Thursday, September 30, 2010

'தல' அஜீத்தின் பார்வைக்கு

car
இவுரு பேரு கென் ப்ளாக் ஜிம்கானா. ஜாலிலோ ஜிம்கானா இல்லை. காரிலே, ரேசிலே ஜிம்கானா. நாமெல்லாம் காரை நேரா ஓட்டினா, இவரு கிராஸாவே ஓட்ராறு.

பார்ட் 1பார்ட் 2ஏதோ RTO பொண்ணை லவ் பண்ணி 8888 போடச் சொல்லி அப்ப தான் பொண்ணு கொடுப்பேன்னு சொல்லிட்டாங்க போலிருக்கு.

மரத்தில கட்டிபோட்ட காளைக் கன்னுக்குட்டி மாதிரி அந்தப் பிளாஸ்டிக் கம்பை சுத்தி சுத்தி வருதுப்பா இந்த காரு...

அதானும் பரவாயில்லை அந்த ஆளை நடு ரோட்ல நிக்க வச்சு வட்டமடிக்கராரே....

தல அஜித்கிட்ட யாராவது சொல்லுங்கப்பு...

பின் குறிப்பு வீடியோக்கள்:-
இதையே நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி படிக்காதவன் படத்துல.. ராஜாவுக்கு ராஜா நான் தான் அப்படின்னு பில்டிங் மேல போனாரு...


நம்ம உலக நாயகன் கமல் அபூர்வ சகோதரர்கள் ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை அப்படின்னு இந்த காரை வச்சு பாடறாரு.. அவரே பாடி பெடலெடுக்குராறு...இதுல வாலி, "ஓரிடத்தில் உருவாகி வேறிடத்தில் விலை போகும்.... கார்களை போல் பெண் இனமும் கொண்டவனை போய் சேரும்.... கட்டினவன் விரல் தான் மேலே படனும்..."  அப்பப்பா... கவிஞர் லூட்டி தாங்க முடியலை...

-

Wednesday, September 29, 2010

ஒரு கம்ப்யூட்டர்காரனின் காதல் கவிதை

computerkaran

ஜடப்பொருளாய் இருந்த PC நான் 
உயிர்கொடுத்த OS நீ 

வன்பொருளாய் திரிந்த என்னை
மென்பொருளாய் திருத்தியவள்  நீ

எம்ப்டி சிடியாக இருந்த என்னை
சங்கீத பேச்சினால் எம்பி த்ரீ ஆக்கியவள் நீ

கணினி இயக்கும் உன் உள்ளங்கைக்குள்
கண்ணியமாய் சிறைபடும் மவுஸ் நான்

நீ இழுக்கும் திசைக்கு வரும்
ஜாய்ஸ்டிக் அடிமை நான்


நீ மடி கொடுப்பாய் என்றால்
உன் லேப்டாப்பாய் நான்

டைப் அடிக்கத் தெரியாத உன் பிஞ்சு விரல்களால்
செல்லக் குட்டுகள் பெறும் கீபோர்டு நான்

உன் ஸ்பரிசம் எனை அழுத்தும் என்றால்
கணினியின் ஆன்(ண்) சுவிட்ச் நான்


நீ உற்று ரசிப்பாய் என்று தெரிந்திருந்தால்
ஒரு மானிட்டராயேனும் நான் பிறந்திருப்பேனே

ஷட்டவுன் ஆகப் போனவனன் உனைப்
பார்த்த கணத்தில் ரீபூட் ஆகிப்போனேனே!

கண்ணே! நீ சூடுவாய் என்றால்
நான் தான் உனக்கு வலைப்பூ

முப்போதும் என் மனத்திரையில் ஓடும்
யூட்யூப் வீடியோ நீ

அரட்டை பெட்டியில் வரும் ஸ்மைலி நீ
அனுதினமும் நான் தேடும் கூகிள் நீ

என் ஹார்ட்டிஸ்க் நிரப்பிய ஒரே கவிதை நீ
என் அறிவுக்கண்ணை திறந்த விக்கிபீடியா நீ
என் சொப்பனங்களை ஆக்ரமித்த ஸ்க்ரீன் சேவர்  நீ

இருபத்து நான்கு மணிநேரமும் என்னுள் ஓடும் செர்வர் நீ
என் உள்ளத்தை அச்சடித்த கலர் பிரிண்டர் நீ

வைரஸ் தாக்கும் வரை தாமதிக்காதே
விரைந்து வா! நீயும் நானும் இந்த
இணையத்தால் இணைவோம்

பி.கு: மேற்கண்டதிர்க்கும் தலைப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்று நினைப்பவர்கள் தயவுசெய்து கீழே இப்பதிவின் Labelஐ பார்க்கவும்.

பட உதவி: cs4fn.org
-

Tuesday, September 28, 2010

புன்னகைக் கிழவர்

punnagaikizhavarஇடுப்பில் கொஞ்சம் பெரிய துண்டு போல கணுக்காலுக்கு அரை அடி மேலே நிற்கும் ஒரு காவி வேஷ்டி. போகர், அகத்தியர் மாதிரி வளர்ந்த சித்தர் தாடி, ஆனால் மாசற்ற வெள்ளையில். அழுத்தி பின்னால் படிய வாரிய பாகவதர் ஸ்டைல் கேசம். பெரும்பாலான நேரங்களில் சட்டையில்லாமல் பொசு பொசுவென்று வெள்ளை ரோம மேலுக்கு மாட்சிங்காக ஒரு துண்டு. இளவயதில் உழைத்ததின் சிறப்பு தொப்பை இல்லாமல் தோளுக்கு மேல் இருந்த ரெண்டு முண்டுகளில் தெரிந்தது. நல்ல வைரம் பாய்ந்த கட்டை. ஆனால் எழுபது வயது தசைகளை சுருக்கியும் முழு கேசத்திற்கும் வெள்ளை அடித்தும் விட்டிருந்தது. எல்லாவற்றும் மேல் எப்போதும் சந்தோஷம் ததும்பும் முகம். பிறந்த போதே சிரித்துப் பிறந்தவர் இவர் ஒருவராகத்தான் இருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றும். பாழ் நெற்றி. இது தான் அந்த புன்னகைக் கிழவரின் இயற்பியல் கூறு. 

உள்ளூர் கடைத்தெருவில் சாமியப்ப முதலியார் ஜவுளிக் கடையில் இருபதிலிருந்து என்பது வரை வந்த மகளிர் படைக்கு காலை முதல் இரவு வரை சளைக்காமல் புடவை எடுத்துக் காண்பித்து மகிழ்ச்சி அளித்தவர். "வஜ்ரவேலு கடையில் இருந்தால் அலுக்காமல் அஞ்சு நிமிஷத்துல ஐநூறு புடவை விரிச்சி போடுவான்" என்று பெரியய்யா சாமியப்பன் காலத்திலேயே பெயரெடுத்தவர். தீபாவளியை விட அந்த விவசாய மற்றும் வேளாள குடி மக்கள் நிறைந்த அந்தக் கிராமத்தில் பொங்கலுக்கு புதுத் துணி எடுக்கும் கூட்டமும் பழக்கமும் அதிகம். ரெட்டை மாட்டு வண்டி கட்டிக்கொண்டு கொழுந்தியா, நாத்தனாருடன் துணி எடுக்க வந்த அத்திப்பட்டு பெருநிலக்கிழார் வீட்டு மருமவப்பொண்ணு வஜ்ரவேலுக்கு புடவை காண்பித்த ஷோக்கிர்க்கு வெகுமதியாக ஒரு கருப்பு கரும்பு கட்டு அவர் வீட்டில் இறக்கி சென்றதாக பெருமையாக கூறுவார். "காட்ல மகசூல் அதிகமா இருந்தாலும் கொடுக்க மனசு வரணும்ல..." என்று அப்பெண்ணின் தாராள குணத்தை ஊரறிய வாயார புகழ்ந்து பேசுவார்.

அரசாங்க பஸ் ஓட்டுனராக பெரியவன் மனோகர் வேலைக்கு சேர்ந்தபின் "யப்பா.. இன்னமும் ஏன் வேலைக்கு போற.. கையை மேல தூக்கவே கஷ்டப்படுற.. இன்னமும் கடையில போய் விசுரனுமா... பேசாம ஊட்ல படு..." என்று பலமுறை பாடாய் படுத்தினான். அப்ப கூட அவருக்கு வேலையை விடும் எண்ணம் இல்லை. அரக்குக்கும் சிகப்பிர்க்கும் வித்தியாசம் தெரியாமல் போன ஒரு நாளில் இனிமேல் வீட்டில் ஓய்வெடுக்கலாம் என்று முடிவு செய்தார். "பரவாயில்லைண்ணே கல்லா பக்கத்தில உக்காந்துக்கோங்க, இல்லைனா வேட்டி துண்டு எடுத்துக் கொடுங்க... வேலைய விட்டு நிக்காதீங்கண்னே" என்று சின்ன முதலாளி தன்ராஜ் வற்புறுத்தினான். இருந்தாலும் நாளைக்கு வேலையில் ஒரு தவறு கண்டுபிடித்து தன் இவ்வளவு நான் உழைப்பிற்கு ஒரு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக விட்டுவிட்டார். வேலையை விட்ட அன்று புது வேட்டி சட்டை ஆயிரம் ரூபாய் பணத்துடன் தன்னுடைய கைனெடிக் ஹோண்டாவில் வீடுவரை கொண்டுவந்து விட்டுச் சென்றான் தன்ராஜ்.

பொதுவாகவே யாரிடமும்  வம்பளக்கும் குணம் இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகியவர் வஜ்ரவேலு. அவர் வீட்டுத் திண்ணையில் ஓய்வாக உட்காருவதர்க்கும் மனோகரின் மகவு ஒன்று தொட்டிலில் வருவதற்கும் சரியாக இருந்தது. பேரனுடன் பெரும்பொழுதைக் கழித்தார். யாரையும் எடுத்தெறிந்து பேசமாட்டார். காலையில் எப்பவாவது டீ தேவைப்பட்டால் தெரு முனைக்கு ராசு டீக்கடைக்கு வந்து பொறுமையாக உட்கார்ந்து போட்டு தரும்போது டீ குடித்துவிட்டு செல்வார். எந்நேரமும் சிரிப்பார். "என்னப்பா பசங்களா... வானாகி..மண்ணாகி... படிக்கிறீங்களா" என்று கொஞ்சும் போது தெருப் பிள்ளைகளை கேட்பார். பள்ளி செல்லும் பிள்ளைகள் சாலையை ஒழுங்காக கடக்கிறார்களா என்று திண்ணையில் உட்கார்ந்து கொண்டே வாஞ்சையுடன் பார்ப்பார்.

இரண்டு வருடம் கழித்து போன மாதம் தான் ஊருக்கு போனேன். லாஃபிங் தெரபி, மனசை ஸ்ட்ரெஸ் இல்லாமல் எப்படி வைத்துக்கொள்வது என்று ஐயாயிரம் கட்டி லீ மெரிடியனில் மானேஜ்மென்ட் வாத்தியார்களின் கிளாஸ் அட்டென்ட் செய்யும்போது மூக்குக்கு முன்னாடி வந்து நின்றார் கிழவர். இந்த முறை பார்க்கலாம் என்று அக்கரை மாரியம்மன் கோயில் தாண்டி ஆற்றோரத்தில் இருக்கும் தாத்தா வீட்டை பார்க்கப் போனேன். விறகு சுள்ளி பொறுக்கிக்கொண்டு வழியில் வந்த செல்லாக்கா ஆத்தா தான் விசாரித்தபோது சொல்லிச்சு, "எப்போதும் சிரிச்சிகிட்டே இருந்தாரு. நாம போவும் போது எதை எடுத்துக்கிட்டு போவப்போறோம் செல்லாக்கா சின்னச் சிறுசுங்க கொஞ்சம் வெடுக்குன்னு தான் பேசுங்க.. விட்டுட்டு போவியா நம்ம காலம் மலையேரிடிச்சு.. இனிமே அவங்க காலம். விட்டு தள்ளு" அப்படின்னு ஊருக்கு சொல்லிகிட்டு  இருந்தவருக்கு வீட்ல அவ்வளவு பிரச்சனை. மருமவ தான் கையால ஒரு பிடி சோறு போடலை. எப்பயும் வெந்நீரா தள தளன்னு கொதிச்சுகிட்டு இருந்தா... இருந்தாலும் வெளிய காட்டமே சிரிச்சிகிட்டே இருப்பாரு. போன மார்களி  மாச பவுர்ணமி விடிகாலைல பொசுக்குன்னு போய் சேர்ந்துட்டாரு தம்பி... " என்று முந்தானையை வாயில் பொத்திக் கொண்டாள்.

"ஆனா தம்பி.. செத்தப்புறமும் மூஞ்சி நம்மளை பார்த்து சிரிச்ச மாதிரியே இருந்ததுப்பா..." என்று சொன்னவுடன் ஏனோ கண்கள் பனித்து நெஞ்சு கனத்தது. கிழவர் வீட்டுப் பக்கத்தில் ஓடிய ஆறு ஓடாமல் நின்றுகொண்டிருந்தது.

பட உதவி: http://arunrajagopal.com
-

Monday, September 27, 2010

சின்ட்டூ ஜில்லு

"ஸ்கூட்டர்ல  போகும் போது யாரும் என் பேரை சொல்லி கூப்பிட்ரதில்லை தெரியுமா நோக்கு. எல்லாரும் உன் பேரைத்தான் சொல்லி கூப்பிடறான். இப்டித்தான் நேத்திக்கு போய்ண்டிருந்தபோது 'திருப்பு.. திருப்பு.." ன்னான், நான் ஸ்கூட்டர திருப்பி, இடிச்சு..." என்பது மை.ம.கா.ராஜனில் கமல் முட்டியை ஊர்வசிக்கு காண்பித்து பேசும் புகழ் பெற்ற வசனம். ஊரில் சமையலுக்கு உதவிக்கு வரும் ஒரு மாமியின் பெயர் "லெங்க்த்" மாமி. மாமாவை விட மாமி ஒன்னரை அடி உயரம் அதிகம். ஒரு அற்ப பதரை பார்ப்பது போல கீழே குனிந்து மாமாவை ஒரு லுக் விடுவார். பேச்சுரிமை இல்லாத அந்த குள்ள மனுஷனுக்கு நிமிர்ந்து மூஞ்சியை பார்க்கும் பாருரிமை கூட இல்லாமல் போய்விட்டது. பாவம்.

பொதுவாக யாருக்கும் இட்ட பெயர் பிடிப்பதில்லை அல்லது மனதில் நிற்பதில்லை. அரசியல் மற்றும் சினிமா இரண்டிலுமே எக்ஸ்ட்ரா டைட்டில் ரொம்பவே ஜாஸ்தி. நடிகர் திலகம் என்று ஒரு இமயத்திற்கு கொடுத்துவைத்த காரணத்தால் முதல் படத்திலேயே டைட்டிலுடன் தான் உள்ளே வருகிறார்கள். சில பேர் நியூமராலாஜி பார்த்து வைத்துக்கொள்வதாக வேறு கேள்வி. 'இளம் புயல்' ஜெயம் ரவி என்று கார்டு போடுகிறார்கள். ஏற்கனவே ஜெயம் ஒரு முன் சேர்க்கை  அதற்க்கு முன் இன்னொரு முன் முன் சேர்க்கையாக இளம் புயல். ஆனால் பார்க்க மிகவும் தென்றலாக இருக்கிறார். 'பேராண்மை'யில் கூட. சில சமயம் யார் இந்த மாதிரி பட்டப் பெயர் எப்படி வைக்கிறார்கள் என்று பார்த்தால் விநோதமாக இருக்கும். ரெண்டு மூனு முறை தெருவில் நின்று உரக்க கூப்பிட்டால் அந்தப் பெயர் அவர்களோடு பச்சென்று ஒட்டிக்கொண்டுவிடுகிறது. இவ்வளவு ஏன் பிறந்த குழைந்தைக்கு பெயர் வைத்தபின்னர் கூட எல்லோரும் "ஜில்லு" , "சின்ட்டு", "பிண்டு", "பம்ப்ளி" என்று ஆசையாக கூப்பிடுவார்கள். எங்கள் உறவில் ஒருத்தர் தன்னுடைய செல்லமகளை "பப்பி" என்று செல்லமாக கூப்பிட ஆரம்பித்து, கல்லூரியில் "சு.சூ.ச்.ச்.சூ" என்று நாய்க்குட்டியை அழைப்பது போல கூப்பிட்டு ரகளை செய்து விட்டார்கள்.
pattam
 சாயங்காலம் ஐந்து மணிக்கு அரட்டை கச்சேரிக்கு மதில் சுவற்றில் வந்து உட்கார்ந்தால் ராத்திரி ரெண்டு மணி மூன்று வரை எல்லோருக்கும் கம்பெனி கொடுக்கும் ராஜாவுக்கு 'ஆந்தை' என்று ஊரில் பெயர் வைத்தது ஒன்றும் ஆச்சர்யம் இல்லைதான். கூப்பிட்டு முடிப்பதற்குள் தெருமுனை திரும்பிவிடும் அளவிற்கு பெரிய பெயர் வைத்தவர்களை சுருக்கி கூப்பிடலாம். உதாரணத்திற்கு ஆர்.வி.எஸ் ஆகிய நான். இல்லையென்றால் எஸ் ஆகிவிடுவார்கள். ஆனால் கொஞ்சம் முயற்ச்சித்தால் ஈசியாக கூப்பிடக்கூடிய பெயர்களை கூட கண்டமேனிக்கு வெட்டி விடுவது கொஞ்சம் அதிகம்தான். உதாரணத்திற்கு கருணாஸ். ஆறடி இருக்கும் வாசுதேவன் பத்தாவது படிக்கும்போதே எங்கள் கிராமத்தில் வாயை சுழித்து அமெரிக்க ஆங்கிலம் பேசுவான். கொஞ்சம் பொறுத்து பார்த்த சக மாணவர்கள் முடியாமல் அவனுக்கு "ஊஸ்..." (OOZZZ) வாசு என்று கூப்பிட ஆரம்பித்தார்கள்.  கொஞ்சம் குண்டாக மற்றும் குள்ளமாக இருந்த முரளி "அப்பு"வாக்கப்ட்டான். திருஞானம் "நரி" ஆன கதை எப்படி என்று கொஞ்சம் கூட விளங்கவில்லை. கால்களின் ஐந்து விரல்களை ஊன்றி குதித்து குதித்து நடந்து வரும் (ஊனம் ஏதும் இல்லை) "ஸ்ப்ரிங்" விஜய் (தற்போது கேட்ஸ் பக்கத்தில் மைக்ரோசாஃப்ட்டில் இருக்கிறான்), "அனுராதா" பத்ரி (அரை டிராயரில் பார்க்குபோது அந்தக் கால கவர்ச்சி கன்னி ஞாபகார்த்தமாக), "கொண்டை" பாலாஜி( பின்னந்தலை சற்று பெருத்து இருந்ததால்)  என்று பல நண்பர்கள் அவர்கள் இயற்பெயர் இழந்தவர்கள்.

"கடாரம் கொண்டான்" என்று ராஜேந்திர சோழனை அழைத்ததால் அதைப் பார்த்து அரசியலில் 'குதித்து' அடிபடாமல் ஈடுபடும் மக்களுக்கு பட்டப் பெயர் மேல் ஒரு ஈர்ப்பு வந்திருக்கலாம். அரசியலில் பொது சேவை புரியும் எல்லோருக்கும் இந்நாட்டு மன்னர் பெருமான் என்ற நினைப்பு. கணக்கிலடங்காத பெயர்களில் ஏதாவது ஒரு அரசியல் பட்டப் பெயரை இங்கு எழுதிவிட்டு வீட்டிற்கு ஆட்டோ அழைப்பு விடுவதற்கு எனக்கு தெம்பு இல்லை. த்ராணியும் இல்லை. ஆகையால் அந்த ஏரியாவிற்கு போகவேண்டாம். ஹைலி டேன்ஞ்சரஸ் கைஸ். 

ரெண்டு ரமேஷ்கள் எம்.சி.ஏ படிக்கும் போது இருந்ததால், கருப்பாகவும், K  என்று இனிஷியல் இருந்த ரமேஷ் "கானா" ரமேஷாகவும், இளநரை இருந்த அடுத்தவன் "தாத்தா" ரமேஷாகவும் பெயர் மாற்றம் பெற்றனர். எப்போது கேட்டாலும் "பித்த நரைடா மாப்ள.." என்பான். எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு தேறாத நண்பனுக்கு சோமாலியாவின் ஷார்ட் "சோம்ஸ்" என்ற பெயரே நிலைத்துவிட்டது. இப்போது கூட அவனுக்கு காது குத்தி மொட்டை அடித்து வைத்த பெயர் என்னவென்று தெரியவில்லை. ஒரே ஒரு முறை மலையாள "பிட்" படம் பார்த்து வந்து நாகாவிர்க்கு டி.பி என்ற பெயர் வந்து ஒட்டிக்கொண்டது. என்னவென்றால் படத்தின் பெயர் திருட்டு புருஷன். எதை எடுத்தாலும் தனக்கு தெரிந்தது போலவே காட்டிக் கொள்ளும் பாஸ்கர், "போஜா" பாஸ்கர் ஆனான். குட்டியாக இல்லாமல் இருந்தாலும் வரதராஜன் "வரதுக்குட்டி" என்றானான். மை.ம.கா.ராஜன் எஃபெக்ட்.

இடைச்செருகல்: திருப்பு கேட்டு ஸ்கூட்டர் திருப்பி காலில் அடிபட்ட கமல் கீழே(6:35). "நேக்கா. நோக்கா.. நேக்கும் நோக்குமா..." அட்டகாசம்.


போன பதிவில் சேப்பன் கறுப்பி எழுதியவுடன் ந்யுரான்களில் வந்த பட்டப்பெயர்கள் லிஸ்ட் இது. எங்கள் ஊரில் "மொக்கு" என்று ஒருவருக்கு பெயர். அவருக்கு மொத்தமே மூன்று தமிழ் எழுத்துகளில் அடங்கும் ரத்னசுருக்கமான பெயர் தான். ஆனால் MOGGU ஆனார். அது என்ன பெயர் என்று சொல்லுங்கள் பார்ப்போம். கொஞ்சம் கெக்கே பிக்குன்னு தான் இருக்கும்!
பட உதவி: guardian.co.uk
-

Friday, September 24, 2010

நாய்கள் ஜாக்கிரதை!

stray dogs
சேப்பனும் கறுப்பியும் 
அதிகாலையில் வாக்கிங் சென்றால் நமக்கு உற்ற தோழன் பைரவர் தான். தன்னுடைய குடும்பத்தோடு ஒரு பூபாளம் பாடி நடப்பதற்கு வரவேற்கும் போது மனசு அப்படியே சட்டுன்னு விட்டுப் போய்டும். ஸ்கூல் முனையில் நின்று கொண்டு காலையில் இருந்தே ஏரியாத் தகராறில் "எங்க ஏரியா உள்ள வராதே..." என்று எதிரிகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கும். கொஞ்ச தூரம் தலையை தொங்கப்போட்டுக் கொண்டு ஓடும் அப்புறம் நின்று அங்குமிங்கும் நிமிர்ந்து பார்க்கும் அப்புறம் திரும்பவும் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு ஓடி வரும். அந்தத் தெரு அதன் ராஜ்ஜியத்தில் உள்ளது என்று அந்த உலாத்தலில் நமக்கு தெரிந்துவிடும். எவ்வளவு விதம்விதமான ஸ்வர ஸ்தானத்தில் குரைக்கிறது. எதிரி தெரு நாய்க்கு எட்டுக் கட்டையில் ஒரு "லொள்... லொள்...." என்றால் தனது குட்டிக்கு அடிக்குரலில் ஒரு செல்ல சின்ன "வ் ..வ்....வ்.. ர்...ர்...ர்..".  நேற்று நான் வாக்கிங் செல்லும் இடத்திற்கு புதிதாக வந்த ஒரு மத்திம வயது இளைஞர் அந்த சேப்பன் (சிகப்பாக உள்ளதால்) இவரிடம் ஏதோ ஆயிரம் ரூபாய் கைமாத்து கேட்டது போல லேசாக முறைக்க, பதிலுக்கு கறுப்பி(சேப்பனின் மனைவி) யுடன் சேர்ந்து கோரஸாக ஒரு டோஸ் ஐந்து நிமிடம் கொடுத்தது. மத்திமர் அதோடு விட்டிருக்கலாம்,  குரைத்தலில்ல் வெகுண்டு திரும்ப முறைத்துவிட்டு, பழமொழிக்கேற்ப குனிந்து கல்லை தேடினார் கிடைக்கவில்லை. அவரின் எண்ண ஓட்டத்தை புரிந்துகொண்ட சேப்பன் துரத்த ஆரம்பிக்க, பிடித்தார் ஒரு மரண ஓட்டம். சேப்பன், கருப்பி இருவரும் தம்பதி சமேதராக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள லிமிட் வரை துரத்திவிட்டு அடுத்த எல்லையில் உள்ள சகாக்களிடம் அவரை பத்திரமாக விட்டுவிட்டு திரும்பியது. இவ்வளவு களேபரத்தின் இடையில் நான் பாட்டுக்கு "என் வழி தனி வழியாக" நடந்துகொண்டிருந்தேன். என்னை அவர்களில் ஒருவராக பாவித்து தொந்தரவு செய்யாது விட்டுவிட்டது. ஒருக்கால் அந்தத் தெருவின் வாக்கிங் வாடிக்கையாளர் என்று நினைத்ததோ என்னமோ.

இப்படி தெருநாய்கள் அட்டகாசம் செய்யும்போது, அரை டிராயர் போட்டுக்கொண்டு சுச்சா கக்காவுக்கு கொண்டு விடுவதற்காக சீமை நாய்களை கையில் பிடித்துக் கொண்டு சில கனவான்கள் வருவார்கள். அந்த நாய் இவர்களை இரும்புச் சங்கிலியால் கைகட்டப்பட்ட மனோகரா சிவாஜி போல தர தரவென்று தெருமுழுக்க இழுத்துக்கொண்டு போகும். ஓரத்தில் பதவிசாக ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே நடந்து செல்லும் நம் மேல் பாய எத்தனிக்கும். "சார். பயப்படாதீங்க ஒன்னும் பண்ணாது. நம்ம ரேம்போ கடிக்கமாட்டான்" என்று நம்மை சமாதானப் படுத்துவார்கள். "குலைக்கற நாய் கடிக்காது" என்பதற்கு  பதிலடியாக வரும் சதி லீலாவதி வசனம் "அது நமக்கு தெரியும், ஆனா நாய்க்கு தெரியனுமோனோ.." தான் அவர்களுக்கும் பதில். சில தினங்களுக்கு முன் சற்று கூர்ந்து கவனித்ததில் சில கெட்டிக்கார சீமை ஆண் நாய்கள் தெருவோர ஸ்லிம் பியூட்டி கருப்பியை பார்த்து வாலாட்டுகிறது. குரைக்காமல். 

கல்லூரி வயதில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ராஜகோபாலும் நானும் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தோம். ஆறு புள்ளி ரெண்டடி இருப்பான். ராஜகோபால் சைக்கிளில் எப்போதும் முன்னாடி பாரில் தான் உட்காருவான். அன்றும் அப்படி சென்றுகொண்டிருக்கும் போது அவன் வீட்டுக்கு அருகில் ஒரு திருப்பம் வரும். அது ஆளில்லா திருப்பம் ஆனால் அதிக நாயுள்ள திருப்பம். எனக்கு கொஞ்சம் உதறல், ஏனென்றால் ஒவ்வொன்றும் வேட்டை நாய் போல் இருக்கும். கவ்வினால் குறைந்தது அரை கிலோ கறி எடுத்துவிடும். இவன் சும்மா இருக்காமல் பயத்தில் நாயுடன் தோழமை கொண்டாடுவது போல "ஹாய்" என்று கையை தூக்கி வாழ்த்துச் சொன்னான். இவன் அடிக்க கை ஓங்குகிறான் என்றஞ்சி  ஓரமாக போய்கொண்டிருந்தது பாய்ந்து வந்து "வள்" என்று அவன் காலில் அதன் பல் தடம் பதித்து சென்றுவிட்டது. அவ்வளவுதான். அவன் ஒரேடியாக பயப்பட்டு கதற உடனே ஹாஸ்பிடலுக்கு ஓடினோம். "தொப்புளை சுற்றி ஊசி போடவேண்டும் சட்டையை தூக்கு" என்று அந்த ஓமன மலையாள நர்ஸ் சொன்னதும் அவனுக்கு எங்கிருந்தோ வெட்கம் வந்து பிடுங்கி தின்றுவிட்டது. வெட்கத்தில் சட்டை நுனியை தூக்கி வாயில் சொருகிக்கொண்டு காலால் கோலம் போடும்போது தெரிந்த தொப்புளில் "நறுக்" என்று குத்திவிட்டாள் அந்த மலையாள பகவதி நர்ஸ். ஒரு வாரம் தொடர்ந்து ஊசி போட்டுக்கொண்டான். வார இறுதியில் துளிக்கூட வெட்கம் இல்லாமல் உள்ளே நுழையும் போதே சட்டையை தூக்கிக்கொண்டு போகும் வரைக்கும் துணிந்துவிட்டான் ராஜகோபால். அது ஒரு நர்ஸ் ஊசிப் போன கதை. இங்கே வேண்டாம்.


எங்கேயோ கேட்ட ஜோக்:
ஒருவர்: என்ன பன்னி கூட வாக்கிங் போய்கிட்டு இருக்கே?
நாயுடன் செல்பவர்: ஹே இது நாய். பன்னின்ற..
ஒருவர்: இல்லைப்பா.. நான் நாய்க்கிட்டே கேட்டேன்.

மகாபாரதத்தில் மஹாபிரஸ்தானிக பர்வத்தில் (மேலுலக யாத்திரை) தன்னிடம் அன்பு பாராட்டிய நாயையும் உயிரோடு ஸ்வர்க்கத்திர்க்கு அழைத்துச் சென்ற தருமன் கதை எல்லோருக்கும் ஞாபகம் இருக்கட்டும்.

Thursday, September 23, 2010

யார் அந்த யோஜனகந்தி?


அந்த ஆற்றங்கரையோரத்தில் யோஜனகந்தி உட்கார்ந்திருந்தாள். அவளிடம் அழகும் வனப்பும் வாளிப்பும் மதியூகமும் ஒருசேர நிறைந்திருந்தது. அதென்ன பெயர் யோஜனகந்தி. அவள் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு யோஜனை தூரத்திற்கு சுகந்தம் காற்றில் பரவி வாசனை மூக்கை துளைக்குமாம். உலகில் வாசனை மிகுந்த மலர்களுக்கு சவால் விடும் மணமாம். அதனால் அவள் பெயர் யோஜனகந்தி. அவள் மீனைப்போல் கண்ணுள்ள ஒரு மீனவப் பெண். வேல் விழி வீசி அவள் பேசும்போது வாள் வீசும் மன்னவரும் மயங்கிவிடுவர். அவள் மைவிழி வீச்சுக்கு எதிர் வீச்சு கிடையாது. நல்ல குணவதி. அந்தக் காட்டில் இருக்கும் முனிபுங்கவர்கள், ரிஷிகள், ரிஷிபத்னிகள் ஆற்றை கடந்து அக்கரைக்கு பயணிக்க உதவியாக துடுப்பு பிடித்து படகு ஓட்டுபவள்.

ஓர் நாள் அதுபோல அந்த ஆற்றங்கரயோர காட்டில் தனிமையில் அந்த மயில் இருக்கையில்  கானகத்திற்கு வேட்டைக்கு வந்த அந்த நாட்டு மகாராஜா அவளைப் பார்த்து அந்தக் கணத்திலேயே மையல் கொண்டான். தனித்து இருக்கும் பெண்ணிடம் காதல் சொல்லக் கூட கூச்சப்பட்டு நின்றான். கண்ணியத்தை கடை பிடித்தான். தன் வயதுக்கு ஏற்றவளாக அவள் இல்லை என்றாலும் மண்ணாளும் அவனுக்கு அந்தப் பெண்ணின் மீது ஆசை விடவில்லை. இருந்தாலும் அது ஒவ்வாக் காதலாக இருக்குமென்று அஞ்சி அவள் தகப்பனிடம் சொல்லவும் மிகவும் தயங்கினான். மௌனமாக காட்டை விட்டு வெளியேறினான். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து நாள் ஆக ஆக துரும்பாக இளைத்தான். அரசாட்சியில் கவனம் செலுத்த முடியாமல் பகல்பொழுதிலேயே அவளைப் பற்றி கனாக் கண்டான்.  மன்னன் நிலை கொள்ளாமல் தவித்ததால் அமைச்சர்கள் தவித்தார்கள் மக்கள் தவித்தார்கள் நாடு தவித்தது. மன்னன் மனநிலை ஒருவராலும் அறியமுடியவில்லை.

முதல் பட்டத்து ராணிக்கு பிறந்த பையன் மிகவும் சூட்டிகை. தகப்பனாரின் துன்பம் அறிய துடித்தான். என்றிலிருந்து அப்பா துணுக்குற்று இருக்கிறார் என்று ஆராய்ந்தான். என்றைக்கெல்லாம் மன்னவன் வேட்டைக்கு யார் யாரை தேர் ஓட்ட அழைத்துச் சென்றான் என்று ஒரு பட்டியல் கேட்டான். கிடைத்த தேர்ப்பாககன்களின் பெயர்ப்பட்டியலில் அந்தக் குறிப்பிட்ட நாளில் யார் தகப்பனுக்கு சாரதியாக இருந்தார்கள் என்று கண்டுபிடித்தான். தனியே அழைத்து விசாரித்தான். அன்றைக்கு ஓட்டியவன் மன்னனின் துக்கத்திற்கு என்ன காரணம் என்று சொன்னான். கண்கள் விரிய காரணத்தை கேட்டுக்கொண்டான் மகன். அந்த சாரதியையும் அழைத்துக் கொண்டு அப்பெண்ணின் தகப்பனான மீனவத்தலைவனிடம் தன் அப்பாவிற்கு சம்பந்தம் பேசப் புறப்பட்டான்.

போதும் இதோட நிறுத்திப்போம். ஓ.கே. இப்போ கேள்விகள்  என்னான்னா,
1. யார் அந்த யோஜனகந்தி? 
2. அந்த ராஜா யார்? 
3. அப்பாவிற்கு சம்பந்தம் பேசிய அந்த பிள்ளையாண்டான் யார்?
4. என்ன கதை இது?

பின்னூட்டத்துல சொல்லுங்க பார்ப்போம்.
படத்தின் கைவண்ணம்: ராஜா ரவி வர்மா.

Wednesday, September 22, 2010

கப்பலில் ஒரு கபடி

kabadikappalகப்பலோட மூக்கு நுனிக்கு வந்து மேலே ஏறி நின்று கை ரெண்டையும் பரப்பி ஏசுநாதர் சிலுவையில் நின்றதுபோல் காதலி நிற்க அப்படியே பின்னாடி வந்து காதலன் நிற்பது போன்ற கப்பல் நாம டைட்டானிக் படத்தில் பார்த்தோம். பார்த்ததோட மட்டும் இல்லாமல் கேட் வின்சலேட் மாதிரி நமக்கு ஒன்னு ஆம்புடாதான்னு அலைந்தோம். கடைசியில் கப்பல் உடைந்து சமுத்திரராஜன் பல பேரை சாப்பிட்டதையும் பார்த்தோம். அதுபோல ஒரு சம்பவம் நடுக்கடலில் நடந்திருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார்கள்.

இந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி 1732 பயணிகளுடன் பசிபிக் சன் என்ற கப்பல் நியூசிலாந்திர்க்கு வடக்கே நானூறு மைல்களில் வனாட்டு தீவுகளுக்கு பயணித்துக்கொண்டிருந்தது. உல்லாசமாக எட்டு இரவுகள் கழிக்க சென்ற பயணிகளுடன் 25 அடி உயர ராட்சத அலைகள் எழும்பி கப்பலை ஆட்டி நடுக்கடலில் எல்லோரையும் இங்குமங்கும் கபடி ஆடி விட்டது. டேபிள் சேருக்கும் பயணிகளுக்கும் நடந்த ரூல்ஸ் இல்லாத முரட்டு கபடி ஆட்டம் இது. டைடானிக் படத்தை ரீலில் பார்த்த ரசிகப்பெருமக்களுக்கு இது ஒரு ரியல் அனுபவம். இந்த 1732 பேரின் ஜாதக விசேஷம் ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை. ஒரு 42 பேருக்கு மட்டும் ஏழரை சனி அதுவும் மங்கு சனியாக ஆட்சி நடத்தியமையால் ஒன்றிரண்டு சிராய்ப்பு மற்றும் காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.  கீழ் காணும் வீடியோ மேற்கண்ட செய்தி இல்லாமல் படித்தால் இது ஒரு நகைச்சுவை காட்சி. நியூஸ் தெரிந்ததனால் ஒரு திகில் காட்சி. ஆரம்பத்திலேயே ஒரு டை கட்டிய குண்டு ஆசாமி தூரத்தில் இருந்து கேமரா பக்கத்தில் இருப்பவர்களிடம் "உக்காரு... உக்காரு.." அப்படின்னு சவுண்டு விடறது தெரியுது. அப்புறம் அவரும் சேர்ந்து தொட்டிலாட்டப்படுகிறார்.
இந்தப் பதிவிற்கு எந்தவிதமான சம்பந்தமே இல்லாமல்...
கட்டில் கப்பல் ஆடுமே...
மானம் கப்பல் ஏறுமே....
ஏட்டுப் பாடங்கள் ஏதும் இல்லாத வீட்டுப் பாடம் இது.....

என்று மது பாலக்ருஷ்ணன் சாதனா சர்கம் ஆகியோர் பாடி வித்யாசாகர் இசையமைத்த டூயட் தவறாமல் நினைவில் வந்து நிற்கிறது. மிக நல்ல வரிகள். இந்தப் பதிவிற்கு வந்த கடனிற்கு இதையும் கேட்டு வையுங்கள்.ஏம்பா கப்பல் ஆடுமேன்னு பாட்ல வந்தா அதையும் இதோட சேர்ப்பியா. இது கொஞ்சம்  ஓவரா இல்ல என்று கேட்க நினைத்து கேட்காமல் விட்டவர்களுக்கு ஒரு கேள்வி

ரொம்ப நேரம் மனதில் கப்பலாடும் பாட்டு இல்ல?
 -

Tuesday, September 21, 2010

எஸ்.பி.பியின் ராக மாளிகை

ரெண்டு மூனு நாளா ஒரே பிஸி. நாமதான் கம்பெனியின் பில்லர்.(அப்படின்னு நினைப்பு!) அதனால ப்ளாக் பக்கம் தலை காட்ட முடியலை. ராத்திரி நேரங்களில் சமர்த்தா பாட்டு கேட்டுவிட்டு தூங்க தான் நேரம் சரியாக இருந்தது. டச்ல இல்லைனா எந்த பழக்கமும் மறந்திவிடும். அதனால இந்த ப்ளாக். யானை கூத்துக்கு பின்னாடி இது போலவும் ஒரு பதிவு. இரவு நேரங்களில் எழுபது என்பது வருடத்திய எஸ்.பி.பி கேட்க ஆரம்பித்தால் அவ்வளவுதான். என்னுடைய ஒரு எஸ்.பி.பி இமாலய கலெக்ஷனில் இருந்து எஸ்.பி.பி பாடும் ஒரு ராகமாலிகை. எழுதியது வாலி என்று நினைக்கிறேன். எவ்வளவு ராகம். அதுவும் ஒரு பெண்ணோடு ஒப்புமை படுத்தி என்றால் கேட்கவா வேண்டும். மனதைப் படுத்துகிறது. ஹாட்ஸ் ஆஃப் டு ஹிம். நான் படுத்தியது போதும் பாட்டை கேளுங்கள்...பாடல் இதோ...

உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலயமாருதம் ஆகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு
ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு
ராகமாலிகை

நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
குரல்வழி பிறந்தது அம்சத்வனி
உன் குரல்வழி பிறந்தது அம்சத்வனி
உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி

நீ ஒரு
ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு
ராகமாலிகை

நான் வாவனெ அழைக்கையில்
விரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி
ஆரபிமானமும் தேவையில்லை
இந்த அகிலத்தில் உன்போல் பாவையில்லை

நீ ஒரு
ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு
ராகமாலிகை

நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என் வசம் தாவென நான் கேட்டேன்
நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என் வசம் தாவென நான் கேட்டேன்
என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
இந்த நாயகன் தேடிடும் நாயகியே

நீ ஒரு
ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு
ராகமாலிகை

வேறு ஒரு சங்கதியுடன் நாளை பார்ப்போம்.....

Saturday, September 18, 2010

யானைக் கும்மி

yaanaikummiமோகனமன்னனும், பான பத்மனாபரும் வெங்கோபப் புலவரும் கை கோர்த்து சேர்ந்து கட்டிய கும்மி இது. யானை மீது சத்தியம் படிக்காதோர், ஒரு முறை யானையை சேவித்து படித்துவிட்டு இங்கே தொடரலாம்.... கீழ் வரும் கதையில் தலை கால் புரியவில்லை என்று சொன்னால், படித்தால் புரியலாம், புரியாமலும் இருக்காலாம்... இப்ப என்ன சொல்ல வரே என்று கேட்பவர்களுக்கு.... ப்ளீஸ் விட்ருங்க... எனக்கே புரியலை...யா.மீ.ச. படித்தவர்களுக்கு... பார்ட் டூ விற்கு போய்டுவோம் வாருங்கள். இல்லையென்றால் படுத்தல் ஜாஸ்தியாகிவிடும்.
மோகன்ஜி சொன்னது… 
அடடா! ஆர்.வீ,எஸ் புலவர் தருமி நாகேஷ் மாதிரி இருப்பார்னு நெனைச்சேன்.ஆனா, நம்பியார் வேலயா இல்லை இருக்கு.. பாண பத்மனாபர் ரோலோ ராஜா பக்கத்துல இருக்கிற ஆர்.எஸ்.மனோகர் மாதிரி வேற இருக்கே.. இளவரசிய கணக்கு பண்ணி கூட்டிட்டு போறீங்களா.. போங்க போங்க. நானே அவளுக்கு செவ்வாய் தோஷமாயிருக்கே,மாப்பிள்ளையே கிடைக்கல்லேன்னு அல்லாடிக்கிட்டு இருந்தேன். பாணபத்மனாபர் தலையிலே கட்டிடலாம்னு வேற யோசிச்சிகிட்டு இருக்கிறப்போ.... என்ன பெத்த ராசா.. தானாவே வந்து பிரச்சினைய முடிச்சிட்டீங்களே. ஆனா இளவரசி கழுதைப் பாலில் இல்லே குளிப்பாள்? அடுத்த கன்சைன்மெண்ட் நூறு கழுதையை அனுப்பிட்டா போச்சு. 
எனக்கென்னவோ பாணபத்மனாபர் இளவரசிக்கும் ஒங்களுக்குமாவது விருந்து வைப்பார்னு தான் தோணுது.
சரி மாப்பிள்ளே! என் ராஜ்ஜியம் உங்களுக்குத் தான்! டேக் இட் !
(ஹய் ! தொரை இங்கிலீஸ் எல்லாம் பேசுது )  
17 செப்டெம்ப்ர், 2010 7:30 am

 


பத்மநாபன் சொன்னது… 
மோகனமன்னா, பெரிய உருவத்தை பிடித்து வருவது கூட தெரியாமால் கிராஸ் பண்ணிட்டனா.. என்.கண்பார்வை பகல்ல பசுமாடு, எருமமாடு தாண்டி யானையையும் தாண்டிருச்சா ... கொடுமை.... சோடா பாட்டிலை ஒடைச்சு ஜோப்புல வச்சுக்க வேண்டியது தான்..
மன்னா நீங்க கில்லாடி மன்னா... இளவரசியோடு உங்க தர்பாரையும் அந்த புன்னகை மன்ன புலவரிடம் கட்டி விட்டீர்களே .. பலே கில்லாடி மன்னா..
 
பட்டத்துக்கு வந்தபின் தான் தெரியும், ஒவ்வொரு ஓலையாக வரும் . நிங்க ஆணி குத்தி குத்தி எழுதிக்கொடுத்ததெல்லாம் வெளியே வரும் 
 
ஒரு கல்லால் அடித்து இரண்டு மாங்காய் விழுவதே அதிசயமாக இருந்ததே...நீங்கள் பார்த்தே பல மாங்காய்களை விழ வைக்கிறிர்களே..  
17 செப்டெம்ப்ர், 2010 10:45 am
 
பத்மநாபன் சொன்னது… 
கோடு கிடைத்தால் ரோடு போடும் வெங்கோப புலவரை பாராட்டி மகிழ்வோம்.. சில சமயம் வெங்கலபாத்திர கடையில் யானை புகுந்த மாதிரி ஆவதும் உண்டு... அது ஒரு புறம் இருக்கட்டும்...
 
மன்னா, புலவரின் இந்த கூற்றை மட்டும் ஏற்காதீர்...அவரின் உள் நோக்கம் புரிந்ததா... யானைக்கு ரிங்கா ரிங்கா ரோஸஸ் முதல் எல்லாம் கற்றுக் கொடுத்து மாலையை அவர் கழுத்தில் போட வைப்பாராம் ...அதுவரை தோட்டத்தில் நாம் பூப்பறித்து கொண்டு இருப்போமாம்... நல்லா இருக்குது கதை..
 
அரசே இந்த பாணரை மறக்க க்கூடாது...அந்தப்புரம் இந்தப்புரம் என்று மட்டுமில்லாமல் எல்லாபுறமும் மன்னரை மகிழ்வு குறையாமல் பார்த்துக் கொண்டோம் இதற்க்காகவே தனியாகவே ஒரு இலாக்காவை வைத்திருக்கிறோம்...அது மட்டுமா சோம,சுரா பானங்களோடு மன்னரை கீழிறங்கவிடாமல் மிதக்க வைத்துள்ளோம் ...இதற்க்கென்று சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளோம்.... இதற்குமேல் அரசவையின் புகழை பறை சாற்றாமல் தன்னடக்கத்தோடும் அவையடக்கத்தோடும் விட்டுவிடுகிறோம்....(தொடரும்)  
17 செப்டெம்ப்ர், 2010 8:17 am 
 


பத்மநாபன் சொன்னது… 
தானம்கொடுத்த யானையின் தந்தத்தையல்லவா தரம் பார்க்கிறார் புலவர் சங்கிலியை பதம் பார்க்கவில்லை என்று சொல்லிக்கொண்டு...
 
நூறுகிலோ சங்கிலியாம் மன்னிகளுக்கு...வாய்கூசாமல் சொல்கிறார் இந்த பொய்மொழிப்புலவர் ...எதோ தொன்னுத்தி ஒம்பத்தி சொச்சம் கிலோ எடையில் நான்கே நான்கு சேடிப்பெண்களை மட்டும் சங்கிலியை தாங்கி செல்ல அரசியாரோடு அனுப்பிவருகிறோம் நூறாம் நூறு.... சொர்ணம் பரிசு வேண்டும் என்று குறிப்பில் புலவர் உணர்த்துகிறார் மன்னா.... சொர்ணாக்காவை விட்டு வெளுத்தால் சரியாகிவிடும்.....
(பதிவிற்கு நல்லாவே மதம் பிடித்து விட்டது...வால்ப்பாறை கும்க்கி யானை வந்தால் தான் கட்டுப்படும் ) 
17 செப்டெம்ப்ர், 2010 8:21 am
 


RVS சொன்னது… 
 
மோகன்ஜி, பத்மநாபன் சார்... நல்ல சுதி ஏறுது..இப்ப பாருங்க கச்சேரியை... மோகன்ஜி உங்க ஜோக் அப்படியே தொங்கட்டும். இப்ப நா பூந்து கிழிக்கிறேன்.
 
சுரா, சோம பானங்கள் அரசருக்கு மட்டும் தானா.. எங்களுக்கும் நேற்று ரெண்டு வெண்கல அண்டா நிறைய கிடைத்தது. தேரடி வீதி தாண்டி சோமசுந்தரக் கடவுள் வீற்றிருக்கும் கோவில் அருகில் கீழ கோபுர வாசல் அருகே முகமூடி அணிந்த ஒருவன் விற்றுக்கொண்டிருந்தான். என் அடையாளங்களை கண்டுகொண்டு சமிஞ்ஞை செய்து அருகில் வரச்சொல்லி வயிறார ஊற்றினான். நாவார குடித்து இன்புற்றேன். பா.ப. நாபரே அவனிடம் என்னை கண்டுக்க சொன்னதற்கு நன்றி.
 
பிரதர், இரவு வேளைகளில் சரக்கு இல்லாமல் நான் திண்டாடக்கூடாது என்பதற்காக ரெண்டு அண்டா கொஞ்சம் ஓவர். (அந்தக் காலத்திலேயே தண்ணி அடித்தால் வாயில் பீட்டர் தானாக வருகிறது.) நான் குடிக்க கேட்டேன். குளிக்க அல்ல. பான(ண அல்ல) பத்மனாபரே நம் திட்டம் முப்போதும் முழு சுதியில் இருக்கும் இந்த மோகன மன்னனுக்கு விளங்கவேயில்லை. எனக்கு செவ்வாய் தோஷம் இருப்பதை கணித்து, அவளுக்கும் இருப்பது தெரிந்து என்னோடு கைகோர்ப்பதர்க்காக திட்டம் தீட்டியவரே நீர்தான். இதுபோல கல்யாண ஆலோசனை தருவதற்கு சன் டி.வி கல்யாண மாலை மோகனுக்கு கூட தெரியாது. இப்போது நன்றாக மன்னர் மன்னனை ஏற்றிவிட்டு நூறு கழுதைகள் வேறு சீதனமாக வாங்கி தருகிறீர்கள். உங்கள் பெருந்தன்மையை என்னவென்று சொல்வது. நான் எம்.என்.நம்பியாராம், நீங்கள் ஆர். எஸ். மனோகராம். இவர் என்ன எம்.ஜி.யாரா அல்லது சிவாஜியா. இவரோ ஒரு ஏ.வி.எம். ராஜன். ஆனால் இவர் பெண் தமன்னா எனும் தள தள தக்காளி மாதிரி இருக்கிறாள். ஓ.கே ஓ.கே... இதற்க்கு மேல் உங்களிடம் அந்த அழகோவியத்தை பற்றி பேசினால் அது ஆநாகரீகம். (இந்த சொல் வரப்போகும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளன் சுஜாதா எடுத்தாளப் போகும் சொல்). ஏனென்றால் மன்னன் சொன்னது போல் நீங்கள் சைடில் சிந்து பாடிய பைங்கிளி அவள். நானறிவேன் உங்கள் கள்ளத்தனத்தை.
 
அப்புறம் அந்த சொர்ணாக்கா மேட்டர். நேற்று அரசரிடம் என்னை தீர்த்துக்கட்ட என்று காரணம் சொல்லி அவளை இங்கு அனுப்பி வைத்தீர். அக்காவா அவள். அக்.க்.க்.க்கா. சொக்க வைக்கும் சொக்கி. அவளே ஒரு சொர்ணம். (ரொம்ப வழிஞ்சிட்டேனோ.) அவளோடு அந்த சொர்ண லோடும் வந்து சேர்ந்தது. ஒரு தேரின் அடியில் கஜானாவையே உங்களால் தான் அனுப்ப முடியும். அந்தத் தேர் என்ன வரும்காலத்தில் வரப்போகும் கே.பி.என் போன்ற வால்வோ பஸ்களுக்கு ஒரு முன்மாதிரி போன்று உள்ளதே. நீங்கள் சொன்னாற்போல் நகைக் கடை கானா.மூனா.சேனா.பானா செட்டியாரிடம் அனைத்தையும் சேர்த்துவிட்டேன். கல்யாணம் முடித்து அந்த மன்னனை சிறையில் அடைத்து நான் அரசுக்கட்டிலில் அமரும் நாளில் திரும்ப தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். எல்லாம் உங்கள் திட்டம் போன்றே நடக்கிறது.
 
நாளை மலர் மஞ்சத்தில் தூங்கப்போகும் நான் இன்று இந்த யானையின் நான்கு கால்களுக்கு நடுவில் தூங்குகிறேன். அது பிஸ் அடிக்கும் போது மூஞ்சியில் தெளிக்கும் அந்த தீர்த்தம் நாளை ராஜ சிம்மாசனத்தில் அமரப் போகும் போது பன்னீர் தெளிப்பது போல் உள்ளது. சரி. சரி... தேவயானை இந்த யானையை பார்க்க வருகிறது மற்றவை அடுத்த மடலில்...
 
அன்புடன் வெங்கோபப் புலவர் பாத்திரத்தில், அண்டாவில், குடத்தில்,சட்டியில் ஆர்.வி.எஸ்.
 
அப்பாடி!! பாண பத்மனாபரை என்னோடு சேர்த்தாயிற்று. இனிமேல் அந்த மோகனமன்னன் கதி அதோ கதிதான். அப்படி போடு அருவாளை.. சீ.சீ உடை வாளை.  
17 செப்டெம்ப்ர், 2010 10:21 am
 


மோகன்ஜி சொன்னது… 
ஆஹா! வெட்கம்.. வேதனை.. பாராளும் மன்னனை துப்பரவாக உருவிவிட்டார்களே!புலவரென வந்த நம்பியாரும், பக்கத்திலே இருந்த பா.பா எனும் ஆர் .எஸ்.மனோஹரும் சதி செய்து விட்டார்களே. ஒரு கலயம் சோமபானம் கூட மிச்சம் வைக்காமல் காய விட்டு விட்டார்களே.டாஸ்மாக்குக்கு கூட இருபத்தொன்றாம் நூற்றாண்டு வரைக் காத்திருக்க வேண்டுமே. டிக்கி வச்ச தேராமே? சப்ஜாடா பட்டியல் போட்டு பத்திகிட்டில்ல போய்ட்டாங்க. அதெல்லாம் கூட பரவாயில்லை.. புசுபுசுன்னு மீசைய வச்சுகிட்டு,"தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள்"ன்னு நெஞ்சு நிமிர்த்தி நான் பாடியபோது,இவங்க ரெண்டுபேரும் 'அரசே! நீங்க வேற சிவாஜி வேற இல்லே'ன்னு உசுப்பேத்தி விட்டார்களே! போற போக்குல இப்போ ஏ.வீ.எம்.ராஜன் நீன்னு சொல்லிட்டாங்களே! மகமாயி !!கன்னமெல்லாம் கோபத்துல உப்புதே.. கழுதை எல்லாம் கூட கொடுத்து விட்டேனே. ஆ!சாய்ந்தது என் வெண் கொற்றக் குடை! தகர்ந்தது முரசம்! யாருப்பா அங்க ஸ்க்ரீன போடுய்யா! வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் வசனம் பேசிக்கிட்டிருக்கேன்.
 
சரி ! இப்போ ஸ்க்ரீனை இழுங்க!
 
"ஆடுவார் ஆட்டமும் பாடுவார் பாட்டுமாய் அன்னியர் களித்திருக்க, யாரது மண்ணிலே யாரது நாடகம்...." ஓ! வசனம் வேணாமா? விசனமா நிக்கணுமா? சரி டைரக்டர்! நேத்துல இருந்து அப்பிடி தானே இருக்கேன்.
 
பாணபத்மநாபரே! எங்கய்யா என் பொடி டப்பா? எல்லாம் எடுத்துகிட்டு போனீங்களே! சிம்மாசனத்துல அங்குசத்தை விட்டுட்டாய்யா போவீங்க? முதல் லைன்ல 'வெட்கம்'னு கோபமான வசனத்தோட சிம்மாசனத்துல தொப்புன்னு உட்கார்ந்தேன். அப்பா ஆர்.வீ.எஸ்."இப்போ நான் கிழிக்கிறேன்"ன்னு சொன்னது இதைத்தானா? ம் ..ம்..முடியல. 
 
எனக்கு எல்லாம் வெறுத்து போச்சு.சாமியாரா போகப் போறேன் .. தமிழ் நாடு வேணாம் பெங்களூர் பக்கமா செட்டிலாயிடப் போறேன்.கதவ திறங்கப்பா.புழுக்கமா இருக்கு!  
17 செப்டெம்ப்ர், 2010 12:10 pm
 
 


RVS சொன்னது… 
 
பான பத்மனாபரே! திட்டம் பலித்தது. அவர் எனக்கு பெண் தர வேண்டும் என்று நடுவில் பூந்து விளையாடுகிறீர்களே. மோகனமன்னனை ஆதரிப்பது போல் நடித்து என் பக்கம் நாட்டை திருப்புகிரீர். என்ன ஒரு மதி. அருமை. மன்னனாக இருந்தால் தலை மேல் மணிமுடி இருக்கலாமே தவிர அதைத் தவிர பாரமாக மூளை இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார் நமது பாசத்திற்குரிய மன்னர் மன்னர். அது சரி... நீங்கள் அனுப்பிய புறாத் தூது வந்தது. அட. அது என்ன நீங்கள் எதை செய்தாலும் வித்யாசமாகவே உள்ளது. புறா வரும் என்று ஆவலில் இருந்தபோது, கிளி போன்ற உங்கள் பக்கத்து வீட்டு "பருவக்கிளி ", "கன்னடத்து பைங்கிளி" சரோஜாவிடம் கொடுத்து விட்டீர்கள். அவள் ஆடி ஆடி நடந்து வரும் பொது நான் ஆ.ஆஆ...........டி விட்டேன். தேவயானை வேறு கண்கள் படபடக்க பார்க்கிறாள். சொர்ணாக்கா, சரோஜா என்று மன்மத பாணங்களாக அனுப்புகிறீர்கள். நல்ல சேட்டை. எங்கிருந்தோ ஒரு பாடத்தெரிந்த பாடகன் வேறு "மன்மதன் கோயில் மணி ஒலி கேட்டது...." என்று ராகம் பிடிக்கிறான். ரோடோரத்தில் இருக்கும் எனக்கே இவ்வளவு தாக்குதல் என்றால் ஒரு அரசன் இது போல் நிறைய படையெடுப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். சரி. சரி.. என்னை மன்னனாக உயர்த்துவதற்கு நீங்கள் அளிக்கும் பயிற்சி இது என்று நான் எண்ணிக்கொள்கிறேன். நன்றி. 
 


RVS சொன்னது… 
 
போன கமெண்ட்டின் தொடர்ச்சி..
 
மடலில் இருந்து விபரம் அறிந்தேன். மோகனமன்னன் வானப்ரஸ்தம் அல்லது சந்நியாசம் வாங்கப் போகிற விஷயம் மன மகிழ்ச்சியை அதிகப்படுத்துகிறது. வானப் பிரஸ்தத்திலாவது அவர் நிம்மதியாக இருக்கட்டும். அவர் போன பின்னே நிறைய கடனோலை வரும் என்று அந்த தர்பாரில் சொன்னீர்களே.. அது கதை தானே... உண்மை என்றால் இப்போதாவது சொல்லுங்கள். என்னிடம் ஒரு அருமையான யோசனை உள்ளது. என்னவென்றால், நாட்டை வடக்கு தெற்காக இரண்டாக பிரித்துவிடுவோம். வடப் பக்கம் நீங்கள், இடப் பக்கம் நான். யாராவது உங்களிடம் வந்து மோகனன் வைத்த கடனை கேட்டால், அப்போ இருந்தது மோகனபுரி என்னும் ஒரே நாடு. இப்போது அந்த நாடு அன்னியர் படையெடுப்பில் அழிந்துவிட்டது. நான் பா.பா, இது பானபுரி. சரக்கிற்கு பஞ்சம் இல்லாத தேசம். தென் திசையில் இருப்பது வெண்புரி. இன்னபிற லாஹரி வஸ்த்துக்களுக்கு பெயர் பெற்ற தேசம். தங்கத்தையும், கஜானாவையும் தவிர உனக்கு என்ன விடுமோ எடுத்துக்கொள். இந்த மாதிரி வச்த்துக்களால் இவ்வையகமே உனக்கு சொர்க்கபுரியாக மாறிவிடும் என்று அவனை மந்திரித்து மயக்கிவிடலாம்
 
வந்துவிட்டாள் என் வருங்கால பாரியாள். இப்போதே தொந்தரவாக இருக்கிறது. அடிக்கடி வந்து யாருக்கு மடல் வருகிறீர்கள் என்று கேட்கிறாள். ராணி ஆன பின் அவளுக்கும் தெரியும் தொடுப்பு என்பது ராஜாக்களின் உடுப்பு மாதிரி என்று.
 
வானப் பிரஸ்த்தம் சென்ற மோகனமன்னனிடம் ஒரு கண் இருக்கட்டும். பொல்லாத மன்னவன் அவர். கூட ஒன்றிரண்டு பட்டத்து ராணிகளை அழைத்து சென்று அந்தப்புரத்தை காலி செய்துவிடுவார். பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் நம்முடைய தனி அந்தப்புரம் அமைக்கும் வரையில் போரடிக்கும்.
 
அந்தப்புர ஆசை நாயகன் ஆகும் ஆசையில் ராஜா ஆகப் போகும் வெங்கோபப் புலவரான பாத்திரப் படைப்பில் ஆர்.வி.எஸ்.
 
சந்நியாசம் என்று சொன்னால் விடுவோமோ மோகனமன்னா.... பத்மனாபரே வாரும்... வந்து கலாயும் .... 
17 செப்டெம்ப்ர், 2010 6:11 pm
 
இரண்டாவது பாகம் முற்றிற்று.  
 
பான பத்மனாபருக்கு அரபு நாட்டில் ஆணி பிடுங்கும்.. ஸாரி... ஆணியால் ஆவணம் எழுதும் வேலை அதிகமாகவும் அவசரமாகவும் இருப்பதால்... இந்த இரண்டாவது பாகம் இதோடு முற்றிற்று. நிறைய கடைசி நேர காட்சி மாற்றங்களுடன் மூன்றாவது பாகம் நிச்சயம் உண்டு. படிப்பவர்கள் தைரியத்தை வரவழைத்துக் கொள்ளவும்!.  ஈஸ்வரோ ரக்ஷிது.

பட உதவி: infobarrel.com

Friday, September 17, 2010

யானை மீது சத்தியம்

“புள்ளயாடீ பெத்து வச்சிருக்கே? தறுதல.. தறுதல...”
அப்பா யானை கோபத்துடன் அம்மா யானையிடம் எகிறிக் கொண்டிருந்தது.

“நம்ம பிள்ளையை கரிச்சு கொட்டறதே உங்க வேலையாப் போச்சு.. அப்படி என்ன தப்புத்தான் என் மகன் பண்ணிட்டான்?”
அம்மா யானை சலித்துக் கொண்டது.

"உன் புத்திர சிகாமணி என்ன காரியம் பண்ணியிருக்கான் தெரியுமா? ஆத்தங்கரையோரமா வந்த கோயில் பெண் யானை குட்டியைப் பார்த்து “36000=28000=36000”ன்னு மார்க் போட்டிருகாண்டீ. வெளிய தல காட்ட
முடியல.".

“பின்னே உங்க பிள்ளை உங்களை மாதிரிதானே இருப்பான்?. உங்களை முதன் முதலா பார்த்தப்போ என்கிட்டே’நான் தான் குருவாயூர் கேசவன்’னு பொய் சொல்லி தானே என்ன கரெக்ட் பண்ணீங்க?வயசு பையன் அப்படித் தான் இருப்பான்.விடுங்க”
இது மோகன்ஜி அவரோட ப்ளோக்ல போட்ட யானை ஜோக். அவரது தளத்தில் அதற்க்கு பின்னூட்டமிடப்போய்  நானும் பத்மநாபனும் அந்தக் கரும்பு தின்னும் குறும்பு யானையிடம் வசமாக மாட்டிக்கொண்டோம். இதனால் என்னோட ப்ளாக்கில்  சரிவர தொடர்ந்து எழுதமுடியவில்லை. ஒரே யானைத் தொல்லைப்பா... மோகன்ஜி மற்றும் பத்மநாபன் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்ற அஸாத்திய  தைரியத்தோடு.... அந்த யானைப் பதிவின் கமெண்ட்டுகளே ஒரு பதிவாக..  இங்க... படிங்க மேல...

பத்மநாபன் சொன்னது… 
ஜி.. பாம்பே போன மாதிரி தெரியலையே..கேரளா போய்ட்டு வந்தமாதிரியல்ல தெரியுது ... எந்தானு குருவாயூர் கேசவன் வல்லிய யான்யதனோ ? ( மனிதன்...மன்மதன்... ஸோ ).
ஆண்குட்டி யானை வட்டம் போடறதிலே கில்லாடி போலிருக்கிறதே...  
15 செப்டெம்ப்ர், 2010 9:20 am

மோகன்ஜி சொன்னது… 
பத்மநாபன்ஜி.உங்க "யான்யதன்" அட்டகாசம் போங்க. ரகுவம்சத்துல திலீப மகாராஜா, தன் காதல் மனைவி சுதக்ஷினையுடன் தனியா இருந்தானாம். ராணியுடைய கூந்தலிலிருந்து எழும் மணத்தை முகர்ந்தபடி சொக்கி நின்றானாம். 
 
இங்க காளிதாசன் போடுற பிட்டைப் பாருங்க. மழைத் தூறலின் துவக்கத்தில் எழும் மண் வாசனையை யானை ஜோடிகள் தன்னிலை மறந்து துதிக்கையைத் தூக்கி,முகர்ந்து கொண்டே திக்குமுக்காடுவதுபோல் திலீபனின் நிலையும் இருந்ததாம். காதல் யானை வருகுது ரெமோ தான்!  
15 செப்டெம்ப்ர், 2010 10:08 am
 
RVS சொன்னது…
அதெல்லாம் சரி... பையனுக்கு கரெக்ட் ஆச்சா? இல்லையா? அதச் சொல்லுங்க... ஒழுங்கு மரியாதையா அப்பா யானையை அவன் பார்த்ததையே கல்யாணம் பண்ணி வச்சுரச் சொல்லுங்க. இல்லைனா ஒரு நல்ல ஆப்ரிக்க ஃபாரினரா பார்த்து இழுத்துக்கிட்டு வந்துறப்போறான். பொல்லாதவனா இருப்பான் போலிருக்கு. ;-) ;-)
 
முடிவு தெரிந்துகொள்ளும் ஆவலில் ஆர்.வி.எஸ்.
மோகன்ஜி சொன்னது…
ஆஹா RVS..நீங்க குடுக்குற பரபரப்புல எனக்கு இப்போ பொறுப்பு ஜாஸ்தியாயிட்ட மாதிரி இருக்கு. நம்ம ஏதோ சிறுசுகளை சேத்து வைக்கலாம்னு அந்த கோயில் பெண் யானை கிட்ட பேசி பாக்கப் போனேன். அதென்னவோ கைல வச்சிருந்த சில்லறைய வாங்கி பாகன்கிட்ட குடுத்துட்டு தும்பிக்கையால தலையில தட்டிட்டு அடுத்தாளை பாக்க திரும்பிருச்சு . நம்ம பையனுக்கு நீங்க சொன்னாமாதிரி ஆப்ரிகா தான் தகையும் போலருக்கு.ரெஜிஸ்தர் ஆபீஸ்லே சிம்பிளா முடிச்சிட்டு தேன் நிலவுக்கு அதுங்களை தேக்கடிக்கு அனுப்பிட வேண்டியது தான்!
பத்மநாபன் சொன்னது…
மோகன்ஜி ஆர்.வி.ஸ்... நீங்க ரெண்டு பேரும் செய்யற யானை அலப்பற சிரிப்ப அடக்க முடியல போங்க .... காதல் யானை ரெமோ, ஆப்ரிக்கயானை, ரிஜிஸ்டர் திருமணம், தேக்கடி தேனிலவு ......ஜோர்,
மோகன்ஜி சொன்னது… 
பத்மநாபன் சார்! என்னங்க இது? மோகன்ஜி,RVS அலப்பறைன்னு நீங்க தனியா கழண்டுக்குறீங்க? நம்ம செல்லம் ரெண்டும் தேன்நிலவு முடிஞ்ச கையோட முதல் விருந்துக்கு உங்க வீட்டுக்கு வர்றதா தான் பேச்சு.விருந்து தடபுடலா இருக்கணும் தலைவரே சொல்லிட்டேன்! நம்ம பிள்ளையாண்டானுக்கு ஈச்சம் தழை எல்லாம் ஒத்துக்காது.தென்ன மட்டையா ஏற்பாடு பண்ணுங்க.சரி தானே!
RVS சொன்னது… 
 
பத்மநாபன் வீட்டு மாப்பிள்ளை விருந்து முடிந்ததா... மோகன்ஜி உங்கள் 'குட்டிகளை' எப்போது மறுவீடு அழைப்பீர்கள்? அவனுக்கு கொடுக்கும் தயிர்சாத உருண்டையை பசி என்று நீங்கள் உள்ளே தள்ளி விடாதீர்கள். அப்புறம் யான்யதன் கொடியாக இளைத்து விடப் போகிறான். அவன் புதுப் பொண்டாட்டி உங்களை தூக்கி போட்டு மிதித்து விடப் போகிறாள். ஜாக்கிரதை. யானையிடம் பாரதியை இழந்த நாங்கள் உங்களையும் இழந்து விடப்போகிறோம் அப்புறம் நவீன இலக்கியத்துக்கு பேரிழப்பு ஏற்ப்பட்டுவிடும். தயவு செய்து இந்த கஜேந்திரர்களை முதுமலை முகாமுக்கு அனுப்பவும். நன்றி. ;-);-);-)
 
பத்மாநாபன் வீட்டிலிருந்து ஏதும் சேதி வந்தாதா?
 
அன்புடன் ஆர்.வி.எஸ்.
பத்மநாபன் சொன்னது…
 
அடடா .....இங்க பேரீச்சந்தழைக்கே வழி இல்லாத இடத்துல மாட்டிகிட்டேனே ....தென்னமட்டைக்கு எங்க போவேன் ...சரி சரி முகூர்த்ததை நல்ல படியா முடிங்க ....ஊருக்கு வந்தவுடனே வசமான கரும்பு காட்டுக்கு கூட்டிட்டு போய் நாலு நாள் விட்ர்றேன். உல்லாசாம இருக்கட்டும்..
மோகன்ஜி சொன்னது…
 
நீங்க ஒண்ணு RVS.. பத்மநாபன் ஒட்டக தம்பதிகளுக்கு தான் தற்சமயம் விருந்து வைக்க இயலுமாம். ஊர் பக்கம் வந்தப்புறம் கரும்பு தோட்டத்துக்கு அனுப்பறாராம்ல? அதுக்குள்ள யான்யதன் குட்டியும் பெத்துக்கிட்டு அத "என் செல்ல கெஜக்கூ"ன்னு கொஞ்சிகிட்டில்ல இருப்பான்?! தற்சமயம் தயிர் சாதம் கொடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கு..எங்க வீட்டம்மாவோ யானை,"குரங்கு"க்குல்லாம் சமைக்க வேண்டியிருக்குன்னு அலுத்துக்குவாங்களோன்னு யோசனையா இருக்கு. நீங்க சொன்ன மாதிரி முதுமலை முகாமுக்கு தற்சமயம் அனுப்பிவைக்க வேண்டியது தான் . டென்ஷனா இருக்கு RVS
மோகன்ஜி சொன்னது…
 
பத்மநாபன்.. அங்க உக்காந்துகிட்டு ஓமர்கய்யாம் மாதிரி பேரிச்சம் பழமே.. பேரீச்சம்தழயேன்னு ஹூக்காவ புடிச்சிகிட்டு பாட்டா படிக்கிறீங்க? உங்களைப் பத்தி ஆப்பிரிக்க மருமக "எலிபண்டோ யானயானோ" என்ன நினைப்பா? ஞொய்யாஞ்ஜிக்கு ஒரு நியாயம், யான்யதனுக்கு ஒரு நியாயமா? கப்பல்லயாவது தென்னமட்டஎல்லாம் வரவழைக்க வேண்டாமா? ஊர்பக்கம் வந்தீங்கன்னா ஜோடி ரெண்டும் உங்கள உருட்டி "யான யான அழகர் யானை"ன்னு விளயாடதாம் போறாங்க! கும்மி களை கட்டிருச்சு பத்மநாபன்!
பத்மநாபன் சொன்னது… 
அட பதிவ விட பின்னூட்டம் கலக்கலால்ல இருக்கு... நம்ம ஆர்.வி எஸ்.. மறுவிடு மறு தாலின்னு விட்டா சீமந்தம் வளைகாப்பு வரைக்கும் போயிட்டே இருக்காரு.....தும்பிக்கைக்கு வளையல் ஆர்டர்ல்ல கொடுத்து செய்யனும்....
 
சின்ன யானை நடையை தந்தது ....சூப்பர் பாட்டை நினக்கவச்சிட்டிங்க..
கெஜக்கூ....நல்ல கொஞ்சல் பெயரை அறிமுக படுத்தி புண்ணியம் தேடிட்டிங்க.....
 
சிவனேன்னு மார்க் போட்டுட்டிருந்த இளைய தளபதி கஜபதிய வசமா மாட்ட விட்டுட்டிங்க்ளே....
 
இனி ஜில்,ஜில் கஜமணி சும்மாவா இருக்கும்.... கருப்பு கரும்பு கொண்டா, மூழாம்பழம் கொண்டா, தேக்கிலை கொண்டான்னு தும்பிக்கையில இடிச்சுட்டேல்ல இருக்கும்....
 
முதுமலை , தெப்பக்காட்டுல விடற வரைக்கும் ஒரே டென்ஜன் தான்
RVS சொன்னது… 
 
யப்பா.. மோகன்ஜி.... பத்மநாபன்... ஏதோ மதநீர் பிடிக்கிற யானைக்கு மன்மத நீர் பிடிச்சு இத மாதிரி தப்பு காரியம் பண்ணிட்டுது. விடுங்கப்பா கஜேந்திரனுக்கு மோட்சமாப் போகட்டும். யானை கட்டி போரடித்தார்கள் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான எங்க தஞ்சாவூர் பக்கம். ஆனா மோகன்ஜி ப்ளோகில் யானையை கட்டி நாம லூட்டி அடிக்கறது ரொம்ப டூ மச். நாம இப்படி அவங்கள வச்சு அராத்தா ஜோக் அடிக்கறது வெளியில கசிஞ்சு யானைக் காதுக்கு எட்டிடிச்சுன்னா...
 
அடுத்த தடவை கோயிலுக்கு போய் தும்பிக்கையில காச வச்சு தலையை குனிஞ்சு ஆசிர்வாதத்துக்கு மோகன்ஜி நிக்கும்போது..
 
அப்படியே அலேக்கா தூக்கிட்டு போய் கிட்னாப் பண்ணி வச்சுட்டு... இந்த 36000 = 28000=36000 சமாசாரத்தை எல்லாம் ரப்பர் வச்சு சுத்தமா அழிச்சாதான் வீட்டுக்கு போகலாம்னு சொல்லிடப்போவுது. ரொம்ப பயமா இருக்கு.
 
இப்பவே "இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா" அப்படின்னு பத்து பதினைந்து தோழர் யானைகள் கேரளாவுல ஓணக் குடை பிடிக்கறா மாதிரி கொடி பிடித்து துரத்துற மாதிரி இருக்கே.
 
சென்னையில யானைகவுனி அப்படின்னு இருக்குற இடத்துக்கு என்னால இனிமே தலை காட்ட முடியுமா? யானை வரும் பின்னே.. அப்படின்னு யாரோ பழமொழி சொல்ல ஆரம்பிச்சாலே நாலு கால் பாய்ச்சல்ல ஓடிடுவேன் போலருக்கே...
 
ஐயோ.. துரத்தி உதைக்குற மாதிரியே.. ச்சே.ச்சே.. தும்பிக்கையால் தூக்குற மாதிரி இருக்கே... சொக்கா.... காப்பாத்துறா..
 
இப்படி யானை இனத்தை அதகளப் படுத்துவது தெரிந்து இந்திரலோகத்தில் இருந்து ஐராவாதம் ஐந்து நாள் இந்திரனிடம் லீவு கேட்டு வந்து பூலோகத்தில் கேம்ப் அடிக்கப் போவதாக த்ரிலோக சஞ்சாரி நாரதர் தெரிவிக்கிறார். இது எனக்கு எஃப்.எம் ரேடியோ டியூன் பண்ணும்போது இப்போது கேட்டது. எல்லோரும் பத்திரமான இடத்துக்கு ஓடிடுங்க... ப்ளீஸ்.... எஸ்கேப்....
 
ஓவர் டு பத்து அண்ட் மோகன்ஜி என்று சொல்லிக்கொண்டு......
 
யானை பயத்துடன் ஆர்.வி.எஸ்.
மோகன்ஜி சொன்னது… 
அடடா! எத்தனை விதமா யானை மேட்டரை வச்சு பின்னியிருக்கீங்க R.V.S!
ரொம்பவே ரசித்தேன்! அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்று ஒரு புலவர், யானையின் பல பெயர்களை வைத்து விளையாடி இருக்கிறார்.. பள்ளி நாட்களில் செய்யுள் பகுதியில் படித்தது. ஒரு பாணன் ராஜாவிடம் போய், பாடல்கள் பாடினான்.
 
மகிழ்ந்துபோன ராஜா அவனுக்கு ஒரு யானையைப் பரிசாக அளித்து விட்டார்.வீடு திரும்பிய பாணனிடம், அவன் மனைவி பாணி என்ன கொண்டு வந்தாய் எனக் கேட்டாள். அவன் யானையின் பல்வேறு பெயர்களில் கொண்டு வந்ததைக் கூற, பாணியோ, அந்தப் பெயர்களின் வேறு அர்த்தங்களை பாவித்துக் கொண்டு பதிலளிக்கிறாள். பாட்டைத் தான் பாருங்களேன் !
 
இம்பர்வான் எல்லை இராமனையே பாடி 
என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன் பூசுமென்றாள்
மாதங்க மென்றேன் யாம் வாழ்ந்தே மென்றாள் 
பம்புசீர் வேழமென்றேன் தின்னும் என்றாள் 
பகடென்றேன் உழும்என்றாள் பழனம் தன்னை 
கம்பமா என்றேன் நல் களியாம் என்றாள் 
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே!" 
 
மேற்சொன்ன பாடலில் பாணன் கூறும் பல்வேறு யானையின் பெயர்களும்,பாணி பொருள்கொண்ட வேறு அர்த்தமும்..
களபம் = சந்தனம்
மாதங்கம் = நிறைய தங்கம் 
வேழம் =கரும்பு 
பகடு= எருது 
கம்பமா= கம்பு தானிய மாவு 
கைம்மா = கைம்பெண் 
பாணன் சொன்ன அனைத்துக்கும் வம்படியாய் பதில் சொன்னவள் கைம்மா என்றவுடன் கலங்கி விட்டாளாம்! எப்படி? 
“சும்மா கலங்கினாளே ” என்ன சொல்லாட்சி? மிக ஆச்சர்யமான பாடல்.
 
இந்தப் பாடலை நினைவு கூர வைத்து,எழுதவும் உந்திய R.V.S புலவரே! உம் செயல் மிகுந்த பாராட்டுக்குரியது. அதை மெச்சி நானும் உமக்கு ஒரு யானையை பரிசாக அளிக்கிறேன்! ஏய்! யாரங்கே?!
பத்மநாபன் சொன்னது… 
 
வந்தேன் அரசே...யானை இருக்கிறது ..சங்கிலிக்கு நிதியில்லையாம்..நிதியமைச்சர் புலம்புகிறார்....
 
மன்னா , நம் அரசவை வெள்ளையானையாக நிதியை முழுங்குகிறது... வட்டமடிக்கும் யானையை முடிந்தால் ஆர்.வி.எஸ் சங்கிலியின்றி ஓட்டிச்செல்லட்டும்...வழியில் மதிப்பெண்..பெண்..விவகாரங்களுக்கு நாம் பொறுப்பல்ல....
RVS சொன்னது… 
 
ச்சே..ச்சே.. என்ன காட்டு தர்பார்...
 
பரிசளிக்கும் யானைக்கு சங்கிலி இல்லையா.. கேவலம் ஒரு இரும்புச் சங்கிலிக்கு இவ்வரசு ஏங்குகிறதா....பட்டத்து யானை பட்டினி கிடக்கிறதா... என்ன ஒரு அநியாயம்...(புலவர் முகத்தில் சிகப்பு விளக்கு அடித்து அவரது கோபத்தை பெரிதாக காட்டுகிறது)
 
அந்தப்புரத்தில் மோகனமன்னனின் ராணிகள் வடம் வடமாக மாதங்கத்தில் மாலை போட்டிருக்கிறார்களே... அந்தப் பெரிய ராணி கழுத்தில் கிடப்பதை கொடுத்தால் கூட யானை காலைச் சுற்றி கட்டி விடலாமே.. ம்.... சரி... சரி.. பரவாயில்லை.. தானம் கொடுத்த யானைக்கு சங்கிலி இருக்கா என்று கேட்கக்கூடாது. உங்கள் ராஜ தர்மம் எப்படியோ என்னக்கு தெரியாது ஆனால் யானை தர்மத்தில் இது கிடையாது.
 
இப்போதைக்கு என்னிடம் அரையடி அங்குசமும் என் உள்ளன்பினால் தயாரித்த அன்புச் சங்கிலியும் இருக்கிறது. இதை வைத்து சமாளிக்கிறேன். ஆனால் மோகனமன்னா! உங்கள் காதுகளுக்கு மட்டும் ஒரு ரகசியமான விஷயம்..... உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நிதி இல்லை என்று சொன்னாரே அந்த பாண பத்மநாபர் (பாணபத்திரர் ஸ்டைலில் படிக்கவும்)... அவர் ரொம்ப மோசம். அரசனின் யானைப்படைக்கு தேவையான யானைச் சங்கிலிகளை கூட தவணை முறையில் சுற்றிலும் இருக்கும் குறுநில மன்னர்களுக்கு சலுகை விலையில் ஒரு தொகை பேசி விற்றுவிட்டார். கேட்டால் யானை விற்ற காசு பிளிறிடுமா..என்று விஷயமறிந்தவர்களிடம் கூறி வருகிறாராம். அடுத்த நிதியாண்டில் அவர் மன்னருக்கே ஊதிய உயர்வு கொடுக்கும் அளவுக்கு மலை போல் சொத்துக் குவித்து விட்டாராம். அரபு நாடுகளிலிருந்து ஒட்டகம் வரவழைத்து ஒட்டகப்படை கொண்டு உங்களையே தாக்கும் எண்ணம் கூட இருக்கிறதாம். கொஞ்சம் அவரை கவனியும். நீங்கள் ஏதாவது கேட்டால் வாய்ஜாலத்தால் உங்களை ஏமாற்றிவிடுவார். எத்தன். வார்த்தைகளில் ஜித்தன். ஜாக்கிரதை! யானை தடவும் குருடன் போலாகிவிடப்போகிறீர்கள்.
 
அடுத்த முறை(ஆட்சிக்கான என்று இருந்திருக்க வேண்டும்) மன்னனை தீர்மானிக்கும் திறன் இந்த ராஜ யானைக்கு உண்டு. கூட்டத்தில் எங்கு ஒளிந்திருந்தாலும் என்னை தேடி வந்து மாலையிடும்படி இவனை பழக்கி.. நானே அடுத்த முறை அரசனாவேன்.... சங்கிலி முருகனை இந்நாட்டின் அமைச்சராக்குவேன். இது இந்தத் தான யானை மீது சத்தியம்.
 
[ஏழைப் புலவன் யானைக்கட்டி தீனி போட வக்கில்லாததால் வீதிக்கு தக்கவாறு நாமமும், பட்டையும் மாற்றி மாற்றி சார்த்தி அந்த யானையை வீடு வீடாக ஆசிர்வாதம் செய்து பிச்சை எடுக்கவிட்டு ராச்சாப்பாட்டுக்கு கலெக்ஷன் பார்க்கிறான்...புலவனின் இந்த அபார(!?) சாமர்த்தியத்தை பார்த்து இளவரசி தெய்வானை (தேவயானை) போட்ட நகையுடன் (அவள் எடை ஐம்பது கிலோ.. அணிந்திருந்த நகைச் சுமை நூறு கிலோ) அவன் காலடியை பின் தொடர்கிறாள்....ராஜாவாகி ராஜ்யபரிபாலனம் செய்யும் வண்ணக் கனவுகளுடன் வீதியில் மிதந்து செல்கிறான் வரகவி....]
 
இப்படிக்கு தருமியான ஆர்.வி.எஸ். (சொக்கன் புலவராக வந்து காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில்......)
 
அப்பாடி ட்ராக் மாத்தி கொண்டு போயாச்சு.. யானைக் காதலை... மனிதக் காதலுக்கு கொண்டு வந்தாச்சு...இனிமேல் இது ரொமாண்டிக் காதல் யானை இல்லை, பிச்சை எடுக்கும் பட்டத்து யானை.. அடடா.. மாலை போட்டு ராஜாவாகிறது கான்செப்ட் எங்கே இங்க வந்தது... சரஸ்வதி சபதம் இவ்வளவு ஆழமா பாதிச்சிருக்கா... இப்படி ரவுசு காட்டறாங்களே... இப்பவே கன்னக் கட்டுதே.... அடுத்தது யாருப்பா... வாங்கப்பா... பாண பத்மனாபரா.. மோகன(ஜி)மன்னனா..... வந்து ரவுண்டு கட்டுங்க... பிள்ளையாரப்பா ப்ளாக்ஐ காப்பாத்து.... யானைக்கு மதம் பிடிச்சுடும் போல இருக்கு....  
16 செப்டெம்ப்ர், 2010 11:03 pm  
 
இப்படியே... யானைக் கதை போய்க்கொண்டு இருக்கிறது... 
 
முதல் பாகம் இதோடு முற்றும்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails