Tuesday, August 31, 2010

போக்குவரத்து ஆத்திச்சூடி

avvaiஇந்தப் பதிவு ஒளவையாருக்கும் சக ஓட்டுநர் திலகங்களுக்கும் சமர்ப்பணம். தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஔவையாரும் கே.பி. சுந்தராம்பாளும் ஒன்று தான். அவரே வலது ஓரத்தில் இப்பதிவின் பட ஸ்லாட்டை நிரப்புகிறார். இது ஔவையார் படத்தில் ஔவையார் ஆத்திச்சூடி பாடும் போது எடுத்த ஸ்நாப்பாம். "அறம் செய விரும்பு" பாட ஆரம்பிக்கும் போது "அ" என்று வாயை திறக்கும் போது கிளிக்கியதாம். விஷயம் அறிந்தோர் விட்ருங்கப்பா..


காலையிலும் மாலையிலும் சென்னையில் ஒரு லட்சம் வண்டி பின்னாடி இடிக்காமல் உரசாமல் செவ்வனே போய் வருகிறேன். இரண்டு கால் வண்டியின் பாய்ச்சலில் சென்றுகொண்டிருந்த நான் மூன்று வருட காலமாக நான்கு சக்கரத்தில் சங்கடமாக சகடை உருட்டி ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.  ரோடில் தையல் மெஷினை தோளில் சுமந்து வரும் தையல்காரர் காலால் பெடல் செய்து தைப்பதை விட கிளட்ச்சுக்கும் ஆக்சிலேட்டருக்கும் மாறி மாறி நான் "தைய... தக்கா.." என்று சாணி மிதிப்பது அதிகம். ரொம்ப நாளாச்சு ஆத்திசூடி படிச்சு. பொண்ணோட புஸ்த்தகத்தில் நேற்றைக்கு பார்த்ததும் ஒன்னு எழுதிப் பார்க்கலாம் அப்படின்னு ஒரு சிறிய முயற்சி.
 1. லட்டும் ஃபிகரை பார்க்காமல் ஓட்டு
 2. ரணை அளந்து அடி (ஹார்ன்)
 3. ண்டு இடுக்கு புகாதே
 4. ரோடு போயி திருச்சு வா (யூடர்னில்)
 5. ரசுவது மாநகர பஸ்
 6. தலுக்கு ஒதுங்கி உதவு (ஆம்புலன்ஸ் சவுண்டு)
 7. ட்டா சிக்னலை வெட்டன மற 
 8. ட்டு சைகைக்கு சட்டென்று நில்
 9. யோ பாவம் சைக்கிளுக்கு வழி விடு
 10. ருமையில் திட்டாதே (வழி விடாதவர்களை )
 11. ரத்தில் ஒருங்கே நில் 
 12. டதம் டாஷ்போர்டில் வை 
விண்ணுலகிலிருக்கும் ஔவையார் காதுக்கு இது எட்டினால் என்ன ஆகும். ரொம்ப பயமா இருக்கு.  கீழ்காணும் வீடியோவில் "ஒப்புர ஒளுகு...." என்று பாடும் ஆத்திசூடி பாடலை மன்னிப்பவர்கள் இந்த பதிவையும் மன்னிப்பார்களாக.பட உதவி: tamilmoviewaves.net

கிருஷ்ண ஜெயந்தி

lord krishnaஅஷ்டமி ரோஹிணியில் அவதரித்த நம்ம கிருஷ்ணன் பர்த்டே ஸ்பெஷல். துவாபர யுகத்தில் பிறந்தவனுக்கு இது எத்தனையாவது பர்த்டே என்று கணக்கு போடலாம் என்று பார்த்தேன். நமக்கு ஒன்னும் ரெண்டும் எவ்வளவு என்று கேட்டாலே கண்ணு மண்ணு தெரியாது. அரண்டு போய்டுவோம். எஸ்.வி. சேகரின் வண்ணக்கோலங்களில் வரும் "ஒரு வேலையை ஒரு ஆள் முடிக்க அஞ்சு நாள்னா.... அதே வேலையை அஞ்சு பேர் செஞ்சா..... எத்தன...." என்று இழுக்கும் போதே நாம நாலு தெரு தள்ளி ஓடிக்கிட்டு இருப்போம். அதனால இந்த கணித ஆராய்ச்சியை தனியா ஒரு பதிவுல கண்டுக்கலாம். 

சாய்ராம்  கோபாலன் ரெண்டு மூனு நாள் முன்னாடி கிளப்பி விட்டது மனதிற்குள் சுவிட்ச் ஆஃப் ஆகாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. நாளைக்கு ஜென்மாஷ்டமி. பல பேருக்கு கிருஷ்ணன் நினைவுக்கு வருகிறானோ இல்லையோ சீடை, முறுக்கு நியாபகத்தில் வாய் அசைபோட ஆரம்பித்துவிடும். பண்டிகைகள் கொண்டாடத்தானே. முன்பெல்லாம் வருடத்திற்கு ஓரிரு முறை வீடுகளில் செய்யும் பட்சணங்களை இன்று ஸ்வீட் ஸ்டால்களில் வாசலில் நிற்க வைத்து தினமும் கொடுக்கிறார்கள். நடு வாசலிலிருந்து பூஜை அறை வரை சின்ன கண்ணனுக்கு செல்லக் கால் வரைந்து, ஆலிலையில் சயனித்து கால் கட்டை விரல் கடிக்கும் கிருஷ்ணன் படத்திற்கு விதவிதமான புஷ்ப மாலைகள் அணிவித்து.....அது என்னவோ தெரியவில்லை அந்த மாயவனை, மாதவனை நினைத்தாலே மனம் சொல்லவொண்ணா ஒரு உவகை கொள்கிறது. அந்த லீலாவிநோதன் பக்தர்கள் தன் மீது கொண்ட பக்தியின் காரணமாக ஸ்ருங்கார ரஸத்தை அவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தவன். மீரா, ஆண்டாள் போன்றோர் பாட்டாலே பக்தி செய்தார்கள். கண்ணடித்து காதலித்தார்கள். ஏதோ என்னால் முடிந்த ஒரு பாட்டுச்ச்சரம் கண்ணபரமாத்மாவின் திருவடியில். 


இது ஒரு கதம்பம். கர்நாடிக், திரை இசை, ஃபியூஷன் என்று கண்ணனைப் பற்றி வந்த எல்லாவற்றையும் கலந்து கட்டி தந்திருக்கிறேன். எம்.எஸ் அம்மா, ஜேசுன்னா, சுதா,  அருணா சாய்ராம், ஓ.எஸ். அருண் என்று பலரும் இங்கே வந்து இந்த கச்சேரி செய்கிறார்கள். அமைதியாக உட்கார்ந்து கண்ணை மூடி கேளுங்கள். கண்ணன் வருவான், கதை சொல்லுவான்.


இது லேட்டஸ்ட் பாஷன் கண்ணன். மார்னிங் ராகா - சுதாவோட வாய்ஸ். எக்சலேன்ட்.எம்.எஸ். சுப்புலட்சுமி கண்கள் சொருகி பக்தி ரசத்துடன் பாடும் பொழுது, நம்மை அவனிடம் இழுத்து செல்கிறது..பஜரே எதுனாதம்....ஜகதோதாரண... .. ஒன்ஸ் அகையின் சுதா....ஒ.எஸ். அருண் - பாரதியின் ஆசை முகம் மறந்து போச்சே.... என்ன ஒரு பாவம்... (BHAVAM).இன்னும் நிறைய இருக்கிறது. நேரமின்மையால் தர இயலவில்லை. நித்யஸ்ரீ மகாதேவனின் மதுராஷ்டகம் யூடியுபில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மாயவனைப் போலவே ஒளிந்துகொண்டுவிட்டது போலும். என்ன கிருஷ்ணன் இறங்கி வந்துவிட்டாரா? என்ஜாய்!!!!

பட உதவி: beautifulwallpapers.blogspot.com

Monday, August 30, 2010

ராவணன் - மரண வலி

கொஞ்சம் லேட்தான். இருந்தாலும் கடைசியா அந்த பயங்கரத்தை நேற்று பார்த்து விட்டேன். ஒரு மாசத்திற்கு முன் "ஒன்னு கிடைக்காதா... கிடைக்காதா..." என்று ஆளாய்ப் பறந்தேன். டிக்கெட்டுக்கு அல்பமாக நாலைந்து பேரிடம் கையில் திருவோடு கூட ஏந்திப் பார்த்தேன். நான் வணங்கும் தெய்வம் நல்ல தெய்வம். பார்க்கவிடாமல் செய்திருந்தது. இருந்தாலும் விதி யாரை விட்டது. நேற்று விளையாடிவிட்டது. ராவணன் படம் பார்த்தேன். பார்த்து தொலைத்துவிட்டேன்.

வால்மீகி ஒரு நாள் இரவு மணியின் கனவில் தோன்றி "இந்த உலகம் உய்ய பல கால கட்டங்களில் படமாக எடுத்த ராமாயண காவியத்தை நீயும் எடு.." என்று அன்புக் கட்டளை இட்டது போல ஒரு வித வெறியோடு ராவணன் எடுத்து வெளியிட்டிருக்கிறார் மணி. பைல்ஸ் வந்தது போல கொஞ்சம் கூட உட்கார முடியவில்லை. ஒரே நெளியல். நாயகன் எடுத்த மணியா இது? குரு எடுத்த மணியா இது? மௌன ராகம் எடுத்த மணியா இது? பம்பாய் எடுத்த மணியா இது? என்று பலமுறை மனசு மணியடித்துக் அடங்கமாட்டாமல் கேட்டுக்கொண்டிருந்தது. இந்தப் படம் ஹிட் ஆகணும்ன்னு எங்கிட்ட முன்னாடியே கேட்டிருந்தால் என்னுடைய தம்மாத்தூண்டு மூளையை கசக்கி பல ஐடியாக்களை தந்திருப்பேன். சரி இப்பயாவது கொடுத்து வைப்போம். காவியங்கள் நடையில் படமெடுக்கும் வருங்கால சந்ததியினர் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.  நெஞ்சு வெடித்து நான் கொடுத்த ஆறு ஐடியாக்கள் இதோ....
ravanan


ஒன்று: படத்தில் ஜனகர் மிஸ்ஸிங். முதல் சீனிலேயே திருநெல்வேலி சீமையிலே நிலத்தை ஆழ உழும் பொழுது, கருப்பு வெள்ளையில், நிலத்தில் ஒரு பெட்டியில் "ஊ..ஆ.." என்று ஒரு பெட்டியில் அழும் சீதையான ஐஸ்வர்யா ராயை மேல் சட்டை இல்லாமல் ரோம மார்போடு ஜனகரான விஜயகுமார் அப்பா கண்டெடுத்தால் இதை விட சிறப்பான ஓபனிங் சீன் இருக்கவே முடியாது.

இரண்டு: தசரதரை காணோம். ஒரு ஐந்தாறு பெண்டாட்டியுடன் ஒரு மந்திரியாகவோ அல்லது முதன் மந்திரியாகவோ நாட்டை ஆளும் ஒரு ராஜா ஸ்தானத்தில் இருப்பதாக தசரத மணிவண்ணன் நடித்திருந்தால் இன்னும் கொஞ்சம் லாஜிக்காக இருந்திருக்கும். கோசலை, சுமித்திரை, கைகேயி போன்ற பாத்திரங்களில் நடிப்பதற்கு இருக்கவே இருக்கிறார்கள்  அழகான அம்மாக்கள் நிறையபேர் கோடம்பாக்கத்தில்.

மூன்று: ஒரு விஸ்வாமித்திரர் கதாப்பாத்திரம் வைத்து ஊர்வசி மயக்கும் சீன் ஒன்று வைத்திருக்கலாம். ஊர்வசி கூட இருபது முப்பது பல்லு போன கிழவிகளுடன் "அக்கம் பக்கம் என்ன சத்தம்..." என்று கும்மி கொட்டி ஆடினால் படம் நிச்சயம் பிச்சிக்கிட்டு போகும். நமீதா அல்லது முமைத்கான் ஊர்வசிக்கு நல்ல தேர்வு. விஸ்வாமித்திரர் பாத்திரத்தில் நடிப்பதற்கு பிரகாஷ் ராஜ் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

நான்கு: அனுமாராக கார்த்திக்கை மட்டும் ஒண்டியாக படத்தில் விட்டது மகா தப்பு. கூடவே வாலி, சுக்ரீவன், அங்கதன் போன்ற வானர சேனையும் இருந்தால் நிச்சயம் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். அந்த காடுகளில் மரமெங்கும் வானர சேனைகள் தொங்கி ஊஞ்சலாடியபடி இங்குமங்கும் திரிந்தால் எப்படி இருந்திருக்கும். "கண்ணாளனே..." பாடல் காமெரா போல் 360 டிகிரி வரை சுழற்றி திருப்பி வருவோர் போவோருக்கு கழுத்து சுளுக்கு ஏற்ப்படுத்தி இருக்கலாம். சினிமா கொட்டகை வாசலில் அமிர்தாஞ்சன் விற்று சிலபேர் பிழைத்திருப்பார்கள்.

ஐந்து: சபரி, மண்டோதரி போன்ற உன்னத பெண் பாத்திரங்கள் எதுவும் படத்தில் இல்லாதது ஒரு பெருங்குறை. மேலுலகத்திலிருந்து அவர்கள் விட்ட சாபம் தான் படம் ஓடாமல் போய்விட்டதோ. மண்டோதரி மகா பத்தினி. சபரி பக்தியின் உச்சம். இவ்விருவரின் பெருங்கோபம் படத்தை சுட்டு, ப்ரோடியூஸர் கையையும் பழுக்க சுட்டுவிட்டது. 

ஆறு: ஜடாயு, ஜாம்பவான் போன்ற ஆக்ஷன் கிங் பாத்திரங்கள் இல்லாதது ஒரு வேதனையான விஷயம். அர்ஜுனுக்கு ரெக்கை கட்டி, கார்த்திக்கோட அப்பப்ப காட்டுக்குள்ள பறக்க விட்டுருந்தா ஒரு ஹாரி பாட்டர் படம் பார்க்கிற எஃபக்ட் கிடைத்து குழந்தைகள் கூட்டமாவது அம்மியிருக்கும். அந்த வாய்ப்பையும் இழந்தான் மணியின் ராவணன்.

படத்தில இன்னும் நிறைய மிக முக்கியமான கதாப்பாத்திரங்கள் மிஸ்ஸிங். அதை விடுத்து ரஞ்சிதா, ப்ரியாமணி, ப்ரியாமணியின் வுட் பி, போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்படி சைடுகள் ஏராளம். வையாபுரியை இனிமேல் அரவாணி ஆக்கி விடுவார்கள். அரவாணிகள் பாணியிலேயே ஒரு திருஷ்டி சுற்றி போடவேண்டும். அட்டகாசமான நடிப்பு. ரஹ்மான் அமர்க்களம். கள்வரே பாடலும் புத்திக்குள்ளே தீப்பொறியை நீ விதச்சவும் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன. வழக்கம் போல் வித விதமான பார்வைகளில் கோணங்களில் கேமரா. அசத்தல்.  அடிக்கடி "பக் பக்.." , "டன்டானா... .டன்டானா.." என்று வித விதமாக கூவுகிறார் விக்ரம், ஏதோ ஸ்டார்ட் செய்ய மக்கர் பண்ணும் ஆட்டோ போல. வசனம் சரியா எழுத வரலன்னா இந்த மாதிரி இரட்டைக் கிளவிகள் போட்டு ஃபில் அப் செய்துட்டாங்க போலிருக்கு. வீராவின் கதாப்பாத்திரம் இன்னும் ஸ்திரமாக உருவாக்கியிருக்க வேண்டும். அவரை ஏன் முதலேர்ந்து போலீஸ் தேடுது அப்படின்னு இன்னும் நன்றாக சொல்லியிருக்கலாம். ஒன்னும் புரியலை. ஆஞ்சநேயர் சூடாமணி எடுக்குற மாதிரியே கார்த்திக் ஐசிடம் அசோக வனம் மரம் மேலிருந்து ஏதோ பேத்தும் ஒரு சீன் இருக்கிறதே. அது ஒன்றுக்காகவே கொட்டகையிலிருந்து "விடு..ஜூட்" என்று ஒரே ஓட்டம் எடுக்கலாம். அப்பப்பா... கர்ண கொடூரம்.

நெஞ்சு பொறுக்குதில்லையே இது மணியிடம் இருந்து வந்த படம் என்றால்.

பின் குறிப்பு: இதே பாணியில் மணி எங்காவது மகாபாரதம் முயற்சி செய்யப் போகிறார். ப்ளீஸ் யாராவது அவர்கிட்ட சொல்லுங்களேன். மேற்கண்ட படத்திலேயே இந்த படத்தின் வெற்றியை(?) சிம்பாலிக்காக ஐசும், விக்ரமும் காண்பிப்பதாக எனக்கு படுகிறது. உங்களுக்கு?

Saturday, August 28, 2010

சனிக்கிழமை சங்கதி - சின்ன வீடு

இது பாக்கியராஜின் சின்ன வீடு பற்றி இல்லை.

அப்ப, என்னோட சின்ன வீடு பற்றிய அறிவிப்பா என்று கேட்கிறீர்களா? ஒரு தடவை நமக்கு வாய்ச்ச இடத்திலேயே "வசமா" கவனிக்கப்படும் போது எப்படிங்க அந்த மாதிரி நினைப்பெல்லாம். அதுவும் இல்லை. 

எவ்வளோ பெரிய வீடு இருந்தாலும் சில பிரஜைகள் காலம் தள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள். நொந்துகொள்கிறார்கள். ஆயிரம் ஸ்கொயர் ஃபீட் வீடு, 3BHK அப்பார்ட்மென்ட் என்று பல சைஸ் குடியிருப்புகள் கட்டிக்கொண்டு பெரு வாழ்வு வாழ்ந்தாலும், சாப்பிடும் மேஜையில் நாலு புத்தகம், டானிக் பாட்டில், ரெண்டு ஹேர் பின் கிளிப், மளிகை சாமான் ரசீது என்று எல்லா குப்பைகள் நடுவிலும் பந்தி விரித்து சாப்பிடவேண்டும். பங்களா மாதிரி வீடு இருந்தாலும், வீடு பூரா அஃறிணை பொருட்களை கடை பரப்பி வைத்துவிட்டு இரண்டு காலையும் "டாமி ஹாண்ட்ஸ் அப்" சொல்லும் போது செய்வது போல சேர் மேல் தூக்கி வைத்துக்கொண்டு டி.வி பார்ப்போம். ஷெல்ப், சோஃபா, டைனிங் டேபிள், சாய்வு நாற்காலி, ஸ்டடி டேபிள் என்று சகல விதமான ஐட்டங்களின் மேலும் சர்வ சுதந்திரமாக எல்லா பொருட்களையும் வீசி எறிந்துவிட்டு "இவ்வளோ பெரிய வீட்ல புழங்க இடமே இல்லைப்பா...." என்று எல்லோரிடமும் நீட்டி முழக்கி அங்கலாய்த்துக்கொள்வோம்.

சியாடெல் நகரத்திலே, 182 Sq. Ft பரப்பிற்கு ஒருவர் அல்லது மாக்ஸ்மிமம் இருவர் வாழும் ஆலயம் ஒன்றை எழுப்பியிருக்கிறார்கள். கீழே அண்ணன் டீ.வி பார்ப்பது காபி குடிக்கும் இடத்திற்கு கீழே..


டைனிங் டேபிள், கீழே ஒரு ப்ரிட்ஜ் உடன்டி.வி. பொட்டி பார்க்கிற இடம்..


இன்னும் நிறையா படங்கள் சேதியுடன் கீழே உள்ள முகவரியில்...

http://tinyhouseblog.com/apartment-living/tiny-seattle-apartment/

பின் குறிப்பு: சின்ன வீடுன்னு தலைப்பு வச்சா உடனே நம்மளால இசை ஞானியின் இசையில் மலர்ந்த அந்த வீட்டின் இந்த மியூசிக்கை போடாமல் விட முடியலை. ஜொள் ஒழுக பாக்கியராஜ் பார்க்கும் அந்தப் பார்வையும், ஞானியின் இசையும் சீனை தூக்குது. அதையும் பார்த்துடுங்களேன்.  ப்ளீஸ். நித்தியோட 'அந்த' வீடியோவுக்கு நக்கீரன் இதைத் தான் யூஸ் பண்ணினாங்க என்பது ஒருக்கால் உலகறிந்த உண்மையாக இல்லாமல் இருக்கலாம். இதை நம்ம பெரிய வீட்டுக்கு தெரியாம போட்டுருக்கேன். யாரும் சொல்லிடாதீங்க. தேங்க்ஸ்.

 

Friday, August 27, 2010

டைட்டில் ஐடியாக்கள்

cinema reelகாலையில் கையொடிய கார் ஓட்டிக்கொண்டு வந்தபோது காதில் விழுந்த படத்தலைப்பு ராமர். கொஞ்சநாள் முன்னாடி தான் ராவணன் வந்துட்டு போனார். இப்ப ராமர் வரார். இன்று போய் நாளை வா என்று இலங்கை வேந்தனை கூப்பிடுவாரோ? தெரியவில்லை. கோலிவுட்டில் ஒரே இதிகாச புராண தலைப்புகளாக வைத்து வெளுத்துக் கட்டுகிறார்கள். ஹிட் பாடல் வரிகளில் இருந்து எடுத்த தலைப்புகள் போய் இப்போது இராமாயண டிரெண்ட். தம்பி பொண்டாட்டியை அண்ணன் கவர நுகர முயற்சி செய்யும் படம் எஸ்.ஜெ. சூர்யாவின் வாலி (இப்ப எஸ்.ஜெ. சூர்யா எங்க போனார்?).  சீதை மாதிரி இல்லாத ஐஸை விக்ரம் சிறை பிடிக்கும் மணியின் படத்திற்கு பெயர் ராவணன். ரஜினி-மலபார் மம்மூட்டி நடித்த தளபதியைக் கூட 'கர்ணன் (அ) சூரிய புத்திரன்' என்று வைத்திருக்கலாம். இவையன்றி வாமனன், பரசுராம், நரசிம்மா என்று பகவானின் தசாவதாரப் பெயர்கள் வேறு. இன்னும் கொஞ்ச வருடம் முன்னாடி இயக்குனர் இமயம் தன் கொடுக்கை வைத்து ரிலீஸ் செய்த அல்லி அர்ஜுனா அப்புறம் இப்போது ஆக்ஷன் கிங் நடித்த தம்பி அர்ஜுனா. இப்படி ஒரேடியாக இதிகாச தலைப்பு வைத்து படுத்தும் டைர..டக்ட்டர்களுக்காக மேலும் டைட்டில்ஸ்க்கான ஐடியாக்களை அள்ளி வீசலாம் .

சகுனி
நிறைய சமீபத்திய படங்களில் மாமா வேடத்தில் வரும் நடிகர்கள் ஹீரோவின் காதலுக்கு அடிஉதை பட்டு அல்பமாக துணை போவார்கள். மாப்பிள்ளையுடன் வாடா போடா ரேஞ்சுக்கு பேசிக்கொண்டு பாதி படத்தை நிரப்புவார்கள். வயல் வாய்க்கால் வரப்பு விவகாரத்தில் துரி(மாடர்ன் துரியோதனன்) ஆசைப்பட்டதை அவன் சித்தப்பு பசங்களிடம் இருந்து  இந்த காலத்திற்கு ஏற்ப ரம்மி விளையாடி நிலபுலன்களை கெலித்துக்கொடுக்கலாம். ஊர் நடுவே கிராமத்தின் பஞ்சாயத்து நடக்கும் பெரிய ஆலமரத்தடியில் ஜமக்காளம் விரித்து ஊரார் முன்னிலையில் காலையில் இருந்து சாயந்திரம் வரை ரம்மி அண்ட் ஷூட் ஆடி அத்தனையையும் அபகரித்து துரிக்கு கொடுக்கலாம். இந்த படத்தில் மாமாவுக்குதான் பிரதான பாத்திரம். சகுனி - தி மாமா என்று தலைப்புக்கு கீழ் டாக்லைன் கொடுக்கலாம். படம் பிச்..ச்...சுகிட்டு போகும்.

தருமு
சொல்லவேண்டியதேயில்லை. அண்ணன் தம்பி அஞ்சு பேர். எல்லாருக்கும் மூத்தவன் தருமு. பெரியப்பா பசங்க கிட்ட எல்லாத்தையும் இழந்துட்டு சிட்டி பக்கமா வந்து ஒரு சின்ன டீக்கடை போட்டு பொழச்சுக்கிறான். இராப்பகல் உழைப்புல ஒரு அஞ்சு வருஷத்ல டீக்கடை தருமு இண்டர்நேஷனல் ஃபைவ்  ஸ்டார் ஹோட்டலா ஆயிடுது. அந்த காசை எடுத்துகிட்டு பெரிய பென்ஸ் காரில் கிராமத்து பக்கம் போய் உட்டதை புடிக்கறான். பங்கு தரமேட்டேன்னு சொன்னவங்களை தன் தம்பிகளின் அதிரடிப் படை கொண்டு அடிச்சு துவம்சம் பண்ணி எல்லாத்தையும் மீட்கறான். கடைசியில் திரௌபதி யாருக்கு சொந்தம் அப்படின்னு ஒரு நாட் வச்சு நாட்டாமை சீன் வச்சு பிரிச்சு மேயலாம்.  படம் அள்ளிக்கும்.

விபீஷ்ணா
பக்கத்து வீட்டுக்காரன் பத்தினியை அபகரிச்ச சொந்த அண்ணனின் அராஜக செயலைக் கண்டித்து நொந்து போய் பக்கத்து வீட்டுக்கே சென்று பர்மனன்டாக குடியேறும் ஒரு நல்ல தம்பியின் நீதிக்கதை. படம் முழுக்க அறிவுரைகளை அள்ளி வீசும் கேரக்டர். ஆங்காங்கே அண்ணன்-தம்பி பாசப் பிணைப்பு காட்சிகளும் உண்டு. கண்களில் நீர் முட்ட முட்டதான் படம் பார்க்கமுடியும். பக்கத்து வீட்டு புருஷனுக்கு அண்ணனின் வீக்னெஸ் எடுத்து சொல்லி அதற்க்கு தகுந்தார்ப் போல் காய் நகர்த்தும் ராஜதந்திர காட்சிகள் நிச்சயம் கைதட்டல் பெரும். காமாந்தகர்களுக்கு ஒரு நீதிபோதனை படம் என்று விளம்பரப்படுத்தி நிறைய காசு பார்க்கலாம். க்ளைமாக்சில் குடியேறிய வீட்டை தனக்கு சொந்தமாக்கிகொள்ளும் சீன் ரசிகப் பெருமக்களை "பச்... பச்.." கொட்டவைக்கும்.  அபாரம். 

ஜடாயு
முழுக்க முழுக்க நம்ம ராம. நாராயணன் சப்ஜெக்ட். லோ பட்ஜெட். இந்த முறை யானை, சர்ப்பம்,  குரங்குக்கு பதில் ஒரு பெரிய பறவையை க்ராஃபிக்ஸில் காண்பித்து, அதற்க்கு கூலிங் கிளாஸ், கோட்டு போட்டு அந்தரத்தில் பல டைவ் அடிக்க விடலாம். தன் மானுட சிநேகிதரின் மருமகளை விசேஷ விமானத்தில் கடத்தும் காமுகன் ஒருவனோடு வான் யுத்தம் நடத்தி, விமான ரெக்கையால் தன் ரெக்கையை துண்டிக்கப்பட்டு, துடி துடித்து கிழே விழும் போது மொத்த கொட்டகையும் தாரை தாரையாய் கண்ணீர் வடிக்கும். படத்தின் நடு நடுவே சிறு பிள்ளைகள் ஜடாயு மேல் ஏறி ஆகாயத்தில் பறந்து பாடும் "சொன்ன பேச்சை கேட்கணும் ஜடாயு மாமா..." போன்ற பாடல்களும் நிச்சயம் உண்டு. இது கடவுள் நாராயணன் சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட். வேப்பிலைக்கு வேலையில்லை. ஆனால் நிறைய துளசி செடிகள் வெட்டப்படலாம். ஜாக்கிரதை.

சூர்ப்பனகை
ஆண்டி ஹீரோயின் சப்ஜெக்ட். எவ்வளவு நாள் தான் ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட் படம் எடுக்கறது. ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்த உத்தம புருஷனை அடைய ஒருத்தி எடுக்கும் பல டகால்டி வேலைகளை காட்டும் படம். வித விதமான டிசைனில் காஸ்ட்யூம் அணிந்து தேமேன்னு ரோடில் சமர்த்தாக சென்றுகொண்டிருக்கும் ஒரு மகோன்னத ஆசாமியிடம் வம்பு செய்யும் காட்டு சிறுக்கியின் ஒருதலைக் காதல் கதை. சதா சர்வகாலமும் அவனை படுத்திக்கொண்டே இருந்ததால் எரிச்சலடைந்த அவன் விட்ட குத்தில் மூக்கு பேந்து போய் இரத்தம் வர, அவளுடைய அடியாள் அண்ணன்மார்கள் கோதாவில் இறங்கி ரவுண்டு கட்டும் கதை. இந்தக் ராட்சஷ காதல் பேயிடம் இருந்து எப்படி ஹீரோ எஸ்கேப் ஆனான் என்பதுதான் கதை. சில்வர் ஜுபிலி நிச்சயம்.

இப்படி பல தலைப்புகள் கைவசம் இருக்கிறது கதையோடு. தலைப்பு பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த தருணத்தில் கூச்சம் இல்லாமல் அணுகினால் படங்களுக்கு தக்க பெயர் தரப்படும்.
மேற்கண்ட படம் எடுத்த இடம்: rpifellowship.com

Thursday, August 26, 2010

எளியதும் வெல்லும் காலம்

tim tailorவலியது வெல்லும் என்ற கோட்பாட்டை மாற்றி எளியதும் வெல்லும் என்ற புதிய சித்தாந்தத்தை மானுட இனம் கொண்டு வந்தது டெக்னாலஜியால் என்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர். இந்த லோகத்தில் உலவும் ஆண் பெண் எல்லோரும் செயற்கையாக தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட வாலில்லா மனிதக் குரங்குகள் என்கிறார். ரத்தினச் சுருக்கமாக நாமெல்லாம் டெக்னாலஜி சிறை பிடித்து உருவாக்கிய "செயற்கை மனிதக் குரங்கு" என்பது இவர் கருத்து. இப்படி போட்டுத்தாக்கும் இவர் பெயர் டிமோதி டெய்லர். UK வில் உள்ள பிராட்ஃபோர்ட் பல்கலைகழத்தில் தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளராகவும், மனித இன ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார். இவர் எழுதிய The Artificial Ape:How technology changed the course of human evolution என்ற புத்தகம் இந்தமாதம் பெங்குவின் வெளியீடாக சந்தைக்கு வருகிறது. இவர் newscientist.com என்ற வலைத்தளத்துக்கு இந்த புத்தகத்தை பற்றி அளித்த நேர்காணலிருந்து சில பகுதிகள்.

டார்வின் என்னுடைய ஆதர்ஷ ஹீரோ தான். ஆனால் மண்டை பெருத்த  ஆடவர்கள் தான் ஆதிகால மகளிருக்கு கவர்ச்சிக் கண்ணனாக தோன்றினர் என்ற டார்வினின் கூற்றுக்கு நான் எதிரி. இருகால் கொண்டு நேராக நிமிர்ந்து நடக்கும் எந்த விலங்கினத்திற்கும் இயற்கையின் உந்துதலில் மண்டை சிறுத்துப் போகும். ஆகையால் டார்வினின் பெருத்த மண்டை கூற்றை ஏற்பது சரியாக இல்லை. அதேபோல் நாம் எப்போதுமே முழுவதும் உயிரியர்ப்பூர்வமாக இருந்ததில்லை. எப்போதும் ஒரு டெக்னாலஜியை அல்லது கருவியை சார்ந்தே அதன் துணைகொண்டே மனிதன் வாழ்க்கையை ஓட்டியிருக்கிறான்.  இருக்கிறான் என்கிறார்.

கல்லால் ஆன கூர் ஆயுதங்கள் மற்றும் கருவிகள் தோன்றிய காலம் இன்றிலிருந்து சற்றேரக்குறைய 2.5 மில்லியன் வருடத்திற்கு முன்பு என்று ஆராய்ந்து கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால் ஆதிகால ஹோமோ செபியன்கள் ஜனித்தது 2.3 மில்லியன் வருடத்திற்கு முன்புதான் என்றும் கணக்குபோட்டு கண்டுபிடித்திருக்கிறார்கள். (அது என்ன க்ருத யுகமா? த்ரேதா  யுகமா? யார் கண்டார்?)  இதுவே 300,000 வருடங்கள் வித்தியாசம் வருகிறது. ஆகையால் கல் ஆயுதங்கள் கருவிகள் ஹோமோ செபியன்கள் காலத்திற்கு முன்னரே இருந்திருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.

ஒரு ஆளைக் கொல்வதற்கு கூரான கல் ஆயுதங்கள் தான் தேவை என்பது இல்லை. ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி தலையில் போட்டால் போதும். ஆள் காலி. ஆனால் இந்த கூரான கற்க் கருவிகள் வேறு சில தேவைகளுக்கு உபயோகப்பட்டிருக்கின்றன. ஒரு கருவி கொண்டு மற்றொரு கருவி தயாரிக்கலாம்.

ஆதிகாலப் பெண்களுக்கு பாலூட்டுவதைவிட குழந்தையை தூக்கிக் கொண்டு கற்களிலும் புற்களிலும் காடுமேடுகளிலும் நடந்து போவது ஒரு பெரும்பாடாக இருந்திருக்கிறது. (இப்பவும் வெளியிடங்களில் ஆண்களை தூக்கவிட்டு ஒய்யாரமாக கூடத்தானே வருகிறார்கள்-இது நம்ம சரக்கு) ஆகையால் ஏதோ ஒரு காட்டு விலங்கின் தோலை எடுத்து தூளி மாதிரி கட்டி போட்டிருக்கிறார்கள். (இப்போ எல்லா கோயில் மரங்களிலும் மினியேச்சர் மரத் தொட்டில் கட்டுகிறார்கள் - இதுவும் நம்ம சரக்கு) இப்படி தூளி செய்வதற்கு இந்த கற்க் கருவிகள் உதவி தேவைப்பட்டிருக்கலாம். இப்படி ஒரு தூளி தொங்கும் வசதி வாய்த்தவுடன் மக்கள் மனித கங்காருவாக மாறி நிறைய பிள்ளை பெற்றுத் தள்ளி பல்லாண்டு காலமாக மனித இனம் பதினாறு பெற்று  பெரு வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்க்கு மூலாதாரம் அந்த கல் கருவி மற்றும் தோல் தூளி என்ற இரு அடிப்படை கருவிகள். இதற்க்கப்புறம் நமது இனத்தின் தேவையின் அடிப்படையில் டெக்னாலஜி துணை கொண்டு பல்லாயிரக்கணக்கான விதவிதமான கருவிகள் தயாரித்து புழக்கத்தில் விட்டு விட்டோம்.

எதையும் ஒட்ட நறுக்கும் கருவிகள் பல வந்ததால் கூரிய நகம் வளர்ப்பதை விட்டுவிட்டோம். கூழாக அரைத்து நொருக்குவதற்கு அரவை மிஷின் வந்ததால் நல்ல தெம்பான உறுதியான தாடைகளை இழந்துவிட்டோம். தொழில்நுட்பங்களால் உடலுருப்புகளின் சக்தி குறைபாடுகள் யுகம் யுகமாய் ஜென்மாந்திரங்களாக இன்னும் தொடர்ந்து குறைந்த வண்ணம் இருக்கிறது. 10,000 வருடத்திற்கு முன் இருந்த அந்தக் கூரிய கழுகுப் பார்வை இப்போது நம்மிடத்தில் இல்லை. மூளையின் அளவு சிறியதாகிக்கொண்டே வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 30,000 வருடத்திற்கு முன் இருந்த மூளை அளவு இப்போது கிடையாது. இதுபோல உடற்க் குறைபாடுகள் இருப்பினும் டெக்னாலஜி கொண்டு கண்டுபிடித்த வஸ்த்துக்களின் உதவியால் ஒப்பேற்றிக்கொண்டு இருக்கிறோம். உடல் திடகாத்திரம் மற்றும் பலமே பிரதானமாக இருந்த காலம் மலையேறிப்போய் பலவீனமான ஆட்கள் கூட பல எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் உடலெங்கும் பொருத்திக் கொண்டு காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பம்பரமாக சுற்றுவதை பார்க்கிறோம், வலியது எளியது என்ற வேறுபாடு இல்லாமல். Survival of the Fittest போய் தற்போது Survival of the Weakest. இப்போது இயந்திரங்களிடம் நம் ஒட்டுமொத்த அறிவையும் ஒப்படைத்துவிட்டு அதனிடம் இருந்து கிரெடிட் கார்ட் போல தேய்த்து தேய்த்து கடன் வாங்கி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.

உயிர் + டெக்னாலஜி = மனிதன் என்று முத்தாய்ப்பாக சொல்கிறார்.

இப்படி இந்த நேர்காணல் முழுக்க விவரங்களாக கொட்டி இறைத்தது மூச்சு முட்ட வைக்கிறார் இந்த மனுஷன். இன்னும் நிறைய இருக்கிறது. என்னோட இந்த சகிக்க முடியாத மொழிபெயர்ப்பைக்காட்டிலும் நல்லா படிக்கணும்ன்னா கீழே கொடுத்துள்ள முகவரிக்கு சென்று படியுங்கள். அவசியம் புக் வாங்கி படிக்கணும். நன்றி.

படஉதவி: www.newscientist.com

Wednesday, August 25, 2010

ஜாம் ஜாம் ட்ராஃபிக் ஜாம்

தரை மார்க்கமாக எங்கே போனாலும் கூட்டம் அம்முகிறது. வழுக்கை மண்டை தெரியாமல் இருக்க பாலுமகேந்திரா கேப் போட்டு அது கீழே விழுந்தால் ஷன நேரத்தில் நாலு வண்டி ஏறி இறங்கும் அளவிற்கு ட்ராஃபிக். ஒரு மாநில மாநாடு மாவட்ட பேரணி என்று கட்சியினர் கொடி பிடிக்கும் போது ஒரு மணி ரெண்டு மணி நேரம் நம்மளை ரோட்ல தேமேன்னு ஓரமா நிக்க வச்சா ஏக டென்ஷனாகி ஒட்டு மொத்த அரசு இயந்திரங்களை புழுதி வாரி ஏக வசனத்தில் சபிப்போம். ஒரு சின்ன பக்கத்து ரோடிலிருந்து மெயின் ரோடிற்கு இப்ப போய்டலாம் என்று பிரயாசைப் பட்டு வருபவர்களின் ஆசையை நிராசையாக்கி அந்த காரை ஒரு இன்ச் நகர்த்த விடாமல் உடஞ்ச சைக்கிளில் ஆரம்பித்து, உயர் ரக இம்போர்டேட் கார் வரை இஞ்சி தின்ன குரங்கு போல கார்க் கைதியாக உள்ளேயே உட்காரவைத்து ரோடோரத்தில் சுற்றி சுற்றி வந்து கும்மியடிப்போம். வண்டியில் உட்கார்ந்தால் நேரே போகவேண்டிய இடத்திற்கு செல்லவேண்டும். "ஊட்ல சொல்லிட்டு வன்ட்டியா?.. சாவு கிராக்கி..." என்று வண்டியில் இருந்து எட்டிப்பார்த்து தூய தமிழில் நல்ல கிராக்கியிடம் அர்ச்சனை கிடைத்தாலும் ஹாரன் அடித்து விலகாத யமதர்மராஜா வாகனம் போலவும் கார்ப்பொரேஷன் லாரி போலவும் கண்டுக்காம அப்படியே "போய்க்கினே" இருப்போம். எங்கேயும் நிற்கக்கூடாது. இது தான் தலையாய கொள்கை.

நாட்டு மக்களின் நன்மைக்காக ஒரு பாலம் கட்டினாலோ, ரோடு அகலப்படுத்தினாலோ கொஞ்சம் அந்த ஏரியாவில் நெரிசல் ஏற்ப்படுவது இயற்கையே. "இவனுங்க வருஷம் பூரா கட்டுவானுங்க... நாம கிடந்து சாவனும்..." என்று அலுத்துக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை நொட்டை சொல்லிக்கொண்டு அதே ரோடு வழியாக அலுவலகம் சென்று வந்துகொண்டிருப்போம்.

நம்மோட சுதந்திர தினத்திற்கு முதல் நாளிலிருந்து சீனாக்காரர்கள் ரோடிலேயே ஒன்றுக்கு இரண்டுக்கு போகும் இயற்கை உபாதையிலிருந்து சாப்பாடு வரை தின்றுவிட்டு ராப்பகல் அகோராத்திரியாக ரோடிலேயே தவம் கிடக்கிறார்கள். விஷயம் என்னன்னா சீனாவின் ஹெயபின் ப்ராவின்சிலிருந்து பெய்ஜிங் உள்ளே செல்லும் வழியில் நடக்கும் ஒரு கட்டுமானப் பணியினால் ஏற்ப்பட்ட சிறு போக்குவரத்து தேக்கமானது ஒருத்தர் வண்டி முன்னாடி இன்னொருத்தர் மூக்கை நுழைத்து போக ட்ரை பண்ணி பாடியோட பாடி உரசி இடித்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ட்ராஃபிக் பில்ட் அப் ஆக ஆரம்பித்து இப்போது நூறு கிலோ மீட்டர் தூரம் வரை வண்டி நிக்குதாம். இந்த ஜாம் சரியாக இன்னும்  ஒரு மாசம் கூட ஆகலாம் அப்படின்னு 'சாலைத்துறை' வல்லுனர்கள் கருத்து சொல்றாங்களாம். கருத்து கந்தசாமிகளுக்கு எந்த நாட்டிலேயும் பஞ்சம் இல்லை. ஆனா இந்த ட்ராஃபிக் ஜாம் அந்த ஏரியாவில இருக்கிற மக்களுக்கு ஒரு புது பிசினஸ் கொடுத்துருக்காம். சீடை, முறுக்கு பட்டாணி சுண்டல், நூடுல்ஸ் அப்படின்னு எல்லா தின்பண்டங்களும் விக்கறாங்கலம். ஆனா என்ன விலை தான் தியேட்டர் உள்ள சாப்பிடுற சமோசா மாதிரி யானை விலை குதிரை விலையாம்.

என்னத்த சொல்ல.. இனிமே பத்து நிமிஷம் இருவது நிமிஷத்திற்க்கெல்லாம் யாரையும் வையாதீங்க. அமைதியா நின்னு ஊடு போய் சேருங்க...

செய்தியும் படமும் இங்கே: http://newsfeed.time.com/2010/08/23/epic-traffic-jam-in-china-enters-its-9th-day/

Tuesday, August 24, 2010

ஃபுல் மப்புல.....

drunkதண்ணி அடிச்சா  தல கால் புரியாம இருக்கலாம் அதற்காக  "டா....ய்..." என்று ஒரு ரயில் ஹார்ன் மாதிரி தெரு முழுவதும் கொடுத்துகொண்டே போவார்கள். இது கொஞ்சம் ஓவர்தான். இப்படி ஏன் என்று போதைப் பிரியர்களுடன் கூடிக் குலவி கும்மியடிக்கும் ஒரு நண்பனிடம் கேட்ட போது, "அது ஒன்னும் இல்ல மாமா... பொதுவா ராத்திரி கடையை பூட்டிட்டு, வாந்தி எடுத்து விழுந்து கிடந்தவனை ஒரு மிதி மிதிச்சு விரட்டி விட்ருவாங்க. ராத்திரி பதினொன்னு பன்னெண்டு மணிக்கப்புறம் நாயும் நரியும் உலவுற டயத்ல தனியா ஊட்டுக்கு வரணும். நாய் குரைச்சு கடிச்சு வச்சுரப் போவுதுன்னு... நாய் மாதி குரைக்க ட்ரை பண்ணி நா...ய்...ன்னு கத்தறத்துக்கு பதிலா டா....ய்... அப்புடின்னு குரல் உட்டுக்குனு போறானுக. இதெல்லாம் ஒரு தெம்புக்கு குடுக்குற சவுண்டு. வேற ஒன்னும் இல்ல" என்று கட்டிங் அடிப்பவர்களை கடையிலிருந்து வீடுவரைக்கும் கொண்டு போய் விட்டது மாதிரி சொன்னான்.

இந்த ஃபுல் மப்புல ரோடுல "ஆட்ரா ராமா.." ஆடிக்கிட்டு போற மக்கள்ல நிறைய வகையறா இருக்கு. சிலது எங்கோயோ பார்த்திகிட்டே முன்வரிசை பல் எல்லாத்தையும் காமிச்சுகிட்டே போய்கிட்டு இருக்கும். விவரம் தெரியாம திருப்பி சிரிச்சி வச்சா. போச்சு. சிரிப்பை நிறுத்திட்டு மறைவாய் இருக்கும் உடலுறுப்புகளை சொல்லி திட்ட ஆரம்பித்துவிடும். இன்னும் சில மப்பு மன்னார்சாமிகள் தான் திட்ட வேண்டிய அல்லது குஸ்தி போட வேண்டிய ஆள் எதிரில் நிற்பது போல அவர்களுடைய முழு சண்டையையும் எல்லா விவரங்களுடன் கையை எதிரே ஆட்டி சொல்லி திட்டிக்கொண்டே செல்வார்கள். இந்த தண்ணி வண்டிகளில் சில அமுக்குணி ஆட்களும் உண்டு. வாயே திறக்காமல் ஒரு சிந்தனா சிற்பி போல எதையோ தீவிரமாக சிந்தித்திக்கொண்டே தெரு ஒரமாக சிறிய தள்ளாடல்களுடன் நடையை கட்டுவார்கள். கல்யாணத்திற்கு பிறகு தண்ணி அடித்துவிட்டு வந்து வீட்டு வாசலில் நின்று கொண்டு பொண்டாட்டி பெயரை சத்தமாக கூப்பிட்டு விட்டு விழுந்த பூசையில் அப்புறம் கள்ளுக் கடை வாசலை மிதிக்காத சில உன்னத புருஷர்களும் எனக்கு தெரிந்து இருக்கிறார்கள்.

அதெல்லாம் கிடக்கு. இங்கே இருக்கிற இந்த ரஷிய ஆளைப் பாருங்க. அரையில போட வேண்டிய அன்ட்ராயரை தலை வழியா டி ஷர்ட் மாதிரி போட ட்ரை பண்றாரு. இதுக்கு தான் நம்ம ஆளுங்க கைலி இல்லைனா வேஷ்டி கட்டிக்கிட்டு தண்ணி அடிக்க போயிடறாங்க. கழண்டு விழுந்திருச்சுன்னா வடிவேலு மாதிரி எடுத்து தலையில கட்டிக்கிட்டு சொகமா வீடு வந்து சேர்ந்துறலாம்.இவருக்கு ஒரு ஆளு ஹெல்ப் பண்ணினாரே அவரும் மப்புல இருக்காரோ? போதையான உலகம்டா சாமி.

அரை டிக்கெட்டின் ஆங்கில கட்டுரை

vin1சின்ன வயசில் "வாழைமரம் பற்றி ஒரு பக்க கட்டுரை வரைக" என்று தமிழில் கேட்டாலே நமக்கு ததிகினதாம் போடும். வீட்டு கொல்லைப்புறத்தில் அவசரத்துக்கு ஒதுங்கும் போது பார்த்த வாழைமரத்தை ஞானக் கண்ணால் பரீட்சை எழுதும்போது அண்ணாந்து மேற்கூரையை பார்த்துட்டு தார் போடும், பூ, காய், கனி என்று எல்லாவற்றையும் சாப்பிடலாம், வாழையடி வாழை அப்படின்னு ஏதோ எழுதி வெள்ளை பேப்பரை நீலமாக்கி ஒப்பேற்றி கொடுத்துவிட்டு வருவோம். கட்டுரை எழுதுதல் பற்றி பி.ஏ.கிருஷ்ணன் (புலிநகக் கொன்றை) தன்னுடைய அக்ரகாரத்தில் பெரியார் (காலச்சுவடு வெளியீடு) புஸ்த்தகத்தில் சிறுவயதில் அவர் எழுதிய ஒரு ஆங்கில கட்டுரையில் A thief stolen my Bicycle என்று வந்த ஒரு வாசகத்தை பார்த்து அவர் அப்பா "திருடன் தான் சைக்கிளை திருடிண்டு போவான்,வேற யாரு வந்து திருடுவா?  தீஃப்ங்கற வார்த்தை தேவையே இல்லைன்னு சொல்லி சிரிச்சார்" அப்படின்னு எழுதியிருப்பார். நம்ம வாத்தியார் சுஜாதா கூட அப்பப்ப சிறந்த ஆங்கில கட்டுரைகளின் தொகுப்பு வெளிநாடுகளில் வெளியிடுவது போல் நாமும் வெளியிடவேண்டும் என்று சொல்வார். வாஸ்த்தவம்தான். பேசும்போது சுலபமாயிருக்கிற விஷயங்கள் வாசகமாய் எழுதும்போது முட்டிக்கும். அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதியதாய் சரித்திரமே இல்லை. சில நேரங்களில் வார்த்தை தேடி தேடி எண்ணங்கள் சிதைந்து சிதறிப் போகும். எழுது. அடி. திருத்து. எழுது.....

Photobucketரொம்ப நீட்டி முழக்க வேண்டாம். என்ன சொல்ல வந்தேன்னா என்னுடைய சீமந்த புத்ரி ஐந்தாவது படிக்கும் ஒரு அரை டிக்கெட்டு. அவர்கள் பள்ளியில் ஒரு டாபிக் சொல்லி ஐந்து நிமிடத்திற்குள் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதச் சொல்லியிருக்கிறார்கள் . அப்படி அவசரகதியில் காமா சோமாவென்று அவள் எழுதிய இரண்டு கட்டுரைகளை கீழே தந்திருக்கிறேன்.

1. Happenings at Home (Last Sunday)
-----------------------------------------
Last Sunday my father my mother went out in the evening to buy for our house function and in my home me, my sister and my friends were playing and we ate delicious food and we were happy playing computer and my mother bought me chocolates and for me she bought pencil box. I was very excited in that day then I played carom board. And finally we went to sleep at night. Thank You!

2. Autobiography - Umbrella
Hi! I am umbrella people use me when it is hot and rainy and I have pink spots on me. I am made of rexin cloth and I am foldable. I am made in factory and I protect people from rain and my hand is made out of plastic. When grandma wants to go to the temple in a hot sun they also take me in that time. I worship god and I am used as granspa's walking stick and I am sold in shops. Please people buy me I will be useful for you everywhere and everytime in summar and in rainy days and even I come in designs and shape. Childrens open and sit on me in that time I cry but they enjoy it even for playing the children use me. Thank You!
மேற்கண்ட இந்த இரண்டு கட்டுரையிலும் நிறைய and போட்டு எழுதினாலும், தன்னுடைய பிஞ்சு நினைவோடையில் வந்ததை ஓரளவுக்கு மற்றவர்களுக்கு புரியும்படி எழுதியவளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக எனக்குப் பட்டது. ஏனென்றால் வீட்டில் முழுக்க முழுக்க தமிழில் சம்பாஷித்து பள்ளியில் மட்டும் ஆங்கிலம் பயில்வதால் இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது என்று நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?

Monday, August 23, 2010

எண்ட குருவாயூரப்பா....

onamஇது ஓணம் ஸ்பெஷல். எண்ட குருவாயூரப்பனின் தேசமான மலையாள நாட்டில்  மூன்றடி கேட்டு வாமனனாய் நின்ற நெடுமாலுக்கு மொத்தத்தையும் கொடுத்துவிட்டு வருடாவருடம் மஹாபலி நாடு திரும்புதல் வைபவம் ஓணம் பண்டிகையாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நம்மூர் ஆட்களுக்கு கேரளா எப்பவுமே ஒரு ஸ்பெஷல் அட்ராக்ஷன் தான். அடல்ட்ஸ் ஒன்லி படத்தில் ஆரம்பித்து நேந்திரங்காய் சிப்ஸ் வரை. சென்னையில் பல இடங்களில் 'கேரளா ஹாட்' சிப்ஸ் கடை வெகு விமரிசையாக கல்லா கட்டுகிறது. இரண்டிரண்டாக உரித்த நேந்திரங்காய்களை தலைக்கு மேலே சேர்த்துப் பிடித்து அந்நியனில் சமையல் காண்ட்ராக்டரை கொல்ல பயன்படும் ஒரு ஆள் மூழ்கும் எண்ணெய் சட்டியில் "சரக் சரக்..." என்று சீவி விழுந்து தக தகவென்று பொன் நிறமாக பொரியும் பொழுது கொலஸ்ட்ரால் நம் அகக் கண்ணிலிருந்து மறைந்து விடுகிறது. வாய்க் கட்டுப்பாடு இல்லாமல் ஒரு நூறு கிராமாவது வாங்கி வயிற்றில் போட்டுக் கொள்கிறோம். முண்டு அணிந்து பாரம்பரிய உடையான வெளிர் சந்தனக் கலர் புடவையில் சிகப்பு நிற ஜாக்கெட் போட்டு பவனி வரும் பெண்களை பார்க்கும்பொழுது தங்களை அறியாமல் ஒரு மனக் கிளர்ச்சி தமிழக விடலைகளிடம் எழுவது இயற்கைதான். முண்டு கட்டிய எந்த ஃபிகரை பார்த்தாலும் இன்று ஓமனக் குட்டி தான்.  விவேக் போல "எண்ட நாடு கேரளம், எண்ட லாங்குவேஜ் மலையாளம்" என்று திரிவர். சரி இதே மூடோடு பச்சைத் தமிழ் படங்களிலும் மலையாள வாசம்  பெற்ற பாடல்கள் சிலவற்றை தொகுத்துள்ளேன். 

குதிர் போல வளர்ந்திருக்காய்.. தூண்ல பாதி நிக்கறாய்... கையை பிடிச்சா கல்யாணமா... என்று சொல்லி இடுப்பை பிடித்து ஆடும் கமலின் "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்.." மை.மத.கா.ராஜன் படத்தில் கிணற்றை சுற்றி ஆடும் பாட்டு..."ஓரப் பார்வை வீசுவான் உயிரும் கயிறு அவிழுமே..." அப்பப்பா.. மலபார் தேசத்தில் படகின் மேல் பம்பரம் ஆடும் ப்ரீத்தி ஜிந்தா.. உயிரே படத்தில்...பழி சொல்லக் கூடாது புகழ் உதித் நாராயண் பாடிய ரஜினி, மீனாவின் "குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ..."கதகளி ஆடும் மக்களுடன் தகதிமி ஆடும் அசின். சூப்பர்.பாலக்காட்டு மாதவன் பாக்கியராஜ் மலையாளத்தில் பாட ஆரம்பித்ததால் இதுவும் இங்கே. சப்தஸ்வர தேவி உணரு...தன்னைவிட இளசான ராதாவிடம் என் உயிர் கண்ணம்மாவில் முண்டு கட்டி போட்டி போடும் லக்ஷ்மிக்காக இதுவும் இந்த லிஸ்டில். ராஜாவின் இசையும் அதற்கேற்ற ரம்மியமான பின்னணியும் இதற்க்கு பிளஸ்.
இந்தக் கலெக்ஷனில் ஒரு குறையாக மலபார் போலீஸ் படத்தில் சத்யராஜுடன் குஷ்பு குதியாட்டம் போடும் "பாலக்காட்டு பொண்ணு பம்பரம் போல கண்ணு..." எங்கே தேடியும் கிடைக்கவில்லை. யாராச்சும் கிடைச்சா சொல்லுங்க சேர்த்துடுவோம்.

கடைசியாக... விவேக் மலையாள நாட்டவராக சண்ட மேளத்துடன் புகுந்து கலாய்க்கும் ஒரு காமெடி. இது ஓணம் சூப்பர் ஸ்பெஷல்.விஷ் யூ ஹாப்பி ஓணம்.

மன்மத லீலை

rathimanmadhanதீராத விளையாட்டுப் பிள்ளை மன்மத லீலை பற்றி எழுதினால் ஏதாவது ஏடாகூடமாக இருக்கும் என்று எண்ணிவிடாதீர்கள். இது ஒன்றும் பாலச்சந்தர் பட விமர்சனமும் அல்ல 'அந்த' மாதிரி பதிவும் அல்ல. இன்றைய காதல் கவிகளின் அகராதி மகாகவி காளிதாசரின் குமார சம்பவத்தை தமிழில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது, நலம் வெளியீடாக. சமஸ்க்ருதம் தெரிந்தால் மூலத்தை படித்து காதல் ரசத்தை பருகி இன்புறலாம். நான் அந்த தேவ பாஷையில் கைநாட்டு என்பதால் கிடைத்தை படித்து பார்த்தேன். தமிழ் மொழியாக்கத்திலும் அந்த காதல் சிருங்கார ரசம் ததும்புகிறது.  வேறு யாராவது மொழி பெயர்த்திருக்கிரார்களா என்று தெரியவில்லை. சிவனார் தியானம் செய்யும் இடத்தில் தைரியமாக நுழைந்த மன்மதனின் கரும்பு வில் கொண்டு மலரம்பு ஏவும் விஸிட் எப்படி அந்த எழில் கொஞ்சும் பர்வத பகுதியை காதல் பீடித்து கொண்டு உலுக்குகிறது என்பதை சொற்கள் பிரயோகித்து நம் மீது தொடுத்திருக்கிறான் காளிதாசன். இந்தப் பதிவின் ஆரம்பத்தில் 'அர்' விகுதியில் ஆரம்பித்து 'அன்' விகுதியில் முடித்துவிட்டேன். சே. என்னமாய் ரசித்திருக்கிறான். அந்தப் புஸ்தகத்திலிருந்து சில பகுதிகள் கிழே.. 
தன்னுடைய மலர்வில்லை நாண் ஏற்றி, ரதியுடன் கூட அந்த இடத்துக்கு மன்மதன் வந்தபோது, எல்லா இடங்களிலும் எல்லா உயிர்களும் தங்கள் செயல்களால் காதலின் உச்சியை எட்டிய பேராவலில் திளைத்தார்கள்.
ஒரே மலர்ப் பாத்திரத்தில் உள்ள தேனை, ஓர் ஆண் தேனீ தன்னுடைய காதலியை முதலில் குடிக்கவிட்டு, பிறகு, அதைப் பின்தொடர்ந்து தானும் குடித்தது.

ஓர் ஆண்மான், தான் தொட்டதால் உணர்ச்சி பொங்கித் தன் கண்களை மூடிக்கொண்டிருக்கும் பெண்மானை, தன் கொம்பால் கீறியது.

தாமரை மலைர்களின் மகரந்தத்தால் குளத்தில் உள்ள நீர் நறுமணமாக்கப்பட்டது. ஒரு பெண் யானை காதலினால் தூண்டப்பட்டு அந்த நீரைத் தன் வாயில் எடுத்து அதை ஆண் யானைக்கு கொடுத்தது. ஒரு சக்கரவாஹப் பறவை, தான் பாதி கடித்து மென்ற மிகுதியான தாமரைத் தண்டைத் தன் மனைவிக்குக் கொடுத்து அதை கௌரவித்தது. 

கின்னரப் பெண்களுடைய முகங்களில் வரையப்பட்ட நிலைச் சித்திரங்கள், வியர்வைத் துளிகளால் சிறிது அழிந்தே இருந்தன. மலர்களிலிருந்து எழுந்த மதுவை அருந்தியதால் அவர்களுடைய கண்கள் சிவந்து பிரகாசித்தன. பாடிக் கொண்டிருக்கும் காதலிகளின் முகத்தில் கிம்புருஷர்கள் முத்தமிட்டார்கள். 
குமார சம்பவம் தமிழில் அ.வெ.சுகவனேஸ்வரன்

 இப்படியே காதல் சம்பவங்களின் தொகுப்பு நிறைய இடங்களில். புத்தகம் முழுவதும் கையொடிய டைப் செய்ய நேரமில்லாததால் மேற்கண்ட ஒரு சிறிய பிட். மன்மதன் தன்னுடைய மலரம்பை ரதியை நோக்கி எய்வதாக நிறைய சித்திரங்கள், சிற்பங்கள் பார்த்திருக்கிறோம். இலக்கு எது தெரியுமா? ரதியின் ஸ்தனங்களாம். மன்மத சிற்பத்தின் அருகில் சென்று மன்மதனுக்கு பதிலாக அவன் கையினூடே நாம் குறிபார்த்தால் இது தெரியும் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

ரதி மன்மதப் சிற்பப் படம் இந்த முகவரியிலிருந்து http://picasaweb.google.com/lh/photo/FxPyeUnXRIUvhCo0tVBH9A

Sunday, August 22, 2010

ஞாயிற்றுக்கிழமைகளில்.....

avvai shanmugi

சோம்பேறித்தனமாக லேட்டாக எழுந்திருந்து நித்யப்படியைவிட கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ராவாக கோழித்தூக்கம் போட்டுப் பார்த்தால் பாழாய்ப்போற மணி ஏழு அடித்துவிடுகிறது. சரி இன்று லீவுதானே என்று கொஞ்சம் அசால்ட்டாக இருந்தால் கொஞ்ச நாழி கழித்து வயிற்றில் டாண்னு மணி அடிக்க ஆரம்பிக்கிறது. வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. மணி அடித்த வயிற்றுக்காக ஒரு காப்பிக்கு ரெண்டு காப்பி குடிக்கலாம் என்றால் இரண்டாம் தர காப்பி தான் இரண்டாம் தடவை கிடைக்கிறது. "இப்டி காப்பியே... குடிச்சுண்டிருங்கோ ..." என்று ராகம் பாடி ஒரு இடி இடிப்பாள் தர்மபத்தினி. "காலா காலத்ல எழுந்துண்டு சுருசுருப்பா குளிச்சுட்டு.. சாப்பிட்டுட்டு.. ஆத்து காரியம் எவ்ளோ இருக்கு. அதைப் பார்க்காம... மசமசன்னு.. நின்னுன்டே இருடா..." இது என்னைப் பெற்ற மகராசியின் பின்பாட்டு. இந்த ராகத்திற்கும் பாட்டுக்கும் எதிர்பாட்டு பாட நினைத்தீர்கள் நிச்சயம் அங்கே ஒரு கொலை விழும். நம்மை இடிப்பதில் அதிகம் வெற்றிபெறுவது தாயா? தாரமா? என்று ஒரு வழக்காடு மன்றம் வைக்கும் அளவிற்கு நிகராகவும் நிறைவாகவும் செய்வார்கள்.

க்ரஹஸ்த்தாஸ்ரமத்தில் வெற்றிகண்டு கோலோச்சுவதின் பலனாக எனக்கு வாய்த்த என் இரண்டு வெற்றிச்சின்னங்களையும் இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சி மகிழ்ந்தால் தான் உண்டு. வார நாட்களில் அலுவலகத்தில் இருந்து ஜூஸ் பிழியப்பட்ட ஆலைக் கரும்பாக அர்த்தஜாமம் முடிந்து முருகன் கோயில் நடை சாத்தும் நேரத்தில் திரும்புகையில் ஒருத்தி ஒருக்களித்தும் இன்னொருத்தி குப்புறவும் படுத்து சயனித்திருப்பார்கள். பால்கனியில் உட்கார்ந்து ஒரு அரைமணி மன்மோகன், சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், ஒபாமா,  ஒசாமா போன்றோர் பற்றியும், கள்ளக்காதலனுடன் ஓட்டம் எடுத்தவர்கள், தாயை கொன்று சொத்தை அபகரித்த பஞ்சமா பாதகர்கள், டீச்சர் திட்டியதால் அவமானம் தாங்காமல் தூக்குப் போட்டு ப்ராணஹத்தி செய்துகொண்ட பள்ளி பயிலும் சிறுமி, ஒரு கிலோ தக்காளி நாற்பது ரூபாய் எட்டியது, விளையாட்டுப் போட்டி ஒப்பந்தங்களில் முறைகேடாக நடந்து கொண்டு எசக்கேடாக மாட்டிக்கொண்டவர்கள் என்று பலப்பல செய்திகளை அவரவர் இஷ்டத்திர்க்கு பொதுஜனங்களுக்கு விளம்பும் 'நடுநிலை' நாளேடுகளை சற்று மேய்ந்துவிட்டு செல்வங்களை எழுப்பி, படுக்கையில் உம்மா கொடுத்து, கிச்சு கிச்சு பண்ணி சீண்டி விளையாடி அவர்களை எழுப்பி நாமும் குளித்தால் ஆச்சு மணி பத்து ஆகிவிடும். அப்புறம் ஐந்தாறு இட்லி சாம்பார் பசிக்கும் ருசிக்கும் ஏற்ப ஊற்றி தின்று பசியாறிவிட்டு "அப்பாடா.." என்று உண்ட களைப்பில் ஊஞ்சலில் உட்காரும் போது, "ஏண்டா.. எல்.ஐ.ஸி கட்டின ரசீதெல்லாம் அங்கங்க கெடக்கு. எடுத்து உள்ள வை. பெட்ரூம் முழுக்க புஸ்த்தகமா இருக்கு. அதெல்லாம் எடுத்து புக் ஷெல்ஃப்ல வை. கொல்ல குழாய்ல தண்ணீ சொட்டு சொட்டா வரது, அந்த செல்வராஜை கூப்பிட்டு ரிப்பேர் பண்ணு.." என்று சரமாரியாக அடுத்த கட்ட வீட்டுப் பணிகள்  பற்றிய கட்டளைகள் பிறப்பிக்கப்படும். கட்டளை இடும் ராஜாங்க பொறுப்பில் என்னைப் பெற்ற தெய்வம்.

இட்ட கட்டளையை செவ்வனே நிறைவேற்றி, கொஞ்சம் அப்படியே உட்கார்ந்து டாம் அண்ட் ஜெர்ரி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் டி.வியில் பெண்களிடம் கெஞ்சி ஒரு ஸ்லாட் வாங்கி ஏதாவது பார்க்கலாம் என்றென்னும் சமயத்தில், "ஏன்னா.. உங்க பீரோவை கொஞ்சம் அடுக்கப்டாதா. ஆபிஸ் போகும் போது ஒன்னு எடுத்தா ரெண்டு சரியறது.. மேட்சா எடுத்து போட்டுக்க முடியலை.. சித்த செய்யுங்கோளேன்... எப்ப பார்த்தாலும் கொழந்தேளுக்கு போட்டியா டி.வி. முன்னாடி உட்கார்ந்துண்டு...." என்று இம்முறை மனைவியின் அன்பு ஆர்டர். வீட்டில் மதுரையோ சிதம்பரமோ, எந்த ஆட்சியாயிருந்தாலும் இந்த ஏவலுக்கு அடிபணிந்தே ஆகவேண்டும். இதற்க்கு கீழ்ப்படியாமல் இருந்தால் இதன் பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்கும். ஒரு வாரத்திற்கு கிட்ட அண்ட முடியாது. மொத்த ஆணினமும் இந்த பூச்சாண்டிக்கு அடிமை. "டாய்... நா யார் தெர்மா.. ச்சும்மா... வகுந்துருவேன்.." என்று முண்டு தட்டும் வஸ்தாது ஆணிலிருந்து சிக்கலான கொலை வழக்கிற்கு தீர்ப்பு வழங்கும் மாண்புமிகு நீதியரசர்கள் வரை இந்த பொட்டை மிரட்டலில் பயந்து படிந்துவிடுவார்கள். மறு பேச்சு பேசாமல் எல்லாவற்றையும் அழகாக அடுக்கி, முடிந்தால் வாமபாகத்தின் துணிகளையும் கர்மசிரத்தையாக பிளவுஸ் மேட்சிங் பார்த்து அடுக்கினால் அதைவிட சிறந்த பணி ஒன்று உங்களுக்கு ஞாயிற்றுக்கிழைமையில் இருக்க வாய்ப்பே இல்லை.

கொடுத்த பணிகளை கடமையாய் செய்து வீட்டில் உள்ளோர் அன்புக்கும் பாசத்திற்கும் பாத்திரமான பின்னர் ஒரு இரண்டு மணி அளவில் மதியான்ன சாப்பாடு கிடைக்கும். மேல் சட்டை இல்லாமல் வேஷ்டியோடு கீழே சம்மணமிட்டு உட்கார்ந்து பொறுக்க ஒரு ஃபுல் கட்டு கட்டியபின்னர் ஒரு மூனு மணியளவில் கட்டையை கீழே சாய்க்கலாம். அப்போது பார்த்து பொண்ணு ரம்மி விளையாட கூப்பிட்டால் அதுவும் காலி. ஒருமணிநேர  சிரமபரிகாரத்திர்க்குப் பின்னர், அடுத்த வாரம் குடும்ப வண்டி ஓடுவதற்கு தேவையான காய்கறிகள், பிள்ளைகளின் ஸ்நாக்ஸிர்க்கான பழங்கள் பிஸ்கட்டுகள், தலை க்ளிப், கால் செருப்பு போன்ற அத்தியாவசிய பொருட் சேர்க்கையில் ஈடுபடவேண்டும். தலையே போனாலும் ஏழிலிருந்து ஏழரைக்குள் வீட்டிற்க்குள் வந்து அடைகாத்துவிட வேண்டும். எட்டரைக்கு சாப்பிட்டுவிட்டு ஒரு ஒன்பதரை வாக்கில் தூங்கினால் தீர்ந்தது சண்டே, இருக்கவே இருக்கிறது மறுநாள் மன்டே. ட்ராஃபிக்.... ஆபிஸ்...... மீட்டிங்..... டென்ஷன்..... இத்யாதி..... இத்யாதி......
பட விளக்கம்: லீவு நாட்களில் வீட்டு வேலைகள் அதிகம் இருப்பதால், பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேலை என்று பாடிய அவ்வை ஷண்முகியின் படம். ஆம்பளையா இருக்கும் ஆம்பளைக்கும் வேலை வேறொன்றுமில்லை.
பட உதவி: yuvansuniverse.blogspot.com 


Saturday, August 21, 2010

சனிக்கிழமை சங்கதி - அழகி யார் அரக்கி யார்

சனிக்கிழமை சங்கதி
beereffectஒரு நூறு மில்லி உள்ளே போனவுடனேயே "என்ன...... பிரதர்...சோகமா இருக்கீங்கலா?" என்று வாயில் ஒரு அரை கிலோ ஊத்துக்குளி வெண்ணை வைத்துக்கொண்டு பேசுவது போல "ழ" சொல்லி வழுக்கி பேசுவது மில்லியர்களின் வழக்கம். எவ்வளவு நாள் தான் குடிமன்னர்கள் என்று எழுதுவது. ழ வராதவர்களுக்கு கூட ஆட்டமேட்டிக்கா சுளுவா ழகரம் வார்த்தைகளில் கம்பு சுழற்றி விளையாடி வரும். மறத்தமிழன் 'ழ'த்தமிழன் ஆகிவிடுவான். இப்ப மேட்டர் என்னன்னா, சரக்கடிச்சா ஏன் எதிர நிக்கற எல்லோரும் நல்லவங்களா அன்பானவங்களா அடக்கமானவன்களா கண்ணுக்கு தெரியறாங்க? காண சகிக்காத கர்ண கொடூரமான மூஞ்சிகள் கூட சர்வ லக்ஷணமா தெரியுமாம். இதுகெல்லாம் ஒரு ஆராய்ச்சி செய்யறாங்கப்பா வெளிநாட்ல. மூளையை நிறைய செலவு பண்ணிட்டு இப்ப அங்க இருக்குற பணக்கஷ்டம் மாதிரி மூளைக்கஷ்டத்திலயும் நஷ்டத்திலையும் நிக்கப் போறாங்க. ஈஸ்வரோ ரக்ஷிது.

இந்த ஆராய்ச்சியை ஒரு 64 மாணவச் செல்வங்கள் கிட்ட பண்ணியிருக்காங்க. சரக்கு உள்ள போனபின்ன, ரத்ததில ஆல்கஹால் ஏறிப்போய் சீரான எதையும் க்ரஹிச்சுக்கிர தன்மையை மூளையிலிருந்து கழட்டி விட்டு கன்ஃப்யூஸ் பண்ணிடுதாம். அதனால், அழகி யார் அரக்கி யார் என்ற வித்தியாசம் தெரியாமல் போய்விடும் என்கிறார்கள். பெண்களுக்கு இந்த மேட்டர் சுத்த மோசம். தண்ணியடிச்ச அவங்கதான் ரொம்பவே குழம்பி போறாங்களாம். ராமனுக்கும் ராவணனுக்கும் வேறுபாடு காணத் தெரியாமல் சீதைகள் ராவணனோடு போய்டராங்கலாம். மணிரத்னம் பட எஃபக்ட்.

நாட்டுல நிறைய பேருக்கு கல்யாணம் ஆகாம கஷ்ட்டப்படராங்களே, பொண்ணுப் பார்க்கவோ, மாப்பிளை பார்க்கவோ கூட்டிகிட்டு போகும்போது ஒரு இருநூறு குடுத்து அழைச்சிகிட்டு போய்ட்டா எல்லாம் சரி ஆய்டுமோ? நல்ல ஐடியா இல்ல.

இந்த சரக்கு செய்தியையும் படத்தையும்  வழங்கியவர்கள்: http://gizmodo.com/5616197/the-secret-of-beer-coggles-discovered 

Friday, August 20, 2010

மழை கடலோடியும் திரவியம் தேடு

rainroadசென்னையில் மழை செய்யும் கோளாறுகள் மிக அதிகம். மாரிக்காலங்களில் மணக்க மணக்க சுத்தமான செருப்புக்காலோடு ரோடில் காலெடுத்து வைத்தால் நாறிப்போன சாக்கடைக்காலோடு துர்நாற்றத்துடன் தான் வீடு திரும்ப முடியும். லேசாக ஒரு தூற்றல் போட்டாலே மழையும் சாக்கடையும் ஒன்றாக திரிவேணி சங்கமமாக ஒரு வாரத்திற்கு வற்றாத ஜீவநதியாக சாலை ஓரங்களில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும்.  சுழி அதிகம் உள்ள இடங்களில் சென்றால் உள்ளே இழுத்துவிடும். வலது கையில் குட்டி பட்டன் குடையோடு, இடது கையில் கணுக்கால் தெரிய லேசாக தூக்கிய சேலையுடன், தோளில் ஹான்ட்பாக்கோடும் எந்த குண்டு குழியிலும் கால் இடறி கீழே விழாமல் கம்பி மேல் நடக்கும் லாவகமாக இங்குமங்கும் ஆடியாடி நடந்து செல்லும் பாதசாரிப் பெண்டிரை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும். இவர்களில் சிலபேர் ஆர்டர் செய்து தயாரித்த ஸ்டூல் போல் இருக்கும் அவர்கள் செருப்பின் மீது வேறு ஏறி நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்த ஸ்டூல் செருப்பை மிஞ்சி கிஞ்சித்தும் மழைத்தண்ணீர் காலில் ஏறாது. மழைக்காலத்தில் எப்போது வெளியே நடந்து போய் உலாத்தி விட்டு வந்தாலும் செருப்புகளிலும், பாண்ட்டின் அடிபாகத்திலும் ஒரு வண்டி சேற்றோடுதான் வீடு திரும்புவது வழக்கம். வாசல் படி அலம்பி கோலம் போட்ட இடங்களில் சேறையும் சகதியையும் வீட்டிற்குள் கொண்டுவந்து விட்டுவிட்டு "வாசல் பூரா மாடு கன்ணு போட்டாப்ல ஆக்கிப்டான்..." என்று அம்மாவிடம் வாங்கி கட்டிக்கொள்வது வாடிக்கை.

இரண்டு நாட்களாக தவணை முறையில் இரண்டிரண்டு மணிநேரம் விடாமல் "சோ.." என்று காட்டடி அடித்த மழை சென்னையை ஜோஜோ குளிப்பாட்டி ரோடுகளில் தெப்போற்ச்சவம் நடத்தி காட்டியது. சிறு சிறு குட்டைகளாக போகும் வழியெங்கும் மழைநீர் தேங்கிய சாலைகளில் ஸ்கூல் பசங்க இருகால் தூக்கிப்  பரப்பி  "ய்....ய்.ய்...." சொல்லி தண்ணீர் மேல் சைக்கிள் விட்டு பழகுவது போல சில கட்டிளம் காளையர்கள் பல்சர் விட்டு பரவசமடைந்தார்கள். ஒரு பெருங்கூட்டம் வடபழனியிலிருந்து கோயம்பேடு வரை அடுத்த வண்டி 'கப்'படிக்க வண்டியோடு வண்டி உரசியபடி நின்றது. இப்படி இந்த நெரிசலில் வண்டி ஓட்டுவதற்கு ஒரு அபார திறமையும் கடவுள் அனுக்ரஹமும் வேண்டும். சென்னையில் ஒருவர் கார் ஓட்டி பழகினால் இந்த உலகத்தில் எந்த துருவத்திலும் சென்று அனாயாசமாக கண்ணை மூடிக்கொண்டு ஓட்டலாம். அவ்வளவு மேம்பட்ட காரோட்டுவதற்க்கான தொழில் ரகசியங்கள் இங்கே நாம் கற்கலாம்.

முன்னால் செல்லும் வண்டிக்கு ஒரு இரண்டடி இடைவெளி விட்டு தொடரும் நாம் இரண்டாவது கியர் மாற்றலாம் என்றென்னும் அந்த கணப்பொழுதில் ஒரு மோட்டார் சைக்கிள் சரக் என்று குறுக்குவெட்டாக நின்று நமக்கு "அடடா மழை டா அடை மழை டா..." என்று கார்த்தி போல ஆட்டம் காட்டுவார். கண்ணிமைக்கும் நேரத்தில் பிரேக் அடித்து பொறுப்பாக அவரை நாம் காப்பாற்றவேண்டும். தெரியாமல் லேசாக அவர் டூவீலர் பின்னால் கட்டியிருக்கும் ட்ரங்க் பெட்டியிலோ அல்லது Dont Kiss Me மட்கார்டிலோ ஒரு அரைகுறை முத்தம் கொடுத்து விட்டால் திரும்பிப் பார்த்து முறைத்து கையை தூக்கி மேலும் கீழும் ஆட்டி நமக்கு ஒரு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்வார். மிகவும் கவனத்துடனும் ஒரு ஏ.கே 47வை பிடித்து எதிரே நிற்கும் தீவிரவாதியை எதிர்கொள்ளும் ஜாக்கிரதையுடனும் கார் ஓட்ட வேண்டும். சில சமயங்களில் பிரேக், அச்செலேரடோர், க்ளட்ச் என்று அங்கிருக்கும் அனைத்து பெடல்களையும் அழுத்தும் ராகுகால வேலைக்கு தள்ளப்படலாம். ஐம்புலன்களையும் ஒருசேரக் குவித்து கவனம் கலையாத ஒரு டீப் மெடிடேஷன் செய்யும் சிரத்தை இதற்க்கு தேவைப்படுகிறது.

இதற்கிடையில் இசையை தன் உயிர் மூச்சாக பாவிப்பவர்கள் இரு காதிலும் ஹெட் ஃபோன் சொருகி ஆனந்தமாக இசையுலகில் சஞ்சாரித்து தனது டூவீலரை பிளைட்டின் Auto Mode போல போட்டுவிட்டு இவ்வுலக ஒட்டு உறவே இல்லாமல் அதன் போக்கில் வண்டியை விடுவர். இவர்களை பார்த்து நாம் நான்கடி இடைவெளி விட்டு நிதானமாக செல்லவேண்டும். ஓரத்தில் அலைமோதும் சாக்கடை நீரினால் நாம் அடித்து செல்லப்படுவோமோ என்றஞ்சி நடுரோட்டில் ராஜநடை நடந்து சிலர் செல்வார்கள். ஹார்ன் அடித்தால் போச்சு. திரும்பி ஒரு முறை முறைத்து இன்னும் மெதுவாக நடந்து காருக்குள் நம்மை வைத்து ஒரு மினி ஜானவாசம் நடத்துவர். டூவீலரில் பில்லியனில் ஒருவர் இருந்தால் மிகவும் ஜாக்கிரதையாக செல்லவேண்டும். ஓட்டுபவர் அவர் விருப்பத்திற்கு வண்டியை செலுத்த பின்னால் உட்கார்ந்து கொண்டு இருகையையும் மாறி மாறி ஆட்டி துடுப்பு போடுவது போல இவர்கள் செய்யும் விஷமத்திர்க்கு அளவேயில்லை. எந்தப் பக்கம் போனாலும் அந்தப்பக்கம் படபடவென்று கையை போடுவர். தண்ணீர் லாரி க்ளீனருக்கும் இவர்களுக்கும் ஒன்றும் வித்தியாசமே இருக்காது.

இவ்வளவு பிரம்ம பிரயத்தனத்திற்கு பிறகு வருவதுதான் ரியல் டெஸ்ட். இப்போது முழங்கால் அளவிற்கு மேல் பாதி சாலை வரையில் தேங்கிநிற்கும் புனித தீர்த்தத்தில், ஓபன் மேன்ஹோல் எங்கிருக்கிறது என்று அனுமானித்து முன் செல்லும் வாகனங்களின் டயர் தடத்தை பார்த்தும், தண்ணீர் எங்கு அலைமோதுகிறது எங்கு சுழித்து ஓடுகிறது என்பதை வைத்தும் அது ஆழம் இருக்கும் இடமா இல்லையா என்பதை ஒரு மீனவரின் நுட்பத்தோடு கணித்து வண்டி ஒட்டவேண்டும். இப்படி நாம் ஒரு தீர்மானத்திற்கு வருவதர்க்கு முன் பின்னால் வரும் மாநகர பஸ்காரர் ஹாரனில் வைத்த கை எடுக்காமல் நமக்கு இடப்புறத்தில் ஏறி அப்படியே ஒரு கப்பல் கடலில் மிதப்பது போல மிதந்து நமக்கு முன் கரை ஏறி போய்விடுவார். அவர் சென்ற டயரடி தண்ணீரை தீர்த்தமென ப்ரோஷ்ஷித்துக் கொண்டு அப்படியே முன்னேறி நாமும் கரை ஏறவேண்டும். இல்லையேல் அவருடைய சுற்றத்தார்களான மற்ற ரூட்காரர்களும் உங்களை நடுவீதியில் கட்டை போடவைத்து ஏறியேறி செல்வார்கள். இந்த சமயத்தில் எக்காரணம் கொண்டு கார் கண்ணாடிகளை திறவாது இருப்பது நன்று. இல்லையேல் புனித நன்னீராட்டு விழா உங்களுக்கு நிச்சயம்.

இவ்வளவு பாடுபட்டு நீந்திக் கரையேறி ஒருவாராக அலுவலகம் சென்றடையும் போது மதிய சாப்பாடு வேளை ஆகிவிடுகிறது. என்ன  ஆனால் என்ன, மழை கடலோடியும் திரவியம் தேடு.

பட உதவி: http://www.mustseeindia.com

சிவந்த கண்கள்

விமானப் பயண அனுபவத்தை பலவிதமாக பலபேர் சுவையாக எல்லோரிடமும் பேசக் கேட்டிருக்கிறோம். பல அமெரிக்க சஞ்சிகைகளுக்கு அட்டைப் படம் போட்டுக் கொடுக்கும் Christoph Niemann என்ற ஓவியர், தன்னுடைய நியூயார்க்கிலிருந்து பெர்லின் பயணத்தை தனக்கு சொந்தமான நியூயார்க் டைம்ஸ் ப்ளாக்ல் படம் போட்டு காட்டியிருக்கிறார். ஒரு  விமானப் பயணத்தில் என்னவெல்லாம் ஒரு தனிமனிதனுக்கு நிகழும் என்பதை நகைச்சுவை உணர்வோடு படமாக வரைந்து தள்ளி அசத்தியிருக்கிறார். தூங்காமல் விழித்திருந்தாரா அல்லது கோபத்தில் சென்றாரா என்று தெரியவில்லை, இந்த பதிவிற்கு அவர் இட்டிருக்கும் தலைப்பு சிவந்த கண்கள்.
இந்தப் நகைச்சுவை படக் கட்டுரை இடம் பெற்ற இடம்: http://niemann.blogs.nytimes.com/2010/08/03/red-eye/

Wednesday, August 18, 2010

கார்த்திக்கின் காதலிகள் - Part IV

luvஒன் ப்ளஸ் டூ ப்ளஸ்... என்று எந்த அயோக்ய சிகாமணி பெயர் வைத்தது என்று தெரியவில்லை. இப்படி ஒரு அழகான பதினைந்துக்கு மேல்  பதினெட்டுக்குள் பந்தாவாக இருக்கும் பருவச் சிட்டுக்கு இந்தப் பட்டப் பெயர் ஏனடா மூடர்களே என்று பலமுறை நண்பர்களிடம்  கெஞ்சியும் கதறியும் ஆரியக் கூத்தாடியும் காரியத்தில் கண்ணாக கேட்டும் பதிலின்றி தவித்தான் கார்த்திக். ரெட்டை ஜடையும், காதில் லோலாக்கும், ஒரு கையால் தரையில் படமால் லேசாகத் தூக்கிப் பிடித்த பாவாடை சட்டையோடு பார்ப்பவரை அலேக்காக இழுக்கும் கண்கவர் ஃபிகருக்கு பேர் 1+2+...  "என்ன  ஒரு அநியாயம். யார் செய்த அயோக்யத்தனம் இது." இந்தப் பட்டப் பெயரை சூட்டியவன் எவன் என்று கேட்டு அவனை துவம்சம் செய்ய வேண்டும் என்று உள்ளூர ஆளுநர் மாளிகை சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டான் கார்த்திக். ஆறடி உயர தெருவாசப்படியில் வந்து ஓய்யாரமாக சாய்ந்து நின்றாலே நிலைக்கு முக்கால் உயரம் இருக்கிறாள். கிச்செனில் அம்மா பரணிலிருந்து துவரம்பருப்பு டின் எடுத்துத்தரச் சொன்னால் நிச்சயம் ஸ்டூல் தேவைப்படாது. இரண்டு வீடு தள்ளி அன்ன நடையில் வரும் போதே ஜனவரி மாத மாட்டுப் பொங்கலை ஞாபகம் வரவழைக்கும் கொலுசின் ஓசை. ஒரு 'ஜல்'லும் அடுத்து 'ஜல்'லும் ஒரே சீராக கேட்கும். அந்த 'ஜல்ஜல்'லுக்கு தெருவில் நிறைய 'ஜொள் ஜொள்'. ஆண்வாசனை அடித்தால் சூர்ப்பனகை(அழகிய ராட்சஷி) போல உடனே வாசலுக்கு ஓடோடி வந்து நின்றுகொண்டு அந்தக் கத்திக் கண்ணாலேயே அத்தனை ராமன்களையும், கிருஷ்ணர்களையும், சுப்ரமணியர்களையும், கணேசன்களையும், கோவிந்துகளையும் கண்ணாலேயே தெருக்கோடி வரை கொண்டு விட்டுவிட்டு வருவாள். வாசலில் நின்று கொண்டு முப்போதும் தெருவில் செல்லும் எதையோ, யாரையோ "நீயா அது நீயா" என்று தேடும் அவளது காந்தக் கண்கள். 

அவள் சாலை கடந்து பச்சை பாவாடை சரசரக்க பாமா மாமியிடம் பாட்டுக் கற்றுக்கொள்ள போகும்போது "டே..டேய் ஒன் ப்ளஸ் டூ ப்ளஸ் வருதுடா" என்று அடிக்குரலில் கார்த்திக்கின் காதில் அலறுவான் ஸ்ரீராம். அவள் திரும்பி ஒவ்வொரு முறை லுக் விடும்போதும் கட்டி ஐஸ் எடுத்து தலையில் வைத்தது போல ஜில்லாவான் கார்த்திக். கணிதப் பாடத்தில் ப்ளஸ் சிம்பல் வரும்போதெல்லாம் அவள் முகம் கூட்டல் குறி முன் 1+1=3 என்று புதுப்பாடம் சொல்லிச் சிரித்து அழகு காண்பித்தது. ஜேகப் தெரு சர்ச்சில் இருந்து ராத்திரி ஒன்பது மணிக்கு மாட்டு வண்டியில் ஜெனரெட்டர் வைத்து சீரியல் பல்பு கட்டி பாஸ்க்கா ஊர்வலம் வரும். அந்த ஊர்வலத்தை எதிர்கொண்டு யேசுபக்தியோடு அவள் வீட்டருகில் பார்க்கும்போது ஏசுநாதரை அறைந்திருந்த சிலுவை பார்த்தபோது கூட ப்ளஸ் ப்ளஸ் ஆக மனதில் கூட்டிக்கொண்டு அவளே தெரிந்தாள்.

எப்போதும் அவள் நினைவே வர பசலை நோய் படர்ந்தது போல் ஆனான். ஊருக்கு பசலை தெரியாமல் இருக்க மஞ்சள் தேய்த்து குளிக்காததுதான் பாக்கி. அப்படி ஒரேயடியாக உருகி ஊற்றினான். "அந்தக் கடைக்கண் அழகிக்கு ஊரு மெட்ராஸாம். அவங்க அப்பாவுக்கு சண்டிகர் ட்ரான்ஸ்ஃபர் ஆயிடுச்சாம். அங்கேயே விட்டா பொண்ணு பத்திரமா இருக்காதுன்னு பயந்து இங்க அவர் தம்பி ட்ரஷரி நடராஜன் சார் வீட்ல கொண்டு வந்து விட்ருக்கார்" என்று ஒரு நாள் வீட்டில் திட்டு வாங்காமல் நல்ல மூடில் இருக்கும்போது அவளின் வருகைக்கான காரணத்தை சொன்னான் ஸ்ரீராம். மேலும் அவனை கொஞ்சம் குழை அடித்து "வேணும்கறதை வாங்கி தரேண்டா.. நீதான்டா என்னோட ஹார்ட் பீட்.." என்று பீலா விட்டு பான்ட் பேப்பரில் கையெழுத்து போடாத குறையாக உறுதியளித்ததில் அவளது நாமகரணம் ராதிகா என்றான்.  சொல்லி முடித்த அடுத்த கணம் வருஷம் பதினாறு சார்லி ஆடி ஆடி சைக்கிள் ஓட்டி பாலக்கரை அருகில் பக்கத்தில் வந்து "யாரு அந்த ராதிகா? கார்த்திக்கோட கோபிகா...." என்று "ஏ... ஐயாசாமி.. உன் ஆளைக் காமி.." என்று பாட்டுப் பாடினார். 

பைங்கிளியின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அப்புவை பார்க்க எப்போதும் அவர்கள் வீட்டு நான்கடி நிலையில் ஒவ்வொரு முறையும் தலையில் இடித்துக்கொண்டு "ஸ்...யப்பா.... உங்க வீட்ல எல்லோரும் வாமன அவதாரம். ஏண்டா எங்க எல்லாரையும்  குழந்தை மாதிரி தவழ்ந்து வரச்சொல்றீங்க." என்று தலையை தேய்த்துக்கொண்டே திட்டிக்கொண்டே நுழையும் கார்த்திக், அந்த பருவ மங்கை வரவுக்கு பின் ஏற்ப்பட்ட பருவ நிலை மாற்றத்தால் வாசலில் இருந்து "அப்பூ..அப்பூ.." என்று ஏலம் போடலானான். இரண்டு அப்புவுக்கு ஒருதரம் ஒன் ப்ளஸ் டூ ப்ளஸ் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தது.

சகலகலாவல்லியாக பாமா மாமியிடம் பாட்டு படித்தது, கோதையிடம் வீணை வாசித்தது, பத்மாசனியிடம் மாத்ஸ் டியூஷன் போயிற்று,  ஸ்கூல் டென்னிகாயிட் டீமில் சேர்ந்து வெள்ளை ஸ்கர்ட்டில் வெள்ளை பனியனில் ப்ராக்டீஸ் செய்யப் போனது இப்படி தெருவில் ஒரு வருஷாந்திர காலம் அவளுடன் சேர்ந்து கார்த்திக்கும் அவள் நடந்தால் நடந்தும் சைக்கிளினால் சைக்கிளியும் அலைந்தான். ஒரு இசட் பிரிவு செக்யூரிட்டி பாதுகாப்பு அளித்தான். அவள் தகப்பன் எண்ணம் ஈடேறியது. ஊரில் ஒரு திருவிழா, ஒரு தீபாவளி, ஒரு பொங்கல் என்று எல்லாப் பண்டிகையும் ஒரே ஒருமுறை அவளுடன் கொண்டாடி முடித்தபோது அந்த துக்ககரமான சம்பவம் நிகழ்ந்தது. யாரோ ஒரு பெரிய மினிஸ்டர் கையில் தாராளமாக 'அன்பளிப்பு' கொடுத்து திரும்பவும் மதராஸ் பட்டினத்திற்க்கே மாற்றல் வாங்கிக்கொண்டு திரு. ஜெகன்னாதன் F/O ராதிகா வந்துவிட்டதால் அம்மையாரை ஊருக்கு பாக் பண்ண சொல்லிவிட்டாராம்.

சோகத்தில் ஆடி அடங்கும் பம்பரம் ஆகிவிட்டான் கார்த்திக். அவள் ஊருக்கு கிளம்பி சென்ற பாதையில் இருக்கும் காலடிகளை பார்த்துக்கொண்டே வீதியில் சென்றவனிடம் ஸ்ரீராம் "டேய். கார்த்தி என்ன கிளி பறந்து போயடுத்துன்னு கவலையா இருக்கியா?" என்றான்.
"ஆமாண்டா.. சரி விடு..." என்றான் கார்த்திக்.
"உன்ன மாதிரியே தான் இருக்கான் செந்தில், ரமேஷ், குப்புசாமி, கோவன்னா அப்பறம் இன்னும் நிறையா பேருடா... " என்று ஒரு லிஸ்ட் படித்தான் ஸ்ரீராம்.
கேட்ட அதிர்ச்சியில் புருவம் உயர்ந்து என்ன என்று பார்க்கும் கார்த்திக்கிடம் சொன்னான் ஸ்ரீராம் "வரிசையா தெருவில இருக்கிற எல்லாரையும் ஒருத்தன் விடாம ஒன்னு ரெண்டுன்னு அவ பார்த்ததினாலதான் அவ பேரு ஒன் ப்ளஸ் டூ ப்ளஸ்... டா..." என்றான். அப்போது அந்த ஒன் ப்ளஸ் டூ ப்ளஸ்ஸில் நாம் எத்தனையாவது ப்ளஸ் என்று எண்ணிக்கொண்டிருந்தான் கார்த்திக்.

(இத்தோடு கார்த்திக்கின் காதலிகள் முடியலாம் இல்லை முடியாமலும் இருக்கலாம் முடிந்து துவங்கலாம் முடியாமலும் துவங்கலாம் துவங்கி முடியலாம்)
பட உதவி: http://www.romanticjoys.com/

Tuesday, August 17, 2010

முனைவர் எனப்படுவது யாதெனின்

ஒரு டாக்டர்  பட்டம் பெறுவது எப்படி என்று தெரியுமா? நான் சொல்வது பாடம் படித்து, அதாவது ஒரு காலேஜில் ஸ்டுடென்ட் ஆக சேர்ந்து ஒரு க்ளாஸ் ரூமில் முதல் பெஞ்சிலோ அல்லது மாப்பிள்ளை பெஞ்சிலோ உட்கார்ந்து பல பீரியட்களில் பல ப்ரோஃபசர்களின் சித்ரவதை அனுபவித்து, கஷ்டப்பட்டு தூங்காமல் வகுப்பறையில் கண் முழித்து, கட் அடிக்காமல், சினிமா போகாமல், இம்மண்ணுலக இன்பங்கள் அனைத்தையும் தவித்து ஒரு முனிபுங்கவர் தவஸ்ரேஷ்ட்டர் போல வாழ்க்கை வாழ்ந்து, Ph.D  என்றொரு டாக்டர் பட்டம் பெறுவது பற்றிய பேச்சு இது. இல்லையென்றால், கலையுலக சாதனை, எழுத்துலக சாதனை, அரசியல் உலக சாதனை, என்று படிப்புலக சாதனை மட்டும் இல்லாமல் ரசிகக் குஞ்சுகளை கூட்டி, ஏதோ ஒரு பல்கலைக் கழக ப்ரமொஷனல் நிகழ்ச்சியில் வைத்துக் கொடுத்து வாங்குவது அல்ல நான் சொல்ல வந்தது. 

அமெரிக்க பல்கலைக்கழகமான உடா யூனிவர்ஸிடி கணினித்துறை பேராசிரியர் மாட் மைட் என்பவர், தன்னிடம் டாக்டர் பட்டம் பெறுவதற்கு பயில வரும் மாணவச் செல்வங்களிடம், Ph.D என்றால் என்ன என்பதை ஒரு படம் போட்டு விளக்குகிறாராம். அந்தப் படத்தை ஊராருக்கும் போட்டுக் காண்பித்திருக்கிறேன். மறுக்க இயலாத அட்டகாசம். அவர் பாஷையிலேயே அந்தப் பட வரிசை.

1. இந்த மனித குலத்தின் இந்த அண்டத்தின் ஒட்டுமொத்த அறிவை இந்த வட்டம் எனக் கொள்வோம்.

1

2. நடுநிலைப் பள்ளி முடித்து வெளிவரும் வேளையில் நம்முடைய அறிவின் ஆழம் இது.
2

3. மேல்நிலைப் பள்ளியில் இருந்து வெளிவரும்போது நம் மூளையில் ஏறிய பங்கு.
3

4. இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவுடன் அந்த விசேஷ தனித் தேர்ச்சி பெற்ற பாடத்தில் நாம் கண்ட அறிவுத் தேர்ச்சி.
4

5. முதிநிலைப் பட்டயம் அந்த வி.த.தே.பாடத்தின் தேர்ச்சியை ஆழப்படுத்துகிறது.
5

6. முன்பு ஆய்வு செய்த கட்டுரைகளை உருப் போடும் போது ஒட்டுமொத்த மனிதகுல அறிவின் எல்லையைத் தொடுகிறோம்.
6

7. இந்த எல்லையில் இப்போது ஒரே நோக்கோடு அடைந்தால் டாக்டர் இல்லையேல் பேஷன்ட் என்று இலக்கு வைத்து சுவற்றில் முட்டி மோதி படிக்கிறோம்.
7

8. இந்த இலக்கினால், அந்த எல்லையை சில வருடங்கள் படித்தும் கிழித்தும் முழு பலம் கொண்டு தள்ளிப் பார்க்கிறோம்.
8

9. ஒரு நாள், அந்த எல்லை மனதிறங்கி கொஞ்சம் அசைந்து, கொஞ்சூண்டு இடம் தருகிறது.
9

10. அந்த எல்லையிலிருந்து அது கொடுத்த, அங்கு எட்டிப் பார்த்த அந்த தக்கினோண்டு சின்ன உப்பல் தான் Ph.D எனப்படுவது.
10

11. இந்த நிலையில் இந்த உலகமே உங்களுக்கு புதியதாய் வித்தியாசமாய் தோன்றும்.
11

12. இந்நேரத்தில், தயவு செய்து யாரும் இந்தப் பெரும் படத்தை மறந்துவிடாதீர்!.
12

ஆகையால் இன்னும் படித்துக்கொண்டே இருங்கள். கல்விக்கடலை நீந்தி கடப்பது அவ்வளவு சுலபமில்லை. என்கிறார் ப்ரொஃபசர். இந்த அறிவுக்கண் திறக்கும் படங்கள் கிடைத்த இடம்  http://gizmodo.com/5613794/what-is-exactly-a-doctorate

ஆண்டாள் சொன்ன ஐ லவ் யூ

andalஒருமுறை ஸ்ரீபெரும்புதூர் வரத யதிராஜ ஜீயரைக் காணச் சென்றிருந்தேன். அவரிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, தமிழின் அருமை பெருமைகளையும், ஆண்டாளின் பக்தி இலக்கியம் பற்றியும் சில தகவல்களைச் சொன்னார். அப்போது அவர் சொன்ன ஒரு தகவல் என் நெஞ்சில் ஆழப் பதிந்தது.

ஒருநாள்... மடத்துக்கு வெளியே சிறுவர் குழாம் விளையாடிக் கொண்டிருந்தது. சத்தம் அதிகமாக இருக்கவே ஜீயர் ஸ்வாமி அவர்களை அழைத்து, என்னடா விளையாடுகிறீர்கள்... என்று அமைதியாகக் கேட்டிருக்கிறார். அவர்கள், தாத்தா, நாங்க ஒன் ஃபோர் த்ரீ சொல்லி விளையாடுகிறோம்... என்றார்களாம். அதென்னடா என்று கேட்டபோது, ஒருவன் அதன் விளக்கத்தைச் சொன்னானாம்...

(சில வருடங்களுக்கு முன் 'ஆசை' என்று ஒரு திரைப்படம் வந்தது. அதில் காதலர்கள் இருவரும் 'ஐ லவ் யு' என்பதை, 'ஒன் ஃபோர் த்ரீ ' என்று சொல்லிக் கொள்வார்கள். ஐ என்பது ஓர் எழுத்து., லவ் என்பது நான்கு எழுத்து. யு என்பது மூன்று எழுத்து. இதை சுருக்கமாக 143 என்பார்கள் காதலர்கள்).

இதைக் கேட்டவுடன் ஜீயருக்கு வருத்தம் ஏற்பட்டதாம். சினிமா பார்த்து கெட்டுப் போகிறார்களே... என்று எண்ணியவர், அவர்களை அழைத்து அமரவைத்து, ஆண்டாளின் கதையை அவர்களுக்குச் சொன்னாராம்.
இதென்னடா ஜுஜுபி... ஆண்டாள் அந்தக் காலத்துல கண்ணனுக்கு சொன்னாளே ஒன் ஃபோர் த்ரீ... அது மாதிரி வருமாடா... என்று கேட்டு ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி, ஆண்டாள் சரிதத்தை சிறுவர்கள் மனதில் படும்படி சொன்னாராம்.

முடிவில் ஆண்டாளின் வாழி திருநாமத்தையும் சொன்னாராம்...

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே...
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே...
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே...
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே...

- என்ற இடத்தைச் சொல்லி, எப்படி ஆண்டாள் கண்ணனுக்கு நூற்று நாற்பத்து மூன்று என்ற ஒன் ஃபோர் த்ரீ சொல்லியிருக்கிறாள் என்பதை இந்தப் பாட்டில் சொல்லி வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா..? என்று சிறுவர்களைப் பார்த்து ஒரு கேள்வியும் கேட்டாராம்...

இதைக் கேட்ட போது, எனக்கு சிரிப்பாகவும் இருந்தது; சிலிர்ப்பாகவும் இருந்தது. ஆண்டாள் பாடியருளிய நாச்சியார் திருமொழி பாசுரங்கள் 143. எப்படி திருப்பாவை-முப்பது பாடல்களோ அப்படி. அதனால்தான், திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே என்றும், ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே என்றும் வாழி திருநாமத்தில் பாடிவைத்தார்கள்.

ஆனால், ஜீயர் ஸ்வாமி சிறுவர்களுக்கு ஆண்டாளைப் பற்றிச் சொல்ல, இதை ஒரு கருவியாக எடுத்துக் கொண்டதைப் பார்த்தபோது... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா... என்று தோன்றியது.

எப்படி இருந்தாலும், நம் தமிழ் இலக்கியத்துக்கு பலம் சேர்த்த அந்த ஆண்டாள் அம்மைக்கு நாமும் வாழ்த்துப் பாடுவோம்...

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!

இப்படி மேற்க்கண்டவாறு ப்ரஸ்தாபித்தவர் திரு ஸ்ரீராம். இக்கட்டுரையின் முழு வடிவம் இங்கே. இவர் www.prabandham.com என்ற வலைக்கு சொந்தக்காரர்.  பிரபந்தம் மட்டும் அல்லாது நிறைய சமய இலக்கிய கட்டுரைகள் எழுதி இந்தத் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.  பிரபந்த பாமாலையை இந்த வலையில் பக்தியுடன் படித்து பகவானின் அன்புக்கு பாத்திரமாவீர்களாக!!.

தொகுப்பாளினிகளுக்கு எஸ்.பி.பியின் தமிழ்ப் பாடம்

கே. பாலச்சந்தரின் பொய் என்ற படம் பொய்த்துப்போனது வாஸ்த்தவம் தான். ஆனால் சில பல காட்சிகளில் கே.பி சார் தெள்ளென தெரிந்தார். சரி, இப்போது விஷயம் அந்த படத்தைப் பற்றி அல்ல. சகட்டுமேனிக்கு டி.வி பெருத்துப்போன இந்த டி.வி ஆதிக்கம் நிறைந்த கலியுகத்தில் எந்த சானல் திருப்பினாலும், ஜோடியாகவோ அல்லது தனியொரு ஆளாகவோ பேண்ட் சட்டை அல்லது பண்டிகை காலங்களில் பட்டு ஸாரி கட்டிக்கொண்டு பாட்டு தொகுத்து போடுபவர்கள் ஏராளம். "ஹளோ...", "சொள்ளுங்க..", "நள்ளா இருக்கீங்கலா....", "சாப்டீங்கலா..." என்று இவர்கள் வாயில் கிடந்து லோடு லாரியில் அடிபடுவது போல அடிபடும் தமிழின் பாடு இருக்கிறதே... அய்யய்யோ... சொல்லியும் கேட்டும் காதில் இரத்தம் வராத குறைதான். கூடவே ஒரு கெக்கே பிக்கே என்று ஒரு சிரிப்பு வேறு.  மிக நன்றாக உச்சரிப்பவர்கள் சொற்பமே. இவர்களுக்கு இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் நிஜமாகவே ஒரு 'ள'கரப் பயிற்சி வகுப்பு வித்யாசாகர் மற்றும் எஸ்.பி.பி துணை கொண்டு பொய் படத்தில் எடுத்திருக்கிறார். பாடும் நிலாவின் தமிழ் மொழி உச்சரிப்பு ஆளுமை இந்தப் பாடலில் நன்கு தெரிகிறது. பாடல் முழுவதும் எஸ்.பி.பி வாயில் 'ள' புகுந்து விளையாடுகிறது. ளகரம் மாதிரி ழகரம் கூட நம்மூர் ஆசாமிகளுக்கு சுலபத்தில் வருவதில்லை.  வாயில் நுழையாமல் படுத்துகிறது. யாராவது " 'ழ' ஃபவுண்டேஷன்" என்று ஆரம்பித்து எல்லோரையும் உட்காரவைத்து ழ சொல்லிக்கொடுத்தால் பரவாயில்லை. முந்தானை மூடிச்சு தீபா டீச்சராக வந்தால் எல்லோரும் உட்கார்ந்து ஜொள் ஒழுக "ழ" கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதுசரி இந்த மேற்கண்ட பாடலை இப்போதிருக்கும் இளவட்ட பாடகர்கள் யாராவது முயன்றால் முடியுமா?

pada udhavi: lib.uchicago.edu

Monday, August 16, 2010

இன்று தமிழக பிரபலத்தின் பிறந்தநாள்

தமிழ் நாட்டின் பிரபலம் ஒருவருக்கு இன்று பிறந்தநாள். நமது நிருபர் 'நேர்மை' நாராயணின் நேரடி பிறந்த நாள் ரிப்போர்ட்.

happybirthday

பிறந்த நாள் கொண்டாட்டம்
ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. ஒரே அதிர்வேட்டும் வானவேடிக்கையுமாக இருந்தது. காலையில் இருந்து சின்னஞ் சிறுசுகளில் இருந்து பல் போன பெருசுகள் வரை  மக்கள் வெள்ளம் அலைகடலென திரண்டு கியூவில் நின்று அவரை தரிசித்துவிட்டு வாழ்த்துப்பெற்று/சொல்லி  சென்றது. அந்த வழியாக ஒரு ஈ காக்கா அவர் இல்லம் தாண்டி பயணிக்கமுடியாமல் போக்குவரத்து தடைபட்டு அந்த ஏரியாவே அல்லோகலப்பட்டது. அனைத்து கோயில்களிலும் விசேஷ பிரார்த்தனைகளும், அபிஷேக ஆராதனைகளும் அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. அடையார் ஆனந்த பவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்ற முன்னணி இனிப்புக் பலகாரக்கடைகள் இவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் முற்றுகையிடப்பட்டு மொத்தக் கொள்முதல் செய்யப்பட்டு ஊருக்கே இனாமாக வழங்கப்பட்டது. காலையில் ஸ்நானம் செய்து பயபக்தியுடன் பெருமாள் பிரசாதம் போல் ஸ்ரீ கிருஷ்ணா மைசூர் பாக்கு கால் கிலோ சாப்பிட்டுவிட்டு அலுவலகம் செல்லும் ஆராவமுதன் "சார். நா இன்னிக்கி நினைச்சே பார்க்கலை. கால் கிலோ யார் சார் ஃப்ரீயா தருவா. அவர் பேரை சொல்லி வாங்கி குடுத்துட்டு போனா. அவர் நன்னா இருக்கணும். பகவான் அவருக்கு ஒரு குறையும் இல்லாமா வைக்கணும்" என்று கண்களில் நீர் தளும்ப நம்மிடம் கூறினார்.

அசம்பாவிதம்
அவர் வசிக்கும் தெருவின் கோடியில் "அகவை ---ல் அடியெடுத்து வைக்கும் அண்ணனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்", "உடல் மண்ணுக்கு உயிர் உனக்கு" மற்றும் "எங்களின் காட்ஃபாதரே" போன்ற ஆளுயர கட்அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவரிடம் ஆசி வாங்கும் கூட்டத்தின் தள்ளுமுள்ளு அதிகம் காரணமாக ஒருவரோடொருவர் முட்டி மோதி அந்த கட்அவுட்டுகள் சரியத்தொடங்கின. நல்லவேளையாக அங்கு ரோந்துப்பணியில் நின்றிருந்த ஸி.ஆர்.பி.எஃப் காவலர்கள் தாங்கிப்பிடித்து உதவிக்கரம் நீட்டினார்கள்.

கலை நிகழ்ச்சிகள் 
புலி வேஷம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கரகாட்டம் என்று அவரது சொந்த ஊரிலிருந்து வேன் பிடித்து வந்து ஒரு ஆட்டம் ஆடினார்கள். இதற்கென்று பிரத்தியேகமாக போடப்பட்டிருந்த சேர் மேல் ஏறிநின்று இதை இரண்டு மணிநேரம் வேடிக்கை பார்த்து ரசித்தார். அவ்வப்போது கையை அசைத்தும், சிரித்தும் தன்னுடைய முழு ஈடுபாட்டை காட்டினார். சினிமாக் கவிஞர் சிந்தன் இவரை வாயார புகழ்ந்து பாடி பரிசல் பெற்று சென்றார்.
விருந்து
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த அனைத்து மக்களுக்கும் தெருஒரத்தில் அகழி போன்று பள்ளங்கள் தோண்டி ஆளுயர அடுக்குகளில், பாத்திரங்களில் ஆஜானுபாகுவான சமையல்காரர்கள் விருந்து சமைத்தார்கள். அசைவப் பிரியர்களுக்காக இவர்கள் அறுத்த ஆடுகளின் சத்தம் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.  ரத்த ஆறே ஓடியது. கும்பகோணத்தில் இருந்து வந்த ஒரு காய்கறி லாரி திருப்பிவிடப்பட்டு சமையல் நடந்தது. சாப்பிடுவதற்கு பசியூட்டியாக கிரேட் கிரேட்டாக டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டன.

பரிசுகள்
பிறந்தநாள் பரிசாக ஆடு, கோழி போன்ற பலதரப்பட்ட ஜந்துக்களும் தரப்பட்டன. மிகவும் உணர்ச்சி வசப்பட்ட அன்பர் ஒருவர் அங்கே அவர் எதிரே நின்று தலையை மொட்டை அடித்துக்கொள்ள ஆரம்பித்ததும் அங்கே சிலநேரம் பரபரப்பு நிலவியது. பக்கத்தில் இருந்த பந்தோபஸ்த்து அதிகாரிகள் அவரை அங்கு அப்புறப்படுத்தினார். பின்னர் விசாரித்ததில் அவர் கொப்பனாம்பட்டு கண்டராதித்தன் என்றும், சற்று மனநிலை சரி இல்லாதவர் என்றும் தெரியவந்தது.

விழா நிறைவு
வருகை தந்து சிறப்பித்த அனைத்து பொதுமக்களுக்கும் தன்னுடைய நன்றியை அந்தப் பிரபலம் தெரிவிக்க, பி.நாள் விழா இனிதே நிறைவுற்றது. பேட்டிக்காக நாம் அவரை நெருங்கியபோது பிறந்த நாள் வேலைப் பளு அதிகம் உள்ளதால் பின்னொருநாளில் சந்திக்கலாம் என்று அன்புடன் கூறி அன்பளிப்பு கொடுத்து வழியனுப்பிவைத்தார்.

எல்லாம் சரி... யாரு சார் அந்த பிரபலம் அப்படின்னு கேட்கறீங்களா..... கீழே உள்ள பாக்ஸ் உள்ளே மௌஸ் கொண்டு செலக்ட் செய்து பாருங்கள் தெரியும்.


ஹி.... ஹி... அது நான் தான். இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள்..


வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

பட உதவி: www.pagalguy.com

Sunday, August 15, 2010

காந்தி மகானின் சுதந்திர தின அதிரடி விஸிட்

Gandhiநாதுராம் கோட்ஸே காந்தியை போட்டுத்தள்ளிய பிறகு அந்த ராட்டையும் கையுமாக மேலுலகம் சென்றார். எவ்வளவுதான் எமதர்மராஜாவின் கிங்கரர்கள் எடுத்துவரக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லியும் அப்போதும் சத்யாக்ரஹமாக போராடி அங்கும் எடுத்துக் கொண்டு போய் அதை ஓட்டி நூல் நூற்றுக்கொண்டிருந்தார். இருந்தாலும் அங்குள்ள ரூல்ஸ் படி அவருக்கு தனியாக பிரத்யேக ஆடைகள் கொடுத்து டாக்ஸ் கட்டுபவருக்கு ஜெயிலில் டி.வி, பெட் போன்ற சலுகைகள் சில கிடைப்பது போல Late.எம்.கே.காந்தியை விசேஷ பிரிவில் சகல மரியாதையோடு வசதி வாய்ப்பாக வைத்திருந்தனர். அவருடைய நற்பண்புகளினாலும் சிரித்தால் பொக்கை வாயில் தெரிந்த இரண்டு பற்களினாலும் மகிழ்ந்த எமலோக செக்யூரிட்டி அதிகாரி அவர் அரையாடையுடன் பாடுபட்டு வாங்கிக்கொடுத்த சுதந்திர இந்தியாவை பூத உடலோடு அவர் பார்க்க ஏற்பாடு செய்து அவருக்கு கம்பனியாக அல்பாயுசில் உயிர்நீத்த இரண்டு இளசுகளையும் சேர்த்து ஒரு Incredible இந்தியா டூர் அனுப்பி வைத்தார். எல்லா கதைகளிலும் வருவது போல, இவர்கள் பூலோகத்தில் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டார்கள், ஆனால் இவர்களுக்கு எல்லோரையும் பார்க்கலாம். 
மகாத்மாவின் சுதந்திர இந்தியா சுற்றிப்பார்க்கும் விஸிட் இதோ....

ஒரு விசேஷ தனி புஷ்பக விமானத்தில் நேரடியாக புதுடில்லியில் வந்து இறங்கியபோது, மன்மோகன் சிங் புல்லெட் ப்ரூஃப் கண்ணாடி பின் நின்று நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை ஆற்றிக்கொண்டிருந்தார். காந்தி தன்னுடன் வந்த அந்த இரு இளைஞர்களை ஏன் என்பது போல ஒரு கேள்விப் பார்வை பார்த்தார். புரிந்துகொண்ட இருவரில் ஒருவன் கனைத்துக்கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தான் 

"நேஷனல் ஃபாதர், கோட்ஸே உங்களை சுட்டுத் தள்ளியவுடன், எல்லா அரசியல்வாதிகளுக்கும் நமக்கும் ஒரு கோட்ஸே வந்துடுவானோ அப்படின்னு ஒரு பயம் வந்துவிட்டது."
"அதனால..." என்று வினவினார் காந்தி.
"அதனால..உங்க காலத்துல ரிவால்வர், இப்ப இதுல நிறைய அட்வான்ஸ்சுடு டெக்னாலஜியெல்லாம் வந்துடிச்சு. ரொம்ப தூரத்திலேர்ந்து லென்ஸ் வச்சு குறிபார்த்து காக்கா சுடர மாதிரி சுடலாம், இல்லைனா தற்கொலை படை செட் பண்ணி வாழ்த்தி மாலை போடறமாதிரி பக்கத்தில வந்து பாம் வெடித்து மேலோகத்து போகிறவரைக்கும் பத்திரமா பாடிகாடா கொண்டுபோறாங்க. இதுலேர்ந்தேல்லாம் தப்பிக்க தான் இதுமாதிரி."

விஷயத்தின் தீவிரம் உணர்ந்த காந்தி பயந்து போய்,  "வாங்கப்பா.. நாம இந்த இடத்தை காலி பண்ணிடலாம். அப்படியே ஒரு ரவுண்டு போலாம் வாங்க..." என்று அந்த இரு இளைஞர்களோடும் நடையை கட்டினார்.
ஒரு குவிக் விசிட்டாக மும்பை போனவர் அங்கே டாடாவின் தாஜ் மஹால் ஹோட்டல் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பின்னர் இன்று மறுதிறப்பு விழா காண்பதை பார்த்தார். அப்படியே வெஸ்ட் பெங்கால் பக்கம் செல்லலாம் என்றால் வழியில் இரண்டு பேர் மாவேயிஸ்ட் தாக்குதல்களில் உயிரிழந்த தனது சொந்தபந்தங்களைப் பற்றி பேசியதும் மிரண்டு போய் அலறிப்புடைத்து கடைசியாக தெனிந்தியா நோக்கி நடையை கட்டினார். 

ஹைதராபாத் சென்றால் அங்கே ரீசெண்டாக ஹெலிகாப்டரோடு கீழே விழுந்து மேலே வந்து தன்னுடன் சேர்ந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பையன் ஜெகன் ஊரெங்கும் பாதயாத்திரை செல்வதாக பேசிக்கொண்டார்கள்.  அவருக்கு உடனே தான் சு.போராட்டத்தின் போது தண்டி யாத்திரை சென்றது ஞாபகம் வந்தது. கூட வந்த பாடிகாட் இளைஞர்களிடம் என்ன யாத்திரை இது என்று கேட்டார். அதில் வயதில் மூத்தவன் சொன்னான்
"இதுக்கு பேரு அரசியல் ஸ்டண்ட் யாத்திரை. இந்த ஆந்த்ராவுல அடிக்கடி அரசியல்வாதிங்க இதுபோல நடைப்பயணம் கிளம்பிடுவாங்க. கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி தான்  நடிகர் சிரஞ்சீவி ஒரு பெரும் யாத்திரை போய் மக்களை சந்திச்சாரு. குறைகளை நேரடியாக கேட்டறிஞ்சாரு."
எங்கேயாவது நாம அதிசயமா அவங்க கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சுபோய் கூட ஜோடியா நடக்கரத்துக்கு கூட்டிக்கொண்டு போய்விடப்போகிறார்கள் என்று அவசர அவசரமாக "யப்பா... வாங்கப்பா பாரதி வாழ்ந்த தமிழ்நாட்டுக்கு போகலாம்.." என்று கூப்பிட்டவரை கைத் தாங்கலாக கூட்டிப் போனார்கள் அந்த இளைஞர்கள். உயிரோடு இருந்தபோது இருபுறத்திலும் பெண்கள் புடைசூழ தன்னை இதேபோல அழைத்துப்போனதை நினைவு கூர்ந்தார் காந்தி.

சென்னையில் சென்ட்ரல் அருகில் வந்திறங்கியவுடன் "நல்ல கதையா கீதே. மொந்தா நாள் ஊட்டாண்ட வந்து குந்திகுனு அவ்சரம்ன்னு கை நீட்ன, 500 ரூவா குட்தேன்ன்ல, அது என்ன காந்தி கணக்கா?" என்ற ஏற்ற இறக்கங்களுடன் பாடி கேட்ட உள்ளூர் பாஷை உரையாடலில், கடைசி வரியை கேட்டு அதிர்ந்துவிட்டார்.  "என்னப்பா. என் பேர் சொல்லி ஏதோ கணக்கு அப்படின்னு சொல்றாங்களே.. என்ன இதெல்லாம்". கழுத்து வரைக்கும் பங்க் வைத்த இளைஞன் கலகலவென சிரித்தேவிட்டான்.
"அதாவது சார்... இங்கெல்லாம் கடன் கொடுத்து வரலைனா அதுக்கு பேர் காந்தி கணக்கு.." என்றான்.
அதிர்ந்தேவிட்டார் காந்தி. My Experiments With Truth புஸ்தகத்தில் கூட கடன் வாங்கி திருப்பி கொடுக்காததாக தாம் எழுதவே இல்லையே. எப்படி இவர்கள் வராக்கடனுக்கு தன் பெயர் வைக்கலாம் என்று நொந்துபோனார்.

அப்படியே நேராக காந்தி மண்டபம் அழைத்துப் போனார்கள். ஜீன்ஸ், டீ ஷர்ட், பான்ட், புடவை, சுடிதார், வேஷ்டி என்று பலவகையான மோஸ்த்தர்களில் இணை இணையாக நெருக்கமாக உட்கார்ந்து பரிபாஷித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ஈ எறும்பு கூட இருவருக்கும் இடையில் செல்லமுடியாத அன்யோன்னத்தில் இருந்தனர். காந்தி அந்த இளைஞர்களிடம் இது என்ன இடம் என்று கேட்டார். 

"இதற்க்கு பெயர் காந்தி மண்டபம். உங்க பேர்ல, நீங்க சுதந்திரம் பெற்றுத் தந்ததை மக்கள் மறக்காமல் இருப்பதற்காக, உங்க பேர்ல ஒரு மண்டபம் கட்டி, உள்ளே நிறைய புகைப்படங்கள் அறிய பல தகவல்களை சேகரித்து வைத்து பொதுமக்கள் பார்வைக்காக வைத்திருக்காங்க."
"அப்ப உள்ளே போய் பார்க்காம ஏன் எல்லோரும் வெளியே உட்கார்ந்திருக்காங்க.."
"நீங்க ரொம்ப வெகுளி சார். அவங்க வீட்லேர்ந்து சுதந்திரமா இருக்கனும்ன்னு தான் இங்க வந்து உட்கார்ந்திருக்காங்க.. நீங்க போய்...ஹி ஹி...."
ஒரு ஜோடியை பக்கத்தில் சென்று பார்த்த காந்தி அவர்கள் கோலம் கண்டு அதிர்ச்சி அடைந்து மூர்ச்சை அடையும் நிலைக்கு வந்துவிட்டார்.  இருவரும் சேர்ந்து அவரை அங்கிருந்து மெரீனா பீச் அழைத்துச்சென்றனர்.

காந்தி சிலை அருகே வந்தார்கள். தன் சிலையின் இரு ஓரத்திலும் இரண்டு பேர் முழு போதையுடன் ஆடை கலைந்த நிலையில் வாயில் எச்சில் ஒழுக படுத்திருந்தார்கள். 
"யாரப்பா இவர்கள்.." என்றார் காந்தி.
"இவங்களா.. ஃபுல்லா சரக்கு அடிச்சிட்டு மட்டையாயி கிடக்கானுங்க.."
"கள்ளுண்ணாமை பற்றி நான் நிறைய பேசியிருக்கேனே..."
"இப்ப நிலைமை உங்களுக்கு தெரியாதா. கவர்மேன்ட்லேயே சாராயக் கடை திறந்து எல்லோருக்கும் நல்ல சரக்கா பார்த்து பார்த்து ஊத்தறாங்க."
"அடப் பாவமே.."
"ஆனா.. உங்களோட பொறந்தநாளைக்கு, நீங்க வாங்கி கொடுத்த சுதந்திர தினம் இந்த நாள்லேல்லாம் கடையை பூட்டிடுவாங்க."
"அப்பா.. அப்ப அந்த இரண்டு நாளைக்கு யாரும் குடிக்க மாட்டாங்களா.?"
"நீங்க வேற.. அன்னிக்கு தான் சரக்கு பிச்சிகிட்டு போகும். கடையை மூடிட்டு பக்கத்துல ஒளிஞ்சு நின்னு 100 ரூபா சரக்கை 150 ரூபாய்க்கு விப்பாங்க. மக்களும் வாங்கி வாங்கி குடிப்பாங்க. நல்ல லாபம் உங்களால."

ஒரு ஃபுல் அடித்தது போன்ற உணர்வோடு கடற்கரையில் தள்ளாடியபடி ஒரு ரவுண்ட் போனார் காந்தி. இரண்டு பேர் ரகசியமாக பேசிக்கொண்டிருந்தனர். 
"காந்தி தாத்தா கம்பு ஊனி நிறைய பேரோட நடந்து போவாரே அந்த படம் போட்ட நோட்டுடா. அசல் அப்படியே காந்தி உயிரோட வந்தா மாதிரி இருக்கு. கவலையேபடாதே. இந்த முறை மாட்டிக்கவே மாட்டோம்."
அப்பாவி காந்தி, இந்தமுறையும் இளைஞர்களை உதவிக்கு அழைத்தார். 
"நான் கம்பு ஊனி நடக்கற படத்தை வச்சி இவங்க என்ன பண்றாங்க.." என்றார்.
"உங்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமா, உங்கள் படம் போட்ட 500 ரூபா கரன்ஸி இந்திய அரசாங்கம் வெளியிட்டு இருக்காங்க. அதை அப்படியே அச்சு அசலா இருக்குற மாதிரி நகல் நோட்டு தயாரிக்கரவங்க அந்த ரெண்டு பேரும். அதாவது எல்லோருக்கும் புரியற மாதிரி சொல்லனும்ன்ன கள்ள நோட்டு அடிக்கறவங்க."

துப்பாக்கியால் சுடப்பட்டு மரித்தபோது "ராம் ராம்.." என்று சொன்ன காந்தி, இதையெல்லாம் கண்டு தலைசுற்றிப் போய் மறுபடியும் ஒருமுறை "ராம் ராம்.." என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு சொல்ல, நேரம் முடிந்தது என்று மேலேர்ந்து வந்து அழைத்துக்கொண்டு போனார்கள்.

பின் குறிப்பு: காந்தி மேலோகம் திருப்பி செல்லும்போது இந்தியா பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் ராமச்சந்திர குஹாவின் "INDIA AFTER GANDHI" புஸ்தகம் வாங்கி சென்றதாக தகவல்.

பட உதவி: www.21stcenturysocialism.com

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails