Monday, April 12, 2010

ஜனசமுத்திரம்

ஞாயிற்றுகிழமை குடும்ப சகிதமாக மெரீனா பீச், ஷாப்பிங் என்று  சுற்றிவிட்டு இராச்சாப்பாடு மயிலை சரவணபவனில் என்ற திட்டத்தோடு கிளம்பினோம். விடுமுறை என்பதால் ட்ராபிக் அவ்வளவாக இல்லாவிட்டாலும் நமது ஆட்டோ தோழர்கள் தங்களது வித்தைகளை ஆட்கள் குறைந்த சென்னை வீதிகளில் காண்பித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு ஐகானுடன் சோழாவரம் ரேஸ் கணக்காகவும், திரைப்படங்களில் ஹீரோயினை கடத்திக் கொண்டுபோகும் வில்லனை வளைத்துப் பிடிக்க துரத்தும் ஹீரோ போன்றும் விடாமல் துரத்தி, முந்தும்போது ஐகானுக்கு இரண்டு மூன்று விழுப்புண்களை ஏற்படுத்தினார். தன் வண்டியில் கோடு போட்ட  ஆட்டோவுக்கு குறுக்காக நிறுத்தி இறங்கிய ஐகான் முதலாளி என்ன செய்யப்போகிறார் என்ற கிளைமாக்ஸ் சீனை பார்க்க விடாமல் என் குடும்பம் "என்ன வேடிக்கை? நீங்க போங்க டைம் ஆவுது" என்று விரட்ட நான் என் வண்டியை விரட்டினேன்.


marina beachபீச்சாங்கரை செல்லலாம் என்றால் கரையில் மக்கள் கடலும், சாலையில் வாகனங்கள் கடலும் அலைமோதியது. சில இடங்களில் காரை விட டூ வீலர் நல்லது, இன்னும் சில இடங்களில் டூ வீலரை விட சைக்கிள் நல்லது, எல்லா இடங்களுக்கும் "நடை ராஜா" நல்லது. கரை ஓரமாகவே காரை உருட்டிக்கொண்டு சென்றதிலேயே சமுத்திரராஜனை கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள் என் கண்மணிகள். டி.ஏ.வியில் எல்.கே.ஜி சீட்டுக்கு அப்ளிகேஷன் வாங்க நிற்கும் கூட்டம் போலவும், அன்னிய தேசம் அமெரிக்கா செல்ல 'விசா' எடுக்க கவுன்சலேட் வாசலில் நிற்கும் கண்ணிமானவர்கள் போலவும், முதல் நாள் இரவே நம் நண்பர்கள் அல்லது உறவுகள் யாரையாவது அனுப்பி கர்சீப் போட்டோ, துண்டு போட்டோ நின்றால் தான் கார் நிறுத்தம் கிடைக்கும் என்ற நிலைமை அங்கு நிலவியதால் "எங்கே நிறுத்துவது" என்ற யோசனையுடன் தலையை திருப்பி புஷ்பா தங்கதுரையின் 'ஞே' என்று முழித்துக்கொண்டிருக்கையில், எதிர்தார்ப்போல் ஏ.ஐ.ஆர் வாசலிலேயே சில பிரகஸ்பதிகள் வண்டியை விட்டு சென்றிருந்தனர். அதில் சில இன்னோவா, குவாலிஸ் போன்ற பெரியகுடும்ப கார்கள்.

இப்படி எல்லோரும் நடைவண்டி போல வண்டி ஒட்டிக்கொண்டு சென்றதால் கண்ணகி சிலையிலிருந்து சாந்தோம் மற்றும் அடையார் செல்ல வேண்டிய எல்லோரும் வலுக்கட்டாயமாக 'பீச்' பார்க்கவேண்டியதாயிற்று. அந்த இருட்டில் கடல்  அலை கூட தெரியவில்லை, ஒரே மனித தலைகளும், பெட்ரோமாக்ஸ் விளக்கோரம் இருக்கும் பஜ்ஜி கடைகளும்,தள்ளுவண்டி ஐஸ்கிரீம் கடைகளும், அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளே நிறுத்திவைத்திருந்த கார்களும் தான் கண்ணுக்குப்பட்டன. ஏனைய காவலர்கள் போலல்லாமல் அதிசயமாக தேசலாக நின்ற ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் கையை ஆங்காரமாக மேலும் கீழும் ஆட்டி எல்லோரையும் வேகமாக போகச்சொல்லி சமிக்ஞை செய்துக்கொண்டிருந்தார். அவர் கை ஆட்டும் வேகம் கூட யாரும் செல்லாமல் அவரை படுத்திக்கொண்டிருந்தார்கள். பட்டம் விடலாம், ஐஸ்கிரீம் சாப்பிடலாம்,மணலில் விளையாடலாம் என்ற பல கனவுகளுடன் வந்த என் பெண்களுக்கு பெருத்த ஏமாற்றம்.

அந்த காவலரின் ஆங்கார கையாட்டுதலுக்கு கீழ்படிந்து வலது ஓரமாக சென்று பயணத் திட்டத்தின்படி அடுத்த இலக்கான சரவணபவன் நோக்கி வண்டியை செலுத்தினேன். மெரீனா தந்த ஏமாற்றம் சரவணபவன் தராது என்ற நம்பிக்கை அந்தக் கடை வாசலிலேயே பொய்த்துப்போனது. மாடவீதியில் பட்சணம் மொய்க்கும் ஈக்கள் போல சரவணபவனைச் சுற்றி ஒரே கூட்டம்.  இந்தப்பக்கம் அந்தப்பக்கம் போக முடியவில்லை. தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம் நின்றது. இங்கே அங்கே ஒரு ஐந்து டிகிரி கூட திரும்பவிடாமல் காரின் இரண்டு புறமும் சைக்கிளும் பாதசாரிகளும் நூல் பிடித்தாற்போல் சென்றுகொண்டிருந்தார்கள். இங்கேயும் கார் நிறுத்ததில் ஒரு சின்ன சைக்கிள் வைக்கக்கூட இடம் இல்லை. பெண்டாட்டி பிள்ளை குட்டிகளை இறக்கிவிட்டு விட்டு இரண்டு கார்களுக்கு பின்னே தேமேன்னு பத்து நிமிடங்கள் நின்றவுடன் ஏதோ இரண்டு புண்ணியவான்கள் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு "பா..." என்று ஏழுருக்கு ஏப்பம் கேட்க எழுந்ததால் என் காருக்கு இடம் கிடைத்தது.

காருக்கு இடம் கிடைத்த சந்தோஷத்தில் முதல் மாடி ஏறி ஏ.சிக்கு சென்றால் அங்கே ஒரு கல்யாணத்தின் காலை டிபன் அளவிற்கு கூட்டம் காத்திருந்தது. அங்கே வெள்ளையில் நின்ற மேற்பார்வையாளரிடம் பெயர் கொடுத்து வரிசையில் காத்திருந்தோம். சரவணபவன் ரூல்ஸ் தெரியாத ஒரு வயதான அம்மணி நேராக உள்ளே நுழைய, அவரைப் பிடித்து தள்ளாத குறையாக 'அன்பாக' சொல்லி வெளியேற்றினார் அந்த மே.பா. "ஜெயில்ல மணி அடிச்சா சோறு இங்கே சூப்பர்வைசர் கூப்பிட்டால் சோறு" என்று நான் அடித்த ஜோக்கை பசிக்கொடுமையில் இருந்த என் குடும்பமும் சுற்றி இருந்த கூட்டம்மும் துளிக்கூட ரசித்ததாக தெரியவில்லை. இருபது நிமிட இடைவேளைக்குப் பிறகு சூப்பர்வைசர் கூப்பிட்டு சாப்பிடப் பணித்தார். "அப்பிடைசர் டோமாடோ சூப் வேண்டுமா" என்று கேட்ட சர்வரிடம் "கால் கடுக்க நின்றதே அப்பிடைசர்தான்" என்று சொல்லி திருப்தியாக சாப்பிட்டு வெளியேறினோம். பசியோடு நின்று சாப்பிட்டாலும் உணவின் தரமும், போஜனத்திற்கு பிறகு பக்க விளைவுகள் எதுவும் இல்லாததாலும் கார் எப்போதும் சரவணபவன் நோக்கியே செல்கிறது.

1 comments:

Madhavan Srinivasagopalan said...

எங்க ஊரு பீச்சுல அவ்வளவு கூட்டம் கிடையாது..(சரவணபவனும் கிடையாது)..
"பீச்சுன்னா இங்க வாங்க..!
பொறவு, (ஒங்க ஊரு) சரவணபவனுக்கு போங்க..!"
'வாங்க, போங்க' .. அட என்ன ஒரு ஹைக்கூ ?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails