Monday, June 21, 2010

கேரட்டும் கேளிக்கையும்




நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த 2010 விக்ருதி வருஷ  ஜூன் மாதத்தில் சில பேருக்கு தற்போதைய முதுகு சாய்க்கும் நாற்காலியிலிருந்து தலை சாய்க்கும் அளவிற்கு சாய்வு நாற்காலி பெரியதாயிருக்கலாம், மாதத்திற்கு இரண்டு சனிக்கிழமை இரவுகள் பீர் குடிப்பது நான்கு சனிக்கிழமைகள் வயிற்றுப் பானைக்குள் ஊற்றிக்கொள்ளும் அளவிற்கு ஊதியம் உயர்ந்திருக்கலாம், மத்திமர்களுக்கு பிள்ளைகளின் ஸ்கூல் பீஸ் இத்யாதிகள் கட்டிய பிறகு ஏதாவது இரண்டு வார விடுமுறைகளில் சரவணபவனில் பசியாற பணம் கிடைத்திருக்கலாம், இன்னும் சிலர் ஸ்விஸ் பாங்கில் கரண்ட் அக்கவுன்ட் சேர்க்கும் அளவிற்கு மூட்டையாக வண்டியில் ஏற்றி வீட்டுக்கு போயிருக்கலாம். இதில் சிலர் ஓடி ஓடி ஓடாய் தேய்ந்து  தினமும் ஒன்பது மணிவரை உழைத்திருக்கலாம், சிலர் வெட்டியாய் பல் குத்தி, சீட் தேய்த்து, அதிகாரிக்கு முதுகு சொரிந்து, மற்றவர் மேல் ஏறி அமர்ந்து தனது பர்ஸை நிரப்பியிருக்கலாம்.  சிலர் பார்க் ஷெரட்டனில் பார்ட்டி கொடுக்கும் அளவிற்கு மகிழ்ந்திருக்கலாம், சிலர் "மவனே இரு உன்ன வச்சுக்கறேன்.." என்று கொதித்து போய் தக்க சமயத்தில் தவிக்கவிட உள்ளுக்குள் கருவிக்கொண்டிருக்கலாம், மற்ற சிலர் தற்போது வேலை செய்யும் நிறுவனத்திற்கு "டாட்டா பை  பை " காண்பித்திருக்கலாம்.

எது எப்படியோ, 250 வருடங்களாக லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியிலிருந்து மனித சமுதாயத்திற்கு ஞானப் பால் புகட்டும் தொண்டு சேவையில்  ஈடுபட்டிருக்கும் RSA என்ற அமைப்பு மக்களுக்கு பயன்படும் பல நல்ல அறிய தகவல்களை ஒரு சிறந்த கல்வியாளர் அல்லது புகழ்பெற்ற சிந்தான சிற்பி ஒருவரை சிறப்புரை ஆற்ற வைத்து அவர் பேச்சின் ஒலிப்பின்னணியில் கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் மூலம் ஒரு வெள்ளை பலகையில் கருப்பு சிகப்பில் படத்துடன் வரைந்து காண்பிக்கிறார்கள்.

அல் கோர் அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்தபோது அவர்க்கு பேச்சு தயாரித்துக் கொடுத்த டான் பிங்க் என்ற கனவான் நம்மை ஊக்கப்படுத்தும் காரணிகளைப் பற்றி சப்பளாக்கட்டை இல்லாமல் உபன்யாசிக்க பின்னே மார்க்கர் பேனா கொண்டு வரைந்து தள்ளியிருக்கிறார்கள். இவர் எழுதிய பல நூல்கள் நியூ யார்க் டைம்ஸ் போன்ற புகழ் பெற்ற பத்திரிகைகளின் பதிப்பாக வெளிவந்திருக்கின்றன. நிறைய நன்றாக  மில்லியன் கணக்காக விற்றுத்தள்ளியவை. பணியில் நம்மை உற்சாகப்படுத்தும், ஊக்கப்படுத்தும் காரணிகள் பற்றி லண்டன் மற்றும் இந்தியாவில் இங்கிலாந்தின் M.I.T நடத்திய ஒரு ஆய்வில் கிடைத்த சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் இணைத்திருக்கும் வீடியோவில் அவர் பகிர்ந்துகொள்கிறார்.  ஆய்வின் இரு முக்கிய தகவல்களாக

ஒன்று:
எந்த இடத்திலும் எந்நேரத்திலும் ஆணி புடுங்குதல், மூட்டை தூக்கி பிழைத்தல், ஒரு  மணி நேரத்தில் 100 சட்டைக்கு வைத்த கை எடுக்காமல் காஜா எடுத்தல், ரோட்டோரங்களில் ஐந்தடி ஆழத்திற்கு அயராமல் தோண்டுதல் மற்றும் இதுபோன்ற உடலுழைப்பை கொண்டு செய்யப்படும் வேளைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு துட்டு நிறைய கொடுத்தால் வேலையும் நிறைய செய்வார்கள். அவர்களுக்கு அதுவே டானிக். வேலைச் சோர்வை நீக்கும்.

இரண்டு:
ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு மக் டீயை மேசையின் மேல் வைத்துக் கொண்டு, மானிடர் பார்த்துக்கொண்டு பொட்டி தட்டுபவர், மென்பொருள் தயாரிப்பவர் மற்றும் அலுங்காமல் குலுங்காமல் ANCHOR அடித்தது போல உட்கார்ந்து அறிவுசார் தொழில் புரிவோருக்கு பணப்பையின் கனத்தை மட்டுமே அதிகரிக்க அதிகரிக்க வேலை செய்வது மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவை குறைகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்க்கு பதிலாக FUN ஆக்டிவிட்டிகள் மூலமாகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் முடியும் என்கிறார்கள். இதுவே இவர்களுக்கு கிரியாஊக்கி.

ஓவர் டு டான் பிங்க்: ( ஒரு பத்து நிமிடம் பிரமாதமாக பேசுவார். நன்றாக இருக்கும்)







பட உதவி: http://www.betterresponseblog.com

டிஸ்கி: எந்த உழைப்பாளிக்காவது எந்த நிர்வாகமாவது இந்த முறை அள்ளிக்கொடுக்காவிட்டலும் கிஞ்சித்தும் ஒரு கிள்ளு கிள்ளியாவது (அவர்களது கஜானாவிலிருந்து, உங்களை அல்ல )  ஏதும் தராமல் இருந்தால், கிடைக்காமல் இருந்தால், இந்த வீடியோ வெறுப்பேற்றியிருந்தால், தயவு செய்து மன்னிக்கவும்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails