Wednesday, November 21, 2012

உற்சாகபானப் பிரியர்கள்

சுவரெல்லாம் காரை பெயர்ந்த பெரியாஸ்பத்திரி. மூலைக்கு மூலை கறைபடிந்த சுவர்கள். அழுக்குக் கோட்டுடன் ஸ்டெத் மாலையணிந்த டாக்டர்கள். முட்டிவரை ஸ்டாக்கிங்ஸ் போட்ட கொண்டை நர்சுகள். ஃபினாயில் நாற்றத்தையும் பொருட்படுத்தாது ஆப்பிளையும் ஹார்லிக்ஸ் பாட்டிலையும் சுமந்தபடி பேஷண்ட்ஸ்ஸைப் பார்க்கக் கூட்டம் அம்முகிறது. மாலை நேரத்து விசிட்டிங் ஹவர்ஸ். கலெக்ஷன்னில்லையே என்று வருத்தப்படும் வார்டு பாய்கள். “உம்புள்ளை நாளைக்கே எந்திரிச்சு நடப்பான் பாரு” என்று ஆரூடமாக ஒரு அன்புத்தாயிடம் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த ஆயாவென்று சுறுசுறுப்பாக இருந்தது.


வார்டு நம்பர் 8. எமன் எப்போ வருவான் என்று பாசக்கயிற்றுக்காக வெயிட்டிங்கில் ஒரு பேஷண்ட். ”இனிமே நம்ம கையில ஒண்ணுமில்லை” என்று டாக்டர்கள் கையை விரித்துவிட்டார்கள். தொண்டைக்குக் கீழே உள்ளேயிருக்கும் அவயங்களெல்லாம் சாராயத்தினால் கரைந்துவிட்டது. எக்ஸ்ரேயெடுத்தால் உள்ளே ஹாலோவாகத்தான் தெரியும். சாவதற்கு முன்னாலேயே வெறும் கூடாக படுத்திருந்தான். ஆனால் சாகக் கிடந்தவன் இப்படியொரு நிலை தனக்கு வந்துவிட்டதென்று கவலைப்படுபவனாகத் தெரியவில்லை.

உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் கடைசியாக ஒருதடவைப் பார்க்கலாம் என்று ஒவ்வொருத்தராக வார்டுக்குள் வந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கண்கள் சொருக கடைசி நிமிடத்தை எண்ணிக்கொண்டிருந்தான் அவன். சிறுவயது முதலேயே பழகிய நண்பனொருவன் மிகவும் வருத்தமாக அவன் பக்கத்தில் உட்கார்ந்து ஒரு கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தன்.

“இப்படியெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொன்னா கேட்டியாடா?”

அவனால் பேசக்கூட முடியாத நிலை. வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஸ்வாமிகிட்ட நல்ல புத்தி வேணும்னு கேட்டிருக்கலாம்ல”

இதைக் கேட்டவுடன் பதிலுக்கு படுக்கையிலிருந்து அவன் ஏதோ முனகினான்.

“ஸ்வாமிகிட்ட நல்ல புத்தியைக் கொடுன்னு வேண்டியிருக்கலாம்லனேன்” என்று கூரை இடிந்து விழுமளவிற்குச் சத்தமாகக் கேட்டான்.

சாகற நேரத்தில் தன் நண்பனிடமிருந்து இப்படியொரு வசனத்தை அவன் எதிர்ப்பார்க்கவில்லை.

கண்ணாலையே சைகை செய்து பக்கத்தில் கூப்பிட்டான். நண்பன் போய் அவன் தலைமாட்டருகில் உட்கார்ந்தான். படுக்கையில் கிடந்தவனின் காதுக்கருகில் தலையைக் குனிந்தான்.

“எ......ன்....ன....... சொ.....ன்....ன....” என்று ஒவ்வொருவார்த்தையாக உதிரியாய் அவன் காதுக்கு சேருமளவிற்கு மட்டும் கேட்டான்.

“ஸ்வாமிகிட்ட நல்ல புத்திக் கொடுன்னு வேண்டியிருக்கலாம்ல”

“நான் அப்படித்தான் வேண்டிக்கிட்டேன். ஆனா.....”

“ஆனா...”

“அந்தப் பாழாப் போறத் தெய்வத்துக்கு “நல்ல புட்டி”யைக் குடுன்னு காதுல விழுந்துடிச்சு. நான் என்ன பண்ணட்டும்”ன்னு சொல்லிட்டு மண்டையைப் போட்டான்.
 
**************
 
போதையடிமைகள் மாதிரி மெட்ராஸ் காஃபி ஹவுஸின் ஃபில்டர் காஃபிக்கு ஆஃபிஸிலிருந்து ஒரு திருக்கூட்டமாக அடிமையாகி விட்டோம்.

சிக்கரி கலந்த காஃபிங்கறதுனாலத்தான் இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கு. அப்படிக் குடிச்சா உடம்புக்கு ஆகாது என்று யாராவது இன்னா நாற்பதாக நீதி சொன்னாலும் நாக்குக்கு புரிய மாட்டேன் என்கிறது. “கள்ளிச்சொட்டான்னா இருக்கு காஃபி” என்று காஃபியார்வலர்கள் சிலாகிப்பதற்கு எதுவும் உள்ளர்த்தம் உண்டாவென்று தெரியவில்லை.

திரும்பத் திரும்ப சப்புக்கொட்டிக்கொண்டு சாயந்திரமானா மெ.கா. ஹவுஸின் முன்னால் காசைக் கொடுத்துவிட்டு கையேந்தி நிற்கச் சொல்கிறது.

சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் சொன்ன ஒரு சன்னியாசக் கதை ஞாபகம் வருகிறது.

ஒருத்தர் ரொம்பவும் ஆச்சார அனுஷ்டானத்தோட இருக்கிற சாஸ்திரிகள். ஆத்துக்காரி கொஞ்சம் அப்பர் ஹாண்ட். உஹும் நீங்க நினைக்கிறா மாதிரி அடிக்கெல்லாம் மாட்டா. பிலுபிலுன்னு பிடிச்சிண்டு வாயாலையே வகுந்துடுவா. இந்த மனுஷனுக்கும் விஷமம் ஜாஸ்தி. எதாவது சொல்லி ஆத்துக்காரியை சீண்டிண்டே இருப்பார். ஒரு நாள் காலங் கார்த்தாலையே சண்டை முத்திப்போச்சு. அக்கம்பக்கமெல்லாம் கூடிப் போய் தெருவில ஒரே வேடிக்கை.

”இனிமே என்னால உங்கூட குடுத்தனம் பண்ண முடியாதுடி. ராட்சஷி. நா சன்னியாசியாப் போய்டறேன்”ன்னு ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதியாக் குதிச்சார்.

“எம்பளது வயசுல நீர் அப்படிப் போகணும்னு உமக்குத் தலையெழுத்து இருந்தா யாரென்ன பண்ண முடியும். பேஷாப் போங்கோ”ன்னு மாமி சொல்லிட்டு பக்கத்தாத்து மாமியோட சகஜமா பேச ஆரம்பிச்சுட்டா.

இவருக்கும் ரோஷம் தலைக்குமேல ஏறிண்டு கடகடன்னு திண்ணைய விட்டு இறங்கி வடக்கப் பார்க்க புறப்பட்டு போய்ட்டார். தோள்ல காசித் துண்டோட. பக்கத்தாத்து மாமியெல்லாம் வந்துக் கூடி நிண்ணுண்டு “இருந்தாலும் மாமாவை நீங்க இப்படி விரட்டியடிச்சுருக்கக்கூடாது”ன்னு ஒரே புலம்பல். மாமி அதெல்லாம் கண்டுக்கவேயில்லை.

“அடுப்புல ஸாம்பார் கொதிக்கறது”ன்னு உள்ளே போய்ட்டா. ”மாமி இப்படியொரு கல்நெஞ்சக்காரியா இருக்காளே”ன்னு எல்லோரும் முணுமுணுத்துட்டு அவாவா ஆத்துக்குப் புறப்பட்டு போய்ட்டா.

சாயந்திரம் நாலு மணியாச்சு. பால்காரன் பாலைக் கொடுத்துட்டு இந்தப் பக்கம் போனான் கார்த்தால வடக்கே போன மாமா விறுவிறுன்னு அந்தப் பக்கத்திலேர்ந்து திரும்பி வந்துண்டிருந்தார். ஃபர்ஸ்ட் செஷன்ல ஃபைட் சீன் பார்த்தவாள்லாம் திரும்ப ஒரு சண்டை பார்க்க ஆசையா ஓடி வந்தா.

திண்ணைமேல ஏறி சப்ளாங்கால் போட்டுண்டு ஜம்முன்னு உட்கார்ந்துண்டாராம் மாமா.

“சன்னியாசம்னு கிளம்பினேளே. சாயந்தரமே ஆத்துக்கு வந்துட்டேளே. என்னாச்சு மாமா”ன்னு எல்லாரும் நக்கலா விஜாரிச்சாளாம்.

“நாலு மணிக்கு காஃபி குடிக்கணும். அதான் திரும்பி வந்துட்டேன். ஆனா நிச்சயமா நாளைக்கு சன்னியாசம் போய்டுவேன்.”ன்னு ஜம்பமா சொன்னாராம்.

“உக்கும். ஆனானப்பட்ட காஃபியையே இந்த மனுஷ்யரால விடமுடியல. கஷாயத்தை எப்படிக் கட்டிப்பராம்”ன்னு தாவாங்கட்டையை குலுக்கி தோள்ல இடிச்சுண்டு சுடச்சுட காஃபியை கொண்டு வந்து திண்ணையில வச்சாளாம் மாமி.

#கஷாயம் கட்டிக்க ஆசை வந்தாலும் காஃபி ஆசை போகாதாம். காசிக்குப் போனாலும் காஃபிக்குதான் ஜெயமாம். தீக்ஷிதர்வாள் சொல்லியிருக்கார்.

Saturday, November 17, 2012

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி

நம்பிஆரூரான் என்கிற சுந்தரரும் கழறிற்றறிவார் என்கிற சேரமான் பெருமாள் நாயனாரும் அணுக்கமானத் தோழர்கள். சேரமான் பெருமாள் தினமும் திருவஞ்சைக்களத்தில் சிவ பூஜை செய்து முடித்தபின் தில்லை நடராஜப் பெருமானின் காலில் இருக்கும் சதங்கை கிணிங் கிணிங்கென்று ஒலிப்பது அவரது காதுக்கு கேட்குமாம். அப்படி சப்தமெழுந்தால் அன்றைய பூஜையில் எதுவும் குறையில்லை என்று சந்தோஷப்பட்டு கோவிலிலிருந்து விடைபெறுவாராம் சேரமான் பெருமாள். 

ஒரு நாள் நெடுநேரமாகியும் சலங்கைச் சத்தம் கேட்கவில்லை. மிகவும் கவலையுடன் இன்று நமது பூஜையில் ஏதோ குறையிருக்கிறது என்றெண்ணி தன்னுடைய உடைவாளை உருவி தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேளையில் “சேரமானே பொறு. சுந்தரனின் தமிழ்ப்பாடலில் என்னை சற்றுநேரம் மறந்திருந்தேன்.” என்று அசசீரியாய் ஒலித்து காலிலிருந்த சதங்கைகளை ஒலிக்கச் செய்தாராம் சிவனார். தான் செய்யும் பூஜையை விட அடியார் ஒருவரின் தமிழ்ப்பாடலில் இறைவன் தன்னை மறந்தான் என்ற செய்திகேட்டதும் அந்தச் சுந்தரரைப் பார்க்க விழைந்து அவருடன் நட்பு பூண்டு இறுதியில் இருவரும் கைலாயம் சேர்ந்தார்கள் என்பது பெரியபுராணக் கதை.

அந்தச் சேரமான் பெருமாள் நாயனார் பொன்வண்ணத்தந்தாதி என்ற ஒன்றை சைவத்திற்கு அருளிச்செய்திருக்கிறார். அதன் முதலில் வரும் அந்தப் பாடல் படிக்கப் படிக்க, படித்துக் கேட்கக் கேட்க தெவிட்டாத தெள்ளமுது.

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.


நடைமுறைத் தமிழில் இருப்பதால் பெரிய விளக்கமேதும் தேவைப்படாவிட்டாலும் ஒருமுறை இங்கே இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எழுவது என் கைக்குக் கிடைத்த பேறு.

பொன் எந்த வண்ணமோ அந்த வண்ணம் அவருடைய மேனியாம், கருமேங்களுக்கிடையிலிருந்து எழும் மின்னல்கள் போன்றது அவருடைய விரித்த சடையாம், வெள்ளிக் குன்றுவின் வண்ணம் என்னவோ அதுதான் அவரேறும் வாகனமாகிய விடையின் நிறம். மால்விடை என்று எழுதியதற்கு அர்த்தம், திரிபுரசம்ஹாரத்தின் போது திருமாலே அவருக்கு விடை வாகனமாக வந்தார் என்பது புராணம். கடைசியில் சேரமான் எழுதிய அந்த வரிதான் இந்தப் பாட்டின் இனிமைக்கே உச்சம். தான் சிவனைக் கண்டால் எவ்வளவு இன்பமடைவாரோ அவ்வளவு இன்பம் தன்னைக் கண்ட ஈசனுக்கும் என்றார். இறைவனையும் தன் நண்பனாக சேரமான் பெருமாள் நாயனார் இழுத்துக்கொண்ட வரலாறு இது.

இக்காலத்தில் கண்ணதாசன் போன்றோர் ”பால்வண்ணம் பருவம் கண்டு” என்றெல்லாம் மெட்டிற்கு எழுதிய காதல் பாடலும் அக்காலத்தில் “கை வண்ணம் அங்கு கண்டேன், கால் வண்ணம் இங்கு கண்டேன்” என்று சக்கரவர்த்தித் திருமகனைக் கம்பன் போன்றோர் அர்ச்சித்து எழுதியதும் நினைவுக்கு வருகிறது.

#என்வண்ணம் மாறி எவ்வண்ணம் இவ்வண்ணம் எழுதினேன்!!

Wednesday, November 14, 2012

பார் கிழிய நீண்டு.....

இக்கால இயக்குனர் சிகரங்கள் திரைப்படத்தின் பூர்வாங்க சீனிற்கு இரு கை நீட்டி, கட்டை விரல்கள் நீண்டு பக்கவாட்டில் முட்ட, நிமிர்ந்த ஆட்காட்டி விரல்களுக்குள் அடங்கும் காட்சியைக் கட்டம் கட்டி ’ஓப்பனிங் லொகேஷன்’ பார்ப்பதைப் போல அக்காலத்திலேயே இராமகாவியம் எழுத வந்த கம்பன் கோசல நாட்டின் எழிலை முதலில் நம் கண்ணுக்குக் காட்டி விட்டுப் பின்னர்தான் காவியத்துள்ளேயே நுழைகிறான். நதிக்கரையில் நாகரீகங்கள் வளர்ந்ததைப் போல கோசல நாட்டின் நாகரீகத்தை, எழிலை, மாட்சியை, சரயு நதிதீரத்திலிருந்து ஆரம்பிக்கிறான். ”நா காவிரித் தண்ணி குடிச்சு வளர்ந்தவன்டா” என்றும் ”தாமிரபரணி தண்ணி வாகு அது” என்றும் சுய தம்பட்டம் அடித்துக்கொள்வதில் அவர்களது பூர்வாசிரம அல்லது வளர்ந்துகொண்டிருக்கும் பிரதேசத்தின் மீதும் அந்நிலத்தில் பாயும் நதியின் மீதும் அவர்கள் கொண்டுள்ள பந்த பாசம் புரிகிறது.

வாழும் நிலத்தின் தன்மையில் நிறைய பேரின் குணவிசேஷங்கள் அடங்கியிருக்கும் என்பார்கள். அலுவலகத்தில் என்னுடைய வளவளாத்தனத்தை விமர்சித்த துணை ஜனாதிபதி(Vice President) அந்தஸ்தில் இருந்த உயரதிகாரி ரிடையர் ஆவதற்கு முன்னர் ஒரு கமெண்ட் அடித்தார். “ஆர்விஎஸ். உனக்கு ஏன் இந்தப் பேச்சுத் தெரியுமா? புராதன காலத்துலேர்ந்து தஞ்சாவூர் ஜில்லா ஃபெர்ட்டெயில் லாண்டா இருந்தது. ஜனங்க கைல காசு நிறையா புரண்டதால தெனமும் மூக்கைப் பிடிக்கச் சாப்பிட்டுட்டு வெத்தலையைப் போட்டுண்டு திண்ணையில உட்கார்ந்து வம்பு பேச வேண்டியதுதானே. அந்த வம்பு ஜீன் உங்கிட்ட இருக்காதா? அதான் இப்படி பேசற. தின்னவேலி கூட ஃபர்ட்டெயில் லாண்ட் தான்” என்றார். இருக்கலாம்.

ஆற்றுப் படலத்தில் மொத்தம் 20 பாடல்கள். முதலில் கம்பன் கோசல நாட்டின் மக்கட்பண்பை ஆற்றின் வழியாக சொல்லும் ஒரு பாடல்.
ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்.

ஐம்பொறிகளுள் கண் சென்று பற்றும் கருவி. இருந்த இடத்திலிருந்து மேயும். கவி பாடும். கண் ஜாடையில் ஒரு ஆளையே கவிழ்த்துவிடலாம். மற்ற பொறிகள் நின்று பற்றும் கருவி. ஒரு மனிதனை குற்றமிழைக்கச்(ஆசு) செய்து துன்பத்தில்(அலம்) ஆழ்த்தும் ஐம்பொறிகளையும் அம்புக்கு(வாளி)  உவமைப் படுத்துகிறான் கம்பன். மார்பகங்களில் ஆரங்கள்/காசு மாலைகள் அசைந்தாடும்(அலம்பு) பெண்களின் போர்த்(பூசல்-இப்பொழுதும் சண்டை என்பதற்கு வழக்கில் இருக்கும் சொல்) தொழில் புரியும் கண்கள் என்ற அம்பு பிற ஆடவரை ஏறெடுத்தும் பார்க்காத வண்ணம் ஒழுக்க நெறியில் வாழும் கோசல நாட்டினை அலங்கரிக்கும்(புனை) சரயு நதியின் அழகினைப் பற்றிக் கூறுவோம்.

தீயவைகளைப் பற்றிக் கொணர்ந்து மூளைக்கு அனுப்பும் கண்களின் செய்திகள்தான் மற்ற அவயங்களைத் தப்பு செய்யத் தூண்டுகிறது. பஸ்ஸ்டாண்டில் நிற்கும் பொழுது இமையிறக்கி ஓரக்கண்ணால் ஒரு லுக் விடும் பெண்ணை தேமேன்னு பக்கத்தில் நிற்கும் அப்பாவி ஓவர் லுக் செய்வதற்கு ஆலாய்ப் பறப்பதில் ஆரம்பிப்பது கடைசியில் ஒரு நாள் அப்பெண்ணின் மாமன்காரன் சிவந்த கண்களும் வீச்சருவளோடும் பேருந்து நிறுத்தத்தில் ஆவேசமாய் வெட்ட நிற்பதில் முடிகிறது அந்தப் பார்வையின் சிறு வீச்சு.
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே

நீறு, ஆறு, சேறு, வீறு என்று பட்டையைக் கிளப்பும் அடுத்த பாடலில் பொன்னார் மேனியன் என்று அழைக்கப்படும் சிவனார் போன்று வெண்ணிறமாக திருநீறு பூசியது போல இருந்த கோசல நாட்டு வானம், ஆர்கலி (கடல்) மேய்ந்து, மார்பில் அகில்சேறு (சந்தனக் குழம்பு) பூசிய திருமகளைத் தன் மார்பிலேக் கொண்ட, நீருண்ட மேகம் போலத் திருமேனி கொண்ட திருமால் போலத் திரும்பி மழையாகப் பொழிகிறது என்கிறான் கம்பநாட்டாழ்வார். ஒவ்வொரு அடியிலும் இரண்டாவது வார்த்தையில் அணிந்து என்றெழுதியிருப்பது கவிச்சுவையளிக்கிறது. திருப்பாணாழ்வார் கூட “கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை” என்று பாடுகிறார்.

இப்படியாகப் பொழிந்த மழையானது சரயுவில் எப்படி வெள்ளமாக வந்தது என்று அடுத்த ஆறு பாடல்களில் வர்ணிக்கிறார். நதியை வைத்துக் குறிஞ்சி, பாலை, முல்லை மருதத் திணைகளைப் பற்றியும் கடைசியில் திணை மயக்கமாக சரயு நதி ஒரு திணையை மற்றொரு திணையாக எப்படி உரு மாற்றுகிறது என்று கவி வடித்திருக்கும் கம்பனைப் பார்த்து நம்மை மலைக்க வைக்கும் சில பாடல்களைத் தருகிறேன். எத்திணையில் வாழ்ந்தாளும் அத்திணை ”மக்கள்” இன்னவாறு செய்தார்கள் என்று எழுதாமல், கொடிச்சியர், எயினர், ஆயர், மள்ளர் என்று முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் என்று அந்தந்த நிலத்து மக்களை ரகம் பிரித்து எழுதியிருக்கிறார். மலையில் பிறந்த சரயுவின் நறுமணம் பற்றி கம்பர் எழுதியிருக்கும் ஒரு பாடல் நம்கவனத்தை சரேலென்று ஈர்க்கிறது. (எல்லாப் பாடலும் இழுத்தாலும் இதைப் பிரத்யேகமாகப் பார்ப்போம்)
கொடிச்சியர் இடித்த சுண்ணம்,
    குங்குமம், கோட்டம், ஏலம்,
நடுக்கு உறு சந்தம், சிந்தூரத்தொடு
    நரந்தம், நாகம்,
கடுக்கை, ஆர், வேங்கை, கோங்கு, பச்சிலை,
    கண்டில்வெண்ணெய்,
அடுக்கலின் அடுத்த தீம் தேன்,
    அகிலொடு நாறும் அன்றே.

குறிஞ்சி நில மகளிர் பூசிக்கொள்வதற்கு இடித்த வாசனைப் பொடியாகவும் (சுண்ணம். இக்கால பயன்பாடாக வைரமுத்து அந்நியனில் எழுதிய ”ஐயங்காரு வீட்டு அழகே”வைக் கேட்கவும்), குங்குமம், கோஷ்டம் (கோட்டம்) எனும் வாசனாதி திரவியம், ஏலக்காய்(ஏலம்), பூசியவர்களுக்குக் நடுங்கச் செய்யும் குளிர்ச்சி தரும் சந்தனம்(சந்தம்), மலைகளில் மலரும் சிந்தூரம் என்கிற வெட்சிப் பூ, கஸ்தூரி (நரந்தம்), புன்னை (நாகம்), கொன்றைப் பூ(கடுக்கை), அத்திப்பூ, வேங்கைப் பூ, கோங்கு, பச்சிலைகள், கண்டில் வெண்ணெய் எனப்படும் ஒரு பூண்டு வகையறா (பெருஞ்சீரகம் போலவாம்) அப்புறம் மலைச்சாரலிலிருந்து அடித்துக் கொண்டுவரப்பட்ட சுவைமிகுந்த தேனும் அகில் கட்டைகளோடும் வெள்ள நீர் கரை புரண்டு வருவதால் சரயு நறுமணம் வீசுகிறதாம்.

கூவத்தின் நறுமணத்தை முகர்ந்து கவி எழுத இப்போது ஒரு சென்னைக் கம்பன் இங்கில்லை என்று இதைப் படிக்கும் உங்களது ஆதங்கம் புரிகிறது.

இதுபோல சரயு நதியின் வெள்ளப் பெருக்கை ஆற்றுப்படலம் முழுவதும் பேசியிருக்கிறார் கம்பர். அந்நதியின் வெள்ளப் பிரவாகத்தைப் பற்றிச் சொல்லும் ஒரு அற்புதமான பாட்டோடு இந்த ஆற்றுப்படலத்தை முடித்துக்கொண்டு அடுத்து 61 பாடல்கள் அடங்கிய நாட்டுப் படலத்துக்குச் செல்லலாம்.
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,
    மருதத்தை முல்லை ஆக்கிப்
புல்லிய நெய்தல் தன்னைப்
    பொரு அரு மருதம் ஆக்கி,
எல்லை இல் பொருள்கள்
    எல்லாம் இடை தடுமாறும் நீரால்
செல் உறு கதியில் செல்லும்
    வினை எனச் சென்றது அன்றே.

ஒரு திணையை மற்றொரு திணையாக மாற்றும் வல்லமை படைத்தது சரயு என்கிற அர்த்தத்தில் இதை எழுதினாலும் கடைசி ஈரடியில் ஒரு ஒப்பற்ற தத்துவத்தை இப்பாடலின் மூலம் நம்முன் வைக்கிறான் கம்பன். குறிஞ்சியில் புறப்பட்ட சரயுவின் வெள்ள நீரானது குறிஞ்சி நிலத்துப் பொருட்களைக் கொண்டு வந்து முல்லையில் சேர்த்தது பின்னர் முல்லையில் அடித்துவரப்பட்ட பொருட்களினால் மருதத்தை முல்லையாக்கியது இறுதியாக கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தலை மருதமாக்கியதாம். மருதநிலத்தில் வாழ்ந்தவனான கம்பன் பொருஅரு(ஒப்பற்ற) என்று தன்நிலமான மருதத்தை வர்ணிக்கிறான். புல்லிய(இழிந்த) x பொருஅரு(ஒப்பற்ற). நெய்தல் புல்லியது. மருதம் பொருஅருவானது. இப்படி ஒரு திணை மற்றொரு திணையாக உருமாறுவது திணை மயக்கம் என்ற வகையறாவில் அடங்குகிறது.

ஒவ்வொரு நிலமும் பிற நிலத்தின் தன்மையால் நிலைமாறுவது போல ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பிறவியிலும் அவன் செய்த தீவினை நல்வினைகளுக்கேற்ப புண்ணியங்களும் பாபங்களும் பிறவிதோறும் தவறாது அடைந்து அவனைத் தடுமாறச் செய்கிறது என்கிற  தத்துவத்தை இந்த எடுத்துக்காட்டின் மூலமாக கம்பன் விளக்குகிறான்

சரயு ”பார் கிழிய நீண்ட”து என்று அதன் பிரம்மாண்டத்தை ஒரு பாடலிலும், மதம் ஒன்றே என்பதற்கு சான்றாகவும் சரயுவின் வெள்ளப்பெருக்கை பரம்பொருளாகப் பாவித்து “பல்பெரும் சமயம் சொல்லும் (பரம்)பொருளும் போல் பரந்தது அன்றே” என்று இமயத்தில் பிறந்து(கல்லிடைப் பிறந்து) கடலில் சேர்ந்த தண்ணீரானது(கடலிடைக் கலந்த நீத்தம்) தான் வரும் வழிகளில் குளமாக, குட்டையாக, வாய்க்காலாக, ஏரியாக பரவிக் கிடக்கிறது.

இப்படி பல வகைகளாகப் பரவிக்கிடப்பதெல்லாம் பல மதங்களாகவும், பல சாதிகளாவும், இனங்களாகவும், பல ரூபத்திலும், பல பெயர்களில் வழங்கப்படுகிறதென்றும் கடைசியில் அனைத்தும் பரம்பொருளைத்தான் குறிக்கின்றன என்பதற்கும் உவமையாகச் சொல்கிறான். சமயசார்பற்ற கம்பன் என்ற பொருளில் ஒரு மணி சொற்பொழிவாளர்கள் பேசுவதற்கு ஏற்ற இடம் இது. ஆற்றுப்படலத்தின் கடைசிப் பாடலில் சரயு நதியானது அந்நாட்டு மக்களுக்கு உயிருக்கு இணையாக உள்ளது என்று நிறைவாக எழுதி மகிழ்கிறான்.

இப்பத்தியில் எழுதியது போக எனக்குப் பிடித்தச் சில சொற்பிரயோகங்களை எ.பி.சொ என்று கொசுறு போலப் பதிவின் கடைசியில் தரலாம் என்று விருப்பம்.

எ.பி.சொ: அகில் சேறு - சந்தனக் குழம்பு, புள்ளி மால் வரை - பெருமையுடைய இமயம் வரை, உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கெலாம் - கடல்சூழ்ந்த நிலத்து உயிர்கலுக்கெல்லாம், மறிவிழி ஆயர்மாதர் - மான்விழி ஆயர்குலப் பெண்கள், சேத்த நீர்த் திவலை - சிவந்த நீர்த் துளி.

#இத்தோடு ஆற்றுப்படலம் முற்றிற்று. ”கம்பராமாயணம் ஃபார் டம்மீஸ்” என்கிற ரீதியில் எழுதிவருகிறேன். என்னுடைய புரிதலுக்கேற்ப இந்த எழுத்து அமைந்திருக்கிறது. கம்பனைப் படிக்கவேண்டும் என்ற உந்துதல் உள்ளவர்கள், பேரறிஞர்களின் உரைகளைப் படிப்பதற்கு முன்னர் ஒரு சாதாரண ஆரம்பப் புரட்டலுக்கு இதைப் படிக்கலாம்.

தொடர்புடைய சுட்டிகள்.
இசையறியும் பறவை.
பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை

 

Saturday, November 10, 2012

லட்டில்லாமல் வாழ்தல் அரிது!

செவ்வாய்க்கிழமை தீபாவளின்னா சனி ஞாயிறு வாக்கிலதான் பட்சணம் செய்ய ஆரம்பிப்பாள் பாட்டி. பரணில் தூசியாய்க் கிடந்த பெரிய ஜாரணி கரண்டியை கீழே இறக்கி கிணற்றடியில் போட்டு அலம்பிக்கொண்டிருந்தால் அன்றைக்கு லட்டு பிடிக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். எந்த தீபாவளிக்கும் லட்டே பிரதான பட்சணம். ஆனால், ஒவ்வொரு தீபாவளிக்கும் ஒரு தனி ருஜியாய் இருக்கும்.

பத்து பதினோறு மணிக்கு ரமா பாட்டி “சின்தம்பி....” (சின்னதம்பி
) என்று சிரித்தபடியே நிலைவாசப்படியை சப்போர்ட்டாக பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தால் அன்றைக்கு லட்டு பிடிப்பது சர்வ நிச்சயம் என்பது ஊர்ஜிதமாகிவிடும்.


அடுப்பில் எண்ணை சட்டியை ஏற்றி பூந்தி பொரியும் ஓசை காதுக்கினிமை. ஹாலில் உட்கார்ந்து கேரம்மில் ரெட் அண்ட் ஃபாலோவுக்கு எய்ம் பண்ணிக் கொண்டிருந்தாலும் காதும் மூக்கும் சமையற்கட்டே கதியென்று பழியாய்க் கிடைக்கும்.

பூந்தியை ஒரு சம்படத்தில் எடுத்து கொட்டி வைத்துவிட்டு அடுத்தது சர்க்கரைப் பாகு காய்ச்சும் மணம் வீட்டை நிரப்பும். ஸ்வாசத்தில் நுழைந்த அந்த மணத்தில் மனம் சர்க்கரையாய்க் கரையும். ரெட்டாவது ஃபாலோவவது லட்டை ஃபாலோ செய்வதுதான் மோட்சத்திற்குண்டான வழி என்று பூஜை ரூம் தாண்டி சமையற்கட்டின் நிலைவாசப்படியில் நின்று எட்டிப்பார்த்தால் லட்டுக்கு ஒரு கிராம்பு, ஒரு கிஸ்மிஸ் டைமண்ட் கல்கண்டு என்று விகிதாசார வித்தியாசமில்லாமல் கலந்து ரமாபாட்டி பிடித்துக்கொண்டிருப்பாள். வாயை ”ஆ”+”ஆ” என்று திறந்தால் சரியாய் ஒரு லட்டு உள்ளே போகும். அதான் சைஸ்.

“பாட்டி..............”

“போடா! இப்பெல்லாம் சாப்டப்படாது. போ..போ......” என்று என் பாட்டி விரட்டினாலும்...

“கொழந்தேளுக்குதான் மொதல்ல. இது ஒண்ணும் நேவேத்தியம் கிடையாது. அப்புறம் என்ன? இந்தாடாம்பி... வா..வா..” என்பாள் ரமா பாட்டி.

என் பொருட்டு அன்று என்னுடன் கேரம் விளையாடும் அனைவருக்கும் தீபாவளி லட்டு. கொஞ்சம் கொஞ்சமாக கடித்துச் சாப்பிட்டால் தேவாமிர்தம். உள்நாக்கு வரை தித்திக்கும். லட்டுவின் டேஸ்ட் எதிரே சாப்பிடுபவரின் கண்களில் தெரியும்.

திண்டித் தின்காமல் என் பால்ய பருவம் இருந்ததேயில்லை. நிலக்கடலை சாப்பிட்டால் கூட “பாட்டி! கடைசிக் கடலை சொத்தை.. உன்னுட்ட இருக்கறதுலேர்ந்து ஒண்ணு குடேன்.” என்று திண்டித் தின்பேன்.

“பாட்டீ......... பாட்டீ.............”

“என்னடா?”

”இன்னோன்னு”

”அக்கா! இதுக்குதான் இந்தப் பயலுக்கு குடுக்க வேண்டாம்னேன்” என்று எகிறுவாள் என் பாட்டி. ரமாபாட்டி என் பாட்டிக்கு அக்கா வயசு.

“இதுக்குமேல கெடையாது” என்று இடது கைக்கு ஒன்று கிடைக்கும்.

தீபாவளி முடிந்து பத்து நாட்கள் வரை பல் தேய்த்து முடித்தவுடன் லட்டு, தேன்குழல் மற்றும் காஃபி (LTC) சாப்பிடுவது என்பது என் இளவயது கலாச்சாரமாக இருந்தது. சில நாட்களில் இது ரிப்பீட் போகும்.

அன்பைச் சேர்த்து ஆத்தில் பிடிக்கும் லட்டுவை ஸ்ரீகிருஷ்ணாவோ ஏஏபியோ தி கிராண்ட் ஸ்வீட்ஸோ அடித்துக்கொள்ள முடியாது. ஃப்ரெஷ்ஷான லட்டுக்கு இணையாக உசிரைத் தவிர நம்மிடத்தில் இருக்கும் எதைக் கேட்டாலும் அர்பணித்துவிடலாம். லட்டு சாப்பிட உசுரு வேண்டும்.

#லட்டில்லாமல் வாழ்தல் அரிது!
##படத்திலிருக்கும் லட்டு இணைய தேடலில் கிடைத்தது.

Thursday, November 8, 2012

முட்டாள் ராஜாவும் மங்குனி மந்திரியும்


கைவசம் ஒரு ராஜா கதை இருக்கு. அதை இப்படிதான் சம்பிரதாயமா ஆரம்பிக்கணும். ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம். அவன் ஒரு முட்டாள் ராஜா. அவன் தான் அப்படின்னா அவனுக்கு வாய்ச்ச மந்திரியும் அவனை விட கடைந்தெடுத்த முட்டாள். இரண்டுபேரும் சேர்ந்து கிரீடத்துக்குள்ள பொரிகடலை போட்டு பொழுதன்னிக்கும் தின்னுகிட்டிருப்பாங்களாம். முட்டாள்தனமான தர்பாரால் நாட்டையே குட்டிச்சுவராக்கிட்டாங்களாம். மக்களுக்கும் வேற வழி தெரியாம இந்த முட்டாள் ராஜாவையும் மந்திரியையும் சகிச்சுக்கிட்டு காலத்தை தள்ளிக்கிட்டிருந்தாங்களாம்.

ஒரு நாள் ஒரு பொம்பளை கண்ணீரும் கம்பலையுமா “ராஜா! நீங்கதான் இதுக்கு ஒரு நியாயம் சொல்லணும்”னு வந்து தர்பார்ல கையைப் பிசிஞ்சிகிட்டு நின்னாளாம்.

சுத்திலும் திருதிருன்னு முழிச்சுப் பார்த்துட்டு “என்ன வேணும்?”ன்னு கேட்டான்.

“எங்க வீட்ல ஒரு திருடன் கன்னக்கோல் போட்டான். அப்படி போடும்போது மொத்த சுவரும் இடிஞ்சு விழுந்திடுச்சு. வீட்ல இருந்த கொஞ்ச நஞ்ச பொருளையும் அவன் கொள்ளையடிச்சுக்கிட்டு ஓடிப்போயிட்டான். நீங்கதான் என்னை காப்பாத்தணும். இதுக்கு ஒரு வழி சொல்லணும்”ன்னு அழுதுகிட்டே கேட்டாள்.

இதுவரைக்கும் யாருமே இப்படி திடுதிப்புன்னு அவன் கிட்ட நீதி நியாயம்னு கேட்டு ஒருநாளும் வந்ததில்லை. என்ன சொல்றதுன்னு புரியாம

“சுவர் இடிஞ்சு விழுந்திடுச்சுல்ல. உன் வீட்டைக் கட்டின கொத்தனாரை அழைச்சுக்கிட்டு வரச்சொல்றேன். அவனுக்கு தண்டனை கொடுத்தா எல்லாம் சரியாப்போய்டும்”ன்னு சொல்லிட்டு “யாரங்கே!”ன்னு வாயிற்காப்போனை கூப்பிட்டு “இந்தம்மாவின் வீட்டைக் கட்டின கொத்தனாரை கொத்தாகப் பிடித்து இழுத்துவாருங்கள்”ன்னு சொல்லி கட்டளை போட்டான்.

ஒரு பத்து நிமிஷத்தில அரையில வேஷ்டியோட தலைக்கு இருந்த முண்டாசை எடுத்து கக்கத்தில் சொருகிக்கொண்டு “கும்பிடறேன் ராஜா”ன்னு வந்து நின்றான் அந்தக் கொத்தனார்.

“இந்தம்மாவோட வீட்டை நீ சரியாக் கட்டலை. வீடு இடிஞ்சு விழுந்துடுச்சு. வீட்ல கொள்ளை போயிடுச்சு. எல்லாத்துக்கும் நீதான் காரணம். நாளைக்கு காலையில உனக்கு தூக்குத் தண்டனை”அப்படின்னு சொல்லி தீர்ப்பு வழங்கிட்டான்.

பிராந்து கொடுத்த பொம்பளைக்கே என்னவோ போல ஆயிடுச்சு. திருட்டுப் போனப் பொருளை கண்டு பிடிச்சுக் கொடுக்காம எப்பவோ வீடு கட்டின ஆளை தூக்குல போடறானே இந்த கேன ராஜா அப்படின்னு அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது.

கொத்தனார் இதிலேர்ந்து தப்பிக்க ஒரு யோசனை பண்ணினான்.

“ராஜா! இந்த தப்பு நான் பண்ணியிருந்தாலும். நான் மட்டுமே காரணமில்லை. நான் கலவையைப் பூசும் போது களிமண் பிசைஞ்சு கொடுத்தான் பாருங்க. அவன் மேலையும் தப்பு இருக்கு. அவன் தான் தண்ணிய கூட ஊத்திட்டான். அதனாலதான் சுவரு ஸ்ட்ராங்கா இல்லை”ன்னு நைசாக நழுவினான்.

“அந்த சித்தாளைக் கூப்பிடுங்க. நாளைக்கு அவனுக்கு தூக்கு தண்டனை ”ன்னு உத்தரவு போட்டான்.

சித்தாள் தர்பார் வரத்துக்கு முன்னாலையே ஊர்பூராவும் இந்த விநோத வழக்கைப் பற்றி பேசிக்கிட்டிருந்தாங்க. வந்தவன் தயாராய் ஒரு பதிலோட வந்தான்.

“ராஜா! இது என் தப்பில்லை. நாலு குடம் தண்ணி ஊத்துன்னு சொன்னாரு. நான் ஊத்தினேன். மத்தபடி பானையை பெருசா செஞ்சாம் பாருங்க அந்தக் குயவன். அவன் தப்புதான் இது. அவனைக் கேளுங்க”ன்னு கையைக் காட்டி விட்டுட்டான்.

“அந்த குயவனைக் கொண்டு வாங்க. நாளைக்கு அவனுக்கு தூக்கு”ன்னு பிரகடனம் பண்ணினான்.

ஊருக்கே தெரிஞ்ச விஷயம், அந்தக் குயவனுக்கும் தெரிஞ்சிருந்தது. அவன் உள்ள வரும் போதே சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணிக்கிட்டே வந்தான்.

“ராஜா! நீங்க நல்லா இருப்பீங்க. பானையை பெருசாப் பண்ணினது என் தப்பில்லை ராஜா. நான் இந்தப் பானையைப் பண்ணிக்கிடிருக்கும்போது குறுக்கும் நெடுக்குமா அந்த தாசிப்பெண் போய்ட்டு வந்துகிட்டிருந்தா. அதுல கண்ணை மேய விட்டுட்டு பானையை பெருசாக்கிட்டேன். அவ தான் இதுக்கெல்லாம் காரணம். என்னை விட்டுடுங்க.”ன்னு கெஞ்சினான்.

”அந்த தாசியை அழைச்சுக்கிட்டு வாங்க. நாளைக்கு அவளுக்கு தூக்கு”ன்னு உத்தரவிட்டான் அந்த முட்டாள் ராஜா.

நிறைய கஸ்டமர்களை கொண்ட அவளுக்கு உடனே விஷயம் தெரிஞ்சுபோச்சு. தர்பாருக்குள்ள நுழைஞ்சவுடனேயே நளினமா அபிநயம் பிடித்து வணக்கம் சொன்னாள். எப்படி இப்படி ஒரு ஃபிகரை நாம பார்க்காம விட்டோம்னு ராஜாவுக்கு வாய் திறந்து ஜொள்ளு ஊத்த ஆரம்பிச்சுது.

“ராஜா! நான் குறுக்கும்நெடுக்குமா போய்கிட்டிருந்தது உண்மைதான். ஆனா அதுக்காக் நீங்க என்னை தூக்கில போடக்கூடாது. அந்த துணி தோய்க்கும் சலவைக்காரனைதான் தூக்கில போடணும்.”னா.

முட்டாள் ராஜா “ஏன்?”னு கேட்டான்.

“அவன்கிட்ட நல்லதா துணி ரெண்டு துவைக்க போட்டிருந்தேன். எனக்கு அன்னிக்கு நாட்டியக் கச்சேரி இருந்தது. அவன் இன்னிக்கி தரேன். நாளைக்கு தரேன்னு என்னை அலைக்கழிச்சான். அதுக்காத்தான் நான் குறுக்கும் நெடுக்குமா போயிக்கிட்டிருந்தேன். அதனால நீங்க அவனைதான் தூக்கில போடணும்”ன்னு விண்ணப்பிச்சுக் கேட்டுக்கிட்டா.

“அந்த சலவைக்காரனை அழைச்சுக்கிட்டு வாங்கப்பா. நாளைக்கு அவனுக்கு தூக்கு”ன்னு ரொம்ப நொந்து போய் டயர்டாகிச் சொன்னான் ராஜா.

சலவைக்காரனுக்கு ந்யூஸ் போய் ஒரு மணி நேரமாச்சு. அவன் தயாரா ஒரு பதிலோட உள்ள வந்தான்.

“ராஜா! அந்தம்மா சொல்றது சரிதான். ஆனா என் மேல ஒண்ணும் தப்பில்ல. நான் துணி துவைக்கிற கல்லுல ஒரு சாமியார் தியானம் பண்ணிக்கிட்டு உட்கார்ந்திருந்தாரு. அவரை எப்படி எழுப்பறதுன்னு தெரியலை. அதனால அந்த சாமியாரைத்தான் நீங்க விசாரிக்கணும்”ன்னு சொல்லிவிட்டு கழண்டுகிட்டான்.

“இந்த தடவை எவனாயிருந்தாலும் எங்கிட்டேயிருந்து தப்பமாட்டான். அந்த சாமியாருக்கு நாளைக்கு தூக்கு.”ன்னு சொல்லிட்டு “அந்த சாமியார் வர்றவரைக்கும் எல்லோரும் போய் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வாங்க”ன்னு டீ ப்ரேக் விட்டுட்டு அரியாசனத்துலேர்ந்து எழுந்து போய்ட்டான்.

ஒரு பத்து நிமிஷம் கழிச்சு சாமியார் உள்ள வந்தார். அவர் அன்னிக்கு மௌன விரதம்.

“நாளைக்கு காலையில சரியா பத்து பத்துக்கு உங்களுக்கு தூக்கு”ன்னு சொல்லிட்டு “சபை கலையலாம்”ன்னு கிளம்பினபோது அவையோர்கள் பகுதியின் கடைசியிலேர்ந்து “ஒரு நிமிஷம்”ன்னு ஒரு குரல் வந்தது.

ராஜாவும் மந்திரியும் குரல் வந்த திக்கில ஆச்சரியமாப் பார்த்தாங்க. நம்ம தீர்ப்புக்கு மறுத்து இந்த நாட்ல எவன் சொல்லுவான்னு “யாரது?”ன்னு ராஜாவும் பதிலுக்கு குரல் விட்டான்.

ஒரு மத்திம வயசு இளைஞன். நேரா எழுந்து சபையோட மத்திக்கு வந்தான். ராஜாவுக்கு வணக்கம் சொன்னான்.

“அரசே! சாமியாருக்கு நாளைக்கு எத்தனை மணிக்கு தூக்கு?”ன்னு கேட்டான்.

“பத்து பத்துக்கு”

“அப்படியா! ரொம்ப மகிழ்ச்சி. அந்த நேரத்தில என்னை தூக்கில போடுங்க”ன்னு கேட்டான். சபையே அதிர்ந்தது. அப்படியே நிசப்தமா ராஜாவையும் அந்த வாலிபனையும் மாறி மாறி பார்த்தாங்க.

ராஜா “ஏன்?”னு கேட்டான்.

”இல்ல. நாளைக்கு பத்து பத்துக்கு யார் தூக்கிலடப்பட்டு செத்துப்போறாங்களோ அவங்க தேவலோகத்துக்கே ராஜாவாகலாமாம். ஜோசியக்காரன் சொன்னான்.”அப்படீன்னான்.

உடனே ராஜா, “யாரையும் தூக்கில போடவேண்டாம். என்னை போடுங்க”ன்னு சொல்லிட்டு தேவலோகத்துக்கே ராஜாவாகும் கனவுக்கு இன்ஸ்டெண்டா போய்ட்டான்.

அந்த இளைஞன் “ம்க்கும்.. மன்னா!”ன்னு கொஞ்சம் கனைத்துக் கூப்பிட்டு அந்த ராஜாவின் கனவைக் கலைத்து இன்னொரு விண்ணபமிட்டான்.

“என்னா?”ன்னு கேட்டான்.

“அரசே! அட்லீஸ்ட் நாளைக்கு பத்து பதினஞ்சுக்கு என்னை தூக்கில போடுங்க”ன்னான்.

ராஜாவுக்கு ஒரே வியப்பு. என்னடா எப்படியும் நாளைக்கு தூக்கில தொங்கணும்னு ஒருத்தன் நிக்கறானேன்னு “ஏன்?”ன்னு திரும்பவும் கேட்டான்.

“இல்ல! பத்து பதினைஞ்சுக்கு தூக்கில தொங்கி உசிரை விட்டா தேவலோகத்துக்கே மந்திரியாகலாம்னு இன்னொரு ஜோசியான் சொன்னான். ராஜாவாகத்தான் ஆகமுடியாது, மந்திரியாகவாவது ஆகலாமேன்னு ஒரு ஆசை”என்று தலையைச் சொரிந்தான்.

”நாளைக்கு பத்து பதினைஞ்சுக்கு இந்த மந்திரியை தூக்கில போடுங்க. நானும் அவரும் சேர்த்து தேவலோகத்தை ஆளப்போறோம். இதுதான் இறுதி தீர்ப்பு”ன்னு சொல்லிட்டு சபையைக் கலைச்சிட்டு உள்ள போயிட்டான்.

மறுநாள் தலைநகரமே சேர்ந்து அந்த ராஜாவையும் மந்திரியையும் அடுத்தடுத்து தூக்கில போட்டுட்டு அந்த இளைஞனைப் பாராட்டி அரியாசனத்துல அமர வைச்சாங்களாம்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails