Showing posts with label விபத்து. Show all posts
Showing posts with label விபத்து. Show all posts

Saturday, May 9, 2015

சேப்பாயி இல்லாத முதல் இரவு!

மணி ஏழே முக்கால். மத்திய கைலாஷ் அருகே இருள் பரவலாகக் கவிந்திருந்தது. பெரிது சிறிது நிழலாக நின்றிருந்தவர்களுக்கு மத்தியில் ”சென்னைக் காவல்” பேரிகேடுகளைப் போட்டு ஏனோ ரயிலடியின் பின் பக்கத்து வழியை அத்துக்காக மறித்திருந்தார்கள். அதைத் தாண்டி அஞ்சனை மைந்தனின் சாகசமாக நுழைந்தவுடன் மூலையில் ஒரு கவுண்ட்டர் முன்னே சின்ன வரிசை நெளிந்து நீண்டிருந்தது.

எல்லோரும் அணியாகத் தொடை தட்டி சங்கீதம் கேட்டு மகிழ்ச்சியாக இருப்பது கண்ணில்பட்டது. நெருங்க நெருங்க யார் காதுக்குள்ளும் ஒயர் ஓடவில்லை. ஒரு கெஸ். வயர்லெஸ்ஸில் ஸாங் கேட்கிறார்களோ? நானும் போய் அந்த ரசிகக்கூட்டத்தின் வாலில் ஒட்டிக்கொண்டேன். இரு நொடிகள் கூட கடந்திருக்காது, தொடையில் தன்னிச்சையாக தாளம் போட ஆரம்பித்தேன். ஓ... காதில்”ஞொய்....”யென்று ரீங்காரமிடும் கொசுவிற்கு தாளமிடுகிறோம் என்று புரிந்தது. ஆதிதாளம் முடித்து ரூபகம் ஆரம்பிப்பதற்குள் “வேளச்சேரி ஒண்ணு” என்று ஜன்னலுக்குள் கையைவிட்டேன் இன்னொரு கையால் தாளமிட்டபடியே. நீட்டிய பத்து ரூபாய் தாளுக்குக் கையில் அஞ்சு ரூபாய் காயினோடு ப.சீட்டுக் கொடுத்தார்.

ஓரமெங்கும் காவி படிந்திருக்கும் படியேறும் வழியில் பீச்சிற்கு வேளச்சேரிக்கு என்று அம்புக்குறியிட்டு மார்க்கம் காட்டியிருந்தார்கள். ”கஸ்தூர்பாநகர்” என்று எழுதியிருந்த ப்ளாட்ஃபாரப் பலகைக்கு அடியில் இருவர் குசுகுசுத்துக்கொண்டிருந்தனர். ஆங்.. இல்லையில்லை.. அந்த இருவருமே ஆண்கள். பிரளயம் முடிந்த பூமியாக ஸ்டேஷன் இருந்தது. இடதுபுறமிருந்து வலதுபுறம் திரும்பி பார்த்தால் பத்து இருபது தலைகள் சோர்வாக நகர்வது தெரிந்தது. பச்சை பர்மனெண்ட்டாக எரிந்துகொண்டிருந்தது. தூரத்தில் பறக்கும் ரயில் நடந்து வந்துகொண்டிருந்தது. நாற்பது பேர்கள் இறங்கினால் இருபது பயணிகள் ஏறினார்கள்.

இருக்கைகள் சில காலியாக இருந்தன. அந்தப் பொட்டி முழுவதும் “ஆட்கள் தேவை” நோட்டீஸ் ஆக்ரமித்திருந்தது. சாஃப்ட்வேர் கம்பெனி டெக் லீட் சம்பளத்தில் பகுதிநேர வேலைகள் இருப்பதாக ஆசைக் கொக்கி போட்டிருந்தார்கள். ”+2 போதும்” என்பதே ஹாஷ் டேக். பிஸினெஸ் லைனை புரட்டிக்கொண்டிருந்த பெரியவர் எதிர்த்தார்ப்போலிருந்த இருக்கைகளில் காலை நீட்டி அரை அனந்தசயன போஸில் இருந்தார். பக்கத்திலிருந்தவர் ஓரக்கண்ணால் ஓசிப்பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்.

“மச்சி... $%@$#@@” என்று சப்தம் வந்த திசையிலிருந்து ஒரு க்ரூப் என்னுடைய கெட்ட வார்த்தை அகராதியில் புதிய வார்த்தைகளைச் சேர்த்துப் புஷ்டியாக்கியது. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தவறாமல் மின்தூக்கி வாசல் அம்பு பட்டனை பொதுஜனம் குத்திவிட்டு படியில் இறங்கியது. இரயில் ஸ்டேஷனைக் கடப்பதற்குள் காணாமல் போனார்கள். ஆனபெல் காஞ்சூரிங் பார்த்தவர்கள் தனியே நின்றால் பேதியாகும் தனிமை நிலையத்தைச் சூழ்ந்துகொண்டது. கார்ப்பரோட் கம்பெனிகளின் கோலோன் வாசனை போல சென்னையின் நகர வாசனை எல்லா நிலையங்களிலும் தாராளமாகப் பரவியிருந்தது. வேளச்சேரி தூரத்தில் மின் புள்ளிகளாய்த் தெரிய பொட்டியின் பாதிபேர் வாசலுக்கு சுறுசுறுப்பாக வந்து நின்று குதிக்க தயாரானார்கள். அனைவரையும் சேவித்து வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டேன்.

இரயில் நிற்பதற்குள் குதித்துக் கையில் கத்தியோடு கொலை செய்யது போல ஓடினார்கள். நிதானமாக நடந்து வந்துகொண்டிருந்தேன். பஸ்ஸா ஆட்டோவா என்று மனசு அலைபாய்ந்தது. ஓருடல் ஈருயிராக ஷேர் ஆட்டோவில் ஒருவர் ஏற்கனவே ட்ரைவர் பக்கத்தில் அமர்ந்திருந்தார். பக்கத்தில் வந்த என்னை கையைப் பிடித்து இழுக்காத குறையாக “பொன்னியம்மன் கோயில் பத்து ரூவா சார்...”. ஷேர் ஆட்டோவினுள் ஏறியபோது உள்ளே இருக்கும் கொலுப்படியில் முதுகில் மாட்டும் மூட்டையோடு ஒருவர் மொபைல் நோண்டிக்கொண்டிருந்தார். வாட்ஸ்ஸப் போலிருந்தது. டாஸ்மாக்கும் வாட்ஸப்பும் போதையேற்றும் லாகிரிவஸ்துக்கள்.

ஆட்டோ ட்ரைவர் நிலைகொள்ளாமல் தவித்தார். முன்னால் பார்த்தார். பின்னால் பார்த்தார். கொலுப்படிகளை நிறைக்குமளவிற்கு கிராக்கிகள் கிடைத்தால்தான் நகர்வார் என்பது நிச்சயம். பசி வயிற்றை பிராண்டியது. பாவக் களை ததும்பும் எங்கள் முகங்களைப் பார்த்து பத்து ரூபாய் செலவு செய்ய சிலர் முன்வந்தார்கள். கைவேலியில் கிளம்பிய ஷேர் ஆட்டோ வரிசையாய் அனைத்து பஸ் நிறுத்ததிலும் ஒவ்வொருவராக இறக்கிவிட்டார். ”சதாசிவ நகர்...” என்று ட்ரைவர் கூவி அழைத்து அந்த வாட்ஸாப் அடிமையை இறக்கும்வரை நிமிரவேயில்லை. நான் கடைசி ஸ்டாப். இறங்குவதற்கு நானூறு மீட்டர் முன்னர் பந்தாகத் துள்ளி ட்ரைவர் பக்கத்தில் ஹாக்கி பேட் போல ஒருவர் தொற்றிக்கொண்டார்.

“கடேசி ட்ரிப் தானே...” ஆர்வம் பொங்கக் கேட்டார்.

“ஆமாண்டா... துட்டு வச்சிருக்கியா?” கொஞ்சம் எரிச்சல் கலந்திருந்தது.

“சரக்குக்கு இல்லை... சைட் டிஷ்ஷுக்கு இருக்கு...” தூண்டில் போடும் தொணி.
“தூ.... $%^&#$... பேமானி... நேத்திக்கும் அதேதான சொன்ன... $#%^&*@#... எச்சி சரக்கு குடிக்கிறியே..” விளாசல்.

எந்நேரத்திலும் கைகலப்பாகிவிடும் அபாயம் இருந்தது. கெ. அகராதியில் இன்னும் ஒரு பிடி வார்த்தைகள் சேர்ந்துகொண்டது. இந்த நடையில் என்னையும் சேர்த்து ஆட்டோகாரருக்கு அறுபது ரூபாய் வருமானம். எத்தனை ட்ரிப் முடிந்தது என்று தெரியவில்லை. இறங்கி முக்கு வரையில் நடந்து வந்துவிட்டேன். ஆட்டோ நிலவரம் தெரிய திரும்பினேன். ட்ரைவர் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் இறங்கி ஜர்தாகடை வாசலில் நின்றிருந்தார். டாஸ்மாக்குக்கு போவாரா மாட்டாரா என்று தெரிந்துகொண்டால்தான் நிம்மதியாக டின்னர் சாப்பிடமுடியும் என்ற உந்துதலால் அன்னநடை நடந்தேன். பத்து அடிக்கு இரண்டு முறை திரும்பினேன். மூன்றாவது தடவை பார்க்கும் போது..... வேறோரு ஆட்டோவின் ட்ரைவர் சீட்டை நட்புடன் பகிர்ந்திருந்தார். கண்களில் வாட்ஸாப் பார்க்கும் ஆர்வம் கொதித்துக்கொண்டிருந்தது. வாட்ஸாப்பா? சாரி.. டாஸ்மாக் பார்க்கும் ஆர்வம் நிலைகுத்தியிருந்தது.

**

சென்ற ஞாயிறன்று சைதாப்பேட்டை அருகில் அடிபட்ட எனது சேப்பாயியை (கார்) அட்மிட் செய்யும்படி ஆனதால் நேற்று இரவு என்னுடைய பொதுஜன போக்குவரத்து அனுபவம்! தலைப்பை தப்பர்த்தம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்று உஷார்படுத்த எழுதிய பிற்சேர்க்கைப் பாரா இது.

சாரி சேப்பாயி!

நந்தனம்-சைதாப்பேட்டை வழியில் திநகருக்குத் திரும்பும் வலதுபக்கப் பாதை. பச்சையும் சிகப்பும் படக்படக்கென்று கண்சிமிட்டிக்கொள்ளும் சிக்னல். மரணக்கிணறு வீலிங் செய்பவர்களால் கூட நாற்பதுக்கு மேல் செல்லமுடியாது. நானூறு வண்டிகளுக்கு மத்தியில் செல்லும் போது நாற்சக்கரங்கள் நான்கில் போகலாம். இன்னும் கொஞ்சம் அதிகம் என்றால் பத்தில் போகலாம். அப்படித்தான் நான் சேப்பாயியில் போய்க்கொண்டிருந்தேன். முன்னால் ஒரு நாற்பத்தைந்து பி ஊழிக்காலத்தில் உலகம் கிடுகிடுப்பது போன்ற கடமுடா சப்தத்துடன் சர்வ நிதானமாகச் சென்றுகொண்டிருந்தார். 

இதுவரை ஓகே. 45 பி டிரைவர் திடீரென்று ப்ரேக்கில் ஏறி நின்றுவிட்டார். எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ளும் சேவகன் போல பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்த எனக்கு வெடுக்கென்று ஆகிவிட்டது. அரைக்கண் ரியர்வ்யூ மிரர் யாருமில்லை என்று சொல்ல சடாரென்று ஸ்டியரிங் ஒடிய வலதுபுறம் ஆனமட்டும் ஒடித்தேன். சேப்பாயியின் இடது கண் மாநகரப்பேருந்தில் இடித்துவிட்டது. 45பி எழுப்பிய சப்தத்தை விட சன்னமான சப்தம்தான் கேட்டது.

சிக்னல் தாண்டி அப்படியே மெதுவாக ஓரம் கட்டினார். நான் 45பியின் முதுக்குப்பின்னால் கொண்டுபோய் பயபக்தியோடு நிறுத்தினேன். டிரைவரும் கண்டக்டரும் ஜோடியாக இறங்கி வந்தார்கள். நானும் சீட் பெல்ட்டிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு போனெட் அருகில் வந்தேன். ஹெட்லைட் கண்ணாடி செதில்செதிலாக உடைந்துவிட்டது. போனெட்டை லேசாகத் தன்னை திறந்து கொண்டு குறட்டை விட வாய்பிளக்கும் போஸில் இருந்தது.

“ஒரு சாவுகிராக்கி டூவீலரை முன்னாடி கொண்டுவந்து கட் கொடுத்துட்டான் சார்! அவன் மேலே இடிக்கக்கூடாதுன்னு சடன் ப்ரேக் போட்டேன்....”

“சரி.. விடுங்க.. என்ன பண்றது.. உங்க மேலையும் தப்பில்லை..” என்றேன்.

“நீங்க கேப் விட்டு வந்திருக்கலாம்”

குருக்ஷேத்திரத்தில் துரோணர் காதில் விழாதமாதிரி குஞ்சரஹ சொன்ன தர்மபுத்திரன் போல பேசினார். எனக்கு மனசு தாங்கலை. “நான் நிறையா கேப் விட்டு வந்திருப்பேன். ஆனா லட்சோபலட்சம் வண்டிகள்ல அந்த கேப்ல வேற யாரும் வராம இருப்பாங்களா சார்?” கேட்டுவிட்டேன். டிரைவர் பதில் பேசவில்லை. நியாமெனப்பட்டிருக்கும். சேதாரம் எதுவும் கேட்டுவிடுவேனோ என்று அப்படி பேசியிருக்கலாம். ”பத்து மீட்டர் இடைவெளி விடவும்னு விளம்பரம் பண்றாங்க... சிட்டியில ஒவ்வொரு வண்டிக்கு பின்னாடியும் பத்து மீட்டர் இடைவெளி விட்டா.. கிண்டியில முதல் பஸ் நின்னா மூனாவது பஸ் பாரீஸ்ல நிக்கும்... என்ன சொல்றீங்க?” என்றேன். ஒரு குறுகுறுப்பார்வையை என் மேல் விட்டார். நான் சிரித்தேன். கொஞ்சம் சகஜமானார்.

“பரவாயில்லை. எடுங்க..” என்று கார்க்கதவைத் திறந்தேன். இருவரும் நகர்ந்தனர். யாரோ கட் அடித்த சாகசத் தவறுக்கு யார்யாரோ அனுபவித்தோம். சேப்பாயியை நாளை க்ளினிக் அழைத்துக்கொண்டு போகவேண்டும். நான் இன்னும் விழிப்பாக இருந்திருக்கலாம்.

சாரி சேப்பாயி!!

Tuesday, July 29, 2014

அந்தர்பல்டி

டாக்டர் நாயர் ரோட்டின் நடுவில் யானைக்குப் பள்ளம் வெட்டியிருந்தார்கள். அப்பாவி சிங்கமாய் தெரியாமல் மாட்டிக்கொண்டேன். இருபது கி.மீ வேகத்தில் மொள்ளமாய் ஊர்ந்து வந்துகொண்டிருந்த போது “டொம்”மென்று பின்னால் சத்தம். இறங்கினேன். பம்பரின் நடுவில் சிகப்பு பெயிண்ட் உதிர்ந்திருந்தது. டிவியெஸ் 50ன் ப்ளூ கலர் பெட்டி கழண்டு பாண்டி ஆடிக்கொண்டிருக்க அதை ஓட்டியவர் கைலியை மடித்துக்கட்டிக் கொண்டு கீழே சில்லரை பொறுக்கிக்கொண்டிருந்தார். ஆளைப் பார்த்தால் அடாவடியாகத் தெரியவில்லை.

“ஏம்ப்பா... எதுவும் அடியா?” என்று கேட்டுக்கொண்டே நெருங்கினேன். பம்பரிலிருந்து சிகப்புக் கலர் அவரது உதட்டில் ஈஷிக்கொண்டிருந்தது.

“இல்லீங்க...”. கீழுதடை மடித்து காதலில் அகப்பட்டு வெட்கும் கன்னி போலப் பற்களால் மறைத்துக்கொண்டார்.

“சைக்கிளை விட மெதுவா போய்க்கிட்டிருக்கேன். இரண்டு பேர் ஃபாஸ்ட்டா நடந்தே முந்திட்டாங்க.. இதுலயே வந்து விடறயேப்பா..”

“ப்ரேக் பிடிக்கலீங்க....இங்க பாருங்க...” பிடித்துக் காட்டிய இடத்தில் ஹாண்டில் பாருடன் ப்ரேக் ஆர்ம் பச்சென்று ஒட்டிக்கொண்டது. டப்டப்பென்று சப்ளாக்கட்டையாய் அடிக்கும்படி ரெண்டு தடவை டெமான்ஸ்ட்ரேட் பண்ணினார்.

“ஓரமா வேகமாப் போக வேண்டியதுதானே. இப்படி நடுப்பற வந்து விட்டியேப்பா...”

பின்னால் ரெண்டு மூனு வாகனங்கள் அணிவகுத்து இந்த ஆக்ஸிடெண்ட்டுக்கு ஆர்க்கெஸ்ட்ரா வாசிக்க ஆரம்பித்தார்கள். பல ஸ்வரங்களில் ஹார்ன் சப்தம். எக்கேடோகெட்டுப் போங்கடா என்று சைக்கிளார் ஒருவர் சரிந்து கிடந்து டிவியெஸ் 50ஐ பலாத்காரமாக தாண்டி அந்தப் பக்கம் போனார்.

வண்டியை ஓரங்கட்டினேன். திரும்பவும் இறங்கி மோதியவரைப் பார்க்க இறங்கினேன். உடைந்த பெட்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு கிளம்ப ஆயத்தமாயிருந்தார்.

“ஏம்பா... மெதுவா வரவேண்டியதுதானே...” திரும்பவும் அதே பல்லவியை ஆரம்பித்தேன்.

“ப்ரேக் இல்லீங்க...” பாவமாகச் சொன்னார். இப்போது உதட்டில் ரெண்டு பொட்டு இரத்தம் நின்றது.

”வாயில....” என்றதும் துடைத்துக்கொண்டு அடியுதட்டை வாய்க்குள் சொருகி பற்களால் பாதுகாத்தார்.

“இந்த ஓரத்துல சைக்கிள்காரன் அந்த ஓரத்துல ஆட்டோக்காரன்.. நான் வேறெப்படிப் போவேன்...” என்று சிணுங்கினார். இரண்டு விளக்குகளுக்கு நடுவில் புகுந்த சின்னத்தம்பி கவுண்டமணி நியாபகம் வந்தார். வண்டி சொட்டையானதற்கு காசு கேட்கப்போகிறேன் என்று பயந்தார்.

“நீங்க ஏன் சடார்னு ப்ரேக் பிடிச்சீங்க?” லாயர்தனமாக ஒரு கேள்வி கேட்டார்.

“முன்னாடி பள்ளம். நான் ப்ரேக் பிடிக்காம இருந்திருந்தா பின்னால் வந்த நீங்க அப்டியே அந்தர்பல்டி அடிச்சிருப்பீங்க...”

“ஹாங்காங்.. இப்பவும் பல்டிதான் அடிச்சேன்..”

பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது.

“சரி! இப்ப என் வண்டியை சொட்டையாக்கிட்டீங்களே.. இதுக்கு என்ன பண்றது?”

அவருக்கு எங்கிருந்தோ அசுர பலம் வந்தது. டிவியெஸ் 50ஐ தள்ளிக்கொண்டே ஓடி ஸ்டார்ட் செய்தார். எம்பி உட்கார்ந்தார். திரும்பிப் பார்க்காமல் பறந்துவிட்டார்.

மேனியெங்கும் விழுப்புண்களோடு இருக்கும் சேப்பாயிக்கு மருத்துவம் பார்க்கவேண்டும். பாவம்! அவருக்கும் உதட்டு இரத்தம் நின்றிருக்கக்கடவது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails