Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Wednesday, October 13, 2010

தொலைநோக்குப் பார்வை

poweroftenலிகோத்பவனான சிவனாரின் அடிமுடி காண ப்ரம்மா அன்னப்பறவையாகவும் விஷ்ணு பன்றி வடிவத்திலும் உருமாறி புறப்பட்டார்களாம். படாதபாடுபட்டும் இருவருக்கும் வெற்றி கிட்டவில்லை.  அடிமுடி காண முடியவில்லை. ஆனால் இந்த கிராபிக்ஸ் யுகத்தில் ப்ரம்சும் விஷியும் அனிமேஷன் கொண்டு சிவனின் அடிமுடித் தரிசனம் பெற்றுவிடலாம். சில நாட்களுக்கு முன் பூமியை அனிமேஷனில் நிறுத்திப் பார்த்து என்னவெல்லாம் நிகழும் என்று வெளிநாட்டவர் ஒருவர் மல்லாக்க படுத்து ஆராய்ச்சி பண்ணிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தேன். அதுபோல இதுவும் கொஞ்சம் சயின்ஸ். இப்ப விஷயம் என்னான்னா பூமியிலேர்ந்து பத்தின் மடங்காக மேலே மேலே மேலே போய்கிட்டே இருந்தா என்ன வரும். என்ன தெரியும். இரண்டு பத்தின் மடங்கா வீட்டு மொட்டை மாடி மேலே ஏறி நின்னா பக்கத்து வீட்டு பாத்ரூம் தெரியும் அப்படிங்கற லெவெல்ல நாம யோசிச்சாலும் சில சிந்தனாசிற்பிகள் மொட்டை மாடிக்கு மேலே யோசிக்கிறார்கள்.

நிறைய இடங்கள்ள நாம கொசுவத்தி சுத்திதான் பார்த்திருக்கோம். இங்க கட்டம் கட்டமா கட்டம் கட்டி அடுத்ததடுத்த கட்டத்திற்கு மேல கொண்டு போகிறார்கள். சிகாகோல ரெஸ்ட்டுக்கு வானத்தை பார்த்து படுத்திருக்கும் ஒருவரை காண்பித்து ஒவ்வொரு பத்து செகண்டிர்க்கும் மேன் மேலே போய் நம்முடைய அண்ட பகிரண்டம் எல்லாம் தாண்டி, பால் வீதி தாண்டி, மோர் வீதி இன்னும் மோர் போய்.. போய்... போய்க்கொண்டே இருக்கிறார்கள். கடைசியாக துக்குணூண்டு பென் டார்ச் வெளிச்ச புள்ளியாய் நம்ம நட்சத்திர மண்டலம் தெரியுது. இந்திரன், நாரதர் மற்றும் இதர தேவாதி தேவர்கள் தெரியலை.  முடிந்தால் அதையும் காண்பித்திருக்கலாம். போற வழிக்கு புண்ணியம். அதுக்கு மேலே போக வேண்டாம்ன்னு முடிவு பண்ணி ரோலர் கோஸ்டேர்ல அடிவயிறு கலகலக்க சரேல்ன்னு இறங்கறா மாதிரி நேரே கீழ பூமிக்கு கொண்டு வந்து படுத்துக்கொண்டிருந்த மனுஷனின் கைக்குள்ள படம் புடிச்சு காட்றாங்க. அங்கேயும் குடைஞ்சு குடைஞ்சு உள்ள போய் வெள்ளை ரத்த அணுக்கள் உள்ளே இருக்கும் டி.என்.ஏவை அடைந்து அதற்குள் இருக்கும் கார்பன் மூலத்தில் குடிகொண்டுள்ள ப்ரோடான் வரைக்கும் செல்கிறார்கள். உங்கள் ஆயாவிற்கும் ஐஸுக்கும் இது ஒரே மாதிரி தான் இருக்குமாம்.



இவ்ளோ தூரம் காமிச்சவங்க அப்படியே "காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை" அப்படின்னு எந்திரன்ல சூப்பர் ஸ்டார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியிருக்கலாம்ல.

-
-

Wednesday, July 14, 2010

அர்ஜுனா...அர்ஜுனா...

lightningமுந்தாநாள்  மதியத்திலிருந்தே மப்பும் மந்தாரமுமாக இருந்த வானம் அந்திநேரம் ஆபிசிலிருந்து கிளம்பும் பொழுது ஆகாயத்தை பிய்த்துக்கொண்டு கொட்டியது.  அப்படி ஒரு ராட்சஷ மழை. மழை இயற்கையின் கொடை. சந்தேகமில்லை. ஆனால் அதை இப்புவியில் சேர்ப்பதற்கு கூடவே வரும் பாதுகாப்பு பயில்வான் ரங்கநாதன்களான இடி மின்னல் போன்றவை வயிற்றில் புளியை கரைத்துவிடும். டி.வி., ப்ரிட்ஜ், மிக்சி, கணினி போன்ற எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் உபகரணங்களை கொண்டு போவது போல் ஆட்களையும் சிலசமயம் கபளீகரம் செய்துவிடுகிறது. அரை நிஜார் போட்ட வயதில் இதுபோன்று வான வேடிக்கைகளோடு ஜோராக நின்று பொழியும் மழைக்கு நான் காது பொத்தி பயப்படும் பொழுது என் பாட்டி "அர்ஜுனா .... அர்ஜுனா... சொல்லுடா, ஒன்னும் ஆகாது" என்று சொல்லுவாள். ஒரு தசாப்தம் முன்னரே சிவலோகப் பதவி அடைந்த பாட்டி இப்போது காரில் என் கூட  துணைக்கு இல்லாதலால் "அர்ஜுனா..." மனசுக்குள் சொல்லி பாட்டியை நினைத்துக்கொண்டு பயத்தை போக்கிக்கொண்டேன். காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? நம்முடைய காரின் டயர் ரப்பர் பொருள் கொண்டு தயாரிக்கப்பட்டது. அதுதான் கீழே தரையைத் தொட்டு மின்னலையும் பூமியையும் இணைத்துக் கொண்டு நிற்கிறது. ஆகையால் மின்னல் தாக்கினால் ரப்பர் டயர் மேல் உட்கார்ந்திருப்பதால் நம் மேல் மின்சாரம் பாயாது என்ற  என்புத்திக்கு எட்டிய பொதுஅறிவின் துணையோடு வண்டி ஓட்டிக்கொண்டு வீடு போய் சேர்ந்தேன்.

இருந்தாலும் விடாமல் மூளைக்குள் இருக்கும் அனைத்து ந்யுரான்களிலும் இந்த சங்கதி தொடர்ந்து அரித்துக்கொண்டிருந்தது. இதைப் பற்றி ஆராயலாம் என்று கூகிள் துணைக் கொண்டு இணையத்தை தேடி அலசி ஆராய்ந்து பார்த்ததில் கிடைத்த தகவல் இது. ஒரு ஆளை காரில் உட்காரவைத்து மின்னல் கொடுக்கும் மின்சாரம் பாய்ச்சி காண்பிக்கிறார்கள். தோராயமாக 10 முதல் 100 மில்லியன் வோல்ட் மின்சாரம் மின்னலால் தயாரிக்கப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆர்க்காட்டார் கவனிக்கவும். மின்னலைக் கையில் பிடிக்கும் துணிச்சலோடு காரில் அவர் அமர்ந்திருப்பது நமக்கு ஷாக் அடித்தார்ப்போல இருக்கிறது. காரில் பயணிக்கும் போது ஏன் மின்னல் நம்மை தாக்குவதில்லை, அப்படியே கூராக தாக்கினாலும் நம் பூத உடலுக்கு ஒன்றும் ஆவதில்லை என்றால் நம்முடைய காரின் மெட்டல் பிரேம் ஒரு கவசம் போல காக்கிறது என்கிறார் ஸ்காட் மாண்டியா என்னும் தட்பவெப்பம் மற்றும் சீதோஷ்ணம் பயிற்றுவிக்கும் கல்லூரி பேராசிரியர். ஆனால் மின்னல் தாக்கும்போது காரினுள் உட்கார்ந்திருக்கும் நாம் காரிலிருக்கும் வெளியே தொடர்புள்ள பொருட்களைத் தொட்டால் ஆள் பஸ்பம் தான். சாம்பலாகிவிடுவார்கள். காரியம் செய்வதற்கு கூட ஒன்றும் கிடைக்காது. உதாரணத்திற்கு கார் கதவின் கைப்பிடி, ரேடியோ போன்ற பொருட்கள். பி.பி.ஸியின் இந்த வீடியோ நம் மின்னல் பற்றிய அறிவை செறிவூட்டும் என்ற நம்பிக்கையில்.....



மேலும் சில அறிவியல்பூர்வமான ஐந்தாறு கேள்விகளுக்கு கீழ்காணும் சுட்டியில் விளக்கியிருக்கிறார் இந்த பேரா. இதைப் படித்துவிட்டு அடுத்தமுறை ஜோ என்று மழை பெய்யும் போது வலுக்கட்டாயமாக நன்றாக மின்னலடிக்கும் வேளையில் காரில் உட்கார்ந்து பரிசோதித்து பார்க்கவேண்டாம் என்று தயவு கூர்ந்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

வைரமுத்துவின் "வில்லோடு வா நிலவே"யில் மாரிக்கால அந்தி நேரத்தை வர்ணிக்கும் ஒரு காட்சியில் கருமேகத்தில் தொலைந்து போன சந்திரனை வானம் மின்னல் விளக்கேற்றி இடிஇடித்து விசாரித்து தேடிக்கொண்டிருப்பதாக கவி வடித்திருப்பார். மின்னலை சாந்தமாக வெண்ணிலா தேடும் வேலைக்கு அமர்த்தியிருப்பார் கவியரசு. பதிவுக்கு ஒட்டாமல் இந்த சரக்கு எங்கே தேவையில்லாமல் இங்கே நுழைந்தது என்று கேட்போருக்கு...... மனம் ஒரு குரங்கு. தாவிக்கொண்டே இருக்கிறது. என்ன செய்ய? ஷாஜஹான் படத்தில் இளைய தளபதி விஜய் "மின்னலை பிடித்து.. மின்னலை பிடித்து.. மேகத்தில் துடைத்து பெண் என்று படைத்து வீதியில் விட்டு விட்டான்...." பாடல் கூடத்தான் ஞாபகம் வருகிறது. போதுமப்பா நிறுத்து என்று நீங்கள் கதறுவது காதில் விழுகிறது.

பட உதவி: www.etsu.edu
தகவல் உதவி: http://profmandia.wordpress.com/2010/07/12/no-this-weather-really-blows/

Tuesday, July 13, 2010

சனி வளையத்தில் பூமி

நவக்கிரஹங்களில் சனி பகவானுக்குதான் ஸ்பெஷல் ஆக வளையம் உண்டு. சனிக்கு இருக்கும் வளையம் போல நம்முடைய பூமிப் பந்துக்கும் மாட்டிவிட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனையாக ஒரு வீடியோ தயாரித்திருக்கிறார்கள். நமது பூலோகத்தின் பூமத்தியரேகை வழியாக ஒரு வளையத்தை கிழக்கிலிருந்து மேற்க்காக சுற்றிவிட்டு, அது ஒவ்வொரு ஊராக வானத்தில் எப்படி தெரியும் என்று வித்தியாசமாக முயர்ச்சித்திருக்கிரார்கள்.  பூமத்தியரேகையின்  அருகில் வானத்திற்கு குறுக்கு வெட்டாக இந்த வளையம் செல்வதால் அந்தப் பகுதியில் பிளேடு கொண்டு கிழித்த வானத்தை காண்பிப்பது மிகவும் அருமை.  அதே போல் பூமத்திய ரேகையை விட்டு வெகுதூரம் விலகி வரும்போது வானத்திற்கு மிக அருகில் இருப்பது போல் இருக்கும்.  பகல் நேரங்களில் சூரியனுடைய வெளிச்சத்தை குடித்து இரவில் பட்டையாக பௌர்ணமி நிலா போன்று ஒளிரும்.  நிலாச் சோறு ஊட்டிய காலம் போய்  தாய்மார்கள் வளைய வானத்தை காட்டி சோரூட்டுவார்கள்.




என்னடா இது பூமிக்கு பிடித்த சனியனா இது என்று நினைக்கிறீர்களா? நல்ல அட்டகாசமான கற்பனை.  நல்ல முயற்சி.

வளையமே வளையமே ஓடி வா.. நில்லாமல் ஓடி வா.. ( நிலா நிலா ஓடிவா பாடலின் ரீமிக்ஸ்...).

Tuesday, July 6, 2010

மூளை முடிச்சுகள்


 வண்டி ஓட்டும்போது லெப்ட்ல கட் பண்ணனுமா இல்லைன்னா ரைட்லயா, ஆட்டோகாரனை திட்டனுமா முறைக்கனுமா, நடைவண்டி மாதிரி கார் ஓட்டுற அந்த பழத்தை முந்தனுமா வேண்டாமா, பக்கத்து வீட்டு ஆன்டி ஷகிலா மாதிரி இருக்கா, அந்த சுருட்டைத்தலையன் பைக் பின்னாடி உட்கார்ந்து போறது எதிர்த்த வீட்டு பி.ஈ படிக்கற பொண்ணா, ஏன் இன்னிக்கி ரசத்துல உப்பே இல்லை, அஞ்சும் மூனும் எட்டுதானா, நமக்கு இருக்கிற புத்தி ஏன் பக்கத்து வீட்டு ஆளுக்கு இல்லை குப்பையை நம்ம வீட்டு வாசல்ல வந்து கொட்டறான், அற்ப சங்கைக்கு எங்க ஒதுங்கணும், ரோடுல என்னென்ன செய்யணும், வீட்டுல நாலு சுவத்துக்குள்ள என்னென்ன செய்யணும், ராமராஜன் படம் பார்கலாமா கூடாதா, எக்ஸாமுக்கு இந்த சாப்ட்டர் படிக்கலாமா இல்லன்னா சாஸ்ல விடலாமா, நாம எப்படி வித்தியாசமா லவ் லெட்டர் கொடுத்தா அந்த பிஃப்டி கே.ஜி தாஜ்மஹால் ஏத்துக்கும், அவங்க அப்பன் அருவா எடுத்து வெட்ட வருவானா, அம்பது வயசுல நமக்கு ஜீன்ஸ் டீ ஷர்ட் போட்டா நல்லா இருக்குமா அதை கண்ணாடில பார்த்தோமா, அத பார்த்துட்டு ரோட்ல நாலு பேர் நடமாட முடியுமா...............

.............இருக்குற வேலையை விட்டுட்டு பறக்குற வேலைக்கு மனு போடலாமா, இலக்கியத்துக்கும் இலக்கணத்தும் தலைக்கனத்துக்கும் என்ன சம்பந்தம் அல்லது வித்தியாசம், அம்மா யாரு, அன்னை யாரு, ஐயா யாரு, பொண்டாட்டி யார், ரெண்டாவது பொண்டாட்டி யாரு, பத்தினி யாரு, மேட்டர் பார்ட்டி யாரு, இந்த மாசத்துக்கு எவ்வளவு ரூபா இருந்தா வண்டி ஓடும், யாரு முதலாளி, யார் பாஸ், யாரு மொட்டை பாஸ், இன்னிக்கு ஷேர் மார்க்கட் கரடியா, மாடா, மனுஷனா, நம்ம குலசாமி யாரு, சூப்பர் கம்ப்யூட்டர், ஜெட் ரயிலு, சார்டெட் பிளேனு, அரசியல்வாதி எல்லாம் ஏன் வெள்ளைல இருக்காங்க, நீல் மெட்டல் பனால்கா குப்பைத்தொட்டி, சென்னை கார்போரேஷன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான், பாடும் நிலா எஸ்.பி.பி,  கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, வைரமுத்து, தியாகராஜர் கீர்த்தனை, கர்நாடிக் மியூசிக், திருவையாறு, கள்ளக்காதலன் கொலை, பாங்கில கொள்ளை, வில்ஸ் சிகரெட், பான்பராக் குட்கா, கஞ்சா, சுண்டிசோறு இதுல எது போதை அதிகம் தரும், இராப்பிச்சைக்காரன் யாரு, அம்பானி யாரு அதிலயும் அனில்யாறு முகேஷ் யாரு, தோனி-பள்ளித்தோழி கல்யாணம், சானியா மிர்சா- ஷோயப் இன்டர்நேஷனல் நிக்காஹ், ஒபாமா ஏன் அமெரிக்க தேர்தல்ல நிக்கும்போது ஆஞ்சநேயர் சிலை கைல வச்சிருந்தார், எப்ப தூங்கணும், எப்ப எழுந்திருக்கணும், நாம ஏன் இப்படி எல்லாம் பதிவு எழுதிக்கிட்டு இருக்கோம்...........

இப்படி நம்மோட சகல சௌபாக்கியத்திற்கும் காரணகர்த்தாவாக இருக்கிற மூளையின் ந்யூரான்களின் தோற்றம் தான் மேலே இருக்கும் படத்தில்... .............. 

 பட உதவி: http://kottkegae.appspot.com/images/1899-neurons.jpg

Sunday, June 27, 2010

சனிக்கிழமை சங்கதி - உமிழ்நீர் உலை நீராவது எப்போது?

தவிர்க்க இயலாத காரணங்களால் இப்பகுதி ஒருநாள் தாமதமாக வெளியாகிறது.

திரிலோக சஞ்சாரியான நாரதர் போல நாமும் வானவீதியில் ஹாயாக பறக்க முடியுமா? இந்த கேள்விக்கான விடையை அமெரிக்க விண்வெளி நிறுவனம் NASA ஒரு கேள்விக்கான பதிலாக வெளியிட்டுள்ளது.  விண்வெளியில் அதற்க்கான ஹெல்மெட், ஜாக்கெட் போன்ற ஆடை அணிகலன்கள் இல்லாமல் எவ்வளவு நேரம் உயிர்வாழலாம் என்ற கேள்விக்கு, சுவாசத்தை அடக்கவில்லை என்றால் ஒன்றிரண்டு நிமிட நேரத்தில் உயிர் பிரிய வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். முதல் பத்து நொடிகளுக்குள் உடலெங்கும் "முண்டு முடிச்சுகள்" போன்று உருவாகும் ( தசைகள் மற்றும் அதனடியில் உள்ள திசுக்களினால்). சற்று நேரத்தில் ஆக்சிஜென் குறைப்பாட்டால் நினைவிழக்கும். அப்புறம் எருமை மீதேறி வரும் எமன் பாசக்கயிற்றை வீசி உங்களை "வா வா"  என்றழைப்பது உங்களுக்கே நிதர்சனமாக தெரியும் என்கிறார்கள்.

தசைகளின் வெப்பம் காக்கும் தன்மையினாலும், ரத்தத்தின்  இடைவிடாத சுழற்ச்சியினாலும் உடலில் ரத்தம் உடனடியாக கொதிப்படைந்து நாம் வெடித்துவிட மாட்டோம். அதேபோல வான்வெளியில் உள்ள மிக குளிர்ச்சியான சீதோஷ்ணத்தால் உடலில் உள்ள வெப்பம் அவ்வளவு சீக்கிரம் வெளியாக முடியாதலால் உடனடியாக நாம் உறைந்துவிடவும் மாட்டோம்.

விண்வெளியில் அதிக சிரமும், உயிரையும் பயணம் வைத்து செல்வோரை, நாம் விண்வெளி வீரர்கள் என்போம், ஆனால் ஆராய்ச்சி கூடத்தில் அவர்களை 'சப்ஜெக்ட்' என்பார்கள். 1965 ம் வருடம் Joe Kittinger என்ற 'சப்ஜெக்ட்' தனக்கு ஏற்ப்பட்ட அனுபவத்தை சொல்கையில், தனக்கு பதினான்கு நொடிகள் நினைவு இருந்ததாக சொல்லியிருக்கிறது. இந்த பதினான்கு நொடிகள் வரை நுரையீரலிலிருந்து மூளைக்கு ரத்தம் சென்றுகொண்டிருக்கும்.  அடுத்த முப்பது நொடிகளுக்குள் மீண்டும் காற்றுப்பைக்குள் ஆக்சிஜெனை நிரப்பி சப்ஜெக்ட்க்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். உயிரோடு பூலோகம் வந்தடைந்த சப்ஜெக்ட்டிடம் "எப்படீப்பா இருந்தது" என்று குசலம் விசாரிக்கையில், தனக்கு காற்றுக் கசிவு மிகத்தெளிவாக கேட்டதாகவும், உணர்ந்ததாகவும் சொல்லிவிட்டு கடைசியாக நினைவு தப்பிப் போகையில், நாவில் சுரந்த நீர் அடுப்பில் உலை கொதிப்பது போல் சூடாக இருந்ததாக சொல்லிற்றாம்!!!

பட உதவி: http://www.ballardian.com
தொடர்புடைய சுட்டி: http://imagine.gsfc.nasa.gov/docs/ask_astro/answers/970603.html

Friday, March 19, 2010

உலகை புரட்டிபோடும் ஐடியாக்கள்- II

அறிவியல் தொடர் எழுதும் அபாயகரமான நோக்கம் எதுவும் இல்லை என்றாலும், தொட்டு விட்டதை தொடர்கிறேன்..... சென்ற பதிவில் சையின்டிபிக் அமெரிக்கன் சஞ்சிகை வெளியிட்டுள்ள உலகை புரட்டி போடும் ஐடியாக்களில் சிலவற்றை பார்த்தோம். மேலும் சில....

4. வெகு ஜன-வேக பஸ் போக்குவரத்து

உலக சரித்திரத்தில் முதன்முறையாக மனிதகுல நாகரீகத்தில் கிராமப்புறங்களில் வசிப்பதை வெறுத்து நகர்ப்புறங்களில் கூட்டம் அதிகரித்துவருகிறது. இத்தகைய மாற்றங்களினால் ஒரு ஐந்து கி.மீ தொலைவில் உள்ள அலுவலகத்துக்கு கூட காலையில் பல் தேய்த்து, குளித்து, டிபன் சாப்பிட்ட கையோடு கிளம்ப வேண்டியிருக்கிறது. என் நண்பரின் மனைவி காலை டிபன், தலை வாருதல், முகத்திற்கு குலாப் பன்னீர் தண்ணீர் தெளித்து துடைத்தல், கழுத்துக்கு காதுக்கு அணிகலன்களை பூட்டிக் கொள்ளுதல், உதட்டு சாயம் பூசுதல் என்று சகலவிதமான ஒப்பனைகளையும் காரிலேயே முடித்துக்கொண்டு அலுவலகத்திற்கு கீழிறங்குவார். இந்த வசதியில்லாதோர் பிரம்ம முஹூர்த்தத்திற்கு ஒரு மணி நேரம் முன்னர் எழுந்து வீட்டில் அனைத்தும் செய்து புறப்படவேண்டியிருக்கிறது. இவ்வளவும் செய்தாலும் ஏதாவது மாண்புமிகுக்கள் சாலையை பயன்படுத்த நேரிட்டால் நாம் நின்று வழிவிட்டு தாமதமாக சென்று 'சிடு சிடு' அதிகாரியிடம் 'வெடுக் வெடுக்' என்று வசவு வாங்க வேண்டியதாகிறது. இப்படி பல பிரச்சனைகளை சமாளிக்க 2001ம் வருடத்திலிருந்து கொலம்பியாவில் போகோட என்ற நகரத்தில் சில மாறுதல்களை செய்தார்கள். பஸ் பயணிகளுக்கு முன்னரே டிக்கெட் அளித்து ஒரு மூடிய அறை போல் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருக்க வைத்து, பஸ் வந்தவுடன் அதை திறந்து அதிலிருந்து நேராக பஸ்ஸில் ஏற்றிவிடப்பட்டார்கள். இதில் மற்றுமொரு சௌகரியம் என்னவென்றால் பேருந்தில் 'ஸ்லைடிங்' கதவுகள் வைத்து, ஒரே நேரத்தில் பலர் ஏறி இறங்கும் வண்ணம் செய்தார்கள். அத்தோடுகூட யானை ஏற்றம் குதிரை ஏற்றம் போல பேருந்தில் ஏறி இறங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பயணிகள் ஏறும் இடம் நேராக பஸ்ஸில் இருக்கைக்கு சமமான உயரத்தில் அமைத்தார்கள். சாலையில் தடையின்றி இந்த பேருந்துகள் செல்வதற்கு ஏதுவாக தனி வழி அமைத்து வேகமாக செல்ல வழிசெய்தார்கள். இதுவே இனி எந்த மெட்ரோபொலிட்டன் நகரத்திற்கும் ஏற்றது என்று பரிந்துரைசெய்யப்படுகிறது. கொலம்பியாவின் ட்ரான்ஸ்மிலினியோ பற்றிய ஒரு சுவாரசியமான காட்சி தொகுப்பு கீழே..



5. நெய்தல் நில பயிர்கள்

இந்த அண்டத்தில் நன்னீர் ஒரு புறம் குறைந்து வரும்போது அதிக ஜனப்பெருக்கத்தால் இன்னொரு புறம் உணவு உற்பத்தி அதிகமாக தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் அடிலைடு பல்கலைக்கழகத்தில் மரபணு பொறியியல் துறையில் பயிர்களின் இலைகள் உப்புத்தன்மையை சேகரிக்காமல் இருக்கச் செய்யவும், அந்த இலைகளை உதிர்க்காமல் இருக்கவும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஊரிலிருந்து வாங்கி வரும் முளைக்கீரை சென்னை கீரையை விட நன்றாக இருப்பதும் இதனால்தான். இந்த ஆராய்ச்சி வெற்றியடைந்தால் ஐந்திணைகளில் வயலும் வயல் சார்ந்த இடமாகிய மருதத்தில் மட்டும் பயிர் செய்த காலம் போய் நெய்தல் நிலத்திலும் நெற்சாகுபடி செய்யலாம்.

6. சட்டைப் பை துபாஷ்

சாக் சாப்ட்வேர்ஸ் என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு தானியங்கி மொழிபெயர்ப்பான் மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த மென்பொருளை அலைபேசியில் ஏற்றிக் கொள்ளலாம். தற்போது ஆங்கிலத்திலிருந்து அரபிக்கு மொழி பெயர்க்க இதை செயல்படுத்தியிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரே சமயத்தில் இருவர் பேசிக்கொள்ளும் அளவிற்கு இந்த தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. இந்த புதிய வரவினால் சுற்றுலா துறை அதிக பயன்பெறும் என்று தெரிகிறது. தற்போது வரையறுக்கப்பட்ட சொற்களை மிகத்துல்லியமாக மொழிபெயர்க்கும் இந்த மேன்போருள் அடுத்த முறை நீங்கள் தென்னாப்பிரிக்கா சென்றால் ஸுலுவில் பேசும் ஆப்ரிக்க சுந்தரி என்ன பேசுகிறாள் என்று தெளிவாக உணரமுடியும்.

7. பெருநோயறிதல்


சொஸ்த்தபடுத்த முடியாத நோய்கள் உடம்பில் வளர்வதற்கு நெடுநாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பது உயிரியல் விதி. பல்வேறு விதமான கடினமான மூலக்கூறுகளின் தசாப்தங்கள் கடந்த இடைத்தாக்கத்தின் விளைவே இத்தகைய நோய்கள். ஒரு சாதாரண ஜுரத்திற்க்கே முதல் இரண்டு நாட்கள் கை கால் மட்டும் வலி கண்டு பிறகுதான் அந்த வைரஸ் தாக்குகிறது. சிக்கின்குனியா போன்ற நோய்களில் ஜுரம் விட்டும் பல மாதங்கள் மூட்டு வலி தொடர்கிறது. பயோமார்க்கர் என்பது வெகு காலமாக கடைபிடித்துவரும் ஒரு செயல்முறை. தேக ஆரோக்கியமுள்ள ஆயிரம்பேரின் ரத்த மாதிரிகளை அடித்தளமாக எடுத்து சேமித்து வைத்துக்கொண்டு, நீரழிவு, மார்பக புற்றுநோய் போன்று நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களின் மாதிரிகளையும் ஒன்று திரட்டி, இரண்டையும் ஒப்புநோக்குகையில் கிடைக்கும் முடிவுகளை கொண்டு ஒரு இறுதி முடிவிற்கு வருவதற்கு ஆராச்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இத்திசையில் ஆராய்ச்சிகள் பெருமளவில் நடைபெறுகிறது, "உயிரியலில் இயற்கையின் பாதையை ஒரு கூற்றாக கணிக்கமுடியாமல் போனாலும் சர்வ நிச்சயமாக ஒருநாள் நோயின் அறிகுறியை கண்டு பிடிப்போம்" என்று எக்ஸாக்ட் சயின்ஸ்ஸஸ்ன் மூத்த மருத்துவ அதிகாரி பாரி பெர்ஜெர் கூறுகிறார்.

இந்த பயோமார்க்கரை பயன்படுத்தி பெருநோய் முன்எச்சரிக்கையை மனித இனம் கண்டுபிடித்துவிட்டால், பூமாதேவி எவ்விதம் இப்புவி பாரம் பொறுப்பாள்?

8. உடனடி இரத்த கட்டு

விபத்துகளின் பொது நிறைய மரணங்கள் ரத்தம் அதிகம், உடனே வெளியேறுவதால் நடைபெறுகிறது. ட்ராமா சொலுயூஷன்ஸ் என்ற மேரிலேன்ட் பல்கலைக்கழக உதவி பெற்ற நிறுவனம் 'ஸின்தெடிக் ஹைட்ரோஜெல்' என்ற ஒன்றை தயாரித்திருக்கிறார்கள். இது உடம்பிற்கு 'பைபிரின்'( fibrin )னை உடனே தயாரிக்க கட்டளையிட்டு இரத்த போக்கை நிறுத்துகிறது. இதுவும் முக்கியமான ஒரு மாற்றத்தை கொண்டுவரும் ஐடியாவாக பட்டியலில் இடம்பெறுகிறது.

9. பாக்டீரியா டூத்பேஸ்ட்



Top: Rat teeth colonized with normal S. mutans. Bottom: Rat teeth colonized with modified non-acid-producing strain. (photo by Jeff Hillman)

வாயில் உள்ள ஸ்ட்ர்ப்டோகோக்கஸ் ம்யூடன்ஸ்( Streptococcus mutans ) என்ற பாக்டீரியா தான் உணவில் உள்ள சர்க்கரையை பற்களில் உள்ள எனாமல் அழிக்கும் லாக்டிக் ஆசிட்டாக மாற்றுகிறது. ப்ளோரிடாவை தலைமையிடமாக கொண்ட ஓராஜெனிக்ஸ் ( Oragenics ) என்ற நிறுவனம் ஒரு புதிய பாக்டீரியாவை மரபணு மாற்று என்ஜினீயரிங் மூலமாக தயாரித்திருக்கிறார்கள். இது சர்க்கரையை மிக குறைந்த அளவு ஆல்கஹாலாக மாற்றுகிறது. இந்த சிகிச்சை தற்போது மருத்துவ பரிசோதனைகளில் உள்ளது. இதனால் முற்றிலுமாக ஸ்.ம்யூடன்ஸ் அழிக்கப்படுகிறது.

என்பது வயது ஆன பின்னும் முறுக்கும் சீடையும் நொறுக்கும் தாத்தாக்களையும், அரைக்கட்டு கரும்பை பல்லால் கடித்து தின்னும் பாட்டியையும் எதிர்காலத்தில் இந்த சமூகம் காண நேர்ந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை.


மிச்சமிருப்பவை என் சிற்றறிவுக்கு எட்டினாலும் இதை ஒரு பெரிய அறிவியல் தொடராக தொடர்ந்தால் என் வாசகர் (இருக்கா என்ன?) வட்டம் அதை தாங்காது என்பதால் இத்தோடு இது முற்றும்.

Wednesday, March 17, 2010

உலகை புரட்டிபோடும் ஐடியாக்கள்- I

சமீபத்திய சையின்டிபிக் அமெரிக்கன் சஞ்சிகை இருபது உலகை புரட்டிபோடும், மாற்றி அமைக்கும் தன்மையுள்ள ஐடியாக்களை பட்டியலிட்டுள்ளது. அதில் சில....

1. சூரியசக்தித்    தகடு

சூரியசக்தித் தகடு மூலம் மின்சாரம் தயாரித்து பயன் படுத்துவது. இது முன்னரே சகலருக்கும் அறிமுகமான தொழில்நுட்பமானாலும் இதை பயன் படுத்துவதில் சில பொருளாதார சிக்கல்கள் இருக்கின்றன. இந்த தகடுகளை விலை கொடுத்து வாங்குவதற்கு சொத்தை எழுதிக் கேட்கும் அளவிற்கு இருப்பதால் இது தலை எடுப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறது. அதனால் யு.எஸ்ஸில் 4000 வாடிக்கையாளர்கள் கொண்ட சோலார் சிட்டி என்ற நிறுவனம் இந்த சூரிய தகடுகளை இலவசமாக கொடுத்து மின்சாரத்திற்கு பணம் வசூலிக்கிறது. இந்த முறை தகடு விற்பவர், பயன்பெறும் வாடிக்கையாளர் இருவருக்கும் மிகவும் லாபகரமாக இருப்பதாக சோலார் சிட்டி தெரிவிக்கிறது. சன் ரன் என்ற அமெரிக்க நிறுவனமும் இதே போன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. இது நன்றாக செல்லுபடியானால் இன்னும் கொஞ்ச காலத்தில் எல்லோர் வீட்டு மாடியிலும் செயற்கைக்கோள் தட்டு உள்ளது போன்று சூரியத் தகடுகளும் வரலாம். மின்சாரம் இல்லை என்று பாடாவதியான டி.என்.இ.பி அலுவலகத்திற்கு யாருமே எடுக்காத தொலைபேசியை அழைக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம். கரண்ட் ஆபிஸிலிருந்து வந்து போஸ்ட் ஏறி பியூஸ் போட்டு தலைசொரிபவருக்கு சில்லரை கொடுக்கும் நிலை இல்லாமல் போவதற்கு சூரிய பகவானை பொங்கலன்று மட்டும் அல்லாமல் என்றென்றும் வணங்கும் நிலை வரலாம்.

2. எனர்ஜி மீட்டர்ஸ்

மக்கள் தங்களுடைய சாதனங்களிளிருந்து எவ்வளவு சக்தியை உபயோகிக்கிறார்கள் என்று நிமிடத்திற்கு நிமிடம் அந்தந்த சாதனங்களிலேயே மீட்டர்(நம் உள்ளூர் ஆட்டோ மீட்டர் மாதிரி இல்லாமல்) போட்டு காண்பித்துக் கொண்டே இருந்தால் ஐந்து முதல் பதினைந்து சதவிகிதம் வரை சக்தி வீணாவது குறைகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் உள்ளூர்  தொழில்நுட்ப ஆசாமிகளுடன் சேர்ந்து இந்த சக்தி உபயோக கணக்குகளை இணையத்தில் ஏற்றி மக்கள் ஒரு விழிப்புணர்வோடு இருக்க உதவி புரிய வருகின்றன.

3.மின்சார காற்று

நாம் வாழும் இப்புவியிலிருந்து பத்து கி.,மீக்கு மேல் ஐம்பது கி.மீக்குள் இருப்பது ஸ்ட்ரடோஸ்பியர். இந்த இடத்தில் ஓயாமல் நல்ல வேகத்தில் காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. இந்த வெயிலுக்கு அங்கே போய் உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் என்று நாம் சிந்திக்கும் இவ்வேளையில் லோகஷேமதிற்காக சிந்தித்த சில புண்ணியவான்கள் அங்கு அடிக்கும் காற்றிலிருந்து மின்சாரம் தயாரிப்பது பற்றி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். இப்படி தயாரிக்கப்படும் மின்சாரமானது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் தேவையைவிட நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கலிபோர்னியாவின் ஸ்கை வின்ட்பவர் என்ற நிறுவனம் ராட்சத கோபுரங்களை நிறுவப்போகும் வேளையில், இத்தாலியின் கைட்ஜென் என்ற நிறுவனம் மிக உயரப் பறக்கும் பட்டம் (மேலே படத்தில் இருப்பது அதுவே) மூலமாக ஸ்ட்ரடோஸ்பியர் காற்றிலிருந்து கரண்ட் உருவ முயற்சி செய்கிறார்கள்.
(ஐடியாக்கள் தொடரும்)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails