Wednesday, July 31, 2013

காஃபியாயணம்

கம்ப்யூட்டர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கரண்ட் கம்பியைப் பிடித்தது போல கட்டுப்பாடின்றி கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது. வெடவெடத்த மணிக்கட்டை திருப்பிப் பார்த்தால் மணி ஆறைத் தொட்டு ஐந்து நிமிடமாயிருந்தது. காஃபியடிமைகளான நாங்கள் மந்திரித்து விட்டது போல எழுந்து அந்த ஈக்கள் அண்டாத உணவுக் கோட்டைக்குள் புகுந்தோம். அது ஒரு சுயசேவைப் பிரிவு கடை. நான் காசை நீட்டுவதற்கு சற்று முன்னர் விநியோகப் பலகை எட்டாமல் எக்கி டபரா செட்டுகளை எடுத்து தளும்பாதவாறு அடிமேல் அடியெடுத்து ஒரு மாது சென்றுகொண்டிருந்தார். கவிச்சக்கரவர்த்தி அயோத்தியின் மகளிரை வர்ணிப்பது போல அன்னம் அந்தப்பெண்ணின் நடையை ஒத்திருக்கலாம் என்று தோன்றுமளவுக்கு மெதுவாக நகர்ந்து தனது இணைபிரியா இணைக்கு காஃபியை சிந்தாமல் டேபிளில் சேர்த்துவிட்டு தானும் சிதறாமல் அமர்ந்து கொண்டது.

நாங்களும் சிங்க நடை (கந்தன் கருணையில் சிவாஜி இடுப்பில் ஒரு முழம் துண்டோடு வீரபாகுவாக நடந்து வருவதை நினைத்துப் பார்த்து சிரிக்காமலிருக்க உங்களுக்குச் செந்திலாண்டவன் அருள் புரிவானாக!) நடந்து டேபிளை அடைந்து டபராவில் காஃபியை விட்டு ஆற்றிக் குடித்துக்கொண்டிருந்தோம். இன்னொரு டேபிளில் இவ்வளவு நாழியாக மொபைலைத் தேய்த்து நம்பர்களை அழித்துக்கொண்டிருந்த மாது தனக்கு இஷ்டப்பட்டவர் அங்கே பிரசன்னமானவுடன் விருட்டென்று புள்ளிமானாய் துள்ளிக்குதித்து ஓடி அன்னபக்ஷியாக காஃபியைக் கொத்திக்கொண்டு திரும்பியது. ஓரிரு வினாடிகளில் வலப்புறம் ஓரமாய் இருந்த டேபிளுக்கு வந்தடைந்த ஜோடியில், இரண்டு கைகளிலும் காஃபியேந்தி வந்தது அந்த ஒடிசலான மாதுதான். கலர் நிழலாய் பின்னால் வந்தவர் கைவீசம்மா கைவீசி கடைக்கு வந்திருந்தார்.

பக்கத்திலிருந்த ஃப்ரெண்ட் இந்தப் பெண்ணடிமைத் தனத்தைக் கண்டு பொங்கி எழுந்து கேட்டார் “ஏங்க இதுவரைக்கும் வந்த Pair எல்லாத்திலையும் ஒரு ஒத்துமையைக் கவனிச்சீங்களா? பாவம் பொண்ணுங்கதான் கஷ்டப்பட்டு காஃபி எடுத்துக்கிட்டு வருது. தடிமாடாட்டம் ஆம்பிளைங்க கையை வீசிகிட்டு பேசாம வர்றாங்க.” பதிலுக்கு என்னோடு கூட வந்த பாஸ் சொன்னார் “பாவம் அவன் வீட்டுக்கு போனவுடன் சாதம் வடிச்சு பத்துபாத்திரம் தேய்ச்சு பாக்கி காரியமெல்லாம் பார்க்கணும்னு இங்கே இந்தமாதிரி நாடகமெல்லாம் நடக்குது”. நான் சொன்னேன் ”இதுவரைக்கும் காஃபியடித்த ஜோடி எதுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை. அதான்.....”. பக்கத்திலிருந்து இன்னொரு நண்பர் “அப்புறம் பையன் தான் பெட்காஃபி கொடுத்து இவங்களை எழுப்பணும்”. சுற்றிலும் வருவோர் போவோர் கண்ணுக்குத் தெரியாமல் யமலோக அட்மிஷன் கதை ஒன்று உடனடியாக ஞாபகம் வந்தது.

”நீ நரகத்துக்குப் போகணுமா? சொர்க்கத்துப் போகணுமா?” என்று கோடியில் ஒருத்தனுக்கு யமகிங்கரர்கள் பெப்சி உங்கள் சாய்ஸ் போல தருவார்கள். பல நல்லவைகள் அல்லவைகள் செய்து மரித்து மேலோகம் அடைந்த அப்புருஷனுக்கு லாட்டரி போல அன்றைய தினம் அந்த அதிர்ஷ்டம் அடித்தது. “எனக்கு ரெண்டுத்தையும் ஒரு தடவை சுத்திக் காமிங்க. அதுக்கப்புறம் நான் எதுவேணும்னு டிஸைட் பண்றேன்”ன்னு சிரம் தாழ்த்தி வணங்கி விண்ணப்பித்தான்.

சொர்க்கத்துக்கு அழைத்துப் போனார்கள். கதவைத் திறந்ததும் அமைதியாக இருந்தது. ஒரு மூலையில் அரையாடை காந்தி ராட்டையில் நூற்றுக்கொண்டிருந்தார். தெரேஸா அங்கேயும் சிலருக்கு மானுட சேவை புரிந்துகொண்டிருந்தார். வள்ளுவர் கீபோர்டும் கையுமாகக் காமத்துப்பாலுக்கப்புறம் கம்ப்யூட்டர்பால் என்று புதியகுறட்பாக்களை எழுதிக்கொண்டிருந்தார். அங்கே கிங்கரர்களால் அழைத்துவரப்பட்டவன் குஷால் பேர்வழி. அவனுக்கு இவையெல்லாம் சிலாக்கியமாகப்படவில்லை. “ஐயா! நரகத்தைப் பார்க்கலாங்களா?” என்று கிங்கரர்களைத் தொழுது கேட்டான்.

பூலோகத்தில் ஸ்பீட் ப்ரேக்கராக பார்த்த அதே எருமையை பறக்க வைத்து அழைத்துப் போனார்கள். நரகத்துக்கு நானூறு மீட்டர் முன்னாலேயே “யே..ஆத்தா.. ஆத்தோரமா வாரியா...”ன்னு குத்துப் பாட்டுக் கேட்டது. நெருங்க நெருங்க “மல்லிகா நீ கடிச்சா நெல்லிக்கா போல் இனிப்பா.. “ன்னு ரிக்கார்ட் மாற்றப்பட்டு சிலுக்கு ஆடிக்கொண்டிருந்தார். ஜானிவாக்கர் ஷிவாஸ் ரெமிமார்ட்டின் என்று கைகளில் மதுபானங்களினால் நிரப்பப்பட்ட தம்ப்ளர்கள் ததும்ப எல்லோரும் ஹெடோனிஸ்டுகளாக நடனமாடிக்கொண்டிருந்தார்கள். ஒரே கூத்தும் கும்மாளமுமாக அந்த இடம் அல்லோகலப்பட்டது. இவனுக்கு பார்த்தவுடனேயே சட்டென்று அந்த இடம் ரொம்ப பிடித்துவிட்டது. “சார்..சார்.. நான் நரகத்துலேயே இருக்கேன்..” என்று நச்சரித்து அவர்களிடம் கேட்டுக்கொண்டான்.

“சரிப்பா.. உன் இஷ்டம்...”ன்னு விட்டுட்டு போய்ட்டாங்க. விடியவிடிய ஒரே கும்மாளம். ஜாலியா பொழுதைப் போக்கிட்டு தூங்கி எழுந்திருந்தான். பகல் பனிரெண்டு மணிக்கு யாரோ சுளீர் என்று சாட்டையால் அடிக்க எழுந்திருந்தான். நேரே நரகத்தின் சமையற்கட்டிற்கு தூக்கிக் கொண்டு போய் கை கால் நகத்தையெல்லாம் ஒவ்வொன்னா பிடிங்க ஆரம்பிச்சாங்களாம். பயபுள்ள அலறிப்போய் ”ஐயோ.. என்ன பண்ணப்போறீங்க”ன்னான். எண்ணெய்ச் சட்டியில போட்டு வறுக்கறதுக்கு முன்னாடி நகத்தையெல்லாம் எடுக்கிறோம். கத்திரிக்காவுக்கு பாவாடையை உறிச்சு குழம்புல நறுக்கிப்போடறதில்லையா. அது மாதிரி”ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாங்களாம். இவன் உடம்பெல்லாம் வேர்த்து “டே...டே.. நேத்திக்கு நல்லாத்தானே நடந்துக்கிட்டீங்க. அதுக்குள்ளாற இந்த நரகத்துக்கு என்னடா ஆச்சு”ன்னான். அதுக்கு அங்க ஹெட்குக் மாதிரி இருந்தவன் நெருங்கி வந்து ரகஸியம் மாதிரிச் சொன்னான் “நேத்திக்கு நீ ந்யூ எண்டரெண்ட். அதான் வெல்கம் பார்ட்டி கொடுத்தோம். ஒருநாள்ல இண்டக்ஷன் முடிஞ்சு போச்சு. இதுதான் ரியல்.”

இந்தக் கதைக்கும் கல்யாணம் ஆவதற்கு முன் அப்பெண்கள் காஃபியெடுத்து வந்து கொடுப்பதற்கும் கிஞ்சித்தும் ஒற்றுமையில்லை என்பதை தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி தெரிவித்துக்கொண்டு இவ்வியாசத்தை இந்த அளவில் பூர்த்திசெய்கிறேன். வணக்கம்.

Saturday, July 27, 2013

தலையணை மந்திரோபதேசம்

”என்ன மந்திரம் போட்டாளோ.. பொண்டாட்டி பின்னாடியே இப்படி ஆடறான்..” என்று பாதிக்கப்பட்ட மாமியார்கள் தங்கள் குழும சகமாமியார்களிடம் மாட்டுப்பொண்களை கரித்துக்கொட்டும் போது தலையணை மந்திரமென்பது பள்ளியறையில் மனைவியாகப்பட்டவள் சொக்குப்பொடி வார்த்தைகளால் நைச்சியமாகப் பேசி கணவனை தன் வசியப்படுத்துவது என்று தப்பர்த்தத்தில் ”மந்திரம்” பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படியில்லையாம். ஒரு சாஸ்திரியின் வெர்ஷன் கீழே!

இரண்டு மூன்று நாட்களாக எனக்கும் பில்லோ மந்திரம் நடந்துகொண்டிருக்கிறது. காதல் வயப்பட்டவர்கள் பல்வேறு கோணங்களில் தலையணையின் துணையோடு படுத்தும் ஒருக்களித்துக்கொண்டும் உட்கார்ந்தும் தனக்கு வந்த காதல் லிகிதத்தைப் படித்து இன்புறுவது போல இந்தத் தலையணை மந்திரத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். கவனிக்க. கேட்டுக்கொண்டிருந்தேன் அல்ல. படித்துக்கொண்டிருந்தேன்.

நடேச சாஸ்திரி என்ற பெருமகனாரால் 1901ல் எழுதப்பட்ட ”தலையணை மந்திரோபதேசம்” என்கிற க்ரந்தம் அது. புத்தகம் முழுக்க கௌட பிராமண தம்பதியர் அம்மணி பாய் மற்றும் ராம பிரஸாத் என்கிற இரண்டே கேரக்டர்கள் சம்பாஷித்துக்கொள்கிறது. பக்கம் பக்கமாக அம்மணி பாய் ராமபிரஸாத்தை கிழி கிழியென்று கிழிப்பதை நாம் நேரே நின்று பக்கத்துவீட்டுச் சண்டையை வாய் பிளந்து ஆர்வம் கொப்பளிக்க வேடிக்கைப் பார்ப்பது போல எழுதியிருப்பது இப்புத்தகத்தின் விசேஷம். காலதேசவர்த்தமானங்களையெல்லாம் கடந்தது இவ்வுபதேசம். சங்கரபிரஸாத்தின் அவலட்சணமான பெண் அம்மணி பாயை தனதான்யங்களுடன் ராம பிரஸாத்திற்கு திருமணம் முடித்து வைக்கிறார்கள். ஒவ்வொரு நாளிரவும் ராம பிரஸாத் நித்திரைக்கு போகும் முன் அவனின் அன்றைய நடவடிக்கையை விமர்சனம் செய்து வார்த்தைகளால் துவந்த யுத்தம் புரிவது அம்மணிபாயின் வழக்கம்.

அம்மணி பாயிடம் ராம பிரஸாத் வாங்கிய வசவுகளில் சில மாதிரிகள்...

"உலகத்தில் எவனாவது யோக்கியன் என்று பெயரெடுக்க விரும்புவன் பொடி போடுவானா? அது என்ன சர்க்கரையா, கற்கண்டா? மூக்குக்குத் தித்திக்குமா? துணியெல்லாம் பாழ். வீடெல்லாம் ஆபாசம்!!”

“நாளை மட்டும் பஜனைக்கூடத்து நீர் போம், பார்க்கிறேன்! நேரில் அவ்விடம் வந்து உமது மடியில் கைபோட்டு உம்மை வீட்டுக்கு இழுத்துவராவிடில் நான் ஒரு மனுஷியா?”

“இன்று ஓர் இரவு போனால் போகட்டும். நாளை இப்படி யாரையாவது கூட்டிவந்து “போடு இலை” என்றால் நான் அடுப்பில் ஒரு செம்பு தண்ணி ஊற்றிவிட்டு வாயிலில் நடந்து விடுவேன். அப்புறம் உங்கள் பாடு!!”

கடைசி அட்டைக்கு முதல் பக்கத்தில் அம்மணிபாய் ஜ்வரத்தில் பிராணனை விடும்வரை ராமபிரஸாத் அவளிடம் வசவு வாங்கிய கசையடி வைபவங்கள் ஒவ்வொன்றையும் மந்த்ரோபதேசமாக எடுத்து எழுதியிருக்கிறார் நடேச சாஸ்திரியார். மனைவி இவ்வளவு வசைபாடியும் பதிலுக்கு ஒரு வாக்கியமாகக் கூட இல்லாமல் இரண்டொரு வார்த்தைகளில் முடித்துக்கொண்டு அத்தியாயத்தின் கடைசி வரிகளில் கண்யர்கிறான். ஒன்றும் அறியாத மனைவிமார்கள் என்று இப்பூவுலகில் யாரேனும் இருந்தால் அவர்கள் திட்டுவதற்கு கோனார் நோட்ஸ் போல இப்புத்தகம் பயன்படுவது சர்வநிச்சயம். அதே ரீதியில் பாவப்பட்ட கணவனார்களுக்கும் வாங்கும் திட்டுக்களின் சேதாரத்தைக் குறைப்பதற்கான உபாயங்களைச் சொல்லிக்கொடுப்பதால் உபயோகமாயிருக்கிறது. இதைப் படிக்கும்போது சில சமயங்களில் அடக்கமாட்டாமல் குபீர்ச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தால் நீங்களும் ஒரு ராம பிரஸாத்தே!

கதைக் கணவனாக இருந்தாலும் ராமபிரஸாத் என்கிற வாயில்லாப் பூச்சி தனியொரு ஆணாய் வாங்கிக்கட்டிக்கொண்ட மூட்டை மூட்டையான வசவுகளுக்காகவும் சமுத்திரமளவு பொறுமைக்காகவும் மெரினா பீச்சில் அவனுக்கொரு சிலை வைக்கலாம் என்ற எண்ணம் எழாமல் கால்கட்டு போட்டுக்கொண்ட எந்த ஒரு ஆம்பளையாலும் இப்புத்தகத்தை மூடி வைக்க முடியாது.

மணமாகாத நண்பர்கள் யாராவது கலியாணம் செய்துகொண்டால் அவர்களின் நலம்விரும்பியாக இப்புத்தகத்தை பரிசளிக்க சித்தமாயிருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் பட்டியலில் கட்டை பிரம்மச்சாரியாக இருப்பவர்களுக்கு அதிசீக்கிரமே விவாஹ ப்ராப்திரஸ்து!!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails