Showing posts with label நாகஸ்வரம். Show all posts
Showing posts with label நாகஸ்வரம். Show all posts

Friday, August 19, 2016

நாகஸ்வர ஓசையிலே...

அப்போதுதான் இருள் கவிந்த முன்னிரவு நேரம். வழிநெடுக ஊசித் தூறல் போட்டுக்கொண்டே இருந்தது. ஈர வாசனை. அங்கே வந்தவுடன் காதுக்கு சுகமான நாகஸ்வர ஓசை. வாசலில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினோம். நங்கை உத்தர குருவாயூரப்பன். குட்டியூண்டு மூர்த்தம். பிரம்மோத்ஸ்வம் நடந்துகொண்டிருக்கிறது. அன்னபக்ஷி வாகனத்தில் வீணாபாணியான வாணி சரஸ்வதி அலங்காரத்தில் உற்சவர் சேவை சாதித்துக்கொண்டிருந்தார். புறப்பாடுக்கு வாசலில் வண்டி தயாராகிக்கொண்டிருக்கிறது.
தீவட்டி ஏற்றிக்கொண்டு அன்னபக்ஷியருகில் தூக்கிக்காண்பித்த மகானுபாவர் பகவத் கைங்கர்யத்தில் தன்னை மறந்திருந்தார். ஸ்வாமி தரிசனத்தின் போதும் காதுகள் நாகஸ்வரத்தையே பற்றிக்கொண்டிருந்தது. அந்த மங்கல இசையோடு ஸ்வாமி தர்சனம் செய்வது பெரும்பேறு. அதுவும் ஸ்ருதிலயம் பிசகாமல் வாசிக்கும் போது மனசுக்குள் சட்டென்று ஒரு பூ மலர்கிறது. இசைவாசம் அப்படியே கட்டிப்போட்டுக் கண்களை சொருகிக்கொள்ளச் செய்கிறது. விழிகள் மூட... லாஹிரியால் மயங்கச்செய்து... கால்கள் லேசாகத் தாளம் போடுகிறது... கொஞ்சம் கொஞ்சமாக மெழுகாய் உள்ளம் உருகுகிறது.
வெளியே மழை விட்டபாடில்லை. “எந்தரோ மஹானுபாவு” இரட்டை நாகஸ்வரம் கம்பீரமாக எடுத்த போது வருணபகவானுக்கும் இசை கேட்கும் ஆசை வந்து நாகஸ்வரத்துக்கு ஒத்து வாசிப்பதுபோல சீராக வர்ஷிக்க ஆரம்பித்தார். தெரிந்த கீர்த்தனைகளை தேர்ந்த வாத்திய இசையாக கேட்கும்போது மனது வரிகளைப் பிடித்து தன்னால் இழுத்து வருகிறது. புதிதாக வார் பிடித்த தவில். தூக்கிப்பிடித்த நாதஸ்வரத்துக்கு பிரமாதமான துணை. காது அடைத்துப்போனவர்களுக்கு தவிலோசை அருமருந்து. கோயில்களில் மல்லாரி கேட்டுக்கொண்டு பிரகார உலாவோ வீதியுலாவோ வருவது ஜீவனோடு திருக்கயிலையிலோ ஸ்ரீவைகுண்டத்திலேயோ எம்பெருமானோடு பேசிக்கொண்டே வாக்கிங் போவதற்கு ஒப்பாகும்.
அக்கம்பக்கம் ஸ்வாமி தரிசனம் செய்துகொண்டிருந்தவர்களின் கவனத்தைக் கவரும் செவியீர்ப்பு வீசை. எந்தரோவின் ஸ்வரப் பிரஸ்தாபங்களை நாகம் படமெடுத்து ஆடுவது போல நாகஸ்வரத்தை சுழற்றி வாசித்தார்கள். கண்கொள்ளாக் காட்சி. கச்சேரியை நேரடியாக ரசிப்பது நம்மைக் கூண்டோடு ஸ்வர்க்க லோகம் தூக்கிப்போகும் அனுபவம். அதுவும் வாசிப்பவர்கள் இசையோடு இரண்டறக் கலந்து அதில் மூழ்கி கண்கள் மூடி லயித்துப்போவது நம்மை அந்த இடத்தை விட்டு காலை நகர்த்தமுடியாமல் கட்டிப்போட்டுவிடுகிறது.
வெளியே மழை நின்றுவிட்டது. நாகஸ்வரமும் தவிலும் சேர்ந்து இசைப் பிரவாகமாக ஓடியது. ”எந்தரோ மஹானுபாவுலு” தீர்க்கமாக வாசித்து முடித்தவுடன் “அந்தரிகி வந்தனமுலு” என்று கைகூப்பி வணக்கம் சொல்லி கண்களால் நமஸ்கரித்து வீடு திரும்பினேன்.
ஒரு வாரத்திற்கு உயிர் சார்ஜ் ஏற்றிக்கொண்ட ஞாயிறு மாலை!

Tuesday, July 29, 2014

கற்பூர நாயகியே கனகவல்லி

வார்பிடித்த மேளங்களின் இடிமுழுக்கத்துடன் இரட்டை நாகஸ்வரத்துடன் சிம்மவாஹினியாக பொன்னியம்மன் பவனி வந்துகொண்டிருந்தாள். கும்பாபிஷேக தினக்கொண்டாட்டத்தை சாக்ஸஃபோன் கச்சேரி வைத்து சிறப்பிக்க ஏற்பாடாயிருக்கிறது போலிருக்கிறது. இருவர் ஜோடியாக ஏற்றி இறக்கி வாசித்தார்கள். வாசிப்பில் ஒத்து மெயின் என்றெல்லாம் இனம் காண முடியாதபடி ஒத்தாக இருந்தது.

”கற்பூர நாயகியே கனகவல்லியை...” சுழற்றிச் சுழற்றி சாக்ஸ் காற்றாலேயே அடித்தார்கள். சாக்ஸ் கண்டமேனிக்குக் கதறியது. கத்ரி கோபால்நாத் கவனமாக இருக்க வேண்டும். கண்ணாப்ரேஷன் கூலிங் க்ளாஸ் அணிந்த வெற்றுடம்புப் பெரியவர், காது வைத்த மஞ்சள்பையில் அர்ச்சனையுடன் ஒரு அம்மணி, வாய் பூராவும் ஒரு கௌளி வெற்றிலையைக் குதப்பி; மகிஷ வதத்திற்குப் பின்னர் இரத்தம் குடித்து வழிந்த காளிகாதேவி போல உதட்டோரங்களில் ரெண்டு சொட்டுக் காவி நீர் தெரிய ஒருத்தர் என்று ஐந்தாறு பேர் நாற்காலியில் அமர்ந்து எதிரில் சாக்ஸஃபோன் அசைவதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பாவம்! வீட்டில் என்ன பிரச்சினையோ?

அம்மனின் திருவீதியுலா முடியும் தருணத்தில் நாதஸ்ஸும் சாக்ஸும் ”நீயா? நானா?” என்று மோதும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. மேடையிலிருந்த சாக்ஸில் இப்போது எல்லார் ஈஸ்வரியின் அடுத்த பாட்டைத் தம் கட்டிக்கொண்டிருந்தார்கள். தெருவிலிருந்த துடிப்பான நாதஸ்வரகாரர் புதுரத்தம் பாய வீறுகொண்டு எழுந்து இங்கிலீஷ் நோட்ஸ் வாசித்தார். தலை வித்துவான் தோரணையில் ஆடியது. அந்தப் பிரதேசமே கிடுகிடுக்க அவருக்கு சப்போர்ட்டாக மேளங்கள் முழங்கின. மேடையிலிருந்த சாக்ஸ்ஸஸ் பார்ட்டி சற்றுநேரம் அமுக்கி வாசிக்கவேண்டியதாயிற்று. நாதஸ்ஸுக்கு சக்ஸஸ். மின்னல் பொழுதிற்கு அந்த நாதஸ்வரக்காரர் சிக்கல் சண்முகசுந்தரமாய்த் தெரிந்தார்.

கற்பூரார்த்தியில் அம்மன் தரிசனம் ஆனதும் தாமதிக்காமல் வீட்டுக்கு விரைந்து வந்துவிட்டேன்.

கச்சேரி கேட்டுக்கொண்டிருந்தவர்களும் வீடு திரும்பியிருக்கவேண்டுமே என்று இப்போதும் கவலையாக இருக்கிறது.

#தாயே_காப்பாத்து!

ஊசித் தொண்டை.. பானை வயிறு...

முஹூர்த்தம் முடிந்த கையோடு சிக்கனமாக ரெண்டு வரி “ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தேமே...”யென்று ஃப்ளைட் பிடிக்கப் போகும் அவசரகதியில் வாசித்தார். பின்பு “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா...”வை நிறுத்தி நிதானித்து அலங்காரமாக நாகஸ்வரத்தில் வாசித்தார். ”செல்வக்களஞ்சியமே...” வரும்போது மேடையில் மணமக்களின் கல்யாணக் கோலத்தோடு காதுக்கு அப்படியொரு இனிமையாக இருந்தது. அனுபவஸ்தர். தூக்கிய நாகஸ்வரத்திலிருந்து ஸ்வரங்கள் குப்பென்று பிரவாகமாகக் கிளம்பி மண்டபத்தை நிறைத்தது. ஒத்து ஆங்காங்கே விழுந்து புரண்டாலும் பின்னாலையே வழி பிசகாமல் ஓடிவந்தது. தவில்காரர் தொப்பியில் விரல்களால் கபடி ஆடினார். வாத்தியம் வார்பிடிக்கப்பட்டு அவர் சொன்னதையெல்லாம் தப்பாமல் கேட்டது. நாதலயம். என்னுடன் சேர்த்து குறைந்தது ஐந்தாறு தலைகள் ரசிகரஞ்சிதமாக கோர்வையாக ஆடியது. காவிரியாற்றங்கரை ஆட்களாக இருக்கக்கூடும்.

”சார்! ஜூஸு”ன்னு திராட்சை ரஸத்தை வலியக் கையில் திணித்தார்கள். பட்டென்று கண் முன்னே வெள்ளைக் குர்த்தாவில் வைரமுத்து நெடுநெடுவென்று தோன்றி “திராட்சை தின்பவன் புத்திசாலியா? பழரசம் குடிப்பவன் குற்றவாளியா?” என்று தோம் கருவிலிருந்தோமிலிருந்து ரெண்டு வரி படித்துக் காண்பித்தார். யாரும் அறியாமல் ஒரு மிமி உதட்டை விரித்து புன்னகைத்துக் கொண்டேன். அருகம்புல் ஜூஸ் குடிக்கும் அருகதையுள்ள அடியேன் இந்த ஜூஸ் குடிக்கவில்லை என்பது இச்சபையோர்க்கு ஒரு உபரி தகவல்.

திருமண அரங்கு நிறைந்திருந்தது. விடுமுறை நாளானதால் அனைவரின் முகத்திலும் அவசரமில்லாமல் சாந்தி நிலவியது. சில சாந்திக்கள் ஸ்தூலமாகவும் அங்கே உலவக்கூடும். தொன்னூறு சதவிகிதம் குடும்பமாக அவுட்டிங் வந்திருந்தார்கள். WWF அதிகம் பார்க்கும் பொடியன் ஒருத்தன் இன்னொருத்தனை ஃபுட்பாலாக உருட்டி ரகளை செய்துகொண்டிருந்தான். பாட்டி பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள். சரேலென்று உள்ளே வந்த அம்மணி முதுகில் ஒன்று வைத்து தரதரவென்று இழுத்துச்சென்றாள். அப்பொடியனின் அம்மா என்பது முகஜாடையில் தெரிந்தது. தாத்தா சக தாத்தாக்களோடு “அப்பெல்லாம்...” பேசிக்கொண்டிருந்தார். க்ளைமாக்ஸாக அவரது மடியில் தஞ்சமானா அப்பையன் முழு சீனும் பார்த்த என்னை ஓரக்கண்ணால் பார்த்தான்.

தரைதளத்தில் முஹூர்த்தம். இரண்டாவது மாடியில் சாப்பாடு. ஞாயிற்றுக்கிழமை பதினொன்றிலிருந்து பனிரெண்டு முஹூர்த்தம் சா.ராமர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. எண் சான் உடம்பிற்குப் பிரதானமான வயிற்றுக்கு டிஃபனைக் காட்டி சாப்பாட்டையும் காட்டலாம். லிஃப்ட்டில்லாமல் நடந்து ஏறுபவர்களுக்கு நல்ல அப்பிடைஸர். ஐந்தாள் அகல லிஃப்ட்டுக்கு ஐம்பது ஆட்கள் தேவுடு காத்தார்கள். அதிலும் முட்டி தேய்ந்த வயசானவர்களுக்கு வழி விடாமல் முதல் ரோவில் சாம்சங் டேபும் கையுமாக மேஜர் ஆன மைனர் பசங்கள். கெக்கேபிக்கேன்னு சிரித்துக்கொண்டு.

செவன் கேக் மாதிரி இனிப்பு ஒன்று பரிமாறினார்கள். ரவையோண்டுக் கிள்ளிச் சுவைத்துப்பார்த்தேன். என் வாழ்நாள் பூராவும் நான் சாப்பிட்ட சர்க்கரையெல்லாம் உருக்கிச் செய்த பட்சணம் அது. சுதாரித்துத் தெளிவதற்குள் இலை நிரப்பி “ம்... ஆரம்பி... அடுந்த பந்தி வைட்டிங்..” என்று சாதத்தை சிப்பல் சிப்பலாக இறக்கினார்கள். வாழக்கா கறமது. பீன்ஸ் பருப்புசிலி. பொடிப்பொடியா பீன்ஸை நறுக்கி, ஒவ்வொன்றாய் பொறுக்கி அதற்குள் பருப்பை ஸ்டஃப் செய்தா மாதிரி உசிலி. சமையற்காரர் கைக்குத் தங்கக் காப்பு போடணும். கேரட்டும் கொத்துமல்லியையும் பூத்தூவலாய்த் தூவி இலைக்கு ஒரு தயிர்வடை. கதம்ப சாம்பார் சாதத்துக்கு தயிர்வடை தேவப்பிரசாதமாக இருந்தது.

பூசணிக்காய் மோர்க்குழம்பு. வெண்டி ஃப்ரை ஸ்னோ பௌலிங் பால் போல உருண்டன. ஃப்ரிஸ்பீ சைஸ் அப்பளம் சுயேட்சை வேட்பாளர்கள் போல சம்பிரதாயமாக இலைத் தேர்தலில் சுலபமாகச் சீட் பிடித்தன. பின்னாலையே கமகம தக்காளி ரசமது வந்தது. வண்டலுக்கே வண்டி சாதம் உள்ளே இறங்கும் சுவை. கடைசி நேரத்தில் பிசைந்த சாதத்திற்கு வெண்டி ஃப்ரை துணைக்கு வந்து பதவியேற்பை இன்னும் பிரமாதப்படுத்தியது. திருக்கண்ணமுது ஒரு கரண்டி சாதித்தார்கள். கொஞ்சூண்டு எடுத்து நுனி நாக்கில் இருக்கும் இனிப்புச் சுவை மொட்டுகளை நனைத்துக்கொண்டேன். அவைகளுக்குத் திருப்தி.

இந்தத் தயிர் சாதம் சாப்பிடாதவர்களுக்குச் சொர்க்கக் கதவு திறக்காது என்பது திண்ணம். வாயில் இஞ்சி நிரடும் போது நாக்கால் சாதத்தை இழுத்து ஒருதரம் மென்று தின்ன வேண்டும். காரத்தில் சதும்ப ஊறிய பொடி மாங்காயை வாய்க்கு வாய் வைத்து உள்ளே தள்ளிக்கொண்டிருக்கும் போதே அடுத்த பந்தி ஆட்கள் பசித்த புலி போல எதிரில் நின்றிருந்தார்கள்.

வெற்றிலை பாக்கில்லாமல் ட்யூட்டி ஃப்ரூட்டியில் மடித்த பீடா தயாராய் இருந்தது. எனக்கு உசிதமில்லை. மண்டபத்துக்கு கீழே வந்து தாம்பூலப் பையை வாங்கிக்கொண்டு வெளியே நடக்கும் போது “இது யாரு தெரியுதா?” என்று அப்பா ஒரு வாமனரை அறிமுகப்படுத்தினார். ஹெஹ்ஹே என்று சிரித்துக்கொண்டே ”சௌக்கியமா..” கேட்டுக் கை கொடுத்தேன். “தம்பி சரியா சாப்பிடறதில்லையோ... இளைப்பா இருக்கே..” என்று குசலம் விசாரித்தார்.

சேப்பாயியைக் கிளப்பும் போது என் பாட்டி அடிக்கடி சொல்வதை என் பெண்ணிடம் ரகசியமாகக் காதில் சொன்னேன். என்னவா? இப்படி காதைக் கொடுங்கள். உங்களுக்கும் சொல்கிறேன்.

“சிலபேருக்கு பானைத் தொண்டை. ஊசி வயிறு. தம்பி மாதிரி ஆட்களுக்கு ஊசித் தொண்டை. பானை வயிறு”

பல்லாண்டு வாழ்க

நாயனக்காரர் “நகுமோ” வாசிக்க மண்டபத்துள் நுழைந்தேன். தவில்காரர் நாயனக்காரருக்கு உபகாரமாகத் தட்டிக்கொண்டிருந்தார். எல்பி ரோட்டில் எழுத்தாளர் Vidya Subramaniam அவர்களின் புதல்வியின் திருமணம். மண்டப வாசலில் கதம்பமாகக் கார்களின் தோரணம். உள்ளே திரும்பும் திசையெங்கும் பட்டுப்புடவைகளின் சரசரப்பு. மல்லிப்பூ வாசம். கேங்காக உட்கார்ந்து அரட்டை, சிரிப்பொலிகள். சந்தோஷமான சூழ்நிலை.

டிவியில் விரத கோலியாரின் பாட்டிங் பார்க்கிறா மாதிரி நேரடி ஒளிபரப்பு பார்த்துக்கொண்டிருந்த பாட்டியைத் தாண்டி மேடையில் நின்றிருந்தவரிடம் அருகில் சென்று கையசைத்து அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டு இருக்கையில் அமர்ந்தேன்.

Revathy Venkat முன்னரே ஆஜர். ”பத்து டு பதினொன்னுங்கிறது சாப்பிடறவங்களுக்கு நல்ல முஹூர்த்தம்.” என்று சொல்லிவிட்டு “கரெக்ட்டா ப்ரென்ச் மாதிரி சாப்பிடற நேரம். எர்லி முஹூர்த்தம்னா டிஃபன் மட்டும்தான் சாப்பிட முடியும்” என்ற அங்கலாய்ப்போடு என் வாயரட்டையை ஆரம்பித்த போது.......

வாத்திய இசை ”அசையும் பொருட்கள் நிற்கவும்” என்னும் திருவிளையாடல்தனமாகப் பட்டென்று நிற்க மேடையில் தோன்றினார் புரோகிதர். “மாங்கல்யதாரணம் ஆகப்போறது. அதுக்கப்புறம் சப்தபதியெல்லாம் முடிஞ்சு மாப்பிள்ளை பொண்ணை கீழே இறக்கிவிடறேன். எல்லோரும் கை குலுக்கலாம். கிஃப்ட் தரலாம்” என்று மண்டபத்தின் கடைசி சேர் ஹியரிங் எய்ட் தாத்தாவுக்கும் கேட்கும்படியான ஒரு உடன்படிக்கை அறிக்கை வாசித்துவிட்டு கெட்டி மேளத்துக்கு ஒத்தை விரலை ஆட்டினார்.

”உங்களைப் பத்தி அம்மா சொன்னாங்க....” என்ற மணப்பெண்ணிடம் “என்ன... தொறந்த வாயை மூடமாட்டேன்...னா...” என்று கேட்டுக்கொண்டே கிஃப்ட் கொடுத்த கையோடு டைனிங் ஹாலுக்கு விரைந்தோம். கச்சிதமான மெனு. “எங்க தம்பிக்கு குழம்பு, ரசம், மோர் தவிர வேறெதுவும் சாப்பிடத்தெரியாது”ன்னு பாட்டி பெருமையாகச் சொல்லுவாள். ரொம்ப நாள் கழித்து ஆமவடை. ரசஞ்சாத்துக்கு தொட்டுக்கொண்டேன். விரல்நீள வெண்டிக்காய் மோர்க்குழம்பு. வாழக்காய்க் கறியோடு தேவாமிர்தமாக இருந்தது. பாயசமாசை நெட்டித் தள்ள பக்கத்தில் பார்த்தேன். பர்மிஷனோடு கொஞ்சம் குடித்தேன். நாக்கு ஒட்ட “தித்திக்குதே..”.

தயிர் சாதத்துக்கு புளியிஞ்சி. பிரமாதம். இன்னும் ரெண்டு கவளம் உள்ளே இறங்குவதற்கு ஒத்தாசையாய் கட் மாங்காய் ஊறுகாய். ஜுகல்பந்தியாய் சாப்பிட்டுவிட்டு பந்தியை விட்டு எழுந்திருந்தோம். அசட்டுத் தித்திப்பு பீடாக்களைத் தவிர்த்து தண்ணீரில் மிதந்த தளிர் வெற்றிலைகளைத் தேர்ந்தெடுத்துத் தாம்பூலம் தரித்துக்கொண்டு மேடத்திடம் விடைபெற்றோம்.

மணமக்கள் பல்லாண்டு வாழ்க!!

நாத வெள்ளம்

"நாதவெள்ளத்தில் நீந்தினேன்” என்று ஆனந்தக் கூத்தாடுபவர்களைப் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு அந்த நாதவெள்ளம் தன்னோடு சப்ஜாடாக இழுத்துச் சென்றவைகளில் நானும் சுழலுக்குச் சுழல் தக்கையாகச் சுழன்று அடித்துச் செல்லப்பட்டேன். சரி! விஷயம் என்னவென்று சொல்கிறேன்.

காலையில் சட்டென்று கிளம்பி நகரேஷு காஞ்சிக்கு ஒரு அதிரடி விஸிட். சங்கர மடத்தில் காலையில் சந்த்ரமௌளீஸ்வர பூஜை நடந்துகொண்டிருந்தது. கண்குளிரக் கண்டு களித்துக்கொண்டிருந்த பக்தகோடிகளோடு கடையனாய்க் கலந்து கொண்டேன். தசாங்கத்தின் நறுமணத்தோடு சாம்பிராணி புகை சேர்ந்துகொள்ள எந்த நேரத்திலும் பரமேஸ்வரன் பார்வதியோடு ரிஷபாரூடராகக் காட்சி தருவாரோ என்கிற தெய்வமணம் கமழும் பக்திச் சூழ்நிலை.

பூஜைக்கிடையில் ”பீப்பீ..” என்று சீவாளியைப் பரிசோதிக்கும் ஓசை கழுத்தைத் திருப்ப வைத்தது. தொடர்ந்து “டம்..டம்..டப்..” ஒலி. நாகஸ்வர இசை மெல்லியை ஓடை போல ஆரம்பித்தது. இரட்டை நாகஸ்வரம். பட்டையைக் கிளப்பும் இரட்டை தவில். ஒரு நாகஸ்வரம் எஸ்பிபியென்றால் இன்னொன்று டியெம்மெஸ். ஒன்று நளினம். இன்னொன்று அட்டானிக்கால் போடும் காம்பீர்யம்.

”நாத தனுமனிசம்”த்தில் ஆரம்பித்து நாகஸ்வரத்தைத் தூக்கிச் சீராகப் பிடித்தார்கள். ஒவ்வொரு ஸ்வர வரிசைக்கும் பெரிசும் சிறுசுமாய் இரண்டு நாகஸ்வரங்கள் ஊதின. அபார வாசிப்பு. அவர்களுக்கு ஈடு கொடுத்து தவில்கள் முழங்கின. காதுக்கு வலிக்குமோ கைக்கு வலிக்குமோ என்றில்லாமல் தவிலைத் தவிடுபொடியாக்கினார்கள். மடத்தைக் கடப்பவர்களில் அந்த சங்கீதம் நனைக்காத செவிகள் கண்ணாடி மாட்ட மட்டும் உபயோகப்படுபவையாக இருக்கும்.

இடையறாத வாசிப்பின் வேகத்துக்கு ஓய்வு கொடுப்பதுபோல அடுத்து ஊஞ்சலாடி வந்தது “க்ருஷ்ணா நீ பேகனே”. க்ஷண நேரத்தில் நம்முன்னே காற்றலைகளில் க்ருஷ்ணனைத் தவழவிட்டார்கள். நல்ல காத்திரமான நாகஸ்வரம் கூட ”பேகனே...”யில் புல்லாங்குழல் போலக் குழைந்த மாயமென்ன என்று இன்னமும் ஆச்சரியப்படுகிறேன். திரை திறப்பதற்கு முன்னர் அகஸ்திய மாமுனியின் ஸ்ரீசக்ரராஜ சிம்மாசனேஸ்வரி ஆரம்பித்தார்கள். அடுக்கு தீபாராதனையின் போது ”உலகம் முழுதும் என் அகமுறக் காணவும் ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி” வரிகள் இசைத்தது. குருமார்களின் தரிசனத்தோடு மெய்சிலிர்க்கும் அனுபவம்.

செவிகளைத் தொட்டு இதயத்தைக் குளிர்விக்கும் இசை நம்மை இறைநிலைக்கு இட்டுச்செல்கிறது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails