Thursday, September 27, 2012

தேடிக் கண்டுகொண்டேன்

உலக மக்கள் அனைவருக்கும் மௌனகுருவாகவும், அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனாகவும், அறிவுச்சுடர் ஏற்றிவைக்கும் அணையா தீபமாகவும், கேட்டவர்க்கு கேட்டதை அருளும் வள்ளலாகவும், படிக்காத மேதைகளாக மக்களை மாற்றும் ஆக்க சக்தியாகவும், வையக மாந்தர்கள் பதுக்கி வைத்த ஞானச்சுரங்கங்களைத் தோண்டியெடுத்து கையேந்தி நிற்கும் அஞ்ஞானிகளுக்கு அனாயாசமாக விநியோகிக்கும் டானாகவும் திகழும் கூகிள் இன்று பதினான்காவது அகவையில் அடியெடுத்து வைக்கிறதாம். 

கோயிலில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்கிற முதுமொழியை இப்போது கூகிளில்லா இணையத்தில் குப்பை கொட்ட வேண்டாம் என்று மாற்றுமளவிற்கு கூகிளின் ஆதிக்கம் மக்களிடையே பரவிக் கிடக்கிறது. டிஜிடலில் எதாவது இல்லையென்றால் “கூகிள் பண்ணிப் பார்த்தியா?” என்பது கேட்டவரின் முதல் கேள்வி. சீனியர்களிடம் அவர்களது அனுபவத்திற்கு மரியாதை கொடுத்துக் கேட்டுத் தெரிந்துகொண்ட விஷயங்களெல்லாம் இப்போது விசைப்பலகையின் ஒரு தட்டுதலில் கிடைக்கிறது. “எக்ஸ்பீரியன்ஸுக்கு மதிப்பு இல்லாம போச்சு” என்று ஒரு “பச்” சொல்லி சலித்துக்கொள்பவர்களை காணமுடிகிறது. லட்சோபலட்சம் FAQs என்னை எடுத்துக்கோ என்று பரந்து விரிந்து இணையத்தில் கிடக்கிறது. கிடைக்கிறது.

எனக்குத் தெரிந்து கூகிளைத் தினம்தினம் சரணாகதி அடையும் மக்களில் பெருவாரியான பேர் பதிலுக்கு விஷயதானம் அளிப்பதில்லை. கூகிள் மூலமாகத் தேடி செய்திகளைச் சாப்பிட்டு ஜீரணம் பண்ணிக்கொள்வதில் காட்டும் ஆர்வம் பதிலுக்கு இணைய அன்னமளிப்பதில் அவ்வளவு சுரத்தாக எவரும் ஈடுபடுவதில்லை. ”அஞ்சும் மூணும் எட்டுன்னு கூடத் தெரியாதா?” என்று கேலியாக் கேட்பார்கள். இப்போது தெரியவில்லையெனினும் கூகிளைத் தலைவாசலாக தனது ப்ரௌசர்களில் வைத்திருப்பவர்கள் 5+3= என்று கேட்டு கூகிளைத் தேடு என்று தட்டினால் இப்படி வரும்.

பரீட்சையில் ரேங்க் ஹோல்டராக இருந்தால் பெருமிதமாக ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்வதைப்போல தங்களது சைட்கள் பெருவாரியான இணையவாசிகளை கவர்ந்திழுக்கிறது என்பதற்கு அத்தாட்சியாக கூகிளின் ட்ராஃபிக் ரேங்க்கை வைத்து பெருமையடித்துக்கொள்பவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். கூகிள் ஆட்ஸ் மூலமாக வீட்டிலிருந்தே சுய தொழில் புரிந்து சம்பாதிப்பவர்கள் பெருகி வருகிறார்கள். யோசிப்பதை எல்லாம் கூகிளிடம் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டோம். இரண்டு நிமிடம் இணைய இணைப்பு கிடைக்காவிட்டால் உடனடியாகத் தேவைப்படும் சங்கதிகளுக்கு ததிங்கினத்தோம் போடும்படியாக ஆகிவிடுகிறது.  

கோடெழுதத் தெரியாதவர்களைக் கூட சாஃப்டேர் இஞ்சினியராக தொழில் பார்க்க விட்டிருக்கும் கூகிளின் மாண்பு அளப்பறியது. இன்னமும் என் நெற்றியும் உங்கள் முதுகிலும் மட்டும்தான் கூகிளின் வரிவிளம்பரங்கள் வராத இடங்களாக இருக்கிறது. தேடல் உள்ள வாழ்வினிலே தினமும் ருசியிருக்கும் என்பது உறுதி. சர்ச் என்ஞ்சினாக மெஷினில் அவதாரமெடுத்தது பூலோகத்தில் வாழும் மானுட இனத்திற்கே ரிசர்ச்சுக்கு பயன்படுவதிலிருந்து அதன் பலம் நமக்குத் தெரியும்.

எதிலும் எங்குமிருக்கும் ஆதியந்தமில்லாத இறைவனைப் போல இணையத்தின் அனைத்து தொழில்நுட்பத்திலும் மூக்கோடு தன்னுடைய ஆஜானுபாகுவான உடலையும் சேர்த்து நுழைத்து  அதன் ஆட்சியை மாட்சியோடு நடத்தும் கூகிளரசருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இன்னும் ஏழேழு ஜென்மத்துக்குத் தொடரும் இந்த பந்தம்.

HAPPY BIRTHDAY

கூகிள் தேடலினால் மனித மூளைகள் நினைவாற்றலை இழந்து மழுங்கிவிட்டன என்று ஒரு அமெரிக்க சர்வ கலாசாலையில் ஆய்வறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள் என்று படித்தேன். மறந்து விட்டேன். கூகிளில் தேடிவிட்டுச் சொல்கிறேன்.

#ஃபேஸ்புக்கிற்கு சென்று குறுகிப்போன என் எழுத்துப் பழக்கத்தை எப்படியும் சீர் செய்து திரும்ப கொண்டுவரும் சீரிய பணியில் ஈடுபட்டிருப்பதால் இதுபோல முணுக்கென்றால் பதிவெழுதுவது என்று தடாலடியாகத் தீர்மானித்திருக்கிறேன். :-)


Wednesday, September 26, 2012

லாங்குவேஜ் லகுடபாண்டிகள்

கல்லூரியில் பயிலும் பொழுது ஒரு அரசுப் பேருந்தின் ஓட்டுனர் இருக்கைக்குப் பின்புறம் இரண்டடி திருக்குறளை சற்று நீட்டி மடக்கி அவர்கள் வசதிக்கேற்ப மூன்றடியாக எழுதியிருந்தனர். வலது பக்கம் தாராளமாக இடம் இருந்தது. இடப்பற்றாக்குறையால் வரியை மடக்கவில்லை என்று தீர்மானமாகச் சொல்லலாம். மெய்ப்பொருள் என்று அறுபத்துமூவரில் ஒருவரின் பெயரைத் தாங்கியவர் எங்களது கல்லூரியோடு எங்களையும் சேர்த்துத் தாங்கிய அப்போதைய முதல்வர். தமிழ்த்துறை பேராசிரியர். பளபளக்கும் ஷூ டக்கின் செய்த பேண்ட ஷர்ட் என்று மிடுக்காக பீடுநடைப் போட்டுக் கல்லூரியில் வகுப்பு உலா வருவார். மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்து நாலைந்து பேராய் சத்தமாக “எப்பொருள்” என்று ஒருவன் ஆரம்பிக்க திரிகொளுத்திய சரவெடியாய் “யார்யார் வாய்” என்று இரண்டாமவனும் “கேட்பினும்” என்று மூன்றாமவனும் அப்படியே தொடர் சங்கிலியாக ”அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்று வெடிச்சிரிப்போடு ”மெய்ப்பொருளை” அழுத்திக் குறள் கூறி மகிழ்வோம்.

”என்பொருட்டு நீங்கள் திருக்குறள் வாசிப்பது எனக்கு மகிழ்ச்சியே” என்று கேலிபேசியவர்களைக் கூட தோழமையுடன் நட்பு பாராட்டி அகமகிழ்வார் அந்த அண்ணல். அவரிடம் ”என்ன சார்! திருக்குறளை இப்படி சின்னாபின்னமா எழுதியிருக்காங்க?” என்று பஸ்கேட்டதற்கு சிரித்துக்கொண்டே அவர் சொன்ன பதில் “எழுதறவனுக்கு திருக்குறள் தெரியணுமா என்ன?” என்றார். சரிதான். ”ஆனால் அதை மாட்டியவனுக்குத் தெரியவேண்டுமல்லவா?” என்று அதிகப்பிரசங்கி நண்பனொருவன் கேட்டு வசமாக மாட்டிக்கொண்டான்.

காஃபியை கொட்டை வடிநீர் என்றும் பேக்கரியை அடுமனை என்றும் தமிழில் கொக்கரிக்கும் பாஷாபிமானிகள் நிறைந்த இந்த பச்சைத் தமிழ் தேசத்தில் ஒரு புலவரை அறுத்துப் பக்கோடா போட்டுவிட்டார்கள். அடியில் காண்பது ஒரு ஹாட் சிப்ஸ் கடையில் மாட்டியிருந்த போர்டு. காலியான புலவரைத்தான் பக்கோடாவாக்கியிருக்கிறார்கள்.


”தமிழ் பேசு; தங்கக் காசு” என்று ஒரு தமிழ்ப் போட்டி நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். ஜேம்ஸ் வசந்தன்  நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கவிக்கோ ஞானச்செல்வன் நடுவராகவும் அமர்ந்திருப்பார். ஸ்கூலுக்கு தமிழ் பதம் கேட்டால் பல்லைக் காண்பித்துக்கொண்டே “ஸ்கூல்தானே” என்றவர்களும் “வாட்ச்” என்பதற்கு தடவித்தடவி நேரம் முடியும் தருவாயில் பலகாலம் ஆராய்ச்சியில் கண்டுபிடித்தது போல ”கடிகாரம்?” என்று பலத்த சந்தேகத்துடன் பதில் சொன்னவர்களும் அநேகம் பேர். திண்டுக்கல் ஐ.லியோனி ஒரு பட்டிமன்றத்தில் சொன்னது. ”உங்களூரில் பேருந்து நிலையம் எங்குள்ளது?” என்று கேட்ட ஒரு தமிழ்க்குடிமகனிடம் “அப்படியெல்லாம் எதுவும் எங்கவூர்ல இல்லை” என்றானாம் இன்னொருவன். அப்புறம் வழி கேட்டவன் நிதானமாக “பஸ்ஸ்டாண்ட் எங்கயிருக்கு?” என்று திரும்பக் கேட்டவுடன் “ம்.. அப்படி தமிழ்ல கேளு” என்றானாம்.

ஆங்கிலத்திலும் இளைத்தவர்கள் நாங்கள் அல்ல என்று பறைசாற்றும் ஒரு அறிவிப்புப் பலகை. ஷேக்ஸ்பியரையே ஷேக் பண்ணிப் பார்க்கும் ஆங்கிலப் பிரயோகங்கள்! “தங்கள் நல்வரவுக்கு நன்றி” என்பதை தமிழர்களுக்குப் புரியும்படியாக “THANKS FOR WELCOME" என்று எழுதிய அந்தப் புண்ணியாத்மாவைத் தேடிக் கண்டுபிடித்து சேவிக்கவேண்டும். 



அது போகட்டும். சில நாட்கள் முன்னே ஒரு ஹோமியோபதி டாக்டர் க்ளினிக் வாசலில் தொங்கிய போர்டில் “HOMO CLINIC" என்று எழுதியிருந்தது. தினமும் பார்வை நேரத்தின் போது போர்டைப் பார்த்துக்கொண்டே க்ளினிக் உள்ளே வந்து உட்காரும் டாக்டருக்குக் கூட அதைக்கண்டு கூச்சமில்லையா?

”யெஸ்டெர்டே ஹி கம்மு... ஐ கோவு.. அட் தேரடி ஒன் பிக் ஃபைட்டு.. ஹி ஹிட்டு ஆப்போஸிட் பர்ஸன் ஹெட்டு.. தட் பர்ஸன் பேக்ல நோ சீ ரன்னு...” என்று தமிழுக்கு ஆங்கில முலாம் பூசி பேசும் ஒரு நண்பன் ஊரில் இருக்கிறான். இப்படி பேசுவதற்கு வரம் வாங்கியிருக்கவேண்டும். தங்குதடையில்லாமல் கூச்சமில்லாமல் பிரவாகமாகப் பேசுவான். எல்லாத் தமிழர்களும் தடுக்கி விழுந்தால் வெள்ளைக்காரனாகுமிடம் மதுபானக்கடை. இவனும் கடைக்குள் நுழைந்தால் காட்டாற்று வெள்ளமென இதுபோல ஆங்கிலம் பேசுவான். ஷெல்லி இவனிடம் பிச்சையெடுக்கவேண்டும். பெக்கடித்த இவனிடம் பைரன் பெக் பண்ணவேண்டும். நிச்சயம் இப்போது ஏதாவதொரு பள்ளியில் ஆங்கில ஆசானாக இருப்பானென்று நினைக்கிறேன்.

இப்படி மொழிச் சிந்தனைகள் பல எழுந்தபோது சில மாதங்களுக்கு முன் படித்த ’கன்னித்தமி’ழில் கி.வா.ஜ தமிழென்று ”பெயர் வைத்தது யார்?” என்ற தலைப்பில் எழுதியது ஞாபகம் வந்தது.

திராவிடமென்னும் சொல்தான் தமிழ் என்றாகியிருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்கள். வடமொழியில் சில இடங்களில் ள என்ற பதம் ட என்ற பதமாக ஒன்றுக்கு பதில் ஒன்று வரும். த்ராவிடம் என்பது த்ராவிளம் என்று மாறிற்றாம். வ என்பது ம வாக மாறுவதும் உண்டு. த்ராவிளம் த்ரவிளம் ஆகிப் பிறகு த்ரமிளம் ஆகி, அதன் பிறகு தமிளம் ஆகிவிட்டபிறகு தமிள் என்றும், அப்பால் தமிழ் என்றும் மாறி வந்து விட்டதாம்!

“ஒற்றைக் கல் மன்று” என்பதை “ஊட்டக்கமந்த்” என்றாகி “உதகமண்டலம்” ஆனது போல. என்று சொல்லிவிட்டு திராவிடம் என்கிற சொல் தொல்காப்பியத்திலோ அதன் பின்னர் வந்த சங்க இலக்கிய நூல்களிலோ இல்லை என்கிறார். ஆகையால் வடசொல்லிலிருந்து தமிழ் என்ற சொல் பிறந்தது என்பது தவறு என்றும் பண்டைய இலக்கிய நூல்களில் தமிழ் என்ற சொல்தான் இருக்கிறதாம். முதலில் தமிழர்கள் வசிக்கும் பிரதேசத்திற்கு தமிழ் என்று இருந்ததாகவும் பின்னர் அதுவே அவர்கள் பேசும் மொழிக்கும் பெயராகியிருக்கவேண்டும் என்று ஆராய்கிறார் கிவாஜ. தமிழ் என்றாலே தமிழ்நாட்டைக் குறிக்குமாம். வசிக்கும் பிரதேசத்தின் பெயர் அவர்கள் பிரயோகப்படுத்தும் மொழிக்கும் வந்திருக்கவேண்டும் என்பதற்கு அவர் உதவிக்கு இழுப்பது ஆந்திரத்தை. காலேஷ்வரம், ஸ்ரீசைலம், திரக்ஷராமம் என்ற மூன்று லிங்கங்களை தன்பால் எல்லைகளாகக் கொண்டதினால் ஆந்திரப்பிரதேசத்தை திரிலிங்கமென்றார்களாம். அதுவே திரிந்து தெலுங்கம் ஆனதாம். சொல்ப காலத்தில் அவர்கள் பேசும் மொழி தெலுங்கானதாம்.

இப்படத்திலிருப்பவைகளைத் தவிர சென்னையில் ஒரு நாளைக்கு நொடிக்கொருதரம் வைக்கப்படும் ஓராயிரம் வாழ்த்துப் பதாகைகளில் கழகத்தார்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவேயில்லை. “ஓய்வரியா சூரியனே” என்றும் “போரளி” என்றும் போஸ்டர் அடித்து துவம்சம் செய்கிறார்கள். ஏற்கனவே ழகரமற்று டமில் பேசும் இளைய சமுதாயம் இந்தப் போஸ்டர் தமிழை பொற்றமிழாக போற்ற ஆரம்பித்துவிடும் அபாயத்திலிருக்கிறது.


பின் குறிப்பு: மேற்கண்ட இரண்டு அறிவிப்புப் பலகைகளும் என் கண்ணுக்குச் சிக்கி பின்னர் என் மொபைல் கேமராவில் சிறைப்பட்டது.

Monday, September 24, 2012

மோட்டார் காந்தி

பொதுவாகவே போரூர் சிக்னல் அருகே இராவேளையிலும் உழைத்துக் களைத்துத் திரும்பும் ஆஃபீஸ் அடிமைகள் கூட்டம் ஒருவர் மீது ஒருவர் சாய அலைமோதும். இன்று “போவோமா ஊர்கோலம்” கேட்டுக்கொண்டே ஹாயாக அதைக் கடந்து வந்தாயிற்று. உள்ளத்தில் உவகை பொங்கும் நேரத்தில் யார் வைத்தக் கண்ணோ தெரியவில்லை ஒரு அரைக் கிலோ மீட்டர் தூரத்தில் பீச் படகு மறைவுக்கு பின்னால் கொஞ்சிக் குலாவும் இளஞ் ஜோடிகள் போல ஈஷிக்கொண்டு நிற்கும்படியானது.

க்கத்தில் குடிதண்ணீர் கேனேற்றி நின்றிருந்த டாட்டா ஏஸ்காரருக்கு உடம்பில் என்ன உபாதையோ டர்டர்ரென்று உறுமிக்கொண்டே நின்றிருந்தார். கண்களில் ஒருவித வெறி தெரிந்தது. பார்வையில் பட்ட சைக்கிள் வீல் கேப்பிலெல்லாம் அந்தக் குட்டியானையை நுழைக்க எத்தனித்தார். அது நுழையும் என்று எண்ணி எண்ணி முயற்சித்த அவரது தீவிரத்தில் அவர் எதையும் செய்ய சித்தமாயிருக்கிறார் என்று புரிந்தது. எனது சேப்பாயியை அவருக்கு ஒரு வண்டி தள்ளியே பின்னால் ஜாக்கிரதையாக இன்ச்சினேன். கோஸ்ட் ரைடரில் வரும் ஹார்லே டேவிட்சன் போல ஒரு வண்டியில் ஒரு மோட்டார் ’சுந்தர’ பிள்ளையும் எங்களோடு ட்ராஃபிக் விடியலுக்காகக் காத்திருந்தார். இரு காலையும் படகுத் துடுப்பாக்கி ஆக்ஸிலேட்டரே தேவையில்லாமல் பெட்ரோல் சிக்கனத்தைக் கடைபிடித்து உருட்டிக்கொண்டு வந்தார். டாங்க்கில் பெட்ரோல் குறைவாக இருந்திருக்கக் கூடும்.

இன்ச் இன்சாக அந்த ரோடைக் கடந்து கொண்டிருந்த வேளையில் அது நடந்தது. நான் இதை எதிர்பார்த்தேன். கதாநாயகனை மயக்கும் கவர்ச்சிக் கன்னி போல நெருங்கி நெருங்கி வந்த அந்த தண்ணீர் வண்டிக்காரர் அந்த மோட்டார் பிள்ளையின் இடது காலில் லேசாக ஏற்றி இறக்கிவிட்டார். தமிழனின் தலையாய பழக்கமான வீதிச் சண்டை பார்ப்பதற்கு மளமளவென்று கார்க் கண்ணாடியை இறக்கினேன். அந்த தம்பி சடாரென்று அந்த வண்டியைப் பார்க்க திரும்பியதில் நான் சற்று பதற்றமானேன். அந்த மோட்டார் தம்பி பதற்றப்படாமல் ஹெல்மெட்டை கழற்றினார். அவரைப் பார்த்துச் சிரித்தார். “அண்ணே! எல்லோரும் தான் வீட்டுக்குப் போகணும். என் காலை முறிச்சிப்புட்டு நீங்க மட்டும் வீட்டுக்கு போகணும்னு நினைக்கிறீங்களே! இது நியாயமா?” என்று பதவிசாகக் கேட்டார். ஏஸின் பதிலுக்குக் காத்திராமல் இன்சிக்கொண்டே நகர்ந்துவிட்டார்.
 
 
இச்சம்பவத்திற்குப் பின்னர் மேற்படி தண்ணீர் வண்டி யாரையும் முந்தவும் இல்லை சக வண்டிகளின் இண்டு இடுக்களில் மூக்கை நுழைக்கவுமில்லை.

காந்தியின் அஹிம்சையையும் பகைவனுக்கும் அருளும் அன்பையும் கடைபிடித்தால் ஒரு சண்டை தவிர்க்கப்படுவதோடு குற்றம் புரிந்தவனைத் திருத்தவும் பயன்படுகிறது என்பதைக் கண்ணால் கண்ட நிகழ்வு இது.

#அந்த மோட்டார் காந்தி வாழ்க!

Saturday, September 22, 2012

ஆனந்த விகடனில் அடியேன்!



இந்த வார “என் விகடனி”ல் எனது www.rvsm.in வலைப்பூ வலையோசை பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆ.வி ஆசிரியர் குழுவிற்கு நன்றி. திரு. ரா. கண்ணன் மற்றும் திரு. கலீல் ராஜா இருவருக்கும் பிரத்தியேகமான நன்றிகள். இவர்களைத் தவிர இது வெளியாவதற்கு முயற்சியெடுத்த, பெயரில் மன்மதனின் மனைவி பெயரைப் பாதியாகக் கொண்ட, நண்பனொருவனுக்கும் (”என் பெயரைக் குறிப்பிடாதீர்கள். ப்ளீஸ்!” என்று கேட்டுக்கொண்டதினால் இப்படி கிசு கிசு போல எழுதவேண்டியதாயிற்று) மனமார்ந்த நன்றி.

பன்னெடுங்காலத்துக்கு முன்பு நான் கொடுத்த பேட்டியை கீழே பதிகிறேன். படித்து இன்புறவும்.

நீங்கள் எப்போதிருந்து எழுதுகிறீர்கள்?
ஒரு விஜயதசமி நன்னாளில் என் பிஞ்சுக் கரத்தை அழுத்திப் பிடித்து கோபாலக்ருஷ்ண வாத்தியார் காவிரி பாய்ந்த எங்கள் பூமியில் செழிப்பாக விளைந்த பொன்னி ரக நெல் மணிகளை வீட்டின் நடுஹாலில் ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் பரப்பி 'சுர்க்  சுர்க்' என்று அது ஆள்காட்டி விரலில் குத்த குத்த 'அ' எழுத வைத்த நாளிலிருந்து.. தேவலாம் எழுதுகிறீர்கள் என்று கேட்டீர்கள். நிறைய பேர் கிறுக்குகிறீர்கள் என்று சொல்லித் தான் சிரித்திருக்கிறார்கள். நன்றி. வலையின் முதல் போஸ்டு இங்கே.


இலக்கணங்கள்... இலக்கியங்கள்... பற்றி...
(நெடுநேரம் வாய்விட்டு சிரிக்கிறார்!! பரவாயில்லை சொல்லுங்க என்றதும் தொடர்ந்தார்)
நல்ல கேள்வி. கபிலர் எனக்கு பக்கத்து வீடு மாதிரி கேட்கிறீர்கள். கம்பர் எனக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா போல கேட்கிறீர்கள். இலக்கண சுத்தமாக எழுதவதற்கு முன்னர் எனக்கு எழுத்துப் பிழை இல்லாமல் எழுதத் தெரியுமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் இலகுவாக கடக்கின்ற கணங்களை இலக்கணங்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். இலக்கியம் என்பதை உள்ளூர் அரசியல் கட்சிகளின் மாடுகள் சுவைக்கும் வால் போஸ்டர்கள் மற்றும் பதாகைகளில் இருக்கும் இலக்கிய அணி என்று அச்சடித்திருக்கும் இடத்தில் இருந்தும் அறிகிறேன். இது தவிர இலக்கியா என்று வெடவெடவென்று சோனியாக ஒரு பள்ளித் தோழி இருந்தாள். இலக்கியம் பற்றி எனக்கு தெரிந்தது இவ்வளவே.

உங்களுடைய கதாவிலாசங்கள்....
பொழுதுபோகாத ஒரு வாலிபனின் எண்ணங்களாக இவை பிரதிபலிக்கின்றன. கார்த்திக்கின் காதலிகள் என்று ஒரு தொடர் எழுதியவுடன் ஆயிரம் பேர் (சொல்லிக்கொல்வேமே யாருக்கு தெரியப்போவுது என்று முனுமுனுக்கிறார்) வரிந்து கட்டிக் கொண்டு உன் கதையை எழுதுகிறாயா? எனக்கு தெரியாதா? "உன் சாயம் வெளுத்துப் போச்சு." என்று முண்டு முட்டி மோதி தட்டிக் கேட்டார்கள். அதிர்ந்து விட்டேன். ஏன் ஐயா நான் காதல் கதை எழுதக் கூடாதா? எனக்கு அந்த அருகதையில்லையா? என்று பாவமாக கேட்டபோது சிறிதும் இரக்கமில்லாமல் அனுபவிக்காமல் இப்படி எழுதமுடியாது என்கிறார்கள். அனுபவித்து தான் எழுதவேண்டும் என்றால் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் குறைந்தது ஆயிரம் கொலையாவது பண்ணியிருக்கவேண்டும். வாத்தியார் ஒரு ஏ க்ளாஸ் 420 ஆக இருந்திருக்க வேண்டும். கல்கி சோழர் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். இருந்தார்களா? சிறுவயது முதலே நாலு பேர் சேர்ந்தால் கதை விட ஆரம்பித்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.

கவிதைகள் இப்போதெல்லாம் எழுதுவதில்லையே..
மாதிரி போட்டு எழுதியதற்கே சக பதிவர்களும் படித்த அப்பாவிகளும் ரொம்ப பயந்துட்டாங்க. ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதால் நிறுத்தி விட்டேன்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைப் பார்த்து அதைப் பற்றி எதுவும்...
வேலை பார்க்கும் துறை பற்றி எழுதினால் நமது முகமூடி கிழிந்து நாறிவிடும் என்று பயம் இருப்பதால் அவ்வளவாக எழுதுவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு எழுதினாலும் வேறு துறை பற்றி ஏதாவது கிறுக்கியிருப்பேன். வலையில் சமூக கட்டமைப்பு மற்றும் சில புரட்சி கர டெக்னாலஜிகள் பற்றி எழுதிப் பார்த்தேன். ஒரு நாள் வாத்தியாரின் சயின்ஸ் புத்தகம் ஒன்றை படித்துவிட்டு இனி எழுதக் கூடாது என்று ஞானோதயம் வந்து நிறுத்திவிட்டேன். சர்வ ஜன சுகினோ பவந்து.

பார்வை ஒன்றே போதுமே இதிகாச காதலர்கள் போன்ற சீரியல்கள் துவங்கி பாதியில் விட்டதை பற்றி..
முதலில் நடிகைகளின் கண்ணழகை கொண்டாடும் விதமாக இதை துவங்கினேன்.  ஒன்றிரண்டு எபிசோடுகளில் பழைய கருப்பு வெள்ளை நடிகைகளையும் மாதவி போன்ற இடைக்கால நட்சத்திரங்களை பற்றியும் பிரசுரித்தேன். நீ ஒரு ஓல்டு. அதான் பழய்யய்ய்ய்ய ஜில்பான்ஸ் போட்டக்களை போடுகிறாய் என்று போர் தொடுத்தார்கள். சமீபத்திய அழகுகளின் அஞ்சனங்களை பற்றி போடலாம் என்றால் கண்ணைத் தவிர மற்றதெல்லாம் பளீரென்று தெரியும்படி போஸ் கொடுத்து அந்த பகுதியை (பா.ஒ.போ) மூடிவிட்டார்கள். இதிகாசக் காதலர்கள் மேட்டர் இருக்கு எழுதி படுத்தணுமா என்கிற உயர்ந்த எண்ணம் எழுந்ததால் இன்னமும் எழுதவில்லை.


இசை பற்றி நிறைய எழுதுகிறீர்களே...
ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் பார்க்கில் பெஞ்சில் உட்கார்ந்து இருப்பது போன்ற போஸில் என் காரில் பயணிக்கிறேன். வெளியிலிருந்து வரும் காதைக் கிழித்து கூறுபோடும் ஏர் ஹார்ன் சப்தம் மற்றும் மாசு உள்ளே புகாதவாறு கார் கண்ணாடிகளை தூக்கி விட்டுக்கொண்டு உடையாளூர் பஜனை பாடல்களிலிருந்து தேவாவின் தித்திக்கும் 'கானா' பாடல்கள் வரை கேட்டுச் செல்கிறேன். அதைத் தவிர கல்லூரி நாட்களில் இருந்து பஸ்ஸ்டாண்ட் ராஜ் மியூசிக்கல்ஸ் கடையில் விருப்பப் பாடல்களை கேசெட்டுகளில் காப்பி செய்து டேப் ரேகார்டரின் ஹெட் தேயும் வரை கேட்டதால் .... தொட்டில் பழக்கம்...  இதைத் தவிர எனக்கு இசை பற்றி அணுவளவும் வேறு எதுவும் தெரியாது. அரசியல் தெரியாதவர்கள் அரசியல் புரிவதும், கம்பவுண்டர் டாக்டர் தொழில் பார்ப்பதும், கிளீனர் லாரி ஓட்டுவதும் இந்தியாவில் சகஜம் தானே. அதைப்போல் இதையும் சகித்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய பெயர்காரணம் மற்றும் இளமைப் பருவம் பற்றியெல்லாம் கொஞ்சம்...
என்னுடைய பெயர் ஆர்.வெங்கடசுப்ரமணியன். இந்த ப்லோகின் இடது புறத்தில் நிரந்தரமாக அச்சடித்து வைத்திருக்கிறேன். ஆறாம் வகுப்பில் எஸ்.வெங்கடசுப்ரமணியன் என்று ஒரு புத்திசாலி மாணாக்கர் வந்து சேர்ந்தவுடன் வித்தியாசம் தெரிவதற்காக ஆர்.வி.எஸ்.எம் என்று எனக்கும் எஸ்.வி.எஸ்.எம் என்று அவருக்கும் கிளாஸ் டீச்சர் தாண்டான் பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஆர்.வி.எஸ் என்று ஆரம்பித்தாலே அடிக்கத்தான் கூப்பிடுகிறார் என்று கையை பின்பக்க டிராயரில் துடைத்துக் கொண்டு தயாராகிவிடுவேன். இன்னமும் அதே நிலையில் தான் தொடருகிறேன். ஏழாவதோ எட்டாம் வகுப்போடோ எஸ்.வி.எஸ்.எம் (என் போன்ற மாங்காவுடன் படிக்கமுடியாமல்) சென்றவுடன் என் ஒருவனுடைய ரயில் நீள பெயருக்காக வருகைப்பதிவேடு ஒரு எக்ஸ்ட்ரா பக்கம் வாங்கியது. சிக்கன நடவடிக்கையில் நான் படித்த பள்ளிக்கூடம் இருந்திருந்தால் என்னை அதற்காகவே மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அணுப்பியிருக்கலாம். இளமைப் பருவம் பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த ஒரு பதிவு, ப்ளாக் பத்தாது. வாய்க்கால் வரப்பு, மரத்தடி, பஸ் ஸ்டாண்டு, தேரடி, பந்தலடி, காந்தி ரோடு, காளவாய்க்கரை, ஒத்தை தெரு, முதல் தெரு, மூன்றாம் தெரு, புதுத் தெரு, கீழப்பாலம், மேலப்பாலம், ஹரித்ராநதி என்று எந்த இடத்திலும் ஒரு பெண்ணைக் கூட தலை நிமிர்ந்து பார்க்காத கண்ணியம் இன்றுவரை தொடர்கிறது. மன்னார்குடி டேஸில் இதைப் பற்றியெல்லாம் விலாவாரியாக பகிர்ந்துள்ளேன்.

பேட்டி கொடுத்த இந்த பிசாத்து பதிவருக்கு வலையில் இன்றோடு ஒருவருடம் முடிவடைகிறது. நானும் கொளந்தைதான். இரண்டாயிரத்து ஏழில் பிள்ளையார் சுழி போட்டாலும் பத்தில் தான் எழுத ஆரம்பித்தேன். இவ்வளவு காலம் பொறுமையாக படித்த மக்களுக்கு கோடி நன்றிகள். கொஞ்ச நாள் எழுதாம மேயலாமா என்று ஒரு எண்ணம் இருக்கிறது. இன்னும் எழுத்துப் போதையில் நடுங்கும் கரங்களிடம் கேட்கவில்லை. பார்க்கலாம். என்னுடைய அருகாமை சீனியர்கள் பத்துஜி மற்றும் தக்குடு ஆகியோருக்கு இந்த ஜூனியரின் வந்தனங்கள். வலை உலகில் பிரமாதமாக எழுதும் பலருக்கு இந்த பிசாத்து பதிவரின் மரியாதைகள்.


Friday, September 21, 2012

....உன் கண்களைத் தழுவட்டுமே....

கடந்த சில நாட்களாகவே “இஜ் இட் மிஷ்டர் பெங்கட்?” என்று ஒரு பெங்காலி வாலிபன் கூப்பிட்டு “வரீங்களா?” என்று அழைக்கிறான். ”உங்களுக்கான சீட்டைப் பிடித்து வைக்கட்டுமா?” என்று அணுசரனையாகக் கேட்கிறான். தொழில்நுட்ப செமினார்கள் அட்டெண்ட் செய்து ரொம்ப நாளாகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் லெ ராயல் மெரிடியனில் ஒரு செமினாருக்குப் போய் தூங்கிவிட்டு வந்த கையோடு எழுதியது இது.


இந்த பொட்டி தட்டி வயிறு நிரப்பும் வேலையில் இருப்பதால் அடிக்கடி இது ஃபீல்டுக்கு புதுசு என்றும், ரோடு ஷோ என்றும், மென்பொருள் உருவாக்குபவர்கள் சங்கமம் என்றும், திட்ட அதிகாரிகள், முதன்மை தொழில்நுட்ப அதிகாரியில் (CTO) ஆரம்பித்து முதன்மை எக்ஸ் அதிகாரி(CXO) வரை நடத்தப்படும் கருத்தரங்குகள், பயிலரங்கங்கள் போன்றவற்றிற்கு ஃபோன் மேலே ஃபோன் போட்டும், ஈமெயில் அனுப்பியும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை கூப்பிடுவது மாதிரி வருந்தி வருந்தி அழைப்பார்கள். சமீபத்தில் இதுபோல் கூப்பிட்ட மரியாதைக்கு போய் எட்டிப்பார்க்கலாம் என்று போனதில் கிடைத்த திருவாசகம் தான் இது.

"அதே அலுத்துப்போன மேரி, சீதா, ராணி போன்ற கம்பனியின் கந்தர்வக் கன்னிகளை ஒருநாளேனும் கண்ணுறாமல் இருப்பதற்கும், கழனித்தண்ணி கேன்டீன் காப்பியை தவிர்ப்பதற்கும், துர்வாசம் வீசும் இயற்கைக்கு ஒதுங்கும் அறைகள் மேலும் வீசாமல் இருக்கவும், ஓயாமல் தொலைபேசி பிடுங்கும் உள்ளூர்/வெளியூர் ஆபிஸ் ராட்ஷசர்களிடம் இருந்து தப்பிப்பதற்கும், ஒரே இடத்தில் உட்கார்ந்து பொட்டி தட்டி கைகால்கள் மரத்து போகாமல் ஒரு உடற்பயிற்சி போல இருக்கவும், நம்போன்றோருக்கு அமையும் கபாலி கோயில் அருட்ப்ரசாதம்தான் ஸ்டார் ஹோட்டல் செமினார்கள்"

என்று இந்த தளத்தில் பத்து பதினைந்து வருடங்கள் பழம் தின்று கொட்டை போட்டு சுறுசுறுப்பாக ஒரு இளைஞன் போல் இயங்கிக்கொண்டிருக்கும் "செமினார் செல்வன்" ஒருவர் தெரிவித்தார். இவ்வகை செமினார்கள் பற்றியும் அதில் பக்குவமாக பார்வையாளனாக பங்குபெறுவது எப்படி என்பது பற்றியும் நம்மிடம் அவர் பகிர்ந்த விஷயங்களில் சில துளிகள் கீழே.

1. நாள்தோறும் கணினிப் பொட்டியை திறந்து மெயில் பார்க்கையில், முதலில் ஆரக்கிள், மைக்ரோசாப்ட், அடோபி, ஐ.பி.எம், இன்டெல் போன்ற உலக கம்பனிகளில் இருந்து மெயில் வந்திருந்தால், முதல் வேலையாக பார்த்தகையோடு நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்துக்கொண்டு "ஐயா/அம்மா நான் நிச்சயம் வருகிறேன், எனக்கு ஒரு சீட் போடுங்கள்" என்று ஒரு பதில் மெயில் அனுப்பி உடனே ஒரு இருக்கையை பிடிக்கவேண்டும். முக்கியமாக, இவ்வகை பிரசங்கங்கள் இலவசமாக இருக்கவேண்டும். அப்போதுதான் நிர்வாகத்தில் சுலபமாக ஓ.கே வாங்கி ஆபிசிலிருந்து தப்பிக்க முடியும்.

2. காலை 9.30 மணியளவில் பேசும் நிகழ்ச்சி ஆரம்பம் என்றால், ஒன்பது மணிக்கே போனால் வரவேற்பில் உட்கார்ந்திருக்கும் ஜீன்ஸ் வெள்ளை சொக்காய் போட்ட பெண்களின் புன்னகை அழைப்போடு தலையில் வெள்ளை குல்லா போட்ட நட்சத்திர சர்வர் கொடுக்கும் டீ காஃபி பிஸ்கட் போன்ற பதார்த்தங்கள் கிடைக்கும். ஜீன்ஸ் வனப்பிற்கு. டீ வாயிற்கு. கையில் உங்கள் முகவரி அட்டை இருந்தால் ஒரு பெட்டியில் போட்டுத் தப்பித்து விடலாம். இல்லையென்றால் வாசலில் நிற்க வைத்து ரெண்டுல ராகு ஏழில் சனி என்று உங்கள் ஜாதகம் எழுதச் சொல்லிப் படுத்துவார்கள்.

3 . உள்ளே சென்றதும், எந்த சீட்டுக்கு மேல் குழாய் விளக்கு இல்லையோ அதுவே நமக்கு தோதான இடம். பாடசாலையில் படிக்கும் காலத்தில்தான் மாப்பிள்ளை பெஞ்சு அதிசேஃப். இதுபோன்ற செமினார்களில் முதல் வரிசையில் இடதோ, வலதோ கோடி இருக்கை மிக மிக சௌகர்யம். உட்கார்ந்தவுடன் தூங்கக்கூடாது. அப்படியே தூங்கினாலும் குறட்டை விடக் கூடாது. அப்புறம் பேசுபவர் மைக் வழியே அரங்கத்திற்கே உங்கள் குறட்டைச் சென்றடைந்து நீங்கள் தூங்குவதைக் காட்டிக் கொடுத்துவிடும்.

4. ரொம்பவும் தூக்கம் தூக்கமாகக் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வந்தால், அழைப்பே வராத அலைபேசியை காதுக்குள் சொருகி, வாயைக் கையால் பொத்தாமல் பொத்தி, ஏதோ தலைபோகிற அவசர அழைப்பு போல எழுந்து வெளியே ஒட்டமும் நடையுமாகச் சென்றுவிடவேண்டும். ஓய்வு அறை பக்கம் சென்று மூஞ்சி அலம்பி, கை காயவைக்கும் இயந்திரம் கீழே இரண்டு நிமிடம் ஏந்திக் காட்டிவிட்டு திரும்பினால் இன்னொரு ஒரு மணி நேரம் தாங்கும். அதுவும் சிலபேருக்கு தான் அந்த கொடுப்பினை. அப்படி வரம் இல்லாதவர்கள் அந்த ஜீன்ஸ் பேண்ட் போட்ட பெண்கள் கொடுத்த ஒருபக்க அஜெண்டாவை வெறித்துப் பார்த்து நெட்ரு பண்ணிக்கொண்டோ, அல்லது விழா எப்படி நடந்தது, உங்களை அதிகம் தூங்க வைத்தப் பேச்சாளர் யார், விழாக் கம்பனியார் உங்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்த சௌகரியங்கள் பற்றி என்று நிகழ்ச்சி முடிவில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.

5. நாம் தூங்குகிறோம் என்று தெரியாத வண்ணம் அவ்வப்போது இரண்டு காலையும் ஆட்டுவது, தீடீரென்று யாரோ "டேய்.." சொல்லி கூப்பிட்டது போல பின்னால் திரும்பி பார்ப்பது, தலையை மையமாக வறுமையின் நிறம் சிகப்பு கமல் போல அசைப்பது, கொடுத்த கிறுக்கல் புத்தகத்தில் ஹார்டீன் போட்டு அம்பு விடுவது, பல தினுசுகளில் ஸ்டார் டிசைன் வரைவது, வீட்டில் உட்கார்ந்து சாவகாசமாக பார்க்கமுடியாத பால் கணக்கு போன்ற இத்யாதிகள் எழுதுவது, ரொம்ப மனசுக்குக் கஷ்டமாகவும் சங்கடமாகவும் இருந்தால் சஷ்டி கவசம் எழுதிப்பார்ப்பது போன்ற உபயோகமான செயல்களில் ஈடுபடலாம். போற வழிக்கு புண்ணியமாக போகும்.

6. ஒரு பதினொன்னரை மணி வாக்கில் லைட் போட்டு ஒரு இண்டர்வல் விடுவார்கள். எல்லோருக்கும் முன்பாக ஓடிப்போய் கையில் கப்பேந்தி ஒரு கட்டஞ்சாய் குடித்துவிட்டு, தட்டில் பரப்பி வைத்திருக்கும் பிஸ்கட்களில் நமக்கு பிடித்தவையாக ஐந்தாறு தேர்ந்தெடுத்து கையில் அடுக்கி வைத்து சாப்பிட்டுவிட்டு, யாராவது தெரிந்த முகம் போல இருந்தால் "எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே...போனவாரம் கன்னிமாரா வந்தீங்களா.." என்று கொஞ்சம் பேச்சுக்கொடுத்து பொழுதை போக்கிவிட்டு, எல்லோரும் போனவுடன் ஒருமுறை ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு ஆறஅமர மெதுவாக பன்னிரண்டு மணி வாக்கில் உள்ளே சென்று அமரவேண்டும்.

7 . பன்னிரண்டு மணியிலிருந்து அடுத்த அரைமணி நேரம் தாக்குப் பிடிப்பதுதான் இந்த உலகத்திலேயே பேரம் பேசாத சென்னை ஆட்டோ கிடைப்பது மாதிரி அவ்வளவு கஷ்டம். சர்வ நிச்சயமாக வெளியில் தட்டில் இருந்து பொறுக்கிக்கொண்டு வந்த மின்ட் எடுத்து சாப்பிட்டே ஆகவேண்டும். சப்பி சாபிடாமல் மின்டை கடித்து தின்று அதையும் தீர்த்த பின்னர், கள் உண்ட மயக்கத்தில் கண்கள் மூடுவது போல ஸ்லோ மோஷனில் இமைகள் மூடித் திறக்கும். பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் சகதூங்கியின் கால் தானாக நம் கால் மேல் இடிபட எழுந்துவிடவேண்டும்.

8. ஒருவாறாக ஒரு மணியளவில், பேச்சாளர் தனது உரையை ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து முடித்துவிட்டு "யாருக்காவது டவுட்ன்னா கேள்வி கேளுங்கப்பா..." என்று ஒரு குரல் விடுவார். மிகவும் சமர்த்தாக உட்கார்ந்து பிரசங்கம் கேட்ட ஏதாவது அதிகப்ரசங்கி சாப்பாடு நேரம் என்பதை மறந்து உலகளாவிய டெக்னாலஜி பற்றி சிப், டேட்டா குவஸ்ட் போன்ற ஊரில் கிடைக்கும் சஞ்சிகைகளை உருப்போட்டு படித்துவிட்டு தாறுமாறாக கேள்வி கேட்டு பேசியவரை படுத்துதோ படுத்து என்று படுத்தி குஷியடையும்.

9. எல்லோரும் கேட்கும்போது சம்ப்ரதாயத்துக்கு நாமும் கேள்விகனை தொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், "மைக்ரோசாப்ட்டை பில் கேட்ஸ் தான் இப்ப பார்த்துக்கராரா?", "ஆரகிள் டேட்டாபேஸ் என்னோட இஸ்த்திரி டேட்டா வைக்க பயன்படுமா?", "500 ஜிபி ஹார்ட்டிஸ்க்கில் 501 ஜிபி ஸ்டோர் பண்ண நான் என்ன செய்யணும்?" என்று உலகே அதிசயிக்கும் வண்ணம் ஆச்சர்யமான சிலபல கேள்விகளை கேட்டு இரண்டு மணிநேரம் பேசியவரை இரண்டே நிமிடத்தில் திக்குமுக்காட செய்துவிடவேண்டும். இந்த வினாக்களால் கொஞ்சநேரத்தில் அரங்கமே கப்சிப்பாகி எல்லோரும் சாப்பாட்டை பார்க்க நடையை கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். தப்பித்தது டெக்னாலஜி.

10. பசியூட்டி என்று சூப் வைத்திருப்பார்கள். காணாததை கண்ட மாதிரி நிறைய ஊற்றி குடிக்காமல் கொஞ்சமாக அரை கப் வாங்கி குடித்துவிட்டு மெயின் ஐட்டத்திற்கு போய்விட வேண்டும். முழு கப் வழிய வழிய வாங்கி ஏக் கல்ப்பில் அடித்துவிட்டால் சாப்பாடு சாப்பிட முடியாது. பசியூட்டி பசியாற்றி ஆகிவிடும். சமைத்துப் பார் போல நட்சத்திர ஹோட்டல் சாப்பாட்டை வெறித்துப் பார் என்றாகிவிடும். சைவ அசைவ ஐட்டங்களுக்கு பெயர்ப்பலகை வைத்திருப்பார்கள். நமக்கு வெறும் சாம்பார் உருளை கறிதான் வேண்டும் என்றால் அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு தயிர்சாதம் டேபிளை அடைந்து கொஞ்சமாக உள்ளே தள்ளிவிட்டு, வன்னிலா ஐஸ்க்ரீம் வித் ஃப்ரூட் சாலட் என்று மேற்படிகள் சாப்பிடுவதற்கு கொஞ்சூண்டு மேல் வயிற்றில் இடம் வைத்துக்கொள்ளவேண்டும். இவ்வளவையும் செமத்தியாக ஒரு கட்டு கட்டியபின், ஸ்வீட் சோம்பு ஒரு கை எடுத்து வாயில்போட்டுக் கொண்டு ஃபீட்பேக் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு சுகமாகத் தூங்குவதற்கு அலுவலகம் சென்றுவிட வேண்டும்.

தேவரீர் இதில் கண்ட விஷயங்கள் ஒரு அரை நாள் செமினாருக்காக எழுதப்பட்டது. முழுநாள் செமினாருக்கு இதைவிட அதிகமான விஷயங்கள் இருப்பதாகவும் அதற்கு இன்னொரு அடையார் ஹோடேல்லிலோ, சோளா ஷேரடானிலோ, தி பார்க்கிலோ சந்திக்கும்போது விலாவாரியாக பாடம் எடுப்பதாக சொல்லிச்சென்றார் அந்த அன்பர். காத்திருங்கள் முழு செமினாருக்கு.

#செமினார் செல்வங்கள்

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails