Showing posts with label தீர்த்தயாத்திரை. Show all posts
Showing posts with label தீர்த்தயாத்திரை. Show all posts

Monday, May 21, 2012

திருநல்லம்


தரிசனம் முடித்து வெளிவருகையில் வைகலில் மொத்தமிருந்த மூன்று தெருக்களும் அலம்பித் துடைத்து விட்டாற் போல இருந்தது. விபூதி மணக்க கோயில் படி தாண்டி வந்து "கோனேரிராஜபுரம் இப்படி போலாங்களா?” கதவு திறந்து கோயில் காண்பித்த அந்த வைகல் அம்மாளிடம் கேட்டதற்கு “தோ.. இந்த மெயின் ரோடு திரும்பி நேரா ஒரு கிலோமீட்டர் போனா வந்துரும்” என்று அனுப்பிவைத்தார்கள்.

வண்டி கிளம்பியவுடன் அந்த அரணாக்கயிரில் ட்ராயர் சுற்றிய பையன் வாயில் எதையோ சப்பிக்கொண்டு கழுத்தில் கருப்புக்கயிற்றில் தொங்கிய முருகன் டாலருடன் கொஞ்ச தூரம் ஓடி வந்தான். வைகல்நாதர் ஏகாந்தியாகிவிட்டார். வைகல்நாதரைப் பார்க்க அன்றைய தினத்தில் அதற்கு மேல் யாரும் வருவார்கள் என்று தோன்றவில்லை. சேவார்த்திகளையும் குருக்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

டயர் மண் சரசரக்கவும் ஒரு ப்ளாக்கி தெருநாய் துரத்தவும் கொஞ்ச தூரம் போனதும் வைகல் ஊர் எல்லையில் ஒரு மாருதி ஆம்னி ஓரமாக தனியாளாய் நின்றுகொண்டிருந்தது. அது நின்ற கோலம் போட்ட வாசலில் “இங்கு ஜோதிடம் பார்க்கப்படும்” என்று அட்டை போர்டு தொங்கியது. ஆரூடம் பார்ப்பவரின் தரிசனத்திற்காக ப்ளாஸ்டிக் சேரில் ஒரு ஐந்தாறு பேர் எதிர்காலத்தை கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு” கேட்டுக்கொண்டிருந்தவரிடம் “கோனேரிராஜபுரம் இப்படிப் போலாங்களா?” என்றதற்கு “இந்தப் பக்கம் போய் அப்படிப் போங்க” என்று சைகையில் வீசிக் காட்டிவிட்டு “நாளானதே... ரொம்ப நாளானதே”ன்னு விட்டதை கேட்கப் போய்விட்டார்.

இடம் வலதாய் சுற்றிலும் பசுமையாய் பச்சைப் பாய் விரித்த நிலத்தைப் பார்த்துக்கொண்டே சரியாக தப்பாகப் போனேன். வண்டியகலம் இருந்த ஒரு இடுக்குத் தெருவில் போய் சந்தேகத்தில் “கோனேரிராஜபுரம்...” என்று இழுத்தவுடனேயே ”அது தெக்கால போணும்” என்று மீசைக்கு நடுவில் கொஞ்சூண்டு முகம் தெரிய இருந்த ஒரு பெரியவர் கை காட்டினார். அவரது நெஞ்சாங்கூட்டை ஒரு கிழிசல் துண்டு மூடியிருந்தது.


முற்றிலும் தென்னை ஓலைக் குடிசையையே பார்க்காத என் பெண்கள் இருவரும் ஆர்வத்தோடு எட்டிப் பார்த்தனர். இதுபோன்ற செம்மண் ரோடும், பெஞ்சு போட்ட டீக்கடையும், அடிபைப்பும், ஆட்டுக்குட்டியும் இருக்கும் குக்கிராமங்களுக்குள் சுற்றும் போது என்னுடைய காரின் கதவுகளை முழுவதும் திறந்துவிடுவது என் வாடிக்கை. புதுசாய் நாற்று நட்ட வயலிலிருந்து வரும் மண்வாசம் மனதைக் கொள்ளைகொண்டு போகும். அடுத்த வருட விசிட் வரை அதுதான் வாயு ரூப தெம்பு டானிக். பெரியவரின் பக்கத்தில் எட்டிப் பார்த்த பையன் காரின் அருகில் வந்து உள்ளே பார்த்தான். சின்னவளின் கையில் இருந்த சாம்சங் டேப்லட்டைப் பார்த்து “லேப்டாப்டா” என்று பல்லைக்காட்டி பக்கத்தில் குச்சி ஐஸ் சப்பிக்கொண்டிருந்தவனிடம் சொன்னான்.

ஜன்னலருகில் ஸ்நேகமாய் சிரித்தவனிடம் “உஹும். இது பேட்” என்றாள். முன்னும் பின்னுமாய் ஆட்டி ஸ்டியரிங்கை மாக்ஸிமம் டார்க் வளைத்து அதேயிடத்தில் திருப்பினேன். வழியில் ஒரு பாசனக் கால்வாயின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்தபோது வாத்துக்கூட்டம் ஒன்று அதில் நீந்தி எழுந்து குஞ்சுகுட்டிகளுடன் கரையேறி ”க்வாக்..க்வாக்..” என்று ஓடியது. சுற்றுவட்டாரத்தில் குச்சியோடு ரஞ்சிதா வருகிறாரா என்று எட்டிப்பார்த்தேன். நல்லவேளை இல்லை!
   
ஒதுங்க வழியில்லாமல் ஏர்கலப்பை ஏற்றிப்போய்க்கொண்டிருந்த இரட்டை மாட்டு வண்டியை ஹார்ன் அடித்துக் கிளப்பாமல் பின் தொடர்ந்தோம். கண்ணுக்கு குளிர்ச்சியான பச்சைப் பசேல் வயல்வெளி, மாட்டுவண்டி, சிறு குற்றாலமாக நீர் பொழியும் போர் செட்டு என்று அங்கே ஒரு ரம்மியமான சூழ்நிலை நிலவியது. கையில் வைத்திருந்த தேவாரப் புத்தகத்திலிருந்து சம்பந்தர் பாடிய ப்
”குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில்
தளிருந் திகழ்மேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே.”

என்ற பாடலை ஒரு முறை படித்துப் பார்த்தேன். இருபதாம் நூற்றாண்டிலும் நளிரும் வயல் சூழ்ந்திருப்பது நாம் செய்த புண்ணியமே!
 

மாட்டுவண்டி கோயிலுக்குப் பக்கத்தில் வேறு ஒரு அகலத் தெருவில் பிரிந்தவுடன் திருத்தலத்தை அடைந்தோம். இராஜகோபுரமில்லை. வாசலில் இரண்டு பிச்சைக்காரர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். முற்பகல் நேரத்தில் சிவன் கோயிலுக்கேயுரிய ஒரு மயான அமைதி வாசலில் தெரிந்தது. இங்கேயும் குருக்கள் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

கொடிமரத்தருகில் ஐந்தாறு பேர் உதிரியாய் உட்கார்ந்திருந்தார்கள். அதற்கு வலதுபுறம் ஸ்டாண்ட் இத்துப் போன ஒரு டிவிஎஸ் ஐம்பதை தூணில் சாய்த்து முட்டுக்கொடுத்து நிறுத்தியிருந்தார்கள். அதிகாரி போன்ற ஜாடையில் வெள்ளையுடையில் தூய கருப்பாக இருந்தவரிடம் “குருக்கள் இருக்காருங்களா?” என்று கேட்டேன். முகத்தை ஏற்றி “என்னாத்துக்கு?” என்று வினவியது சற்று இடறியது. ”சாமி பார்க்கதான்” என்று தழைந்தேன். “ப்ராகாரம் சுத்தி வாங்க.. காமிக்கிறேன்” என்றார் கொஞ்சம் அலுப்போடு.
   
உலகிலேயே மிகப்பெரிய சுயம்பு நடராஜர் என்று ஊர் எல்லையில் போர்டு வைத்திருந்தார்கள். நடன சபாபதி பக்கத்தில் சிவகாமி நிற்க கிரில் கதவுக்குப் பின்னால் ஆடிக்கொண்டிருந்தார். சிவசிவாவென்று உட்பிரகாரத்தை ஒரு முறைச் சுற்றி வந்தோம். திருவலம் முடித்தும் யாரும் வந்தபாடில்லை. வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வெளியில் வந்துபார்த்தபோது கனிசமாய் மக்கள் கூடியிருந்தார்கள். உச்சிகாலப் பூஜை முடிந்தவுடன் அன்னதானத்திற்காக காத்திருக்கிறார்கள் என்பது அவர்களின் பசிக் கண்களில் தெரிந்தது.

கையில் கொத்துச்சாவியுடன் அந்த மத்திம வயது கரியமேனி மெய்க்காவல் “வாங்க..” என்று நடராஜர் சன்னதி நோக்கி நகர்ந்து வந்தார். கொடிமரத்துக்கு வலதுபுறம் அவர் ஜாகையிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரது மனைவி ஈரத்தலையுடன் வெளியே தூணருகில் சாய்ந்து கொண்டு துண்டால் கேசத்தை தட்டிக்கொண்டிருந்தார்.

கற்பூரார்த்தி காண்பித்து ”சோழ ராஜா சிற்பியை பஞ்சலோகத்தில் மிகப்பெரிய நடராஜர் சிலை வடிக்கச் சொல்றார். சிற்பி எவ்வளவு தடவை செஞ்சாலும் அதுல ஒரு பங்கம் வந்துடுது. நாள் நெருங்க நெருங்க சிற்பிக்கு பயம் வந்துடுது. ராஜா ”இன்னும் ரெண்டு நாள்ல சிலை தயாரா இல்லைனா உங்க தலையை எடுத்துடுவேன் “ன்னு சொல்லிட்டான். ஒரு நாள் வாசல்ல ஒரு சிவனடியார் வந்து தாகத்துக்கு தண்ணி கேட்குறார். சுடுதண்ணியா இருந்தா தேவலாமென்கிறார். சிற்பிக்கு கோவம் வந்து ”தலையே போவப்போவுது இதுல உங்களுக்கு சுடுதண்ணியா? வேணுமின்னா பஞ்சலோகம் கொதிச்சுக்கிட்டு இருக்கு. போய் எடுத்துக் குடிங்க”ன்னு சொல்லிட்டு உள்ள போயிடறாரு.

சிவனடியார் அங்க பக்கத்துல கொதிச்சுக்கிட்டு இருக்கிற பஞ்சலோகக் குழம்பை எடுத்து குடிச்சுடறாரு. சிவனடியாரை திட்டிட்டோமேன்னு பதபதைச்சு வெளிய வாசலுக்கு ஓடி வந்துபார்த்த சிற்பிக்கு அதிர்ச்சி. வாசல்ல ஒரு நடராஜர் பஞ்சலோக சிலை இருக்கு. அதுக்கு மேலயும் அவருக்கு ஒரு அதிர்ச்சி என்னான்னா.. மார்ல ஒரு மரு. அந்த மருல ஒரு முடி. இந்த அடையாளங்கெல்லாம் அந்த சிவனடியாருக்கும் இருந்தது.” என்று சுயம்பு நடராஜரைப் பற்றிய உண்மைக் கதையைச் சொன்னார். மெய் சிலிர்த்தது! ”ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ” என்று நித்யஸ்ரீ மனசுக்குள் பக்தி சுரக்கும் கானமழை பொழிந்தார்.
 
 
மீண்டும் ஒரு முறை திருவலம் வந்தோம். வெளிப்பிரகாரத்தில் அம்மன் சந்நிதி தனிக்கோயில் போல அமைந்துள்ளது. அங்கேயே வைத்தியநாதர் சந்நிதியும் வடிவேலன் சந்நிதியும் எதிரெதிராய் அமைந்துள்ளது. “இது ரொம்ப விசேஷம். பூர்வஜென்மத்தில புண்ணியம் செஞ்சிருந்தாதான் இங்க வந்து தரிசனம் பண்ண முடியும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. சர்வ ரோக நிவாரணியாக இந்த வைத்தியநாதர் இருக்காரு” என்றார். பட்டனில்லாத சட்டையும் ஜிப்பில்லாத அரை டிராயருடனும் ஐந்தாறு பொடியன்கள் கால் சுடச்சுட ”உஸ்..உஸ்”ஸென்று எங்களுடன் வெளிப்பிரகாரம் சுற்றினார்கள். கூடவே பாவாடை சட்டையுடன் அவர்களின் அக்கா தங்கைகளும்தான்...

நிறைவான தரிசனம். கொடிமரம் அருகில் இருக்கும் சுவர்களில் ஓவியங்கள் வரைந்திருந்தது. அவற்றின் வண்ணத்தில் அதன் காலம் பிரதிபலித்தது. அவை பழங்காலத்தவை என்பதில் சிறிதும் ஐயமில்லை. அதில் சிவபெருமான் குடும்பமாக ஊர் சுற்றிக்கொண்டிருந்தார்.



இப்போது சாப்பிடத் தயாராக அனைவரும் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். ஓடியோடி பிரதக்ஷினம் சுற்றிய வாண்டுகளும் இலைக்கு வந்து உட்கார்ந்துவிட்டார்கள். மஹேஸ்வரனை நமஸ்கரிக்கும் போது எங்களை காந்தமாய்ப் பார்த்த அந்தப் பையனின் விழி ஈர்ப்பில் நான் விழுந்துவிட்டேன். பூர்வ ஜென்ம புண்ணியத்தால் இந்த க்ஷேத்திரத்தில் பிறந்த அந்தப் பையனையும் ஈஸ்வரன் ரக்ஷிப்பாராக!!
 
-


Thursday, May 17, 2012

இலும்பையங்கோட்டூர்

யோக தக்ஷிணாமூர்த்தி

”தம்பிக்குதான் இதுமாதிரி இடமெல்லாம் கிடைக்கும்” என்று நடுங்கிய என் சித்தியின் பயத்தில் நியாயம் இருந்தது.

சுற்றிலும் மை பூசின கும்மிருட்டு. எங்கோ தொலைந்து போன நிலா. எந்நேரமும் மழை பொழியலாம் என்று உறுமும் வானம். வழியோரத்தில் புதர் புதராக கருவேலம் முள் காடு. முன்னால் செல்லும் எங்கள் வாகனத்தின் ஒளியைத் தவிர வெளிச்சமே இல்லை. தொடுவானத்தில் எங்கேயோ மெயின் ரோட்டில் போகும் பஸ்ஸின் ஒளித்தீற்றல்கள். கண்ணாடி வழியாக உற்றுப் பார்த்தால் தூரத்தில் உருவங்கள் நிற்பது போன்ற பிரமையேற்படுத்தும் செடி கொடிகள். எட்டு மணியைத் தாண்டி காட்டிய பச்சையில் ஒளிரும் ரேடியம் வைத்த கைக்கடிகாரம் ”நேரமாகிவிட்டது” என்று எச்சரித்தது.

அந்த கிராமத்திற்கு போகும் உட்சாலையிலிருந்து ஒரு ஒற்றை விளக்கு எங்களது குவாலிஸ்ஸை விடாமல் பின் தொடர்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை முன்னாலும் பின்னாலும் வேறு நடமாட்டமே கிடையாது. நாங்கள் ஆக்ஸிலேட்டரிலிருந்து காலெடுத்தால் அதுவும் நிற்கிறது. நாங்கள் விரட்டினால் அதுவும் விரட்டுகிறது.

“தம்பி! பயமா இருக்குடா” என்றார்கள்.

“ஸ்வாமி பார்க்க போறோம். ஓன்னும் ஆகாது” என்று உதடுகள் தைரியம் சொல்ல உள்ளம் கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது. இருந்தாலும் அந்தப் பரமனை நினைத்துக்கொண்டு நெஞ்சுரத்தோடு முன்னேறினோம்.

கிராமத்தின் பிரதான வீதியை அடைந்ததும் ஆங்காங்கே ஒன்றிரண்டு தெருவிளக்குகள் மங்கலாக எரிந்தன. பின்னால் வந்த எம்.80 சரேலென எங்களை முந்திச் சென்றது. பின்னால் திரும்பியதில் அதன் பற்கள் தெரிந்தது. நட்பாகச் சிரித்தார். அப்புறம்தான் இருட்டில் பாதுகாப்பாக எங்கள் பின்னால் வந்தார் என்று புரிந்தது. அவரிடமே கோயிலுக்கு வழிகேட்டோம்.

“ரைட்ல போங்க.. இந்நேரம் திறந்திருப்பாங்களா தெரியலையே” என்றார்.

நான், என்னுடன் வயதான இரண்டு சித்திகள், குழந்தைகள் மனைவி என்று ஏழெட்டுப் பேர் ஒரு சனிக்கிழமை திருத்தல யாத்திரையாக சென்னைக்குப் பக்கத்தில் தொண்டை நாட்டுத் தலமான இலும்பையங்கோட்டூருக்கு விஜயம் செய்தோம். படாளம் கூட் ரோடிலிருந்து கிளைச்சாலையில் பிரிய வேண்டும். எலுமியன்கோட்டூர் என்று மக்கள் வழக்கில் இருக்கும் கிராமம் அது.

அந்த ஓரத்திலிருந்து கசிந்த வெளிச்சத்தைப் பார்க்கையில் கோயில் திறந்திருந்தது போலத்தான் இருந்தது. பக்கத்தில் வந்தும் கதவடைத்துவிடப்போகிறார்கள் என்று பதைத்தேன். நல்லவேளை திறந்திருந்தது. நாலைந்து அந்தணச் சிறுவர்கள் பட்டை பட்டையாய் திருநீறணிந்து உள்ளே உலவிக்கொண்டிருந்தார்கள்.

ஒரு ஜான் அளவிற்கு குடுமி வைத்த சிறுவன் ஒருவன் நாலு முழத்தை எட்டு முழம் போல இடுப்பில் சுற்றிக்கொண்டு அதற்கு மேலே சிகப்புக் காசித்துண்டு கட்டி ருத்ராட்ச கழுத்தோடு அழகன் முருகன் போல நின்றான்.

“நடை சார்த்திருக்குமோன்னு பயந்துட்டேன்” என்றேன்.

“இனிமே தான் அர்த்த ஜாமம் ஆகப்போறது” என்ற அந்தப் பையனை உற்றுப்பார்த்தேன். நல்ல தேஜஸாக இருந்தான்.

”நீங்கெல்லாம் யாரு“ என்றேன்.

“பக்கத்தில வேத பாடசாலை இருக்கு. அங்க வேதம் கத்துக்கறோம்” என்று அவன் சொல்லும்போதே உச்சரிப்பில் வேதம் வழிந்தது.

“அர்ச்சனை இருக்கா?” என்று கேட்டேன்.

“இல்ல. தீபாராதனை போதும்” என்றேன்.

குறைந்த வெளிச்சத்தில் கணீரென்று ஸ்ரீருத்ரம் சொல்லி அந்தப் பையன் காட்டிய தீபாராதனையில் சிவபெருமான் நேரே வந்து காட்சிகொடுத்தது போலிருந்தது. கற்பூர ஆரத்தியில் ஈஸ்வரன் ஜொலித்தார்.

சிவ வழிபாடு முடிந்து திருவலம் வருகையில் கோஷ்டத்தில் சின் முத்திரையுடன் இருக்கும் யோக தக்ஷிணாமூர்த்தியின் எழில் காணக் கண்கோடி வேண்டும்.

இரம்பை பூஜித்த தலம் அரம்பையங்கோட்டூர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். அரம்பேஸ்வரர் கனக குஜாம்பிகையுடன் அருள் புரிந்து வருகிறார். மூலவர் தீண்டாத் திருமேனி. வெளிர் செம்மண் நிற சிவலிங்கத் திருமேனி. பெரிய ஆவுடையார். யாருமே மூலவரைத் தொட்டு பூசை செய்வதில்லை. நல்ல பெரிய மூர்த்தம். அம்பாள் சந்நிதியில் மஹா பெரியவாள் சக்கரப் பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் தங்கியிருந்து வழிபட்டிருக்கிறார்.

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: | குரு: சாக்ஷாத் பரம்ப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம

நிறைவான தரிசனம். வரும்போதும் ஒரு இருசக்கரம் பின் தொடர்ந்தது. ஆனால் இப்போது பயமில்லை!

Wednesday, May 16, 2012

வைகல்


”வைகல் இன்னும் எவ்வளவு தூரம்?”

திருநீலக்குடி தாண்டி புளிய மர நிழலில் தள்ளுவண்டியில் சாத்துக்குடி ஜுஸ் கடை போட்டிருந்தவரிடம் கேட்டபோது ஹிஸ் அடித்தக் கீச்சுக் குரலில் “நேரா மேக்கால போங்க.. ஒரு பாலம் வரும்.. அதில தெக்கால கொஞ்ச தூரம் போனா வைகல் வரும்” என்றார். ”ஸ்ட்ரெயிட்டா போய் ஃபர்ஸ்ட் ரைட் அப்புறம் செகண்ட் லெஃப்ட்” என்று இதுகாரம் வழியறிந்த என் வாரிசுகள் ”தெக்கால மேக்கால” என்று திசையில் வழிகேட்டு திக்குமுக்காடிப்போனார்கள்.

அவர் சொன்ன மேற்கால போய்க்கொண்டே இருந்ததில் வலதில் ஒரு பழையப் பாலம் வந்தது. பாலத்துக்குப் பக்கத்தில் தென்னக கிராமங்களில் ஒட்டிப் பிறந்த ஒரு டீக்கடையும் இருந்தது. கொடிமரங்கள் நிறைந்த அந்தப் பகுதிதான் ஒரு பேருந்து நிறுத்தமாகவும் செயல்பட்டு வந்தது. அங்கே டவுனுக்குப் போக கையில் பாலிதீன் பேக்குடன் காத்திருந்த ஒரு சிகப்புக் கண்ணாடி வளையல் அம்மாளிடம் “வைகல் இப்படிப் போலாங்ளா?” என்று கேட்டதற்கு

“இப்டியே நேரா நாட்டார் வாய்க்கால் தாண்டி போனீங்கன்னா ஒரு கிலோ மீட்டர்ல வரும்” என்று சொல்லிவிட்டு ஜன்னல் எட்டிப் பார்த்த என் இளையவளைப் பார்த்து கடைவாய்ப் பல் தெரிய சிரித்தாள் அந்தம்மா. கன்னம் சிவக்கும் வெட்கத்தில் தலையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டாள் என் பெண்.

அவர் கைகாட்டிய திக்கில் ஒரு சிங்கில் பெட் ரோடு. சரசரவெனப் பிடித்தால் இரண்டு கி.மீட்டரில் சாகுபடி முடிந்த வயற்வெளிகளுக்கிடையில் மேய்ந்துகொண்டிருந்த மாடுகளுக்கிடையில் ஏதோ ஒரு குக்கிராமம் போலவும் நடுவே ஒரு சில தலைகளும் தெரிந்தன. துள்ளிக் குதித்த தாய் ஆடு தனது குட்டிகளுடன் நுழைந்த முள்வேலியில் பார்டர் போட்ட வீட்டைக் கடந்தவுடன் அந்தக் கிராமத்தில் மொத்தமாகவே இரண்டு தெருக்கள் இருந்தது. அதிக பட்சமாக புழுதி பறக்க நாங்கள் பயணித்து வந்த அந்த செம்மண் “மெயின்” ரோட்டையும் சேர்த்து மூன்று ராஜ வீதிகள். ஊருக்குள் நுழையும் இடத்தில் ஓரமாக அரசாங்க செலவில் ஒரு அடிபைப் போட்டிருந்தார்கள். தேகம் துருப் பிடித்திருந்த அந்த இரும்புப் பைப்பின் கைப்பிடி பளபளவென்று இருந்ததில் அவ்வூரில் இருந்த பத்து குடும்பத்திற்கு வாரி வாரி தண்ணீர் தரும் பைப் என்று தெரிந்தது.

வைகல் ஒன்றும் பெரிய கோவில் இல்லை. ராஜகோபுரம் கிடையாது. பெரிய மதிற் சுவர்கள் கிடையாது. மூலவர் சுயம்பு. ஒரு காலத்தில் செண்பகாரண்யமாக இருந்த இடம். கோச்செங்கட் சோழன் கட்டிய யானை ஏறாக் கோயிலெனப்படும் மாடக்கோயில் வகையறாவில் ஒன்று.

”குருக்கள் வருவாருங்களா?” பக்கத்து குட்டையிலிருந்து ப்ளாஸ்டிக் குடம் ஏந்தி குனிந்து வந்த பெண்மணியிடம் கேட்டேன்.

“தோ வாரேன்!” என்று பக்கத்தில் உதயசூரியன் போட்ட சிமெண்ட் ஜன்னல் வீட்டிலிருந்து கோயில் சாவி எடுத்து வந்தார். டிராயரை அரணாக் கயிரில் சொருகிய சட்டையில்லாத ஒரு பையன் எட்டிப் பார்த்தான்.

“மெய்க்காவல்...” என்று இழுத்த என்னிடம் “நாங்கதான்” என்றார்.

”ஆடுதுறையிலிருந்து தான் வரணும். தெனமும் ஒரு வேளை பூசைக்குதான் ஐயிரு வருவாரு” என்று குறைப்படும் தொனியில் பேசினார் அந்த அம்மணி.

கதவைத் திறந்துவிட்டு சந்நிதி வரை கூட வந்தார். தீபாரதனைத் தட்டை கொடுத்து “நீங்களே காமிங்க”. என்னுடைய மயில்கண் வேஷ்டியும் நெற்றியில் பட்டையாய் தரித்திருந்த விபூதியும் நான் அதற்கு தகுதியான ஆள் தான் என்று அவருக்கு தோன்றியிருக்கக்கூடும். நான் பாக்கியம் பெற்றவனானேன். சுயம்பு லிங்க மூர்த்திகளை சேவிப்பதற்கே புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்பார்கள். தீபாராதனை காண்பிப்பது என்றால் எவ்வளவு பெரிய பேறு!

”நமஸ்தே அஸ்து பகவன்” என்று ருத்ரத்திலிருந்து ஒரு ஸ்லோகம் செய்து வழிபட்டு “தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”யுடன் ஒரு ஆரத்தி எடுத்து மகிழ்ந்தேன்.

கையில் கொண்டு போயிருந்த தேவாரத் திருத்தலங்கள் புத்தகத்திலிருந்து கீழ்கண்ட தேவாரப்பாடல் படித்தது ஞாபகத்திற்கு வந்தது.
துளமதி யுடைமறி தோன்று கையினர்
இளமதி யணிசடை யெந்தை யாரிடம்
உளமதி யுடையவர் வைக லோங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே


துள்ளும் மானை கரத்தில் ஏந்தியவனும், பிறைச் சந்திரனை சடையிலணிந்தவனுமான என் தந்தை சிவபிரானை வணங்கும் மதி நிறைந்தவர்கள் தொழும் வைகல் கோயிலானது வானத்தில் வளரும் நிலவை தொடும் மாடக்கோயிலே என்று சம்பந்தர் பாடியிருக்கிறார்.

துளமதி, இளமதி, உளமதி, வளமதியை மதிநுட்பத்தோடு எழுதியிருக்கும் ஞானப்பால் குடித்த சம்பந்தன் நமக்களித்த தமிழ்ப்பால் அந்த தேவாரப்பாடல்.

மதி நிறைந்தவர்கள் தொழும் வைகலை இக் குறைமதியோனும் தொழுதேன்!

#தீர்த்தயாத்திரைக் கதைகள் வளரும்...

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails