Wednesday, August 18, 2010

கார்த்திக்கின் காதலிகள் - Part IV

luvஒன் ப்ளஸ் டூ ப்ளஸ்... என்று எந்த அயோக்ய சிகாமணி பெயர் வைத்தது என்று தெரியவில்லை. இப்படி ஒரு அழகான பதினைந்துக்கு மேல்  பதினெட்டுக்குள் பந்தாவாக இருக்கும் பருவச் சிட்டுக்கு இந்தப் பட்டப் பெயர் ஏனடா மூடர்களே என்று பலமுறை நண்பர்களிடம்  கெஞ்சியும் கதறியும் ஆரியக் கூத்தாடியும் காரியத்தில் கண்ணாக கேட்டும் பதிலின்றி தவித்தான் கார்த்திக். ரெட்டை ஜடையும், காதில் லோலாக்கும், ஒரு கையால் தரையில் படமால் லேசாகத் தூக்கிப் பிடித்த பாவாடை சட்டையோடு பார்ப்பவரை அலேக்காக இழுக்கும் கண்கவர் ஃபிகருக்கு பேர் 1+2+...  "என்ன  ஒரு அநியாயம். யார் செய்த அயோக்யத்தனம் இது." இந்தப் பட்டப் பெயரை சூட்டியவன் எவன் என்று கேட்டு அவனை துவம்சம் செய்ய வேண்டும் என்று உள்ளூர ஆளுநர் மாளிகை சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டான் கார்த்திக். ஆறடி உயர தெருவாசப்படியில் வந்து ஓய்யாரமாக சாய்ந்து நின்றாலே நிலைக்கு முக்கால் உயரம் இருக்கிறாள். கிச்செனில் அம்மா பரணிலிருந்து துவரம்பருப்பு டின் எடுத்துத்தரச் சொன்னால் நிச்சயம் ஸ்டூல் தேவைப்படாது. இரண்டு வீடு தள்ளி அன்ன நடையில் வரும் போதே ஜனவரி மாத மாட்டுப் பொங்கலை ஞாபகம் வரவழைக்கும் கொலுசின் ஓசை. ஒரு 'ஜல்'லும் அடுத்து 'ஜல்'லும் ஒரே சீராக கேட்கும். அந்த 'ஜல்ஜல்'லுக்கு தெருவில் நிறைய 'ஜொள் ஜொள்'. ஆண்வாசனை அடித்தால் சூர்ப்பனகை(அழகிய ராட்சஷி) போல உடனே வாசலுக்கு ஓடோடி வந்து நின்றுகொண்டு அந்தக் கத்திக் கண்ணாலேயே அத்தனை ராமன்களையும், கிருஷ்ணர்களையும், சுப்ரமணியர்களையும், கணேசன்களையும், கோவிந்துகளையும் கண்ணாலேயே தெருக்கோடி வரை கொண்டு விட்டுவிட்டு வருவாள். வாசலில் நின்று கொண்டு முப்போதும் தெருவில் செல்லும் எதையோ, யாரையோ "நீயா அது நீயா" என்று தேடும் அவளது காந்தக் கண்கள். 

அவள் சாலை கடந்து பச்சை பாவாடை சரசரக்க பாமா மாமியிடம் பாட்டுக் கற்றுக்கொள்ள போகும்போது "டே..டேய் ஒன் ப்ளஸ் டூ ப்ளஸ் வருதுடா" என்று அடிக்குரலில் கார்த்திக்கின் காதில் அலறுவான் ஸ்ரீராம். அவள் திரும்பி ஒவ்வொரு முறை லுக் விடும்போதும் கட்டி ஐஸ் எடுத்து தலையில் வைத்தது போல ஜில்லாவான் கார்த்திக். கணிதப் பாடத்தில் ப்ளஸ் சிம்பல் வரும்போதெல்லாம் அவள் முகம் கூட்டல் குறி முன் 1+1=3 என்று புதுப்பாடம் சொல்லிச் சிரித்து அழகு காண்பித்தது. ஜேகப் தெரு சர்ச்சில் இருந்து ராத்திரி ஒன்பது மணிக்கு மாட்டு வண்டியில் ஜெனரெட்டர் வைத்து சீரியல் பல்பு கட்டி பாஸ்க்கா ஊர்வலம் வரும். அந்த ஊர்வலத்தை எதிர்கொண்டு யேசுபக்தியோடு அவள் வீட்டருகில் பார்க்கும்போது ஏசுநாதரை அறைந்திருந்த சிலுவை பார்த்தபோது கூட ப்ளஸ் ப்ளஸ் ஆக மனதில் கூட்டிக்கொண்டு அவளே தெரிந்தாள்.

எப்போதும் அவள் நினைவே வர பசலை நோய் படர்ந்தது போல் ஆனான். ஊருக்கு பசலை தெரியாமல் இருக்க மஞ்சள் தேய்த்து குளிக்காததுதான் பாக்கி. அப்படி ஒரேயடியாக உருகி ஊற்றினான். "அந்தக் கடைக்கண் அழகிக்கு ஊரு மெட்ராஸாம். அவங்க அப்பாவுக்கு சண்டிகர் ட்ரான்ஸ்ஃபர் ஆயிடுச்சாம். அங்கேயே விட்டா பொண்ணு பத்திரமா இருக்காதுன்னு பயந்து இங்க அவர் தம்பி ட்ரஷரி நடராஜன் சார் வீட்ல கொண்டு வந்து விட்ருக்கார்" என்று ஒரு நாள் வீட்டில் திட்டு வாங்காமல் நல்ல மூடில் இருக்கும்போது அவளின் வருகைக்கான காரணத்தை சொன்னான் ஸ்ரீராம். மேலும் அவனை கொஞ்சம் குழை அடித்து "வேணும்கறதை வாங்கி தரேண்டா.. நீதான்டா என்னோட ஹார்ட் பீட்.." என்று பீலா விட்டு பான்ட் பேப்பரில் கையெழுத்து போடாத குறையாக உறுதியளித்ததில் அவளது நாமகரணம் ராதிகா என்றான்.  சொல்லி முடித்த அடுத்த கணம் வருஷம் பதினாறு சார்லி ஆடி ஆடி சைக்கிள் ஓட்டி பாலக்கரை அருகில் பக்கத்தில் வந்து "யாரு அந்த ராதிகா? கார்த்திக்கோட கோபிகா...." என்று "ஏ... ஐயாசாமி.. உன் ஆளைக் காமி.." என்று பாட்டுப் பாடினார். 

பைங்கிளியின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அப்புவை பார்க்க எப்போதும் அவர்கள் வீட்டு நான்கடி நிலையில் ஒவ்வொரு முறையும் தலையில் இடித்துக்கொண்டு "ஸ்...யப்பா.... உங்க வீட்ல எல்லோரும் வாமன அவதாரம். ஏண்டா எங்க எல்லாரையும்  குழந்தை மாதிரி தவழ்ந்து வரச்சொல்றீங்க." என்று தலையை தேய்த்துக்கொண்டே திட்டிக்கொண்டே நுழையும் கார்த்திக், அந்த பருவ மங்கை வரவுக்கு பின் ஏற்ப்பட்ட பருவ நிலை மாற்றத்தால் வாசலில் இருந்து "அப்பூ..அப்பூ.." என்று ஏலம் போடலானான். இரண்டு அப்புவுக்கு ஒருதரம் ஒன் ப்ளஸ் டூ ப்ளஸ் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தது.

சகலகலாவல்லியாக பாமா மாமியிடம் பாட்டு படித்தது, கோதையிடம் வீணை வாசித்தது, பத்மாசனியிடம் மாத்ஸ் டியூஷன் போயிற்று,  ஸ்கூல் டென்னிகாயிட் டீமில் சேர்ந்து வெள்ளை ஸ்கர்ட்டில் வெள்ளை பனியனில் ப்ராக்டீஸ் செய்யப் போனது இப்படி தெருவில் ஒரு வருஷாந்திர காலம் அவளுடன் சேர்ந்து கார்த்திக்கும் அவள் நடந்தால் நடந்தும் சைக்கிளினால் சைக்கிளியும் அலைந்தான். ஒரு இசட் பிரிவு செக்யூரிட்டி பாதுகாப்பு அளித்தான். அவள் தகப்பன் எண்ணம் ஈடேறியது. ஊரில் ஒரு திருவிழா, ஒரு தீபாவளி, ஒரு பொங்கல் என்று எல்லாப் பண்டிகையும் ஒரே ஒருமுறை அவளுடன் கொண்டாடி முடித்தபோது அந்த துக்ககரமான சம்பவம் நிகழ்ந்தது. யாரோ ஒரு பெரிய மினிஸ்டர் கையில் தாராளமாக 'அன்பளிப்பு' கொடுத்து திரும்பவும் மதராஸ் பட்டினத்திற்க்கே மாற்றல் வாங்கிக்கொண்டு திரு. ஜெகன்னாதன் F/O ராதிகா வந்துவிட்டதால் அம்மையாரை ஊருக்கு பாக் பண்ண சொல்லிவிட்டாராம்.

சோகத்தில் ஆடி அடங்கும் பம்பரம் ஆகிவிட்டான் கார்த்திக். அவள் ஊருக்கு கிளம்பி சென்ற பாதையில் இருக்கும் காலடிகளை பார்த்துக்கொண்டே வீதியில் சென்றவனிடம் ஸ்ரீராம் "டேய். கார்த்தி என்ன கிளி பறந்து போயடுத்துன்னு கவலையா இருக்கியா?" என்றான்.
"ஆமாண்டா.. சரி விடு..." என்றான் கார்த்திக்.
"உன்ன மாதிரியே தான் இருக்கான் செந்தில், ரமேஷ், குப்புசாமி, கோவன்னா அப்பறம் இன்னும் நிறையா பேருடா... " என்று ஒரு லிஸ்ட் படித்தான் ஸ்ரீராம்.
கேட்ட அதிர்ச்சியில் புருவம் உயர்ந்து என்ன என்று பார்க்கும் கார்த்திக்கிடம் சொன்னான் ஸ்ரீராம் "வரிசையா தெருவில இருக்கிற எல்லாரையும் ஒருத்தன் விடாம ஒன்னு ரெண்டுன்னு அவ பார்த்ததினாலதான் அவ பேரு ஒன் ப்ளஸ் டூ ப்ளஸ்... டா..." என்றான். அப்போது அந்த ஒன் ப்ளஸ் டூ ப்ளஸ்ஸில் நாம் எத்தனையாவது ப்ளஸ் என்று எண்ணிக்கொண்டிருந்தான் கார்த்திக்.

(இத்தோடு கார்த்திக்கின் காதலிகள் முடியலாம் இல்லை முடியாமலும் இருக்கலாம் முடிந்து துவங்கலாம் முடியாமலும் துவங்கலாம் துவங்கி முடியலாம்)
பட உதவி: http://www.romanticjoys.com/

6 comments:

மதுரை சரவணன் said...

//சோகத்தில் ஆடி அடங்கும் பம்பரம் ஆகிவிட்டான் கார்த்திக். அவள் ஊருக்கு கிளம்பி சென்ற பாதையில் இருக்கும் காலடிகளை பார்த்துக்கொண்டே வீதியில் சென்றவனிடம் ஸ்ரீராம் "டேய். கார்த்தி என்ன கிளி பறந்து போயடுத்துன்னு கவலையா இருக்கியா?" என்றான்.//

என்னங்க இப்படி ஆகிப்போச்சு... அருமை. கடைசியும் பிடித்திருக்கிறது.

பத்மநாபன் said...

வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை ஜிரா வில் ஊறப்போட்டு கிரேஸியாக்கிட்டிங்க...கடைசில் போட்ட டிஸ்கி...முடியல....

RVS said...

நன்றி மதுரை சரவணன்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

கார்த்திக்கிடம் இன்னும் காதலிகள் உண்டா என்று கேட்டல், இதற்க்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸுக்கு பிறகு சொல்கிறேன் என்கிறான். பார்ப்போம். ;-) ;-)
பாராட்டுக்கு நன்றி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said...

//முடியலாம் இல்லை முடியாமலும் இருக்கலாம் முடிந்து துவங்கலாம் முடியாமலும் துவங்கலாம் துவங்கி முடியலாம்//

what do you want to say ?

RVS said...

அது புரியாமத்தானே அப்படி எழுதியிருக்கு.. இப்படி ஒரு கேள்வி வேறயா.. ;-) ;-)

அனுபுடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails