Thursday, June 3, 2010

மைக்ரோஸாஃப்ட் வழங்கும் சிரிப்பிற்கான சர்டிபிகேட்

Microsoft Certified Sirippu Professional    (MCSP)

ஜன்னல் தயாரிக்கும் கேட்ஸ் நகைச்சுவையுணர்வை வகைப்படுத்தி மைக்ரோஸாஃப்ட்  எஜுகேஷன் வலைதளத்தில் வெளியுட்டுள்ள ஒரு அட்டவணை என்னை கொஞ்சம் பாடாய் படுத்தியது. மின்சார அவனில் ஷாக் அடிக்காமல் சாப்பிடும்படி சமைப்பதற்கு, கால் கியர் உள்ள இரண்டு சக்கர வாகனத்தை இரு கை பிடித்து எதிரே வரும் மாமி மேல் விடாமல் ஓட்டுவதற்கு, "வாட் இஸ் யூவர் நேம்?" என்று கேட்டால் மூச்சு விடாமல் பேசி எதிராளி மூர்ச்சை ஆகும்படியாக நன்றாக வாயாடியாவதர்க்கு, மார்கழி மாதம் மட்டும் முதல் நாள் இரவே கோலம் போடுவதற்கு, கை காலை வானத்திற்கும் பூமிக்குமாக அசைத்து உடற்பயிற்சி என்று ஒன்று செய்வதற்கு, பொது இடங்களில் அனகோண்டா மாதிரி வாயை திறந்து எட்டூருக்கு கேட்கும்படி "ப்ஆ...ப்ஆ" என்று ஏப்பம் விடாமல் சாப்பிடுவதற்கு, நாய் குளிப்பாட்டுவது எப்படி?, புடவை தோய்த்தும் வீடு பெருக்கியும் கூட எப்படி பொண்டாட்டியிடம் அடி வாங்காமல் இருப்பது என்பதற்கு, மேலை நாட்டு பாணி கக்கூசுகளில் இரண்டு காலையும் கம்மோடு மேலே தூக்கி வைக்காமல் மலஜலம் கழிப்பதற்கு என்று ஒன்றுவிடாமல் எல்லாவற்றுக்கும் புத்தகம்/குறிப்புகள் போட்டது பத்தாமல் பல் காட்டி சிரிக்கத்தெரிந்த ஒரே விலங்கான மனிதனை அந்த விதத்திலும் வகை தொகை படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட். மொத்தம் நான்கு வகையறாக்கள். சாதாரண ஆள், மத்திம ஆள், முன்னேறிய ஆள், கை தேர்ந்த ஆள்.  என்னவென்று பார்ப்போம். இதற்க்கு கீழே அவர்களது அட்டவணை.

சாதாரண ஆள்:
  1. "ஈச்சட்டி தலையா, தேங்கா மண்டையா" என்றெல்லாம் திட்ட மாட்டார்கள்.
  2. கழிவறையிலிருந்து வெளிவரும் கவுண்டரை செந்தில் போல் "என்னன்னே சாப்டாச்சா?" என்று கேட்க மாட்டார்.
  3. மயான அமைதியும் கோபம் கொப்பளிக்கும் இடங்களில் புன்னகை மன்னன் சாப்ளின் கணக்காக சேஷ்டைகள் செய்து உக்கிரத்தை குறைப்பார்.
  4. கீழ்ப்பாக்கம் கேஸ் போல "ஹி... ஹி ..." என்று ப்ளாட்பாரம்களில் தனியாகவும் எதிர் ஆளை பார்த்தும் சிரிப்பார்.

மத்திம ஆள்:
  1. ஒரு பெரிய கும்பலை "அது அவ்வளவு பெருசு.." என்று 'கெட்ட' காரிய ஜோக்குகள் சொல்லி ஒன்றுபடுத்துவார்.
  2. பொண்டாட்டி வீட்டை விட்டு  ஓடிப்போனவரை பார்த்து "இன்று உன்னுடையது நேற்று மற்றொருவனிடம் இருந்தது" என்று கீதை சொல்லி இன்னொருவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் என்று சமாதானப்படுத்துவார்.
  3. விழுந்து விழுந்து சிரித்து அரை வேஷ்டி நழுவி கீழே விழும்படி செய்து  டியர்ட் ஆக்குவார். 
  4. காதில் "சேம் ப்ளட்" சொல்லும் வடிவேலுவிடம் தலையில் டீ ஊற்றி அசிங்கப்படும் விவேக் போல இருப்பார்.

முன்னேறிய ஆள்:
  1. செத்த வீட்டில் கெக்கேபிக்கே என்று சிரிக்க மாட்டார். "உனக்கு மட்டுமா பொண்டாட்டியா இருந்தா..ஊருக்கே... " என்று செந்தில் போல கதை பேச மாட்டார்.
  2. ஐயா மேல படுத்திருக்கார் என்று சொல்லும்போது நான் அப்புறம் பேசறேன் சொல்லும் எஸ்.வீ.சேகர் போல இருப்பார்.
  3. எங்கே ஜோக் சொன்னால் செருப்படி விழும் விழாது என்று நன்றாக தெரிந்து வைத்திருப்பார்.
  4. மேடை போட்டு கும்பல் கூட்டி சிரிப்பது கூட்டத்திற்கு உகந்தது என்று புரிந்து வைத்திருப்பார்.

கை தேர்ந்த ஆள்:
  1. நான், நீ, நாய், பூனை, சாமியார், மாமியார்  என எல்லாவற்றிலும் சிரிப்பே நீக்கமற நிறைந்திருப்பது என்பார்.
  2. தனக்கு ஜோக் சரியாக வராவிட்டால் யாரயாவது தனக்கு ஜோக்குக்கு துரோனாச்சாரியாராக இருக்க வேண்டி இறைஞ்சுவார்.
  3. நகைச்சுவை மூலம் இந்தியா பாக்கிஸ்தானுக்கு ஒரு நட்பு பாலத்தை உருவாக்குவார்
  4. அடுத்த ஆள் தன்னை ஓட்டினாலும் ரத்தம் வர பிறாண்டினாலும் அதற்க்கும் ஒத்துழைப்பார்.
(மைக்ரோசாப்ட்ன் அட்டவணை)  
சுட்டி: http://www.microsoft.com/education/competencies/humor.mspx

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails