Monday, August 9, 2010

செமினார் செல்வங்கள்

sleepஇந்த பொட்டி தட்டி வயிறு நிரப்பும் வேலையில் இருப்பதால் அடிக்கடி  இது ஃபீல்டுக்கு புதுசு என்றும், ரோடு ஷோ என்றும், மென்பொருள் உருவாக்குபவர்கள் சங்கமம் என்றும், திட்ட அதிகாரிகள், முதன்மை தொழில்நுட்ப அதிகாரியில் (CTO) ஆரம்பித்து முதன்மை எக்ஸ் அதிகாரி(CXO) வரை நடத்தப்படும் கருத்தரங்குகள், பயிலரங்கங்கள் போன்றவற்றிக்கு போன் மேலே போன் போட்டும், ஈமெயில் அனுப்பியும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை கூப்பிடுவது மாதிரி வருந்தி வருந்தி அழைப்பார்கள். சமீபத்தில் இதுபோல் கூப்பிட்ட மரியாதைக்கு போய் எட்டிப்பார்க்கலாம் என்று போனதில் கிடைத்த திருவாசகம் தான் இது.

"அதே அலுத்துப்போன மேரி, சீதா, ராணி போன்ற கம்பனியின் கந்தர்வக் கன்னிகளை ஒருநாளேனும் கண்ணுறாமல் இருப்பதற்கும், கழனித்தண்ணி கேண்டீன் காப்பியை தவிர்ப்பதற்கும், துர்வாசம் வீசும் இயற்கைக்கு ஒதுங்கும் அறைகள் மேலும் வீசாமல் இருக்கவும், ஓயாமல் தொலைபேசி பிடுங்கும் உள்ளூர்/வெளியூர் ஆபிஸ் ராட்ஷசர்களிடம் இருந்து தப்பிப்பதர்க்கும், ஒரே இடத்தில் உட்கார்ந்து பொட்டி தட்டி கைகால்கள் மரத்து போகாமல் ஒரு உடற்பயிற்சி போல இருக்கவும், நம்போன்றோருக்கு அமையும் கபாலி கோயில் அருட்ப்ரசாதம்தான் ஸ்டார் ஹோட்டல் செமினார்கள்"
 என்று இந்த தளத்தில் பத்து பதினைந்து வருடங்கள் பழம் தின்று கொட்டை போட்டு சுறுசுறுப்பாக ஒரு இளைஞன் போல் இயங்கிக்கொண்டிருக்கும் "செமினார் செல்வன்" ஒருவர் தெரிவித்தார். இவ்வகை செமினார்கள் பற்றியும் அதில் பக்குவமாக பார்வையாளனாக பங்குபெறுவது எப்படி என்பது பற்றியும் நம்மிடம் அவர் பகிர்ந்த விஷயங்களில் சில துளிகள் கீழே.

1. நாள்தோறும் கணினிப் பொட்டியை திறந்து மெயில் பார்க்கையில், முதலில் ஆரக்கிள், மைக்ரோசாப்ட், அடோபி, ஐ.பி.எம், இன்டெல் போன்ற உலக கம்பனிகளில் இருந்து மெயில் வந்திருந்தால், முதல் வேலையாக பார்த்தகையோடு நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்துக்கொண்டு "ஐயா/அம்மா நான் நிச்சயம் வருகிறேன், எனக்கு ஒரு சீட் போடுங்கள்"  என்று ஒரு பதில் மெயில் அனுப்பி உடனே ஒரு இருக்கையை பிடிக்கவேண்டும். முக்கியமாக, இவ்வகை பிரசங்கங்கள் இலவசமாக இருக்கவேண்டும். அப்போதுதான் நிர்வாகத்தில் சுலபமாக ஓ.கே வாங்கி ஆபிசிலிருந்து தப்பிக்க முடியும்.

2. காலை 9.30 மணியளவில் பேசும் நிகழ்ச்சி ஆரம்பம் என்றால், ஒன்பது மணிக்கே போனால் வரவேற்ப்பில் உட்கார்ந்திருக்கும் ஜீன்ஸ் வெள்ளை சொக்காய் போட்ட பெண்களின் புன்னகை அழைப்போடு தலையில் வெள்ளை குல்லா போட்ட நட்சத்திர சர்வர் கொடுக்கும் டீ காப்பி பிஸ்கட் போன்ற பதார்த்தங்கள் கிடைக்கும். ஜீன்ஸ் வனப்பிற்கு டீ வாயிற்கு. கையில் உங்கள் முகவரி அட்டை இருந்தால் ஒரு பெட்டியில் போட்டு தப்பித்து விடலாம். இல்லையென்றால் வாசலில் நிற்க வைத்து உங்கள் ஜாதகம் எழுதச் சொல்லி படுத்துவார்கள்.

3 . உள்ளே சென்றதும், எந்த சீட்டுக்கு மேல் குழாய் விளக்கு இல்லையோ அதுவே நமக்கு தோதான இடம். பாடசாலையில் படிக்கும் காலத்தில்தான் மாப்பிள்ளை பெஞ்சு அதிசேஃப். இதுபோன்ற செமினார்களில் முதல் வரிசையில் இடதோ, வலதோ கோடி இருக்கை மிக மிக சௌரியம். உட்கார்ந்தவுடன் தூங்கக்கூடாது. அப்படியே தூங்கினாலும் குறட்டை விடக் கூடாது. அப்புறம் பேசுபவர் மைக் வழியே அரங்கத்திர்க்கே உங்கள் குறட்டை சென்றடைந்து நீங்கள் தூங்குவதைக் காட்டிக் கொடுத்துவிடும்.

4. ரொம்பவும் தூக்கம் தூக்கமாக கண்ணை சுழற்றிக்கொண்டு வந்தால், அழைப்பே வராத அலைபேசியை காதுக்குள் சொருகி, வாயை கையால் பொத்தாமல் பொத்தி, ஏதோ தலைபோகிற அவசர அழைப்பு போல எழுந்து வெளியே ஒட்டமும் நடையுமாக சென்றுவிடவேண்டும். ஓய்வு அறை பக்கம் சென்று மூஞ்சி அலம்பி, கை காயவைக்கும் இயந்திரம் கீழே இரண்டு நிமிடம் ஏந்திக் காட்டிவிட்டு  திரும்பினால் இன்னொரு ஒரு மணி நேரம் தாங்கும். அதுவும் சிலபேருக்கு தான் அந்த கொடுப்பினை. அப்படி வரம் இல்லாதவர்கள் அந்த ஜீன்ஸ் பேண்ட் போட்ட பெண்கள் கொடுத்த ஒருபக்க அஜெண்டாவை வெறித்து பார்த்து நெட்ரு  பண்ணிக்கொண்டோ,  அல்லது விழா எப்படி நடந்தது, உங்களை அதிகம் தூங்க வைத்த பேச்சாளர் யார், விழாக் கம்பனியார் உங்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்த சௌகரியங்கள் பற்றி என்று நிகழ்ச்சி முடிவில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவத்தை பூர்த்தி செய்யலாம்.

5. நாம் தூங்குகிறோம் என்று தெரியாத வண்ணம் அவ்வப்போது இரண்டு காலையும் ஆட்டுவது, தீடீரென்று யாரோ "டேய்.." சொல்லி கூப்பிட்டது போல பின்னால் திரும்பி பார்ப்பது, தலையை மையமாக வறுமையின் நிறம் சிகப்பு கமல் போல அசைப்பது, கொடுத்த கிறுக்கல் புத்தகத்தில் ஹார்டீன் போட்டு அம்பு விடுவது, பல தினுசுகளில் ஸ்டார் டிசைன் வரைவது, வீட்டில் உட்கார்ந்து சாவகாசமாக பார்க்கமுடியாத பால் கணக்கு போன்ற இத்யாதிகள் எழுதுவது, ரொம்ப மனசுக்குக் கஷ்டமாகவும் சங்கடமாகவும் இருந்தால் சஷ்டி கவசம் எழுதிப்பார்ப்பது போன்ற உபயோகமான செயல்களில் ஈடுபடலாம். போற வழிக்கு புண்ணியமாக போகும்.

6. ஒரு பதினொன்னரை மணி வாக்கில் லைட் போட்டு ஒரு இண்டர்வல் விடுவார்கள். எல்லோருக்கும் முன்பாக ஓடிப்போய் கையில் கப்பேந்தி ஒரு கட்டஞ்சாய் குடித்துவிட்டு, தட்டில் பரப்பி வைத்திருக்கும் பிஸ்கட்களில் நமக்கு பிடித்தவையாக ஐந்தாறு தேர்ந்தெடுத்து கையில் அடுக்கி வைத்து சாப்பிட்டுவிட்டு, யாராவது தெரிந்த முகம் போல இருந்தால் "எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே...போனவாரம் கன்னிமாரா வந்தீங்களா.." என்று கொஞ்சம் பேச்சுக்கொடுத்து பொழுதை போக்கிவிட்டு, எல்லோரும் போனவுடன் ஒருமுறை ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு ஆறஅமர மெதுவாக பன்னிரண்டு மணி வாக்கில் உள்ளே சென்று அமரவேண்டும்.

7 . பன்னிரண்டு மணியிலிருந்து அடுத்த அரைமணி நேரம் தாக்குப் பிடிப்பதுதான் இந்த உலகத்திலேயே பேரம் பேசாத சென்னை ஆட்டோ கிடைப்பது மாதிரி அவ்வளவு கஷ்டம். சர்வ நிச்சயமாக வெளியில் தட்டில் இருந்து பொறுக்கிக்கொண்டு வந்த மின்ட் எடுத்து சாப்பிட்டே ஆகவேண்டும். சப்பி சாபிடாமல் மின்டை கடித்து தின்று அதையும் தீர்த்த பின்னர், கள் உண்ட மயக்கத்தில் கண்கள் மூடுவது போல ஸ்லோ மோஷனில் இமைகள் மூடித் திறக்கும். பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் சகதூங்கியின் கால் தானாக நம் கால் மேல் இடிபட எழுந்துவிடவேண்டும்.

8. ஒருவாறாக ஒரு மணியளவில், பேச்சாளர் தனது உரையை ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து முடித்துவிட்டு "யாருக்காவது டவுட்ன்னா கேள்வி கேளுங்கப்பா..." என்று ஒரு குரல் விடுவார். மிகவும் சமர்த்தாக உட்கார்ந்து பிரசங்கம் கேட்ட ஏதாவது அதிகப்ப்ரசங்கி சாப்பாடு நேரம் என்பதை மறந்து உலகளாவிய டெக்னாலஜி பற்றி சிப், டேட்டா  குவஸ்ட் போன்ற ஊரில் கிடைக்கும் சஞ்சிகைகளை உருப்போட்டு படித்துவிட்டு தாறுமாறாக கேள்வி கேட்டு பேசியவரை படுத்துதோ படுத்து என்று படுத்தி குஷியடையும்.
9. எல்லோரும் கேட்கும்போது சம்ப்ரதாயத்துக்கு நாமும் கேள்விகனை தொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், "மைக்ரோசாப்ட்டை பில் கேட்ஸ் தான் இப்ப பார்த்துக்கராரா?", "ஆரகிள் டேட்டாபேஸ் என்னோட இஸ்த்திரி டேட்டா வைக்க பயன்படுமா?", "500 ஜிபி ஹார்ட்டிஸ்க்கில் 501 ஜிபி ஸ்டோர் பண்ண நான் என்ன செய்யணும்?" என்று உலகே அதிசயிக்கும் வண்ணம் ஆச்சர்யமான சிலபல கேள்விகளை கேட்டு இரண்டு மணிநேரம் பேசியவரை இரண்டே நிமிடத்தில் திக்குமுக்காட செய்துவிடவேண்டும். இந்த வினாக்களால் கொஞ்சநேரத்தில் அரங்கமே கப்சிப்பாகி எல்லோரும் சாப்பாட்டை பார்க்க நடையை கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். தப்பித்தது டெக்னாலஜி.

10. பசியூட்டி என்று சூப் வைத்திருப்பார்கள். காணாததை கண்ட மாதிரி நிறைய ஊற்றி குடிக்காமல் கொஞ்சமாக அரை கப் வாங்கி குடித்துவிட்டு மெயின் ஐட்டத்திற்கு போய்விட வேண்டும். முழு கப் வழிய வழிய வாங்கி ஏக் கல்ப்பில் அடித்துவிட்டால் சாப்பாடு சாப்பிட முடியாது. பசியூட்டி பசியாற்றி ஆகிவிடும். சமைத்துப் பார் போல நட்சத்திர ஹோட்டல் சாப்பாட்டை வெறித்துப் பார் என்றாகிவிடும். சைவ அசைவ ஐட்டங்களுக்கு பெயர்ப்பலகை வைத்திருப்பார்கள். நமக்கு வெறும் சாம்பார் உருளை கறிதான் வேண்டும் என்றால் அதை மட்டும்  சாப்பிட்டுவிட்டு தயிர்சாதம் டேபிளை அடைந்து கொஞ்சமாக உள்ளே தள்ளிவிட்டு, வன்னிலா ஐஸ்க்ரீம் வித் ஃப்ரூட் சாலட் என்று மேற்ப்படிகள் சாப்பிடுவதற்கு கொஞ்சூண்டு மேல் வயிற்றில் இடம் வைத்துக்கொள்ளவேண்டும். இவ்வளவையும் செமத்தியாக ஒரு கட்டு கட்டியபின், ஸ்வீட் சோம்பு ஒரு கை எடுத்து வாயில்போட்டுக் கொண்டு ஃபீட்பேக் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு சுகமாக தூங்குவதற்கு அலுவலகம் சென்றுவிட வேண்டும். 

இதில் கண்ட விஷயங்கள் ஒரு அரை நாள் செமினாருக்காக எழுதப்பட்டது. முழுநாள் செமினாருக்கு இதைவிட அதிகமான விஷயங்கள் இருப்பதாகவும் அதற்க்கு இன்னொரு அடையார் ஹோடேல்லிலோ, சோளா ஷேரடானிலோ, தி பார்க்கிலோ சந்திக்கும்போது விலாவாரியாக பாடம் எடுப்பதாக சொல்லிச்சென்றார் அந்த அன்பர். காத்திருங்கள் முழு செமினாருக்கு.

பட உதவி: blog.sleepingsimple.com

4 comments:

ஸ்ரீராம். said...

ஆஹா.... ரொம்ப சுவாரஸ்யம். கலக்கல்.

RVS said...

நன்றி ஸ்ரீராம்.. ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கீங்க போலருக்கு.. :) :)

அன்புடன் ஆர்.வி.எஸ்

வானவில் மனிதன் said...

அன்புள்ள RVS,
நல்ல இடுகை.என்னமா அனுபவிக்கிறீங்க மக்களே!உங்களை கருத்தரங்கப் பேச்சாளர் தான் அறுக்கணுமா? நான் கூடாதா? பிடிங்க என் பழைய கவிதையை !!

கருத்தரங்கு

ஆறு மணி நேர
ஆய்வுக் கருத்தரங்கில்
மோட்டுவளை வெறித்து
கிறுக்கிய கவிதைகள் பாதி
விட்ட கொட்டாவி மீதி.

மோகன்ஜி ,ஹைதராபாத்

RVS said...

கையேந்தி சாப்பிட்டதில் ஆவி
இருக்குமோ மிச்சம் மீதி

தொடர்ச்சி எப்படி மோகன்ஜி ? :) :)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails