Thursday, August 12, 2010

பாசமிகு அண்ணன் எமன்

காலையில் டாஷ்போர்ட் பிள்ளையாருக்கு பூ போட்டு கும்பிட்டு, ஆள்காட்டி விரலை கொக்கியாக மடக்கி ஆத்மார்த்தமாக உம்மாச்சிக்கு "பச்..பச்.." என்று கிஸ் கொடுத்து வேண்டிக்கொண்டுதான் வண்டியை ஸ்டார்ட் செய்தான். எதிர்த்தாற்போல் பூனை, பூ பொட்டில்லாதவர்கள் போன்ற அபசகுனமான நடமாட்டங்கள் கூட எதுவும் இல்லை.அனுதினமும் அலுவலகம் செல்லும் பாதை முழுக்க ஜனம். எங்கே போகிறார்கள் என்ன செய்கிறார்கள் எப்படி எல்லோருக்கும் காலை ஒன்பது மணிமுதல் மாலை எட்டு மணிவரை சாலைகளில் அலைய ஏதோ ஒரு சாக்கு கிடைக்கிறது. ஒன்றுமே புரியவில்லை.  இப்படி மூளையை போட்டு கண்டதற்கும் குழப்பிக்கொண்டு இன்டர்நெட், ஓபன் சாக்கடை, ரோடு நடுவில் மீடியேட்டருக்கு பதிலாக போட்ட சிமென்ட் கற்கள் என எதன்மேலும் ஏற்றி இறக்காமல் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் சென்று வந்து சாதனை படைத்துக்கொண்டிருந்தான் ஹரிஷ்.

நேற்றிரவுதான் நிச்சயமான ஒரு அவசர அலுவல் நிமித்தம் திருச்சி செல்வதற்காக தன்னுடைய போண்டா சிட்டியை( அப்படித்தான் அவன் மச்சினன் கிண்டல் செய்வான்) இந்தக் கதையின் ஆரம்பத்தில் சொன்னபடி பயபக்தியோடு செய்துகொண்டு புறப்பட்டான். பேரணிகள், உண்ணாவிரதங்கள், ஆர்பாட்டங்கள், சங்க ஊர்வலங்கள், சவ ஊர்வலங்கள், மாநாடுகள், யார்யாரோ அழைத்து எங்கிருந்தோ வந்த லாரிகள், வேன்கள், பஸ்கள் என்று சகலவிதமான மக்கள் ஒன்றுகூடி கும்மி அடிக்கும் கூட்டங்கள் நிறைத்த மாநகர சாலைகளில் பலமணி நேரங்கள் வண்டியிலேயே குடும்பம் நடத்தி ஓட்டி அலுத்ததால் தாம்பரம் தாண்டியவுடன் ஆக்ஸிலரேட்டரில் ஏறி உட்கார்ந்தவன் எழுந்திருக்கவேயில்லை. ஓவர் லோடு தார்பாலின் மூடிய லாரிகளில் ஆக்ஸிலரேட்டர் இடைவிடாமல் கொடுத்து கால் வலி கண்ட உலகமகா ஓட்டுனர்கள் சிலர் ஐந்தாறு செங்கல் எடுத்து வைத்துவிடுவார்கள் என்று ஸ்கூல் ஆட்டோ ஆதிமூலம் நேற்றுதான் பிரசங்கம் செய்துகொண்டிருந்தான். ஹோண்டா எவ்வளவு போகிறது என்று ஸ்பீடாமீட்டரை பார்த்தால்தான் தெரியும்.

இழுக்க இழுக்க இன்பம் போல் அழுத்த அழுத்த வேகம். மாட்டேன் சொல்லாமல் காற்றை கிழித்துப் பறந்தது ஹோண்டா. எப்படியும் இன்னும் இரண்டு மணி நேரத்தில் திருச்சி அடைந்துவிடலாம் என்று விழுப்புரம் தாண்டி விரட்டிக்கொண்டிருந்தான். இதற்குள் ஆபீசிலிருந்து ஐந்தாறுமுறை கால்கள் வேறு. ஒவ்வொன்றாக பேசிக்கொண்டே  உளுந்தூர்பேட்டை தாண்டி சென்றவன் எதிர்த்தாற்போல் முழு லோடு மண் அள்ளி எதிர்சாரி ரோடிலிருந்து வந்து திரும்பிய அரைபாடியை கவனிக்காமல் விழுப்புரம் டிப்போ திருச்சி வண்டியை ஓவர்டேக் செய்ய, நேருக்கு நேர் அரைபாடியில் இடித்து, வி.டிப்போ பஸ் மற்றும் அரைபாடி நடுவில் மாட்டி ஏதோதோ நெரிபடும், உடைபடும், கிழியும் சப்தங்கள் காதில் இரைய சட்னியாகி கபாலம் திறந்து மோட்சமடைந்தான்.

கொஞ்ச நேரத்தில் அவனை நாலுபேர் இழுத்து ஒரு ஆம்புலன்சில் ஏற்ற அவன் காரை சுற்றி சாக்பீசால் படம் வரைந்து கொண்டிருந்தார்கள் காக்கிசட்டைக் காரர்கள் . இடித்த லாரிக்காரன் சாலையோர புளியமரத்தின் அடியில் நின்று சாவகாசமாக பீடி பிடித்துக் கொண்டிருந்தான். இரண்டு போலீசார் அவனிடத்தில் நெருப்பு வாங்கி சிகரெட் பற்றவைத்துக்கொண்டார்கள். இதைப் பார்த்துக்கொண்டே நின்றதில் தலையில் கொம்பு வைத்த கிரீடம் அணிந்த இரண்டு பேர் கைப்பற்றி "வா.. எங்களுடன்" என்றார்கள்.
"யாரப்பா.. நீங்க.." என்றான் ஹரிஷ்.
"தம்பி. நாங்க எமலோகத்தின் கவுன்சிலர்கள். எங்க ஏஜென்ட் மணல் லாரி டிரைவர் உன்னை பத்திரமா எங்ககிட்ட சேர்த்துட்டான். நீ செத்துப்போய்ட்டப்பா வா போகலாம்" என்றார்கள்.

மேலே மேலே உயரத்திற்கு அழைத்துச் சென்று ஓரிடத்தில் நிறைய ஜனம் நின்றுகொண்டிருந்த இடத்தில் கொண்டுவந்து விட்டுவிட்டு "வரிசையில் வந்து சேர்." என்று சொல்லி சென்றனர். பூலோகத்தில்தான் அனவரதமும் ட்ராபிக் ஜாமில் மாட்டியவனுக்கு செத்தும் விடவில்லை அந்த தோஷம். பவளக் கற்களால் போடப்பட்ட சாலையின் இருமருங்கும் சாரை சாரையாய் மக்கள். ஆண், பெண், முதியவர், சிறியவர், இளைஞர் என்று வயது வித்தியாசமில்லால் நின்றனர். பக்கத்தில் இருந்த பெருசிடம் 
"சார். ஏன் நீங்கெல்லாம் நிக்கிறீங்க." என்றான்.
"ஏம்பா. நீ இங்க புதுசா."
"ஆமா சார். இப்பதான் ஒரு லாரியில அடிபட்டு இங்க வந்து சேர்ந்தேன்" 
"ஓ அப்படியா. நல்ல நேரத்தில இங்க வந்திருக்க. இன்னிக்கு நம்ம எமனுக்கு பிறந்தநாள். அவருக்கு எல்லோரும் சேர்ந்து விழா எடுக்கறாங்க. இந்தப் பக்கமா அவர் எருமை மேல ஊர்வலம் வரார். அவரை பார்த்து அருளாசி வாங்கத்தான் இவ்வளவு பேர் நிக்கறாங்க"
செத்ததுக்கு அப்புறமும் என்னடா அருளாசி என்று நினைத்துக்கொண்டு "ஓ.... எங்க சார் விழா"
"எமலோகத்தில நசிதகேது கலையரங்கம்தான். தேவலோகத்தில் இருந்து ரம்பை, ஊர்வசியோட தலுக்கு குலுக்கு நடனம் கூட இன்னிக்கி ராத்திரி உண்டாம். கடைசியா பூலோகத்தில நமீதா ஆடி பார்த்தது. நினைச்சாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று பொக்கை காட்டி சிரித்தது பெருசு.

கொஞ்சம் திரும்பி அப்படி இப்படி பார்த்தான் ஹரிஷ். எவ்வளவு பதாகைகள், போஸ்டர்கள். 

"பாசமிகு அண்ணன் எமன் வாழ்க!"
"பாசக்கயிற்றோடு இணைந்த சுவாசக்கயிரே!" 
"எமலோகத்தின் நிரந்தர தலைவரே!"
"மரணத்தின் தலைவனே!"
"பல வாழ்வுகளை முடிக்கும் தலைமை கணக்கரே!"
"எங்களின் இறந்தகாலமே!"
என்ற பல போஸ்டர்களில் எமன் பாசக்கயிற்றை தலைக்கு மேலே சுற்றியபடி எருமை மாட்டின்மேல் அமர்ந்திருக்கும் படமும், சில பல இடங்களில் சித்ரகுப்தன்,நசிதகேது போன்றோரின் படம் எம்.எல்.ஏ போஸ்டரில் கவுன்சிலர் படம் போல அடியில் ஒரு வட்டத்தில் இருந்தது.
"வருங்கால இந்திரனே" என்று அவன் பதவிக்கு ஆப்பு வைக்கும் போஸ்டர்கள் வேறு. எமலோகம் தடபுடலாக எங்கும் எமமுழக்கமாக அலறியது.
"சித்ரகுப்தனுக்கும் எமனுக்கும் கடும் போட்டி இருக்காம்" என்று இங்குவந்தும் பாலிடிக்ஸ் பேசியது பெருசு. 
"என்னவாம்.." ஹரிஷ்.
"எப்படியாவது யம பதவி தனக்குத்தான் என்று சிவனார் வரை போய் மனு கொடுத்திருக்காராம் சித்ரகுப்தன்"
"அப்ப வேற யார் பாவக்கணக்கு பார்ப்பாங்க."
"வேற யார். நசிதகேது தான்! அவர் தானே சாகறத்துக்கு முன்னாலேயே எமலோகத்தில மூனு நாள் தங்கி, யமனோட விருந்தாளியா வந்துட்டு போனது"
"யார் சார் அந்த நசிதகேது." இது ஹரிஷ்.
"தம்பி. நீ கட உபநிஷத் படிச்சதில்லையா! அதுல வருவாரு அவர். அவர் பேர்ல இருக்கிற அரங்கத்தில்தான் இன்னிக்கு நாட்டிய நிகழ்ச்சியெல்லாம்."

அமைதியானான் ஹரிஷ். சினிமாக்களில் பார்த்த மாதிரி ஒன்றும் இல்லை எமன். ஒல்லியாக சின்ன எருமை மாட்டின் மேல் ஆடியாடி வந்தான். எல்லோரும் கைகட்டி ஓரமாக ஒதுங்கி நிற்க, ஹரிஷ் ஓடிப்போய் கைகாட்டி "நில்லுங்கள்." என்று நிறுத்தினான்.
"யாரப்பா நீ.. என்ன வேண்டும்" என்றான் யமதர்மன்.
"உங்களாட்சியில் ஒரு அநியாயம் நடந்திருக்கிறது. எனக்கு அநீதி இழைத்து விட்டார்கள். நேற்றுக்கூட காழியூர் ஜோசியர் உனக்கு தீர்க்காயுசு என்று சொன்னார். என்னுடைய ரெகார்ட்ஸ் எடுத்து பார்த்து எனக்கு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" ஹரிஷ்.
கை தட்டி.. "யாரங்கே... இந்த நரன் கூறுவது சரியா..எங்கே சித்ரகுப்தன்?"
சித்ரகுப்தன் முழுக் கணக்குப் புத்தத்தை தூக்கமுடியாமல் தூக்கிவந்தான்.
எக்ஸ்டெர்னல் ஆடிட்டர்கள் வைத்து கணக்கு பார்க்கச் சொன்னான் யமதர்மன். அவர்கள்  விடிய விடிய கணக்கு பார்த்ததில் இன்னும் 55 வருடங்கள் 87 நாட்கள் 3 மணி 8 வினாடிகள் மிச்சமிருப்பது துல்லியமாக கணக்கிடப்பட்டது. 

கோபாக்கினியில் மிதந்த யமன், சித்ரகுப்தனின் சீட்டை கிழித்தான். நசிதகேதுவிர்க்கு அந்தப் பதவி தரப்பட்டது. ஆத்திரமடைந்த சித்ரகுப்தனின் கோஷ்டியினர் ஹரிஷை யமலோகத்திலிருந்து பூலோகத்திற்கு தூக்கி விசிறி எறிந்தனர். "ஆ..ஆ.." என்று அலறியபடி கீழே விழத்துவங்கிய ஹரிஷை அவனுடைய அம்மா முதுகில் இரண்டு தட்டு தட்டி
"எட்டு மணி வரை தூங்கினா இப்படித்தான்.. எழுந்து பல் தேச்சுட்டு வாடா..." என்றாள்.
பல் தேய்க்கும்போது கை, கால், கண்ணாடியில் முகம் என்று எல்லாவற்றையும் ஒரு முறை பார்த்துக்கொண்டான் ஹரிஷ்.

பட உதவி: http://temple.dinamalar.com/

4 comments:

பொன் மாலை பொழுது said...

நிறைய சுஜாதா படிப்பீர்களோ! ஆரம்பத்தில்லிருந்தே அவரின் நக்கலும் நையாண்டியும் கூட வருவதுபோல.
நல்லா இருக்கு. :)

RVS said...

சுஜாதான்னா நமக்கு உசுரு. பாவம் அவர் உசுரத்தான் கொண்டு போய்ட்டான் எமஅதர்மராஜன். பாராட்டுக்கு நன்றி கக்கு.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said...

very nice.. Though it has 'trivial end', somehow, I didn't expect this here.

RVS said...

நன்றி மாதவா..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails