதற்கும் மனிதர் மசியவில்லை, ஒதுங்கவில்லை. நன்றாக உழைத்து வைரம் பாய்ந்த கட்டை. ஒரு பிரளயம் வருவது போல "ஹோ.." என்ற இரைச்சலுடன் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மழை இல்லை என்று வானம் பார்த்து சபித்தவர்களை இன்று பழி தீர்க்கிறது. வானம் பொழிகிறது ஆனால் பூமி விளைவதற்கு இடம் கொடுக்காமல். மழை ஆரம்பித்தால் அவர்கள் ஊரில் மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள். அவ்வப்போது அந்த கிராமத்தின் பாதையில் செல்லும் டூ வீலர்களின் வெளிச்சம் தவிர மற்ற நேரங்களில் வானம் மின்னல் விளக்கடித்தது. அந்தந்த வெளிச்சங்களுக்கு தகுந்தவாறு அந்த சாலை சில கணங்கள் கண்ணில் தோன்றி மாயமாய் மறையும். அவரை விட அவர் சைக்கிளுக்கு வீட்டுக்கு வழி தெரியும்.
தூரத்தில் தேவர் பங்கில் வரப்பில் யாரோ வருவது போலிருந்தது. மழைக்கு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு மேல் சட்டை இல்லாமல் அரையில் மட்டும் வேட்டியை தூக்கி கட்டி அசப்பில் பண்ணையாள் முனியன் மாதிரி இருந்தான். வரப்பிர்க்கு எதிரே சாலை ஓரத்தில் ஒற்றைக்காலை ஊன்றி சைக்கிளை நிறுத்தி சீட்டை விட்டு இறங்காமல் குரல் கொடுத்தார் குமரகுரு.
"முனியா..."
"......"
"யேய்... முனியா... என்ன ரொம்ப நாளா காணோம்..."
"......."
"சம்சாரத்தோட ஊருக்கு போயிருந்ததா சொன்னாங்க..."
சடாரென்று வெட்டிய மின்னல் ஒளியில் அவனை கண்களை சுருக்கி கூர்ந்து கவனித்தார். அந்த இருட்டிலும் அவன் கண்கள் பூனையின் கண்கள் போல பளபளத்தது. மழை தனக்கான பூமி சம்பந்தத்தை இன்னமும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தது.
"யேய்..என்ன.. இவ்ளோ கேக்கறேன்.. வாயை தொறக்க மாட்டேங்கற.." என்று இரைந்தார்.
"ஹீ..ஹீ.. ஹ்.ஹீ..." என்று தொண்டைகட்டிய பொம்பளை போல் சிரித்தான்.
உடம்பில் இரத்தம் வேகவேகமாகப் பாய குமரகுரு சற்றே பயந்தார். டவுனில் கணேசன் மளிகையில் மூட்டையை எடுத்து காரியரில் கட்டும் போது மணி ஒன்பது. அப்புறம் ஒன்பதரை மணி ரெண்டாம் ஆட்டம் செண்பகா தியேட்டரில் "மாணிக்கத் தேர்" பார்த்துவிட்டு காற்றிருக்கிறதா என்று டயரை அழுத்தி சைக்கிளை ஸ்டாண்டில் பார்த்த போது பக்கத்தில் வண்டி எடுத்தவரை "மணி எவ்வளவுங்க?" என்று விசாரித்தார். அப்போது சரியாக ஒரு மணி. சிலுக்கம்பட்டி கடைசி வண்டி ஐந்தாறு பேரோடு பாதி தூக்கத்தில் சென்றது.
"யேய்.. என்ன இளிக்கிற.." என்று குரல் கம்ம கேட்டார்.
பதிலேதும் பேசாமல் இன்னும் ரெண்டு தப்படி நடந்து முன்னே வந்தான். அவன் அப்படியே காற்றில் அலைவது போல இருந்தது அவருக்கு. இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்தார். வாயை பிளந்து மீண்டும் சிரிக்கையில் அவன் வாய் ஒரு பல் கூட இல்லாமல் பொக்கையாக இருந்தது. "டேய்... முனி... ஒன்ன அடக்கறேண்டா... டாய்... ஆத்தா... வாடி..." என்று உச்சஸ்தாயியில் உடுக்கடித்து கத்தி பூசாரி போன அமாவாசையில் கால்வாய் ஓர காளி கோயிலில் ருத்ர தாண்டவம் ஆடியது கண்ணில் தோன்றியது. இப்போது மழை கொஞ்சம் குறைந்து காற்று வலுக்க துவங்கியிருந்தது. "ஊ..ஊ.." என்ற வளியின் ஒலி காதை கிழித்தது.
சைக்கிளை கிளப்ப காலை எடுத்து பெடல் மேல் வைக்க முடியவில்லை. ஏதோ ஒரு சக்தி காலை கீழே இழுப்பதுபோல் தூக்கவிடாமல் தடுக்கிறது. இடுப்புக்கு கீழே மரத்துப் போனது போன்ற உணர்வு. இன்னும் ரெண்டு அடி எடுத்து முனியன் முன்னே வருவது போல இருந்தது அவருக்கு. ஏற்கனவே மிகவும் வெளிறிப்போயிருந்தார். மழையில் தொப்பலாக நனைந்தவருக்கு பயத்தில் வேர்ப்பது எப்படி தெரியும். கை தானாக நெற்றியில் இருந்த தண்ணிரை வழித்து தரையில் தெளித்தது. இம்முறை வரப்பு பக்கம் உற்றுப் பார்த்தபோது அவனுக்கு முட்டிக்கு கீழ் காலையே காணோம். அந்த சந்தர்ப்பத்தில் மழைக்கு வயல் ஓரத்து புளிய மரத்தில் ஒதுங்கிய ஆந்தை ஒன்று விகாரமாக சப்தம் எழுப்பியது அவருக்கு அடிவயிற்றில் கிலியை ஏற்ப்படுத்தியது. திருடர்கள் கூட வெளியே வரத் தயங்கும் காலமாகியதால் நிர்ஜனமான சாலையாக அது இருந்தது. இரும்பு இருந்தால் காத்து கருப்பு அண்டாது என்று பேச்சியம்மா பாட்டி சிறுவயதில் அவருக்கு தெம்பூட்டியிருந்தாள். ஹாண்டில் பாரை இறுகப் பற்றிக்கொண்டார். வாய் தானாக "காக்க.காக்க.. கனவேல்...காக்க.." என்று முனுமுனுக்க துவங்கியிருந்தது.
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு முழு தெம்பையும் கொடுத்து காலை தூக்கி பெடலில் வைத்து அழுத்தத் துவங்கினார். வண்டி ஒரு இன்ச் கூட நகரவேயில்லை. பயத்தில் திரும்பி பார்க்காமல் இன்னும் அழுத்தினார். தோளில் ஒரு கை விழுந்ததும் பயத்தில் "அம்மா...." என்று அலறிவிட்டார்.
"என்ன குமரகுரு... இங்க நின்னு என்ன பண்ணிக்கிட்டு இருக்க..." என்ற குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தார். கையில் குடையுடன் நெற்றி நிறைய குங்குமத்துடன் காரியரை பிடித்துக்கொண்டு வீரப்ப பூசாரி நின்றுகொண்டிருந்தார்.
"அங்க..அங்க.." என்று கைகாட்டி வாயிலிருந்து வார்த்தைகள் தடுமாற குமரகுரு காட்டிய திசையில் பார்த்தார் பூசாரி.
"என்ன அங்க... ஒன்னும் இல்லையே..."
இப்போது திரும்பி பார்த்த குமாரகுருவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் காட்டிய திக்கில் யாருமே இல்லை. ஒரே அமானுஷ்யமாக இருந்தது. கொஞ்ச நேரம் வரையில் முனியன் போல இருந்ததும் தன்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பொக்கை வாய் காட்டி சிரித்ததும், முட்டி வரை காலில்லாமல் காற்றில் மிதந்து வந்ததும் பொய்யா? அதிர்ந்துவிட்டார். கண்ணை இரண்டு முறை கசக்கி விட்டு திரும்பவும் பார்த்தார். வரப்பில் யாருமே இல்லை. அடிக்கும் காற்றுக்கு பச்சை பயிர்கள் தலையாட்டிக் கொண்டிருந்தன. இன்னமும் திகில் அடங்கவில்லை.
"அட வாப்பா.. அங்கன ஒண்ணுமில்லை..." என்று முதுகை தட்டி குமரகுருவை அழைத்து சைக்கிளை எடுக்கச் சொல்லி மூட்டையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு காரியரில் உட்கார்ந்தார் பூசாரி. கொஞ்ச நேரம் சென்றதும் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் குமரகுரு.
"வயல்ல.. அப்ப நான் முனியனை பார்த்தேன்.."
"யாரு... நம்ம தேவர் பங்கு பண்ணையாளு முனியனையா?"
"ஆமாங்க.. "
"என்னப்பா சொல்ற... அவனையா?" என்று கொஞ்சம் சத்தமாக ஆச்சர்யம் ததும்பும் குரலில் கேட்டார் பூசாரி.
சைக்கிள் ஊருக்குள் நுழைந்திருந்தது. ஊர்க்காவல் தெய்வம் முனீஸ்வரன் கோயில் தாண்டி மேட்டுத் தெரு முனையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்கள். மழை சுத்தமாக விட்டிருந்தது.
"ஏன் கேக்கறீங்க..." ஒரு எதிர்பார்ப்போடு கேட்டார் குமரகுரு.
"இல்லை.. பொஞ்சாதியோட ஊருக்கு போன முனியன்.. அவனுங்க பங்காளியோட ஏதோ பணம் காசு தகராரு.. இவன் ஒன்னும் சரியா ஊட்டுக்கு பணம் கொடுக்கறதில்லை.. அப்பப்ப சாராயம் குடிச்சீட்டு சரிஞ்சிடறான்."
"ஆமாங்க... ஆனா கொஞ்சம் நல்லவந்தாங்க..வெகுளி..வீணா வம்பு வழக்குக்கு போக மாட்டான்" என்று பரிந்தார் குமரகுரு.
வீட்டு வாசலில் இறங்கிக்கொண்டார் பூசாரி. மூட்டையை காரியரில் வைத்து கிளிப் போட்டார். சானலை எடுத்து கட்டி ஒரு முடி போட்டார்.
"நல்லவந்தான்.. ஆனா பாரு.. அந்த தகரார்ல.. போன வாரம் நாயித்துக்கிளம ராத்திரி பங்காளிங்க வயலுக்கு வாங்கி வச்சிருந்த பாலிடாயில் மருந்தை எடுத்து குடிச்சுட்டான். ஆஸ்பத்திரிக்கு தூக்கி கிட்டு ஓடும்போதே உசுரு போய்டிச்சு..." வெகு சாதரணமாக சொல்லிவிட்டு வேட்டியை தூக்கி மடித்துக்கட்டிக்கொண்டு வீட்டிற்குள் போய்விட்டார் பூசாரி.
கடைசி வார்த்தை காதில் விழுந்ததும் குமரகுருவிற்கு லேசாக தலை சுற்றியது. உடம்பு படபடத்தது. வயலில் கண்ட காட்சிகள் மீண்டும் மீண்டும் வந்தது. பொக்கை வாய், கோலிகுண்டு கண்கள், முட்டிக்கு மேல் இல்லாத கால்கள் என்று எல்லாம் வந்து மொத்தமாக அரட்டியது.
காலையில் "என்னப்பா ஷாம்பூ பாக்கெட் வாங்கலாம்னு வந்தா குமரகுரு இன்னிக்கி கடையை தொறக்கலையா" பூசாரி தோளில் ஒரு துண்டோடு பக்கத்து சைக்கிள் கடையில் கேட்டுக்கொண்டிருந்தார். "உங்களுக்கு விவரமே தெரியாதா.. நேத்து ராத்திரி டவுனுக்கு போய்ட்டு வரும்போது குமரகுருவை பேயடிச்சிருச்சு... ஒரே காய்ச்சல்.. பேதியாவுது.. இன்னும் ஒரு வாரமாவது ஆவும் கடையை தொறக்கரத்துக்கு..."
கடையின் வாசலை அடைத்திருந்த மரப்பலகைகளில் "துணிவே துணை" என்று சிகப்பில் தடிமனாக எழுதியிருந்தது.
பட உதவி: http://www.flickr.com/photos/kshgarg
-