Monday, September 19, 2016

கணபதி முனி - பாகம் 46 : ஸ்ரீஅன்னையுடன் தியானம்

மாநாடு பண்டிதர்களால் நிரம்பியிருந்தது. வசிஷ்ட கணபதி முனியையும் மாளவியாவையும் பார்த்த பண்டிதர்களுக்கு ஆச்சரியம். இக்கொள்கைக்கு எதிரான இருவரும் இந்த மா நாட்டுப் பந்தலில் அமர்ந்திருப்பது குழப்பமாக இருந்தது. ஆனால் இருவரையும் வெளியேறச் சொல்லவும் எவர்க்கும் தைரியம் இல்லை. இவர்களை எப்படி சுமூகமாக அனுப்பவது என்று ஏற்பாட்டாளர்கள் தலையைப் பிய்த்துக்கொள்ளும் வேளையில் இருவரும் நெடு நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால் சந்தோஷமாக அளவளாவிக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவர்களின் தவிப்பைப் புரிந்துகொண்ட இருவரும் மாநாட்டிலிருந்து அமைதியாக வெளியே வந்தார்கள்.
பின்னர் மாளவியா ஹிந்து ஹை ஸ்கூலில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தார். முக்கியஸ்தர்கள் சிலரையும் அந்த வர்ணாஷ்ரம பண்டிதர்களையும் மேற்படி கூட்டத்திற்கு அழைத்தார். மாளவியாதான் தலைமை தாங்கினார். கணபதி முனி தீண்டாமை விரும்பத்தாக ஒன்று என்பதைப் பற்றி விஸ்தாரமாக பேசினார். நன்றாக நடந்தது.
ஆனால் கணபதி முனி வர்ணாஸ்ரம பண்டிதர்கள் திருந்த மாட்டார்கள் என்றும் இது கால விரயமே என்றும் நொந்துகொண்டார். இவர்களை சீர்திருத்த நினைப்பது வெட்டிச் செயல். காலமே இவர்களது காரணமற்ற போக்கை மாற்ற வேண்டும் என்று முடித்துக்கொண்டார்.
இந்திராணி சப்தஸதி என்று தானெழுதிய நூலை திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பகவான் ஸ்ரீரமணர் உபதேச சாரம் என்ற தனது நூலை சம்ஸ்க்ருதத்தில் மொழிமாற்றம் செய்த பிரதியொன்றை கணபதி முனிக்கு அனுப்பி வைத்தார். சுருக்நறுக்கென்று கச்சிதமாகவும், எளிமையாகவும், எளிதில் புரியும்படியாவும் கவித்துவமான அந்த ஆக்கத்தைப் பார்த்து ஸ்ரீரமணரின் ஸ்லோகங்களில் பூரித்துப்போனார்.
நாயனா அன்று மாலையே உபதேச சாரத்திற்கு உரையெழுதி ஸ்ரீரமணரின் காலடியில் சமர்ப்பித்தார்.
சுதான்வா தனது வக்கீல் தொழிலை விட்டு பாண்டிச்சேரியில் குடியேறியிருந்தார். ஸ்ரீ அரவிந்தர் நாயனாவைப் பார்க்க விரும்புவதாக செய்தி அனுப்பினார். 1928ம் வருடம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் புதுச்சேரிக்கு விஜயம் செய்வதாக கணபதி பதில் எழுதினார்.
**
புதுச்சேரியில் சுதான்வா இல்லத்தில் நாயனா தங்கியிருந்தார். ஆகஸ்ட்டு பதினைந்து ஸ்ரீ அரவிந்த ஜெயந்தி. பல்வேறு இடங்களிலிருந்து அதில் பங்குகொள்வதற்காக அவரது சீடர்களும் பக்தர்களும் புதுச்சேரியில் குவிந்த வண்ணம் இருந்தனர். சில வருடங்களுக்கு முன்னர் நாயனாவுக்கு ஸ்ரீ அரவிந்தர் நடத்தி வந்த ”ஆர்யா” என்கிற சஞ்சிகையைப் படிக்கும்படி நேர்ந்தது. அதைப் படித்ததிலிருந்து அவர்மீது ஒரு தோழமை உணர்வு மேலோங்கியது. அவரைப் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது.
எதிரெதிரே இருவரும் வெறுமனே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். பேச்சுவார்த்தை எதுவுமில்லை. மௌனம். அமைதி ததும்பும் இருவருடைய முகத்திலும் ஞானதீபம் சுடர்விட்டது. எதுவும் பேசாமலேயே எழுந்த நாயனா ஸ்ரீஅன்னையையும் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பிற்கு மூலகாரணம் ஒன்று இருந்தது. சில காலங்களுக்கு முன்னர் ஸ்ரீஅரவிந்தரைத் தரிசித்து ஆசி பெற்ற சுதான்வா நாயனாவின் உமா சகஸ்ரத்தின் கையெழுத்துப் பிரதியை பரிசளித்திருந்தார். அதைப் படித்துப் பார்த்த ஸ்ரீஅரவிந்தர் “சுதான்வா! இதை எழுதியவரை நான் பார்க்கவேண்டுமே!!” என்று தனது ஆவலைத் தெரிவித்திருந்தார். இதுவே இந்த சந்திப்பின் அடிநாதம்.
கணபதி முனி ஸ்ரீ அரவிந்தரையும் ஸ்ரீஅன்னையையும் சந்தித்து மரியாதை செலுத்தினார். சுதான்வாவும் கணபதிமுனியும் ஸ்ரீஅன்னை எதிரில் அமர்ந்திருந்தனர்.
ஸ்ரீஅன்னை புன்னகையுடன் சுதான்வாவை நோக்கினார்.
“சுதான்வா... கணபதியின் வருகையினால் அனைத்து தீய சக்திகளும் ஓடிவிட்டது” இந்த வார்த்தைகளைக் கேட்ட சுதான்வாவுக்கு பேராச்சரியம். ஸ்ரீஅரவிந்தரைச் சுற்றியிருக்கும் ஞானஒளி பற்றி கணபதி முனி கூறியதையைப் போலவே ஸ்ரீஅன்னையும் நாயனாவைச் சுற்றியிருக்கும் ஞானச்சுடர் பற்றிக் குறிப்பிட்டார்.
அடுத்த நாள் ஸ்ரீஅன்னை கணபதி முனியைக் கூட்டு தியானத்திற்கு அழைத்தார். ஸ்ரீஅரவிந்தரை தரிசிக்கும் போது ஸ்ரீஅன்னையிடம் நேரம் செலவிடமுடியாததால் உடனே ஒத்துக்கொண்டார். ஸ்ரீஅன்னையின் பக்தர் ஒருவர் கணபதி முனியை அவரது அறைக்கு அழைத்துச் சென்றார். இரண்டு இருக்கைகள் எதிரெதிராக இருந்தன. ஒன்று ஸ்ரீஅன்னைக்கு எதிரில் இன்னொன்று நாயனாவுக்கு. இருவரும் நாற்பத்தைந்து நிமிடங்கள் தியானத்திலிருந்தனர்.
ஸ்ரீஅன்னை கண்களை மூடி கையிரண்டையும் அகல விரித்து தியானித்தார். ஆனால் கணபதி முனி கண்களைத் திறந்து கொண்டே அசையாது அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். ஸ்ரீஅன்னைக்கு அளவில்லாத ஆச்சரியம்.
“இவரே சத்தியமான யோகி. தியானிக்க ஆரம்பித்த சில கணங்களிலேயே விழி திறந்து அகத்தில் நுழைந்துவிட்டார். இதுவரையில் இதுபோன்ற ஆன்மிக வித்தையில் ஈடுபடும் ஒருவரை நான் பார்த்ததில்லை. நாற்பத்தைந்து நிமிடங்களை இலகுவாக தியானத்தில் மூழ்கிக் கடந்தார்.”
என்ற ஸ்ரீஅன்னையின் பாராட்டுதல்களோடு ஒரு மாதம் புதுச்சேரியில் தங்கியிருந்தார். அவருடன் சுதான்வா, அதாம், கபாலி மற்றும் கோதண்டராமன் ஆகியோரும் அவருடன் இருந்தார்கள். கோதண்டராமனின் வேண்டுதலுக்கு இணங்க ஸ்ரீஅரவிந்தரைப் போற்றி நூற்றியெட்டு சூத்திரங்கள் அடங்கிய “தத்வனுசாஸனம்” எழுதினார்.
திருவண்ணாமலைக்கு நாயனா கிளம்பிய தினத்தன்று ஸ்ரீஅன்னை “ஸ்ரீஅரவிந்தரைச் சந்திப்பதற்கு தங்களுக்கு எதுவும் அனுமதி தேவையில்லை. தங்கள் விருப்பப்படி இங்கே வரலாம்” என்று அன்புக் கட்டளையிட்டார்.
**
சிஷ்யர்களுக்கு சிரமமாக இருந்ததினால் மாமரக் குகையிலிருப்பதை தவிர்த்தார் கணபதி முனி. ரிக் வேதத்திலிருந்து இந்திரனின் சகஸ்ரநாமாக்களைத் தேர்ந்தெடுத்து நூற்றியெட்டு ஸ்லோகங்களில் பொதிந்து தந்தருளினார். அடைமொழிகளில்லாமல் எழுதப்பட்ட இந்த ஸ்லோகங்களில் கணபதி முனியின் சம்ஸ்க்ருத இலக்கண அறிவும் இலக்கிய செழிப்பும் காணப்பட்டது. இது “இந்திர” எறு ஆரம்பித்து “ஸ்வாராட்” என்று பூர்த்தியாயிற்று.
பகவான் ஸ்ரீரமணர் இதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார். “அசக்ரய ஸ்வதயா வர்த்தமானா, ஆநீலா ஸுபர்னா, கிஜாஹ்...” போன்ற நாமங்களுக்க்கு அவருடைய சிஷ்யர்கள் அளித்த விளக்கங்களில் மகிழ்ந்தார்.
இவ்வேளையில் அதாமிற்கு ஸ்ரீஅரவிந்த ஆஸ்ரமத்தில் சேர்ந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் பிறந்தது. நாயனாவிடம் பரிந்துரைச் சீட்டு கேட்டார். ஸ்ரீஅரவிந்த ஆஸ்ரமத்தில் நிரந்தரமாகச் சேர்வது எளிதல்ல. ஆனால் கணபதியின் பரிந்துரைச் சீட்டிற்கு மதிப்பு அதிகம் இருந்தது. அதாம் ஆஸ்ரமத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
சேலத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் பி.வி நரசிம்ம சாஸ்திரி திருவண்ணாமலைக்கு ஸ்ரீரமணரின் வாழ்க்கைச் சரித்திரம் எழுதும் நோக்கத்தோடு வந்திறங்கினார். ஸ்ரீரமணரின் வாழ்க்கைச் சம்பவங்களை யாரிடம் கேட்பது? பிரதான சீடர்களில் ஒருவர் கணபதி முனி. அவரிடம்.....
தொடரும்....

கணபதி முனி - பாகம் 45 : மாயமான சன்னியாசி

விசாலாக்ஷி அனுஷ்டிக்கும் "ஸ்ரீ வித்யா"வின் எட்டாம் நாள். நாயனாவும் ஏனைய குழுமியிருந்த பக்தர்களும் கலங்கினார்கள். விசாலாக்ஷி இந்த முறை தனது உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு இத்தோடு நிறுத்துவார் என்று எதிர்பார்த்தார்கள். நாயனா நெருங்கிய போது...
"நான் விரும்பியதை அடைந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். நீங்கள் பரம சந்தோஷமடைவீர்கள்" என்று சிரித்துக்கொண்டே நாயனாவை நமஸ்கரித்தார். அவருடைய உடல் நிலைமையை உத்தேசித்து அவரது பக்தர்கள் வரிசை வரிசையாக வந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார்கள். அவர் குரு பத்னி. அவருடன் சேர்ந்து தவமியற்றிய தபசகி. இருவருடைய ஆன்மிக எண்ணமும் உருவேறிய ஒன்றே. பக்தர்களிடம் அவர் காட்டும் அன்னையின் பரிவும் வாத்சல்யமும் அலாதி.
அவரது அமைதி ததும்பும் முக தரிசனமே அவரது பக்தர்கள் ஆன்மிக நிலையில் உச்சம் தொட வைத்தது. அவர்கள் விசாலாக்ஷியை அன்னபூரணி அம்மனான வழிபட்டார்கள். அவர் தனது வாழ்வின் மூலம் குடும்ப வாழ்க்கையில் உழன்றாலும் கணவனுக்கும் கடவுளுக்கும் சேர்த்து வழிபாடு செய்ய இயலும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்.
கணபதி முனியும் விசாலாக்ஷியும் புராதன காலத்து ரிஷிகளின் வாழ்வியல் முறையை வாழ்ந்து காட்டினார்கள். குடும்ப பந்தத்திலிருந்து விடுபடாமல், சமூகத்திலிருந்து விலகாமல் கடவுளை அடையும் வழியைக் காட்டினார்கள்.
விசாலாக்ஷிக்கு அப்போது வயது 45. 1926. ஜூலை மாதம் 26ம் தேதி. (ஆஷாட கிருஷ்ண த்வீதிய, தனிஷ்ட நக்ஷத்திரம்). பூதவுடலை விட்டு உயிர் பிரிந்தது. அவரது உயிர் பிரியும் போது ரமணாஸ்ரமத்தில் தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. ஸ்ரீரமணர் அதை ஒற்றிக்கொள்ள உள்ளங்கை நீட்டியபோது ஆரத்தி அனைந்தது. விளக்கு மறைந்தது.
**
விசாலாக்ஷியின் மறைவுக்குப் பிறகு நாயனா சன்னியாசியாகிவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஸ்ரீ ரமணர் கடைசி வரையில் நைஷ்டிக பிரம்மச்சாரியாக அரையில் வெறும் கௌபீணத்தோடு கடைசி வரையில் இருந்தார். நாயனாவும் பூணூலோடும் காதி ஆடைகளுடனும் அப்படியே வாழ்ந்தார். தெரிந்தவர்களுக்கு அவர் ஞானி. தெரியாதவர்களைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை.
விசாலாக்ஷி மேலுலகம் சென்ற பிறகு கணபதி முனிக்கும் உடம்பு படுத்தியது. மனைவியின் சமையலை மட்டுமே சாப்பிட்டு ஜீவனம் செய்தவர்க்கு அதனால் படுத்துகிறதோ என்று அவரது மகள் வஜ்ரேஸ்வரியும் மருமகள் ராஜேஸ்வரியும் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டார்கள். ஊஹும். பிரயோஜனமில்லாமல் அவரது உடல் நலம் குன்றத்தொடங்கியது.
ஒரு நாள் நாயனாவின் மருமகன் சோமயாஜுலு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அப்போது வேஷ்டியும் சட்டையுமாக ஒருவர் படியேறி...
" நாயனா இருக்கிறாரா?"
சோமயாஜுலு இவர் யார்? என்று யோசிக்க ஆரம்பித்த போது அவர் மீண்டும் தொடர்ந்தார்.
"இருந்தாரென்றால் கன்னியாக்குமரியிலிருந்து ஒரு சன்னியாசி வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்". முகத்தில் புன்னகை அரும்பியது. சோமயாஜுலுவுக்கும் சிரிப்பு வந்தது. கஷாயமில்லை, கையில் கமண்டலமில்லை சன்னியாசி என்று சொல்கிறாரே என்று சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார்.
திரும்பி வந்தால் அங்கே அந்த சன்னியாசியைக் காணவில்லை. ஆச்சரியமாக இருந்தது. நீண்ட தெருவின் இருமருங்கும் பார்த்தார். சன்னியாசி கண்ணில் தென்படவில்லை. கணபதி முனியிடம் அதைச் சொல்லலாம் என்று உள்ளே வந்தால் அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது.
உடல் முடியாமல் படுத்திருந்த கணபதி முனி எழுந்து உட்கார்ந்திருந்தார். சட்டென்று அவரது நோய் பறந்துபோயிருந்தது. நாயனா மீண்டும் சுறுசுறுப்படைந்தார்.
செகந்திராபாத் சென்றார். முழுமூச்சாக தனது எண்ணற்ற சிஷ்யர்களைச் சந்தித்தார். முன்னைவிட மும்முரமாக இயங்கினார். பல்வேறு கூட்டங்களில் பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசினார். வகைவகையான மனிதர்கள் கலந்துகொண்டார்கள். இலக்கியம், சமூக சீர்திருத்தம் ஆன்மிகம் என்று தங்கள் விருப்பத்திற்கேற்ப நடக்கும் சொற்பொழிவுகளில் மூழ்கினார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணதேவராயா ஆந்திர பாஷா நிலையம். ஹைதிராபாத்தின் பிரசித்திபெற்ற நூலகத்தின் வெள்ளி விழா விமரிசையாக நடைபெற்றது. அங்கே காவ்ய கண்ட கணபதி முனி ஸ்ரீரமணரின் அருளுரைகள் என்ற தலைப்பில் ஆற்றிய உரை வெகுசிறப்பாக அமைந்தது. வாழ்வின் பல அடுக்குகளில் உள்ளவர்களும் வெவ்வேறு மொழி பேசுபவர்களும் பகவான் ஸ்ரீ ரமணரைப் பற்றி அறிந்துகொள்ள இக்கூட்டம் உதவியது. இந்தப் பிரபல உரையானது ராஜிதோத்ஸவ சஞ்சிகா என்று 1926ம் வருடம் வெளியிடப்பட்ட இன்னூலக புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
பாக்யா ரெட்டொ என்பவர் முன்னணி ஹரிஜனத் தலைவர். அவரும் பால்கிஷன் ராவ் என்ற சமூக சீர்திருத்த இயக்க தலைவரும் பேராசிரியர் வீரபத்ருடுவுடன் சேர்ந்து பெரிய மாநாடு ஒன்றை நடத்தினார்கள். அதில் கணபதி முனி சிறப்புப் பேச்சாளர். குழுமிய தோழர்களுக்கு இன்ப அதிர்ச்சி. வேதிய முறை வாழ்வையும் சமூக விடுதலையையும் இணைத்துப் பேசி வெளுத்து வாங்கினார் கணபதி முனி. மாநாட்டில் சில பண்டிதர்கள் சில மூடப் பழக்கங்களை பொட்டில் அறைந்தது போல கணபதி முனி சாடியதை விரும்பவில்லை. ஆனால் அறிவுசார் பெரியவர்களும் சமூக சேவகர்களுக்கும் கணபதி முனியின் பேச்சு அமிர்தமாகவும் தெம்பூட்டும் விதமாகவும் அமைந்தது. அவர்களது ப்ரியத்தையும் நன்றியையும் காட்டும் விதமாக "முனி" என்ற பட்டத்தை வழங்கி மகிழந்தார்கள்.
சாதிகளைக் கடந்து எவ்வித பேதமுமில்லாமல் எவர் வேண்டுமானாலும் ஆன்மிக சாதனை செய்யலாம் என்ற அவரது பேச்சில் கவரப்பட்டு பலர் அவருக்கு சிஷ்யர்களாக சேர்ந்தார்கள். ஏழை, தனவந்தர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், அரசாங்க அலுவலர்கள் என்று வசிஷ்ட கணபதி முனியின் வீட்டில் தேனியாய் மொய்த்தார்கள். ஆசி வாங்கவும் தீட்சை பெறவும் முண்டியடித்தார்கள்.
ஓய்வொழிச்சலில்லாமல் ஹைதராபாத்திலும் செகந்திராபாத்திலும் சேவையில் ஈடுபட்டு திருவண்ணாமலை திரும்பினார். நேரே மாமரக் குகையில் சென்று அமர்ந்தார். ஆறு மாதங்கள் தடங்கலின்றி தவமியற்றினார். அப்போது சென்னையிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.
சென்னையின் வர்ணாஸ்ரம சங்கம் நாடெங்கிலும் வசிக்கும் பண்டிதர்களை அவர்களது மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது. தேசிய காங்கிரஸின் "தீண்டாமை ஒழிப்பு"க்கு எதிராக தீர்மாணம் எழுப்ப முடிவு செய்தார்கள். அச்சங்கத்தின் செயலாளருக்கு பண்டிட் மதன் மோகன் மாளவியா அந்த சந்தர்ப்பத்தில் சென்னையில் இருப்பதாக செய்தி கிடைத்தது. மாளவியாவிற்கு அழைப்பு விடுத்தார்கள். மாளவியாவும் கணபதி முனியும் அணுக்கமான ஸ்நேகிதர்கள். அவரைக் கூப்பிட்டு இவரைக் கூப்பிடாவிட்டால் பிசகு என்று கணபதி முனிக்கும் அழைப்பு அனுப்பினார்.
அவருக்கு கணபதி முனியின் முன்னேற்றக் கருத்துகளும் அதற்கான அவரது மேடை முழக்கங்களும் நன்கு தெரியும். இருந்தாலும் என்ன ஆகிறது பார்ப்போம் என்று கூப்பிட்டார்... அப்போது...
தொடரும்..

Friday, September 16, 2016

கணபதி முனி - பாகம் 44 : பேயன் பழம்

நாயனாவின் மருமகள் வஜ்ரேஸ்வரி கலுவராயிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்துசேர்ந்த போது கருவுற்றிருந்தாள். மகப்பேறு அண்ணாமலையில்தான் என்று திட்டம். அந்தக் காலக்கட்டத்தில் கணபதி முனி வழக்கம் போல் தவத்தில் ஆழ்ந்திருந்தார். தவயோகத்திலிருந்து விழிக்கும் சில சமயங்களில் எழுதுவதில் முனைப்பாக இருந்தார். சிஷ்யர் குழு ஒன்று எப்போதும் அவரைச் சுற்றியே வந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதை சொல்லிவந்தார். கதை சொல்லும் போது அப்படியே தங்குதடையில்லாமல் புத்தகத்தைப் படிப்பது போன்றோ அல்லது காட்சியை நேரே பார்ப்பது போலவோ ரசனையுடன் வர்ணிப்பார்.
"பூர்ணா" என் கிற அவரது ஒரு நாவலைத் தவிர மற்றவையெல்லாம் ஆவணப்படுத்த தவறிவிட்டார்கள். சாயங்கால வேளைகளில் தன்னைச் சந்திக்க வந்த பக்தர்களிடம் பகிர்ந்து கொண்ட கதை "பூர்ணா". வீரதீரத்துடன் அர்ப்பணிப்புணர்வுடன் பொதுஜனத்துக்காகப் போராடுவதே இக்கதையின் அடிநாதம். இக்கதையின் மூலமாக சமூக-அரசியல் அமைப்பை அலசிப் புதினம் படைத்திருந்தார் கணபதி முனி.
ஒரு நாள் இக்கதையை தனது மகன் மஹாதேவனிடமும் மற்றும் சில பக்தர்களிடமும் அருணாசலேஸ்வரர் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அமர்ந்து விவரித்துக்கொண்டிருந்தார். காற்று தலைகோதிக்கொண்டிருந்தது. கேட்டுக்கொண்டிருந்தவர்கள் கணபதி முனியின் கதைசொல்லலில் லயித்திருந்தார்கள். அப்போது பெயர்தெரியாத யாரோ ஒருவர் அங்கே வந்தார். அவர் கையிலிருந்த தாம்பாளத்தில்வாழைப்பழங்கள் சீப்பு சீப்பாக இருந்தது.
இருகைகளால் அந்தப் பழங்களை கணபதி முனியின் காலடியில் வைத்தார். அது "பேயன்" பழம். அவரின் நடவடிக்கைகள் வித்யாசமாக இருந்தது. விழி உருட்டிப் பார்த்தார். சிரித்தார். பின்னர் விடுவிடுவென்று கிழக்கு கோபுர வாசல் நோக்கிச் சென்றார்.
"மஹாதேவா.. நீ சென்று அவர் எங்கே செல்கிறார் என்று பார்த்து வா..." என்று தனது மகனின் தோளைத் தட்டினார். ஓட்டமும் நடையுமாக மஹாதேவன் அந்த பக்தரைப் பின் தொடர்ந்து ஓடினார். சற்று நேரம் கழித்து மஹாதேவன் திரும்பினார்.
"கண்டுபிடித்தாயா? யாரென்று கேட்டாயா?" என்று கணபதி முனி வினவினார். உதடு சுழித்து "ஊஹும். அவரைப் பிடிக்க முடியவில்லை. நான் நெருங்கிவிட்டேன் என்று நினைக்கும் போது பேய்க் கோபுரம் வழியாக வெளியே சென்று மறைந்துவிட்டார்" என்று ஆச்சரியம் பொங்கும் விழிகளோடு சொன்னார்.
"இந்தப் பழத்திற்கான மகத்துவம் தெரியுமா?" என்று அங்கு கதை கேட்க அமர்ந்திருந்தவர்களிடம் கேட்டார். ஒருவருக்கும் புரியவில்லை. கணபதி முனி என்ன சொல்லப்போகிறார் என்று ஆர்வத்துடன் பார்த்தார்கள்.
"இந்த பேயன் வகை வாழைப்பழங்கள் டயேரியா என்னும் வயிற்றுப் போக்குக்கு நல்லது. திருவண்ணாமலைச் சுற்றுவட்டாரத்தில் கொஞ்ச நாட்களாக இது கிடைக்கவில்லை."
மஹாதேவனுக்கு இப்போது புரிந்தது. அவரது மனைவி வஜ்ரேஸ்வரி டயேரியாவினால் அவதிப்பட்டு வந்தார். பின்னர் கதை முடிந்து கலையும் போது மஹாதேவன் அதைச் சொல்ல அனைவரும் அசந்துபோனார்கள்.
**
மார்ச் 1926லிருந்து கணபதி முனியின் மனைவி விசாலாக்ஷிக்கு தேக அசௌகரியம் ஏற்பட்டது. என்னவென்று பார்த்ததில் ஜபதபங்கள் செய்யும் போது நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் விபூதியைக் கொஞ்சம் கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டதால் வந்திருக்கலாம் என்று நினைத்தார்கள். நலம் குன்றிய போதும் அவரது ஸ்ரீவித்யா உபாசனை ஜபத்திற்கு குறைவேதுமில்லாமல் பார்த்துக்கொண்டதோடு குண்டலினி பாய்வதையும் அனுபவிக்கமுடிந்தது.
கோகரணத்தில் தீக்ஷித தத்தாத்ரேயா என்பவர் யாகம் ஒன்று நடத்துகிறார் என்று செய்தியனுப்பி கணபதி முனியை வரச்சொன்னார். விசாலாக்ஷியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அந்த அழைப்பை மறுத்தார். தேவவிரதன் கோகர்ணத்தில் ஒரு ஆஸ்ரமம் அமைத்திருந்தார். கோரக்ஷணத்திற்காகவும் பிரம்மச்சாரிகளுக்கு வேதம் கற்றுக்கொடுப்பதிலும் தீவிரம் காட்ட உத்தேசித்தார்..
1925லேயே நாயனா இதற்கு ஒப்புதல் அளித்திருந்தார். இந்த ஆஸ்ரமத்தை கல்பகால ரிஷிகளின் ஆஸ்ரமங்களைப் போன்று அமைக்க எண்ணினார். கணபதி முனியை இந்த ஆஸ்ரமத்திற்கு அழைத்தார். அவரது வழிகாட்டுதலும் அறிவுரைகளும் இதை இன்னும் மேம்படுத்தும் என்று நம்பினார்.
”இந்த ஒரு ஆஸ்ரமம் மட்டும் போதாது. இது போல இன்னும் நிறைய ஆஸ்ரமங்கள் இதைப் பின்பற்றித் தொடங்கப்பட வேண்டும்” என்று தன்னுடைய ஆவலைத் தெரிவித்தார் கணபதி முனி. ஆகையால் தேவவிரதனையே அந்த ஆஸ்ரமத்திற்கு தலைமையேற்று நடத்தச் சொன்னார். "இது ஒரு முன்மாதிரியாக விளங்கி நாட்டில் பலர் இதுபோன்ற புண்ணியக் காரியத்தில் ஈடுபடவேண்டும்" என்று ஆசிகூறினார்.
பரதாழ்வார் ஸ்ரீராமனின் பாதுகைகளை வைத்து ஆட்சி புரிந்தது போல தேவவிரதன் கணபதி முனியின் பாதுகைகளைக் கேட்டு வாங்கி வந்து அவைகளை ஆஸ்ரமத்தலைமையாக ஏற்று நடத்தினார். மேலும் நந்தினி முத்ரனாலயா என்ற அச்சகத்தை வாங்கி அதில் தனது குருவின் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டார். தேவவிரதனின் சகோதரர் சீதாராம் பண்டாரி அந்த அச்சகத்தின் மேற்பார்வை பொறுப்பு ஏற்றார்.
விசாலாக்ஷியின் உடல் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்துகொண்டிருந்தது. இருந்தாலும் ரமணாஷ்ரமம் சென்று வரும் வைராக்கியம் குறையவில்லை. ஸ்ரீவித்யாவைத் தோற்றுவித்தவரான தெக்ஷிணாமூர்த்தியே மனித உருக்கொண்டு பகவான் ரமணராக அவதரித்திருக்கிறார் என்று பரவசமாகக் கூறுவார். தக்ஷிணாமூர்த்தி என்பது "தக்ஷிண அம்ருதி" என்று விளக்கமெடுத்துக்கொண்டார்.
1926ம் வருடம் ஏப்ரல் மாதம் வஜ்ரேஸ்வரிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அப்பு அந்தக் குழந்தையின் பெயர்சூட்டு விழாவிற்கு வராதது வினோதமாக இருந்தது. நாயனாவும் விசாலாக்ஷியும் சம்சார பந்தத்திலிருந்து வெளியேறி தபஸ் செய்துகொண்டிருந்த வேளையில் அப்புதான் வஜ்ரேஸ்வரியை எடுத்து வளர்த்தார். அவரது மனைவி காமாக்ஷியும் தம்பி கல்யாணராமனும் ரமணரையும் நாயனாவையும் தெய்வமாக மதித்தார்கள். வணங்கினார்கள். அப்பு வராது பெருங்குறையாக இருந்தது. தனக்கு இன்னவென்று தெரியாத வலி ஏற்படுவதாகவும் அதனால் ஏற்படும் உபாதைகளால் கலந்துகொள்ள முடியவில்லை என்று நாயனாவுக்குச் செய்தி அனுப்பினார்.
விசாலாக்ஷிக்கு இது ஆன்மிக யோக சாதகத்தினால் வரும் வலி என்று புரிந்தது. நாயனா உடனே செகந்திராபாத் கிளம்பிச் சென்று வலிக்கான தீர்வைப் பரிந்துரைத்தார். உடனே அம்பாளை அழைத்து அப்புவின் இந்தச் சங்கடத்தைப் போக்க வேண்டிக்கொண்டார்.
அஞான த்வான்தான்தான் அஸஹ்ய ரோகாக்னி
கீல ஸந்தப்தான்
பாஸுரா ஸீதலத்ருஷ்டிப்ரபயா
பரதேவதா வாதாதஸ்மான்
பொருள்: கேள்வியுறாத நோயினால் துன்பத்தில் தவித்து அறியாமை இருளில் குருடாகி அலையும் எங்களை அம்பாள் அவளது கருணை பொழியும் குளிர்க் கண்களால் பார்த்துக் காக்கட்டும்.
அடுத்த நாளே அப்புவிற்குப் பூரணமாகக் குணமானது. நாயனா திருவண்ணாமலைத் திரும்பினார்.
ஜுன் மாதத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மாணவர் சங்கத்துக்காகப் பேச அழைத்தது. முதலில் அவர் தயங்கினாலும் பின்னர் விசாலாக்ஷி சிதம்பரம் போகவேண்டும் என்று வற்புறுத்தியதால் ஒத்துக்கொண்டார். இருபது வருடங்கள் தென்னகத்தில் வசித்தாலும் சிதம்பரம் போன்ற புனிதத் தலத்துக்கு விஜயம் செய்யாதது விசாலாக்ஷிக்கு குறையாக இருந்தது.
விசாலாக்ஷியின் தேக அசௌகரியங்களுக்ககு மத்தியிலும் சிதம்பரம் சென்று ஜூலை பதினெட்டு 1926ல் திரும்பினார்கள். திரும்பியவுடனேயே விசாலாக்ஷி மீண்டும் "ஸ்ரீ வித்யா"வை வெறும் நீராகாரமாகக் குடித்துவிட்டு ஒன்பது நாட்கள் சாதகம் செய்தார்.
உடல் நலம் குன்றியும் ஆகாரமில்லாமல் விசாலாக்ஷி செய்யும் தவத்தால் நாயனா வருத்தமுற்றார். விசாலாக்ஷி தெரிந்து குண்டத்தில் இறங்குவது அவருக்கும் புரிந்தது...
தொடரும்..

போர்வை

"அப்பா... பைனரி டு டெஸிமல் இன்னொரு ஸம் சொல்லு...”
சின்னவள் ஆளை உலுக்கினாள். அப்போதே சரிந்து படுத்திருந்த எனக்கு கண்ணிரெண்டும் சொருகியது. நல்ல தூக்கம்.
அண்ட்ராயர் வயசில் படிக்கும் போது கையிலிருக்கும் புத்தகத்தை தொபகடீர்னு நழவவிட்டு திட்டுவாங்கியிருக்கிறேன். “எல்லாம் படிச்சப்பறம் தயிர் சோத்தைப் போடுங்கோன்னா.. யாரு கேக்கறா? இப்போ... மாந்தம் வந்த கொழந்தைக்கு சொருகறா மாதிரி தம்பிக்கு கண்ணு சொருகறது பாரு...” என்று பாட்டி எட்டூருக்குச் சிரிப்பாள்.
சின்னவள் என்னன்னமோ சந்தேகம் கேட்டாள். என்னவோ வாய்க்கு வந்தபடி உளறினேன். கண்களின் இமைகளிரண்டும் பாட்டில் பாட்டிலாக ஃபெவிகால் தடவியது போல பச்சென்று ஒட்டிக்கொண்டது. எப்போது கண் அயர்ந்தேன் என்று தெரியாது. கொஞ்ச நேரத்தில்...
“அப்பா.. அப்பா.. நேராப் படு... ம்.. மேலே.. தலகாணிக்குப் போ... ம்..ம்..” என்று பிஞ்சு விரல்கள் தலையைக் கலைத்தது. அரைத்தூக்கத்திலும் மனசுக்குள் ஒரு இனம்புரியாத சந்தோஷம். மேடம் சொன்னபடிஎழுந்திருக்காமல் உருண்டு உருண்டு மேலே ஏறி தலகாணிக்குத் தலைகொடுத்து கண் மூடினேன். உடனே தூங்கியிருந்தால் என் வாழ்நாளின் சொர்க்க நிமிடத்தை இழந்திருப்பேன். என்ன நடந்தது தெரியுமா?
பாசக்காரக் குட்டி எழுந்திருந்து அருகிலிருந்த போர்வையை எடுத்து, ”உன்ன அவ்ளோ பிடிச்சிருக்கு...” போல கையிரண்டையும் விரித்துப் பிரித்து, என் மேல் கழுத்துவரைப் போர்த்திவிட்டாள்.
"ராசாத்தி... என் செல்லமே.."
என் பெண்ணே என் அம்மாவான தருணம்!!

ஸ்ரீசாஸ்தாம்ருதம்

உண்ணலும் உனதே
உயிர்த்தலும் உனதே
உடல், உயிர், மனம் எல்லாம் உனதே
எண்ணலும் உனதே
இச்சையும் உனதே
என் செயல் பயனெல்லாம் உனதே
சகலமும் சாஸ்தாவே உனக்கர்ப்ப்ணம்
அர்ப்பணம் அர்ப்பணம் அர்ப்பணம்

~~~

அதிகாலையில் பதிவிட்டு..... நாளெல்லாம் பொருள் தேடிவிட்டு வீடு திரும்பி... அர்த்தராத்திரியில் கமெண்ட் பார்த்துக் களித்த ப்ளாக் காலம் அது. "நீ சொல்ற இந்தக் கதையெல்லாம் ப்ளாக்ல எழுதேண்டா.." என்று என்னுடைய கதை அரிப்பு தாங்காமல் ரவீ தூண்டி விட்டார். பின்னர் சதா எழுது...எழுது என்று ஏதோ ஒன்று மாயமாய் உந்தித்தள்ளியது. விசைப்பலகையில் எழுத்துருக்கள் அழிய... அழிய... ப்ளாக்கில் அழிச்சாட்டியமாய் எழுதிக் கொட்டமடித்துக் கொண்டிருந்த காலத்தில் ஐயப்ப பிரசாதமாகக் கிடைத்த நண்பர் மோகன்ஜி அண்ணா.
" என்ன ஆர்.வி.எஸ்... சௌக்கியமா?" என்று போனில் சாந்தமாக விஜாரிக்கும் போதே வாத்சல்யம் பொங்கி வழியும் குரல். நேரே வந்தால் அந்தச் சிரிப்பில் மயங்கி உருகிவிடுவேன். ஐயப்பனே எதிரில் வந்து தாவாங்கட்டையைப் பிடித்து ஆட்டி "மோகா...மனமோகனா.." என்று கொஞ்சுமளவிற்கு தீவிர சாஸ்தா பக்தர். அவரது ஆச்சரியமான சில சபரிமலை அனுபவங்களை நான் வாய்பிளந்து கேட்டு, உள்வாங்கி, பிரமித்துப்போய் இரண்டு பதிவுகள் இந்த தமிழ் பொங்கும் பேஸ்புக்கில் எழுதியிருக்கிறேன்.
அவரைப் போலவே அவரது கதைகளிலும் பாசம் பீரிட்டுப் பொங்கும், அன்பு அலை சுனாமியாய் எழுந்து ஆளை அடித்துப்போடும் . படிக்கும் போது கதாபாத்திரங்கள் எழுத்து ரூபத்திலிருந்து கணினித் திரையை ஊடுருவி ஸ்தூல சொரூபத்தில் முன்னால் வந்து அவர் எழுதியிருக்கும் வசனத்தை நமக்குப் பேசி நடித்துக்காட்டும். "ஐயப்பனோட ஸ்லோகமெல்லாம் திரட்டி ஒரு புஸ்தகம் போடனும்... " என்பது அவரது பிள்ளைகளின் அவா. அப்படியொரு புத்தகத்தை அவரது சஷ்டியப்தபூர்த்தியன்று தனிச்சுற்றுக்காக சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். அவர் பரிசளித்த அந்தப் புத்தகத்தைத் திறந்து நான் படிக்கப் படிக்க மோகன்ஜி அண்ணாவின் குரலில் சரணம் விளிக்கிறது.
ஐயப்ப பக்தர்களுக்கு வரப்பிரசாதம். கன்னிசாமிகளுக்காக அவரே எழுதிய "மணிகண்டா... மணிகண்டா..." என்ற ”கன்னி சாமிக்கோர் ஆற்றுப்படை” என்கிற சரண கோஷமும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. சபரிமலை பற்றி புதிதாகச் செல்பவர்கள் தெரிந்துகொள்ளுமளவிற்கு அனைத்து விஷயங்களையும் அந்த சரண கோஷத்தில் கொடுத்திருக்கிறார். அற்புதம்.
ஸ்ரீகல்யாண வரத சாஸ்தா, ஸ்ரீஸம்மோஹன சாஸ்தா, ஸ்ரீ பிரும்ப சாஸ்தா, ஸ்ரீஞான சாஸ்தா, ஸ்ரீமகா சாஸ்தா, ஸ்ரீவீர சாஸ்தா, ஸ்ரீவேத சாஸ்தா, ஸ்ரீ தர்ம சாஸ்தா என்று அஷ்ட சாஸ்தாக்களின் தியான ஸ்லோகங்கள் அடங்கியிருக்கிறது.
கந்த சஷ்டிக் கவசம் போல ஐயப்பன் கவசம் இருக்கிறது..... அதிலிருந்து சில காக்க...காக்ககள்.....
சிவனார் மகன் என் சிரசினைக் காக்க
நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க
கஜமுகன் தம்பிஎன் கண்ணினைக் காக்க
நாரணன் பாலன் நாசியைக் காக்க
இருமூர்த்தி மைந்தன் இருசெவி காக்க....
இப்படி உள்ளடக்கம் முழுவதும் எழுதவேண்டுமென்றால் முழு புத்தகத்தையும் தட்டச்சு செய்ய வேண்டியிருக்குமென்பதால்.....
மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும்
மாளிகை புரத்து மஞ்ச மாதாவுக்கும்
பந்தளத்தை ஆண்டு வந்த பார் போற்றும் மன்னருக்கும்
மணீகண்ட கோபால கிருஷ்ணனுக்கும்
ஜெயமங்களம் நித்ய சுப மங்களம்
--என்று “சாஸ்தாம்ருத”த்தில் இடம்பெற்றுள்ள ஆரத்தி பாடலுடன் இப்பதிவிற்கும் சுபம் போடுகிறேன். நன்றி
பின் குறிப்பு: இத்தோடு இணைத்திருக்கும் ஐயப்பன் படம், திரு. மோகன்ஜி தினமும் அபிஷேகம் செய்யும் சிலா ரூபம்

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails