உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்க சமீபத்தில் வெளிவந்த தினமணியின் செம்மொழிக்கோவை தமிழர்கள், அவர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், வணிகம், சைவம், வைணவம் மற்றும் ஜைனம் வளர்த்த தமிழ், தமிழ் நூல்கள், தமிழ் வளர்ச்சியில் நாவல்கள் (சுஜாதாவின் படத்தை பிரசுரித்து அவரைப் பற்றி ப்ரஸ்தாபிக்காதது கொஞ்சம் வருத்தமே), ஈழமும் தமிழும், தமிழர் ஓவியங்கள், தமிழிசை, வானொலி மூலமாக உலகும் முழுவதும் கேட்கும் தமிழ், மேடைத் தமிழ், இயற்றமிழ், இணையத்தமிழ், தெருக்கூத்து, கி. ராவின் பேச்சுநடை, தமிழர்களின் கட்டிடக்கலை என்று பல அறிய தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தது. விலை ரூ.200
அப்புத்தக பொக்கிஷத்திலிருந்து சில "மணி"கள்...
ஒன்று: ஆறு, ஏரி, குளம், கடல், ஊற்று, அருவி, கிணறு போன்றவை நாம் அறிந்த நீர் நிலைப் பெயர்கள். ஆனால், மொத்தம் ஐம்பது வகையான நீர் நிலைகளை "கம்பன் அடிப்பொடிக் கலைக் களஞ்சியம்" பட்டியலிட்டுள்ளது. அவற்றில் சில சுவையானவை..
இலஞ்சி - பல்வகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
குண்டு - குளிப்பதர்கேற்ற ஒரு சிறு குளம்
கூவம் - ஊர் ஒழிங்கிலமையாத கிணறு
கூவல் - ஆழமற்ற, கிணறு போன்ற ஒரு பள்ளம்
சேங்கை - பாசிக்கொடி மண்டிய குளம்
பிள்ளைக்கிணறு - குளம், ஏரியின் நடுவில் அமைந்த கிணறு
நீராவி - மையா மண்டபத்துடன் கூடிய பெருங்குளம்
இரண்டு: சங்க கால மகளிரின் விளையாட்டுகளாக கழங்காடுதல், ஊஞ்சலாடுதல், புலி புலி என்று கூவியவாறு வேங்கை மரத்தின் பூவைப் பறித்தல், வண்டல் மண்ணினால் சிறு வீடு கட்டி விளையாடும் பெண்கள் அதில் பாவை ஒன்றின் உருவத்தை வைத்து விளையாடி அப்பாவைக்கு பூவைப் பறித்து அணிவித்து மகிழ்ந்தார்கள்.
கவறு என்றழைக்கப்பட்ட கைகளை வைத்து விளையாடும் ஒருவகை சூதாட்டம் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. கவிஞர் ஒருவரும் மன்னன் ஒருவரும் ஒன்றாக அமர்ந்து சூதாடியபோது கவிஞர் ஆட்டத்தில் கள்ளத்தனம் செய்து விட, கோபம் கொண்ட மன்னன் சூதாடும் கருவியை கவிஞரின் நெற்றியில் எறிந்த நிகழ்ச்சியை "புறநானூ"ற்றுப் பாடல் ஒன்று பதிவு செய்துள்ளது. சூதாடுவதர்கேன்றே சில அமைப்புகள் இருந்துள்ளன. இதைக்
கழகம் என்றழைத்தனர்.
மேற்கூறிய தகவல்களை, சங்ககாலத் தமிழகத்தில் விளையாட்டு என்ற தலைப்பில் திரு. ஆ.சிவசுப்ரமணியனின் கட்டுரை இது.
மூன்று: தமிழ் நிகண்டுகள் என்ற தலைப்பில் முனைவர் திரு. ச.வே. சுப்ரமணியன் அவர்களின் கட்டுரையில் நாம் தமிழ் வார்த்தைகள் என்று நினைத்திருந்த பலவற்றை அயல்தேசத்து பாஷையின் வார்த்தைகள் என்று சில ஆராய்ச்சிகளின் முடிவில் ஆணித்தரமாக கூறுகிறார். நிகண்டு என்றால் அகராதி. தொல்காப்பியத்தில் அடிச்சொற்களாக 3,128 சொற்கள் மட்டுமே இருந்ததாகவும் அது சங்க இலக்கிய காலத்தில் 10,000 வரை இருக்கலாம் என்றும் 20 -ம் நூற்றாண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழ்ப் பேரகராதி 1,24,425 சொற்களை உள்ளடக்கியது என்று குறிப்பிடுகிறார். இதனால் தான் அக்காலத்தில் ஒரே சொல் பல பொருட்களை தரும்படி அமைத்தார்கள். சுத்த தமிழில் பேசுவோம், பாட்டு எழுதுவோம் என்றெல்லாம் பலர் ஜல்லியட்டிக்கும் போது இவர் கொடுத்த லிஸ்ட் சற்று கண்ணுயரவைக்கிறது. வடநாட்டு சுல்தான்கள் ஆண்ட போது உருது, பாரசீகம், இந்துஸ்தானி சொற்களும், தெலுங்கர்கள் ஆண்ட போது தெலுங்கும் தமிழில் மிகுதியாக கலந்தன என்று குறிப்பிடும் அவர் எழுதிய அந்தக் கட்டுரையில் இருந்து ஒரு சில..
தெலுங்கு சொற்கள்: அட்டிகை, இலாடம், இராணுவம், ஒட்டியாணம் கலவரம், நிம்மதி, பித்ததலாட்டம்
உருது சொற்கள்: அசல், அபின், ஆசாமி, கலாட்டா, காராபூந்தி, கூஜா, சீனி, டப்பா, ஜரிகை.
அரபுச் சொற்கள்: அல்வா, அமல், மசோதா, வாரிசு, வசூல், நகல், பாலம், மராமத்து
ஹிந்துஸ்த்தானி சொற்கள்: ஜிலேபி, ஹர்த்தால், முண்டாசு
பாரசீகச் சொற்கள்: சாமான், சராசரி, சவுக்கு சிப்பாய், ஜவன், பைசா, லுங்கி.
போர்த்துகீசியச் சொற்கள்: ஆயா, ஏலம், கடுதாசி, சாவி, மேசை, மேஸ்திரி
பிரஞ்சுச் சொற்கள்: அபேஸ், சாம்பிராணி, தம்பூரா
ஆங்கிலச் சொற்கள்: அப்பீல், அலாரம், பாட்டில்
நான்கு: மொழி என்பது எழுத்தா? பேச்சா? என்ற நெல்லை சு.முத்துவின் கட்டுரை அருமையிலும் அருமை. மீன்கள் முதல் முதலைகள் வரை - மனிதர்கள் இனத்திலும் ஃபாக்ஸ்பி2 (FOXP2) என்ற மரபணுதான் மொழியறிவுக்கு பொறுப்பு வகிக்கிறதாம். ஆனால் இந்த ஃபாக்ஸ்பி2 மாறாமல் இருந்தால் மரமும், கிளைகளும் தாவும் நம் மூதாதையர் போல் நாமும் பேசாமல் இருந்திருப்போம் என்கிறார்.
அப்பாடி! இப்படியாக உலகத் தமிழ் மாநாடு கண்ட செம்மொழியாம் தமிழ்மொழிக்கு நானும் ஒரு சிறு தொண்டாற்றிவிட்டேன்.
செந்தமிழும் நாப்பழக்கம். இன்னும் கொஞ்ச காலத்தில் "ழ" என்ற அழகே தமிழுக்கு மறைந்துவிடும் அபாயம் உள்ளது. ஆகையால் இனிமேலாவது நாக்கையும் வாயையும் நற்றமிழுக்காக உபயோகித்து உச்சரிக்க இயலாதோர் மொழியிலிருக்கும் வால்க தமிள் வாழ்க தமிழாகட்டும்.
படம்: தமிழன்னை
பட உதவி: http://www.tamildesam.org/