Thursday, January 31, 2013

உப்புமா எழுத்தாளன்

நான் ஒரு உப்புமா எழுத்தாளன்.

வெட்டி முறித்து ஆஃபீஸிலிருந்து வீட்டிற்கு திரும்பும்போது சம்பந்தமேயில்லாமல் சாப்பாடு பற்றிப் புகுந்த கார் பேச்சில் நண்பர்களிடம் அரிசி உப்புமாவின் குண விசேஷங்களைப் பற்றி அரை மணி அசராமல் பேசினேன். சிற்றுண்டிக் களத்தில் “அரிசி உப்புமா-கத்திரிக்காய் கொத்ஸு” என்னும் விசேஷ இணை அஜீரண ஆசாமிகளைக் கூட வசியம் செய்யவல்லது.

கூவம் நதிக்கரையில் காலை நனைத்துக் கொண்டு உட்கார்ந்து சாப்பிட்டாலும் “இன்னும் போடு..இன்னும் போடு..” என்று தட்டை நீட்டச் செய்யும் அபார சக்தி வாய்ந்தது. ஒரு வெங்கலப்பானை உப்புமாவை அப்படியே ஸ்வாஹா செய்துவிட்டு அடிப்பிடித்திருப்பதை காந்தலே ருசியென்று மிச்சம் வைக்காமல் தின்னத் தோன்றும்.

Survival of the Tastiest என்கிற சிந்தாந்த அடிப்படையில் இன்னமும் எனது “சொத்தெழுதி வைத்துவிடுவேன்” புகழ் சிற்றுண்டியான பேருண்டி இந்த அரிசி உப்புமா.

அரிசி உப்புமாவை அசை போடும் மனதிற்குள் குமுட்டி அடுப்பு வந்து குபீரென்று பற்றிக்கொண்டது.

ஸ்கூல் விட்டு வந்து புஸ்தக மூட்டையை ஹால் பெஞ்சில் விசிறி எறிந்துவிட்டு “இன்னிக்கி என்ன பாட்டி டிஃபன்?” என்று கேட்டால் “கரித்துண்டம் ஈரமாயிடுத்துடா.. குமுட்டியை மூட்டிக்குடு... அரிசி உப்புமா பண்றேன்” என்பாள் பாட்டி. டிஃபனின்றி அசையமாட்டான் ஆர்விஎஸ்.

கரித்தூள் போட்ட குமுட்டி அடுப்பை மூட்டுவதற்கே விஷய ஞானம் அதிகம் வேண்டும். பக்கத்தில் எரியும் சிம்னி விளக்கில் “மன்னையில் புதிய உதயம்” என்கிற விளம்பர நோட்டீசு பேப்பரைச் சுருட்டிக் கொளுத்தி, கீழ்ப்புறமிருக்கும் சிறிய பொந்தில் கையில் சுட்டுக்காமல் தூக்கிப் போட்டு, அதற்கு நேரே விசிறியால் கை அலுக்க விசிறினால் ஒன்றிரண்டு கரித்துண்டு பற்றிக்கொண்டு மேலே கனல் கண்களுக்குத் தெரியும். சட்சட்டென்று ஒன்றிரண்டு தீப்பொறி குமுட்டியிலிருந்து பறக்கும்.

“ம்... இன்னமும் வேகமா விசுறுடா.. கரித்துண்டம் நன்னா புடிச்சிக்கட்டும்” என்று பாட்டி ஏவிவிட்டதும் ”உப்புமா..உப்புமா..உப்புமா” என்று நொடிக்கொருதரம் அடித்துக்கொள்ளும் வயிறுக்காக மனசு சிறகடித்துக்கொள்ள கை நொடிக்கு நாலு தடவை விசிற வேண்டும்.

குமுட்டி அடுப்பில் வெந்த அரிசி உப்புமா அதுவும் வெங்கலப்பானையில் கிண்டிய அரிசி உப்புமாவுக்கு டேஸ்ட் ஒரு படி அதிகம். ஒரு கவளம் எடுத்து நுணியில் ஒரு சொட்டு கொத்ஸு தொட்டு வாய்க்குள் நுழையும் போதே அதன் பிரத்யேக ருசி நாலு முழம் வளர்ந்த நாக்குக்குத் தெரியும்.

டொமேடோ கெட்ச்சப் தொட்டுக்கொண்டு நூல்நூலாய் இழுத்துச் சாப்பிடும் பீட்ஸா மற்றும் பகாசுர வாய் பிளந்து சாப்பிடும் பர்கர் போன்ற மேற்கத்திய சம்பிரதாய உண்டிகளால் செத்துப்போன இக்கால இளைஞர்கள் நாக்குக்கு அரிசி உப்புமாவும் கத்திரிக்கா கொத்ஸும் டேஸ்ட் எப்படியென்று தெரியுமா? க.கொத்ஸால் துணைக்கு வர முடியாத துரதிர்ஷ்ட காலங்களில் தேங்காய் சட்னியும் வெங்காய சாம்பாரும் உப்புமாவுக்கு தொட்டுக்கொள்ள கம்பெனி கொடுப்பார்கள். (கொத்ஸு) மூத்தாள் இல்லாத துக்கத்தை(?!) இவ்விளையாள்களின் (ச,வெ.சா) கூட்டணி நம்மை குஷிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வளவு காலமாக தங்கம் ரூபத்தில் தமிழக மக்களை ஆட்டிப்படைத்த மங்கு சனி விலகும் நேரத்தில் வேஷ்டியை மடித்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தேன். ”சாயந்திரம் டிஃபனுக்குப் பண்ணினோம். உனக்கு பிடிக்குமேன்னு....” என்று ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அரிசி உப்புமா தட்டில் இட்டார்கள். கொத்ஸுயில்லையென்றாலும் உப்புமாமிர்தமாக உள்ளே இறங்கிற்று.

மீண்டும் ஒரு முறை சொல்லிவிடுகிறேன்.

நான் ஒரு உப்புமா எழுத்தாளன்.

பட உதவி: www.myscrawls.com 

Thursday, January 24, 2013

மலை மேல் மருந்தே


எஸ்.பி.கோயிலில் பச்சைக் கலர் ஹைவேஸ் போர்டு தாம்பரத்திற்கு வழிகாட்டியது. மனசு வேறொரு இடத்துக்கு வழிகாட்டியது. இரயில்நிலையம் இருக்கும் திசையில் வண்டியைத் திருப்பினேன். மனைவிக்கு நான் செல்லும் பாதை புரிந்தது. மின்சார ரயில் தடையின்றி செல்வதற்கும் சைக்கிளிஸ்ட்டுகள் இருசக்கராதிகள் குனிந்து இலகுவாக அக்கரைக்கு வாகனம் தள்ளிச் செல்வதற்கும் தோதாக ஒரு கேட் போட்டிருந்தார்கள். கேட்டுக்கு அந்தப் பக்கம் நிலமகளுக்குப் பச்சைப் பாவாடை கட்டியிருந்தது. அரைக் கிலோ மீட்டர் தூரத்தில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக தஞ்சாவூர் மாயவரம் என்று மருதநிலங்கள் தெரிந்தது. சற்றே ஊரை அசை போட்ட நினைவை பெரும் அலறலுடன் கடந்த மின்ரயில் தட்டிச் சுக்குநூறாக்கிச் சிங்கை கோயிலுக்குள் மீண்டும் தள்ளி விட்டது.

“எங்க போறோம்ப்பா?” சிறுசு, பெருசு இரண்டும் ஜோடியாகக் கேட்டன.

“மலைமேல இருக்கிற கோயிலுக்கு..”

“திருவண்ணாமலையா?”

“அண்ணாமலை இங்க எங்க வந்தது?”

“வேற எங்கப்பா?”

“போறோம் பாரு...”

ஏதேதோ கொலை மற்றும் “திடுக்கிடும்” செய்திகள் தொங்கிய மாலை மலர் மற்றும் முரசு பத்திரிகைகள் போஸ்டராய் சடசடக்கும் பொட்டிக்கடைகளும், கட்டை வெளக்கமாறு தோசைக்கல்லில் ரெஸ்ட் எடுக்கும் பரோட்டாக்கடையும், இங்கிலீஸ் மருந்துக்கடையும் இன்ன பிற கடைகளும் நிறைந்த குட்டியோண்டு பஜார் ரோடு அது. கேட் எப்போது திறப்பார்கள் என்று ஜன்னல் கண்ணாடியைத் திறந்து தலையை எக்கிப் பார்த்தேன். எதிர் பக்கத்து ஆட்களுக்கு வழிவிடாமல் வேலி தாண்டிய வெள்ளாடு போல உயர்ரக வெள்ளைக் காரொன்று மூக்கை நுழைத்துக்கொண்டு அதிகப்பிரசங்கித்தனமாக முன்னால் நின்றது.

திறந்த கேட் தாண்டியதும் நெற்பயிர்கள் தலையசைக்கும் பச்சை வயல்களின் ஓரத்தில் வண்டி ஆசையாய் ஓடியது. கார் ஜன்னல்களை இறக்கி இயற்கைக் காற்றை ஸ்வாசித்தோம். உள்ளத்தில் புத்துணர்ச்சி பிறந்தது. ஒரு கி.மி தூரத்தில் வலது பக்கம் திரும்பியதும் ஒரு கால் ஒடிந்து தலைசாய்ந்து இருக்கும் பழைய போர்டை பெரியவள் நிதானமாகப் படித்தாள்.

“தி....ரு....க்....க....ச்.....சூ....ர்...”

பாரதியின் பெயர் தாங்கிய குழந்தைகள் பள்ளிக்கூடமென்று ஒரு 40 அடி நீளக் கூடம் புழுதியாய் பூட்டிக்கிடந்தது. இடதுபுறம் நாலைந்து பேர் கதைபேசியபடி நடந்து ஊருக்குள் சென்று கொண்டிருந்தார்கள். இருட்டிவிட்டது. முன்னிரவு நேரம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சன்னமான வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருக்கும் தெருவிளக்குகள், ஓரமாக இருக்கும் இரும்பு பைப்படி, வீடு திரும்பும் ஆடும் குட்டிகளும், குறுக்கே ஓடும் கூடையில் அடைக்கப்படாத ஒரு கோழி, வேப்பமரத்தில் கட்டப்பட்ட ஏர் மாடு, சட்டையில்லாமல் தலைக்கு முண்டாசு கட்டிக்கொண்டு கால்வாய் முகட்டில் உட்கார்ந்திருக்கும் பெரியவர், யாரும் கவனிக்காத ரேடியோ பாடும் மரபெஞ்சு டீக்கடை என்று ஒரு குக்கிராமத்திற்கான அனைத்து லக்ஷணங்களும் அங்கே பொருந்தியிருந்தது.

“இத்துணூண்டு கிராமத்தில ரெண்டு பெரிய கோயில் இருக்கு. தெரியுமா?”

“பக்கத்துல பக்கத்துலையா?”

“ம்..ஊஹும். ஒன்னு கீழே. இன்னொன்னு மலை மேலே. ஒருத்தர் கச்சபேஸ்வரர். மலை மேல் ஔஷதீஸ்வரர் (எ) மருந்தீஸ்வரர்”

ஆலக்கோயில் என்று அழைக்கப்படும் கோயிலில் எப்போதும் கச்சபேஸ்வரர் ஏகாந்தமாக இருப்பார். இங்கிருக்கும் ஈசனுக்குப் பெயர் விருந்திட்ட ஈஸ்வரர். திருக்கழுக்குன்றத்திலிருந்து சிவதரிசனம் செய்து, நடையாய் நடந்து களைத்து வந்த சுந்தரருக்கு அந்தணர் வடிவத்தில் வந்த சர்வேஸ்வரன் இவ்வூரிலுள்ளவர்களிடம் பிக்ஷை வாங்கி அன்னமிட்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது. மந்திரமலையை மத்தாக்கி வாசுகியை கயிறாக்கி பாற்கடலைக் கடைவதற்கு விஷ்ணு மலை தாங்கும் ஆமையாக உதவிபுரிய சம்மதித்தார். அதற்கு முன்னர் இத்தலத்து ஈசனை வழிபட்டுச் சென்றதால் இம்மூர்த்திக்கு கச்சபேஸ்வரர் என்று பெயர். சுயம்பு மூர்த்தி. கொட்டைப்பாக்களவுதான் தெரிகிறார். கீர்த்தி பெருசு.
முதுவாய் ஓரி கதற முதுகாட்
டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
பெருவாயெடுத்து ஓலமிடும் நரிகள் உலவும் இடுகாட்டில் தீச்சட்டியை ஏந்தித் திருநடனம் புரிபவனே, தேன் வடியும் புத்தம்புது கொன்றைப் பூவினைச் சுடும் மலையவன் மகளான பார்வதியை மணந்தவனே, கச்சூர் ஆலக்கோயிலில் உறையும் எம்பெருமானே நீ ஓட்டையெடுத்துக்கொண்டு போய் பிட்சையேந்தி அமுதிட்டால் உன் அடியார்கள் கவலையடைய மாட்டார்களோ? என்று பாடினார் சுந்தரமூர்த்தி நாயனார்.

ராஜகோபுரமில்லாத கோயில். விண்ணைத் தொடும் பிரம்மாண்ட மரக்கதவுகள். நேரே கொடிக்கம்பம். வெளிப்பிரகார புல்வெளியை மேய்ச்சல் மைதானமாக்கியிருந்தன உள்ளூர் மாடுகள். ஒன்றல்ல இரண்டல்ல அந்த ஊரின் ஆக மொத்தம் மாடுகள் அனைத்தும் அங்கேதான் மேய்ந்துகொண்டிருந்தன. சிவன் கோயில் மேய்ச்சலில் காளைகள் மட்டுமல்ல பசுக்களும் போஷாக்காய் இருந்தன. சுருக்குப்பை ஆத்தா ஒன்று கையில் ஒடியும் குச்சியோடு மாடுகளோடு உலவிக்கொண்டிருந்தது. சின்னவளை மோந்து பார்ப்பது போல் வந்த கொம்பு சீவிய மாட்டால் “யப்பா...”வென்று அலறியடித்துக்கொண்டு ஓடினாள். ஆத்தா மாட்டை விரட்டியது.

ஈசனும் பஞ்சகச்சமணிந்த குருக்களும் ஏகாந்தமாக இருந்தார்கள். சிவன் கோயிலுக்கே உரிய சொத்தாகிய வவ்வால் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தது. கோயிலில் சாயரட்சை நடந்துகொண்டிருந்தது. தீபாராதனை காண்பித்தார். “நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய.. மஹாதேவாய.. த்ரயம்பகாய...திரிபுராந்தகாய..” என்று ருத்ரம் சொல்லிக்கொண்டேன். சட்டென்று பின்னாலிருந்து சங்கூதும் ஒலி கேட்டது. மேலும் இருவர் தரிசனத்தில் கலந்துகொண்டனர். வெளியூர்க்காரர்களாக இருக்கவேண்டும்.

மொத்தமே அந்த ஊரில் நான்கு கடைகள் தான். மூன்று பலசரக்கு பொட்டிக் கடை. ஒரு டீக்கடை. மூன்று கடைகளில் ஐநூறு ரூபாய்க்கு சில்லரை கிடைக்காமல் நான்காவது பாய் கடையில் கோயில் உண்டியலுக்கும் தட்டுக்குமாக நிறைய சில்லரை கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டு மலைக்கோயிலுக்கு வண்டியை விட்டேன். இல்லை. நீங்கள் எதிர்பார்ப்பது போல பெரிய மலையில்லை. சிறு குன்று தான். இப்போது சில்லரை வாங்கிக்கொண்டு “சிறு குன்றுதான்” என்று நான் எழுதியிருப்பது வரை படித்தீர்களல்லவா? அந்த நேரத்தில் காரில் மேலே ஏறி விடலாம்.

கீழே கச்சபேஸ்வரர் மாடுகளோடு வாசமிருந்தார். மேலே மருந்தீசர் பைரவரோடு காலந்தள்ளுகிறார். கோயிலுக்குள் இரண்டு நாய்கள் கையை நக்கிக்கொண்டு பின்னாலையே பிரதக்ஷிணம் வருகிறது. மருந்தீஸ்வரர் சற்று பெரிய மூர்த்தம். அடிவாரத்தில் சங்கு ஊதியவர்கள் மேலேயும் வந்து ஊதினார்கள். கையில் தோள்பட்டையில் அடிப்பட்டு சரியாகாதவராம். மருந்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ள வந்திருக்கிறார். இந்திரன் ஒரு சாபத்தினால் நோய்பீடிக்கப்பட்டு அவதியுற்ற போது பலா, அதிபலா என்ற மூலிகைகளைக் காட்டி அருள் பாலித்தவர். எனக்கும் அவருக்கும் விபூதியை மடித்துக்கொடுத்து ”இது ஆத்தில இருந்தா ரக்ஷை மாதிரி. உடம்புக்கு எதாவது பண்ணித்துன்னா எடுத்து பூசிக்கோங்கோ”ன்னு கண் மூடி உருவேற்றிக் கொடுத்தார் குருக்கள். முதன்முறை இந்தக் கோயிலுக்கு வந்து போனபின் தேவாரத்தைப் புரட்டியபோது எழுதியிருந்த “மலைமேல் மருந்தே” என்று வரும் பாடல் மங்கலாக ஞாபகம் வந்தது.

மலையடிவாரத்தில் பாய்கடையில் வாங்கிய மூங் தால் பாக்கெட்டைப் பிரித்து கொஞ்சம் நாய்க்கு ஈந்துவிட்டு புறப்பட்டோம். காரோட்டும் போது மலைமேல் மருந்தே மனசெங்கும் ஒலித்துக்கொண்டேயிருந்தது.

வீட்டிற்கு வந்ததும் கூகிளைத் தட்டி ”மலைமேல் மருந்தை” தேடினேன். அந்த அற்புதமான பதிகம் கிடைத்தது.
மேலை விதியே விதியின் பயனே
விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவே னடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே
உயரிய அறநெறியாகவும் அதன் பயனாகவும் இருப்பவனே, பகைவர்தம் திரிபுரமெறித்தவனே, காலையில் உன்னைத் தொழுபவர்களின் கவலைகளைக் களைபவனே, நீலகண்டனே, மாலையில் தோன்றும் குளிர்நிலவைப் போன்றவனே, மலை மேல் மருந்துபோல இருப்பவனே, வயல்கள் சூழ்ந்த, கரும்பாலைகள் சூழ்ந்த பண்ணைகள் உடைய இடத்தில் உறையும் திருக்கச்சூர் ஆலக்கோயில் அம்மானே, உன்னை மறவேனோ? என்கிறார்.
 
 ஒரு முறை படித்துத் தெளிந்தேன். திருக்கச்சூர் ஒரு காலத்தில் ஆலைகள் ஓடிய பதியாக இருந்திருக்கிறது.

ஒரு கோணத்தில் மலைக்கோயிலில் வெள்ளைத் தாளில் பொட்டலம் கட்டி வாங்கி வந்த விபூதி டேபிளின் மேல் ஸ்படிக லிங்கம் போலத் தெரிந்தது.

Tuesday, January 22, 2013

பாடலாத்ரி

திருமண நாளில் பாடலாத்ரி ந்ருஸிம்ஹப் பெருமாளைத் தரிசித்தது மனஸுக்குப் பரம திருப்தியாக இருந்தது. பாடலாத்ரி நரசிம்மர் க்ஷேத்திரம் எதுவென்று ஸ்ரீவைஷ்ணவர்களில் பலருக்குக் கட்டாயம் தெரிந்திருக்கலாம். எனக்கு சிங்கபெருமாள் கோயில் நரசிம்மர் என்றுதான் கோயிலுக்குள் காலடியெடுத்து வைக்கும் வரை தெரியும்.

உக்ர நரசிம்மராக சிவந்த (பாடலம்) இம்மலையில் (அத்ரி) தோன்றியதால் பாடலாத்ரி நரசிம்மர். தொண்டை நாட்டில் சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய பல்லவர்களின் சாம்ராஜ்யத்தில் குடையப்பட்ட குடைவரைக் கோயில். இக்கோயில் குடைந்த காலத்தில் இந்தப் பிரதேசம் முழுவதும் குன்றாகவோ மலையாக இருந்திருக்கவேண்டும்.

“நரசிம்மருக்கு தொளசி மால வாங்கிக்கப்பா” என்று ஒரு தொள்ளைக் காது ரவிக்கையில்லாப் பாட்டியும் “சார்! துள்சி மாலே” என்று டப்பாக் கட்டு கட்டிய வேட்டிக்காரரும் கோயில் வாசலில் நமக்கு மாலை சார்த்துவது போல நெருங்கினார்கள். உள்ளே நுழைந்து சந்நிதிக்கு செல்லும் வழியில் பிரசாத கவுண்டர் பரபரப்பாக இருந்தது. சொற்ப மக்கள் மண்டபத்து தரையிலெல்லாம் புளியோதரையைச் சிந்திச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். வெளியே புளியோதரை சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களை விட உள்ளே சந்நிதியில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது. தள்ளுமுள்ளில்லாமல் தரிசிக்கலாமென்றால் காலை மிதித்து அவசரமாய்ப் பாய்ந்து சென்றார் ஒருவர். எங்களுக்கு முன்னால் பாய்ந்தவரும் நாங்களும் நான்கடி வித்தியாசத்தில் ஒருசேர ஸ்வாமி பார்த்தோம்.

நெய் தீபாராதனைக் காண்பிக்கும் போது நரசிம்மரின் நெற்றியில் வெள்ளைச் சிவப்புக் கற்கள் டாலடித்த அலங்கார நாமத்தை அசால்டாய் விலக்கி மூன்றாவது கண்ணைக் காண்பிக்கிறார் பட்டர்பெருமான். பெரிய மூர்த்தம். வல இடப் புறங்களில் தேவிமார்கள். ”எல்லோரும் நன்னா ஸேவிச்சுக்கோங்கோ....இந்த க்ஷேத்திரத்தில மட்டும்தான் நரசிம்மர் வலது காலை மடிச்சுண்டு இடது காலை தொங்க...” என்பது வரை சன்னமாகக் காதில் விழுந்தது. கண்ணத்தில் போட்டுக்கொண்டோம். தீர்த்தம் சாதித்தார். மீண்டும் துளசிக்கு கையேந்தினால் “தோ...” என்று சந்நிதிக் கோடியில் கிடந்த டேபிளைச் சுட்டினார். வாசலில் தொ.காது பாட்டியும் ட.வேஷ்டியும் விற்றவைகள் புனிதப்பட்டு மூலையில் கிடந்தன. ”மாமா...சடாரி...” என்ற என் இழுவைக்கு “திருமஞ்சனத்துக்கப்புறம்தான்..” என்று வெளியே வழி காண்பித்து ஜருகண்டியைச் வாயால் சொல்லாமல் விழியால் சொன்னார்.

திருவலம் வர முடியாதபடி பாறைகள் சூழ்ந்த சந்நிதி. அஹோபிலவல்லித் தாயாரை வழிபடும் போது “தாயாரைப் பார்த்துட்டுதான் பெருமாளைப் பார்க்கணும். வேளுக்குடி கிருஷ்ணன் சொல்லிருக்கார்.” என்றேன். மூளைக்குள் வேளுக்குடியின் குரல் கேட்டது. தாயார் சந்நிதி பட்டர் ஆமோதிப்பது போல் சிரித்தார். “ஏன்?” உரக்க எட்டூருக்குக் கேட்கும்படியாக சந்தேகம் கேட்டாள் பெரியவள். ”தாயார்தான் ரொம்பவும் இளகின மனஸுக்காரி. தன்னண்ட வந்த பக்தாளுக்கு கடாக்ஷம் பண்ணச் சொல்லி அவ ரெக்கமெண்ட் பண்ணினா ஒடனே பெருமாள் ஒத்துண்டுடுவார்”ன்னு ஒரு ப்ரவசனத்துல சொல்லிக் கேட்டிருக்கேன்-னேன். குங்குமம் வாங்கித் தரித்துக்கொண்டு மிச்சத்தை தூணில் கொட்டாமல் டெய்லி ஷீட்டில் மடித்துக்கொண்டு நகர்ந்தோம்.

பத்துப் பனிரெண்டு படியேறி ப்ரதக்ஷினம் வந்தோம். ஸ்வாமிக்கு பின்புறம் இருந்த பாறைக்கருகில் இருந்த மரத்தைச் சுற்றி அணிந்திருந்த வஸ்திரத்திலிருந்து நூல் உருவிப் போடச் சொல்லியும் அதற்குண்டான பலாபலன்களையும் அப்பாறையில் எழுதி வைத்திருந்தார்கள். சுடிதாரில் எந்த இடத்திலிருந்து நூல் இழுப்பது என்று ஒரு ஜோடி துணி நாடி பார்த்துக்கொண்டிருந்தது. கொடிமரத்துக்கருகில் நமஸ்கரித்து எழுந்ததும் ஜெர்ரியை இழுக்கும் பாலாடைக்கட்டித் துண்டுபோல புளியோதரை வாசனை எங்களையும் அகலவிடாமல் சுண்டி இழுத்தது. ஒரு தொன்னை பத்து ரூபாய்க்கு விற்றார்கள். நங்கை ஆஞ்சு கோயிலில் இதேயளவு ப்ரசாதம் ஃப்ரீயாகவும் சூடாகவும் வழங்குவார்கள். இரண்டு வாங்கி நான்கு பேரும் ஆளுக்கு பாதி தரையிலிடாமல் வாயில் போட்டுக்கொண்டு எங்களின் புளியோதர ஆசையை நிவர்த்தி செய்துகொண்டோம்.

துவஜஸ்தம்பத்துக்கு சமீபத்தில் கோயில் சுவற்றில் கருப்புக் கலர் ஆயில் பெயிண்ட்டில் கட்டம் கட்டியிருந்தார்கள். வெள்ளையில் ஜாபாலி ரிஷிக்கு பிரதோஷ வேளையில் காட்சி கொடுத்த ஸ்தல புராணம், மூர்த்தியின் பெயரெல்லாம் எழுதியிருந்தது. படித்துக்கொண்டே கண்கள் தரைதொடும் இடத்தில் கருப்பில் நஞ்சை 35 ஏ, புஞ்சை 75 ஏ என்று நுணுக்கி நுணுக்கி எழுதி ஆண்டு வருமானம் பத்து எழுதி அடித்து பதினைந்து எழுதி அடித்து ரெண்டும் கலந்து என்னவென்று புரியாத சில லட்சங்கள் என்று தெளிவாக எழுதியிருந்தார்கள். அவ்ளோ சொத்துள்ள கோயில் போலத் தெரியவில்லை. துளசிமாலையணிந்த நரசிம்மரும் செல்வந்தராகத் தெரியவில்லை. பூஸ்திதியிருந்தும் புராதனத்தைக் காப்பாற்றும் வகையில் மராமத்துப் பணிகள் செய்கிறார்கள் என்று மனசுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

வெளியேரும் இடத்தில் பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்த பச்சக்கற்பூரம் தட்டிப் போட்ட பானகம் ஒரு டம்ப்ளர் கொடுத்தார் ஒரு ப்ரார்த்தனை செய்துகொண்ட அம்மணி. தேவாமிர்தமாக இருந்தது. கார் பார்க்கிங்கிற்கு நடந்து செல்லும் போது சன்னதித் தெருவின் கடைக்கோடி வீட்டு வாசலில் ட்யூஷன் ஜரூராக நடந்துகொண்டிருந்தது. அந்திப் பொழுதில் அக்காவும் தம்பியுமாக பொடிசுகள் வாய் விட்டுப் பாடம் படித்துக்கொண்டிருந்தார்கள். மாலை முழுவதும் படிப்பு. தூரத்திலிருந்து நரசிம்மர் பார்த்துக்கொண்டிருந்தார். சூரியன் அடிவானத்தில் மறைவதற்கு தயாராய் இருந்தான். சின்னவள் காதில் மாட்டியிருந்த ரிங் மாஸ்டர் வளைய சைஸ் தோடுகளைப் பார்த்து அலங்காரப் ப்ரிய அக்கா மாணவிகள் வாய் பொத்திச் சிரித்துக்கொண்டார்கள். டீச்சரும் தான்.

வண்டியைக் கிளப்பியபோது கார்க் கண்ணாடிக்கெதிரே மேல் உத்தரீயமும் பஞ்சகச்சமும் நெற்றி நிறைய திருமண்ணுமாக மீண்டும் வேளுக்குடியார் சூட்சும சரீரமாய்த் தெரிந்தார்.

“மொத்தம் மூணு நரசிம்மர் இருக்காராம்” என்றேன்.

“மூணா? என்ன பக்கத்தாத்து நரசிம்மமூர்த்தி மாமா மாதிரி இன்னும் உங்களுடைய ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரைச் சேர்த்துச் சொல்றேளா?”

”ஊஹூம். ஒவ்வொரு நரசிம்மராச் சொல்றேன். வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் சொன்ன அதே வரிசையில.. எனக்குச் சொல்லத் தெரிஞ்ச வரையில...”

கோரஸாக மூன்று “ம்..” காருக்குள்ளிருந்து கேட்டது.

“ஹிரண்யகஸிபுகிட்டேர்ந்து பக்த பிரஹ்லாதனுக்கு அனுக்கிரஹம் பண்ணினது நர சிம்மம். இரண்டாவதா இராகவ சிம்மம் ஒன்னு உண்டு. ராவணாதிகள் கூட சண்டை போடும் போது கொழந்தேள்கிட்ட விளையாடற மாதிரி அம்பு போட்டுண்டிருந்தானாம் ராமன். கடைசியில பரம பக்தனான ஆஞ்சநேயர் மேல அம்பு போட்டு அவரை ஹிம்சிச்சதும் இராகவ சிம்மம் கொதிச்சு எழுந்து அவனை ஒரே அம்புல சம்ஹாரம் பண்ணித்தாம். அப்பறம் யாதவ சிம்மம். குருக்ஷேத்தரத்தில் பீஷ்மர் உக்ரமா சண்டை போடறார். எதிர்த்தாப்ல யாராலையும் நிக்க முடியலை. கிருஷ்ணன் மேலேல்லாம் அம்பைப் பொழியறார். அவனுக்கே ரத்தமா கொட்றது. கடைசியா தன் பக்தன் பார்த்தன் மேலே கொல்றதுக்கு பீஷ்மர் அம்பு போட ஆரம்பிச்சதும், பகவான் பதறிப்போய்ட்டார். ஆயுதம் ஏந்த மாட்டேன்னு சொன்னவர் சக்கரத்தைத் தூக்கிண்டு பீஷ்மரைக் கொல்லக் கிளம்பிட்டார். அப்புறமா அர்ஜுனன் வந்து சமாதானம் பண்ணி அழைச்சுண்டு போனான். நர சிம்மம், இராகவ சிம்மம், யாதவ சிம்மம்ன்னு மூணு சிம்மமுமே பக்தனுக்கு எதாவது பாதகம் வந்துடுத்துன்னா பொருக்கமாட்டா”

“பாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” கேட்பவர் காதையும் காற்றையும் கிழித்துக்கொண்டு லோடேற்றிய லாரி சிம்மங்கள் மெயின் ரோடில் பறந்தன.

சிங்கபெருமாள் கோயில் சிக்னலுக்கு நிற்காத அடங்காப்பிடாரி பஸ்கள் போகவிட்டு, சாஸ்திரத்திற்கு அங்கு நின்ற போலீஸின் உதவிக்கரத்தை எதிர்பார்க்காமல் “ஈஸ்வரோ ரக்ஷிது” என்று தெய்வபலத்தில் ஜியெஸ்டி ரோடு எதிர்புறம் தாண்டி தாம்பரம் பக்கம் ஸ்டியரிங்கைத் திரும்பினேன்.

“நேரா ஆத்துக்காப்பா... “ என்ற சின்னவளின் கேள்விக்கு..

“ஊஹும்.. அடியவருக்கு அமுது படைத்த ஆண்டவனின் தலத்துக்கு.....” என்றேன்.

“எங்க?”

சிரித்தேன்......

(தொடரும்)

Monday, January 21, 2013

புத்தக ஜுரம்

”36வது புத்தகக் காட்சின்னா 36 தடவை வொய்யெம்ஸியேவுக்குப் போய் விழுந்து சேவிப்பீங்களா?” என்ற கேள்விக் கணை என் மீது விழுந்து முள்ளாய்த் தைத்த போது வருஷம் 16 என்கிற காவியத்தை 16 தடவை கவுண்ட்டரில் டிக்கெட் எடுத்து தியேட்டரில் கைகொட்டி ரசித்துச் சாதனை செய்த ஆதிகால நண்பனொருவன் ஞாபகத்துக்கு வந்து காதுகிழிய விசில் அடித்தான். குபுக்கென்று சிரிப்பு வந்தது. புன்னகையே பதிலாக உதிர்த்துவிட்டு கொண்ட குறிக்கோளிலிருந்து விலகாமல் நந்தனம் நோக்கி சிங்கிலாகப் பயணப்பட்டேன்.

போன முறைக்கு இந்த முறை ”உள்ளே” “வெளியே”வை சௌகர்யமாக மாற்றியிருந்தார்கள். பல கார்கள் வீல் கடுக்க வரிசையில் காத்திருந்தது. உள்ளே அவசரகதியில் நுழைந்து கொண்டிருந்த கார்களை ஓரங்கட்டி எப்போதும் போல ஒன் வேயில் வெளியே வந்தார் சென்னையின் அதிகாரப்பூர்வ அடையாளமான ஒரு ஆட்டோக்கார். வழக்கம்போல ட்ராஃபிக் போலீஸ்கார் அவரிடம் அன்பைப் பொழிந்து வெளியே வர வழி ஏற்படுத்திக்கொடுத்தார். ஒலிம்பிக் போட்டியின் தடையோட்டத்தில் தங்க மெடல் கெலித்த சந்தோஷத்தில் திளைத்தார் அந்தத் திருவாளர் ஆட்டோ.

இரண்டு சக்கரங்கள், நான்கு சக்கரங்கள், ஜலம் சிந்தும் மெட்ரோ வாட்டர் லாரி இவற்றின் ஊடே புகுந்து வீரதீரத்துடன் நடைபோடும் இருகாலர்கள் என்று புழுதிப் புயலில் குருக்ஷேத்திரம் போல காட்சியளித்தது புத்தகக் காட்சி. ஒரு பெருமூச்சிக்கிடையே போர் வீரனாய் கொட்டகைக்குள் நுழைந்தேன். நண்பர் காசிநாதன் ஒரு பழுத்த அரசியல் எழுத்தாளர். தமிழக அரசியல் களத்தின் ஒவ்வொரு மூலையும் அவர் மூளைக்குள்ளே ஆழமாய்ப் படிந்திருக்கின்றன. அவரும் இந்த ஜோதியில் என்னுடன் கலந்துகொண்டார். போனதடவை விட்ட தலைப்புகளை இந்த முறை கவரலாம் என்று நுழைந்தால் ஒரே உஷ்ணம்.

ஒட்டுமொத்த சென்னையே புத்தக ஜுரத்தில் நடமாடுவது போலிருந்தது அந்தக் கூடாரம். எல்லாக் கடையிலும் கல்லாப்பெட்டிக்குப் பக்கத்தில் பிள்ளையார் படம் போல பொன்னியின் செல்வன் வைத்திருந்தார்கள். கம்பராமாயண இஸ்மாயிலையும் சிலம்புச் செல்வர் ம.பொ.சியையும் குறிவைத்து என்னுடைய புத்தகத் தேடல் தொடர்ந்தது. ஏறும் கடையெங்கும் இஸ்மாயிலையும் ம.பொ.சியையும் விசாரித்தேன். காணவில்லை. பூங்கொடி பதிப்பகத்தில் ம.பொ.சி “சிலப்பதிகாரத் திறனாய்வு”ஆக கிடைத்தார். கடைசிவரை இஸ்மாயில் கிடைக்கவில்லை. மொபைல் தொலைத்த பெண்மணி, கிருபாகரனைத் தொலைத்த மல்லிகா என்று தொடர்ந்து ஸ்பீக்கர் அறிவிப்பு அலறியது. அவரிடம் மு.மு. இஸ்மாயிலைக் கண்டுபிடித்துத் தரச்சொல்லலாமா என்று நினைத்தேன்.

என்னுடைய தேடுதல் லிஸ்ட் விளம்பர காம்ப்ளான் பாய் போல காட்சிக்கு காட்சி புஷ்டியாக வளர்கிறது. எம்.வி.வெங்கட்ராமின் காதுகளை இரண்டு புத்தகக்காட்சிகளாக தேடுகிறேன். ஏ.கே.செட்டியாரின் தமிழ்நாடு பயணக்கட்டுரைகளும் எங்கோ ஒளிந்திருக்கிறது. இந்த வரிசையில் இப்போது ம.பொ.சி, மு.மு.இஸ்மாயில்.

நற்றிணை பதிப்பகத்தார் சுத்தமாகக் கடை விரித்திருந்தனர். நேர்த்தியாக அச்சிட்ட புத்தகங்கள். முக்கால்வாசி புத்தங்களின் கற்பைக் காப்பாற்ற லாமினேட் செய்து வைத்திருந்தார்கள். பிரபஞ்சனின் “மயிலிறகு குட்டி போட்டது”வை அதே கற்போடு வாங்கினேன். ஐந்திணையார் தி.ஜாவை குத்தகைக்கு எடுத்தவர்கள். “அம்மா வந்தாள்” ஒன்று வாங்கிக்கொண்டேன். பை கூடக் கொடுக்க திராணியற்ற ஒரு பஞ்சம் விரித்தாடும் கடையில் திராவிடக் கருத்தியலை முன் வைப்பவர் என்று புகழாரம் சூட்டப்படும் தொ.பரமசிவனின் “விடுபூக்கள்” எடுத்துக்கொண்டேன். பாப்கார்னை வழியெங்கும் வாரியிறைத்துக்கொண்டே போன அந்த ஹிப்பிக்கு நோக்கம் புத்தகம் வாங்குவது என்று யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கிழக்கில் இரா.முருகனின் விஸ்வரூபத்தைக் கருநீலத்தில் கண்ணைப் பறிக்கக் கண்டேன். எடுத்தேன். இலக்கணச் சுத்தமாக எழுதுவதற்கும் ஈஸியாவும் ஜாலியாவும் படிப்பதற்கும் இலவசக் கொத்தனார் எழுதிய ”ஜாலியா தமிழ் இலக்கணம்” பைக்குள் நுழைந்துகொண்டது. கலைஞரின் தமிழுக்கு என்றும் தலைவணங்குவேன். அவருடைய “தொல்காப்பியப் பூங்கா”விற்குள் நுழையவேண்டுமென்பது நெடுநாளைய அவா. நுழைந்து அதையும் கொண்டேன்.

எனக்குப் பரிச்சயமில்லாத எஸ்.வி.வி, அல்லயன்ஸில் ”ஹாஸ்யச் சக்கரவர்த்தி” என்று ”வித்தின் டபுள் கோட்ஸு”க்கு கீழே எஸ்.வி.வி என்று எழுதி “புது மாட்டுப் பெண்”ணாகக் கிடைத்தார். எதிர் அலமாரியில் குன்ஸாகப் புரட்டிய ஒரு புத்தகத்தின் பக்கத்திலிருந்த “பிரயோஜனங்களை விரும்புகிறவர்களுக்குப் பிரயோஜனங்களைக் கொடுத்துத் தான் எட்ட நிற்கிறானாம் பகவான்” என்ற ஒற்றை வரியில் முன்னட்டையைப் புரட்டினால் அது பி.ஸ்ரீயின் ”திவ்யப் பிரபந்த ஸாரம்”. என் வசமானது. பில்போடுமிடத்தில் எனக்கு முன்னால் தலை வெளுத்த ஒருவர் ஒரு டஜன் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்து ஸ்தூபியாய் அடுக்கி கல்லா பெண்ணிற்கு பில் போடும் இன்ப வேதனை அளித்தார். எல்லாம் ரா.கி மற்றும் அநுத்தமா எழுதிய கதைப் புத்தகங்கள். என் முறைக்குக் காத்திருந்து வாங்கி வந்தேன்.

மீண்டுமொருமுறை உயிர்மைக்கு ஒரு விஸிட். அந்தக் உள்ளங்கையில் அடங்கும் சுஜாதா புத்தகங்கள் என்னை வசீகரித்தன. “மனைவி கிடைத்தாள்” “கை” “விழுந்த நட்சத்திரம்” என்று மூன்று கதைகள் எடுத்துக்கொண்டேன். ”சுஜாதா புத்தகம் வாங்காமல் வெளியேறும் தமிழ் வாசகனும் இடையூறில்லாமல் ஓரத்தில் வண்டி பார்க் செய்யாத ஓட்டியும் புக்ஃபேர் மைதானத்தில் மன்னிக்கப்படுவதேயில்லை” என்று வாத்தியார் பக்தியில் பரவசமாக மனதிற்குள் சொல்லிக்கொண்டே இன்ச்சிங் செய்தேன்.

வரும் வழியில் தாகத்தில் தவித்தபோது நீல்கிரீஸிலிறங்கி டயட் கோக்கால் தொண்டையை நனைத்துக்கொண்டேன். பக்கத்து இருக்கையில் புத்தக தாகத்தில் நான் வாங்கிய நூல்கள் அனைத்தும் பைக்குள்ளிருந்து ஆவலாய் புத்தியை நிரப்ப எட்டிப் பார்ப்பதுபோலிருந்தது.


தொடர்புடைய சுட்டி: அன்பே வா..... அருகே வா.....

Wednesday, January 16, 2013

அன்பே வா.... அருகே வா....


ரெண்டு ஃபர்லாங் தூரம் கடந்து “வண்டியை அங்க போடு” என்கிற மதராஸ் பாஷை திசைக் காட்ட எனது சேப்பாயியை நிறுத்திவிட்டு 36வது புத்தகக் காட்சிக்குள் ஒரு காதலியைப் பார்க்கப் போவது போல இன்ப அதிர்வுடன் நுழைந்தேன். என் பாரியாள் மற்றும் ஒரு பெரிய லிஸ்ட்டோடு களம் புகுந்த என் செல்வங்கள் இரண்டோடும் காலடியெடுத்து உள்ளே வைத்ததும் புத்தகங்களின் மானசீகக் குரல் கோரஸாக “அன்பே வா.. அருகே வா...” என்று ப்ரியமுடன் பாடி அழைத்தது. வெளியே ”உள்ளகரத்திலிருந்து தியாகராஜன் உடனே பப்பாசி அலுவலகத்து வரவும்.” என்று பபாசியின் ப்பை இரண்டு மாத்திரை அளவுக்கு அழுத்தி கூட்டத்தில் தொலைந்த யாருக்கோ குரல் விட்டுக்கொண்டிருந்தார்கள்.

எடுத்தவுடன் கண்ணில்பட்டார் கண்ணதாசன். அப்பதிப்பகத்தில் புரட்டி முகர்ந்து பார்க்க முடியாதபடி லாமினேட் செய்யப்பட்ட வனவாசத்தை எடுத்துக்கொண்டேன். “எல்லாத்தைப் பத்தியும் எழுதியிருக்காரு” என்று நிறைய பேர் ஏற்கனவே பிரஸ்தாபித்திருந்தார்கள். என் பின்னாலேயே அந்தப் புஸ்தகத்தை பில்போடுபவரிடம் கொண்டு வந்து மூக்குக்கண்ணாடியணிந்த மாமியொருவர் “இது எதப்பத்தி?” என்று விசாரித்து நுணுக்கமாக மேலும் ரெண்டு கேள்வி கேட்டார். அந்தக் கல்லாப்பெட்டிப் பையன் “வாங்கினா வாங்கு” பார்வை பார்த்தான். அம்மாமி பணிந்து ஏதோ ஒரு ”ஏணிப்படிகள்” என்று தலைப்பிட்ட ஒரு வாழ்வூக்கப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒதுங்கினார்.

அடுத்த ஸ்டாலில் Mark Twainனின் The Adventures of Tom Sawyer என் பெரியவள் எடுக்க ANA Junior Classics என்றொரு அற்புதமான புத்தகம் என் மனைவியார் தேர்ந்தெடுத்தார். சிறார்கள் படிப்பதற்கு தோதாக H.G. Wells இன் Time Machineல் ஆரம்பித்து Gullivers Travels, The Prince and The Pauper, Kidnapped, Treasure Island, The Jungle Book என்று கீர்த்தி பெற்ற இருபது புத்தகங்களின் 30 பக்க சுருக்க வெர்ஷன் வெளியிட்டிருந்தார்கள். தலகாணி சைஸ் புத்தகங்களை பல நாட்கள் காது மடக்கிப் புரட்டும் என் போன்ற சோம்பேறி பெரியவர்களுக்கும் இந்த கலெக்ஷன் ஒரு வரப்பிரசாதம். அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

இருபுறமும் சுற்றியலைந்த கண்ணுக்கு அடுத்தது தென்பட்டது United Writers ஸ்டால். ஹாலோ ப்ளாக் சைஸ் புத்தகங்கள் சுவர் போல அடுக்கியிருந்தார்கள். சென்ற முறை இங்கே வாங்கிய ரஸிகன் கதைகள்(ரகுநாதன்) ஒரு பொக்கிஷம். ஈர்த்தது. ஜெயமோகனின் விஷ்ணுபுரங்களினால் மதிலமைத்திருந்ததில் எக்கி “கொற்றவை”யை எடுத்துக்கொண்டேன். எனக்குத் தெரிந்த இலக்கிய வட்டாரத்தில் பலர் சிலாகித்திருந்தனர். கடைசியிலிருந்து விசிறியாகப் பக்கங்களை திருப்பி முதல் பக்கத்துக்கு வந்தால் கொற்றவை:காப்பியம்:ஜெயமோகன் என்றிருந்தது.

திரும்பவும் குழந்தைகளுக்கான ஒரு ஸ்டால். SCHOLASTIC. ஏற்கனவே அவர்களது பள்ளியில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கூடாரம் கட்டி அப்பன்மார்களின் பர்ஸை மொட்டையாக்குவார்கள். சந்தோஷ மொட்டை. இங்கேயும் குடியிருந்தார்கள். நான்கு புத்தகங்களை அள்ளிக்கொண்டார்கள். பில் போடுமிடத்தில் ஒரு அட்டையைக் கொடுத்து சுரண்டிப் பார்க்கச் சொன்னார்கள். மூத்தவளுக்கு ஆட்டோகிராஃப் புத்தகமும் இளையவளுக்கு ஃப்ரிஸ்பீயும் பரிசாகக் கிடைத்தது. வாழ்க ஸ்காலஸ்டிக். வளர்க அவர்தம் தொண்டு.

கிழக்கில் கொஞ்சம் நேரம் கடத்தினேன். சர்வர் சுந்தரம் நாகேஷ் அட்டை கவனத்தை ஈர்க்க பாம்பின் கண் வாங்கினேன். முறுக்கு மீசையுடன் பின்னட்டையில் கையைக் கட்டிக்கொண்டு ஆசிரியர் தியடோர் பாஸ்கரன். சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு என்று ஏற்கனவே இணையத்தில் ட்ரைலர் ஓட்டப்பட்ட சரஸ்வதி:ஒரு நதியின் மறைவு வாங்கியிருக்கிறேன். தொன்மமான நதி தொலைந்து போன வரலாறு. ரிஷிமூலத்தையல்லாமல் நதிமூலத்தை தேடி.

வாத்தியார் இல்லாத புத்தகக் காட்சியா? இன்னமும் ஆளுயரப் பதாகைகளில் கையில் புத்தகத்தைப் பிரித்து நம்மைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார் மங்காப் புகழ் பெற்ற சுஜாதா. ஆட்டக்காரன், இளமையில் கொல், ஓரிரவில் ஒரு ரயிலில் என்று மூன்றை எனதாக்கிக்கொண்டேன். வாழும் இலக்கியகர்த்தாவான அசோகமித்திரனின் வாழ்வாங்கு வாழும் தண்ணீர் மற்றும் மானசரோவர் என்ற இரண்டை எடுத்து அக்குளில் அடக்கிக்கொண்டேன். ஏற்கனவே புத்தகம் வாங்கிய எந்தக் கடையிலும் காது வைத்த பை கொடுக்கவில்லை. ஏ4 கவரில் போட்டு பாலீதின் ஒழிப்பை கடைபிடித்தார்கள். கிழக்கில் நான் வாங்கிய இந்த ஏழு புத்தகங்கள் மட்டும் நுழையும் படியாக ஒரு காதுப்பை கொடுக்கும்போது “இன்னொரு பை கிடைக்குமா?” என்று வெட்கத்தை விட்டு கேட்டேன். முகத்தைப் பார்த்தால் தயவுதாட்சண்யம் பார்க்கவேண்டும் என்று லாப்டாப்பை விட்டு பார்வையைத் திருப்பாமல் “ஊஹூம்” என்ற கறார் பதில் வந்தது. வீடு கட்ட செங்கல் சுமக்கும் தொழிலாளி போல அடுக்கிக்கொண்டு மீண்டும் இலவசப் பை கேட்காமல் அமுக்கிக்கொண்டு நகர்ந்தேன்.

விகடன் பிரசுரம் ரங்கநாதன் தெரு போல ஜேஜேவென்று நிறைந்திருந்தது. நிறைய புத்தகங்கள் பல கை பட்டு மிரண்டிருந்தன. விகடன் சுஜாதா மலர் என்ற மலர்க்கென்று பல பிரசுரங்கள் நிர்ணயித்த சைஸ் புத்தகம் தட்டுப்பட்டது. கையகப்படுத்திக் கொண்டேன். கொஞ்சம் நகர்ந்ததில் தொ.பரமசிவனின் சமயங்களின் அரசியல் கிடைத்தது. ஏற்கனவே தொ.பவின் மூன்று புத்தகங்கள் படித்திருக்கிறேன். படித்ததையும் மனதில் பட்டதையும் அப்படியே ஆவணப்படுத்தும் வழக்கம் கொண்டவர். சிலருக்குப் படிக்கக் கொஞ்சம் சுரீர்ரென்று இருக்கலாம். நிறைய ஆய்வுகளை மேற்கோள் காட்டி எழுதும் வழக்கத்தால் ஜூஸ் நிறையக் கிடைக்கும்.

விகடனில் இரண்டே புத்தகங்கள் வாங்கினாலும் திருமண் இட்டிருந்தவரிடம் கண்களில் தயை பொங்க “சார்! அந்தப் பெரிய பை கொஞ்சம் தர்றீங்களா?”. சுமை வெட்கமறியாது. “எவ்ளோவுக்கு வாங்கியிருக்கார்?” என்று பக்கத்திலிருந்தவரிடம் ஆடிட் செய்தார். “224". என்னை நிமிர்ந்து பார்த்தார். இரண்டு பெண் பிள்ளைகள் என் பாரத்தில் பாதி சுமந்த என் சம்சாரம் என்று புடை சூழ வாசிக்கும் தாகத்தில் நின்றிருந்த எங்கள் குடும்பத்தைக் கண்ணுற்று இரங்கினார். “இந்தாங்க” என்று பெரியமனது வைத்து பெரியபை கொடையளித்தார். என்னை விட என் மனைவியிடமிருந்து பெரியதாக ஒரு தேங்க்ஸ் வந்தது.

இரண்டு வீதிகள் சுற்றினோம். முதல் வீதியின் மூலையில் இரண்டு தாத்தாக்கள் உட்கார்ந்திருந்த கடைக்குள் சென்றேன். திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட். வெளியே ப்ளாட்பாரத்தில் குவிக்கப்பட்டிருந்த புத்தகங்கள் கூட அப்பழுக்கில்லாமல் இருந்தது. இங்கே அடுக்கியிருந்த புத்தகங்களில் பல மழையில் நனைந்து துவட்டிக்கொள்ளாமல் இருப்பது போலிருந்தது. கல்லாவில் இருவரும் முதியவர்கள். குப்பையில் மாணிக்கம் கிடைக்கும் என்ற நப்பாசையில் தேடினேன். கழக வெளியீடாக யாழ்பாணத்து ந.சி. கந்தையா பிள்ளையவர்கள் எழுதிய தமிழகம் கிடைத்தது. பத்து சதவிகித கழிவு விலையில் டிஸ்கௌண்ட்டை floor(discount) ஃபார்முலாவில் போட்டு 120 ரூபாய் புத்தகத்து 12 ரூபாய்க்கு பதிலாக பத்து ரூபாய் கழித்து 110 கேட்டார்கள். பாவம். சில்லரை எடுக்க சிரமப்படுவார்கள். பதில் பேசாமல் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினேன்.

அதற்கடுத்து பாரி நிலையம் என்று நினைக்கிறேன். அவர்களிடத்தில் இலக்கிய தலைப்புகள் போல மினுமினுக்க உள்ளே நுழைந்தேன். இந்த நேரத்தில் பசங்களுக்கு பசித்தது. கால் வலித்தது. அவர்களது வருகை ஈடேரிவிட்டது. ”அப்பா! போலாம்ப்பா. பசிக்குது”. இந்த அழைப்பு வருவதற்குள் நிறைய வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆரம்பமாகிவிட்டது. தமிழகத்தில் பாரதம்: வரலாறு - கதையாடல் என்ற புத்தகத்தின் அட்டைப் படத்துக்கே அடிமையாகி வாங்கினேன். புத்தகம் முழுக்க விரவிக்கிடந்தன ஆய்வுக்கட்டுரைகள். நச்சரிப்பு தாளமுடியாமல் “ஒரு இடத்தில் உட்கார்ந்துகொள்ளுங்கள் அப்பா ஒரு சின்ன ரவுண்ட் அடித்துவிட்டு வருகிறேன்” என்று வெயில் தாழ உள்ளே வந்து புத்தகம் தேடிக்கொண்டிருக்கும் தலை சமுத்திரத்திற்குள் சங்கமமானேன்.

ந்யூபுக்லேண்ட்ஸில் சுப்புடு தர்பார் என்று இரண்டு பாக புக் வெளியிட்டிருந்தார்கள். இணையத்திலேயே அகப்பட்டது. நேரே வாங்கிக்கொள்ளலாம் என்று அவர்கள் ஸ்டாலுக்குள் நுழைந்தால் “எல்லாப் புத்தகத்தையும் இங்கே அடுக்க முடியாது. டிநகர்லதான் இருக்கும்” என்று என்னை அறுத்துவிட்டார். ஓடிவந்துவிட்டேன். கர்நாடக சங்கீதத்தின் பூர்வ ஜென்ம வாசனை எனக்கு இருப்பதால் ராகம் தாளமெல்லாம் தெரியாமலும் நிறைய கச்சேரி கேட்கிறேன். வெங்கடசுப்புடு அடுத்து எங்கே நுழைவது என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அல்லயன்ஸ் கண்ணில் பட்டது. வாதூலனின் “கர்நாடக சங்கீதத்தை ரஸியிங்கள்” என்ற புத்தகம் இரண்டு கிராப் ஐந்து குடுமி வைத்த ஸங்கீதக்காரர்கள் அலங்கரிக்கும் அட்டைப் படத்தோடு ”என்னை எடுத்து உன் சங்கீத தாகத்தை தணித்துக்கொள்” என்று கூப்பிட்டது. அள்ளிக்கொண்டேன்.

காலச்சுவடிலும் உயிர்மையிலும் நிறைய நேரம் ஒதுக்கமுடியவில்லை. வெளியிலிருந்து “வாப்பா...வாப்பா..” என்று கூப்பிட்டு என்னை முகமதிய தோழர்களின் அப்பா ஆக்கியிருந்தார்கள். காலச்சுவடில் பள்ளிகொண்டபுரம் வாங்கிக்கொண்டேன். உயிர்மையில் சுஜாதாவின் உள்ளங்கையகல குறுநாவல்கள் பதிப்பித்திருந்தார்கள். மனுஷ்யபுத்திரனும் எஸ்ராவும் வாசலில் உட்கார்ந்து விரலுக்கு சுளுக்கு வர ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஜன்னல் மலர், காகிதச் சங்கிலிகள், யவனிகா என்று மீண்டும் மூன்று சுஜாதா. லா.ச.ராவின் முதல் தொகுதிக் கதைகளில் ஏற்கனவே ருசிகண்டிருந்ததால் இரண்டாம் தொகுதி சிறுகதைகள் எடுத்துக்கொண்டிருக்கும் போது “அப்பாஆஆஆஆ.. எங்கேயிருக்கே” என்று புத்தகக்காட்சியே இடிந்து விழுமளவிற்கு அலைபேசியில் தொலைபேசினாள் அன்பு மகள்.

வாங்கியது வாங்கியபடியிருக்க அப்படியே வெளியேறினேன். ஸ்வீட் கார்ன் வாங்கிக்கொண்டு பம்பர் டு பம்பர் கார்கள் வீட்டுக்குச் செல்லும் வரிசையில் நின்று வந்துசேர்ந்தேன். கால் வைக்காத பதிப்பகங்கள் இன்னமும் இருக்கின்றபடியாலும் வாங்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த லிஸ்டில் சிலவைகள் விடுபட்டுப்போனதாலும் இன்னொரு தடவை போகலாம் என்று சித்தம். பார்க்கலாம். சரஸ்வதியும் சங்கீதாவும் விட்ட வழி.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails