Wednesday, June 9, 2010

காதல் நரம்பு

scifi


"எவ்வளவு ஆவும்?"
"அம்பது கோடி"
"அம்பது கோடி? டூ மச். ரொம்ப ஜாஸ்தி"
"அந்த காலத்த நினைச்சு பாரு...இது மாதிரி முடியுமா? பாத்து, பேசி, பழகி...."
"இருக்கலாம்.. ஆனாலும் இது ரொம்ப ஜாஸ்தி.."
"இதுக்குதான் அம்பது கோடி.. வேற ஏதாவது காமி ரேட் குறையுமான்னு பார்க்கலாம்"
"நானே போய் பேசிப் பார்த்துடலாம்.."
"நாங்களா தடுக்கறோம்.. போய் பாருங்க.."
"கொஞ்சம் பார்த்து சொல்லுப்பா..." என்று ஐம்பதாவது முறையாக மண்டியிட்டு கேட்காத குறையாக கேட்டுவிட்டேன். ஆசை யாரை விட்டது. இந்த விலை படியாத போதுதான் பல இளைஞர்கள் விர்சுவல் ரியாலிட்டிக்கு போயிடறாங்க.

"இங்க பாருப்பா கௌஷிக்... நீ நரசுக்கு தெரியும்னு தான் இந்த ரேட்டு.. முடியாதுன்னா விடுப்பா.. கவர்ன்மென்ட்டுல கூட ஏக கெடுபிடியா இருக்கு.. இதுக்கு தண்டனை என்ன தெரியுமா? HPZ(Highly Polluted Zone) ஜெயில்ல ஆறு மாசம். பழைய பாட்டரி, இருபதாம் நூற்றாண்டு கம்ப்யூட்டர் மானிடர், இத்துப்போன டி.வி, எலெக்ட்ரானிக் ஐட்டங்கள் எல்லாத்தையும்  ரீ-சைக்கிள் பண்ற இடம். உள்ள இருந்துட்டு வந்தா தெரியும். இந்த இந்தப்பக்க காதும் அந்தப்பக்க கண்ணும் ஏன் இப்படி கருப்பா சூம்பிப் போன மாதிரி இருக்கு தெரியுமா? போன ஜூன்ல போயிட்டு வந்தேன்.. அதனாலதான்.."

புரோக்கர் கறார் பேர்வழி. கொஞ்சமும் இறங்குவதாக இல்லை. ஆதி காலத்தில் ஏதோ கல்லாம், ஊருக்கு வெளியே இருக்குமாம். பேரு இளவட்டக் கல்லாம்.தலைக்கு மேலே தூக்கி  நிரூபிச்சா போதுமாம். அப்படி இருந்தா எவ்வளவு ஈசி. போன வாரம் ப்ரௌனி வீட்டுல கூட ஏதோ பழைய படத்துல அந்த காலத்துல போட்டுகிற வெள்ளை வேஷ்டி சட்டை போட்டுக்கிட்டு ஒரு வயசான ஆளு அந்த மாதிரி ஒரு பெரிய கல்லை எடுத்து அந்தண்டை போட்டுட்டு ஒரு சிரி சிரிச்சுட்டு போனார். படம் பேரு சரியா தெரியலை, ஏதோ "மல்லு வேட்டி கட்டி இருக்கு.. அதுல மஞ்ச வந்து ஒட்டிக்கிச்சு" அப்பிடின்னு ஒரு பாட்டு பாடிச்சு.  

ஆனா இந்த மெதட் இப்பதான் லேட்டஸ்ட் ஹிட் ஆயிருக்கு. 100% கியாரண்டி. நாம நினைச்சதை நிச்சயமா அடையலாம். போன வாரம் அந்த ஒட்டடை குச்சி நரசிம்மன் கூட நூறு மாடி "Splendor" பஜார் முழுவதும் பளபளக்க ராஜநடை போட்டு கைகோர்த்து கூட்டிட்டு போனபோது பாதிபேர் இரை விழுங்க வாய்திறக்கும் முதலை மாதிரியும், உள்நாக்கு தெரியும்படியும் "ஆ" காட்டி கண்ணால் பார்த்ததை நெஞ்சுக்குள் விழுங்கினார்கள். யாரோ நகாசு வேலை நன்றாக தெரிந்த பயோ டெக்னாலஜிஸ்ட் தான் இப்படி திறமை முழுவதும் காண்பித்து விளையாடியிருக்கவேண்டும். எல்லாமே ஒரு மில்லி மீட்டர் குறையாம பார்த்து பார்த்து அளந்து செஞ்சு அசெம்பிள் பண்ணினாமாதிரி. 

நான் முடிவு செய்து விட்டேன், அடைந்தால் அனாமிகா இல்லையேல் விஷ காஸ் ஸ்டேஷன் சென்று ப்ராணஹத்தி செய்துகொள்வதென்று. இப்படி தன்னுயிரை மாய்த்துக்கொள்ள ஏதுவாக மக்களுக்காக ஊருக்கு ஒன்றாக அரசு அமைத்திருக்கும் "விஷ வாயு கொட்டகை' க்கு ஒரு நன்றி. சிடிசன் கார்டை பிளாக்-ல் விற்றால் ஐம்பது கோடி கிடைக்கலாம். "காதல் நரம்பு" ஊசியை அந்த புரோக்கர்  உதவியுடன் அவளுக்கு ஏற்றிவிட்டால்,  நம்மை பார்த்தாலே அவளுக்கு காதல் சுரக்கும். இந்த நூற்றாண்டில் நானும் நிஜ காதல் கொண்டேன் என்று எல்லோரிடமும் பிராட்காஸ்ட் செய்துகொள்ளலாம்.

ஸிந்தெடிக் ரோடில் டிராஃபிக் அதிகமாக இருந்ததால் தன்னுடைய எரிவாயு இருசக்கர வாகனத்தில் 'Flight Mode' அழுத்தி லேன்ட் ஆகும் விமானத்தில் அடிபடாமல் ஒரு 'கட்' கொடுத்து லோ பிளையிங்கில் ஆகாய மார்கமாக சிடிசன் கார்டை பிளாக் மார்க்கெட்டில் விற்க பறந்தான் கௌஷிக். 

இந்த சம்பவம் நடந்த 3030 AD யில் வெகுஜனங்கள் Virtual Reality -இல் கல்வி, காதல், கலவி மூன்றையும்  பெற்றார்கள். கௌஷிக் போன்றோர் ஒரு உயிரோட்டமுள்ள பெண் கழுத்தில் இருக்கும் காதல் நரம்பில் ஏவப்படும் அவர்கள் பற்றிய தகவல் அடங்கிய ஊசியால் உயிர்க்காதல் தமக்கு வாய்க்கப்பெற்றார்கள்.

பின்குறிப்பு: இது என்னுடைய சயின்ஸ்  பிஃக்ஷன் கதை எழுதும் 'கன்னி' 'கண்ணா' முயற்சி.

 படஉதவி: http://www.sciencefictiondestiny.com/

1 comments:

Anonymous said...

வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails