ஒரு நாலைந்து நாட்களாக பெங்களூரு வாசம். நல்ல வெய்யில். நல்ல ட்ராபிக். நல்ல சாப்பாடு. இன்னும் பல நல்ல நல்ல.... என்னதான் தலை போகிற காரியமாக இருப்பினும் நம் இலக்கிய எழுத்துப்பணியை விடக்கூடாது என்பதற்காக இந்த பதிவு. தீவிரமான வேலைப்பளு இருந்தாலும் சாப்பிட கொள்ள வெளியே சென்று வந்தபோது கண் நிறைத்த ஒரே நேரத்தில் இரு காதல் சம்பவங்கள்...
முதல் ஜோடி
சென்ற வாரத்தில் ஓர் நாள் இரவு பெங்களூரு குவீன்ஸ் ரோடு சந்திப்பில் இருந்த "மஸ்த் கலந்தர்" என்ற ரெஸ்டாரென்டுக்கு உணவருந்த சென்றிருந்தோம். நாங்கள் உட்கார்ந்திருந்த மேஜைக்கு முன்னால் என் கண்ணெதிரே ஒரு ஜோடி. இருவருமே ஜீன்ஸ் டீ ஷர்ட் அணிந்திருந்தார்கள். பேச்சில் மென்பொருள் வாசம். ஏதோ ஒரு எக்ஸ்.ஒய்.இசட் சாப்ட்வேர் 'கம்பனி'யாக இருக்க வேண்டும். அந்த பெண் 'பட்டர் நான்' சாப்பிட்டுக் கொண்டிருந்தாள், அவள் சாப்பிடும் அழகை அந்தப் பையன் பார்த்து ரசித்தும் ருசித்துக் கொண்டும் இருந்தான். சாப்பிடும் போது ஒரு வாய்க்கும் மறு வாய்க்கும் இடையிடையே பக்கத்தில் பார்த்து வாயை இப்படியும் அப்படியும் சுழித்தும் சிரித்தும் பேசிக்கொண்டிருந்தாள். பதிலுக்கு அந்த ஆண் சிநேகிதன் அந்த பெண் சிநேகிதியிடம் காதருகே ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். கேட்கக்கூடாத பேசக்கூடாத ஏதோ 'கெட்ட காரிய' ஜோக் எதையோ பரஸ்பரம் பரிமாறியிருக்கக்கூடும். சிரிப்பு மேலும் அதிகமாகியது. கிளம்பும் வரை அந்தப் பெண் சாப்பிடும் போது கூட தோளில் கைபோட்டு மேனியில் கண் போட்டு தன் கூரிய மூக்கால் அப்பெண்ணின் கழுத்தருகே வாசனை பிடித்துக் கொண்டே இருந்தார் அந்த முறுக்கேறிய வாலிபர்.
இரண்டாவது ஜோடி
வலது கோடி மூலையில் ஒரு மேஜையை ஆக்கிரமித்துக் கொண்டனர். இந்த முறை ஓரிரு நாள் தாடி மீசையுடன் ஒரு யுவனும், குட்டை பாவாடை அணிந்த ஒரு யுவதியும். அந்தப் பெண்ணிற்கு கையில் அரிப்பு ஏற்ப்பட்டிருக்க கூடும். அந்தப் பையனின் முகத்தில் கையை வைத்து அடிக்கடி உரசிப் பார்த்துக்கொண்டிருந்தார். போன ஜோடி போலல்லாமல் இதில் பையன் கொஞ்சம் கூச்ச சுபாவத்துடன் நாணி கோணி அமர்ந்திருந்தான். அப்படியும் அந்தப் பெண் விடுவதாக இல்லை. தன்னுடைய உள்ளங்கையையும் புறங்கையையும் மாற்றி மாற்றி தன் பாய் பிரண்ட்டின் ஒவ்வொரு கன்னத்திலும் வைத்து ஜுரம் அடிக்கிறதா என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தது. காதல் ஜுரம் கண்டு பிடிக்க முயற்சி செய்தது என்று நினைக்கிறேன். இந்த கூத்தை காண சகிக்காத அந்த சர்வர் மிக சீக்கிரமாக அந்த புலாவை கொண்டு வந்து பரிமாறினார். சாப்பிடும் போது தன்னுடைய தேக்கரண்டியால் கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைக்கு சோறுட்டும் அம்மா போல புலாவை ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தது அந்த கு.பா.
இந்த இரு காதல் விளையாட்டுக்களை கண்டு களித்துக் கொண்டு இரவு உணவை சாப்பிட்டு முடிக்கும் போது பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. நினைத்துப் பார்க்கையில் காதலர்க்கும் இரவிற்கும் உள்ள நிலையான பந்தம் புரிந்தது. என்ன சரிதானே?