Sunday, February 10, 2013

விஸ்வரூபம்

உலகநாயகனின் விஸ்வரூபம் கண்டு களிப்பதற்கு நிறைய உலக விஷயங்களும் விஞ்ஞான சங்கதிகளும் தெரியவேண்டியிருக்கிறது. பாப்கார்ன் கொரித்துக்கொண்டு பல்லிளித்துக்கொண்டு பொழுதுபோக்கலாம் என்ற திட்டத்தில் சாதாரணர்கள் தியேட்டருக்குள் நுழைந்தால் கதையைப் பின் தொடர சற்றே தடுமாறுவார்கள். ஃபைனல் எக்ஸாமிற்கு டிஸ்டிங்ஷன் வாங்கப் படிப்பது போல சிந்தனையைக் குவித்து சிரத்தையாக பார்க்கவேண்டிய/ரசிக்கவேண்டிய படம்.


”..க்காளி போடுறா அவனை” என்று கொக்கரித்து நடு வீதியில் எதிராளிகளைக் கூறுபோடும் யதார்த்த சினிமாக்களை எப்படி தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடுகிறோமோ அதுபோல சர்வதேச விவகாரங்களை மையமாக வைத்து மசாலாவுடன் எடுக்கப்பட்ட இப்படத்தையும் தாராளமாக மனமுவந்து கொண்டாடலாம். படத்தின் களம் ஆஃப்கானிஸ்தானும் ஓபாமா ஆளும் அமெரிக்காவும். எடுத்தவுடன் தலைப்பில் காண்பிக்கப்படும் சமாதானத்தின் அடையாளமான புறாக்களை பின்னால் எவ்விதம் தீவிரவாத்திற்கு ஒத்தாசையாக வைத்துக்கொள்கிறார்கள் என்கிற விஷயத்திலிருந்து படத்தின் பலபடிமானங்கள் கதைக்குள்ளே இறங்க இறங்க கொஞ்சம் கொஞ்சமாக வெளியே விரிகிறது. படத்தில் இளையராஜா இருக்கிறார். லால்குடி ந. இளையராஜா. ஆர்ட் டைரக்டர். பாராட்டப்பட வேண்டியவர்.

”அமெரிக்காவுக்கு படிக்கதான் வந்துருக்கேன்... எனக்கு படுத்துண்டேயெல்லாம் படிக்கிற பழக்கமில்லைன்னேன்.. அவரும் சிரிச்சுண்டே ஒத்துண்டார்...” என்று சைக்கியாட்ரிஸ்ட்டிடம் கன்ஸல்ட்டேஷனில் கால் நீட்டி அமர்ந்திருக்கும் பூஜாகுமார் மூலமாக பிராமண பாஷையில் படத்தை வசனமாக ஆரம்பிக்கிறார். பூ.குமாருக்கு புருஷன் மேல் சந்தேகம். அவரும் உருப்படியில்லை. தன் முதலாளியோடு கசமுசா. தன் தப்புக்கு புருஷன் விஸ் தப்பு சரியென்கிற கணக்குக்காகுமா என்று கமலைக் கண்காணிக்க டிடெக்டிவ் ஏஜெண்ட் வைக்கிறார். கதை அங்கிருந்தே மரண வேகத்தில் தொடர்கிறது. வரிசையாய்க் கொலைகள்.

பூ.குமாருக்கு 35 வயசாம். பார்க்க ஒரு ஏழெட்டு வயசு கம்மியாகத்தான் தெரிகிறார். ”கமல் ஒரு கலா ரசிகன்” என்று அந்த பழயழகைப் பார்த்துக்கொண்டேயிருக்கும் போது பேரழகாக அவரே திரையில் தோன்றுகிறார். கதக் கற்றுக்குக் கொடுக்கும் பெண்மை பூசிய மிஸஸ் அண்ட் மிஸ்டர் விஸ்வநாத் எனும் நளினம் மிகுந்த பாத்திரமாக. கதக் போன்ற அபிநயம் பிடிக்கும் நர்த்தனங்களில் ஆண்கள் முகம் அவ்வளவு எளிதாக ஞாபகத்திற்கு வராது. ஆனால் ”உன்னைக் காணாது” கமல் இமைக்கும் போதெல்லாம் கண்ணுக்குள்ளேயே தகதிமி..தகதிமி ஆடுகிறார். ஷண்முகி மாமியும் காமேஸ்வரனும் சரிவிகிதமாகக் கலந்து செய்த கலவை.

ஷங்கர் மஹாதேவனும் கமலும் உன்னைக் காணாது பல்லவியிலேயே பார்ப்பவர்களை பல்லாங்குழி ஆடிவிடுகிறார்கள். “உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா”ங்கிற பதத்திலும் ஃபோனையெடுக்க அர்த்தநாரீஸ்வரனாக துள்ளி ஓடிவருவதிலும் “குருதட்சணையா நிமோனியாவாக் குடுக்கறது...போய்ச் சேருங்கோடிம்மா...” என்று சிஷ்யைகளை அவாத்துக்கு விரட்டும் போதும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் செவிக்கும் கண்ணுக்கும் தேனாய் இனிக்கிறது.

படம் பார்த்தவர்கள் சிலாகித்த அந்த முதல் சண்டைக்காட்சி மிரட்டுகிறது. அசையும் பொருட்கள் நிற்க எடுக்கப்பட்ட காட்சி அது. திரையில் பத்து நிமிடத்திற்கு முன்பு ”ஆயர் தம் மாயா நீ வா...” என்று வளையல் கழற்றி விரக தாப அபிநயங்கள் பிடித்த ஐயர் கமலா அது என்று மொத்த அரங்கமும் பிரமித்துப்போக வேண்டியிருக்கிறது. மூக்கில் ரத்தமொழுக கடைசி ஆளையும் தீர்த்துக்கட்டிவிட்டு முடி சிலுப்பி உக்ர சிம்மமாய்த் திரும்பும்போது ”நீ நடிகன்டா...” என்று உள் மனசு உச்சுக்கொட்டுகிறது.

ஆஃப்கானில் மூளைச் சலவை செய்யப்பட்டு ஜிஹாதிகள் உருவாக்கப்படுவதை வேறு யாரும் படமாக்கியிருந்தால் அது ஆவணப்படமாயிருக்கும். ஆகச்சிறந்ததாக எடுப்பதற்கு கமல் மெனக்கெட்டது பல காட்சிகளில் தெரிகிறது. படத்தில் தமாஷில்லை என்பார்கள். இரண்டுவிதமான தமாஷ்களை படம்பிடித்திருக்கிறார் கமல். பிடித்திருக்கிறது. ந்யூயார்க் வேர்ஹவுஸில் கமல் கவுட்டிக்கிடையில் அடிபடுவதற்கு முன்னால் நடக்கும் சில காட்சிகள் ஹாஸ்ய தமாஷில் அடங்குகிறது.

தொர்காம்-ஜலாலாபாத் நெடுஞ்சாலையில் லஞ்சம் கொடுத்து பாகிஸ்தான் பார்டர் தாண்டி ஆஃப்கானிஸ்தானிற்குள் நுழைவதற்கு முன்னர் ஒரு “தமாஷ்” காட்சி நம்மைக் கட்டிப்போடுகிறது. ”அப்பன் இல்லாத பசங்க ரொம்ப உஷாரா இருப்பாங்க... உன்னமாதிரி.. தமாஷ்” என்று எகத்தாளமாகச் சொல்லும் ராகுல் போஸ் உமருக்கு “அப்பன் யாருன்னே தெரியாத பசங்க அதைவிட உஷாரா இருப்பாங்களோ... உங்கள மாதிரி... தமாஷ்” என்று பதிலுக்கு விஸாம் அஹமது கஷ்மீரியாக கமல் சத்தாய்க்கும் காட்சியும் ஒரு வரலாற்று தமாஷ் வகையறா.

மனிதவெடிகுண்டாக NATO படைகள் வரும் சாலையில் படுப்பதற்கு முன்பாக அந்த மம்மூ என்கிற இளைஞனை சித்தரித்த விதம் அருமை. ஒரு ஊஞ்சலில் உட்கார்ந்து சுதந்திரமாக ஆட ஆசைப்படவும் பெரியவனாக வளர்ந்தாலும் ஒரு குழந்தைக்குரிய குணாதிசியங்களோடு இருப்பவனை மூளைச்சலவை செய்து ஜிஹாதியாக்குகிறார்கள் என்பதை அந்த பாலைவனப் பிரதேசத்திலும் குகைகளுக்குள்ளும் உட்கார்ந்து படமாக்கியிருக்கிறார். அல்-கய்தாவிற்கே பயிற்சியளித்தவராக அமர் பாராட்டும் இந்த விஸாம் தான் “விஸ்” என்று எல்லோரும் அழைப்பதாக நிருபமாவாகிய பூஜா குமார் பூர்வாங்க காட்சியில் டாக்டரிடம் சொல்வது இப்போது விளங்கும்.

இப்படத்தின் காட்சிகளை எவ்வளவு பேர் கதாகாலேட்சபம் செய்தாலும் எழுத்துப்பூர்வமாக விமர்சனங்களால் பிரித்து மேய்ந்தாலும் வெள்ளித்திரையில் பார்த்தாலேற்படும் விசேஷ அனுபவமே தனி. சில வன்முறைக்காட்சிகளின் (குறிப்பாக கழுத்தை அறுப்பது) போது குழந்தைகள் தலையை மடியில் போட்டுத் தட்டிக்கொடுப்பது நல்லது. சிறார்களுக்கும் பாமரர்களுக்கும் சீசியம், ஹைஜாக் ராக்கெட், ஃபேரடேஸ் ஷீல்ட் போன்ற சமாச்சாரங்கள் எவ்வளவு புரியும் என்பது பெரிய கேள்விக்குறி. ஸ்டீல் பீரோவில் தங்க நெக்லஸை வைக்கும் ஸேஃபிற்குள் மொபைலை ஒளித்துவிட்டால் “Subscriber cannot be reached at the moment" ஒலிக்குமென்பது பூ.குமாருக்கு க்ளைமாக்ஸில் தெரியவில்லை. அவனை எடுத்துக் கவிழ்த்து அனைவரையும் காப்பாற்றினார். ந்யூக்லியர் ஆங்காலஜி புரியாதவர்களுக்கு நல் ஆசானாக இருக்கவே இருக்கிறது கூகிள். தேடிக் கண்டுபிடித்துப் படித்துக்கொள்ளலாம்.

புறாக்கால்களில் சீசியம் கோலிக்குண்டுகளை கட்டிவிட்டு பாம் ரேடியேஷனை மோப்பம் பிடிக்கும் கெய்கர் கவுண்ட்டர்களை ஏமாற்றுவதைத் திட்டமாக ராகுல் போஸ் உத்தராங்கமாகச் சொல்லும் காட்சியைப் பார்க்கும் போது நடிகநடிகையர் பெயர்களை காண்பிக்கும் தலைப்பில் புறா வளர்ப்பில் ஈடுபடும் ஒருவர் அதை ஜன்னலுக்கு வெளியே துரத்திவிடுவது ஞாபகம் வந்தால் பராக்கு பார்க்காமல் படத்தை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை கவனித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். சீசியம் எதற்கு சுரண்டுகிறார்கள் அப்படியாகப்பட்ட ஜிஹாதிகளைப் பற்றிதான் கமலும் ஆண்ட்ரியாவும் பூ.குமாரிடம் சொல்கிறார்கள் என்று கதை மொத்தமாக உங்கள் மனக்கண் முன் விரிய ஆரம்பிக்கும். ஒரு முறை நண்பர்களிடம் முழுக் கதையும் கேட்டுவிட்டு தியேட்டருக்குப் போனாலும் ஒன்றும் பாதகமில்லை. ரசிக்கலாம்.

கமலின் விஸ்வரூபம் தமிழ்த் திரைப்படத்துறையின் விஸ்வரூபம். I really enjoyed it.

Tuesday, February 5, 2013

சென்னின் காந்தி

விஸ்வரூப அமர்க்களுங்கிடையே காந்தியார் சிறப்பு மலராக கடந்தவாரம் வெளியான ”தி வீக்” சஞ்சிகையில் விருந்தினர் பத்தியாக கடைசிப் பக்கத்தில் அமர்த்யா சென் எழுதிய Cherry-picking from Gandhi என்ற கட்டுரை என்னை ஈர்த்தது. காந்தி உயிருடன் இருந்தால் பங்களாதேஷ் மதசார்பற்ற நாடாக உதயமானதையும் அதற்கு முன்னர் பங்களாதேஷில் தோன்றிய மொழிப்புரட்சியையும் பார்த்து மதமும் அரசியலும் எப்படி ஆளுமை செலுத்துகிறது என்று யோசித்துக்கொண்டிருப்பார் என்கிறார். காந்தியிடமிருந்து ஆதாரமே தேடாமல் Cherry-pickingகாக நம்மைக் கவர்ந்திழுப்பவை சமாதானமும் அஹிம்சையும் என்கிறது சென்னின் பார்வை.

ராமச்சந்திர குஹா சென்னின் இந்த செர்ரி பிக்கிங் பழக்கத்தைப் பற்றிக் கடுமையாக விமர்சித்திருந்தாலும் பாசிட்டிவான விஷயங்களுக்கு இது நல்லது என்று தன் கட்சிக்காக வாதாடுகிறார் சென். மேற்கத்தியர்கள் தங்களது கலாச்சாரத்தைப் பற்றி காவியங்கள் பல புனையும் போதும் கோத்ஸ் விஸிகோத்கள் பற்றி பிரஸ்தாபிக்காமல் சுவாரஸ்யமான கிரேக்கர்கள் மற்றும் ஏதெனியர் பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்களாம். பெண்கள் அரசியலுக்கு ஒவ்வாதவர்கள் மற்றும் அடிமைகளுக்கு ஓட்டுரிமையில்லை என்று சொன்ன அரிஸ்ட்டாட்டிலை விட அவரது மக்களாட்சி அரசியல் பற்றிய சொற்பொழிவுகளுக்காகத்தான் அவரைக் கொண்டாடுகிறோம் என்கிறார்.

இந்தியா காந்தியிடமிருந்து அவசியம் கிரஹித்துக்கொள்ளவேண்டிய இரண்டில் ஒன்று சுற்றுப்புறசூழலியல் என்றும் இரண்டாவது மதசார்பின்மை என்றும் சொல்கிறார். சமயம் சார்ந்த மதசார்பின்மையைக் (religion-connected secularism) காட்டிலும் சமூகம் சார்ந்த மதசார்பின்மையே(community-connected secularism) ஒரு மதசார்பற்ற நாட்டின் வெற்றிக்கு வித்து என்று கூறும் காந்தியின் சிந்தனை நெஞ்சில் ஏற்றிப் போற்றத்தக்கது என்று சிலாகிக்கிறார் சென். அமர்-அக்பர்-அந்தோணியாக வாழ்ந்து தோளில் கை போட்டுக்கொள்வதை விட மூவருமே அமராகவும், மூவருமே அக்பராகவும், மூவருமே அந்தோணியாகவும் ஒரே சமூகமாகக் கைக்கோர்க்க வேண்டுமென்பது காந்தியிஸத்தின் ஒரு கோட்பாடாம்.

குன்ஸாக இப்புத்தகத்தை திருப்பும் பக்கத்திலெல்லாம் காந்தியைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையைப் பாராட்டிப் பேச ஆரம்பிக்கும் ராகுல் மற்றும் சோனியா காந்தியர்கள் பல் தெரியச் சிரிக்கும் படத்தோடுள்ள sonsational என்கிற கட்டுரையும் இதில் அடங்கும். கோட்ஸே குடும்பத்துப் பெண் ஹிமானி சாவர்க்கர்(பல்லு போன பாட்டி) காந்தியின் கொலை நாதுராமின் பார்வையில் நியாயமே என்று ஆதரவுக் கொடி பிடிக்கிறார். நியாயம் எல்லோர் பக்கத்திலும் உள்ளது.

காந்தியும் தலித்துகளும் என்ற தலைப்பில் வர்ணாசிரம தர்மம் நல்லதென்று ஆரம்பத்தில் கருத்துரைத்த காந்தி சில மாதங்களில் அந்த தீர்மானத்தை மாற்றிக்கொண்டதையும் சேர்த்து ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்கள். காந்தி கணக்கு என்று கிண்டலடிப்பதற்கு சாட்டையடியாக காந்தியின் கிராமப்புற பொருளாதார மேம்பாடு பற்றி ஒரு மணியான கட்டுரை. இக்காலத்தில் பிஸினஸ், அரசியல் மற்றும் பார்க்குமிடமெல்லாம் தலைமையேற்பவர்களிடம் நம்பகத்தன்மையை எதிர்பார்த்து ஏமாந்துபோன சமூகத்திற்கு இன்றும் காந்திஜி ஒரு எடுத்துக்காட்டு என்பதாக காந்தியும் தலைமைப் பண்பும் என்ற கட்டுரையையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஜெய் ஹிந்த் !

activatingthoughts.blogspot.com  என்கிற அற்புதமான தளத்திலிருந்து கிடைத்த படமிது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails